privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைதேர்தலை விடுத்து புரட்சியை நடத்து !

தேர்தலை விடுத்து புரட்சியை நடத்து !

-

தேர்தலை விடுத்து
புரட்சியை நடத்து!

பல வருசம் ஆச்சு
ஆத்துல தண்ணிய பாத்து,

பல வருசம் ஆச்சு
வயல்ல பச்சையப் பாத்து,

இந்தியா விவசாயம் - நாடாளுமன்றம்பல வருசம் ஆச்சு
மரத்துல காய்ப்பை பாத்து,

பல வருசம் ஆச்சு
வீட்ல மாடு கத்தி

பல வருசம் ஆச்சு
வண்ணத்துப் பூச்சி வீட சுத்தி,

பல வருசம் ஆச்சு
தறியில நூலப் பாத்து

பல வருசம் ஆச்சு
வலையில மீனப் பாத்து

பல வருசம் ஆச்சு
பணமில்லாம மருத்துவம் பாத்து,

பல வருசம் ஆச்சு
காசில்லாம கல்வியப் பாத்து,

பல வருசம் ஆச்சு
பெட்டிக்கடை அக்காவிடம் சிரிப்பை பாத்து,

பல வருசம் ஆச்சு
எட்டு மணிநேர வேலை என்ற பேச்சை கேட்டு

பல வருசம் ஆச்சு
தெருக்குழாயில் தண்ணி பாத்து

பல வருசம் ஆச்சு
தெருவோட கவுன்சிலரப் பாத்து

பல வருசம் ஆச்சு
மனு கொடுத்த கலெக்ட்டர பாத்து

பல வருசம் ஆச்சு
மாமூல் வாங்காத போலீசைப் பாத்து

பல வருசம் ஆச்சு
யோக்கியனா நீதி பதியைப் பாத்து

பல வருசம் ஆச்சு
மனிதனை மனிதனாய் பாத்து

பல வருசம் ஓட்டுபோட்டு
பாராளுமன்றமே உளுத்துப்போச்சு

மாத்தி மாத்தி ஓட்டு போட்டு
ஊரும் நாடும் பாழாப் போச்சு

செத்த பொணத்த காப்பாத்துமா
தேர்தல் சென்ட்டு பூச்சு!

மொத்த சமூகத்தையும் நாறடிக்கும்
இந்த போலி ஜனநாயகத்தை

புதைப்பதுதான் ஒரே மூச்சு!

– துரை.சண்முகம்

  1. தேர்தலை விடுத்து “புரட்சி” நடத்தினால் இந்த நாடு செழித்துவிடும் என்று சொல்கிறார்கள் போலும். அப்படியானால் அந்த “மந்திரத்தை” எல்லோருக்கும் சொல்லிக்கொடுக்கலாமே? தேர்தலை புறக்கணித்தால் இந்த நாடு எப்படி செழிக்கும்? இதுபோல் உலகில் எந்த நாடாவது செழித்துள்ளதா? தேர்தல் இல்லாவிட்டால் இந்த நாட்டிற்கு தலைமைதாங்க யாரை எப்படி தேர்ந்தெடுப்பது. மக்களாட்சியின் மகத்துவம் தெரியாமல் அரைகுறைகள் பேசும் பேச்சு இது. “புரச்சி” என்றால் என்ன என்று தெரியாமல் பேசும் பேச்சு இது. ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டு சாக வேண்டும். இதுதான் புரச்சி. சாகாமல் கடைசிமுறை இருப்பவர் தான் இந்த நாட்டின் தலைவர் போலும்!!!!!!!!! மக்கள் விரும்பாதவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் வெற்றி பெற முடியாது என்று தெரிதவர்கள் எல்லாம் இப்படி போடுகிறார்கள் கூத்து. உண்மையில் இவர்கள் மக்களாட்சியை விரும்பினால் மக்களிடம் தங்களின் கொள்கைகளை எடுத்து சொல்லி ஒட்டு வாங்கலாம். உண்மையை சொன்னால் மக்கள் இவர்களை விரும்ப மாட்டார்கள். அதனால் “புரட்சி” என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள்!!

  2. //தேர்தல் இல்லாவிட்டால் இந்த நாட்டிற்கு தலைமைதாங்க யாரை எப்படி தேர்ந்தெடுப்பது?//
    ஒரு தலைமை இல்லாத ஒரு தீர்வை வினவு முன்வைத்தாலும் அது எவ்வளவு சாத்தியம்?

    இது போன்ற அடிப்படை சந்தேகங்களை தீர்த்துவைக்கும் வண்ணம் கொஞ்சம் விவரித்து எழுதினால் புரியும்…

  3. இந்த சமூகத்தின் பெயரிலேயே முதலாளித்துவம் என்றிருக்கும் போது ‘மக்களாட்சி’ என்று ஏன் மக்களை இன்னும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்?

  4. புரட்சி பாத்து நாளாச்சுன்னு பாரு
    அதனால எப்படி இருக்கும்னு கூறு

    எல்லாரையும் சந்தோசப் படுத்தறது எப்படின்னு பாரு
    சந்தோசமா இல்லாவதகளு ஒழிக்கிறதுதான் கூறு

    சீனா ரசியா தவற வேற எங்கயும் இல்லை ஏன்னு பாரு
    மத்த நாடுங்களுக்கு நடநத்து ரொம்ப நல்லாவே தெரியும் அதனாலத்தான் கூறு

  5. புரட்சி புரட்சினு சொல்றிங்களே ஒழிய அது என்ன மாதிரி புரட்சினு சொல்ல மாட்டேங்கிறிங்க..

