privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஃபோர்டு பவுண்டேசனுக்கு தில்லானா வாசிக்கும் வைத்தி மாமாக்கள்

ஃபோர்டு பவுண்டேசனுக்கு தில்லானா வாசிக்கும் வைத்தி மாமாக்கள்

-

முன்னுரை: 

ஃபோர்டு அறக்கட்டளை உருவாக்கிய ஆம் ஆத்மி அமெரிக்க ஆத்மிதான் என்பதை நிறுவிய “அமெரிக்க டாலரில் ஆம் ஆத்மி – நியாயப்படுத்தும் ஞாநி எனும் வினவு கட்டுரை பெரும் வரவேற்பைப் பெற்றது. எனினும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அபாயத்தை உணராதவர்களும், அதன் நிதியுதவியை கொண்டு வாழ்க்கையை ஓட்டும் அறிஞர் பெருமக்களும் இதை  ஏற்கவில்லை. அறியாதவர்கள் அறியாமை காரணமாகவும், அறிஞர்கள் அடியாள்களுக்கே உரிய நன்றி விசுவாசம் காரணமாகவும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வால் பிடிக்கிறார்கள். பொதுவில் சந்தர்ப்பவாதமும், சரணடைவும் கோலோச்சும் இன்றைய அரசியல் வாழ்வில் என்ஜிவோக்கள் எனும் அரசு சாரா நிறுவனங்கள் அறிவையும், கலையையும், அரசியலையும் ஏகாதிபத்திய தொண்டூழியத்திற்கு ஏற்றதாக மாற்றி விட்டன.

அருந்ததி ராய் எழுதிய இந்தக் கட்டுரை இதை ஆணித்தரமாக நிறுவுகிறது. ராக்ஃபெல்லர் அறக்கட்டளை, ஃபோர்டு அறக்கட்டளை, லில்லி அறக்கட்டளை, பில்கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்ட அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் புரவலர்களும் என்ன செய்கிறார்கள்? இவர்களின் பணி கம்யூனிசத்தை முறியடிப்பதில் ஆரம்பித்து பின்னர் முதலாளித்துவத்தின் கொடூரங்களை மறைத்து நியாயப்படுத்தி, ஒட்டு மொத்தமாக இந்த உலகை அமெரிக்காவின் காலடியில் கிடத்துவதே  என்பதை ராய் தரவுகளுடன் எடுத்துரைக்கிறார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாய்களாக, மூன்றாம் உலக நாடுகளின் மேட்டுக்குடி மற்றும்  கலை இலக்கியவாதிகளை   எலும்புத் துண்டு போட்டு வளர்க்கின்றன இந்த அறக்கட்டளைகள். சிலியில் அதிபர் அலெண்டேயை கொல்வதோ, இந்தோனேசியாவில் கம்யூனிஸ்ட்டுகளை ஆயிரக்கணக்கில் அழிப்பதோ அனைத்தும் இந்த அறக்கட்டளைகளின் பங்கில்லாமல் நடக்கவில்லை.

மேலும் ‘சுதந்திர சிந்தனை’ என்ற கவர்ச்சியான முழக்கத்துடன் கலை இலக்கியவாதிகளும், பெண்ணியவாதிகளும், ஆய்வாளர்களும் இந்த தன்னார்வ நிறுவனங்களின் பிடியில் இருந்து கொண்டு அந்தந்த நாடுகளின் வர்க்க போராட்டத்திற்கு ஊறு விளைவித்திருக்கின்றனர் – விளைவித்தும் வருகின்றனர். இத்தகைய நாடுகளில் அமெரிக்காவின் அடிமைகளாக இருக்கும் அரசுகளை எதிர்க்க கூடாது என்று கைச்சாத்திட்ட பின்னரே இந்த அறக்கட்டளைகள் இவர்களுக்கு நிதிகளை அள்ளித் தருகின்றனர். அந்த வகையில் என்ஜிவோ நிதி பெறுபவர்கள் அனைவரும் தெரிந்தோ, தெரியாமலோ ஏழை நாடுகளின் துரோகிகளாக மாறிவிடுகின்றனர்.

பில்கேட்சின் அறக்கட்டளை கல்விக்கும், எய்ட்ஸ் ஒழிப்பிற்கும் நிதி உதவி அளிக்கிறது என்று எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளும் ‘அறிஞர்’கள், இதே பில்கேட்ஸ்தான் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை அதாவது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக் கொள்கையை பரப்பும் கிளப்புகளில் உட்கார்ந்திருக்கிறார், அதற்காகவே இந்த பிச்சையை செய்து வருகிறார் என்பதை பார்ப்பதில்லை. இது பில்கேட்ஸுக்கு மட்டுமல்ல, ஃபோர்டு, ராக்பெல்லர் உள்ளிட்ட ஏனைய நிதி அறங்காவலர் நிறுவனங்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் அனைத்து அறக்கட்டளைகளும் ஏகாதிபத்தியத்தின் பசு வேடம் போர்த்திய டிராகுலாக்களே!

நோபல் பரிசு அமெரிக்க நலனுக்காக கொடுக்கப்படுகிறது என்றால், மகசேசே விருதை நேரடியாக அமெரிக்க அறக்கட்டளைகளே ஸ்பான்சர் செய்கின்றன. இந்த மகசேசே விருதை பத்திரிகையாளர் சாய்நாத், அண்ணா ஹசாரே, அரவிந்த கேஜ்ரிவால் உள்ளிட்டு பலரும் வாங்கியிருக்கின்றனர்.  என் ஜி வோக்களின் வலைப்பின்னலும், அதன் சதித்தனங்களும் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமானவை. அந்த வகையில் இவர்கள் நம்மைப் போன்ற நாட்டு மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு இழைத்து வரும் தீங்கும் அளவற்றவை.

ஆம் ஆத்மியோ, கூத்துப்பட்டறையோ, கிரண்பேடியின் தொண்டு நிறுவனமோ, ஜெர்மன் ஏகாதிபத்தியத்திடமிருந்த நிதியுதவி பெறும் இறந்து போன காந்தியவாதி ஜெகந்நாதனின் கிராம சுயராஜ்ஜிய இயக்கமோ (லாஃப்டி), ஹென்றி திபேனின் மனித உரிமை அமைப்போ, டாடாவுக்கு கலைச் சேவை புரிந்த லீனா மணிமேகலையோ, கலை இலக்கியத்திற்கு மட்டும் அமெரிக்க அறக்கட்டளைகளில் காசு வாங்கி நக்கலாம் என்று முழங்கும் ஜெயமோகனோ, குண்டு பல்பை தடை செய்யக் கோரும் சுற்றுச் சூழல் இயக்கங்களோ அனைவரும் அமெரிக்கா வடித்திருக்கும் ஏகாதிபத்திய நலனுக்காக உழைக்கின்றனர். அந்த வகையில் இவர்களது அரசியல், கலை, சமூக முயற்சிகளை ஆதரிக்கும் அப்பாவிகள் இனியாவது புரிந்து கொள்ளட்டும்.

– வினவு

கார்னஜி ஸ்டீல் கம்பெனியின் லாபத்தில் இருந்து 1911-ல் தொடங்கப்பட்ட கார்னஜி கார்ப்பரேஷன்தான் அமெரிக்காவின் முதல் அறக்கட்டளை. ஸ்டேண்டர்டு ஆயில் கம்பெனியின் நிறுவனர் ஜே.டி. ராக்பெல்லரால் 1914-ல் ராக்பெல்லர் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் தொடங்கப்பட்ட அறக்கட்டளைகளில் இதுவே முதன்மையானது. இவர்களே அந்தக் கால அமெரிக்காவின் டாடா, அம்பானிகள்.

வழிப்பறைக் கொள்ளை முதலாளி ஜான் டி ராக்பெல்லர்
வழிப்பறைக் கொள்ளை முதலாளி (ராபர் பேரன்) ஜான் டி ராக்பெல்லர், பின்னர் அமெரிக்காவின் வழிப்பறி ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு உதவுகிறார்.

ராக்பெல்லர் அறக்கட்டளையின் நிதி, துவக்க மூலதனம் (seed money) மற்றும் ஆதரவு பெற்ற நிறுவனங்கள் ஏராளம். ஐ.நா சபை, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, அயலுறவு மன்றம் (சி.எஃப்.ஆர்), நியூயார்க்கின் நேர்த்திமிகு நவீன கலை அருங்காட்சியகம் மற்றும் ராக்பெல்லர் மையம் ஆகியவை அவற்றுள் சில. (இந்த ராக்பெல்லர் மையம் அமைந்துள்ள கட்டிடத்தில் இருந்த டீகோ ரிவேராவின் நேர்த்திமிகு சுவர்ச்சித்திரங்கள் தகர்த்தெறியப்பட்ட சம்பவம் ஒன்று உண்டு. ஏனெனில் அவை விசமத்தனமான முறையில் முதலாளிகளை பாதகர்களாகவும் லெனினை வீரஞ்செறிந்தவராகவும் உயிரோவியமாகத் தீட்டியிருந்தன. அன்றைக்கு கருத்துச் சுதந்திரம் விடுப்பில் சென்று விட்டது போலும்).

ஜே.டி. ராக்பெல்லர் அமெரிக்காவின் முதல் பில்லியனரும், உலகின் மிகப்பெரிய செல்வந்தரும் ஆவார். அவர் அடிமை முறை ஒழிப்புவாதியாகவும், ஆப்ரகாம் லிங்கனது ஆதரவாளராகவும் மற்றும் மதுப்பழக்கம் அற்றவராகவும் இருந்தார். தனது செல்வத்தை எல்லாம் கடவுளே தனக்கென வழங்கியதாக அவர் நம்பினார். அத்தகைய நம்பிக்கை அவருக்கு மிகவும் பிடித்தமானதாகத்தானே இருந்தாக வேண்டும்.

