privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயா, வைகுண்டராஜன், திமுக, சோ – கொள்ளைக் கூட்டம்!

ஜெயா, வைகுண்டராஜன், திமுக, சோ – கொள்ளைக் கூட்டம்!

-

டந்த 20 ஆண்டுகளாக தென் தமிழக கடற்கரையில் கடல் அன்னையின் மார்பை அறுத்து விற்றுக் கொண்டிருப்பவர் வைகுண்டராஜன். கடந்த 10 ஆண்டுகளாக தமிழக மக்களின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்துக் கொண்டிருப்பது மிடாஸ் முதலான சாராய ஆலைகள்.

ஜெயாவின் மிடாஸ் சாராய கம்பெனிக்கு அறங்காவலராகிய சோ ராமசாமி
ஜெயாவின் மிடாஸ் சாராய கம்பெனிக்கு அறங்காவலராகிய சோ ராமசாமி

1974 – 75 களில் அரசின் கனிமவளத் துறையில் வேலை பார்த்த செல்வராஜ் என்ற அதிகாரியும், தூத்துக்குடி மணல் மாணிக்கமும் இணைந்து முதலில் கார்னெட் மணல் கம்பெனி தொடங்கினார்கள். பின்னர் மணல் மாணிக்கம் செல்வராஜை மிரட்டி, விரட்டி விட  செல்வராஜை, வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜன் சந்தித்து தாது மணல் தொழிலில் இறங்கியிருக்கிறார். செல்வராஜ் முதன்முதலில் ரூ 150/- செலவில் வைகுண்டராஜனுக்கு லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தார். சட்டவிரோதமாக கடற்கரை மணலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கடத்தல் வேலையை செய்து வந்தார் வைகுண்டராஜன்.

1990-ம் ஆண்டு வரை இந்திய அரசின் தொழிற் கொள்கை கனிம வளங்களை அரசு மட்டுமே எடுக்க அனுமதித்தது. தனியாருக்கு சில கட்டுப்பாடுகள் இருந்தன. 1991-ல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தனியாரும் கனிமத் தொழிலில் அனுமதிக்கப்பட்டனர். 1990-க்கு முன்பு சட்டவிரோதமானவையெல்லாம், பின்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

அரிய வகைக் கனிமங்கள் நிரம்பிய மணல் தாதுவை அள்ளி தொழிற்சாலைகள் மூலம் கார்னெட், இல்மனேட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட் ஆகிய தனித்தனி கனிமங்களாகப் பிரித்து, அவற்றை தூத்துக்குடி துறைமுகம் வழியாக கொரியா, அபுதாபி, ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

இதில் வைகுண்டராஜனின் வி.வி. மினரல்ஸ் மற்றும் அவரது குடும்ப நிறுவனங்கள் தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான 15 கி.மீ நீளமுள்ள கடற்கரையை 40 ஆண்டுகள் குத்தகைக்கு அரசிடமிருந்து பெற்றுள்ளதோடு, 2300 ஏக்கர்கள் பட்டா நிலங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தங்கள் நிறுவன இணையதளத்தில் தெரிவித்துள்ளனர். இந்த நிலங்களையும் அரசிடமிருந்து மிகக் குறைந்த குத்தகைக்கு தான் பெற்றுள்ளார்கள். உதாரணத்திற்கு இருக்கன்துறை கிராமத்தில் 100 ஏக்கர்கள் அரசு நிலம் ஆண்டுக்கு 16 ரூபாய்க்கு வைகுண்டராஜனுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

1 லட்சம் டன் கார்னெட்டில் 4000 டன் மோனோசைட் இருக்கும். இதில் 4 சதவீதம் தோரியம் இருக்கும். கூத்தன்குழி என்ற கிராமத்தில் பாதிப்பேர் வி.வி.-ல் வேலை செய்கிறார்கள். அவர்களில் பலர் வேலை செய்யாமலே ரூ. 5,000 – 10,000 சம்பளம் வாங்குகிறார்கள். கம்பெனிக்கு ஆதரவாக இவர்கள் கலெக்டரிடம் மனுக் கொடுப்பார்கள். எதிர்ப்பவர்களை அடிப்பார்கள். கடற்கரை சமூகத்தையே பிளந்து வைத்துள்ளார்கள். எல்லா ஊர்களையும் பிரித்து வைத்துள்ளார்கள். ஒற்றுமை வரக் கூடாது என வேலை செய்கிறார்கள்.