    யார வெச்சி புரட்சி பண்ண போறிங்க? ஏழையோ பணக்காரனோ நம்ம நாட்டில் எல்லோரும் சுயநலவாதியாதா இருக்காங்க.. பார்பனரோ, இல்ல மத்த ஜாதியோ அவங்களும் அப்படிதான் சுயநலமா இருக்காங்க.. இதுல யாருக்குனு புரட்சி?

    மொதல்ல பார்ப்பான ஒழிக்கனும்னு சொன்னிங்க, அப்புறம் மத்த ஜாதிகாரனுங்களும் அதையே செய்த உடன், பார்ப்பனீயம்னு ஆரம்பிச்சிங்க.. உங்க டெபினிஷன் படி இன்னிக்கு எல்லா ஜாதியும் பார்ப்பனீயர்கள் தான்..

    காங்கிரஸ் கட்சி ஊழல்னு சொன்னோம்.. அப்புறம் பிஜெபி, இன்னிக்கு வந்த ஆம் ஆத்மி வரைக்கும் எல்லாம் முதலாளிங்களுக்குனு சொன்னிங்க.. கம்யூனிஸ்டுங்களும் போலினு சொல்லிட்டிங்க..

    யூனியனும், உங்கள தவிர மத்த யூனியனும் முதலாளிங்க கைகூலினு சொல்லிடிங்க.. இப்படி எல்லோருமே எதிரினா நீங்க யாருக்குதான் போராடுறிங்க? யாருக்கு புரட்சிபண்றிங்க?

    நாளைக்கு நீங்க சொன்னமாதிரி புரட்சிவந்து, இன்னிக்கு இருக்கும் ஏழைகள மேல வெச்சாலும், நாளைக்கு அவங்களும் முதலாளி போலத்தான் ஆகபோறாங்க..

    க்யூபா, ரஷ்யா, வடகொரியா இதெல்லாம் அதுக்கு ஒரு உதாரனம் தான்…

    • மொத்தத்தில் யாருமே சரியில்லைன்னு தான் நீங்களும் சொல்லியிருக்கீங்க. அல்லது யோக்கியவான்கள் யாரேனும் இருந்தால் இங்கே பட்டியலிடுங்கள். புரட்சி ஒன்று தான் மாற்று என்பது கம்யூனிஸ்டுகளின் வாதம். புரட்சி மாற்று அல்ல என்று கூறினால் உங்களுடைய மாற்று என்ன என்பதை சொல்லுங்கள்.

      • //புரட்சி மாற்று அல்ல என்று கூறினால் உங்களுடைய மாற்று என்ன என்பதை சொல்லுங்கள்//

        புரட்சி மாற்று அல்லனு இங்க யாரும் சொல்லல. நீங்க சொல்ற புரட்சினா என்ன, எப்படி நடக்கும், யாரால் நடக்கும், எங்கு தொடங்கும், எப்படி தொடங்கும், எப்படி தொடர்ந்து நடக்கும் என்றெல்லாம் விரிவா சொன்னிங்கன்னா மத்த ஜனங்களும் தெரிஞ்சிப்பாங்க, புரட்சிக்கு தயாராவாங்க. அத விட்டுட்டு சும்மா புரட்சி புரட்சின்னு மட்டும் சொல்லிக்கிட்டு இருந்த கேக்குரவன்ங்க எல்லாம் இப்படி கேள்வி கேக்கத்தான செய்வாங்க.

        • அப்படியானால் நீங்களும் புரட்சி தான் மாற்று என்கிறீர்கள் இல்லையா, நல்ல விசயம் தான். ஆனால் நாங்கள் கூறுகின்ற புரட்சி உலகத்தில் இதுவரை எங்குமே நடந்திராத புரட்சி அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே புரட்சி எப்படி நடக்கும், யாரால் நடக்கும், எங்கு தொடங்கும், எப்படி தொடங்கும், எப்படி தொடர்ந்து நடக்கும் என்பதையெல்லாம் விரிவாக தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆர்வம் இருந்தால் விவாதிக்கலாம். அதே போல உங்களுடைய புரட்சி திட்டம் பற்றி நாங்களும் தெரிந்துகொள்ளலாம். ஆனால் இவற்றை பின்னூட்ட விவாதத்தின் மூலம் செய்ய முடியாது, எனவே நேரில் சந்திப்பது அவசியம். எப்போது என்பதை நீங்கள் தான் கூற வேண்டும்.

  6. தேர்தலே வேண்டாம் என்று கூறும் நீங்கள் ஏன் தொழிற்சங்க தேர்தலில் மட்டும் நிக்குரிங்க? அங்கேயும் நீங்கள் புரட்சி பத்தி பேசி தொழிலாளர்கள் அனைவரையும் உங்கள் பக்கம் சேர்க்க வேண்டியது தானே ? தொழிலார்கள் ஆயிரம் பேருக்கு கூட உங்கள் புரட்சி பத்தி புரியவைக்க முடியலையா? இல்ல உங்களுக்கு புரியவைக்க தெரியலையா ?

