privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்விவசாயிகளை கொல்லப் போகிறது உங்கள் வாக்கு !

விவசாயிகளை கொல்லப் போகிறது உங்கள் வாக்கு !

-

சிலப்பதிகாரத்தின் கானல் வரி பாடல்களில் களிப்பூட்டிய, வண்டலும், வாழ்க்கையுமாய் நிலத்தை செழிப்பூட்டிய காவிரியை இனி காண்பதெப்போ? ‘

‘உழவர் ஓதை, மதகோதை,
உடைநீர் ஓதை தண்பதங் கொள்
விழவர் ஓதை, சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவிரி!

நடந்தாய் வாழி காவிரி
நடந்தாய் வாழி காவிரி

( உழவரின் ஏர் ஓட்டும் ஓசை, மதகிலே நீர் வழியும் ஓசை, வரப்புகளை உடைத்து பாயும் நீரோசை, புதுப்புனலாடி கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி ஆராவார ஓசை… என இரு மருங்கும் ஒலிக்க நடந்து வந்த காவிரி!).

‘திரைவிரி தரு துறையே! திருமணல் விரி இடமே,
விரைவிரி நறு மலரே, மிடைதரு பொழில் இடமே,

புன்னை நீழலே, அன்னம் நடக்க,
பூவர் சோலை மயில் ஆலப்
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவிரி!…

என ஊர் செழித்த காவிரியை காண, மீண்டும் நம் நிலம் காண, விவசாயம், விவசாயி உயிர்வாழ உதவுமா இந்த பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தல்?

என்னென்னவோ வாக்குறுதிகள்! எத்தனையோ கட்சிகள்! இத்தனை ஆண்டுகாலம் ஓட்டு வாங்கிப்போன எவனாவது டெல்டா பகுதி மக்களின் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமான காவிரியில் தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தந்திருக்கிறானா?

நாட்டின் அடிப்படைத் தேவையான விவசாயத்திற்கு உரிய நீர்ப்பாசனத்தையோ, மின்சாரத்தையோ, இடுபொருட்களின் விலைக் கட்டுப்பாட்டையோ ஏற்படுத்தித் தராமல் விவசாயக் கடனை தள்ளுபடி செய்கிறோம் என்ற பெயரில் முதலாளிகள் தயாரிக்கும் பொருள்களை ஏழை விவசாயிகளின் தலையில் கட்டி, “விவசாயி கடனோடு பிறக்கிறான், கடனோடு வாழ்கிறான், கடனோடே சாகிறான்” என்ற அவல நிலையை ஏற்படுத்தியதுதான் அனைத்துக் கட்சிகளின் சாதனை! இவர்கள் சேவை செய்யும் ஆளும் வர்க்கத்தின் சாதனை!

விவசாயிகளையும், அது சார்ந்த தொழில்களையும் ஓட்டாண்டியாக்கி நம்மை நடுத்தெருவில் வீசி எறியும் இந்த ஆட்சி அமைப்பிற்கான தேர்தலை முதலில் நாம் வீசி எறிந்தாக வேண்டும்!

முப்போகம் விளைந்திருந்த நமது டெல்டா விவசாயத்தை இப்போது ஒரு போகத்திற்கே லாயக்கில்லாமல் மண்ணை கருக்கி, நம் வாழ்வை அழிக்கும் ‘வளர்ச்சி’ க் கொள்கைதான் எல்லா ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகளின் ‘வளமான’ கொள்கையும்!

காவிரி
காவிரி – அன்றும் இன்றும்

நெல், வாழை, கரும்பு, மஞ்சள், மா, பனை, இஞ்சி, கமுகு, தென்னை… என பல வளம் கொழித்த காவிரியை, ”ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் நாளிலும் தன் ஊற்றுப்பெருக்கில் உலகுக்கே ஊட்டும் காவிரியை” இவர்கள் பறித்தது மட்டுமல்ல, எஞ்சியிருக்கும் நம் ஈர நிலத்தையும் பாலையாக்க மீத்தேன் திட்டம், நிலக்கரி எடுக்கும் திட்டம்.

புதிய வேலைவாய்ப்பு என்ற போர்வையில், டெல்டா மாவட்டங்களுக்கே பாடை கட்ட பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளோடு கூட்டணி சேர்ந்து வருபவர்கள்தான் எல்லா ஓட்டுக்கட்சிகளும்!

