privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகாவிக் கறை மோடிக்கு துடிக்கும் கருப்பு பணநாயகம் !

காவிக் கறை மோடிக்கு துடிக்கும் கருப்பு பணநாயகம் !

-

டந்த 10 நாட்களில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், சரக்கு அடிக்கும் குடிகாரனின் ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹால் போல, கிடு கிடுவென்று ஏறியிருக்கிறது. மார்ச் 24-ம் தேதி காலையில் 21,753 மட்டத்தில் தொடங்கிய குறியீட்டு எண் ஏப்ரல் 2-ம் தேதி வரையிலான அடுத்த 7 வர்த்தக நாட்களில் மட்டும் 3.18% அதிகரித்திருக்கிறது. அதாவது, ஆண்டு முழுவதும் இதே வீதத்தில் பங்கு விலைகள் அதிகரித்தால் (அப்படி அதிகரிக்கப் போவதில்லை என்பது தெரிந்ததே) அவற்றின் விலை இரு மடங்காகி விடும்.

பங்குச் சந்தை குறியீட்டு எண்
குடிகாரனைப் போல தள்ளாடி நகரும் பங்குச் சந்தை குறியீட்டு எண்

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகரித்துக் கொண்டே போயிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை 1 டாலர் வாங்க ரூ 63 வரை கொடுக்க வேண்டியிருந்த நிலை மாறி இப்போது 1 டாலருக்கு ரூ 60-க்கும் குறைவாக கொடுத்தால் போதும் (சுமார் 5% மதிப்பு அதிகரிப்பு) என்ற நிலையை அடைந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ரூபாயின் மதிப்பு 1 டாலருக்கு ரூ 68 வரை வீழ்ச்சியடைந்தது நினைவிருக்கலாம்.

இந்த 10 நாட்களில் என்ன நடந்து விட்டது? இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி அதிகரித்து விட்டதா? மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி உயர்ந்திருப்பதாக தகவல்கள் புள்ளிவிபரங்கள் சொல்கின்றனவா? விவசாயத் துறையில் வளர்ச்சி பற்றிய நம்பிக்கையூட்டும் செய்திகள் வந்திருக்கின்றனவா?

அப்படி எதுவும் வரவில்லை. உண்மையில், மின்சார பயன்பாட்டை கண்காணித்து வரும் ஆய்வாளர்கள் தொழில் துறை உற்பத்தி குறைந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். கவலை தரும் விதமாக இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கும் என்ற வானிலை மையத்தின் கணிப்பும் வெளியாகியிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடன் தொல்லையினால் ஒரே மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள்  தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள் கொடி கட்டிப் பறக்கின்றன.

பங்குச் சந்தையில் பணத்தைக் கொண்டு கொட்டுபவர்கள் அன்னிய முதலீட்டாளர்கள். அன்னிய நிறுவனங்கள் ஏப்ரல் 1-ம் தேதி மட்டும் பங்குகளை வாங்குவதன் மூலம் 3,856 கோடி ரூபாய் பணத்தை நிகரத் தொகையாக நாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றன. மார்ச் மாதம் அன்னிய நிறுவனங்களின் நிகர வாங்கல், அதாவது அவர்கள் கொண்டு வந்த பணம் ரூ 25,619 கோடியாக இருந்தது.

இந்த அன்னிய முதலீட்டாளர்கள் என்பது யார், அவர்கள் வழியாக வரும் பணம் யாருடையது என்பதை பின்னர் பார்ப்போம்.

மோடி - சிதம்பரம்
கார்ப்பரேட் சேவையில் – ஒத்த கருத்துடன் சிதம்பரமும், மோடியும்.