இந்த ராக்பெல்லருடைய ஸ்டேண்டர்டு ஆயில் கம்பெனியைப் பற்றிய பாப்லோ நெரூடாவின் ஆரம்பகாலக் கவிதை ஒன்றில் இருந்து சில வரிகள் இதோ:

நியூயார்க்கில் இருந்து வந்திருக்கும் அவர்களது கொழுத்த பேரரசர்கள்
கனிவாய்ப் புன்னகைக்கும் கொலைகாரர்கள்
பட்டு, நைலான், சுருட்டு முதல்
பேட்டை ரவுடிகள், பெரிய சர்வாதிகாரிகளையும்
விலைக்கு வாங்கி விடுகிறார்கள்.

நாடுகள், மக்கள், கடல்கள், காவலர்கள், மாவட்ட மன்றங்கள்,
கருமிகள் தம் தங்கத்தைப் பதுக்குவது போல்
சோளத்தைப் பதுக்கும் ஏழைகள் வாழும் தூர..தூர தேசங்கள்..
அனைத்தையும் அவர்கள் விலை பேசுகிறார்கள்.

பாப்லோ நெரூடா
கவிஞர் பாப்லோ நெரூடா – ராக்பெல்லரின் தர்மகத்தா வன்முறையை கவிதை மூலம் அம்பலப்படுத்துகிறார்.

ஸ்டேண்டர்டு ஆயில் அந்த மக்களைத் துயிலெழுப்புகிறது,
தன் சீருடையால் அவர்கள் உடலைப் போர்த்துகிறது,
எந்தச் சகோதரன் எதிரி என்று அவர்களுக்கு இனம் காட்டுகிறது.

அது நடத்தும் சண்டையைப் பராகுவேக்காரன் போடுகிறான்,
அது வழங்கிய இயந்திரத் துப்பாக்கியைத் தூக்கிச் சுமந்தபடி
எங்கோ காட்டில் அழிகிறான் பொலிவியன்.

ஒரு சொட்டு பெட்ரோலுக்காக ஓர் அதிபர் படுகொலை,
ஒரு மில்லியன் ஏக்கர் நிலம் அடமானம் போகிறது,
விடியலைக் கவ்வும் இருளாய்
விரைந்து நிறைவேறுகிறது ஒரு மரணதண்டனை,
விறைத்துக் கல்லாய்ச் சமைகின்றனர் மக்கள்,
ஒரு புதிய சிறைச்சாலை, அது கிளர்ச்சியாளர்களுக்கு,

படகோனியாவில் ஒரு துரோகம்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில வெடிச்சத்தம்,
எழும் செந்நிலவின் கீழே
எரியும் பெட்ரோலியத் தீ,
தலைநகரிலோ
ஆரவாரமின்றி சில அமைச்சர்கள் மாற்றம்
லேசான கிசுகிசுப்பு
எண்ணையின் அலைபோல்,

ஒரு துப்பாக்கி வெடிப்பு.
மேகங்கள் மேல், கடலின் மேல்,
உன் வீட்டுக்குள், எங்கும்
தங்கள் ஆட்சிப் பிரதேசத்தை
வெளிச்சம்போட்டுக் காட்டியபடி
ஸ்டேண்டர்டு ஆயிலின் பொன் எழுத்துக்கள்
மின்னுவதை நீ காண்பாய்.

ராக்பெல்லர் பல்கலைக் கழகம்
ராக்பெல்லர் பல்கலைக் கழகம் – உலகை ஒடுக்குவது எப்படி என்று தரமாக சொல்லிக் கொடுக்கும் கல்வி நிறுவனம்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதிபெற்ற அறக்கட்டளைகள் அமெரிக்காவில் முதன்முதலாய்த் தலைதூக்கியபோது அவற்றின் ரிஷிமூலம், சட்டத்தகுதி, தன் செயலுக்குப் பொறுப்பேற்க வேண்டாத தன்மை பற்றி எல்லாம் கடுமையான விவாதங்கள் நடத்தப்பட்டன. முதலாளித்துவ நிறுவனங்களிடம் அளவுகடந்த உபரித் தொகை இருக்குமானால் அவை தமது தொழிலாளர்களின் கூலியை உயர்த்த வேண்டும் என மக்கள் பரிந்துரைத்தனர். (அமெரிக்காவிலும்கூட அந்த நாட்களில் மக்கள் இவ்வாறான அதிர்ச்சியூட்டும் பரிந்துரைகளைச் செய்திருக்கிறார்கள்). இன்று இயல்பானதாகத் தெரியும் இந்த அறக்கட்டளைகள் பற்றிய கருத்துருவாக்கம் உண்மையில் முதலாளித்துவ கற்பனைத் திறனில் நிகழ்ந்த ஒரு பாய்ச்சல் எனலாம். ஏராளமான பணமும், எல்லையற்ற செயல் களமும் கொண்ட, வரி கட்ட வேண்டாத சட்டபூர்வ அமைப்புகள் இவை. அத்தோடு, தன் செயலுக்குச் சற்றும் பொறுப்பேற்க வேண்டாதவையும், வெளிப்படையற்ற தன்மையை கொண்டவையும் கூட. பொருளாதார செல்வத்தை அரசியல், சமூக, பண்பாட்டு மூலதனமாக மாற்றியமைக்க, பணத்தை அதிகாரமாக மாற்ற இதைவிடச் சிறந்த வழி ஏதும் உண்டா? தங்களது லாபத்தின் மீச்சிறு துளியைக் கொண்டு இந்த உலகத்தை வழிநடத்த வேறு ஏதும் சிறந்த வழி உண்டா? இல்லை என்றால், தனக்கு கணினி பற்றி ஏதோ ஒன்றிரண்டு விஷயங்கள் மட்டுமே தெரியும் என்று கூறிக் கொள்ளும் பில்கேட்ஸ் கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண் கொள்கைகளை அமெரிக்க அரசுக்காக மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள அரசுகளுக்காகவும் வடிவமைக்கும் நிலையில் இருக்கிறாரே, அது எப்படி சாத்தியம்?

பில் கேட்ஸ்
பில் கேட்ஸ்க்கு கணினி மட்டும்தான் தெரியும் என்பதல்ல, அமெரிக்காவின் நலனை அறக்கட்டகளைகள் மூலமாக பரப்புவதிலும் நிபுணர்.

காலப் போக்கில், பொது நூலகம் நடத்துதல், நோய் ஒழிப்பு போன்ற அறக்கட்டளைகள் செய்த சில நற்செயல்களை மக்கள் கண்ணுற்றனர். இந்த நிகழ்ச்சிப்போக்கில் தொழிற்கழகங்களுக்கும் அவற்றின் அறக்கட்டளைகளுக்கும் இடையிலான நேரடித் தொடர்பு மக்கள் பார்வையில் இருந்து மங்கத் தொடங்கி, இறுதியில் மறைந்தே ஒழிந்தன. இப்பொழுதோ, தன்னையும் இடதுசாரிகளாகக் கருதிக் கொள்பவர்கள் கூட இந்த வள்ளல்களிடம் கையேந்தி நன்கொடைகளை ஏற்க வெட்கப்படுவதில்லை.

1920-களில் அமெரிக்க முதலாளித்துவம் கச்சாப்பொருட்களுக்காகவும், சந்தைக்காகவும் பிற நாடுகளை நோக்கித் தமது பார்வையைத் திருப்பத் தொடங்கியது. அறக்கட்டளைகள் உலகளாவிய கார்ப்பரேட் ஆளுகை பற்றிய கருத்துருவாக்கத்தை செய்யத் தொடங்கின. அன்று, 1924-ல் ராக்பெல்லர் அறக்கட்டளையும், கார்னிஜி அறக்கட்டளையும் இணைந்து தொடங்கிய அயலுறவு மன்றம்தான் (சி.எஃப்.ஆர்) இன்று உலக நாடுகளின் அயலுறவுக் கொள்கைகள் மீது அழுத்தம் கொடுத்து தமக்கேற்ப வளைப்பதில் மிகவும் வலிமையான அமைப்பாக திகழ்கிறது. பின்னர் ஃபோர்டு அறக்கட்டளையும் அதற்கு நிதி அளிக்கத் தொடங்கியது. 1947-ம் ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்ட அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ, அயலுறவு மன்றத்தின் ஆதரவைப் பெற்று அதனுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டது. காலப்போக்கில், சி.எஃப்.ஆர் உறுப்பினர் பட்டியலில் 22 அமெரிக்க அரசுச் செயலர்களும் இடம்பெற்றனர். 1943-ம் ஆண்டு ஐ.நா. சபையை நிறுவுவதற்கான வழிநடத்தும் கமிட்டியில் (steering committee) ஐந்து சி.எஃப்.ஆர் உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். ஜே.டி. ராக்பெல்லர் அளித்த 8.5 மில்லியன் டாலர்கள் கொடையில் வாங்கிய நிலத்தில்தான் இன்று ஐ.நா.வின் நியூயார்க் தலைமையகம் நின்று கொண்டிருக்கிறது.

1946-ம் ஆண்டு முதல் உலக வங்கியின் தலைவர்களாக இருந்த ஏழைகளின் மீட்பர்களாக தம்மைக் காட்டிக் கொண்ட மொத்தம் பதினோரு பேருமே சி.எஃப்.ஆர் உறுப்பினர்கள்தான். (மேற்படி 11 பேரில் ஒரே விதிவிலக்கு ஜார்ஜ் உட்ஸ் மட்டுமே. இவரும் ராக்பெல்லர் அறக்கட்டளையின் ஒரு தாளாளராகவும், ராக்பெல்லருடைய சேஸ்-மன்ஹாட்டன் வங்கியின் துணைத் தலைவராகவும் இருந்தவராவார்).

