privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்யாருக்கு வேண்டும் தேர்தல்?

யாருக்கு வேண்டும் தேர்தல்?

-

ந்திய ஜனநாயகம் என்றழைக்கப்படும் இந்த அரசமைப்பு, உண்மையில் தரகு முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சர்வாதிகாரம் என்றும், இதனை அகற்றிவிட்டு அதனிடத்தில் ஒரு புதிய ஜனநாயக அரசமைப்பை நிறுவ வேண்டும் என்றும் நாம் கூறிவருகிறோம். பெரும்பான்மையான மக்கள் இத்தகையதொரு அரசியல் மாற்று குறித்து புரிந்திருக்கவில்லை என்ற போதிலும், நிலவுகின்ற இந்த அரசமைப்பின் மீது தமது சொந்த அனுபவங்களின் வழியாகவே நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். இந்தத் தேர்தல் அரசியலில் மக்கள் காட்டும் ஈடுபாடு என்பது, இந்த அரசமைப்பின் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கான சான்று அல்ல. மாறாக, கிரிக்கெட் ஆட்டத்தில் ரசிகன் காட்டும் ஈடுபாட்டுக்கும் மக்களின் தேர்தல் ஈடுபாட்டுக்கும் அதிக வேறுபாடில்லை என்பதே உண்மை.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்இந்த அரசமைப்பு தோல்வியடைந்து விட்டது. மன்மோகன் தலைமையிலான காங்கிரசு அரசு தோற்றுவிட்டது என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றும் இதுவும் ஒன்றல்ல; காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளின் அரசாங்கங்களும், நிர்வாகம், போலீசு, இராணுவம், நீதித்துறை அடங்கிய அரசு எந்திரமும் உள்ளடங்கிய இந்த அரசமைப்பு தோற்று விட்டது என்று நாம் கூறுகிறோம். இதனை மக்கள் புரிந்திருக்கிறார்களோ இல்லையோ, ஆளும் வர்க்கம் புரிந்திருக்கிறது. தாங்கள் வரையறுத்த சட்டங்கள், தாங்களே கூறி வந்த புனித அரசியல் மரபுகள், நெறிகள் ஆகியவற்றைத் தங்களது வழித்தோன்றல்களே மீறுவதையும், காலில் போட்டு மிதிப்பதையும் மறுக்கவோ, மறைக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாமல் ஆளும் வர்க்கம் தடுமாறுகிறது. இவற்றைச் சீர் திருத்துவதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள் தோல்வியைத் தழுவுகின்றன.

செயலிழந்துவரும் அரசு, அதிகரித்து வரும் சட்டமீறல்கள், கொள்கைகளின் இடத்தில் கவர்ச்சித் திட்டங்கள், அரசியல் கிரிமினல்மயமாதல், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல், போலீசு அராஜகங்கள், நீதித்துறை ஊழல்கள், அதிகரித்து வரும் விதவிதமான கிரிமினல் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை… என்று மொத்த அரசமைப்பும், சமூகமும் பாரதூரமான நெருக்கடியில் சிக்கி நொறுங்கிச் சரிந்து வருகின்றது என்பதையும், பலவிதமான முயற்சிகளுக்குப் பின்னரும் அதனை முட்டுக்கொடுத்து நிறுத்த முடியவில்லை என்பதையும் சொல்லி ஆளும் வர்க்க அறிவுத்துறையினரே புலம்புகின்றனர். மொத்தத்தில் ஆள்வதற்கான தகுதியை இழந்து விட்டது இந்திய ஆளும் வர்க்கம்.

எனினும், ஆளப்படும் வர்க்கமாகிய உழைக்கும் வர்க்கம் ஒரு மாற்று அரசியல் சக்தியாக எழுந்து ஆளும் வர்க்கத்தை வீழ்த்துவதற்குத் தயாராக இல்லை என்ற ஒரேயொரு காரணத்தி னால், சவக்குழிக்கு சென்றிருக்க வேண்டிய இந்த அரசமைப்பு, நாற்காலியில் அமர்த்தப்பட்ட பிணத்தைப் போலத் தொடர்ந்து அரியணையில் நீடிக்கிறது. ஜனநாயகம் என்று அழைக்கப்படும் இந்த அரசமைப்புதான் இதுகாறும் மனிதகுலம் கண்டறிந்த உன்னதமென்றும், இதை விஞ்சிய வேறு அரசியல், சமூக அமைப்பு சாத்தியமில்லையென்பதால், எவ்வாறேனும் இதனைப் பிழைக்க வைப்பதைத் தவிர வேறு வழியில்லையென்றும் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர் இதற்குத் தத்துவ விளக்கம் சொல்கிறார்கள். இந்த அரசமைப்பின் தோல்வியை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழல் நிலவுவதால், அதற்கான பழி முழுவதையும் அரசியல் கட்சிகள் என்ற சோளக் கொல்லை பொம்மைகள் மீது போட்டு, அக்கட்சிகளின் சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், ஊழல் போன்றவைதான் இன்று நாம் காணும் அனைத்துச் சீரழிவுகளுக்கும் காரணம் என்று சாதிக்கிறார்கள்.