இவ்வளவு பணம் இந்திய பங்குச் சந்தையில் வந்து குவியும் அளவுக்கு உலகில் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய வல்லரசுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போனவற்றில் பெரிய மாற்றம் ஏதாவது நடந்து விட்டதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. மாறாக, இந்திய ஏற்றுமதி ஊக்கம் இழக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரம் 2013-ன் கடைசி காலாண்டில் வெறும் 0.1% மட்டுமே வளர்ச்சி கண்டிருக்கிறது என்ற புள்ளிவிபரமும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்குள் டாலர் வருவதை குறைக்கும் விதமாக அமெரிக்க மத்திய வங்கி டாலர் அச்சடிப்பதை குறைக்கப் போகிறது என்ற செய்தியும் வெளியாகியிருக்கின்றன.

‘மோடி பிரதமராகப் போவதை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் பணத்தைக் கொண்டு வந்து இந்தியாவில் கொட்டுகிறார்கள்’ என்றார்கள் பாரதிய ஜனதா கட்சியினர். ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடப்புக் கணக்கு பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வந்ததுதான் பங்குச் சந்தை உயர்வுக்குக் காரணம்’ என்கிறார் ப சிதம்பரம். மாம்பலத்தைச் சேர்ந்த கிட்டு மாமாவோ இந்த வருடம் ஏப்ரல் 2-ம் தேதியே இந்தியாவின் ஜாதக பலன் மாறியிருப்பதுதான் காரணம் என்கிறார். இதில் எதை நம்ப வேண்டும் என்பது அவரவர் மத நம்பிக்கைகளை பொறுத்தது.

எனில் இந்த வீங்கிய பங்கு சந்தை வளர்ச்சிக்கு என்ன காரணம்? கருப்பு பணம்? காங்கிரஸ் போய், பாஜக வந்தாலும், அல்லது ஊழல் எதிர்ப்பு புகழ் ஆம் ஆத்மியே வந்து விட்டாலும் கருப்புப் பணப் புழக்கம் எந்த வகையிலும் குறைந்து விடப் போவதில்லை.

ஆனால், மும்பையைச் சேர்ந்த விஜய் ஜாதவ் என்ற நிதித்துறை குற்றங்களை கண்டுபிடிக்கும் தடயவியல் நிபுணர், இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 23 லட்சம் கோடி ரூபாய், மக்களவை தேர்தலையொட்டி நாடு திரும்பி வந்திருப்பதுதான் பங்குச் சந்தைகளில் காணப்படும் எழுச்சி, அன்னியச் செலாவணிக்கான கருப்புச் (ஹவாலா) சந்தையில் ரூபாய்க்கான கிராக்கி, அதிகரித்திருக்கும் தங்கக் கடத்தல், ரியல் எஸ்டேட் துறையில் சுறுசுறுப்பு இவற்றுக்கு காரணம் என்று கூறுவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

அத்வானி யாத்திரைரிசர்வ் வங்கியின் புள்ளிவிபரங்கள், ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான தரவுகள், தங்க வர்த்தகர்கள் தரும் தகவல்கள், மற்றும் அன்னிய செலாவணி நிபுணர்களின் கருத்துக்களை திரட்டி ஆய்வு செய்து தான் இந்த முடிவுக்கு வந்ததாக ஜாதவ் கூறுகிறார்.

முதலாவதாக, 2000-ம் ஆண்டுக்கும் 2003-ம் ஆண்டுக்கும் இடையே வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை வைத்திருந்த இந்தியர்கள் அதைப் பயன்படுத்தி 7,000 முதல் 8,000 டன் தங்கத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட எம்சிஎக்ஸ் ஆன்லைன் வர்த்தக சந்தையின் மூலம் தங்கத்தை இந்தியாவிற்குள் அனுப்புவதன் மூலம் கருப்புப் பணம் கொண்டு வரப்பட்டது என்கிறார் அவர்.