உலகின் பொதுச் செலாவணியாக (reserve currency) அமெரிக்க டாலர்தான் இருக்க வேண்டும் என்றும், மூலதனத்தின் உலகளாவிய ஊடுருவலை விரிவாக்க, கட்டற்ற சந்தை செயல்பாட்டின் அடிப்படையில் அனைத்து நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளையும் உலகளவில் பொதுமைப்படுத்தலுக்கும் தரப்படுத்தலுக்கும் உட்படுத்த வேண்டியது அவசியம் என்றும் உலக வங்கியும் ஐ.எம்.எஃப்பும் அமெரிக்காவின் பிரட்டன் வுட்ஸ் நகரத்தில் கூடி முடிவு செய்தன. இந்த இலக்கை அடைவதற்காகத்தான், சிறந்த அரசாளுமை அமைய உதவுவதற்கும் (மூக்கணாங்கயிறு தம் கையில் இருக்கும் வரை), சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் (சட்டம் இயற்றுவதில் தமக்கு அதிகாரம் உள்ளவரை), நூற்றுக்கணக்கான ஊழல் ஒழிப்புத் திட்டங்களை ஊக்குவிப்பதற்கும் (தங்கள் உருவாக்கியிருக்கும் ஆட்சி முறையை ஒழுங்கு செய்வதற்காக) அவர்கள் ஏராளமான பணத்தை வாரியிறைக்கிறார்கள். உலகிலேயே பெரியவையும் ரகசியமானவையும், தம் செயல்களுக்காக யாருக்கும் பதிலளிக்க வேண்டாதவையுமான இந்த இரண்டு நிறுவனங்கள்தான் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புணர்ச்சியையும் கோரி ஏழை நாடுகளின் அரசுகளிடம் மல்லுக்கட்டுகின்றன.

கிட்டத்தட்ட அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளையும் உலக வங்கி வழிநடத்துகிறது. ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து நாடுகளையும் நிர்ப்பந்தித்து அவற்றின் சந்தையை சர்வதேச மூலதனத்திற்கு அகலத் திறந்து விட்டிருக்கிறது. இந்தச் சாதனைகளை எல்லாம் கணக்கில் கொண்டு பார்ப்பீர்களேயானால், தொலைநோக்கு கொண்ட வணிக நடவடிக்கைகள் அனைத்திலும் முதலிடம் வகிப்பது இந்த கார்ப்பரேட் தர்மகர்த்தா முறைதான் என்று நீங்கள் அறுதியிட்டுச் சொல்லிவிட முடியும்.

ஃபோர்டு அறக்கட்டளை
நியூயார்க்கில் உள்ள ஃபோர்டு அறக்கட்டளை கட்டிடம் – நாட்டுப்புறக் கலை ஆய்வு மூலம் கம்யூனிஸ்டுகளை கொலை செய்வது எப்படி என்று புரிய வைக்கும் மாட்ரிக்ஸ் நிறுவனம்.

மேட்டுக்குடி கிளப்புகள், சிந்தனையாளர் குழுக்கள் (think-tanks) போன்ற ஏற்பாடுகளின் மூலம் அதன் உறுப்பினர்கள், பல்வேறு பட்ட அதிகார நிறுவனங்களின் மீது பொருந்துகிறார்கள்; ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொன்றுக்கு சுழல் கதவின் வழியே உட்செல்வதும், வெளி வருவதுமாக இருக்கிறார்கள். இத்தகைய ஏற்பாட்டின் மூலம் தங்களுக்கு தேவையான நபர்களை சதுரங்கத்தின் பொருத்தமான கட்டத்தில் நிறுத்துவதன் மூலம் கார்ப்பரேட் கொடை பெறும் அறக்கட்டளைகள், தமது அதிகாரத்தை நெறியாண்மை செய்கிறார்கள், வணிகப்படுத்துகிறார்கள், மடை மாற்றுகிறார்கள். இவற்றை சதித்திட்டங்களாக சித்தரிக்கும் கருத்துக்கள் பரவலாகவும், குறிப்பாக இடதுசாரி குழுக்கள் மத்தியிலும் புழக்கத்தில் உள்ளன. மாறாக இந்த ஏற்பாடுகளில் ஒழிவுமறைவோ, சாத்தானியமோ, சதிக்குழுச் செயல்பாடோ ஏதுமில்லை. தங்களது பணப் பரிமாற்றத்துக்கும், நிர்வாகத்துக்கும் ‘சொர்க்க’த் தீவுகளில் வங்கிக்கணக்கையும், பெயர்ப்பலகை நிறுவனங்களையும் பயன்படுத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் வளமையான செயல்பாடுகளிலிருந்து மேற்படி ஏற்பாடு (அறக்கட்டளை செயல்பாடு) பெரிதாய் ஒன்றும் மாறுபடவில்லை. ஒரு வித்தியாசம் என்னவென்றால், இங்கே செலவாணியில் இருப்பது பணம் அல்ல, அதிகாரம் என்பதே.

அமெரிக்க அயலுறவு மன்றத்துக்கு (சி.எஃப்.ஆர்) இணையான தேசங்கடந்த அமைப்பு, முத்தரப்பு ஆணையம் ஆகும். இந்த ஆணையம் 1973-ம் ஆண்டு டேவிட் ராக்பெல்லர், முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஸ்பிக்நியூ ப்ரிசென்ஸ்கி  (இவர் இன்றைய தாலிபான்களின் பாட்டன்களான ஆப்கான் முஜாகிதீன் அமைப்பின் நிறுவன-உறுப்பினர்), சேஸ் மன்ஹாட்டன் வங்கி மற்றும் சமூகத்தில் உயர்நிலை வகிக்கும் சில தனிநபர்கள் ஆகியோரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. வட அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய மேட்டுக்குடிகளிடையே நீடித்து நிலைக்கும் நட்புறவையும், ஒத்துழைப்பையும் உருவாக்குவதே இதன் நோக்கமாகும். தற்போது சீனர்களும், இந்தியர்களும் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டு இது ஐந்தரப்பு ஆணயமாக மாற்றப்பட்டிருக்கிறது. (இந்திய தொழிற்கூட்டமைப்பின் தருண் தாஸ், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர் (சி.இ.ஓ) என்.ஆர். நாராயணமூர்த்தி, கோத்ரெஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜாம்ஷெட் என். கோத்ரெஜ், டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஜாம்ஷெட் ஜெ இரானி மற்றும் அவந்தா குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் கௌதம் தபார் ஆகியோர் இதன் இந்தியப் பிரதிநிதிகள் ஆவர்.)

ஆஸ்பென் கழகம் (Aspen Institute) என்பது ஏராளமான நாடுகளில் தமது அங்கீகாரம் பெற்ற கிளைகளைக் கொண்ட ஒரு சர்வதேச கிளப். பிரதேச அளவிலான மேட்டுக்குடிகள், தொழிலதிபர்கள், அதிகார வர்க்கத்தினர் மற்றும் அரசியல்வாதிகள் இதன் உறுப்பினர்களாய் உள்ளனர். இந்திய ஆஸ்பென் கழகத்தின் பிரெசிடென்ட் ஆக இருப்பவர் தருண் தாஸ். கௌதம் தபார் அதன் சேர்மன். மெக்கன்ஸி குளோபல் இன்ஸ்டிட்யூட்டின் (தில்லி மும்பை தொழில் வழித்தடத்தை முன்மொழிந்திருப்பவர்கள்) மூத்த அலுவலர்கள் பலர் அயலுறவு மன்றம், முத்தரப்பு ஆணையம் மற்றும் ஆஸ்பென் கழகம் ஆகியவற்றில் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஃபோர்டு அறக்கட்டளை 1936-ல் நிறுவப்பட்டது. (பெரிதும் பழைமைவாத அமைப்பான ராக்பெல்லர் அறக்கட்டளையின் மீது போர்த்தப்பட்ட தாராளவாத மேலுறையே இது. இருப்பினும் இவை இரண்டும் தொடர்ச்சியாக இணைந்தே வேலை செய்து வருகின்றன). பொதுவாகவே ஃபோர்டு அறக்கட்டளையின் நோக்கங்கள் பெரிதும் குறைத்து மதிப்பிடப்படுகின்றன. எனினும், இது மிகத் தெளிவான, நன்கு வரையறுக்கப்பட்ட கொள்கைகளைக் கொண்டிருக்கிறது. இது அமெரிக்க வெளியுறவுத் துறையுடன் மிகமிக நெருக்கமாக இணைந்து வேலை செய்கிறது. இதன் செயல்திட்டங்களான ஜனநாயத்தைக் கீழ்மட்டம் வரை கொண்டு செல்லுதல் மற்றும் ‘சிறந்த அரசாளுமை’ ஆகியவை சாராம்சத்தில், ‘வர்த்தக நடவடிக்கைகளைத் பொதுத்தரப்படுத்துதல் மற்றும் சுதந்திரச் சந்தையில் அவற்றின் செயல்திறத்தை மேம்படுத்துதல்’ என்ற பிரட்டன் வுட்ஸ் திட்டத்தின் பிரிக்கவொண்ணாப் பகுதிகளே.

முகமது யூனஸ்
வங்கதேசத்தில் கிராமீன் வங்கி மூலம் நுண்கடன் திட்டத்தை அறிமுகம் செய்த முகமது யூனஸ் – வறுமையை வெற்றிகரமாக பிசினெஸ் செய்வது எப்படி என்பதில் முன்னோடி.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அமெரிக்காவின் முதல் எதிரியாக இருந்த பாசிஸ்டுகளின் இடத்திற்கு கம்யூனிஸ்டுகள் வந்த பின் நிழல் யுத்தத்தைத் திறம்பட நடத்த, பொருத்தமான புதிய வகை நிறுவனங்கள் தேவைப்பட்டன. அமெரிக்க இராணுவத்துக்கு ஆயுத ஆராய்ச்சிப் பணிகள் செய்வதற்கான வல்லுனர் குழுவான ‘ரேண்ட்’ (RAND – ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) அமைப்புக்கு ஃபோர்டு நிதியளித்தது. ‘சுதந்திர தேசங்களில் ஊடுருவி சீர்குலைக்க கம்யூனிஸ்டுகள் எடுக்கும் தொடர்ச்சியான முயற்சிகளை முறியடிக்க’ வேண்டி ஃபோர்டு அறக்கட்டளை 1952-ல் ‘குடியரசுக்கான நிதியம்’ ஒன்றை நிறுவியது. பின்னாளில் இந்த நிதியம் ‘ஜனநாயக அமைப்புகள் பற்றிய ஆய்வு மையமாக’ உருமாறியது. மெக்கார்த்தேயிசத்தின் அத்துமீறல்களை தவிர்த்து, சாதுரியமாக பனிப்போரை நடத்துவது இம்மையத்தின் பணியாக இருந்தது. கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோருக்கு நிதியளிப்பது, பல்கலைக் கழகப் பாடத் திட்டங்களுக்குக் கொடையளிப்பது, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவது என கோடிக்கணக்கான டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் ஃபோர்டு அறக்கட்டளையின் செயல்பாடுகளை இந்த கண்ணாடியின் வழியாகத்தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.