பொதுச்சொத்து கொள்ளை

இதன் மூலம் இரண்டு நோக்கங்களை ஆளும் வர்க்கம் நிறைவேற்றிக் கொள்கிற து. முதலாவதாக, காங்கிரசு, பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க., ஆம் ஆத்மி போன்ற எந்தக் கட்சியின் அரசாங்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆளும் வர்க்க நலனைப் பாதுகாக்கும்படி வடிவமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்ற – அதிகாரவர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை, ஊடகங்கள், சமூகப் பண்பாட்டு நிறுவனங்கள் ஆகியவை அடங்கிய அரசமைப்பையும், அதன் தோல்வியையும் தந்திரமாக மக்களின் கண்களிலிருந்து மறைக்கிறது.

இரண்டாவதாக, சீரழிவுக்குக் காரணம் கட்சிகள்தான் என்ற பொதுக்கருத்தைப் பயன்படுத்தி மோடி, கேஜ்ரிவால் போன்ற மாற்றுகளைக் காட்டி, மோடியின் துணிச்சலும் நிர்வாகத் திறனும், கேஜ்ரிவால் போன்றோரின் நேர்மையும் இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றிவிடும் என்ற மாயையை மீண்டும் மீண்டும் பரப்புகிறது. எனவே, இந்த மாயைகளிலிருந்து மக்களை விடுவிப்பதே நம் முதற்பணியாக இருக்கிறது.

ஆளும் வர்க்கம் தோல்வியடைந்து விட்டது என்று நாம் கூறுவதன் பொருள், உழைக்கும் வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கம் அதனைத் தோற்கடித்து விட்டது என்பதல்ல. மாறாக, சுரண்டுவதற்கும் ஆள்வதற்கும் உகந்த வகையில் ஆளும் வர்க்கம் தானே வடிவமைத்திருக்கும் அரசமைப்பு, அனைவருக்கும் பொதுவானவை என்றும் நாட்டு மக்கள் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியவை என்றும் அது வலியுறுத்தும் சட்டங்கள், மரபுகள் ஆகியவற்றைக் கால்தூசாகக் கருதி ஆளும் வர்க்கத்தினரே அவற்றை மீறுகின்றனர், மதிப்பிழக்கச் செய்கின்றனர் என்கிறோம். இந்த அரசமைப்பு காலாவதியாகி விட்டதைத் தங்களுடைய நடவடிக்கைகள் மூலம் அவர்களே நிரூபிக்கின்றனர் என்றும் கூறுகிறோம்.

இந்த அரசமைப்பு என்னதான் கெட்டுச் சீரழிந்தாலும், ஆளும் வர்க்கம் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. 1991-ல் மன்மோகன்-நரசிம்மராவ் கூட்டணி புதிய பொருளாதாரக் கொள்கைகளை அதிகாரபூர்வமாக அமல்படுத்தத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை, ஊழல்கள் என்ற பெயரால் அழைக்கப்படும் அலைக்கற்றை, நிலக்கரி, ஆதர்ஷ், காமன் வெல்த், எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு கொள்ளைகளில் இந்த நாடு பறிகொடுத்திருக்கும் செல்வத்தின் மதிப்பு ரூ.73 இலட்சம் கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இந்தக் கொள்ளை என்பது நெறி பிறழ்ந்த சில கள்வர்களால் நடத்தப்பட்ட சங்கிலிப் பறிப்போ, வழிப்பறியோ அல்ல. பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகள், ஐ.ஏ.எஸ். முதல் வி.ஏ.ஓ. வரையிலான அதிகார வர்க்கம், அமைச்சரவை, போலீசு – இராணுவ அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், உயர் நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஊடகத்துறையினர், கிரிமினல் மஃபியா கும்பல்கள் அடங்கிய வலைப்பின்னல் இக்கொள்ளைகள் அனைத்திலும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

மோடி - அம்பானி

எனினும் ராஜா, லாலு, கல்மாடி போன்ற சில அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மட்டுமே குற்றவாளிகளாக காட்டுவதன் மூலம் மொத்த அமைப்பும் சீர்கெட்டு விடவில்லையென்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குற்றவாளிகள் மட்டுமே இருப்பதாகவும் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. கண்டிப்பான நீதித்துறையும் நேர்மையான புலனாய்வு அதிகாரிகளும் விழிப்புணர்வு கொண்ட பத்திரிகைகளும் நாட்டு நலனில் அக்கறை கொண்ட அரசியல்வாதிகளும் இருந்தால் இத்தகைய பேர்வழிகளைக் களையெடுத்து அமைப்பைச் சீர்திருத்திவிட முடியும் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர். ஆனால், களைகள் அங்கொன்றும் இங்கொன்றும் இல்லை. அவைதான் அரசாங்கம், அதிகாரவர்க்கம், போலீசு, நீதித்துறை, ஊடகங்கள் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன; அவைதான் ஆட்சி செலுத்துகின்றன என்பதே உண்மை.