இரண்டாவதாக, பொதுவாக அன்னியச் செலாவணிக்கான கருப்புச் சந்தையில் (ஹவாலா) ரூபாய்க்கு எதிரான டாலரின் நாணய மாற்று வீதம் அதிகாரபூர்வ செலாவணியை விட 1.5 முதல் 2 சதவீதம் அதிகமாக இருக்கும். மாறாக 2009 முதல் 2013 வரையிலான கால கட்டத்தில் ஹவாலா வீதங்கள் அதிகார பூர்வ வீதத்தை விட 1 சதவீதம் குறைவாகவே இருந்திருக்கின்றன. சட்டத்துக்கு வெளியிலான முறைகளில் இந்தியாவுக்குள் பணத்தை கொண்டு வருவதற்கான வேண்டல் (demand) அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது என்கிறார் ஜாதவ்.

மூன்றாவதாக, மார்ச் 31, 2000 அன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 51.06 சதவீதமாக இருந்த நாட்டின் மொத்த பணப் புழக்க குறியீட்டு எண் (பணம், வங்கி வைப்புத் தொகைகள், கடன் பத்திரங்கள் இவற்றின் மொத்தம் – M3) மார்ச் 31, 2012 அன்று 73.29 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இந்திய பொருளாதாரத்தின் இயல்பான தேவைக்கான M3 உள்நாட்டு உற்பத்தியில் 55-60 சதவீதம் மட்டுமே என்று வைத்துக் கொண்டால் அதன் மதிப்பு ரூ 70.18 லட்சம் கோடியாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் கடந்த பிப்ரவரி மாத கடைசியில் ரிசர்வ் வங்கியின் புள்ளிவிபரப்படி அது ரூ 93.58 லட்சம் கோடியாக இருக்கிறது. உள்நாட்டு தேவையை விட அசாதரணமாக அதிகரித்திருக்கும் இந்த ரூ 23.39 லட்சம் கோடிதான் புதிதாக நாட்டுக்குள் நுழைந்திருக்கும் கருப்புப் பணம் என்கிறார் ஜாதவ்.

சு.சாமி, மோடி
கார்ப்பரேட் தரகும், இந்துத்துவா வெறியும் கைகோர்க்கும் இடம் பாஜக.

வருவாய் கண்காணிப்புத் துறை அதிகாரி ஒருவரும் கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ 1,500 கோடி முதல் ரூ 5,000 கோடி வரையிலான கருப்புப் பணம் இந்தியாவுக்குள் வந்திருக்கிறது என்று மதிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எழுதியிருக்கும் இந்தியா டுடே, “மோடி பிரதமர் ஆகப் போவதால் அவர் உறுதியான நடவடிக்கை எடுத்து விடுவார் என்று பயந்து வெளிநாட்டில் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் இப்போதே பணத்தை கொண்டு வருகிறார்கள்” என்று கூறியிருக்கிறது. மேலும் சுப்பிரமணிய சாமி என்ற ஆசாமி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய கருப்புப் பணம் சுவிஸ் கணக்குகளிலிருந்து வெளியேறி விட்டதாக கூறியதையும் குறிப்பிடுகிறது.

கருப்புப் பணம் என்பது சுவிஸ் வங்கியின் இரும்புப் பெட்டிகளில் டாலர் அல்லது ரூபாய் நோட்டுக்களாக கட்டி வைக்கப்பட்டிருப்பவை போலவும், மோடி அல்லது அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமரானால் சுவிட்சர்லாந்து மீது படையெடுத்துச் சென்று கப்பல்களில் கருப்புப் பணத்தை அள்ளி வந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் சில கோடி ரூபாய் வினியோகித்து விடுவார்கள் என்றும் ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர் கார்ப்பரேட் ஊடகங்களும், பாஜக, ஆம் ஆத்மி கட்சியினரும்.

இந்த பிரச்சாரத்தில் மூன்று மோசடிகள் உள்ளன.