1991 முதல் 1996 வரை, 2001 முதல் 2006 வரை மற்றும் 2011-லிருந்து தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவே வைகுண்டராஜனின் தொழில் கூட்டாளியாக இருந்திருக்கிறார். மேலும் ஆட்சி மாறினாலும் DEPARTMENT OF ATOMIC ENERGY, MINISTRY OF MINES AND MINERALS அதிகாரிகள், CONTROLLER OF MINES, INDIAN BEREAU OF MINES அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளும், மாநில அரசில் – மாவட்ட ஆட்சித்தலைவர், தாசில்தார், மீன்வளத் துறை, தொழிற்துறை, கனிம மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள், தலைமைச் செயலக அதிகாரிகளும் வைகுண்டராஜனுக்கு ஊழியம் செய்து வருகின்றனர்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனது எலைட் டிஸ்லரிசுக்கு பங்கம் ஏற்படாத வகையில் உறவைப் பேணும் ஜெகத்ரட்சகன்
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனது எலைட் டிஸ்லரிசுக்கு பங்கம் ஏற்படாத வகையில் உறவைப் பேணும் ஜெகத்ரட்சகன்

ஆந்திராவில் இராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலத்திலேயே பல கோடி ரூபாய் கைமாறியதன் பலனாக கும்மிடிப்பூண்டி முதல் சிறீகாகுளம் வரை உள்ள கடற்கரை பகுதியில் மணல் எடுக்க வைகுண்டராஜனுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு சாத்தான்குளம், திசையன்விளை பகுதிகளில் வரவிருந்த டாடா-வின் டைட்டானியத் தொழிற்சாலைக்கு தனது அரசியல் செல்வாக்கால் பல்வேறு முறைகளில் எதிர்ப்பு தெரிவித்தவர் என்றால் இவரது செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.

1999-ம் ஆண்டிலிருந்து வைகுண்டராஜன் நிறுவனங்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் 96,120 கோடி ரூபாய்கள்.

2003-04ம் ஆண்டில் அம்மாவின் பொற்கால ஆட்சியில் அரசே மது விற்பனையை ஏற்று நடத்துவது என்று முடிவு செய்த போது, அதன் ஒரு முனையில் மக்களின் சங்கை அறுக்கும் போது கொட்டும் ரத்தத்தை உறிஞ்சும் உரிமையை பெற்றவர் வைகுண்டராஜன். வைகுண்டராஜன், அவரது மனைவி, சகோதரர்கள், சகோதரர் மனைவி இன்னும் சிலரை பங்குதாரர்களாகக் கொண்ட மிடாஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 2003-04ல் 12.85 லட்சம் பெட்டி மதுபானங்கள் வாங்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளில் இது 51.04 லட்சம் பெட்டிகளாக அதிகரித்தது.

2006-ம் ஆண்டு அராஜக ஜெயலலிதாவை தேர்தலில் தோற்கடித்து (‘ஜனநாயகத்தின் வெற்றி’) ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ஜெயலலிதா தன் அடியாள் வைகுண்டராஜன் மூலமாக சம்பாதிப்பதற்கு முற்றுப் புள்ளி வைக்கவில்லை. அந்த கொள்ளையில் திமுகவும் பங்கேற்பதற்கு தோதாக அக்கட்சியின் பினாமி ஜெகத்ரட்சகன் அவரது மனைவி, மகனுக்குக்குச் சொந்தமான இலைட் டிஸ்டிலரீசுக்கு 2008-ல் உரிமம் வழங்கப்பட்டு 2011-12க்குள் ரூ 712 கோடி விற்பனை வருவாய் அவருக்கு கிடைக்கிறது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு 2012-13ல் அது ரூ 466 கோடியாக குறைகிறது.

மேலும் உளியின் ஓசை, பெண் சிங்கம் ஆகிய படங்களை தயாரித்து கருணாநிதிக்கு வசனம் எழுத  வாய்ப்பும் அதற்கான ஊதியமும் வழங்கிய ஜெயமுருகன் (அதாவது கருணாநிதியின் பினாமி) நிறுவனமான எஸ்.என்.ஜி டிஸ்டிலரீஸ் 2008-ல் உரிமம் பெற்று 2011-12ல் ரூ 940 கோடி விற்பனையை எட்டியது. 2012-13ல் அது ரூ 834 கோடியாக குறைந்தது.