”மனித இனத்தின் எதிர்காலத்துக்கான இலக்குகள்” என்ற ஃபோர்டு அறக்கட்டளையின் அறிவிக்கப்பட்ட திட்டத்தில் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் கீழ்மட்ட அரசியல் இயக்கங்களில் தலையீடு செய்வதும் அடங்கும். அமெரிக்காவில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்திய எட்வர்டு ஃபிலின் என்பவர் 1919-ம் ஆண்டு முன்னோடியாக இருந்து துவக்கிய கடனுதவி ஒன்றியத்திற்கு (Credit Union Movement) ஃபோர்டு அறக்கட்டளை பல மில்லியன் டாலர்கள் கடன் மற்றும் நிதியுதவி செய்துள்ளது.

தொழிலாளிகளுக்கு அவர்களால் தாங்கக்கூடிய அளவில் கடன் வழிவகை செய்து கொடுப்பதன் மூலம் நுகர்பொருட்களின் பெரியதொரு நுகர்வுச் சமூகத்தை ஏற்படுத்த முடியும் என ஃபிலின் நம்பினார். அக்காலத்தில் இது ஒரு முற்போக்கான கருத்தாக இருந்தது. உண்மையில், இது அவரது நம்பிக்கையின் ஒரு பாதி மட்டுமே. அவருடைய மறு பாதி கருத்து தேசிய வருமானத்தின் நியாயமான விநியோகம் பற்றியது. முதலாளிகளோ அவரது பரிந்துரையின் முதல் பாதியை மட்டும் பற்றிக் கொண்டனர். ‘தாங்கத் தக்க அளவுக்குக் கடன்’ என்று பல பத்து மில்லியன் டாலர்களைத் தொழிலாளர்களுக்குக் கொடுத்து அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தை நிரந்தரக் கடன் வலையில் வீழ்த்தினர்; தம் வாழ்நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அவர்கள் முடிவே இல்லாமல் ஓடும்படி செய்தனர்.

பினோசெட் - அலெண்டே
பினோசெட் – அலெண்டே: தேர்ந்தெடுக்கப்பட்ட அலேண்டேவை கொல்வதற்கு பினோசெட்டை தேர்வு செய்த அமெரிக்காவின் திரைக்கதையில் கலை இலக்கிய ட்ராக்கை ஃபோர்டு அறக்கட்டளையும் ராக்பெல்லர் அறக்கட்டளையும் கூட்டாக எழுதியது.

பல ஆண்டுகள் கழித்து இக்கருத்து மெல்லக் கசிந்து வறுமை பீடித்த வங்கதேசத்து கிராமப்புறத்தை எட்டியது. முகம்மது யூனுஸும், கிராமீன் வங்கியும் பஞ்சப்பட்ட விவசாயிகளிடம் நுண்கடனை கொண்டு வந்தனர். அதன் விளைவுகள் பேரழிவாக இருந்தன. இந்தியாவில் இயங்கும் இதுபோன்ற நுண்நிதி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கடன் தற்கொலைகளுக்குப் பொறுப்பாளிகளாக இருக்கிறார்கள். 2010-ம் ஆண்டில் மட்டும் ஆந்திராவில் இருநூறு பேர் இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். பதினெட்டு வயதேயான ஒரு பெண்ணின் தற்கொலைக் குறிப்பை தேசிய நாளிதழ் ஒன்று சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அவளிடம் எஞ்சியிருந்த வெறும் 150 ரூபாய்களை, அதுவும் பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்கான தொகையை, நுண் நிதி நிறுவனத்தின் ஊழியர்களான அடியாட்கள் பிடுங்கிக் கொண்டனர். “கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதியுங்கள். கடன் மட்டும் வாங்காதீர்கள்” என்று கூறுகிறது அவளது தற்கொலைக் குறிப்பு.

வறுமையில் ஏராளமாக பணம் பார்க்கலாம், சில நோபல் பரிசுகளையும் கூட.

ஏராளமான அரசு சாரா அமைப்புகளுக்கும் (NGOs) சர்வதேச கல்வி நிறுவனங்களுக்கும் நிதியளித்து வந்த ராக்பெல்லர் மற்றும் ஃபோர்டு அறக்கட்டளைகள் 1950-களில் அமெரிக்க அரசின் பகுதியளவிலான நீட்சியாகவே செயல்படத் தொடங்கின. அந்த காலகட்டத்தில் அமெரிக்க அரசு லத்தீன் அமெரிக்க நாடுகள், ஈரான் மற்றும் இந்தோனேஷியாவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. (மேலும், அந்த காலகட்டத்தை ஒட்டித்தான் அப்போது அணிசாரா நாடாய் இருந்த, ஆனால் தெளிவாக சோவியத் யூனியன் பக்கச் சார்பு எடுத்திருந்த இந்தியாவில் இந்த அறக்கட்டளைகள் காலடி எடுத்து வைத்தன.) இந்தோனேஷிய பல்கலைக்கழகங்களில் அமெரிக்க பாணி பொருளியல் பாடத்திட்டங்களை ஃபோர்டு அறக்கட்டளை நுழைத்தது. 1965-ம் ஆண்டு சி.ஐ.ஏ. பின்புலத்தில் இருந்து இயக்கிய ஆட்சிக் கவிழ்ப்புக் கிளர்ச்சியில் அமெரிக்க இராணுவ அதிகாரிகளால் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் பயிற்றுவிக்கப்பட்ட இந்தோனேஷிய மேட்டுக்குடி மாணவர்கள் மிக முக்கியப் பங்காற்றினர். அக்கிளர்ச்சி ஜெனரல் சுகார்த்தோவை அதிகாரத்தில் அமர்த்தியது. நூறாயிரக்கணக்கான கம்யூனிஸ்டு போராளிகளை வெட்டிக் கொல்வதன் மூலம் தன்னை உருவாக்கி வழி நடத்திய அமெரிக்க குருநாதர்களுக்கு இரத்தக் காணிக்கை அளித்தார் சுகார்த்தோ.

ராமன் மக்சேசே
ராமன் மக்சேசே – மூன்றாம் உலக நாடுகளின் அறிஞர்கள் மற்றும் துரோகிகளை போராளிகளாக காட்டுவதற்கு அமெரிக்க அறக்கட்டளைகள் உருவாக்கிய விருதுக்கு பெயர் தந்த அமெரிக்க அடியாள்.

எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1973-ல், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் இறங்க அமெரிக்கா தீர்மானித்த போது, இந்த நடவடிக்கைக்கான முன் தயாரிப்பாக, பின்னாளில் சிக்காகோ பாய்ஸ் என்று அறியப்பட்ட இளம் சிலி மாணவர்கள், மில்டன் ஃப்ரீட்மேனால் புதிய தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளில் பயிற்றுவிக்கப்படுவதற்காக சிக்காகோ பல்கலைக் கழகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் (இதற்கு ராக்பெல்லர் அறக்கட்டளை நிதியளித்தது). சி.ஐ.ஏ. பின்புலத்தில் இருந்து இயக்கிய இந்த ஆட்சிக் கவிழ்ப்பு, சிலியின் பிரதமர் சால்வடார் அலண்டேயைக் கொன்று ஜெனரல் பினோசெட்டை ஆட்சியில் அமர்த்தியது. பயங்கரமும் ஆட்கள் மறைந்து போதலும் மலிந்த இந்தக் கொலைக்கும்பலின் பேயாட்சி பதினேழு ஆண்டுகள் மக்களை ஆட்டிப் படைத்தது. (ஜனநாயக முறைப்படி பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிஸ்டு என்பதும், சிலியின் சுரங்கங்களை நாட்டுடைமை ஆக்கியதுமே அலண்டே செய்த குற்றங்களாகும்).

ஆசியாவின் சிறந்த சமூகத் தலைவர்களுக்கான ராமன் மக்சேசே பரிசை 1957-ல் ராக்பெல்லர் அறக்கட்டளை நிறுவியது. தெற்காசிய நாடுகளில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அமெரிக்காவின் திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளில் அதன் அத்தியாவசிய கூட்டாளியாக இருந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ராமன் மக்சேசேயின் நினைவாக இவ்விருதுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. பரிணமிக்கும் புதிய தலைமைக்கான ராமன் மக்சேசே விருதை 2000 ஆண்டில் ஃபோர்டு அறக்கட்டளை நிறுவியது. மக்சேசே விருது என்பது இந்தியக் கலைஞர்கள், செயல் வீரர்கள், சமூகத் தொண்டர்கள் மத்தியில் பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. எம்.எஸ். சுப்புலெட்சுமியும் சத்யஜித் ரேயும் இவ்விருதை வென்றனர். அதுபோலவே ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் மிகச் சிறந்த இந்திய இதழியலாளர்களில் ஒருவரான பி. சாய்நாத் ஆகியோரும் இவ்விருதுகளை வென்றிருக்கின்றனர். ஆனால், இந்த விருது இவர்களுக்குச் சேர்த்த பெருமையைவிட இவர்கள் இவ்விருதுக்குச் சேர்த்த பெருமையே அதிகம். பொதுவாக பார்க்குமிடத்து, எந்த விதமான செயல்முனைப்பு ‘ஏற்புடையது’ எது ‘ஏற்புடையதல்ல’ என்ற புரிதலை வழங்கும் ஒரு நாசூக்கான நடுவராகியிருக்கிறது இவ்விருது.

ஒரு வேடிக்கை என்னவென்றால், சென்ற கோடையில் அண்ணா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் முன்னணித் தளபதிகளான அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கிரண் பேடி ஆகிய மூவருமே மக்சேசே விருது வென்றவர்கள். அரவிந்த் கெஜ்ரிவால் நடத்தும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஒன்று ஃபோர்டு அறக்கட்டளையில் இருந்து ஏராளமான நிதி பெறுகிறது. கிரண் பேடியின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு கொக்கோ-கோலா மற்றும் லேமன் பிரதர்ஸ் நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகிறது.