முதலாவதாக, உலகப் பணக்காரர்கள் பதுக்கும் கருப்புப் பணத்தை கையாள்வதில் ஸ்விஸ் 3-வது இடத்தில்தான் இருக்கிறது. வங்கித் துறை ரகசியங்களை பராமரிப்பதில் முதல் இடத்தை பிடித்திருப்பது, ஒரே முகவரியில் 2.17 லட்சம் கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டுள்ள டெலாவர் மாநிலத்தைக் கொண்ட அமெரிக்கா. 2-வது இடத்தில் இருப்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்ப்பரேட் வரி ஏய்ப்பு மற்றும் நிதி சுதந்திர மையமான லக்சம்பர்க். கேமன் தீவுகள் என்ற சில ஆயிரம் மக்கள் தொகை கொண்ட வரியில்லா சொர்க்கம் 4-வது இடத்தையும், இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீது நேரடி காலனிய ஆதிக்கத்தை இழந்த இங்கிலாந்து உலக கோடீஸ்வரர்களின் பணத்தை பராமரிக்கும் சுரங்கமாக கட்டமைத்திருக்கும் “சிட்டி ஆஃப் லண்டன்” என்ற தனிச் சிறப்பான மாநகரம் 5-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.

டெலாவர்இரண்டாவதாக, கருப்புப் பணம் என்பது நிழலான கட்டிடங்களில் ரகசியமாக சந்திக்கும் போதை மருந்து, ஆயுதக் கடத்தல் மர்ம கும்பல்களாலும், லஞ்சம் வாங்கி கொள்ளையடிக்கும் கெட்ட அரசியல்வாதிகளாலும் உருவாக்கப்படுவது என்று சொல்லப்படுவதற்கு மாறாக குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி என்ற அமைப்பின் இயக்குநர் ரேமண்டு பேக்கர் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, உலகளவிலான மொத்தக் கருப்புப் பணத்தில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினருடைய இலஞ்ச ஊழல் பணம் வெறும் 3 சதவீதம்தான். 33 சதவீதம் போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் சார்ந்தது. சுமார் 64 விழுக்காடு கறுப்புப் பணத்தின் பிறப்பிடமும் இருப்பிடமும் பன்னாட்டு முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள்தான்.

மூன்றாவதாக, ஏப்ரல் முட்டாள்கள் தினத்தன்று தி இந்து நாளிதழில் வெளியான ஒரு செய்தியை போல பணத்தை வெளிநாடுகளிலிருந்து கப்பல்களில் கடத்தப்பட்டு கொண்டு வர வேண்டிய தேவையில்லை. விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்ட அளவில், யார் கொண்டு வருகிறார்கள் என்றோ யார் எடுத்துச் செல்கிறார்கள் என்றோ தெரியாத வண்ணம் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரவும் எடுத்துச் செல்லவும் சட்டபூர்வமான வழிமுறைகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய தரகு முதலாளிகளுக்கும் உள்ளன.

(இது தொடர்பான விரிவான விபரங்களை தெரிந்து கொள்ள வினவில் வெளியான கருப்புப் பணம் பற்றிய தொடரை படியுங்கள். 1  2   3 4  ).

அவற்றில் ஒரு வழி இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் (FII) அளிக்கும் பங்களிப்பு குறிப்பு (பார்ட்டிசிபேட்டரி நோட்) என்ற வசதியை பயன்படுத்துவது. பி-நோட் மூலமாக முதலீடு செய்வது யார், என்ன என்ற விபரங்கள் இந்திய அரசுக்கோ, ஒழுங்குமுறை ஆணையங்களுக்கோ சொல்லப்படத் தேவையில்லை. உண்மையில் பணத்தை போடுபவர் யார் என்ற விபரம் முதலீட்டு நிறுவனங்களுக்கே தெரிய முடியாதபடி லெட்டர்பேட் நிறுவனங்களின் சங்கிலித் தொடர் மூலம் பணம் கையாளப்படுகிறது.