    • விவேக், கம்யூனிஸ்டுகள் ஜனநாயகப்பூர்வமான தேர்தல் முறையே வேண்டாம் என்று ஒதுக்கித்தள்ளவில்லை. தேர்தல்களை யார் நடத்துகிறார்கள், யாருக்காக நடத்துகிறார்கள் என்பது முக்கியம்.

      தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை பாதுகாத்துக்கொள்வதற்காக ஒரு ஆலையிலோ, நிறுவனத்திலோ நடக்கும் தொழிற்சங்கத் தேர்தலில் தனது பிரதிநிகளை தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிப்பதற்கும், உழைக்கும் மக்களை சுரண்டுவதற்காக ஆளும் வர்க்கங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடக்கும் தேர்தலில் வாக்களிப்பதற்கும் பாரிய வேறுபாடு உண்டு. இரண்டையும் பிரித்துப்பார்க்க வேண்டும். தொழிற்சங்கம் என்பது தொழிலாளி வர்க்கம் சோசலிசத்தை கற்றுக்கொள்வதற்கான பள்ளி தானே தவிர, இந்த சுரண்டல் சமூக அமைப்பிற்குள்ளேயே நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான இடம் அல்ல என்று தொழிற்சங்கத்தை பற்றி மார்க்ஸ் கூறியுள்ளார். எனவே இந்த சமூக அமைப்பையே மற்றியமைப்பதற்கான முதல்படியாக நடக்கும் தொழிற்சங்க தேர்தலையும், மக்களை கொள்ளையிட்டு பொறுக்கித்தின்பதற்காகவே நடக்கும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலையும் பிரித்துப்பார்க்க வேண்டும்.

      மேலும் ஆளும் வர்க்கங்கள் எவ்வளவு தான் அலங்காரம் செய்தாலும் இந்த தேர்தல் ஜனநாயகம் மக்களிடம் எடுபடுவதில்லை. மக்கள் இதை துளியும் மதிக்காததால் தான், தேர்தல் ஆணையம் என்கிற பல் பிடுங்கப்பட்ட பாம்பு நள்ளிரவிலும் பிரச்சாரம் செய்யலாம் என்று ஓட்டுப்பொறுக்கிகளுக்கு அனுமதியளித்துள்ளது. ஆனால் இது நல்ல விளைவை ஏற்படுத்துமா?

      பகல் முழுதும் உழைத்த களைப்பில் படுத்திருக்கும் மக்களுக்கு இரவில் நல்ல தூக்கமே இல்லை. வந்து வந்து போகும் மின்சாரத்தாலும், கொசுக்கடியாலும் மக்கள் நிம்மதியாக உறங்குவதே இல்லை. நள்ளிரவில் அரை தூக்கத்தில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருக்கும் மக்களிடம் போய் ‘அன்பார்ந்த வாக்காளப்பெருமக்களே’என்றால் அது நிச்சயம் இந்த தேர்தல் முறையின் மீது மக்களின் வெறுப்பை மேலும் அதிகரிக்கத்தான் செய்யும்.

      மக்களை கொள்ளையிடுவதற்காகவே நடத்தப்படும் இந்த தேர்தல் முறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை வரவழைக்க வேண்டும் என்று ஆளும் வர்க்கங்கள் முக்கி முக்கி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இப்படி தான் எதிர்மறையாக போய் முடியும் என்பது விதி.

  7. நாட்ராயன்//// ஜனநாயகத்தின் மகிமையை எங்களுக்கும் கொஞ்சம் சொன்னா நாங்களும் தெரிஞ்சிக்குவோம்

  8. நாடராயன்////// மக்களாட்சியின் மகத்துவம் என்னன்னு கொஞ்சம் சொல்லுங்க

  9. பல வருசம் ஆச்சு
    மனு கொடுத்த கலெக்ட்டர பாத்து

    பல வருசம் ஆச்சு
    மாமூல் வாங்காத போலீசைப் பாத்து

    பல வருசம் ஆச்சு
    யோக்கியனா நீதி பதியைப் பாத்து……….

  10. மு.நானா ஒரு சுனாபானா ,..
    புரட்சி.. ஒரு குழந்தையை பெறுவதுபோல் அது எப்படி என்று உன் தாயை கேட் க்கமுடியுமா???? –தாயுமாணவன்

  11. vivek
    தேர்தல் வேண்டாம் என்று சொல்லவில்லை, தேர்தலை புறக்கணி என்று சொல்கிறோம் , உங்களுக்கு புரியவைக்க 1000 பெரியார் வந்தாலும் ,ம்ம்ம்ம்

    • அசுரபாலகன்:

      தேர்தலை புறக்கணிப்பதால் என்ன நடக்கும்.
      கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்.

      • இத்தனை ஆன்டுகளாக பங்கேற்றதால் என்ன கிடைத்தது என்பதையும், இனிமேல் பங்கேற்கப்போவதால் என்ன கிடைக்கப்போகிறது என்பதையும் சற்று விரிவாக கூறினால், புறக்கணித்தால் என்ன நடக்கும் என்பதற்கு பதில் கிடைக்கும்.