இந்த முதலாளிகளின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரு அரசை அமைக்கத்தான் நம் காலைச்சுற்றுகின்றன கரைவேட்டி பாம்புகள்!

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தின்று கொழுத்த வயல் எலிகளைப் போல வலம் வரும் கட்சிகள், அதிகாரிகளை நாம் புறக்கணித்து விரட்ட வேண்டும்!

ஏற்கனவே விவசாயப் பகுதிகளில் இறால் பண்ணைகளை உருவாக்கி விளைநிலத்தை நாசமாக்கிய கார்ப்பரேட் முதலாளிகளின் அடுத்தடுத்த திட்டம்.

டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களுக்கு அடியில் உள்ள நிலக்கரியை எடுக்க, முதலில் மேல் அடுக்கில் இருக்கும் மீத்தேன் வாயுவை எடுப்பது.

முதல்கட்டமாக 50 ஆழ்துளை கிணறுகளை கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்த நாடு, பாபநாசம், மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல் என படிப்படியாக டெல்டா மாவட்டங்கள் முழுக்க விரிவுபடுத்தி, நிலத்தடி நீரை உறிஞ்சி, கழிவுகளை வெளியேற்றி, விவசாயத்தை அழித்து விவசாயிகளை விரட்டி அடிப்பது என்று ஒரு நாசகார திட்டத்தோடு தி கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற பன்னாட்டு கொள்ளைக்காரனுக்கு இந்திய அரசு 2010 லேயே உரிமம் வழங்கி விட்டது.

வாடும் பயிர்கள்“காவிரியின் பிள்ளை, கடைமடையின் தொல்லை” கருணாநிதி அரசுதான் 2011-ல் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமைத்தது.

இன்று “நான் வந்தால் விவசாயிகளை காப்பாற்றுகிறேன்” என்று தேர்தல் சவடால் அடிக்கும் கருணாநிதியும், தேர்தலுக்காக திட்டத்தை அடக்கி வாசிக்கும் ஈத்தேன் தலைவி ஜெயலலிதாவும், யாராய் இருந்தாலும் இவர்களின் கொள்கை, ‘வளர்ச்சி, வல்லரசு’ என்ற பெயரில் விவசாயத்தை அழித்து நிலத்தை கையகப்படுத்தி பன்னாட்டு முதலாளிகள் லாபத்திற்கும், ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு மண்ணை விற்பதும்தான் தேசியக் கொள்கை.

கூடங்குளம் அணு உலை போராட்டத்தில், “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பாவ்லா காட்டி கடைசியில் போராடிய மக்களை போலீசை வைத்து அடித்து, உதைத்து, பத்து வயது பையன் மீது கூட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை பாய்ச்சி ஒடுக்கியவர்தான் இந்த ஜெயலலிதா. இன்று டாஸ்மாக் எனர்ஜி கம்பெனி ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கம்பெனியை விரட்டும் என்று நம்பி, ஏமாறக்கூடாது!

தவிர, இந்தத் தேர்தலால் நமக்கு விவசாயி நலன் என்ற அளவில் கிடைக்கப்போவது என்ன?

நாம் நெடுநாளாக போராடிக் கேட்கும் விளை பொருட்களுக்கான விலை நிர்ணய உரிமையை இந்தத் தேர்தல் நமக்கு தருமா?

விவசாயிஎங்கிருந்தோ வரும் ஒரு வெளி நாட்டுக்கம்பெனி முதலாளி, நம்ம ஊர் தண்ணியை உறிஞ்சி ஒரு பாட்டிலில் போட்டு தன் இஷ்டத்துக்கு விலை வைத்து விற்பதை அனுமதிக்கின்றன இந்த அரசும், ஆளும்வர்க்கமும், இதற்கு கடமையாற்றும் அதிகார வர்க்கமும்.

விவசாயிகள், விலை கிடைக்காமல், போண்டியாகி தற்கொலை செய்து கொள்வதை தடுத்து நிறுத்த இந்தத் தேர்தலுக்கு வக்கில்லாத போது, எதுக்கு திரும்பத் திரும்ப வாக்கு!

உலகவங்கி, உலகவர்த்தகக் கழகம் தான் இங்குள்ள எல்லா கழகங்களுக்கும் தாய் கழகம், அவன் உத்திரவுக்கு வாலாட்டும் இந்த ஓட்டுச் சீட்டு கட்சி நரிகள்.

