privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஆவடி வேல்டெக் ரங்கராஜன் ஆசியுடன் போலீஸ் அடக்குமுறை

ஆவடி வேல்டெக் ரங்கராஜன் ஆசியுடன் போலீஸ் அடக்குமுறை

-

யார் செத்தாலும் போஸ்டர் ஒட்டாதே!
கேட்டா ஜெயிலு, கிடைக்காது பெயிலு,
ஆவடி வேல்டெக் ரங்கராஜனின் ஆசியில் போலீசு ராஜ்ஜியம்

ன்றைய சூழலில் தனியார் பொறியியல் கல்லூரிகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அதிலும் குறிப்பாக சென்னை ஆவடி வேல்டெக் கல்லூரி தன்னளவில் ஒரு தனி அரசாங்கத்தை நடத்தி வருகிறது. மாணவர்கள் வகுப்பில் சக மாணவிகளுடன் ஏன் மாணவர்களுடன் கூட பேச முடிவதில்லை, இது போன்ற சூழலில் தான் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவை தான் பெற்றோர் மத்தியில் ஒழுக்கமாக காட்டப்பட்டு வருகின்றது. இதில் வேலை செய்யும் பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் போன்றோரின் நிலையும் கொத்தடிமைகளைவிட மோசமாக உள்ளது. அவர்களின் சான்றிதழ்களை நிர்வாகம் பறித்துக் கொண்டு மிரட்டியும் வருகின்றது. இந்த அடிமைத்தனத்திற்கு எதிராக சாந்தி என்ற பேராசிரியர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உதவியுடன் போராடினார், தற்போது நீதிமன்றத்திலும் கூட உறுதியாக போராடிக் கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் தான் இரு வாரங்களுக்குமுன்னர் விடுதியில் தங்கி படிக்கும் திவ்யா என்ற மாணவி செல்பேசியில் பேசிக் கொண்டிருந்தார் என்று அனைத்து மாணவர் மத்தியிலும் வைத்து விடுதி வார்டன் அவரை மிகவும் கேவலமக பேசியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இந்த விசயத்தை கூட வெளியில் தெரியாமல் மறைத்தது வேல்டெக் நிர்வாகம். பிரேதத்தை உடனடியாக அப்புறப்படுத்தி தனியார் மருத்துவமனையில் வைத்து அவரது தந்தையை மிரட்டி அவரிடம் பிரேதத்தை ஒப்படைத்தனர்.

வேல்டெக் ரங்கராஜன்
வேல்டெக் ரங்கராஜன்

இந்த விசயம் மாணவர்கள் மத்தியில் தெரியவந்ததும் இதுவரை அடிமையாக இருந்ததால் எத்தனையோ உரிமைகளை இழந்தோம் இனியும் அமைதியாக இருந்தால் திவ்யா கதிதான் நமக்கும் ஏற்படும் என்று குமுறி எழுந்தார்கள் மாணவர்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த தகவல் அறிந்தவுடன் புமாஇமு இணை செயலாளர் தோழர் ஏழுமலை ஆவடி வேல்டெக் கல்லூரிக்கு சென்று மாணவர்களை சந்தித்து பேச முயன்றார். ஆனால் அதற்கு முன்பே காவல்துறையினர் அங்கு குழுமி விட்டனர். அதுவும் ஏதோ முதல்வர் வருகைக்கு பாதுகாப்பளிக்க வந்தது போன்று 8 ஆய்வாளர்கள், 14 துணைஆய்வாளர்கள், 40 காவலர்கள் என ஒரே அலப்பரையாகி இருந்தது. கல்லூரிக்குள்ளே யாரும் நுழையமுடியாதபடி போலீஸின் முற்றுகை இருந்தது.