இதற்கிடையில் எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஜெயா-சசி கும்பலின் கொள்ளை தொடர்கிறது. இக்கும்பல் மிடாஸ் நிறுவனத்தை வைகுண்டராஜனிடமிருந்து தம் பெயருக்கு மாற்ற முடிவு செய்கின்றனர்.

தாது மணற் கொள்ளையனும், தெற்கத்தி வீரப்பனுமான வைகுண்டராஜன்
தாது மணற் கொள்ளையனும், தெற்கத்தி வீரப்பனுமான வைகுண்டராஜன்

2009-10ம் ஆண்டில் மிடாஸ் நிறுவனத்தை சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்வீல்ஸ் எஞ்சினியரிங் என்ற நிறுவனங்கள் வாங்குகின்றன. ஹாட் வீல்ஸ் நிறுவனத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் தலா 31% பங்குகளும், ஸ்ரீ ஜெயா ஃபைனான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் 38% பங்குகளையும் வைத்திருக்கின்றன.

90% இளவரசிக்கு சொந்தமான ஸ்ரீ ஜெயா ஃபைனான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதா 2008-09ல் ரூ 1.85 கோடியும், 2009-10ல் ரூ 1.92 கோடியும் கடனாக கொடுக்கிறார் (மொத்தம் – ரூ3.77 கோடி). கூடவே ஜெயலலிதாவும் கூட்டாளியாக இருக்கும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் இந்நிறுவனத்துக்கு ரூ 5 கோடி பங்கு விண்ணப்பத் தொகை கொடுக்கிறது. அதாவது ஸ்ரீ ஜெயா ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதாவிடமிருந்து ரூ 8.77 கோடி ரூபாய் தரப்பட்டிருக்கிறது. அதை பயன்படுத்தி மிடாஸ் நிறுவனத்தில் மூன்றில் ஒரு பங்குகளை வாங்கியிருக்கிறது. மேலும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் வைகுண்டராஜனுக்கு சொந்தமான ஃபேன்சி டிரான்ஸ்போர்டுக்கு ரூ 3.06 கோடி 2005-06ல் முன்பணம் கொடுத்தது. இதையும் மிடாஸ் நிறுவனத்துக்கான அச்சாரப் பணம் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஜெயலலிதா இந்த பணத்தை எல்லாம் அந்த காலத்தில் அவர் குடி கொண்டிருந்த கொடநாடு எஸ்டேட்டில் அடகு காத்தே சம்பாதித்தார் என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

2011 தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வர் ஆன பிறகு தி.மு.கவின் பினாமி நிறுவனங்களின் கொள்ளை ரத்து செய்யப்படவில்லை. அவற்றின் வருமானம் குறைக்கப்பட்டு மிடாஸின் வருமானம் அதிகரிக்கப்பட்டது. முந்தைய ஆண்டு ரூ 360 கோடியாக இருந்த மிடாஸின் வரிவிதிப்புக்கான வருமானம் 2011-12ல் ரூ 857 கோடியாகவும், 2012-13ல் ரூ 1,077 கோடியாகவும் உயர்ந்தது. அதாவது இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு மூன்று மடங்கு அதிக வருமானம் ஈட்டித் தர அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் ஆர்டர் கொடுத்திருக்கிறது.

2011 மே மாதம் அ.தி.மு.க அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்பு தமிழ்நாட்டில் கடற்கரை மணல் எடுக்க வழங்கப்பட்டிருந்த 43 லைசென்ஸ்களில் 36 வைகுண்டராஜனின் நிறுவனங்களுக்கு தரப்பட்டிருந்தன. மீதமுள்ள 7 லைசென்ஸ் பெற்றவர்களை பொய் புகார்கள் அளித்து தன் அதிகார பலத்தில் செயல்பட விடாமல் தடுத்து விட்டார் வைகுண்டராஜன். அ.தி.மு.க. அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் அளிக்கப்பட்ட 8,9 லைசென்ஸ்கள் முழுவதும் வைகுண்டராஜனுக்கே வழங்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவின் பினாமிகளாக சசிகலா கும்பல் செயல்பட்டு வரும் போது ஒரு பேக்-அப் ஆக இருந்தவர் பெரியவர், நேர்மையாளர் என்று நாட்டுக்கே உபதேசம் செய்யும் உபதேசியார் துக்ளர் சோ ராமசாமி. 2011 டிசம்பர் மாதம் சசிகலா ஜெயலலிதாவால் போயசு தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, சோ ராமசாமியும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனும்  9 நிறுவனங்களுக்கும் இயக்குனர்களாக நியமிக்கப்படுகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சசிகலா மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்த பின்னர் சோ ராமசாமி நவம்பர் 2012-ல் இயக்குனர் பதவியிலிருந்து விலகுகிறார். பூங்குன்றன் மார்ச் 2013-ல் விடுவிக்கப்படுகிறார்.