  12. R Chandrasekaran
    ரோட்டுமேல காரு காரு
    காருகுள்ள யாரு நம்மமாமா …
    மாமா என்னா சொன்னாரு …
    ??????

    ///// ஒன்னுமே புரியயலய எனக்கும்தன்////

  13. கற்றது கையளவு
    விவசாயிகள், விலை கிடைக்காமல், போண்டியாகி தற்கொலை செய்து கொள்வதை தடுத்து நிறுத்த இந்தத் தேர்தலுக்கு வக்கில்லாத போது, எதுக்கு திரும்பத் திரும்ப வாக்கு!

  14. கற்றது கையளவு
    உங்களால் நாளை என்ன நடக்கும் என்று சொல்லமுடியுமா?

    ஆனால் நாங்கள் சொல்கிறொம், இதுவரை தேர்தலால் என்ன நடந்தது என்றும், இனி நடக்க போவது என்னவென்றும், இதில் சின்ன பகுதிதான் தேர்தல் புறக்கனிப்பு …

    • //இதுவரை தேர்தலால் என்ன நடந்தது என்றும், இனி நடக்க போவது என்னவென்றும்//

      அதை நீங்கள் சொல்லித்தான் ஜனங்களுக்கு தெரியவேண்டும் என்றில்லை. இன்றைய நிலை எல்லோருக்கும் தெரிஞ்சிதான் இருக்கு. நீங்கள் உழைக்கும் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் போது தேர்தலால் என்ன நடந்தது என்பதற்கு பதில் தேர்தலை புறக்கணிப்பதால் என்ன நடக்கும் என்று சொல்லி பிரச்சாரம் செய்தால் அவங்களுக்கு கொஞ்சம் தெளிவு கிடைக்கும்.

      இதோ நீங்கள் கூறுவது: “உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கான புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம்”. நீங்கள் சொல்லும் அரசாங்கம் எப்படி செயல்படும், யார் யாரெல்லாம் அதில் இருப்பார்கள் என்பதை விளக்கினால் எல்லோருக்கும் ஒரு தெளிவு கிடைக்குமே.

      • லெனின் அவர்களுக்கு
        பின்னூட்ட எண் 5.1.1.1 க்கு இன்னும் நீங்கள் பதிலளிக்கவில்லை, ஆனால் அதே கேள்வியை மீண்டும் இங்கே வைத்திருக்கிறீர்கள். பின்னூட்டத்தை இன்னும் பார்க்கவில்லை என்றால் உடனே பாருங்கள் பதில் எழுதுங்கள் சந்தித்து பேசுவோம்.

        • //அப்படியானால் நீங்களும் புரட்சி தான் மாற்று என்கிறீர்கள் இல்லையா//

          //ஆனால் நாங்கள் கூறுகின்ற புரட்சி உலகத்தில் இதுவரை எங்குமே நடந்திராத புரட்சி அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.//

          நிச்சியமாக புரட்சி தான் மாற்று. இப்ப இருக்கிற போலி ஜனநாயக முறை ஒழிய வேண்டும் என்பதே எனது விருப்பம்.ஆனா மற்ற நாடுகளுக்கும் இங்கும் மிகப்பெரிய வேறுபாடுதான இருக்கு.

          அதாவது, ஒன்று – நிலப்பரப்பு: இந்தியா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட நாட்டில் புரட்சி எப்படி சாத்தியப்படும்?

          இரண்டு – ஜனங்களின் வாழ்க்கை முறை: பல்வேறு வாழ்க்கை முறை, வசதி, வேலையில் இருக்கும் ஜனங்களை ஒரு புரட்சிக்காக எப்படி ஒருங்கிணைப்பது?

          மூன்று – ஜனங்களின் மனநிலை: ஒரு நாட்டில் உள்ள மக்கள் பெரும்பாலும் சுயநலவாதிகளாகவும், ஒரு வேலை சோறு கிடைத்தால் போதும் என்று திருப்தி பட்டுக்கொள்பவர்களாகவும், தானுண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்களாகவும் இருக்கும் பட்சத்திலும், புரட்சி என்றாலே வன்முறை, ஆயுதக்கலாச்சாரம் என்று ஒதுங்கி நிற்கும் பட்சத்திலும் அங்கு புரட்சி எப்படி சாத்தியப்படும்?

          தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

          • உலகில் எல்லா நாடுகளும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது?

            இந்தியா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட நாட்டில் புரட்சி ஏன் சாத்தியம் இல்லை என்று கருதுகிறீர்கள் ? நிலப்பரப்பு தான் பிரச்சினை என்றால், இந்தியாவை விட பெரிய நிலப்பரப்பை கொண்ட ரசியாவில் எப்படி புரட்சி நடந்தது? அல்லது மிக சிறிய நிலப்பரப்பை கொண்ட நாடுகளில் ஏன் நடக்கவில்லை. எனில் புரட்சியை தீர்மாணிப்பது எது?