மன்மோகன் அமைச்சரவையை எடுத்துக் கொள்வோம். அமைச்சரவையைத் தீர்மானிப்பதில் தொடங்கி அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பா.ஜ.க. வைச் சரிக்கட்டுவது வரை அனைத்திலும் அமெரிக்க அரசு நேரடிப் பங்காற்றியிருப்பதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. தரகு முதலாளிகளின் விருப்பப்படிதான் அமைச்சர்கள் நியமனம் நடந்தது என்பதை ராடியா டேப்புகள் வெளிக்கொணர்ந்தன. நிலக்கரி ஊழல் வழக்கில் பிர்லாவின் பெயர் சேர்க்கப்பட்டவுடனே ஆனந்த் சர்மாவும், சச்சின் பைலட்டும் கொதித்தெழுந்து மத்திய புலனாய்வுக் குழுவைக் கண்டித்தனர். கோதாவரி எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் காங்கிரசும் பா.ஜ.க.வும் போட்டி போட்டுக் கொண்டு அம்பானிக்கு வக்காலத்து வாங்கின. சுரங்க முதலாளிகளைத் தொல்லைக்குள்ளாக்குவதாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் அதன் சட்டங்களையும் மன்மோகன் சிங் பகிரங்கமாகச் சாடினார்.

இங்ஙனம் மக்கள் பிரதிநிதிகள் என்ற பொறுப்புணர்ச்சியே இல்லாமல், கார்ப்பரேட் முதலாளிகளின் தரகர்களாகவும், லாபியிஸ்டுகளாகவும் அமைச்சர்கள் கூச்சமேயில்லாமல் நடந்து கொள்கிறார்களே, இது விதிவிலக்கான நிகழ்வா என்றால், இல்லை. சமூகத்திற்கு மேலே நிற்கும் அதிகாரமாகவும் எல்லா வர்க்கங்களுக்கும் பொதுவான நாட்டாமையாகவும் தோற்றம் காட்டிக் கொண்டிருந்த அரசு, மறுகாலனியாக்க கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலம் முதல், முதலாளி வர்க்கத்தின் முகவராக வெளிப்படையாகவே தன்னை இனம் காட்டிக் கொள்ளத் தொடங்கி விட்டது. மக்களிடம் நியாயவுரிமை பெறுவதைக் காட்டிலும், மூலதனத்தை ஈர்ப்பதும் பன்னாட்டு முதலாளிகளிடம் நற்பெயர் ஈட்டுவதுமே அரசுகளின் நோக்கமாகி விட்டது.

எந்த மக்களின் பெயரால் ஆள்வதற்கான நியாயவுரிமையை அரசாங்கம் பெறுகிறதோ, அந்த விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், பழங்குடி மக்கள், தொழிலாளிகள் போன்ற அடிப்படை உழைக்கும் மக்களின் தொழிலையும் வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களை காங்கிரசு, பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட எந்த அரசாங்கமும் வகுப்பதில்லை. மாறாக, கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் கொள்ளை இலாபத்தை நோக்கமாகக் கொண்டு தீட்டப்படும் ஆறுவழிச் சாலைகள் முதல் மீதேன் வரையிலான திட்டங்களுக்காக மக்களுடைய வாழ்வாதாரங்களைப் பறித்துக் கொடுப்பதுதான் செயல்படும் அரசு என்பதற்கான அங்க இலட்சணமாகியிருக்கிறது.

நாடாளுமன்றம் - ஊழல்எனவே ஆலைகள், சுரங்க நிறுவனங்கள், கல்விக் கொள்ளையர்கள், தண்ணீர் வியாபாரிகள், ரியல் எஸ்டேட் மஃபியாக்களுக்கு நிலம், காடு, மலை, நீர்நிலைகள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளை மக்களிடம் நைச்சியமாகப் பேசிக் கவர்ந்து கொடுப்பதும், எதிர்த்துப் போராடினால் மிரட்டி வெளியேற்றுவதுமே, தலைமைச் செயலர் முதல் வி.ஏ.ஓ.க்கள் வரையிலான அதிகார வர்க்கமும், போலீசும் ஆற்றிவரும் வளர்ச்சிப் பணியாகவும், சட்டம் ஒழுங்குப் பராமரிப்பாகவும் இருந்து வருகிறது. இவர்கள் அனைவரும் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை அமலாக்குபவர்களாக மட்டுமின்றி, அதன் மூலம் பல வழிகளில் ஆதாயமடைகின்ற பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். ஜனநாயகத்தின் இதர தூண்களான நீதித்துறையும் ஊடகங்களும்கூட இதற்கு விதிவிலக்கல்ல.

