privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககாட்டு யானைகளும் அதிகார வர்க்க யானைகளும் - விவிமு போராட்டம்

காட்டு யானைகளும் அதிகார வர்க்க யானைகளும் – விவிமு போராட்டம்

-

காட்டு யானைகளை விரட்டக் கோரி, அதிகாரவர்க்க மதம் பிடித்த அரசை நிர்பந்தித்து போராட அழைப்பு விடுத்து விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் மேற்கொண்ட பிரச்சார இயக்கம்

மார்ச் -2014 பிரச்சார இயக்கம் ஒசூர், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் வி.வி.மு. பிரச்சாரம்

காட்டு யானைகள் விவசாயிகளையும் விவசாயத்தையும் அழித்து வருவது அனைவரும் அறிந்ததே. கர்நாடக வனப்பகுதியிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு தமிழக வனப்பகுதியில் நுழைந்த 120-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களில் கிராம மக்களை தாக்கி வருகிறது. இதுவரை சுமார் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமுற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நாசமடைந்துள்ளன. இதுவரை யானைகள் காட்டிற்குள் விரட்டியடிக்கப்படவில்லை. தொடரும் இந்த துயரங்களை தீர்க்கஎன்ன வழி என்று திக்கித்தவித்த மக்களுக்கு இப்பகுதியில் செயல்படும் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக விரிவான பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் துண்டு பிரசுர வினியோகம், தெருமுனைப் பிரச்சாரங்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தப் பிரச்சாரம் மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்று தந்துள்ளன. காட்டு யானைகள் ஊருக்குள் வருவதற்கு அரசும், முதலாளித்துவ கொள்கைகளும் தான் காரணம் என்ற பிரச்சாரம் மக்கள் புதிய விசயமாகப் பார்த்து வரவேற்பு கொடுக்கின்றனர். தொடர்ந்து சங்கமாக சேர்ந்து போராடினால்தான் தீர்வு கிடைக்கும் என்பதை உணர்ந்து பலரும் அமைப்பில் இணைய ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். இம்மாதம் முழுவதும் இப்பிரச்சார இயக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சாரத்தின் போது யானைகளால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், யானைகளால் காயமுற்றவர்கள், பயிர்கள் நாசமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் என பலரையும் சந்தித்து பிரச்சரம் செய்து வருகிறோம்.

பிரசுரத்தின் உள்ளடக்கம்:

  • காட்டு யானைகளின் அட்டூழியம், விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்கிறது!
    தமிழக அரசின் அட்டூழியம், யானைகளை விரட்டக் கோரும் மக்களை ஒடுக்குகிறது!
  • சுற்றுச்சூழலை அழிக்கும் காட்டுவளங்களைக் கொள்ளையிடும்
    தனியார்மயம், தாராளமயத்தை முறியடிப்போம்!
  • போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
    உழைக்கும் மக்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கும் மக்கள் கமிட்டிகளைக் கட்டியமைப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சில மாதங்களுக்கு முன் போடுர் பள்ளம் வழியாக 120-க்கும் மேற்பட்ட யானைகள் மூன்று பிரிவுகளாக தமிழக எல்லைக்குள் நுழைந்தன. இவை தேன்கனிக்கோட்டை, ஒசூர் வனப்பகுதியில் சுற்றித்திரிகின்றன. காட்டுயானைகள் ஊருக்குள் வந்து ராகி, வாழை, நெல் போன்ற விவசாயப் பயிர்களை நாசம் செய்வதும் நாம் அனுபவித்து வருகின்ற கொடுமையாக உள்ளது. முன்பெல்லாம் இரவில் ஊருக்குள் வந்து தாக்கும் யானைகள் இப்போது பகலிலேயே மக்களை தாக்குகின்றன. சாலைகளை கூட்டமாக வந்து மறித்துக் கொள்கின்றன. பாத்தகோட்டா, ஜவளகிரி, சானமாவு, காமன்தொட்டி போன்ற கிராமங்கள் பெரிதும் பாதித்து வருகின்றன. காட்டை ஒட்டியுள்ள கம்பெனிகளையும் இந்த யானைகள் விட்டுவைக்கவில்லை.