அண்ணா ஹசாரே
மக்சேசே விருதும், உலக வங்கி விருதும் பெற்ற அண்ணா ஹசாரே – இவரது கொள்கையும் எமது கொள்கையும் ஒன்று என உலக வங்கியே சான்றிதழ் கொடுத்திருக்கிறது.

அண்ணா ஹசாரே தன்னை காந்தியவாதி என அழைத்துக் கொண்டாலும், அவரது கோரிக்கையான ‘ஜன் லோக்பால் மசோதா’வில் காந்தியம் ஏதுமில்லை. மேலும் அக்கோரிக்கை மேட்டுக்குடித் தன்மையதும், அபாயகரமானதும் ஆகும். கார்ப்பரேட் செய்தி ஊடகங்களின் 24-மணி நேர தொடர்ப் பிரச்சாரம் அவரை ‘மக்களின் குரல்’ எனப் பிரகடனம் செய்தது. ஆனால், அண்மையில் அமெரிக்காவில் நடந்த வால்ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டத்தைப் போலன்றி, இந்த ஹசாரே இயக்கம் தனியார் மயத்துக்கோ, கார்ப்பரேட் அதிகாரத்துக்கோ, பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கோ எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக, ஹசாரே இயக்கத்தை பின்புலத்தில் நின்று ஆதரித்த முதன்மையான செய்தி ஊடகத்துறையினர், அதிர்ச்சியூட்டும் பெருத்த கார்ப்பரேட் ஊழல் முறைகேடுகள் பற்றிய அப்போதைய செய்திகளில் இருந்து மக்களின் கவனத்தை வெற்றிகரமாகத் திசை திருப்பினர். (இந்த கார்ப்பரேட் ஊழல் செய்திகள் மிகப் பிரபலமான ஊடகவியலாளர்களையும் கூடத் திரை கிழித்திருந்தன). அரசாங்கத்தின் முடிவெடுக்கும் அதிகாரங்களை மேலும் சுருக்குவதற்கும், கூடுதலான சீர்திருத்தங்களையும், கூடுதலான தனியார்மயப்படுத்தலையும் சாதிப்பதற்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக பொதுமக்கள் கொண்டிருந்த கோபத்தை இந்த ஊடகத்துறையினர் பயன்படுத்திக் கொண்டனர். (அன்னா ஹசாரே 2008-ம் ஆண்டில், நிகரற்ற பொதுத் தொண்டாற்றியதற்காக உலக வங்கியின் விருது பெற்றவர் ஆவார்). வாஷிங்டனில் இருந்து உலக வங்கி விடுத்த அறிக்கையில், அன்னா ஹசாரேயின் இந்த இயக்கம் தங்களது கொள்கைகளோடு துல்லியமாகப் பொருந்துவதாகக் கூறி பாராட்டியிருந்தது.

திறமையான எல்லா ஏகாதிபத்தியவாதிகளையும் போலவே, கார்ப்பரேட் தர்மகர்த்தாக்களும், ‘தமது சொந்த நலனுக்கு உகந்தது முதலாளித்துவமும், அதன் நீட்சியாக அமெரிக்க மேலாதிக்கமுமே’ என்று நம்பும் ஒரு பெரும் சர்வதேச அணியினரை உருவாக்கி, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதைத் தங்களது பொறுப்பாக ஏற்றிருக்கின்றனர். அவ்வாறு பயிற்றுவிக்கப்படும் அணிகள் முன்னர் அடிமை நாடுகளின் மேட்டுக்குடி வர்க்கத்தினர், காலனியாதிக்கவாதிகளுக்கு எவ்வாறு தொண்டுழியம் செய்து வந்தனரோ அதுபோலவே உலகளாவிய கார்ப்பரேட் அரசாங்கத்தை நிர்வகிக்கும் வேலைக்கு உதவுவர் என்று கருதினர். மேலும், அயலுறவு மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகத் தனது ஆதிக்கத்தின் மூன்றாவது அரணாக இந்தக் கும்பல் அமையும் என்றும் அவர்கள் அனுமானித்தனர். கல்வி மற்றும் கலைத்துறையில் அறக்கட்டளைகள் குதிப்பதென்பது இவ்வாறு தான் தொடங்கியது. இந்த நோக்கத்தை ஈடேற்றிக்கொள்ளத்தான் மில்லியன் கணக்கான டாலர்களை கல்வி நிறுவனங்களுக்காகவும், கற்பிக்கும் முறைகளை வடிவமைப்பதறக்காகவும் அவர்கள் அவர்கள் வாரி வழங்கினர், வழங்கிக்கொண்டும் இருக்கின்றனர்.

ஜோன் ரொலோஃப்ஸ்
ஜோன் ரொலோஃப்ஸ் – பல்கலை ஆய்வு மாணவர்களின் ஆய்வுத் துறைகள் மற்றும் பண்பாட்டு துறை நடவடிக்கைகளிலும் சிஐஏ இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியவர்.

”அறக்கட்டளைகளும் பொதுக் கொள்கையும்: பன்மைவாத முகமூடி” [Foundations and Public Policy : The Mask of Pluralism] என்ற தனது அருமையான நூலில், அரசியல் விஞ்ஞானத்தைப் போதிக்கும் முறை பற்றிய பழைய கருத்துக்களை அறக்கட்டளைகள் எவ்வாறு மாற்றியமைத்தன என்றும், “சர்வதேச” மற்றும் “பிராந்திய” ஆய்வுகள் தொடர்பான துறைகளைத் தமது தேவைக்கேற்ப எப்படி எல்லாம் வளைத்தன என்றும் ஜோன் ரொலோஃப்ஸ் [Joan Roelofs] விவரித்திருக்கிறார். இந்தத் துறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள், அமெரிக்க உளவுத்துறையும் பாதுகாப்புத் துறையும் தமக்குப் பொருத்தமான நபர்களைத் தெரிவு செய்துகொள்ள வசதியாக அன்னிய மொழிகள் மற்றும் பண்பாட்டுத்துறைகளில் தேர்ந்த வல்லுனர் கூட்டத்தையே வழங்கின. அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் சி.ஐ.ஏ.வும், அமெரிக்க வெளியுறவுத் துறையினரும் தொடர்ந்து வேலைசெய்கிறார்கள். இது கல்வித்திறம் என்பது குறித்தே பாரிய அறநெறி சார்ந்த வினாக்களை எழுப்புகிறது.

மக்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிப்பது என்பது எந்த ஒரு ஆளும் சக்திக்கும் அடிப்படையானது. மத்திய இந்தியாவில் தொடுக்கப்பட்டிருக்கும் நேரடியான யுத்தத்தின் நிழலில், இந்தியாவின் ஏனைய பகுதிகளில் நில அபகரிப்புக்கும், புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் எதிரான போராட்டங்கள் பரவி வருகின்றன. இந்தப் போக்கை ஒடுக்கும் வழிமுறையாக, பிரத்தியேக அடையாள எண் (யூஐடி) திட்டம் எனப்படும் மிக விரிந்த விவரச் சேகரிப்புத் திட்டதில் (biometrics programme) அரசு இறங்கியிருக்கிறது. உலகளவில் மிக விரிவான, பெருத்த செலவினம் கொண்ட திட்டங்களுள் இதுவும் ஒன்று. மக்கள் கையில் உண்ண உணவில்லை, குடிக்கத் தூய்மையான தண்ணீர் இல்லை, ஒரு கழிவறை இல்லை, கையில் காசும் இல்லை. ஆனால், அவர்கள் கையில் வாக்காளர் அடையாள அட்டைகளும், ஆதார் அட்டைகளும் அவசியம் இருக்கும்; இருக்க வேண்டும் என்பதுதான் இந்த யூ ஐடி திட்டம். ‘சேவைகளை ஏழைகளுக்கு கொண்டு சேர்ப்பது’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த யூ ஐடி திட்டம், இன்ஃபோசிஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர் நந்தன் நீலேகேனியின் தலைமையில் செயல்படுத்தப்படுவதும், இத்திட்டம் சற்றே நொடித்துப் போயிருக்கும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு கணிசமான தொகையை கொண்டு சேர்க்கப் போவதும் ஒரு தற்செயல் நிகழ்வுதானோ? (இந்த யூ ஐடி திட்டத்தின் மிகச் சிக்கனமான செலவு மதிப்பீடு கூட இந்திய அரசின் வருடாந்திர கல்விச் செலவையும் விஞ்சுகிறது).

நந்தன் நிலேகணி
நந்தன் நிலேகணி – இந்திய மக்களை டிஜிட்டல் மற்றும் பயோ மெட்ரிக் வடிவத்தில் முதலாளிகளுக்கு விற்பனை செய்யும் அறிஞர்.