ருய்யா - அம்பானிபி-நோட்டுகள் மூலம் முதலீடு செய்யப்பட்ட தொகையை கண்காணித்து வரும் மத்திய பொருளாதார புலனாய்வு அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி பிப்ரவரி மாதம் மட்டும் ரூ 1.73 லட்சம் கோடி ரூபாய் பணம் அந்த வழியில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று மதிப்பிட்டுள்ளது.

இந்த வசதியைப் பயன்படுத்தி இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களும், பண முதலைகளும், மூலதன சூதாடிகளும் தம் சார்பில் அனாமதேயமாக பதிவு செய்யப்பட்ட அன்னிய நிறுவனங்கள் மூலம் தமது கருப்புப் பணத்தை தேவைப்படும் போது நாட்டுக்குள் கொண்டு வரவும் வெளியில் எடுத்துச் செல்லவும் செய்கின்றனர். இதைத்தான் தாராளமயமாக்கம் என்ற பெயரில் காங்கிரசும், பாஜகவும் இன்னபிற ஓட்டுக் கட்சிகளும் ஆதரிக்கின்றன.

இந்திய கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்தை கையாளுவதற்கான இன்னொரு முறை வரியில்லா சொர்க்கங்களான மொரிசியஸ் போன்ற குட்டி நாடுகள் மூலம் இந்தியாவுக்குள் கொண்டு வரப்படும் நேரடி அன்னிய முதலீடுகள். 2009-ம் ஆண்டின் அன்னிய முதலீடுகளில் 21 சதவீதம் மொரிசியஸ் போன்ற வரியில்லா சொர்க்கங்களிலிருந்து நுழைந்திருக்கிறது என்கிறது ஐ.எஸ்.ஐ.டி. என்ற ஆய்வுக் கழகத்தினைச் சேர்ந்த பேரா சலபதி ராவ், பிஸ்வஜித் தர் ஆகியோருடைய ஆய்வு. 2012-ம் ஆண்டு நிதி அமைச்சகம் வெளியிட்ட கறுப்புப் பணம் குறித்த வெள்ளையறிக்கையின்படி 2000 முதல் 2011 வரையிலான காலத்தில் இந்தியாவுக்குள் வந்துள்ள அந்நிய முதலீடுகளில் 41.80% மொரிசியஸிலிருந்தும், 9.17% சிங்கப்பூரிலிருந்தும் வந்திருக்கின்றன. இந்த வரியில்லா சொர்க்கங்களில் ஒரு பெயர்ப்பலகை நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் இந்திய பணக்காரர்கள் யார் வேண்டுமானாலும் தமது கருப்புப் பணத்தை வரிச்சலுகைகள், நில கையகப்படுத்தும் உரிமை, குறைந்த விலையில் மின்சாரம் என்று இந்திய அரசால் பெரிதும் வரவேற்கப்படும் அன்னிய மூலதனத்தின் வடிவில் இந்தியாவுக்குள் கொண்டு வரலாம்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 32 முதல் 35 இலட்சம் கோடி ரூபாய் வரை கணக்கில் வராத கறுப்புப் பணம் உருவாக்கப்படுவதாகவும், மொத்தப் பொருளாதாரத்தில் பாதி கறுப்புப் பொருளாதாரமாகிவிட்டது என்றும் கூறுகிறார் “இந்தியாவின் கறுப்புப் பொருளாதாரம்” என்ற நூலின் ஆசிரியர் பேராசிரியர் அருண்குமார்.

ரெட்டி சகோதரர்கள்இவ்வாறு உருவாகும் கருப்புப் பணம் டாடா, அம்பானி, அதானி முதலான முதலாளிகளால் தமக்கு சாதகமான நேரத்தில் இந்தியாவுக்குள் கொண்டு வரப்படுகிறது; தேவைப்படும் போது இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு நியூயார்க், லண்டன், சுவிட்சர்லாந்து அல்லது மொரிசியசில் உள்ள கணக்குகளுக்கிடையே நகர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