            இந்தியாவில் மட்டும் தான் மக்கள் பல்வேறு வாழ்க்கை முறையில் இருக்கிறார்களா? வாழ்க்கை முறை பொருளாதாரத்திற்கேற்ப (வர்க்கத்திற்கேற்ப) மாறுபடும். உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் இவ்வாறு தான் இருக்க முடியும். நீங்கள் பல்வேறு தேசிய இனங்களின் வாழ்க்கை முறையை குறிப்பிடுகிறீர்கள் என்றால். அக்டோபர் புரட்சி நடந்த ரசியாவில் தான் நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இருந்தன. போல்ஷ்விக் கட்சி அவர்கள் அனைவரையும் திரட்டித்தான் புரட்சியை நடத்தியது. அதற்காக இதை ஒரு பிரச்சினையே இல்லை என்றும் கூறமுடியாது, புரட்சியையே தடுத்து நிறுத்தும் அளவுக்கு இதை ஒரு பிரச்சினை என்றும் கூற முடியாது.

            மக்கள் ஏன் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்? மேலும் இங்கு மட்டும் தான் சுயநலவாதிகள் உலகம் முழுவதும் பொதுநலவாதிகளா? ஒரு வேலை சோற்றுக்காக இருக்கிறார்கள் என்றால் இங்கு புரட்சி தேவை.

            மொத்தமாக நீங்கள் கூறியிருக்கும் அனைத்தும் உலகம் முழுவதும் உள்ள பொது நிலைமைகள் தான். ஆனால் புரட்சியை தீர்மானிப்பவை அவை அல்ல. எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டு மக்களில் பெரும்பாண்மையினரின் வர்க்க உணர்வும், முன்னணிப்படையின் பாத்திரமும் தான் புரட்சியை தீர்மானிக்கிறது.

            மேலும் புரட்சிக்கு வழிகாட்டக்கூடிய ‘மார்க்சியம் லெனினியம்’ என்கிற அறிவியல் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்க முடியாது. ஆப்பிரிக்காவிற்கு பொருந்தும் இந்தியாவிற்கும் பொருந்தாது என்றால் அது அறிவியலாக இருக்க முடியாது. ஆனால் மார்க்சியம் ஒரு அறிவியல்.

            • //எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டு மக்களில் பெரும்பாண்மையினரின் வர்க்க உணர்வும், முன்னணிப்படையின் பாத்திரமும் தான் புரட்சியை தீர்மானிக்கிறது.//

              இங்குள்ள மக்களில் பெரும்பாண்மையினரின் வர்க்க உணர்வு, முன்னணிப்படை – இவைகள் தான் விவாதத்திற்குரியது.

              ஒரு அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டுமென்றால் நிச்சயமாக அகிம்சை ஒத்து வராது என்பது எனது எண்ணம். அப்படியென்றால் அரசாங்கத்தை எதிர்த்து புரட்சி செய்ய எப்படிப்பட்ட படை பலம் வேண்டும்? அவர்கள் எல்லாம் நக்சல்பாரிகளாக இருக்க வேண்டுமா? அவர்கள் எல்லாம் ஒரே வர்க்க உணர்வை கொண்டவர்களாக இருக்க வேண்டுமா? அப்படிப்பட்டவர்கள் இந்த நாட்டு மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக இருக்க வேண்டுமா?

              • லெனின், நான் ஏற்கெனவே கூறியது போல இதை பின்னூட்டத்தின் வழி புரிந்துகொள்ள முடியாது. ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் பதிலளித்து, அந்த பதிலுக்கு கேள்வி எழுப்பி அந்த கேள்விக்கு பதிலளித்து இவ்வாறு புரட்சி என்கிற ஒரு பிரம்மாண்டமான மக்கள் திரள் நடவடிக்கையை புரிந்துகொள்ள முடியாது. இது குறித்து நாம் பேசுவோம், உங்களுக்கு எவ்வளவு சந்தேகங்கள், கேள்விகள், கருத்து வேறுபாடுகள் உள்ளதோ அவ்வளவு விரிவாக பேசுவோம். உங்களுடைய மின்னஞ்சலை தாருங்கள் நான் தொடர்புகொள்கிறேன்.

              • தோழர் லெனின் ,

                உங்கள் சந்தேகத்தை தீர்க்க ஒரு முறை “இந்தியாவின் இதயப் பகுதிக்கு ” [Bastar district of Chhattisgarh] சுற்றுலா சென்று வாருங்கள். . 🙂

                உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் தோழர் லெனின்.

                //அப்படியென்றால் அரசாங்கத்தை எதிர்த்து புரட்சி செய்ய எப்படிப்பட்ட படை பலம் வேண்டும்? அவர்கள் எல்லாம் நக்சல்பாரிகளாக இருக்க வேண்டுமா? அவர்கள் எல்லாம் ஒரே வர்க்க உணர்வை கொண்டவர்களாக இருக்க வேண்டுமா? அப்படிப்பட்டவர்கள் இந்த நாட்டு மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக இருக்க வேண்டுமா?//

  15. தேர்தலை புறக்கணிப்பதை விட நல்ல திறமையான, மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய நல்லவர்களை தேர்ந்தெடுப்பது ஒரு சிறந்த முடிவாக இருக்கும் என்பது எனது தாழ்மையான எண்ணம்.