தனியார்மயம்-தாராளமயம் என்பது வெறும் பொருளாதாரக் கொள்கை மட்டுமல்ல; அது கட்டற்ற முதலாளித்துவச் சூறையாடலுக்கு உகந்த அரசியல், சித்தாந்தச் சூழலை சமூகத்தில் உருவாக்குவது மட்டுமின்றி, நீதித்துறையின் வன்முறை உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்ப நிலவுகின்ற இந்த அரசமைப்பை வளைத்து மாற்றியமைக்கிறது. இதன் காரணமாக சட்டமீறல்கள் சகஜமாகின்றன. எந்தச் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்களோ, அந்தச் சட்டங்களை முதலீட்டுக்கான இடை யூறுகள் (bottlenecks) என்று முதலாளிகள் நிராகரிக்கிறார்கள். உடனே அந்த இடையூறுகள் சட்டவிரோதமான முறையில் அதிகாரவர்க்கத்தால் அகற்றப்படுகின்றன; பின்னர் மேற்படி சட்டவிரோத நடவடிக்கை அரசால் சட்டபூர்வமாக்கப்படுகின்றன. சென்னை தியாகராயநகரில் அங்கீகாரமின்றி பலமாடிக் கடைகள் கட்டப்பட்டதும், சட்டவிரோதமான அக்கட்டிடங்கள் அவசரச் சட்டங்கள் மூலம் சட்டபூர்வமாக்கப்பட்டதும் விதிவிலக்கான நிகழ்வு அல்ல; சட்டவிரோத கனிமவளக் கொள்ளை முதல் வரி ஏய்ப்புகள் வரையிலான எல்லா விசயங்களிலும் நடந்து வருவது இது தான்.

ஏற்கெனவே ரேசன் அட்டை, சாதிச்சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, மின்னிணைப்பு முதலான மக்களின் சட்டபூர்வமான உரிமைகளுக்கே விலை நிர்ணயம் செய்து வசூலித்துக் கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்தின் இலஞ்சப் பசிக்கு தனியார்மயக் கொள்கை புதிய வேட்டைக்காடுகளைத் திறந்துவிட்டிருக்கிறது என்பதே உண்மை.

அரசியல்வாதிகளின் ஊழலை விட மிகப்பெரியது அதிகாரவர்க்கத்தின் ஊழல். ஏனென்றால், இவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல என்று முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிசனர் விட்டல் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை உள்ளிட்ட அரசு எந்திரம் ஆளும் வர்க்கச் சேவைக்காகவே வடிவமைக்கப்பட்டது. அவர்களுக்கு மட்டுமே கடமைப்பட்டது. மறுகாலனியாக்கக் கொள்கைகள் அதிகார வர்க்கத்தின் இந்த முதலாளித்துவ விசுவாசத்துக்கு மேலும் வெறியூட்டியிருக்கின்றன. தனியார்மயக் கொள்கையின் சித்தாந்தத் தாக்கமோ, இந்த அரசமைப்பின் சீர்குலைவை மேலும் துரிதப்படுத்தி அதனைத் தார்மீக ரீதியில் மதிப்பிழக்கச் செய்திருக்கிறது; அதன் தோல்வியைப் பட்டவர்த்தனமாக்கியி ருக்கிறது.

அனைத்தும் தழுவிய சீரழிவுதலைமை விஜிலென்ஸ் கமிசனர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றத்தினை, நீதிபதிகள் நியமனத்திலேயே அப்படிப்பட்ட அளவுகோலைப் பயன்படுத்த முடிவதில்லையே மைலார்டு எனக்கூறி எள்ளி நகையாடினார் சொலிசிட்டர் ஜெனரல் வாகனவதி. அலகாபாத் நீதிமன்றத்தில் தந்தைகள் நீதிபதியாக அமர்ந்திருக்க, தனயர்கள் வக்கீல்களாக இருந்து வழக்கு நடத்திப் பணத்தைக் குவிக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் 8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று குற்றம் சாட்டுகிறார் வழக்குரைஞர் சாந்தி பூஷண். தலைமறைவுக் குற்றவாளி என்று பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு நபர் இந்தூர் நகரின் செசன்சு நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். டில்லி பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கிறது நீதிமன்றம்; ஆனால் அலைக்கற்றை தீர்ப்பு புகழ் நீதிபதி கங்குலி, தன் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு உறுதியான பின்னரும், மனித உரிமைக் கமிசன் பதவியிலிருந்து விலக மறுக்கிறார். தன் மீதான ஊழல் வழக்கை 20 ஆண்டுகள் இழுத்தடித்த ஜெயலலிதா வுக்கு, அவர் விரும்பும் அரசு வக்கீலையும் நீதிபதியையும் அமர்த்தித் தரவேண்டும் என்று கூசாமல் தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம். அதேநேரம், பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்குக் குரல் கொடுத்த மருத்துவர் பினாயக் சென் தேசத்துரோக குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறார்.

