privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கல்வி உரிமை வேண்டுமா - தேர்தலுக்கு கட் அடி !

கல்வி உரிமை வேண்டுமா – தேர்தலுக்கு கட் அடி !

-

கல்லூரி மாணவர்களுக்காக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வெளியிட்டிருக்கும் துண்டறிக்கை:

ன்பார்ந்த மாணவ நண்பர்களே,

வரும் 16-வது நாடாளுமன்றத் தேர்தல் பற்றி உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என நினைக்கிறோம். கல்லூரித் தேர்வுக்கு இடையில் இதெல்லாம் தேவையில்லாத விசயம் என்று நீங்கள் கருதாமல் இந்த நோட்டீசை சற்று படிக்குமாறு உங்களை உரிமையோடு கோருகிறோம்.

’’வாக்களிப்பது நமது கடமை, கடமையை செய்யத் தவறக்கூடாது’’ என தேர்தல் கமிசன் மூச்சுக்கு 300 தடவை நமக்கு சொல்லி வருகிறது. ஆனால், ’’குடிமக்கள் அனைவருக்கும் தரமானக் கல்வியை இலவசமாகக் கொடுப்பது அரசின் கடமை’’ என்று எப்போதாவது இந்த தேர்தல் கமிசன் சொல்லி இருக்கிறதா? இதுவரை நமக்காக பேசாத தேர்தல் கமிசன் இப்போது மட்டும் ஏன் பேசுகிறது என சற்று சிந்தித்துப் பாருங்கள்.

வாக்குரிமையை நாம் யாருக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாதாம்? அது நமக்கு கிடைத்த பொக்கிசமாம். அதனால் ’’புதிய வாக்காளர்களான மாணவர்கள் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்’’ என்று வீடு தேடி வந்து சொல்கிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள்.

ஆனால்,

  • அரசு – அரசு உதவி பெறும் கல்லூரிகளில் குடிநீர், கழிவறை, போதிய வகுப்பறை, போதிய ஆசிரியர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. கலாச்சார விழாக்களோ, மாணவனுக்கு என்று இருக்கும் ஒரே விழாவான “பஸ் டே” வோ நடத்த முடியவில்லை. இதெல்லாம் மாணவர்களுக்கு கட்டாயம் வேண்டும் என்று எப்போதாவது ஓட்டுப் பொறுக்கிகள் சொல்லியிருக்கிறார்களா?
  • தன் கல்லூரிப் பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பதற்கான மாணவர் பேரவைத் தேர்தலை ஜனநாயக உரிமை என்று அங்கீகரிக்காதவர்கள்தான் அழுகி நாறும் இந்தத் தேர்தலில் ஓட்டும் போடுவது நமது உரிமை வெட்கமில்லாமல் சொல்கிறார்கள்.

இப்படியெல்லாம் பேசி ஓட்டுப் பொறுக்கும் இவர்கள் ஜெயித்து ஆட்சிக்கு வந்த பின்னால் நமக்கான உரிமைகளை வழங்குகிறார்களா?

  • போராடும் மாணவர்களை ரவுடிகள் பொறுக்கிகளாக சித்தரிக்கிறார்கள்;
  • போலீசை ஏவி கல்லூரிக்குள் புகுந்து தாக்குகிறார்கள்;
  • பொய் வழக்கு போட்டு சிறையிலடைக்கிறார்கள்;
  • கல்லூரியிலிருந்து நீக்கம் செய்து மாணவர்களின் படிப்பையே பாழாக்குகிறார்கள்.

மொத்தத்தில் கல்லூரிகளை கல்விச்சாலைகள் போலவா நடத்துகிறார்கள், சிறைச்சாலையைப் போலல்லவா நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஏன் நாம் ஓட்டுப் போட வேண்டும்?