200 2-க்கும் 2011-ம் ஆண்டுக்கும் இடையே ரூ 21 லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்றும் 2011-ல் மட்டும் ரூ 5 லட்சம் கோடி வெளியில் எடுத்துச் செல்லப்பட்டது என்றும் வாஷிங்டனைச் சேர்ந்த ரிசர்ச் அண்ட் அட்வகசி அமைப்பு கூறுகிறது. பெயர் தெரியாத லெட்டர் பேட் நிறுவனங்களுடன் வர்த்தக, வணிக உறவுகளை வைத்திருப்பதாக கணக்கு காட்டுவது, வரியில்லா சொர்க்கங்களில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு ஈவுத் தொகை, உரிமத் தொகை அளிப்பது, அவற்றின் மூலம் முதலீடு செய்வது மற்றும் வர்த்தம் சார்ந்த கருப்பை வெள்ளையாக்கும் முறைகள் (உதாரணம் : ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளை இன்னொரு நாட்டில் உள்ள தனது நிறுவனத்தின் கிளைக்கே பத்து ரூபாய்க்கு விற்றதாகக் கணக்கெழுதுவது) மூலம் பணம் பரிமாறிக் கொள்ளப்படுகிறது என்கிறது குளோபல் ஃபைனான்சியல் இன்டகிரிடி என்ற நிறுவனம்.

கடந்த 10 ஆண்டுகளில் பங்குச் சந்தைகளில் பங்கு விலைகளும், அன்னியச் செலாவணி சந்தையில் ரூபாயின் மதிப்பும், ஆன்லைன் வர்த்தகத்தில் உணவுப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென்று மேல் நிலையை அடைவது, அடுத்த கட்டத்தில் ஒரேயடியாக அடிமட்டத்துக்கு பாய்வது என்று மாறி மாறி நடப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடையதில்லை.

2008 ஜனவரி மாதம் 20,827 ஆக இருந்த பங்குச் சந்தை குறியீட்டு எண் 2009 மார்ச் மாதம் 8,325-க்கு வீழ்ந்து 2010 நவம்பர் மாதம் 21,000 தொட்டது. கடந்த 3 ஆண்டுகளில் 2011 டிசம்பர் மாதம் 15,454 அளவில் இருந்து கடந்த வாரம் 22,500-ஐ தாண்டியிருக்கிறது. நாட்டை பேரழிவுகள் தாக்கும் போது கூட பங்குகளின் விலை அதிகரிப்பு நடக்கிறது. உதாரணமாக, 2004-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலை ஒட்டிய 10 நாடுகளை தாக்கிய சுனாமியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அடுத்த 72 மணி நேரத்துக்குள்  மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் வரலாறு காணாத உயரத்தைத் தொட்டது. இந்திய மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் பிரம்மாண்டம் தெளிவான பிறகு ஜனவரி 3-ம் தேதி அதிக பட்ச உயரத்தைத் தொட்டது. மும்பை பங்குச் சந்தை மட்டுமின்றி, சுனாமியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பெரிய பங்குச் சந்தைகள் செயல்படும் 5 நாடுகளிலும் சுனாமியை தொடர்ந்து வந்த நாட்களில் பங்குச் சந்தைகள் வளர்ச்சியைக் காட்டின என்கிறார் பத்திரிகையாளர் பி சாய்நாத். இப்படி நாடே எழவு வீடாக இருந்த போது பங்குச் சந்தை மட்டும் எகிறிப் பாய்ந்த பின்னணி என்ன?

சென்ற ஆண்டு மே, ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே 1 டாலருக்கு கொடுக்க வேண்டிய இந்திய ரூபாயிலான விலை ரூ 53.80-லிருந்து ரூ 69.50 ஆக அதிகரித்தது. ஜூலை 2008-ல் ரூ 46.2 ஆக இருந்த பரிமாற்ற வீதம் 2009 பிப்ரவரி மாதம் ரூ 39.66-க்கு வீழ்ச்சியடைந்து அடுத்த 5 ஆண்டுகளில் ரூ 69 வரை அதிகரித்திருப்பதையும் இங்கு குறிப்பிடலாம்.