போலீசின் யோக்கியதையைப் பற்றியோ சொல்லத் தேவையில்லை. வழிப்பறி, வல்லுறவு, சிட்பண்டு மோசடி, ஆள் மாறாட்டம், கொலை, போலி மோதல் கொலை, கூலிக்குக் கொலை என்று கிரிமினல் குற்ற நடவடிக்கைகளின் எல்லைகளை விரிவுபடுத்துகிறது போலீசு. பாலியல் வல்லுறவுக் குற்றவழக்கில் கைது செய்யப்பட வேண்டிய மதுகர் டான்டன் என்ற ராஜஸ்தான் டி.ஐ.ஜி. 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவாக இருக்கிறார். தலைமறைவாக இருக்கும் ஏ.கே.ஜெயின் என்ற கூடுதல் டி.ஜி.பி.யை பிடித்துத் தருபவர்களுக்கு பத்து லட்சம் சன்மானம் அறிவித்திருக்கிறது சி.பி.ஐ.

பங்குச் சந்தையைக் கண்காணிப்பதற்கான செபி மீது சி.பி.ஐ. விசாரணை, தலைமை விஜிலென்சு கமிசனர் மீது சி.பி.ஐ விசாரண, ஐ.பி. மீது சி.பி.ஐ. விசாரணை என எல்லாக் கண்காணிப்பு அமைப்புகளும் சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்குள் வந்து கொண்டிருக்க, சி.பி.ஐ. அதிகாரிகளின் முறைகேடுகளை விசாரிப்பது யார்? என்பது விடையில்லாக் கேள்வியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இந்திய அதிகார வர்க்கம்தான் ஆசியாவிலேயே மிக மோசமான அதிகாரவர்க்கம் (அதாவது வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைக் காட்டிலும் மோசமானது) என்று பொலிடிகல் அண்டு எகனாமிக் ரிஸ்க் கன்சல்டன்சி என்ற நிறுவனம் சமீபத்தில் மதிப்பிட்டிருக்கிறது. இப்படி அதிகாரவர்க்கத்தின் பெருமை சந்தி சிரித்து விட்ட போதிலும், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வதற்கு அனுமதி மறுப்பதன் மூலம் அவர்களுடைய கற்பைக் காப்பாற்றி வருகிறது மத்திய அரசு. அலைக்கற்றை, ஆதர்ஷ், நிலக்கரி வயல் உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் அந்தந்தத் துறை அதிகாரிகள் தவிர்க்கவியலாமல் சிக்கியிருப்பதால், அவர்கள் குற்றங்களின் பிதாமகனான பிரதமரையும் கூண்டிலேற்றுமாறு கோருகிறார்கள். பிரதமரும் கூண்டிலேற்றப்பட வேண்டியவரே என்று தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை வழிமொழிவதால், பிரதமர் நாற்காலியின் கவுரவம் பல்லிளிக்கிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் கருத்துரிமையின் காவலன் என்றும் சிலாகிக்கப்படும் ஊடகத்துறையோ கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படையாக அம்பலமாகி நிற்கிறது. பத்திரிகையாளர்கள் அதிகாரத் தாழ்வாரங்களில் அரசியல் தரகர்களாக வலம் வந்து பிடிபடுகிறார்கள். 2009 தேர்தலின்போது ஒரு முறைகேடாக அம்பலப்படுத்தப்பட்ட காசுக்கு செய்தி (paid news) என்ற கயமைத்தனம், தற்போது பத்திரிகை உலகின் தொழில் தருமமாக அங்கீகாரம் பெற்று விட்டது.

சீரழிவிலிருந்து இந்தத் துறை தப்பி விட்டது என்று விரல் நீட்ட முடியாவண்ணம் சமூகத்தின் எல்லாக் கணுக்களிலிருந்தும் சீழ் வடிகிறது. நல்லொழுக்கத்தின் வழிகாட்டிகளாக அறியப்படும் மதகுருமார்கள் வக்கிரங்களுக்கு வழிகாட்டுகிறார்கள். உயிர் காக்கும் மருத்துவர்கள் எனப்படுவோர் உறுப்புகளைத் திருடும் கொலைகாரர்களாகப் பிடிபடுகிறார்கள். கல்வி நிறுவனங்கள் கொள்ளைக் கூடங்களாகத்தான் இருக்கும் என்பது சமூகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டு, அவை அரசு அங்கீகாரம் பெற்ற கொள்ளைக்கூடங்களாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே பெற்றோரின் கோரிக்கையாக எஞ்சியிருக்கிறது. ஜனநாயகத்தின் எதிரியான சாதி, ஜனநாயக உரிமையின் பெயரால் புதுப்பிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கிறது.