தோழர் ஏழுமலையை கல்லூரிக்குள் அனுமதிக்க காவல்துறை மறுத்தது, அதை எல்லாம் தாண்டி நமது தோழர் உள்ளே சென்று மாணவர்களிடம் பேசி இது போன்ற பிரச்சினைக்காக நாம் ஒன்று கூடியுள்ளோம்., ஆனால் இது நம் கல்லூரிக்கு மட்டுமான பிரச்சினை கிடையாது ஒட்டு மொத்தமாக கல்வியானது தனியார்மயமானதன் விளைவு தான் இது. எனவே மாணவர்கள் அனைவரும் அமைப்பாக இணைந்து போராட வேண்டியது அவசியம் என்று பேசி பிரசுரங்களை வினியோகித்து வெளியேறிய பின்னர் மாணவர்களை எல்லோரையும் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே வைத்து கொடுரமாகத் தாக்கியுள்ளன காவல்துறை குண்டாந்தடிகள்.

அதிலும் ஒரு பிரிவினையினை ஏற்படுத்தியது காவல்துறை. தமிழ் மாணவர்களுக்கு குறைந்த அடியும், வடஇந்திய மாணவர்களுக்கு அதிக அடியும் என வெறியாட்டம் போட்டுள்ளனர். இதை கண்டித்தும் மாணவியின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யச் சொல்லி புமாஇமு சார்பில் சென்னை முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக தோழர்கள் 22-ம் தேதி சுவரொட்டிகளை ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் ஒட்டியுள்ளனர் அப்போது காலை 7 மணி வாக்கில் எமது தோழர்கள் திவாகர் மற்றும் செல்வம் ஆகியோரை ஏதோ பயங்கரவாதிகளை பிடிப்பது போல 2 உதவி ஆய்வாளர் 40 காவலர்கள் மற்றும் 2 ஜீப் சகிதம் வந்து பிடித்தனர். அவர்களை கைது செய்துள்ளதாக அறிவித்தனர். அதற்க்கு என்ன காரணம் என்று தோழர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் வண்டியில் ஏறும்படி ஸ்டேசனில் வைத்து பேசிக்கொள்ளலாம் என்று தோழர்களை பலவந்தப்படுத்தினர். ஆனால் நாங்கள் காவல் நிலையத்தை கண்டு அஞ்சவில்லை என்று பதிலளித்தனர்.

ஆனால் நாங்கள் உங்கள் வண்டியில் ஏற முடியாது என மறுத்தனர். நடந்து வருகிறோம் எனக் கூறி அவ்வாறு செய்தனர் அது ஒரு ஊர்வலம் போல முன்னாடி 10 போலீஸ் பின்னாடி 10 போலீஸ் என சென்றனர். இது பொதுமக்கள் மத்தியில் ஒரு பிரச்சாரமாக்கப்படுவதை காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதனால் காவல்துறையினர் தோழர்களின் சொந்த வாகனத்தில் வரச்சொல்லி அழைத்து வந்தனர். அதற்குள் தகவல் அறிந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மற்றும் புமாஇமு தோழர்கள் ஆவடிடேங்க் T-7 காவல் நிலையம் வந்து சேர்ந்தனர்.

இந்தப் பகுதியில் T-6 மற்றும் T-7 இரண்டு காவல் நிலையங்கள் உள்ளன. இவை இரண்டிற்கும் வேல்டெக் ரங்கராஜன் தான் புரவலர். அது மட்டுமல்ல ஆவடி பகுதியில் அதிக நிலங்கள் இவருக்குத்தான் சொந்தம், அங்கு அவர் ஒரு குட்டி ராஜா. அப்படி இருக்கும் போது அவரை விமர்சித்தால் காவல் துறைக்கு கோபம் வரத்தானே செய்யும். அதுதான் DC யே நேரடியாக இந்த விசயத்தில் தலையிடுகிறார். இவ்வாறு ரங்கராஜனுக்கு வாலாட்டும் போலீசு, எமது தோழர்கள் மீது என்ன பிரிவுகளில் வழக்கு போட்டுள்ளனர் என்று சொல்ல கூட மறுத்துவிட்டு தோழர்களை திடீரென்று ஜீப்பில் ஏற்றி சென்றது. பின்னர் மீண்டும் காவல் நிலையத்துக்கு வந்தனர்.