கேஜ்ரிவால்
கேஜ்ரிவால் பிரதமரானாலும், நம்மை சிறுகச் சிறுக அரித்துக் கொண்டிருக்கும் டாடாக்களையும், அம்பானிகளையும், அதானிகளையும் தொடப் போவதில்லை

இத்தகைய பணப் பாய்ச்சல்களும், முதலீடுகளும் நம்மைச் சுற்றி பொருளாதார சுனாமிகளை நடத்துகின்றன. வைகுண்டராஜன் மூலமாக தென் தமிழக கடற்கரை பகுதிகளை கொள்ளை அடிப்பதற்கும், பி ஆர் பழனிச்சாமி மூலமாக கிரானைட் மலைகளை மொட்டை அடிப்பதற்கும், ரெட்டி சகோதரர்கள் மூலமாக பெல்லாரியின் இரும்புத் தாதுவை அள்ளிச் செல்வதற்கும், இன்னும் நூற்றுக்கணக்கான வழிகளில் செத்துப் போன ஆறுகள், வறண்ட கிணறுகள், மழிக்கப்பட்ட மலைகள், அம்மணமாக்கப்பட்ட காடுகள், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் என நம் நாட்டைச் சுரண்டுவதற்கும் இந்த நிதி மூலதன பாய்ச்சல் வழி வகுத்துக் கொடுக்கிறது.

மோடி அல்லது கேஜ்ரிவால் போன்ற எந்த கேடி பிரதமரானாலும், நம்மை சிறுகச் சிறுக அரித்துக் கொண்டிருக்கும் டாடாக்களையும், அம்பானிகளையும், அதானிகளையும் தொடப் போவதில்லை; அமெரிக்காவின் டெலாவருடனும், இங்கிலாந்தின் லண்டன் மாநகருடனும் தொடர்பை துண்டித்துக் கொண்டு அங்கு வைக்கப்பட்டிருக்கும் இந்தியத் தரகு முதலாளிகளின் இலட்சக் கணக்கான வங்கிக் கணக்குகளை முடக்கப் போவதில்லை. மொரிசியஸ் நாட்டிலிருந்து வரியில்லாத அன்னிய முதலீடாக வரும் சட்டபூர்வ மோசடியையும் நிறுத்தப் போவதில்லை.

மாறாக, நாம் போடும் ஓட்டுக்களை தமக்கு கிடைத்த மக்கள் ஆணையாக காட்டிக் கொண்டு, தாம் செய்பவற்றுக்கு அங்கீகாரமாக வைத்துக் கொண்டு அமைக்கப்படப் போகும் எந்த ஒரு அரசாங்கமும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிகளின் பணப் புழக்கத்தை சட்டரீதியாக நியாயப்படுத்த, வசதி செய்து கொடுக்க புதுப் புது வழிகளை உருவாக்குவதைத்தான் செய்யப் போகின்றன. அதனால்தான் பாஜக தேர்தல் அறிக்கை மோடிக்கு பிடித்த விதத்தில் தயாரிக்கப்படவில்லை என்று இதுவரை வெளியாகவில்லை. அதாவது முதலாளிகளுக்கு சோப்பு போடும் அறிவிப்புகள் அந்த அறிக்கையில் போதிய அளவு இல்லை என்பதே மோடியின் குறை. இந்த இலட்சணத்தில் காங்கிரசு மட்டுமல்ல, பாஜகவும் பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளின் ஏவல் அடியாட்கள்தான்.

எனவே, இந்தத் தேர்தலில் நாம் போடும் ஓட்டு நமக்கும், நமது நாட்டுக்கும் நாமே போட்டுக் கொள்ளும் சுருக்குக் கயிறு என்பதில் இன்னமும் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா?

–    செழியன்.

மேலும் படிக்க