  16. நேர்மையான, அதே சமயம் திறமைசாலியான வேட்பாளர்கள் கிடைக்கவில்லைஎன்றால் நீங்களே (ம.க.இ.க.) உங்கள் உறுப்பினர்களை வேட்பாளர்களாக நிறுத்தலாம். சிறுதுளி பெருவெள்ளம். முதலில் பஞ்சாயத்து தேர்தல், மாநகராட்சி தேர்தல் இந்த அளவில் திறமை மிக்க இளைஞர்களை நிறுத்தி வென்று மக்களுக்கு நல்லது செய்து அவர்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து பின்னர் ஒரு சட்டசபை தேர்தலை தேர்ந்தெடுக்கலாம். இப்படி படிப்படியாக ஒட்டு மொத்த மாநிலத்தையும் நல்லாட்சியின் மூலமே பிடிக்க முடியும். என்ன, லோக் பரிவர்த்தன் போல காமெடி கூத்தாக இல்லாமல் உண்மையிலேயே மக்களுக்கு நன்மை செய்யும் மனப்பக்குவமுள்ள திறமையான இளைஞர்களை ம.க.இ.க விலிருந்தே தேர்ந்தெடுத்து போட்டியிட வைக்கலாம்.

    உண்மையில் சொல்லப்போனால் மக்களும் தற்போதைய அனைத்து அரசியல் கட்சிகளின் மேலும் நம்பிக்கை தகர்ந்து உள்ளனர். அரவிந்த் கேஜ்ரிவாலின் வெற்றி இதை தான் காட்டுகிறது. மாற்று ஒன்று வேண்டும் என்று மக்கள் உணர்ந்து தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இப்போது வேறு வழி இல்லை. இருக்கும் கட்சிகளிலேயே சற்று பரவாயில்லை எனக்கூடிய கட்சிக்கு ஒட்டு போட்டு வெல்ல வைக்கிறார்கள். ஆலையில்லாத ஊருக்கு இலுப்பை பூ தான் சக்கரை.

    ஏன் நீங்களே அந்த மாற்றாக இருக்க கூடாது?
    மக்களுக்காக போராடுபவர்களை மக்கள் எத்தனை காலம் தான் புறக்கணித்து விட முடியும்?
    மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும், என்றால் அதை ஆண்டவன் வானத்தில் இருந்து வந்து செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா. ஏன் அந்த மாற்றம் நீங்களாக இருக்க கூடாது?

  17. கற்றது கையளவு.

    சில கேள்விகள்.

    தேர்தலில் நின்று என்ன மாதிரியான மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று கருதுகிறீர்கள்?

    நீங்கள் நம்பும் நல்ல வேட்பாளர்கள் (ம.க.இ.க தோழர்களை போன்ற) பதவிக்கு வந்த பிறகு ஊழல் செய்தால், மக்களை கொள்ளையடித்தால் என்ன செய்வது, எப்படி தடுப்பது?

    நீங்கள் கூறும் நல்ல வேட்பாளர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூடங்குளம் அணு உலை போல நூற்றுக்கணக்கான அணு உலைகளை நாட்டிற்குள் இறக்குமதி செய்தால் என்ன செய்வது?

    நீங்கள் நம்பும் நல்ல வேட்பாளர்கள் பதவிக்கு வந்த பிறகு மக்களுக்கு துரோகம் செய்தால் என்ன செய்வது?

    மொத்தமாக, நாட்டை சுடுகாடாக்கும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற மறுகாலனியாக்கக் கொள்கையை எப்படி தடுப்பது?

    • புரட்சி வந்த பிறகு அதற்கு தலைமை ஏற்றவர்கள் மட்டும் உத்தமர்களாக இருப்பார்களா என்ன?

      • தலைமையேற்பவர்களில் நீங்களும் ஒருவர் என்று வைத்துக்கொள்வோம், மக்கள் நினைத்தபடி நீங்கள் நடந்துகொள்ளவில்லை என்றால்(அதாவது உத்தமனாக) நீங்கள் அந்த இடத்தில் இருக்க முடியாது, கீழே இறக்கிவிடுவார்கள், ஏனென்றால் அதிகாரம் எந்த தனிநபரிடமும் இருக்காது, மக்களிடம் குவிந்திருக்கும்.

        உங்களுடைய இந்த கேள்வி புதிய கேள்வி அல்ல, பலரும் கேட்கின்ற நியாயமான கேள்வி தான். யோக்கியன் என்று பலரையும் நம்பி நம்பி, ஏமாந்ததால் சலிப்பாக வருகின்ற நியாயமான கேள்வி தான் இது. கடந்தகால, நிகழ்கால அணுபவத்திலிருந்து சமூக பிரச்சினை என்று வருகிற எவனும் யோக்கியனாக இருக்க முடியாது என்கிற தவறான எண்ணம் பிறக்கிறது. ஆனால் இயற்கையாகவே அப்படி இருக்க முடியாது, எல்லாமே தவறாக இருக்க முடியுமா? உதாரணத்திற்கு, மக்களில் மோசமானவர்கள் இருக்கிறார்களா, அல்லது மக்கள் அனைவருமே மோசமானவர்களாக இருக்கிறார்களா? அனைவருமா சமூக விரோதிகளாக இருக்கிறார்கள், அனைவருமா கொலைகாரர்களாக இருக்கிறார்கள், அனைவருமா கொள்ளையர்களாக இருக்கிறார்கள்? இல்லையே. இன்றும் பெரும்பாண்மை மக்கள் உழைத்து தானே உண்கிறார்கள். எனவே யாருமே சரியாக இருக்க முடியாது என்று நினைப்பது தவறு, அனைத்துமே தவறாக இருக்கவே முடியாது, யோசியுங்கள்.