’’எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தால் உங்கள் காலுக்கு செருப்பாகத் தேய்வோம்’’ என்று 16-வது முறையாக ஓட்டுக்கேட்டு வருகிறார்களே? இதுவரை இவர்கள் மாணவர்களுக்கு செய்தது என்ன? பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை மட்டும் உயரவே இல்லை. தனியார் கலை/ அறிவியல், மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல் பெருகி கட்டணம் என்ற பெயரில் மாணவர்களையும், பெற்றோர்களையும் கசக்கிப் பிழிகின்றனவே, இதைத் தடுத்து நிறுத்த எந்த ஓட்டுப் பொறுக்கி கட்சிகளாவது, எப்போதாவது போராட்டக் களத்திற்கு வந்ததுண்டா? இல்லையே? எஸ்.சி/ எம்.பி.சி மாணவர்கள் தங்கும் விடுதிகள் சிறைச்சாலைகளைவிடக் கொடுமையானது யாருக்கும் தெரியாததா? இந்த ’மக்கள் பிரதிநிதிகள்’ அங்கு ஒரு நாளாவது வந்திருக்கிறார்களா? அந்த கொடுமைகளைத் தீர்க்க வழி செய்திருக்கிறார்களா? வேறு யாருக்குதான் இவர்கள் சேவை செய்கிறார்கள்? நாய் வாலாட்டுவது எஜமானுக்குத்தானே! ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகள் சேவை செய்வது தனியார் கல்வி கொள்ளையர்களுக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும்தான்.

சமீபத்தில்,வேல்டெக் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்களை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதை எதிர்த்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி  போராடிய போது நிர்வாகத்திற்கு ஆதரவாக வந்தது யார் தெரியுமா? காங்கிரசின் அகில இந்திய தொழிற்சங்க தலைவரும், அதிமுக அமைச்சரும்தான். அவர்களால் புமாஇமு தோழர்களை பணிய வைக்க முடியவில்லை. அடுத்து போலீசை ஏவுகிறார்கள். திவ்யா எனும் மாணவியின் ’படுகொலை’க்கு நியாயம் கேட்டதற்காக எமது தோழர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையிலடைத்தார்கள். இதுதான் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களிலும் நடக்கிறது. இப்படி கல்விக்கொள்ளையர்கள் வீசி எறியும் எச்சில் காசுக்கு காவல் ’தெய்வமாக’ சேவை செய்பவர்கள் இந்த ஓட்டுக் கட்சிகள்தான். இன்னும் சொல்லப் போனால் கல்விக் கொள்ளையர்களில் பெரும்பாலானோர் ஓட்டுகட்சி அரசியல்வாதிகள்தான் எனும் போது இவர்கள் எப்படி மாணவர்களுக்கு சேவை செய்வார்கள்?

இது மட்டுமல்ல, கடந்த காலத்தையும் சற்று திரும்பிப் பாருங்கள். மாணவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமான கல்வியை, ஏழை மாணவர்களின் கல்விபெறும் உரிமையை, அன்றாடம் பாதிக்கின்ற பிரச்சனைக்கு இதுவரை நடந்த 15 தேர்தல்கள் என்ன தீர்வைத் தேடித் தந்துள்ளன? எதுவும் இல்லையே. மாறாக ஒவ்வொரு ஆண்டும் நாம் அனுபவிக்கும் பிரச்சனைகளும், கொடுமைகளும்தான் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அரசு புகுத்தி வரும் தனியார்மயம், தராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கையால் கல்வி கொடுக்கும் கடமையிலிருந்து அரசு படிப்படியாக விலகி வருகிறது. கல்வித் துறையையே ஒட்டுமொத்தமாக தனியாருக்குத் தாரைவார்த்து வருகிறது. ’காசு உள்ளவனுக்கே கல்வி’ எனும் உலக வங்கியின் உத்தரவால் நாட்டின் பெரும்பான்மை ஏழை மாணவர்கள் தற்குறியாகும் அபாயம் நெருங்கி வருகிறது. இப்படி மாணவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு எதிராக ஒரு துரும்பையும் அசைக்காத இந்த ஓட்டுப் பொறுக்கிகளுக்கு ஏன் நாம் ஓட்டுப் போட வேண்டும்?

அரசியல்வாதிகள் மட்டுமா? அரசின் துறைகள் என்ன நமக்காகவா இருக்கின்றன?

  • கல்வியை குடிமக்களின் அடிப்படை உரிமையாக்காத அரசியலமைப்புச் சட்டம்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தி கொள்ளையடிப்பது முதலாளிகளின் உரிமை என்கிறது.
  • மாணவர்களின் பஸ் டே விழாவை அராஜகம் என்று தடை செய்த நீதிமன்றம்தான் தனியார்கல்வி நிறுவனங்களின் கொள்ளையை, அவர்கள் செய்யும் சித்திரவதைகளை, கொலைகளை, முறைகேடுகளை தடுத்து நிறுத்த முடியாது என்கிறது.
  • கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றுவதில் பெயர்போன காக்கிச்சட்டை ரவுடிகளான போலீசு, நியாயத்திற்காக போராடும் மாணவர்களை ரவுடிகள் பொறுக்கிகளாக சித்தரித்து சிறையிலடைக்கிறது.
  • சட்டத்தையும், விதிமுறைகளையும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் கறாராக நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் அதை மதிப்பதே இல்லை.அதிகாரிகளில் கீழ்மட்டம் மட்டுமல்ல மேல்மட்டம் முழுவதும் லஞ்ச – ஊழலில் மலிந்து கிடப்பது நாடே நாறுகிறது.

இப்படி மொத்த அரசின் துறைகளும் அழுகி நாறுகின்றன. இனியும் இதை வைத்துக்கொள்ள முடியாது, தூக்கியெறிய வேண்டும். ஆனால், செண்ட் அடிச்சா சரியாகிடும் என நம்மை நம்ப வைத்து கழுத்தறுக்கத்தான் இந்த தேர்தல் நாடகம்.

’’எல்லாம் சரி பாஸ்….. நமக்கும் இந்த தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லாதபோது, இத ஏன் நாம கண்டுக்கணும்’’ என நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஓட்டுக்கட்சிகள் மாணவர்களுக்கு குவாட்டர், பிரியாணி, தலைக்கு ரூபாய் 200, வேட்பு மனுத் தாக்கல, வேட்பாளர் பிரச்சாரம், ‘மாப் காட்ட’, ‘டோர் அடிக்க’, தேவைப்பட்டால் ‘எதிர்கட்சிக்காரன அடிக்க’ என அடியாளாக பயன்படுத்துகின்றனரே. இது நமக்கு அவமானமில்லையா? இதை துடைத்தெறிய களமிறங்க வேண்டாமா?

நம் வாழ்க்கையை தீர்மானிப்பது அரசியல்தான். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசியல்தான் உங்களுக்கு கல்வியை கொடுக்க வேண்டுமா? கூடாதா? எப்படிப்பட்ட கல்வியை கொடுக்க வேண்டும்? என்பதையெல்லாம் தீர்மானிக்கிறது. அரசுக் கல்வியை ஒழித்து தனியார் கல்வியை வாழவைப்பதையும், போர்க்குணமான மாணவர்களை டாஸ்மாக் போதையிலும், நுகர்வுவெறி கலாச்சாரத்திலும் சிக்கி சீரழிய வைப்பதையும் செய்வது கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசியல்தான். இந்த கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கான லைசன்ஸ் வாங்குவதற்குதான் தேர்தல். இப்போது சொல்லுங்கள் அரசியலுக்கும் மாணவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிவிட முடியுமா? முடியாது.

நம்மை மட்டுமல்ல, நம் பெற்றோர்கள், சகோதர சகோதரிகளான விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளிகள், பெண்கள் என கோடானு கோடி உழைக்கின்ற மக்கள் அனைவரும் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்கு பலியாகி வருகிறார்கள்; இந்த தேர்தல் பாதையால் வாழ்க்கையை இழந்து வருகிறார்கள்; இப்படி பாதிக்கப்டும் உழைக்கும் மக்களுடன் ஓரணியில் திரள்வோம். இந்த போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம். நம்மை கொடுமைபடுத்தி வரும் இந்த அரசை தூக்கியெறிவோம். உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசை கட்டியெழுப்புவோம்!

_____________________

பள்ளி மாணவர்களுக்காக வெளியடப்பட்ட துண்டறிக்கை:

பள்ளி மாணவர்களே, தேர்தலில் வாக்களிப்பது கடமை அல்ல –
மடமை என்பதை பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்வோம்!

ன்பார்ந்த மாணவர்களே,

இறுதித் தேர்வுக்கு படித்துக்கொண்டிருப்பீர்கள். உங்கள் படிப்பிற்கிடையே குறுக்கிடுவதற்கு வருந்துகிறோம். ஒரு அவசரமான விசயத்தை பேச வேண்டியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. 18 வயது நிரம்பியவர்கள்தான் ஓட்டு போட முடியும். ஆனால், 18 வயது நிரம்பாத நம்மையும் தேர்தல் வேலைகளில் இழுத்து விடுகிறது தேர்தல்கள்.

ஒரு பக்கம் ஓட்டுக்கட்சிகளின் புரோக்கராக செயல்படும் தேர்தல் கமிசன் உறுதிமொழி படிவம் ஒன்றை நம் கையில் திணித்து ஓட்டுப் போட ஆள் பிடிக்கச் சொல்கிறது. மறு பக்கம் ஓட்டுக் கட்சிகள் முதலாளிகளிடம் வாங்கிய எச்சில் காசை வீசியெறிந்து கூட்டத்திற்கு ஆள் சேர்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தேர்தல் களத்திற்கு வந்து விட்டோம். எனவே, பள்ளி மாணவர்களாகிய நாம் தேர்தலை எப்படி பார்ப்பது என தெளிவுபடுத்திக்கொள்வோம்.

இதற்கு நாம் படிக்கும் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிக்கூடங்களைப் பற்றி ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். அவைகள் எப்படி உள்ளன? காற்றோட்டமும், வெளிச்சமும் இல்லாத வகுப்பறைகள். குடிக்க தண்னீர் இல்லை. சிறு நீர் கழிக்க, மலம் கழிக்க கழிவறை இல்லை. ஆய்வுக்கூடமில்லை. விளையாட்டு இல்லை. கலைவிழா இல்லை. இடியும் நிலையில் கட்டிடங்கள். அழியும் நிலையில் அரசுப்பள்ளிகள்.

பணம் பறிக்கும் வழிப்பறி கொள்ளைக்காரனாக தனியார் பள்ளிகள். பணம் கறக்க முடியாதபோது மாணவர்களின் உயிரைப் பறிக்கின்றன தனியார் பள்ளிகள். மொத்தத்தில் கல்வி கற்கும் சூழல் இல்லை. உரிமைகள் இல்லை. ஆனால் சித்திரவதைகள் உண்டு. இதைப் பற்றி இந்தத் தேர்தல் கமிசனோ, ஓட்டுக் கட்சிகளோ கவலைப்பட்டதுண்டா? இப்போது மட்டும் உறுதிமொழி படிவத்தை தருகிறது தேர்தல் கமிசன்.

அன்று தன்னந்தனியாக நாம் தானே கல்வி கற்கும் உரிமைக்காக போராடினோம். புமாஇமு தலைமையில் போராடினோம். எத்தனை எத்தனை போராட்டங்கள்.

  • தமிழ் வழிக் கல்வி கேட்டு ஆர்ப்பாட்டம்.
  • கழிவறை கேட்டு கல்வித்துறை அலுவலகம் முற்றுகை.
  • பள்ளிக்கூடம் இடிந்தபோது ரிப்பன் மாளிகை முற்றுகை.

எத்தனை சுவரொட்டிகள்,எத்தனை பிரசுரங்கள், மாவட்டம் முழுக்க எத்தனை பிரச்சாரம் இவையெல்லாம் இவர்களுக்குத் தெரியாதா? தெரியும். ஆனாலும் வரவில்லை. வரமாட்டார்கள்.

காரணம் இவர்கள் அனைவரும் அதாவது, இந்த அரசும், அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் இலவச – கட்டாயக் கல்வியை தரமாக, தாய்மொழியில் அறிவியல் பூர்வமான கல்வியை விரும்பவில்லை. தனியார் கல்விக் கொள்ளையர்களை வளர்க்கவே வெறிகொண்டு அலைகிறார்கள். தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்க தடையாக உள்ள அரசுப் பள்ளிகளை இழுத்து மூட முயலுகின்றன. கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெற்றோர்களின் உழைப்பை உறிஞ்சி கொழுக்கவும் அவர்கள் சேமிப்பை கொள்ளையடிக்கவும் தனியார் முதலாளிகளுக்கு பாதை போட்டு தருகிறது. இதற்காக அரசுப்பள்ளிகளை திட்டமிட்டே சீரழிக்கின்றன. இந்தக் கொள்ளைக்கு ( கொள்கைக்கு) பெயர் கல்விதனியார்மயம். இதை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்ததும் இந்த ஓட்டுக் கட்சிகள்தான். இவைகளை ஒழித்துக்கட்டாமல் கல்வி கிடையாது. உரிமை கிடையாது. இதுதானே இந்த ஓராண்டுப் போராட்டத்தில் நாம் கற்றுக் கொண்ட பாடம்.

ஆனால், ரத்தம் குடிக்கும் இந்த கல்வி தனியார்மய காட்டேரியை யார் வளர்ப்பது என்ற போட்டியில் தானே கட்சிகள் குதித்துள்ளன. இதற்கு பெயர் தானே நாடாளுமன்றத் தேர்தல்.

கல்வி உரிமையை மட்டுமல்ல, வேலை உரிமை, தண்ணீர் உரிமை, இலவச மருத்துவ உரிமை என, மக்களின் எல்லா உரிமைகளையும் பறித்து பணக்கார கும்பல்களை (கார்ப்பரேட் முதலாளிகளை) வளர்க்கத்தானே நாய்களைப் போல சண்டையிடுகின்றன ஓட்டுச் சீட்டு கட்சிகள். வெளிநாட்டு முதலாளிகளுக்கும் , உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் நம் பெற்றோர்களை கூலி அடிமைகளாக்கி ஒட்டச் சுரண்டுவதற்கு எந்த கட்சிக்கு வாய்ப்பளிப்பது என்பதை முடிவு செய்வது தானே இந்தத் தேர்தல். உண்மை இப்படி இருக்கும் போது இந்தத் தேர்தலில் வாக்களிப்பது கடமை அல்ல. மடமை என்பதை நம் பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்வோம்.

இந்த ஓராண்டு அனுபவம் நமக்கு சொல்வதென்ன? போராட்டம் ஒன்றுதான் அரசை பணிய வைக்கும் என்பதே. இதை உரக்கச் சொல்லுவோம். மற்றவர்களுக்கு உறைக்கச் செய்வோம். தாய், தந்தை, உற்றார், உறவினர், தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரிடமும் பிரச்சாரம் செய்வோம்.

நாட்டையும், நம்மையும் அடிமைப்படுத்துவதை தீவிரப்படுத்தி வரும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்வோம். போலி ஜனநாயக செட்டப்பை உடைத்து எறிய பெற்றோர்களோடு களம் இறங்குவோம். புதிய ஜனநாயக அரசை கட்டியெழுப்புவோம்.

இவண்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தமிழ்நாடு