மழையின்றி விவசாயம் பொய்த்துப் போயுள்ள இன்றைய காலங்களில், விவசாயம் செய்ய இயலாமல் அரசின் மூலம் பல்வேறு நெருக்கடிகளை அனுபவித்து வருகிறோம். கோமாரி நோய் தாக்கி பெருமளவு பசுமாடுகளை இழந்து நட்டமடைந்துள்ளோம். இந்நிலையில், இந்த காட்டுயானைகள் நாள்தோறும் வளர்ந்து வருகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

வனத்துறை, மாவட்ட ஆட்சியர் கூட்டம், காட்டுயானைகள் கூட்டம்: ஒருநாள் ஐ.பீ.எல். போட்டி!

காட்டுயானைகளை விரட்டுவதாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு, மற்றும் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைகள் என்ன தெரியுமா? சில வனத்துறை ஊழியர்களை கொண்டு யானைக் கூட்டத்தை விரட்டுவதுதான். உண்மையில், இது கோமாளித்தனமானது! முட்டாள்தனமானது! வனத்துறை ஊழியர்கள் காட்டுயானைகளை விரட்டுவதற்காக மேற்கொள்ளும் இந்த முயற்சிகள், ஐ.பீ.எல். போட்டி போல மக்களை ரசிக்கவைத்து, காட்டுயானை கூட்டம் மக்களை கொல்வதையும் துன்புறுத்துவதையும் மறக்கடிக்கிறன. மக்களை ஏமாற்றுவதற்காக அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள், வனத்துறை ஊழியர்களின் உயிரைப் பலிகொடுப்பதில்தான் போய் முடியும். அவ்வாறுதான் நடந்தும் வருகிறது.

வனத்துறையின் அறிவிப்பு– விவசாயிகள் தலையில் இடி!

விவசாயிகளுக்கு காட்டுயானைகளால் தொல்லை என்ற உடன், இதற்காக மகழிச்சியடைந்தவர்கள் இருக்கிறார்களா? ஆம், இருக்கிறார்கள். அவர்கள்தான் இந்த அரசும் வனத்துறையும் கார்ப்பரேட் முதலாளிகளும்தான். இதனை எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? இதோ, வனத்துறையின் அறிவிப்புகள்!

  • காட்டிற்குள் கால்நடை மேய்ப்பதை தவிர்க்கவும்
  • வனப்பகுதியில் தீமூட்டாதீர்கள்
  • யானை தாண்டா அகழிகளில் கல் மற்றும் மண்ணைக் கொட்டி தடைகள் ஏற்படுத்தாதீர்கள்
  • வனப்பகுதிகளில் நடமாட வேண்டாம்
  • வனப்பகுதியை ஒட்டி கரும்பு, நெல், வாழை, ராகி போன்ற பயிர்களை செய்ய வேண்டாம்

என அறிவித்துள்ளது. காட்டையே நம்பி வாழுகின்ற மேய்ச்சல் தொழிலை பிரதானமாக செய்கின்ற விவசாயிகளுக்கு மேற்கண்ட வனத்துறையின் அறிவிப்புகள் அதிர்ச்சியளப்பவையாக உள்ளன.

யாரைப் பாதுக்காக்க இந்த அறிவிப்பு!

யானைகளிடமிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கத்தான் இந்த அறிவிப்பு என்று சொல்கிறது வனத்துறை. இது சுத்தப்பொய்! ஏனென்றால்,