மறுகாலனியாக்கப் பண்பாட்டு வளர்ச்சியின் வேகம் பெண்களைச் சூறையாடுகிறது. தலைநகர் டில்லியில் பணியாற்றும் பெண்கள் வேறு பாதுகாப்பான நகரத்துக்குத் தப்பியோடத் தவிக்கிறார்கள். சூறையாடப்பட்ட விவசாயிகள் கிராமப் புறங்களிலிருந்து தப்பிவந்து நகர்ப்புறக் கொத்தடிமைகளாக உழல்கிறார்கள். தப்பிக்க முடியாதவர்கள் அங்கேயே தற்கொலை செய்து கொள்கிறார்கள். சூறையாடப்பட்ட இயற்கை, மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும் வாழ்விடத்தை விட்டு விரட்டுகிறது. தண்ணீர்ப் பஞ்சமோ வரவிருக்கும் பேரழிவுக்குக் கட்டியம் கூறுகிறது. மணற்கொள்ளை, வனக்கொள்ளை, தண்ணீர்க் கொள்ளைகளைத் தடுக்கும் சமூக உணர்வுள்ள குடி மக்கள், அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்புடன் மஃபியா கும்பல்களால் வேட்டையாடிக் கொல்லப்படுகிறர்கள்.

அரசியல், சமூக, பண்பாட்டு நிறுவனங்கள் அனைத்தும் தமக்குரிய நெறிகளைக் காலில் போட்டு மிதித்து வரும் சூழலில், தமக்குரிய நெறிகளைப் பற்றியொழுகும் நிறுவனங் களாகச் சூதாட்ட விடுதிகள் மட்டுமே இந்த நாட்டில் எஞ்சியிருக்கின்றன. அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் நொறுங்கிச் சரிந்து வரும் நிலையில், மக்கள் மீது ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான அரசின் குண்டாந்தடி மட்டும் தனது கொள்கையில் சற்றும் வளைந்து கொடுக்காமல் நிற்கிறது.

வளர்ச்சியின் பலிபீடத்தில் தமது வாழ்விடங்களையும், நீர்நிலைகளையும், விளைநிலங்களையும், வாழ்வுரிமையையும் காவு கொடுக்கச் சம்மதிக்காத மக்கள் நாடெங்கும் எதிர்த்துப் போராடுகிறார்கள். ஓட்டுக்கட்சிகள் அனைத்தையும் ஒதுக்கி நிறுத்தியிருக்கும் இந்தப் போராட்டங்களை நிறுவனமயப்படுத்துவதற்கும், நீர்த்துப் போக வைப்பதற்குமான வழிமுறைகளை ஆளும் வர்க்கம் தொடர்ந்து யோசிக்கிறது.

தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கம் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் பெரும் பிளவையும், அதிருப்தியையும் சரிக்கட்டி, ஆளும் வர்க்கத்துக்கும் ஆளப்படும் வர்க்கங்களுக்கும் இடையிலான முரண்பாட்டை அமைதிப்படுத்தவும், மதிப்பிழந்து தோற்றுப்போன இந்த அரசமைப்பைச் சீர்திருத்த முடியும் என்று நம்பிக்கையூட்டி, மக்கள் மத்தியில் இந்த அரசமைப்பின் நியாயவுரிமையைப் புதுப்பிக்கவும், ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனங்களால் வழிநடத்தப்படும் ஆம் ஆத்மி கட்சி அரசியல் களத்தில் இறக்கப்பட்டிருக்கிறது.

மறுகாலனியாக்க கொள்கைகளின் வேகமான அமலாக்கத்திற்காகப் பொறுமையிழந்து துடித்துக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளிகளின் பிரதிநிதியான நரேந்திர மோடி, வளர்ச்சி மற்றும் சிறந்த அரசாளுமையின் சின்னமாக ஆளும் வர்க்கத்தால் முன்நிறுத்தப்படுகிறார். ஜனநாயக வடிவிலான அரசமைப்பைப் பயன்படுத்தியே பாசிசத்தை நிலைநாட்டும் கலையை குஜராத்தில் சோதித்துப் பார்த்திருக்கும் மோடி, அதனை இந்தியா முழுமைக்கும் பிரயோகிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.