அப்போது அந்த அதிகாரி தோழரிடம் சொல்லுகிறார், “என்ன பெருசா செய்ய முடியும்? உங்களால் அதிகபட்சம் போனால் ஒரு முற்றுகை நடக்கும், அப்படி செய்தால் தடியடி நடத்துவோம்” என்று நக்கலாக சொன்னதை கேட்டு எமது தோழர்கள், “நாங்கள் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. போலீசிடம் எதை நாங்கள் எதிர்பார்க்க முடியும் நீங்கள் இப்படித்தான் நடப்பீர்கள் என்பது தெரியும்” என பதிலடி கொடுத்தார்.

பின்னர் மாலை 5:30 மணியளவில் தோழர்கள் அம்பத்தூர் நீதி மன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் அங்கு மாஜிஸ்ட்ரேட் இல்லை எனவே தோழர்கள் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள நீதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உடனே நீதிபதி தோழர்களை சிறை வைக்க தீர்ப்பளித்துவிட்டார். அவரிடம் பிணை மனுவை பதிவு செய்யக்கேட்ட போது எதுவும் பதில் பேசாமல் கிளம்ப முற்ப்பட்டார்.

அப்போது மஉபாம வழக்கறிஞர் “தோழர்கள் ஏன் பிணை மனுவை ஏற்க மறுக்கிறீர்கள். சங்கராச்சாரிக்கு மட்டும் வீட்டில் வைத்து பிணை வழங்கப்பட்டதே, சாமானியனுக்கு ஒரு நீதி சங்கராச்சாரிக்கு ஒரு நீதி இது தான் நீதித் துறையின் இலட்சணமா” என்று கேள்வி கேட்ட பின்னர் தான் அந்த பிணை மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார். ஆனாலும் பிணை வழங்கப்படவில்லை. தோழர்கள் ஒரு வாரம் சிறை வைக்கப்பட்டனர். அதன் பின்னர் கடந்த ஏழு நாட்களுக்கு பிறகு மிகுந்த போராட்டத்துக்கு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

தோழர்கள் மீது காவல்துறை 4 of TNOPD ACT மற்றும் 7(1)C Act ஆகிய பிரிவுகளிள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் தோழர்கள் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு அராஜகம் செய்ததாகவும், அங்கிருந்த ஆட்டோக்களை தட்டி கூச்சல் போட்டதாகவும் அரசு அலுவலர்களை வேலை செய்யவிடாமல் தடுத்ததாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால் போலீசு நமது சுவரொட்டிகளை மட்டுமே இதற்கு ஆதாரமாகக் காட்டியுள்ளது

இந்த தனியார் கல்வி கொள்ளையர்களுக்கு ஆதரவாகத்தான் காவல்துறை, நீதிமன்றம் என எல்லாம் வேலை செய்து வருகிறது. இதைப்பற்றி எந்த ஓட்டுக் கட்சியும் பேசுவது கிடையாது ஏனென்றால் ஒவ்வொரு கட்சிக்கும் படியளக்கும் பெருமாளாக இந்த தனியார் கல்வி முதலாளிகள் தான் உள்ளனர் பல ஓட்டுகட்சி தலைவர்களே தனியார் கல்லூரி முதலாளியாகவும் உள்ளனர். இது தான் இன்றைய ஜனநாயகம்.

இன்றைய சூழலில் அமைப்பாக இணைந்தால் தான் மாணவர்கள் தமது உரிமைகளை மட்டுமல்ல உயிரைக்கூட காப்பற்றிக்கொள்ள முடியும் அதுவும் ஒரு புரட்சிகர அமைப்பின் கீழ் இணையும் போது தான் சாத்தியம் என்பதை நாம் அறிந்துள்ளோமோ இல்லையோ, நமது எதிரி அறிந்துள்ளான். அதனால் தான் ஒரு சுவரொட்டி அவனை தூக்கமிழக்கச் செய்கிறது.

இந்த சூழலில் மாணவர்களும் பெற்றோரும் ஏன் ஆசிரியர்கள் அனைவரும் தன்மானத்துடன் இருக்க வேண்டுமானால் புரட்சிகர அமைப்புகளின் கீழ் அணிதிரளுவது ஒன்றே தீர்வாகும். அப்போது தான் தனியார்மயக் கல்விக் கொள்ளையையும், தனியார் கல்வி முதலாளிகளின் அராஜகத்தையும் முறியடிக்க இயலும்.

தகவல் –
புரட்சிக மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை.