privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்தமிழில் பேச முடியாத நீதிமன்றம் எதற்கு ?

தமிழில் பேச முடியாத நீதிமன்றம் எதற்கு ?

-

நீதிபதிகளாகிய நீங்கள் சட்டத்தை மீறலாம்! பொதுமக்களாகிய நாங்கள் மீறக்கூடாதா? இது எந்த ஊர் நியாயமடா?

ன்பார்ந்த பொதுமக்களே!

“தமிழை நீதிமன்ற மொழியாக்கு” என்ற வழக்குரைஞர்களின் முழக்கம் சென்னை-மதுரை உயர்நீதி மன்றங்களில் எதிரொலிக்கின்றன. இது அவர்களின் கோரிக்கை மட்டுமல்ல. நம்முடையதும் தான்.

நாம் என்ன அன்றாடம் ஆங்கிலமா பேசுகிறோம்? தமிழில் தானே பேசுகிறோம். குடும்பங்களிலும், நண்பர்களிடமும், அக்கம் பக்கம் உள்ளவர்களிடமும், நம் சொந்த பந்தங்களிடமும், பழகும் இடங்களிலும், வேலைகளிலும் சரி, தாய்மொழி தமிழில் தானே பேசுகிறோம். உதாரணத்திற்கு ஒரு விசயத்தை எடுத்துக்கொள்வோம். அதாவது, நம் வேலை செய்யும் இடங்களில் இடை நீக்க உத்தரவையோ, விசாரணையையோ ஆங்கிலத்தில் தான் அச்சடித்து தருகிறது நிர்வாகம். ஆனால், அதை நாம் ஏற்க மறுத்து, தமிழில் மொழி பெயர்த்து கொடுங்கள் என்று கேட்கிறோமா இல்லையா? உண்மை இப்படி இருக்கும் பட்சத்தில் உயர்நீதி மன்றங்களில் புரியாத மொழி ஆங்கிலம் எதற்கு?

நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடும் உரிமை இருந்தால் தான், வழக்குரைஞர்கள் என்ன பேசுகிறார்கள், அதற்கு நீதிபதிகள் என்ன சொல்கிறார்கள் என்பது நமக்கும் புரியும். வழக்குரைஞர்களுக்கும் புரியும். வழக்குரைஞர்களும் சரியாக வாதாடுகிறார்களா? நீதிபதிகளும் அதை சரியாகப் புரிந்துக் கொண்டு தீர்ப்பளிக்கிறார்களா? என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இல்லையென்றால் புரியாத மொழியில் படம் பார்ப்பதைப் போல இவர்கள் வாயை அசைப்பதைத் தான் வேடிக்கை பார்க்க முடியுமே தவிர, அவர்கள் விவாதிப்பதிலிருந்து ஒரு எழவையும் புரிந்துகொள்ளமுடியாது. வேண்டுமானால் நமது வழக்குரைஞர்கள் இங்கிலீசிலே நல்ல வெளுத்து வாங்கினார்கள் என்று பெருமை பீத்தி கொள்ளலாம்.

இதில் நமக்கு என்ன பலன்? பணத்தையும், நேரத்தையும் இழந்தது தான் மிச்சம். வழக்குரைஞர்கள் வேண்டுமானால் வழக்காட வரும்பொழுது மக்களிடம் எதையாவது சொல்லி ஏமாற்றலாம். “நான் நல்லாத்தான் வாதாடினேன். ஆனால் நீதிபதி தான் சரியா தீர்ப்பு சொல்லல” என்றும் வழக்குரைஞர்கள் சொல்லலாம். தமிழில் வாதாடும் உரிமை இருக்கும் பட்சத்தில் வழக்குரைஞர்கள் வாதாடுவதை வைத்துக் கொண்டு சந்தேகங்களை அவர்களிடம் எழுப்பித் தெளிவுபெற முடியும். அவர் சரியாக வாதாடினாரா இல்லையா என்பதை நேரிலேயே பார்த்து புரிந்துக் கொண்டு நமது வழக்கில் யார் தவறு செய்துள்ளார்கள், வழக்குரைஞர்களா? நீதிபதிகளா என்பதை புரிந்து கொள்ளவும் முடியும்.

உதாரணத்திற்கு, கோயில்களில் சமஸ்கிருதம் என்ற புரியாத ’தவளை’ பாஷையில் அர்ச்சகர் அர்ச்சனை செய்யும் பொழுது, அவர் நமக்காக கடவுளிடம் என்ன கேட்கிறார், அதாவது நமக்காக என்ன ‘சிபாரிசு’ செய்கிறார் என்று தெரியாமல், புரியாமல் அவர் வாயைத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், இதில் ஒன்றை மட்டும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதாவது அவர் நம்மிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட ’குலம்-கோத்திரங்களை’ கடவுளிடம் ஒப்பிக்கும் பொழுது மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. மற்றபடி என்ன சுலோகம் சொல்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. காரணம் – அது நமக்கு புரியாத-தெரியாத பாஷை. நமக்கு தெரிந்த-புரிந்த தாய் மொழியில் சொல்லும் பொழுது புரிந்து கொள்ள இயலும் இல்லையா?