        • பெரும்பான்மையான மக்கள் உழைத்து தான் உண்கிறார்கள். அதே மக்கள் தான் ஒட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளிடம் 1௦௦௦, 2௦௦௦ வாங்கிக்கொண்டு ஒட்டு போடுகிறார்கள். பணம் எளிதில் கிடைத்தால், சட்டம் கண்காணாது இருந்தால் மக்கள் தவறு செய்கிறார்கள். ஆசை யாரை விட்டது? உழைக்காமல் காசு பார்க்க மக்களுக்கு எப்போதும் ஆசை தான். லாட்டரி சீட்டு விற்பனையை மறுபடி ஆரம்பித்து பார்த்தால் நாட்டில் எத்தனை மக்கள் உடனடி பணக்காரராக, உழைக்காமல் பணம் பார்க்க விரும்புகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகும்.

          தங்களது புதிய புரட்சி ஆட்சியமைப்பில் தலைமை ஏற்பவர்கள் உத்தமனாக இல்லாவிடில் அவர்கள் அந்த இடத்தில் இருக்க முடியாது என்று கூறுகிறீர்கள். இதை சற்று விளக்கவும். தற்போதைய தேர்தல் முறை படியும் தவறு செய்யும் அரசியல்வாதிகளை அடுத்த தேர்தலில் வீழ்த்தும் சக்தி மக்களிடம் உள்ளது. மக்கள் தான் அந்த சக்தியை உணராது மந்தை மனப்பான்மையோடு தாங்கள் சேர்ந்த சாதி, மதம், இனம், கட்சி என்று மீண்டும் மீண்டும் தவரிழைபவர்களை அரியணை ஏற்றுகிறார்கள்.

          என்னை பொறுத்தவரை மக்களாட்சி, ஜனநாயகம் என்றாலும் சரி, மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி என்றாலும் சரி, உங்களின் புரட்சி ஆட்சியமைப்பாக இருந்தாலும் சரி, ஆள்பவர் மக்கள் நலன் பேணுபவராக இருந்தால் நாட்டிற்கு நல்லதே நடக்கும். மற்ற ஆட்சி முறைகளை விட,ஜனநாயகத்தில் மக்களால் ஆள்பவர்களை தூக்கியடிக்க கூடிய பலம், ஒட்டு பலம் மூலம் நிறைவேற வாய்ப்பிருக்கிறது. மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை எரிக்க முடியாது. ஆட்சியமைப்பவர்கள் தவறிழைத்தால் அதனால் ஜனநாயகத்தை குறை கூறி பயனில்லை. அத்தகையோரை மீண்டும் மீண்டும் ஆட்சியில் ஏற்றும் அறியாமையை தான் நாம் களைய வேண்டும்.

          • கற்றது கையளவு,
            ஏன் வக்களிக்கக்கூடாது என்பதற்கான பதில் கீழ் உள்ள இணைப்பில் பின்னூட்ட எண் 9.1.1 கூறப்பட்டிருக்கிறது. அந்த பதில் அப்பதிவில் நீங்கள் கேட்டிருந்த கேள்விக்கு அளிக்கப்பட்டது தான்.

            மேலும், புதிய ஜனநாயக சமூக அமைப்பு எவ்வாறு இயங்கும் என்பதை அறிந்துகொள்ள நீங்கள் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி. சீனாவில் ஏற்கெனவே அத்தகைய சமூக அமைப்பு சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அமைக்கப்பட்டது. இது குறித்து நாம் மேலும் விரிவாக பேசலாம். ஆனால் இது பின்னூட்டத்தில் பேசி புரிந்துகொள்ளக்கூடிய விசயம் அல்ல. எமது விளக்கத்தில் உங்களுக்கு பல கேள்விகள் எழும், அதற்கு விளக்கமளிக்க வேண்டும், அந்த விளக்கத்திலிருந்து மேலும் சில கேள்விகள் எழலாம். எனவே இதைப் பற்றி முழுமையான தெளிவை பெற வேண்டுமானால் இரண்டு மூன்று மணி நேரங்கள் நேரில் சந்தித்து பேசுவது தான் பயனுள்ளதாக இருக்கும். உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை அளித்தால் நான் தொடர்புகொள்வேன்.

            நன்றி!

            • 9.1.1. பின்னூட்டம் இந்த பக்கத்தில் இல்லை நண்பரே.

              நான் தற்போது வேலை நிமித்தமாக அயல்நாட்டில் இருக்கிறேன். இரண்டு ஆண்டு கழித்து தமிழகம் திரும்புவேன்.

              புதிய ஜனநாயக சமூக அமைப்பை பற்றிய ஒரு நல்ல லிங்க் இருந்தால் தரவும். முழுமையாக படித்து கொள்கிறேன்.

              நன்றி நண்பரே,

        • //அனைத்துமே தவறாக இருக்கவே முடியாது//

          மதவாதிகளின் நம்பிக்கை போல் உள்ளது உங்கள் கருத்து.மனிதன் உளவியல் ரீதியாக சிக்கலான பன்முகதன்மை உடையவன்.பெரும் மக்கள் திரளில் அனைத்துமே சரியாக இருக்குமா?