வரைமுறைகளில் அடங்காத, தெளிவான அடையாளங்களற்ற மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்களை – அதாவது நில ஆவணமற்ற ஆதிவாசிகள், நகர்ப்புற குடிசைவாசிகள், நடைபாதைவாசிகள் போன்றோரை – உள்ளடக்கிய மாபெரும் மக்கள்திரளைக் கொண்ட இந்நாட்டில், அனைவரின் விவரங்களையும் கணினிமயப்படுத்தி வரையறுப்பது என்பது, எதார்த்தத்தில் அந்த சாமானிய மக்களை ‘வரையறுக்க இயலாதவர்கள்’ என்ற நிலையிலிருந்து ‘சட்டவிரோதமானவர்கள்’ என்ற நிலைக்குத் தள்ளி கிரிமினல்களாகச் சித்தரிப்பதில்தான் முடியும். மக்களின் பாரம்பரிய பொது நிலங்களை அவர்களிடமிருந்து பறிக்கும் திட்டத்தில் (Enclosure of the commons – பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் விவசாயிகளின் நிலங்களை அபகரித்து முதலாளிக்குக்குக் கொடுத்து விட்டு, விவசாயிகளை ஏதுமற்ற கூலிகளாக மாற்றி நகரத்துக்கு விரட்டும் பொருட்டு ஆங்கிலேய பாராளுமன்றம் இயற்றிய சட்டத்தை ஆசிரியர் குறிப்பிடுகிறார் – மொர்) எண்ணியல் வடிவமும், மென்மேலும் கடுமையாகி வரும் காவல்துறை காட்டாட்சிக்கு அதீத அதிகாரம் வழங்குவதும்தான், குடிமக்களின் அங்க மச்ச அடையாளங்களைத் திரட்டும் அந்த ஆதார் திட்டத்தின் நோக்கம். தகவல் சேகரிப்பு குறித்த நீலேக்கேனியின் இந்த தொழில்நுட்ப பித்தானது ‘மின்னணு தரவுத்தளம்’, ‘எண்கணித இலக்குகள்’, ‘முன்னேற்றத்திற்கான ஸ்கோர் கார்டுகள்’ ஆகியவை மீது பில் கேட்ஸ் கொண்டிருக்கும் வெறிக்கு ஈடானதாகும். உலகின் பசி பட்டினிக்கெல்லாம் காலனியாதிக்கமோ, கடனோ, லாபவெறி கொண்ட கார்ப்பரேட் கொள்கைகளோ காரணங்கள் அல்ல என்பது போலவும், சரியான தரவுகள் இல்லாதது ஒன்றுதான் காரணம் என்பது போலவும் சித்தரிக்கும் முயற்சி இது.

சமூக அறிவியல் மற்றும் கலைத் துறைகளுக்கு ஏராளமான நிதி வழங்குவோர் கார்ப்பரேட் அறக்கட்டளைகளே. ‘வளர்ச்சித் திட்ட ஆய்வுகள்’, ‘சமூகக் குழுக்கள் பற்றிய ஆய்வுகள்’, ‘பண்பாட்டு ஆய்வுகள்’, ‘நடத்தை அறிவியல்கள்’ மற்றும் ‘மனித உரிமைகள்’ எனப் பலப்பல துறைகளில் ஆய்வுகளைத் தொடங்கி அதற்குக் கொடை அளிப்பதும், ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை அளிப்பதும் இந்த அறக்கட்டளைகளே. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களின் வருகைக்காக கதவை அகலத் திறந்தவுடன் மூன்றாம் உலக மேட்டுக்குடியினரின் பிள்ளைகள் லட்சக்கணக்கில் வெள்ளமென உள்ளே பாய்ந்தார்கள். கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இன்று இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தன் ஒரு பிள்ளையையாவது அமெரிக்காவில் படிக்க வைக்காத மேல்தட்டு நடுத்தர வர்க்க குடும்பத்தைக் காண்பது அரிது. இவர்கள் மத்தியிலிருந்து நல்ல அறிஞர்கள், கல்வியாளர்கள் மட்டும் வருவதில்லை. பிரதமர்களும், நிதி அமைச்சர்களும், பொருளியலாளர்களும், கார்ப்பரேட் வழக்கறிஞர்களும், வங்கியாளர்களும், அதிகாரிகளும் வருகிறார்கள். இவர்கள் தமது நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு தொழிற்கழகங்களுக்குத் திறந்து விடவும் ஆவன செய்கிறார்கள்.

இந்த அறக்கட்டளைகளின் நோக்கங்களுக்கு உகந்த வகையில் பொருளியல், அரசியல் துறைகளில் ஆய்வு அறிக்கைகளைத் தயாரிக்கும் அறிஞர்களுக்கு பட்டங்கள், பதவிகள், ஆய்வு நிதி, கொடைகள் என ஏராளமான சன்மானங்கள் அள்ளி வழங்கப்பட்டன. அறக்கட்டளையின் நோக்கங்களிலிருந்து மாறுபட்ட கருத்துடையவருக்கு நிதி மறுக்கப்பட்டது, அவர்கள் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டனர். அவர்களது ஆய்வுப் பணி அரைகுறையாக நிறுத்தப்பட்டது.

வால்வீதி ஆக்கிரமிப்பு
நியுயார்க்கில் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று பங்குச்சந்தை கட்டிடத்தை நோக்கி செல்லும் வால் வீதி ஆக்கிரமிப்பு போராட்டம்.

இவ்வாறான நிகழ்ச்சிப்போக்கில் முற்றிலும் பன்மைவாத மறுப்புக் கொண்ட, குடையாய் கவிழ்ந்த ஒற்றை பொருளாதாரக் கொள்கையின் நிழலில் வளர்த்து விடப்பட்ட, உறுதியற்றதும், போலி நடிப்புமான ஒரு சகிப்புத் தன்மையும், பன்மைத்துவ பண்பாடும் (இது கணப் பொழுதில் நிறவெறியாக, தேசிய வெறியாக, இன வெறியாக அல்லது போர் வெறி கொண்ட இஸ்லாமிய வெறுப்பாக மாறக்கூடியது) எல்லாச் சொல்லாடல்களின் மீதும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இவ்வாறான நிகழ்ச்சிப் போக்கில் சமூக சிந்தனை வெளிப்பாட்டுகள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட புனைவு ஆக்கிரமிக்கத் தொடங்கியது. எந்த அளவுக்கு என்றால், இதனை ஒரு சித்தாந்தம் என்று காண்கின்ற பார்வையே அற்றுப் போகும் அளவுக்கு, இதுதான் இருக்க வேண்டிய நிலை என்றும், இயல்பான நிலை என்றும் கருதும் அளவுக்கு ஆகி விட்டது. இது சாதாரண நிலையை ஊடுருவியது, சாமானியத் தன்மையை அடிமை கொண்டது, இதனை எதிர்ப்பதென்பது அபத்தம் என்றும் எதார்த்தத்தையே நிராகரிக்கின்ற அசாதாரணத் தன்மை என்றும் கருதும் நிலை ஏற்பட்டது. இந்த இடத்திலிருந்து காலை ஒரு எட்டு வைத்தால் அடுத்த படி, ‘வேறு மாற்று ஏதுமில்லை’ (There Is No Alternative) என்ற கோட்பாடுதான்.

இப்போதுதான், ”வால்வீதியைக் கைப்பற்றுவோம்” இயக்கத்தின் தாக்கத்தால் அமெரிக்க வீதிகளிலும், கல்வி வளாகங்களிலும் மாறுபட்ட மொழியொன்று ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. “வர்க்கப் போர்!”, என்றோ அல்லது “நீ பணக்காரனாய் இருப்பதல்ல பிரச்சினை! எங்களது அரசாங்கத்தை விலைக்கு வாங்கி விட்டாய் என்பதே எம் பிரச்சினை!!” என்றோ முழங்கும் பதாகைகளுடன் மாணவர்களைக் காண்கிறோம். தடைகளின் பரிமாணத்தை எண்ணிப் பார்க்கையில், இதுவே கிட்டத்தட்ட ஒரு புரட்சிதான் என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்னொரு என்.ஜி.ஓ
“அந்தப் பக்கமாக பார்க்காதே, இந்த குழாயின் மீது மட்டும் கவனத்தை செலுத்துவோம்.”
“இந்த பூமியை பாதுகாப்பதற்கான உங்கள் போராட்டத்துக்கு கொஞ்சம் நிதி உதவி வேண்டுமா?” இப்படித்தான் புதிய என்ஜிவோக்கள் பிறக்கின்றன.

தொடங்கி ஒரு நூற்றாண்டு கடந்திருக்கும் இன்றைய நிலையில் இந்த கார்ப்பரேட் தர்மகர்த்தா முறை என்பது, கொக்கோ கோலாவைப் போல் நமது வாழ்க்கையின் பிரிக்கவொண்ணாத ஒரு அம்சமாகவே ஆகி விட்டது. பெரும் அறக்கட்டளைகளோடு பூடகமானதும், சிக்கலானதுமான நிதித் தொடர்புகளால் பின்னப்பட்ட பல பத்து லட்சம் தொண்டு நிறுவனங்கள் இன்று களத்தில் இருக்கின்றன. இந்த ‘சுதந்திரமான’ துறையினரின் சொத்து மதிப்பு சுமார் 450 பில்லியன் டாலர்கள். இவற்றுள் தனது சொத்து மதிப்பாக 21 பில்லியன் டாலர்களைக் கொண்ட பில் கேட்ஸ் அறக்கட்டளை மிகப் பெரியது. 16 பில்லியன் டாலர்களைக் கொண்ட லில்லி அறக்கட்டளையும், 15 பில்லியன் டாலர்களைக் கொண்ட ஃபோர்டு அறக்கட்டளையும் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.

கட்டுமான மறுசீரமைப்பு (Structural Adjustment) நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் திணிக்கத் தொடங்கி பொது சுகாதாரம், கல்வி, குழந்தை பராமரிப்பு, மனிதவள மேம்பாடு போன்றவற்றுக்கு செய்து வந்த செலவை வெட்டிச் சுருக்குமாறு அரசுகளின் கையை முறுக்கத் தொடங்கியதுமே அரசு சாரா அமைப்புகள் நுழையத் தொடங்கின. அனைத்தும் தனியார்மயம் என்பது அனைத்தும் என்.ஜி.ஓ மயம் என்று பொருள் கொள்ளத் தக்கதாக ஆயிற்று. வேலைவாய்ப்பும் வாழ்வாதாரங்களும் மறைய மறைய என்.ஜி.ஓக்கள் வேலைவாய்ப்பின் முக்கிய ஆதாரமாகவே ஆகி விட்டனர். என்.ஜி.ஓ-க்களின் நோக்கம் என்ன என்று அறிந்தவர்களுக்கும் கூட இது வேலை வாய்ப்புக்கான புகலிடமாயிற்று. நிச்சயமாக அவர்கள் அத்தனை போருமே மோசமானவர்கள் அல்லர். பல பத்து லட்சம் என்.ஜி.ஓ-க்களில் ஒரு சிலர் தனிச் சிறப்பு வாய்ந்ததும் முற்போக்கானதுமான பணிகளைச் செய்கிறார்கள். எனவே அனைவர் முகத்திலும் ஒருசேரக் கரிபூசுவது உண்மைக்குப் புறம்பான விமர்சனமாகிவிடும். இருப்பினும், தொழிற்கழகங்கள் மற்றும் அவற்றின் அறக்கட்டளைகளால் நிதியளிக்கப்படும் அரசு சாரா அமைப்புகள் என்பது எதிர்ப்பு இயக்கங்களுக்குள் நுழைந்து அவற்றை விலைக்கு வாங்கும் உலகளாவிய மூலதனத்தின் வழிமுறையே. துல்லியமாகச் சொன்னால் இது ஒரு கம்பெனியின் பங்குகளை விலைக்கு வாங்கி, பின்னர் அதனை உள்ளிருந்தே ஆட்டிப்படைக்க முயலும் பங்குதாரரின் செயலுக்கு ஒப்பானதாகும்.