தோல்வியுற்று நொறுங்கிச் சரிந்து கொண்டிருக்கும் இந்த அரசியல் சமூக அமைப்போ, தனது இறுதிச் சடங்குகளை நடத்தி வைக்க வேண்டிய புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

– சூரியன்
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________

  1. மக்கள் தேர்தலில் வாக்களிப்பதை அவர்கள் சாமி கும்பிடுவதுடன் ஒப்பிடலாம். திராவிடர் கழகம் கடவுள்களின் யோக்கியதைகளை மட்டும் சொல்லி மக்களின் கடவுள் ஈடுபாடு மீது அவநம்பிக்கை கொள்ள செய்து விடலாம் என்று கருதுவது போல இருக்கிறது தேர்தல் அரசியலுக்கு வெளியே நின்று மக்களிடம் தேர்தலை புறக்கணிக்க கேட்டுக் கொள்வதன் மூலம் மக்கள் இந்த கருத்துக்கு செவிசாய்ப்பர் என்று நம்புவது. இந்த தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டுமென்றால் அவர்களின் நம்பிக்கையை முதலில் பெற வேண்டும். நக்சல்பாரிகளை நேர்மறையாகவும் புரிந்து கொள்ளும் மக்களும் இருக்கிறார்கள்; எதிர்மறையில் சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள். எதிர்மறையாக புரிந்து வைத்திருப்பவர்களே அதிகம். இது போலி ஜனநாயகம் என்றாலும் இந்த தேர்தல் ஜனநாயகம் மக்களின் வாழ்க்கை முறையாக மாறிவிட்டது. எனவே இந்த விளையாட்டில் பங்கு பெற்று அது வைக்கும் சோதனைகளை நாம் வென்று காட்டினால் தான் அடுத்த கட்டத்துக்கு மக்களை உயர்த்த முடியும். இயேசுவின் மரணத்துக்கு பின் அவரது போதனைகளை அடிப்படையாக வைத்து அதனை கிறித்தவமாக வடிவமைப்பதில் பெரும் பங்காற்றிய பவுல் கிறித்தவத்தை பரப்ப கிரீஸுக்கு சென்ற போது மக்கள் பல கடவுளரை வழிபட்டுக் கொண்டிருந்ததை பார்க்கிறான். அவர்களிடம் உரையாடிய பவுல் இப்படி ஆரம்பிக்கிறான். ‘நீங்கள் பல கடவுள்களை வழிபடுவது உங்கள் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையை காட்டுகிறது. நான் மெய்யான கடவுளை உங்களுக்கு அறிமுகப்படுத்தபோகிறேன்’ என்கிறான். மக்கள் அவனை ஏற்றுக்கொள்கிறார்கள். கிறித்தவம் இன்று அங்கு அரச மதம். எனவே, இந்த தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் விரும்புவதற்கே கூட தேர்தலில் பங்கெடுப்பது முதலில் அவசியமாகிறது. இந்த தேர்தல் மூலம் பெறும் அரசதிகாரம் என்ற தேர்விலும், சோதனையிலும் நாம் திறம்பட பணியாற்றி மக்களின் நம்பிக்கையை பெற்று விட்ட பிறகு நாம் விடுக்கும் தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கை மட்டுமே மக்களிடையே மதிப்பு பெறும். குஜரத்தில், இந்து மதவெறிக் கூட்டம் தேர்தல் புறக்கணிப்பு ஒன்றிற்கு அழைப்பு விடுத்தால் அது மிகுந்த செயல் விளைவு ஒன்றையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

    இடதுசாரிகள் எனப்படுகின்ற சிபிஐ, சிபிஎம் கட்சிகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. மேற்கு வங்கத்தின் இளம் தலைமுறையிடம் முற்றாக அவை அந்நியப்பட்டுள்ளன. ஸ்க்ரால்.இன் என்ற இணையதளம் வாயிலாக அறிந்த செய்தி ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பீகாரின் லெனின்கிராட் என்றழைக்கப்படும் ஒரு தொகுதியில் காலம்காலமாக கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றுவந்துள்ளார்கள். ஆனால், 2009-ல் அத்தொகுதி ஐக்கிய ஜனதாதளம் வசமானது. இந்த தேர்தலில் அது பா.ஜ.க வசம் செல்லவிருக்கிறதாம். ஒடிசா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் சீரான மற்றும் நிலையான வளர்ச்சியை பா.ஜ.க கண்டு வருகிறது. இடசாரிகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். எனினும் அவர்கள் இந்த நாட்டில் கம்யூனிசம் மக்களின் மனங்களில் மங்காமல் இருக்க காரணமாக இருப்பவர்கள். அவர்கள் போராளிகள், புரட்சியாளர்கள் என்ற ஏற்றத் திறனை தொட இயலாதவர்களாக இருக்கலாம். ஆனால், பொதுவான மக்களுக்கு கம்யூனிஸ்ட்கள் என்றால் நல்லவர்கள், நாணயமானவர்கள் என்ற மதிப்பு இன்றளவும் இழக்காமல் இருக்க காரணமாக இருப்பவர்கள். அவர்களின் இடம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி வருகின்றன. அவர்கள் ஒழிந்து போகட்டும் என்று மகிழ்வதில் எந்த நியாயமும் இல்லை. அப்படி மகிழ்வது, பா.ஜ.க மற்றும் சாதியவாதிகள் பெற்று வரும் வளர்ச்சியின் ஆபத்தை அறியாத தமிழினவாதிகள் தி.மு.கவின் வீழ்ச்சியை கண்டு மகிழ்வதற்கு சமம். சி.பி.ஐ., சி.பி.எம் இழந்து வருகின்ற இடத்தை நாம் கைபற்ற முடியாமல் போனால், இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் கனவு இன்னும் வெகுதூரத்திற்கு தள்ளிப் போகும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. தொழிற்சாலை யூனியன் தேர்தல்களில் சி.ஐடி.யூ வை வீழ்த்தி பு.ஜ.தொ.மு ஈட்டி வரும் வெற்றிகளை ஏன் நாம் ஒட்டுமொத்த சமூக சூழலுக்கும் பொருத்திப் பார்க்கக் கூடாது? இந்த தேர்தலில் ஒரு வேளை மோடி வெற்றி பெற்று தனது கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளால் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து அடுத்த தேர்தலில் தோல்வி அடைந்தால் கூட ஆபத்து நீங்கி விடாது. இன்னும் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக இந்த சமூகத்தில் இந்துத்துவ பாசிசத்தின் நிழல் கவிந்து கொண்டு தான் இருக்கப் போகிறது. மோடியின் ஆபத்தை அம்பலப்படுத்துவதில் சமூக விஞ்ஞானிகள்; தீர்வை யோசிப்பதில் கற்பனாவாதிகள் என்ற நிலை பெருமைக்குரியதா?