இப்பொழுது சொல்லுங்கள், நீதிமன்றங்களில் வழக்குரைஞர்களின் வாயையும், கோயில்களில் அர்ச்சகர்களின் வாயையும் தானே பார்க்கிறோம். என்றைக்காவது இதைப் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறோமா? இதை என்னவென்று சொல்வது? அடிமைப் புத்தி என்பதா? சொரணை இல்லை என்பதா?

அதனால் தான், 1956-ம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது, தமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டப்படி கீழமை நீதிமன்றங்களில் தமிழ்நாடு ஆட்சி மொழியான தமிழை வழக்காடும் மொழியாக்கப்பட்டதோ, 20 ஆண்டுகள் ஜவ்வாக இழுத்து, வழக்குரைஞர்களின் பல போராட்டங்களுக்கு பிறகு குற்றவியல் நீதிமன்றங்களில் 1976-ம் ஆண்டும், உரிமையியல் நீதிமன்றங்களில் 1982-ம் ஆண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதோ நமக்குத் தெரியவில்லை.

தமிழ் தெரியாத ஒன்றிரண்டு நீதிபதிகளின் நலனுக்காக, பெரும்பான்மை தமிழக மக்களின் ஜனநாயக உரிமையையும், உணர்வையும் காலில் மிதித்து, 1994-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள அனைத்து நீதிபதிகளும் ஒன்று கூடி, தீர்ப்புகளை ஆங்கிலத்திலும் எழுதலாம் என ஒரு தீர்மானத்தின் மூலம் தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தை ஆழக் குழிதோண்டி அதில் போட்டு புதைத்து விட்டதையும் தெரியாமல்- புரியாமல் இருக்கிறோம்.

1996-ம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் வழக்காடும் மொழியாக்க தமிழக அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த்து. உ.பி. உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இந்தியை வழக்காடும் மொழியாக்க அனுமதித்த மத்திய அரசு, தமிழை ஓரவஞ்சனையுடனும், மொழித் தீண்டாமையுடனும் அனுமதி தர மறுத்து வருகிறது என்பதையும் அறியாமல் இருக்கிறோம்.

சிறிது யோசித்துப் பாருங்கள், இதன் விளைவாக பாதிக்கப்படுவது யார்? பொதுமக்களாகிய நாம்தான். வழக்கு விபரங்கள் எதுவுமே தெரியாமல், மந்தைகளைப் போல நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் சொல்வதையே ‘உண்மை’ எனவும், நீதிபதிகள் எழுதும் தீர்ப்பையும் கேள்வி எழுப்ப முடியாமல் தவிக்கிறோம்.

சட்டத்தை மீறக்கூடாது, சட்டத்தை மீறக்கூடாது என்று மூச்சுக்கு முன்னூறு முறை பேசும் ’மகா கனம் பொருந்திய’ நீதிபதிகள் தான் ஆட்சி மொழிச் சட்டத்தை ஒரு தீர்மானத்தின் மூலம் செல்லாக்காசாக்கி விட்டார்கள்.

  • பொதுமக்களாகிய நாம் சட்டத்தை இம்மியளவு மீறினாலும், போலீசும், நீதித்துறையும் காட்டுக் கூச்சல் போட்டு வழக்கைப் போட்டு, உள்ளே தள்ளுகிறது. ஆனால், நீதிபதிகள் மட்டும் மீறுவார்கள். யாரும் கேள்வி எழுப்பக்கூடாது. இது எப்படி இருக்கிறது என்றால் “இராஜா மட்டும் ’குசு’ விடலாம்!” என்பதை தான் நினைவூட்டுகிறது.

இது கேவலம் இல்லையா? இந்தி திணிப்புக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழகம், பிறகு மெல்ல மெல்ல அடங்கி போனதால், இன்று பள்ளிகளில் ஆங்கிலம்; கோயில்களில் சமஸ்கிருதம்; நீதிமன்றங்களில் ஆங்கிலம் என எங்கும் அடிமை மோகம் பெருகியதன் விளைவு தாய்த் தமிழை இழந்து நிற்கிறோம். இந்நிலையை மாற்றுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக நீதிமன்றங்களில் போராடிக் கொண்டிருக்கும் வழக்குரைஞர்களுக்கு தோள் கொடுப்போம். உயர்நீதி மன்றங்களில் வழக்காடும் மொழியாக தமிழைக் கொண்டு வந்து பொதுமக்களாகிய நாம் சட்டத்தை மீறமால் இருக்க நீதிபதிகள் வழிவகுப்பார்களா?

மத்திய அரசே!

  • உ.பி. உள்ளிட்ட நான்கு மாநில உயர்நீதிமன்றங்களில் இந்தியை வழக்காடும் மொழியாக்கியது போல தமிழ்நாடு உயர்நீதி மன்றங்களிலும் தமிழை வழக்காடும் மொழியாக்கு!

சென்னை உயர்நீதி மன்றமே!

  • தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டத்தை முடக்கி கீழமை நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடும் மொழியாவதை தடுத்து நிறுத்தி உள்ள உயர்நீதி மன்ற தீர்மானத்தை உடனே திரும்ப பெறு!

உழைக்கும் மக்களே!

  • தமிழை வழக்காடும் உயர்நீதி மன்றங்களில், கீழமை நீதிமன்றங்களில் மொழியாக்கும் வரை தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம்!

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்கள் மீது கிளிக் செய்யவும்]

மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை கிளை
தொடர்புக்கு : வழக்கறிஞர் மில்டன், 9842812062