  • காட்டிற்குள் கால்நடை மேய்ப்பதை தவிர்க்க வேண்டுமாம்! வனப்பகுதியில் நடமாட வேண்டாமாம்! இது அயோக்கியத்தனமான அறிவிப்பல்லவா? காட்டிற்குள் கால்நடை மேய்த்தவர்கள் அரிதும் அரிதாகவே யானைகளால் தாக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் யானைகள் ஊருக்குள் வந்ததால்தான் பயிர்கள் நாசம் செய்வது, விவசாயிகளைத் தாக்கியதும் நடந்துள்ளது. இந்த உண்மை வனத்துறைக்கும் தமிழக அரசுக்கும் தெரியாதா?
  • வனப்பகுதியில் தீமூட்டுவது காலங்காலமாக நடக்கிறது. அதனால்தான் யானைகள் ஊருக்குள் வருகிறது என்பது உண்மையல்ல, பொய்!
  • * வனத்துறை வெளியிட்டுள்ள பிரசுரத்தில், மாடுகள் காட்டில் மேய்ப்பதால் யானைகளுக்கு தேவையான தீவனங்கள் குறைந்துவிடுகிறதாம்! அதனால்தான் யானைகள் ஊருக்குள் வருகிறதாம்! – இதுவும் சுத்தப் பொய்! ஏனென்றால், வறட்சியினால் மாடுகளே காட்டில் உள்ள காய்ந்த சருகுகளைத்தான் மேய்கின்றன. யானைகள் சருகுகளை மேய்வதில்லை!

இந்த அறிவிப்பின் மோசடிகள்!

  • முதலில் இந்த அறிவிப்பு விவசாயிகளைப் பாதுகாக்க அல்ல என்பதை மேலே எழுப்பியுள்ள கேள்வியிலிருந்து புரிந்து கொண்டிருப்பீர்கள்.
  • இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள பெயர் – யானைகளைப் பாதுகாக்கக் புதிய திட்டம் (பார்க்க தினமணி 29 மார்ச் 2013)
  • இத்திட்டத்தின் படி காட்டில் 117 லட்சம் தண்ணீர் தொட்டிகள் கட்டுவது, 180 லட்சம் ரூபாயில் வனத்தில் பயிர்சாகுபடி செய்து யானைகளுக்கு உணவு வழங்குவது!
  • * 150 கிலோ மீட்டார் தொலைவிற்கு யானைகள் தடுப்புப் பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ளன.

இந்தத் திட்டங்கள் யானைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் விவசாயிகளை ஒழித்துக்கட்டும் அறிவிப்புகளாக உள்ளன.

யானைகள் ஊருக்குள் வருவதற்கு யார் காரணம்?

இரயிலில் அடிபட்டு இறந்த யானைகள்! – [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

காட்டு வளங்களை அழித்துப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டு தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் காட்டை தாரா வர்க்கிறது இந்திய அரசு. இவர்கள்…

  • காட்டில் உள்ள கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களைக் கொள்ளையடிக்கவும்
  • யானை, மான் போன்ற விலங்குகளை வேட்டையாடி அவற்றிலிருந்து தந்தம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிக்கவும்
  • சந்தனம், தேக்கு, அகில் போன்ற உயர்ந்த வகை மரங்களை வெட்டி காடுகளை கொள்ளையடிக்கவும்
  • காட்டையழித்து காப்பி, தேயிலை போன்ற பணப்பயிர் எஸ்டேட்கள் அமைப்பதாலும்
  • முக்கியத்திலும் முக்கியமாக, யானைகளில் வழித்தடங்களில் சுற்றுலா என்ற பெயரில், யோகா என்ற பெயரில் காட்டை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்புவதாலும் (ஒகேனக்கல் சுற்றுலா தளம், பன்னார்கட்டா சுற்றுலா தளம்)

மேற்கண்ட இக்காரணங்களால் தான் காட்டிலிருந்து யானைகள் ஊருக்குள் வருகின்றன. மக்களுக்கு நாட்டிற்குள் ஜனநாயகமில்லை. யானைகளுக்கு காட்டில் வாழ்வுரிமை இல்லை!

வேறு காரணங்கள் உள்ளனவா?

தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் விளைவாக சுற்றுசூழல் கெட்டுப்போயுள்ளது. அதாவது, தொடர்ந்து அதிகரித்துவரும் கார்கள், நகரமயமாக்கம், ஏரி குளங்களை ஆக்கிரமித்து பஸ்ஸ்டாண்டு, கட்டிடங்கள் எழுப்புவது, நீர் நிலைகளை நஞ்சாக்குவது, பேப்பர் உற்பத்திக்காக நாள் தோறும் பல லட்சம் மரங்களை வெட்டுவது போன்ற காரணங்களே முக்கியமானவையாக உள்ளன. இதனால் பூமி வெப்பமடைந்துள்ளது. மழைப் பொய்த்துப் போயுள்ளது. காடுகள் அழிந்து வருகின்றன. வன விலங்குகள் ஊருக்குள் வந்து மக்களைத் தாக்குகின்றன.