  2. பல கருத்துக்களை ஒத்துக் கொள்ளாவிட்டாலும் என்னால் மிகவும் கவரப் பட்ட மறுமொழி.உலகில் பல இடங்களில் கம்யூனிசமும் அதன் வழி வந்த கொள்கைகளும் தோற்றுக் கொண்டிருக்கும் வேளையில், அதனை முன்னிறுத்துபவர்கள், நடப்பில் இருக்கும் சாதனத்தை உபயோகித்து நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

    “ஆனால், பொதுவான மக்களுக்கு கம்யூனிஸ்ட்கள் என்றால் நல்லவர்கள், நாணயமானவர்கள் என்ற மதிப்பு இன்றளவும் இழக்காமல் இருக்க காரணமாக இருப்பவர்கள்.”

    மிக மிகச் சரியான வாக்கியம்.

    வினவின் வழக்கமான மறுமொழியாளர்களின் அர்த்தமில்லாக் கூச்சலிலிருந்து விடுபட்ட, கண்ணியமான மறு மொழி.

    வாழ்த்துக்கள்.

  3. உங்கள் பேச்சைக்கேட்டு மக்கள் தேர்தலை புறக்கணிக்கும் நிலை இருந்தால் அதற்குப்பதில் உங்களைப்போன்றோறே தேர்தலில் நின்று வெற்றிபெற்றுவிட முடியும்.. எனவே புறக்கணியுங்கள் என்கிற இந்த வேண்டுகோள் எந்த பயனை கருதி என்று புரியவில்லை..

  4. // பொதுவான மக்களுக்கு கம்யூனிஸ்ட்கள் என்றால் நல்லவர்கள், நாணயமானவர்கள் என்ற மதிப்பு இன்றளவும் இழக்காமல் இருக்க காரணமாக இருப்பவர்கள் //

    இப்போது நிலைமை மாறியுள்ளது. கம்யூனிஸ்ட் என்றால் தாபா, தளி ராமச்சந்திரன், திருப்பூர் கோவிந்தசாமி இவர்கள் தான் இப்போது நினைவுக்கு வருகிறார்கள். முன் எப்போதும் இல்லாத வகையில் மக்களுக்கு கம்யூனிஸ்ட்களின் மேல் நம்பிக்கை முற்றிலும் குறைந்துள்ளது உண்மை.
    நேரக்கொடுமை.

    வினாவில் பதிவிடும் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
    தெளிவாக, பாமரனுக்கும் புரியக்கூடிய வகையில் உங்கள் சித்தாந்தத்தை, புரட்சி மார்க்கத்தை பற்றிய விளக்கத்தை இந்த வினவிலேயே அளிக்கலாமே.

    உங்கள் சித்தாந்தத்தை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளாத மக்களின் எண்ணிக்கையில் நானும் ஒருவன். இங்கு பதிவிடும் மதவாதிகள் போல “எங்கள் சித்தாந்தம் தான் சரி, யாரும் கேள்வி கேட்க கூடாது” போல கண்ணை மூடிக்கொண்டு ஒரு கருத்தை தீவிரமாக ஆதரிப்பதை விட்டு, நேர்மையாக தங்களது சித்தாந்தத்தை எங்களுக்கு விளக்கவும். நிறை குறைகள் இருந்தாலும் பரவாயில்லை. அதனை விவாதித்து முடிவு செய்யலாம்.

  5. ஏன் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்பதை விளக்கும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு வெளியீடு.

    அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
    https://www.vinavu.com/2011/04/13/state-of-indian-politics/

Leave a Reply to அரசியல் மாணவன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க