எவன் ஆட்சிக்கு வந்தாலும், தேசிய தண்ணீர்க் கொள்கை என்ற பெயரில் மெல்ல, மெல்ல, தண்ணீரை காசுக்கு மட்டுமே விற்பது, தண்ணீரை வியாபார பொருளாக்கி விவசாயமே செய்ய முடியாமல், விவசாயிகளை விளைநிலத்தை விட்டு துரத்துவது என்ற கார்ப்பரேட் முதலாளிகளின் நில அபகரிப்பு கொள்ளைக்கு, கைக்கூலி வேலை பார்க்கும் கழிசடைகள்தான் அம்மா, அய்யா, மருத்துவர், கேப்டன், ராமதாசு, பா.ஜ.க. காங்கிரசு… எல்லா தனியார்மய, தாராளமய தவப்புதல்வர்களும்!

காவிரிப் பிரச்சனை தொடங்கி, டெல்டா மாவட்டத்தை சூறையாட வரும் மீத்தேன், அம்பானியின் நிலக்கரி எரிவாயு திட்டம், ஓ.என். ஜி.சி. பெட்ரோலியத் திட்டம் அனைத்தையும் அமல்படுத்த துடியாய், துடிக்கும் இந்தக் கட்சிகளை நம்பி இனி பயனில்லை.

எதற்கெடுத்தாலும் ஒரு கேசை போட்டு உச்சநீதிமன்றத்திடம் தள்ளிவிட்டு பிறகு  உச்சநீதிமன்றமே ‘வளர்ச்சித்திட்டம்’ என்று சிங்காரித்து அனுப்புவதையும் இந்த தேர்தல் பாதையால் தடுக்க முடியாது.

விவசாயிகள்அதற்கு மக்களுக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ள, உள்ளூரிலிருந்து உயர்மட்டம் வரை மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்திற்குட்பட்ட அரசமைப்பு நமக்கு வேண்டும்!

சட்டம் போடுபவர் ஒருவர், அதை அமல்படுத்தும் அதிகாரவர்க்கம் ஒருவர் என்ற போலி ஜனநாயகத்தின் இரட்டை ஆட்சிக்கு பதில், அரசின் எல்லா மட்டங்களிலும் மக்களின் அதிகாரத்தை செல்லுபடியாக்கும் ஒரு புதிய ஜனநாயக அரசமைப்புக்கு போராட வேண்டிய தருணம் இது!

விவசாயிகளால் தேர்வு செய்யப்பட்ட விவசாய கமிட்டியின் அதிகாரத்திற்குட்பட்டு மக்களுக்கு வேண்டிய, விவசாயத்திற்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றித்தரும் பணியாளராக அரசு ஊழியர் முதல் அரசு வரை இருக்கும் படியான ஒரு புதிய ஜனநாயகமே இனிநமக்கு தேவை!

நமக்கு தண்ணி தர மாட்டான், நமக்கு விலை தர மாட்டான், விவசாயிகளை வாழ விட மாட்டான், விளைநிலங்களை அபகரிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் பயங்கரவாத திட்டங்களையும் நிறுத்த மாட்டான்.

இவைகளை லத்தி, துப்பாக்கி முனையில் நம்மேல் அமல்படுத்தும் இவர்களுக்கு ஏன் ஓட்டு போடவேண்டும்?

பயிர் விளைய வேண்டுமானால் களைகளை பிடுங்க வேண்டும்! இனி நாம் உயிர் வாழ வேண்டுமெனில் இந்த போலி ஜனநாயகத்தை பிடுங்கி எறியவேண்டும்!

குறுவை, சம்பா, தாளடி, ஊடுபயிர்கள், என உழைத்து வாழ்ந்த நம் வாழ்க்கையை கடன், வட்டி தற்கொலை என மானமிழந்து ஊரை விட்டுத் துரத்தும், இந்த முதலாளிகளுக்கான ஜனநாயகத்தை கருவறுப்போம்!

போராடி! போராடி, பூமியை பிளந்து வரும் விதையைப் போல… போராட்டங்களின் வழி நமக்கான கண்டு முதல் காணும் புதிய ஜனநாயக அரசமைப்பை வளர்த்தெடுப்போம்!

போடாதே ஓட்டு! அது நம் பூமிக்கே வேட்டு!

துரை. சண்முகம்