ஆகையால், விவசாயிகளாலும் பழங்குடி மக்களாலும் காடு அழிகிறது என்பது சுத்தப்பொய்! காட்டை அழிப்பவர்கள் இந்த அரசும் முதலாளிகளும் தான் காட்டை அழிக்கின்றனர். இந்த உண்மையை மக்கள் உணரவேண்டும்.

யானைகள் மக்களை துன்புறுத்துகின்றன! அரசோ மக்களை ஒடுக்குகிறது!

தடியடி
யானையை விரட்டக் கோரிய கிராம மக்களை தடியடி நடத்தி விரட்டும் போலீசு

ஊருக்குள் யானை வந்து காமன்தொட்டியிலும் சானமாவிலும் விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், யானைகளை காட்டிற்குள் விரட்டுவதற்கு தமிழக அரசு உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமுற்ற சானமாவு, பீர்ஜேப்பள்ளி கிராமம் மக்கள் ஊருக்குள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவெடுத்தனர். விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் இந்த ஜனநாயக பூர்வமான எதிர்ப்பை கூட தமிழக அரசு விட்டுவைக்கவில்லை. போலீசைக் கொண்டு மக்களை தாக்கியது. ஊருக்குள் ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை ஒடுக்கியது. உழைக்கும் மக்கள் தங்களது ஜனநாயக பூர்வ உரிமைகளை கூட கேட்காமல் யானைகளுக்கு அடிப்பட்டு சாகவேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம். இதற்கு காரணம், இந்த ஜனநாயகம் என்பதெல்லாம் போலி ஜனநாயகம்! முதலாளிகளுக்கு ஜனநாயகம்! உழைக்கும் மக்களுக்கு சர்வாதிகாரம்!

உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

  • உடனடியாக, தற்போது படையெடுத்து வந்துள்ள யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும். காட்டில் சந்தனமர கடத்தல் வீரப்பனை விரட்டுவதற்காக அதிரடிப்படையை கொண்டுவந்து இறக்கியது தமிழக அரசு. அதுபோல, இந்த யானைகளை அதிரடிப்படை கொண்டுவந்து விரட்டியடிக்க வேண்டும். அடுத்து, போடுர் பள்ளம் பகுதியிலிருந்து கரநாடக வனப்பகுதியில் உள்ள யானைகள் தமிழக எல்லைக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்.
  • காடுகளை ஆக்கிரமித்துள்ள சுற்றுலா தளங்களை (ஒகேனக்கல், பன்னார்கட்டா) இழுத்து மூட வேண்டும். அங்கு கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
  • காடுகளில் யானைகள் வாழ்வதற்கு தேவையான தீவனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கு யானைகளுக்கு தேவையான நீர்நிலைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே உடனடியாக காடுகளில் இருந்து யானைகள் கிராமங்களை நோக்கி வருவதை தடுக்க முடியும்.
  • காட்டுயானைகளால் இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காட்டு யானைகளால் சேதமடைந்த விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் ரூ.20,000 ஏக்கருக்கு நட்டஈடு வழங்க வேண்டும். தக்காளி, கோஷ், வாழை போன்ற பணப்பயிர் விவசாயிகளுக்கு கூடுதலாக, அவர்கள் போட்ட முழு தொகையையும் திருப்பி தரவேண்டும்.
  • வனப்பாதுகாப்புச் சட்டம், யானைகள் சரணாலயம் என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகளும் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளும் காடுகளை ஆக்கிரமிக்க செய்துதரும் மக்கள்விரோத ஒப்பந்தங்கள், திட்டங்கள் அனைத்தையும் கைவிட வேண்டும்.