          • அப்படியானால் மக்கள் அனைவரும் தவறானவர்கள் என்கிறீர்களா, மக்களில் அனைவருமே தவறானவர்களா அல்லது சிலரா?

  18. ஓட்டுப்போடாதே புரட்சி செய் என சொல்லும் நண்பரே:

    தற்போது நாட்டில் 40 முதல் 50 சதவீத வாக்காளர்கள் இந்த வித புரட்சியை தான் செய்து வருகிறார்கள். ஒட்டு போடாமல் வீட்டில் இருந்து கொண்டே சரக்கடித்து கொண்டோ, இல்லை நண்பர்களுடன் அரட்டை கச்செரியிலோ, இல்லை தொலைக்காட்சியில் மூழ்கிக்கொண்டோ இருக்கிறார்கள். இதனால் கட்சிகாரர்கள், கட்சி அபிமானிகள், சாதி வெறியர்கள், இவர்கள் மட்டும் ஒட்டு போட்டு வருகிறார்கள். இத்தகையோரால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள் வேறு எப்படி இருப்பார்கள்? ஒட்டு போட காசு தர வேண்டாம் என்று யாராவது மறுக்கிறார்களா?

    தங்களது புரட்சி ஆட்சியமைப்பில் எனக்கு சில சந்தேகங்கள். தீர்த்து வைப்பீர்கள் என்று நம்புகிறேன்.
    1. ஆட்சியில் இருப்பவர் தவறு செய்தால் அவர்களை எப்படி நீக்குவது. யாருக்கு அந்த அதிகாரம் கொடுக்கப்படும். மக்களே நீக்க வேண்டும் என்றால் அது எப்படி, ஆட்சியிலிருந்து நீக்குவதற்கு மீண்டும் மக்கள் ஓட்டளித்து நீக்க வேண்டுமா?

    2. ஆட்சியில் இருப்பவர் மக்கள் நலனுக்காக ஒரு கசப்பு மருந்து போன்ற சட்டத்தை நிறைவேற்றினால், பெரும்பான்மை மக்களுக்கு அந்த சட்டம் பிடிக்கவில்லை என்றால் அந்த சட்டம் தோற்று விடும். அது போன்ற சமயங்களில் மக்களுக்கு பிடித்தமான Popular Policies மட்டுமே நிறைவேற்ற முடியும் என்றால் அப்போது நாட்டின் பொருளாதாரம் மிக வீழ்ச்சி அடைந்து விடுமே. நாட்டின் பொருளாதாரம் திவாலாகாமல் இருக்க வேண்டும் என்றால் சில கடுமையான, மக்களுக்கு பிடிக்காத சட்டங்களையும் சில சமயம் நிறைவேற்ற வேண்டும். அதை நீங்கள் சொல்லும் புரட்சி ஆட்சியில் எப்படி நிறைவேற்ற முடியும்.

    3. ஒவ்வொரு முறை தவறு செய்பவர்களையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தால் ஆட்சி நிர்வாகம் எப்படி நடைபெறும். அந்த இடைகாலங்களில் யார் ஆட்சி பொறுப்பேற்பார்கள். ஆட்சியில் உள்ளவர்களை அடிக்கடி மாற்றி கொண்டே இருந்தால் அந்த குறிப்பிட்ட அமைச்சகமோ, துறையோ எப்படி சீராக வேலை செய்யும்?

    4. ஆட்சியில் உள்ளவர்கள் தவறு செய்யும்போதெல்லாம் அடிக்கடி அவர்களை மாற்றிக்கொண்டே இருந்தால் அதிகாரிகளுக்கு ஆள்பவர்கள் மேல் பயமில்லால் போய் பின் நாடே அந்த அரசு அதிகாரிகளின் எதேச்சார போக்கினால் பாதிக்கப்படும். இதை எப்படி தடுப்பது.

    5. வெளியுறவு, இராணுவம் போன்ற முக்கிய பொறுப்புகளை யார் நிர்வகிப்பார்கள்? ஸ்திரத்தன்மை இல்லாத ஆட்சி அமையும் போது நமது பகை நாடுகளால் எளிதில் நாம் தாக்கப்படும், ஆக்கிரமிக்கப்படும் ஆபத்தும் உள்ளது அல்லவா? இதை எப்படி சரி செய்வது?

    நண்பரே, என் கேள்விகள் அனைத்தும் நீங்கள் கூறும் புரட்சி ஆட்சியமைப்பை பற்றி முழுவதுமாக புரிந்து கொள்வதற்காக தான் கேட்கிறேன். இதில் கேலியோ, கிண்டலோ இல்லை.

    எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு

    என்ற திருக்குரளுக்கேற்ப யார் எந்த கருத்தை சொன்னாலும் அதன் நல்லது, கெட்டதுகளை முழுதும் ஆராய்ந்து அறிந்து தான் அதனை பற்றி என்னுடைய கருத்தை வெளியிடுவேன். தற்போது நான் உங்களது ஆட்சிமுறையை பற்றி கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் தான் இத்தனை கேள்விகள் கேட்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம் நண்பரே.

    • இந்த கேள்விக்கும் மேலே உள்ளது தான் பதில்.

Leave a Reply to கற்றது கையளவு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க