சுற்றுச்சூழல்
“நாம் எப்படி உணர்கிறோம் என்பதுதான் முக்கியம்” (இயற்கையை கொள்ளையடிக்கும் முதலாளித்துவத்தை எதிர்க்க வேண்டியதில்லை. உங்கள் கூரையில் ஒரு சோலார் பேனலை வைத்து விட்டால் நீங்களும் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர்.)

உலக மூலதனம் பாய்கின்ற பாதைகள் அனைத்திலும் மைய நரம்பு மண்டலத்தின் முடிச்சுக்கள் போல இந்த என்.ஜி.ஓக்கள் அமர்ந்திருக்கிறார்கள். செய்தி அனுப்புவோராக, சேகரிப்போராக, அதிர்வு தாங்கிகளாக, இப்பாதையில் ஏற்படும் ஒரு சிறிய துடிப்பைப் பற்றியும் எச்சரிப்பவராக, அதே சமயம் தமக்கு இடமளித்த நாடுகளின் அரசுகளுக்கு எரிச்சலூட்டக் கூடாது என்பதில் கவனம் நிறைந்தவர்களாக் என்.ஜி.ஓக்கள் பணி செய்கிறார்கள். (ஃபோர்டு அறக்கட்டளை மேற்படி செயல்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பிரமாணப்பத்திரத்தில் நிதி பெறும் அமைப்புகளிடம் கையெழுத்து வாங்குகிறது.) இந்த என்.ஜி.ஓ-க்கள் தங்களது அறிக்கைகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் சேவை நடவடிக்கைகள் மூலமாக மென்மேலும் கடுமையாகி வரும் அரசுகளின் மென்மேலும் மூர்க்கமாகி வரும் உளவுத் துறையினரின் ஒட்டுக் கேட்கும் கருவிகளாக சில வேளைகளில் தெரிந்தும் சில வேளைகளில் தெரியாமலும் செயல்படுகிறார்கள். எந்த அளவுக்கு ஒரு பகுதி கலவரம் நிறைந்ததாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஏராளமான என்.ஜி.ஓ-க்கள் அதனை மொய்க்கிறார்கள்.

நர்மதா பள்ளத்தாக்கு பாதுகாப்புப் போராட்டம், கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டம் போன்ற ஒரு உண்மையான மக்கள் இயக்கத்தின் மீது சேறடிப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட இந்த அரசோ, கார்ப்பரேட் செய்தி ஊடகங்களின் ஒரு பிரிவினரோ விரும்பும்போது, அவற்றை வெளிநாட்டில் இருந்து காசு வாங்கும் என்.ஜி.ஓ-க்கள் என்று நயவஞ்சகமான முறையில் அவதூறு செய்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான என்.ஜி.ஓ-க்களுக்கு, அதிலும் குறிப்பாக ஏராளமான அன்னிய நிதி பெறும் என்.ஜி.ஓ-க்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமை கார்ப்பரேட்டுகளின் உலகமயமாக்கத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே அன்றி தடுத்து நிறுத்துவதல்ல என்பது இவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

கார்ப்பரேட் அறக்கட்டளைகளின் பண மூட்டைகளால் ஆயுதபாணியாக்கப்பட்ட இந்த என்.ஜி.ஓ-க்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் சிரமப்பட்டு ஊடுருவியிருக்கின்றனர். புரட்சியாளர்களாக உருவாகும் ஆற்றல் கொண்டவர்களை சம்பளம் வாங்கும் களப்பணியாளர்களாக மாற்றினர். கலைஞர்கள், அறிவுஜீவிகள், மற்றும் திரைத்துறைக் கலைஞர்களை நிதியால் வருடிக்கொடுத்து, முற்போக்கான கருத்துகள், விவாதங்களில் இருந்து திசை திருப்பினர். அடையாள அரசியல், மனித உரிமைகள் எனும் மொழியில் முன்வைக்கப்படும் பன்மைப் பண்பாட்டுவாதம், பெண்ணியம், சமூக (சாதி) முன்னேற்றம் போன்ற கருத்தாக்கங்களை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றனர்.

அறக்கட்டளை நிதி
“என்னுடைய அறக்கட்டளை உங்கள் போராட்டத்துக்காக பிரச்சாரம் செய்ய காசு தரும்.”

நீதி என்ற உன்னதமான கருத்தாக்கத்தை மனித உரிமைகள் எனும் தொழிலாக மாற்றியமைத்தது என்பது கருத்தியல் தளத்தில் நடத்தப்பட்டிருக்கும் ஒரு கவிழ்ப்பு நடவடிக்கையாகும். இக்கவிழ்ப்பு நடவடிக்கையில்என்.ஜி.ஓ-க்களும், அறக்கட்டளைகளும் மிக முக்கியப் பாத்திரம் ஆற்றியுள்ளனர். மனித உரிமைகள் என்ற குறுகிய பார்வை பிரச்சினையின் விரிந்த பரிமாணத்தைப் பார்க்க விடாமல் தடுத்து, அதனைக் குறிப்பிட்ட அட்டூழியம் குறித்த ஆய்வாக மட்டும் மாற்றுவதுடன், மோதலில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையுமே – உதாரணமாக மாவோயிஸ்டுகளையும் இந்திய அரசையும் அல்லது இஸ்ரேலிய ராணுவத்தையும், ஹமாஸையும் – மனித உரிமையை மீறியவர்களாகக் கண்டனம் செய்ய வாய்ப்பளிக்கிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் கார்ப்பரேட் சுரங்கப் பெருநிறுவனங்களின் நில அபகரிப்போ, பாலஸ்தீனியருக்குச் சொந்தமான தாயகத்தை இஸ்ரேல் அரசு இணைத்துக் கொண்ட வரலாறோ முக்கியத்துவம் ஏதுமற்ற வெறும் அடிக்குறிப்புகளாக சுருக்கப்பட்டு விவாதத்தில் இருந்து ஓரங்கட்டப்படுகின்றன.

மனித உரிமைகள் என்பது பொருட்படுத்தப்பட வேண்டிய விசயமல்ல என்று கூறுவது இதன் நோக்கம் அல்ல. அவை முக்கியம்தான். எனினும், நாம் வாழும் உலகில் நம்மைச் சூழ்ந்துள்ள மாபெரும் அநீதிகளைப் பரிசீலிக்கவோ அல்லது சற்றேனும் புரிந்துகொள்ளவோ உதவக்கூடிய முப்பட்டகை ஆடி (prism) இது அல்ல என்றே சொல்கிறேன்.

மற்றொரு கருத்துக் கவிழ்ப்பு பெண்ணிய இயக்கங்களுக்குள் அறக்கட்டளைகளின் தலையீடு தொடர்பானது. தமது சொந்த சமூகத்தில் நிலவும் தந்தை வழி ஆணாதிக்கத்துக்கு எதிராகவும், கார்ப்பரேட் சுரங்கப் பெருநிறுவனங்களின் நிலப்பறி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தண்டகாரண்யா காடுகளில் போராடி வரும் 90,000 உறுப்பினர்களைக் கொண்ட கிராந்திகாரி ஆதிவாசி மகிளா சங்கதன் (புரட்சிகர ஆதிவாசி பெண்கள் கூட்டமைப்பு) போன்ற அமைப்புகளிடமிருந்து இந்தியாவின் ‘அதிகாரபூர்வ’ பெண்ணியவாதிகளும், பெண்ணுரிமை அமைப்புகளும் கவனமாக விலகியிருப்பது ஏன்? இலட்சக்கணக்கான பெண்கள் தொன்று தொட்டு தங்கள் உடமையாகக் கொண்டிருந்த உழைத்து வந்த நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்படுவது ஒரு பெண்ணியப் பிரச்சனையாக ஏன் பார்க்கப்படுவதில்லை?

ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு மக்கள் இயக்கங்களில் இருந்து தாராளவாத பெண்ணிய இயக்கங்களை பிரித்து வைக்கும் வேலை, அறக்கட்டளைகளின் சதிச்செயல் காரணமாக துவங்கியதல்ல. 1960-களிலும், 1970-களிலும் பெண்களிடையே ஏற்பட்ட அதிவேகமான முற்போக்கான மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கவும், இடம் கொடுக்கவும் இம்மக்கள் இயக்கங்களுக்கு இயலாமல் போனதிலிருந்து இது துவங்கியது.

தங்களது பாரம்பரிய சமூக அமைப்பில் நிலவிய தந்தை வழி ஆணாதிக்கத்துக்கு எதிராகவும், இடதுசாரி இயக்கங்கள் எனப்படுபவனவற்றின் முற்போக்கானவர்கள் என்று கூறிக் கொண்ட தலைவர்கள் மத்தியிலும் நிலவிய இப்போக்கிற்கு எதிராகவும் பெண்கள் பொறுமை இழந்து கொண்டிருந்ததை அடையாளம் காண்பதிலும், ஆதரித்து நிதியளித்து வளர்ப்பதிலும் அறக்கட்டளைகள் தங்களது சாதுரியத்தை வெளிப்படுத்தின.