மேற்கண்ட தீர்வுகளை வலியுறுத்தி அரசை நிர்பந்தித்துப் போராட வேண்டும். இதற்கு விவசாயிகள் சங்கமாக திரள வேண்டும். ஓட்டுக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., வி.சி., பா.ம.க., காங்கிரசு, பா.ஜ.க. போன்றவைதான் முதலாளிகளின் நலனிற்காக மக்களை கொல்கின்றனர். அதனால், இவர்களை நம்பி இருப்பது வீண்வேலை. மற்றொருபுறம், இவர்களுடன் எப்பொழுதும் கூட்டணி வைத்து நக்கி பிழைத்துகாலம் கடத்தும் சி.பி.ஐ., சி.பி.எம்., யு.சி.பி.ஐ. போன்ற போலி கம்யூனிஸ்டு கட்சிகளும் ஓட்டுக்காகவும் சீட்டுக்காவும் எப்பஐ வேண்டிமானாலும் மாற்றி பேசுபவர்கள்தான். ஆகையால், நமக்கான ஒரு சங்கம் அமைத்து போராட வேண்டும். விவசாயிகளின் ஜனநாயகம், அதிகாரத்திற்காக போராடும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் கிளை ஒவ்வொரு கிராமத்திலும் கட்டியமைப்பதுதான் இன்று நம்முன் உள்ள ஒரே கடமை.

நிரந்தரத் தீர்வு என்ன?

காடு அங்கு வாழும் மக்களுக்கு அடிப்படை உரிமை. காலங்காலமாக வனமும் கிராமங்களும் வேறுபாடின்றி ஒன்றுகலந்திருந்தன. பழங்குடி மக்கள் காட்டின் ஒரு அங்கமாக இருந்தனர். காடும் விலங்குகளும் மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். நமது நாட்டை அடிமையாக்கிய ஆங்கிலேயர் வந்த பின்னர், வனச் சட்டத்தைக் கொண்டுவந்து காட்டில் மக்கள் சுந்திரமாக நடமாடுவதற்குத் தடைவிதித்தனர். இன்றைய போலிசுந்திர அரசோ வனப்பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் காட்டுப் பகுதியில் வாழும் மக்களையே ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி காட்டைவிட்டு விரட்டியடிக்கிறது. இன்று பன்னாட்டுக் கம்பெனிகளும், உள்நாட்டு தரகு முதலாளித்துவ கம்பெனிகளும் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலம் நமது நாடு மறுகாலனியாக்கத்திற்குள் தள்ளப்படுகிறது. யானைகள் பாதுகாப்பு என்ற பெயரிலும் நமது கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் இதன் ஒருபகுதியே.

மேற்கு வங்கம், ஒரிசா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் காட்டை ஆக்கிரமிக்க வரும் இந்த கார்ப்பரேட் முதலாளிகளை மக்கள் போராடி விராட்டியடித்துள்ளனர். ஒசூரில் ஜி.எம்.ஆர். கம்பெனியின் மூலம் அமைக்க வந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அப்பகுதி விவசாயிகளுடன் சேர்ந்து எமது தோழமை அமைப்புகள் விரட்டியடித்தன. அதுபோல, யானைப் பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகளை விரட்டியடிக்கும் சதித்திட்டத்தை நாமும் சங்கமாக சேர்ந்து முறியடிக்கமுடியும்!

இப்பொழுது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நாங்க வந்தா பிரச்சனை தீர்ந்துவிடும்’ என எல்லா ஓட்டுக்கட்சிகளும் உங்களிடம் வந்து ஓட்டுக்கேட்க தொடங்கிவிட்டனர். ஆனால், தேர்தல் முடிந்து விட்டால் இவர்கள் நமது பிரச்சனையை கண்டு கொள்ளமாட்டார்கள். தொகுதி பக்கமே தலைகாட்ட மாட்டார்கள். காட்டுவளத்தை முதலாளிகள் கொள்ளையடிக்க புதிய திட்டங்களைத்தான் தீட்டிக்கொடுப்பார்கள்! ஆகையால், தேர்தலில் ஓட்டுப் போடுவதால் நமக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை. அதுமட்டுமல்ல, புதிய தாக்குதல்கள்தான் வரப்போகின்றன.

இன்றுள்ள இந்த போலிஜனநாயக அரசு இருக்கும் வரை விவசாயிகளுக்கு இது போன்ற புதிய புதிய தாக்குதல்கள் வந்து கொண்டுதான் இருக்கும். சுற்றுச்சூழல் நாசமடைவதைத் தடுக்க முடியாது. ஆகையால், இந்த போலி ஜனநாயக அரசை தகர்த்தெறிந்து மக்களுக்கு உண்மையான ஜனநாயகம் வழங்கும் புதிய ஜனநாயகக் குடியரசமைக்க அணிதிரள்வோம்! ஊர்தோறும் மக்கள் கமிட்டி அமைத்து அதிகாரங்கள் அனைத்தையும் விவசாயிகள் கையிலெடுப்போம்!

தமிழக அரசே!

  • காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடி! போடூர் பள்ளத்தில் தமிழக எல்லையை மூடு!
  • காட்டிற்குள் யானைகள் நிரந்தமாக தங்கும் வகையில் நீர் நிலைகளை உருவாக்கு! யானைகளுக்கு தேவையான தீவனங்களைப் பயிரிடு!
  • காட்டில் ஆடு, மாடு மேய்ப்பதற்கும் மக்கள் காட்டிற்குள் சென்றுவருவதற்கும் தடைவிதிக்காதே! விவசாயிகளின் வாழ் உரிமையைப் பறிக்காதே!
  • யானைகளால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கு!
  • காட்டுயானைகளால் நாசமடைந்த பயிர்களுக்கு குறைந்த பட்சம் ஏக்கருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கு! பணப்பயிர்களுக்கு விவசாயிகள் செய்த மொத்த தொகையையும் திருப்பிக்கொடு! பயிர்களுக்கு அரசின் மூலம் பயிர் காப்பீடு செய்துகொடு!

உழைக்கும் மக்களே! விவசாயிகளே!

  • காடு என்பது நமது உரிமை! காட்டிற்குள் நடமாடுவதைக் கட்டுப்படுத்துவதை எதிர்த்து முறியடிப்போம்!
  • யானைகள் பாதுகாப்புத் திட்டம் என்பது விவசாயிகளை காட்டிவிட்டு விரட்டியடிக்கும் சதித்திட்டம்! இதனை முறியடிக்க ஓரணியில் திரள்வோம்!
  • சுற்றுச்சூழலையும் நாசப்படுத்தும், காட்டு வளத்தை சுரண்டும் தனியார்மயம்–தாராளமயம்–உலகமயம் என்ற மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!
  • போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! விவசாயிகள் கையில் அதிகாரம் வழங்கும் புதிய ஜனநாயகக் குடியரசமைக்க ஒன்றிணைவோம்!

காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்த விவசாயிகளுக்கு எமது அஞ்சலி!

கடந்த 2012–13 ஆண்டுகளில் மரணமடைந்த விவசாயிகளில் சிலரின் பெயரை இங்கு குறிப்பிடுகிறோம்.

மதகொண்டப்பள்ளியைச் சேர்ந்த அப்பண்ணா, பன்னப்பள்ளியைச் சேர்ந்த வெங்கடேஷ், பீர்ஜேப்பள்ளிச் சேர்ந்த விவசாயி திருமைய்யா, கெலமங்கலம் ஏ.கொத்தப்பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணப்பா, பாத்தகோட்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனுசாமி, சூளகிரி சின்னசிகரலப்பள்ளியைச் சேர்ந்த சாலம்மா, தளி தேவர்பட்டாவைச் சேர்ந்த புட்டண்ணா, தே.கோட்டை மலசோனியைச் சேர்ந்த ராஜநாயக், தே.கோட்டை காடுகல்லச் சந்திரத்தைச் சேர்ந்த லட்சும்மையா, கெலமங்கலம் அருகே யூ.கொத்தப்பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணப்பா.

விவசாயிகள் விடுதலை முன்னணி
அஞ்செட்டி ஒன்றியம் & ஒசூர் ஒன்றியம்
தொடர்புக்கு :
தோழர்.சரவணன் 97513 78495
தோழர்.ஜெயராம், 89039 092472

பிரசுரங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]