கிராந்திகாரி ஆதிவாசி மகிளா சங்கேதன்
கிராந்திகாரி ஆதிவாசி மகிளா சங்கேதன்

இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் இந்தக் கருத்துப் பிளவு, நாட்டுப்புற நகர்ப்புற பிளவை ஒட்டியதாகவும் இருக்கிறது. இங்கே மிகவும் முற்போக்கான முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கங்கள் கிராமப்புறத்தைச் சார்ந்திருக்கின்றன. அங்கோ பெரும்பாலான பெண்களின் அன்றாட வாழ்வில் தந்தை வழி ஆணாதிக்கமே கோலோச்சுகிறது. நக்சலைட் இயக்கம் போன்ற இயக்கங்களில் தம்மை இணைத்துக் கொண்ட நகர்ப்புறத்துப் பெண்கள், மேற்கத்திய பெண்ணிய இயக்கங்களின் தாக்கத்துக்கு ஆளானவர்களாகவும், அவற்றால் பெரிதும் உந்தப்பட்டவர்களாகவும் இருந்தனர்.

பெண் விடுதலை நோக்கிய தங்களது சொந்தப் பயணமானது, தம்முடைய கடமை என்று அவர்களுடைய ஆண் தலைவர்கள் கருதிய ‘மக்களுடன் ஐக்கியப்படுதல்’ என்பதுடன் பல சமயங்களில் முரண்பட்டது. பெண் செயல்வீரர்கள் பலர், தங்களது வாழ்க்கையில் சக தோழர்களிடமிருந்தும் கூட அன்றாடம் அனுபவிக்கும் ஒடுக்குமுறை மற்றும் பாரபட்சங்களை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, என்றோ வரவிருக்கும் ‘புரட்சிக்காக’ காத்திருக்கத் தயாராக இல்லை. அவர்கள் பாலின சமத்துவம் என்பதை புரட்சிக்குப் பின் நிறைவேற்றப்படும் வாக்குறுதியாக அல்லாமல், உடனடியானதாக, விவாதம் – விட்டுக் கொடுத்தல்களுக்கு இடமற்ற வகையில் புரட்சிகரப் போக்கின் ஒரு பகுதியாக வழங்கப்பட வேண்டிய முற்றொருமை கோரிக்கையாக கருதினர்.

கோபமும், ஏமாற்றமும் கொண்ட அறிவாற்றலுள்ள பெண்கள் இவ்வியக்கங்களில் இருந்து வெளியேறி தம்மையும் தமது கொள்கைகளையும் பராமரித்துக்கொள்ள வேறு வழிவகைகளைத் தேடினர். முடிவாக, ’80-களின் கடைசியில், இந்தியச் சந்தை திறந்து விடப்பட்ட அந்த காலகட்டத்தில் இந்தியாவைப் போன்றதொரு நாட்டின் தாராளவாத பெண்ணிய இயக்கம் வரம்பு கடந்த அளவில் என்.ஜி.ஓ மயமாகியிருந்தது. இந்த என்.ஜி.ஓ-க்களில் பெரும்பாலோர் பாலினம்சார் உரிமைகள், குடும்ப வன்முறை, எய்ட்ஸ், பாலியல் தொழிலாளர் உரிமை போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளனர். எனினும், புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான இயக்கங்கள் எதிலும் – இக்கொள்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே என்ற போதிலும் – இந்தப் பெண்ணிய அமைப்பினர் முன்னணிப் பாத்திரம் ஆற்றவில்லை. நிதி வழங்கல் நடவடிக்கைகளை மிகவும் சாதுரியமாகக் கையாண்டதன் மூலம், பெண்ணிய இயக்கத்தின் அரசியல் செயல்பாட்டு எல்லை எதுவாக இருக்க வேண்டும் என்று வரையறுத்து வேலியடைப்பதில் அறக்கட்டளைகள் பெரு வெற்றி பெற்றிருக்கின்றன. எவை ‘பெண்கள் சார்ந்த பிரசினைகள்’, ‘எவை அந்த வரையறைக்குள் வராதவை’ என்பதை என்.ஜி.ஓக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான நிபந்தனைகள் வரையறுத்துக் கூறுகின்றன.

அயலுறவு மன்றம்
அமெரிக்காவில் இருக்கும் அயலுறவு மன்றம் – என்ஜிவோக்களின் மெக்கா

பெண்கள் இயக்கத்தின் என்.ஜி.ஓ மயமாக்கம், மேற்கத்திய தாராளவாத பெண்ணியத்தையே, எது பெண்ணியம் என்பதற்கான அளவுகோலாக ஆக்கியிருக்கிறது. (பெரும்பாலான நிதியைப் பெறும் பெண்ணியம் அதுதான் என்பதும் காரணமாக இருக்கலாம்.) போராட்டங்கள் வழக்கம் போல பெண்களின் உடல்கள் மீதுதான் நடக்கிறது. முகச்சுருக்கத்தை நீக்கும் போடோக்ஸை எதிர்ப்பது ஒரு முறையிலும் முகத்தை மூடும் புர்க்காவை எதிர்ப்பது மறுமுறையிலுமாக இப்போராட்டம் நடக்கிறது. (போடோக்ஸ், புர்கா என்ற இரண்டு தீமைகளின் கிடுக்கிப்படியில் சிக்கிய பெண்களும் இருக்கிறார்கள்).

சமீபத்தில் பிரான்சில் நடந்தது போல, ஒரு பெண் தான் விரும்புவதை தெரிவு செய்யும் வாய்ப்பைத் தருகின்ற சூழ்நிலையை உருவாக்குவதற்குப் பதிலாக, பலாத்காரமாக புர்க்காவைக் கழற்றச் செய்யும் முயற்சியில் இறங்குவது, அவளை விடுதலை செய்ததாகாது, ஆடையை அகற்றியதாகவே கொள்ளப்படும். இது ஒரு அவமானப்படுத்தும் நடவடிக்கையாகவும், பண்பாட்டு மேலாதிக்கமாகவும் ஆகி விடுகிறது. இது புர்க்கா பற்றியதாக அல்லாமல் நிர்ப்பந்தம் பற்றியதாக மாறி விடுகிறது. புர்க்காவைக் கழற்றுமாறு ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வது, புர்க்காவை அணிந்து கொள்ள நிர்ப்பந்திக்கும் செயலுக்கு ஒப்பான தவறாகும். பாலினப் பிரச்சினையை அதன் சமூக, அரசியல், பொருளாதாரப் பரிமாணங்களை எல்லாம் உதிர்த்து விட்டுப் பார்ப்பதுதான் அதனை தனித்துவமான அடையாளப் பிரச்சினையாக, ஆடை அலங்காரப் போராட்டமாக ஆக்கி விடுகிறது. இந்தப் போக்குதான் அமெரிக்க அரசு 2001-ல் ஆப்கானை ஆக்கிரமித்த போது மேற்கத்திய பெண்ணியக் குழுக்களைத் தனது தார்மீக முக்காடாகப் பயன்படுத்திக் கொள்ள அதற்கு வாய்ப்பளித்தது. அன்றும், இன்றும், என்றும் ஆப்கானியப் பெண்களுக்குத் தாலிபான்களால் பெருத்த துன்பம்தான். ஆனால் அவர்கள் மீது போடப்படும் டெய்சி கட்டர் குண்டுகள் அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதில்லை.

என்.ஜி.ஓ-க்களின் பிரபஞ்சத்தில், அவர்களிடையே பரிணமித்திருக்கும் யாருக்கும் நோகாத, விளங்காத சுவிசேஷ மொழியில் சொல்வதானால், எல்லாமே “சப்ஜெக்ட்” ஆகி விட்டது. ஒவ்வொன்றும் தனிமுதலான, தொழில் முறையான, தனிக் கவனம் தேவைப்படும் பிரச்சினை. அவர்களுக்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு சப்ஜெக்ட் தான். சமூக மேம்பாடு, தலைமைத்துவ மேம்பாடு, மனித உரிமைகள், சுகாதாரம், கல்வி, மகப்பேறு உரிமை (reproductive rights), எய்ட்ஸ், எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட அனாதைகள் – இப்படி ஒவ்வொன்றும் அதற்கே உரிய விரிவான மற்றும் துல்லியமான விளக்கங்களுடனும், நிதியளிப்புக்கான சுருக்கமான செயற் குறிப்புடனும் தத்தம் காற்றுப் புகாப் பெட்டகங்களில் அடைத்து ஆப்பறையப் படுகிறது. ஒடுக்குமுறைகளால் என்றுமே உடைக்க முடியாத வழிகளிலெல்லாம் மக்களின் ஒற்றுமையை கார்ப்பரேட்டுகளின் நிதி சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கிறது.

பெண்ணியம் போலவே வறுமையும் கூட இப்போதெல்லாம், அடையாளப் பிரச்சினையாக வரையறுக்கப்படுகிறது. இவர்களது கருத்துப்படி, ஏழைகள் எனப்படுவோர் அநீதியால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் அல்லர். அது ஒரு தொலைந்து போன, ஆனால் இன்னமும் உயிர் வாழ்கின்ற ஒரு இனம். குறைதீர்ப்பு நடவடிக்கைகள் மூலமாக குறுகிய காலத்திலேயே அவர்களை வறுமையிலிருந்து மீட்டு விட முடியும். யாருக்கு என்ன வேண்டுமோ அதை தனிப்பட்ட முறையில் என்.ஜி.ஓ-க்கள் பார்த்துக் கொள்வார்கள். நீண்டகால நோக்கில், சிறந்த அரசாளுமை அவர்களுக்கு ஒரு புது வாழ்வை வழங்கும். எல்லாம் உலக கார்ப்பரேட் முதலாளியத்தின் ஆட்சியின் கீழ்தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

– அருந்ததி ராய் எழுதிய “முதலாளித்துவம் : ஒரு பேய்க் கதை”  (தமிழாக்கம் : அந்திவண்ணன்) என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

முழு நூலை வாங்கிப் படிக்க……….

வெளியிடுவோர் : மக்கள் கலை இலக்கியக் கழகம், திருச்சி
பக்கங்கள் 52
நன்கொடை ரூ 30

நூல் கிடைக்குமிடம்புதிய கலாச்சாரம்,
16, முல்லை வணிக வளாகம், 2-வது நிழற்சாலை,
அசோக்நகர், சென்னை – 600 083
தொலைபேசி – 044 2371 8706, 99411 75876

முதலாளித்துவம் ஒரு பேய்க்கதை என்ற தலைப்பில் அருந்ததி ராய் நிகழ்த்திய உரையின் வீடியோ