ஆகஸ்ட் 6, 2013-ல் வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளையில் சட்டங்களுக்கு விரோதமான நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி ஆட்சியர் ஆசிஷ் குமார் சோதனைக்குப் பிறகு அறிக்கை வெளியிட்டார். அதாவது, கொள்ளை அடிப்பதை விதிமீறல் இல்லாமல் செய்யலாமே என்ற கடமை உணர்வை மட்டும்தான் அவர் காட்ட முடியும். கொள்ளையையே தடுத்து நிறுத்த எவ்வளவு துடிப்பாக இருந்தாலும் அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, முதலமைச்சர், நாட்டின் பிரதமருக்கே அப்படி செய்ய உரிமை கிடையாது. அதைத் தீர்மானிப்பது உலக வங்கியால் அமல்படுத்தப்படும் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகள்தான். அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வேண்டுமென்றால் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையில் வடியும் துளிகளை  நக்கிக் கொள்ளலாம்.

அப்படி நக்குவதை அம்பலப்படுத்திய ஆசிஷ் குமார் இரண்டே நாட்களில் இடமாற்றம் செய்யப்படுகிறார். அதே மாதம் ககன்தீப் சிங் பேடி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் அறிக்கை 6 மாதங்கள் ஆகியும் அறிக்கை வெளியிடப்படவில்லை.

இந்த விபரங்களை திரட்டி அ.தி.மு.கவின் ஜெயா-சசி-வைகுண்டராஜன் கும்பலும், தி.மு.கவின் கருணாநிதி-ஜெகத்ரட்சகன்-ஜெயமுருகன் கும்பலும் மாற்றி மாற்றி தமிழகத்தை மொட்டை அடித்துக் கொண்டிருப்பதை அம்பலப்படுத்தியிருக்கும் ஆம் ஆத்மி கட்சி பொதுவில் தமிழகத்தில் திமுக, அதிமுகவை எதிர்த்து அரசியல் மேலாண்மை பெற விரும்புகிறது. ஆனால் இந்த விவரங்களுக்கு முன்னரே தமிழகத்தை கொள்ளையடித்த ஜெயா சசி கும்பல் குறித்து ஊரே அறிந்திருந்தாலும் ஆம் ஆத்மி வாயே திறக்கவில்லை.

கொள்கையே இல்லாத, அன்னிய முதலீட்டை அல்லது கார்ப்பரேட்டுகளை எதிர்க்காத  ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு, வைகுண்டராஜன், ஜெகத்ரட்சகன் போன்ற அடியாட்களை ஒழித்துக் கட்டி விடுமா என்ன? முதலில் தென் மாவட்டங்களில் போட்டியிடும் உதயகுமாரனும், புஷ்பராயனும், சேசுராஜனும் தங்களது தொகுதிகளில் வைகுண்டராஜன் பெயரை வாய் விட்டு சொல்ல முடியுமா?

கார்ப்பரேட் கொள்ளையை சட்டபூர்வமாக நடத்த வேண்டும் என்பதற்காகவே ஓட்டுக் கட்சிகள் மற்றும் அதிகார வர்க்கத்தில் ஊழல், லஞ்சம், அரசின் அதிகார வர்க்க தடைகள் முதலியவற்றை ஆம் ஆத்மி எதிர்க்கிறது. எல்லாம் ‘முறைப்படி’ நடந்தால் இவர்களுக்கு பிரச்சினை இல்லை. எனினும் இந்த முரண்பாட்டில் ஜெயா சசி கும்பல் மற்றும் திமுக, துக்ளக் சோ, வைகுண்டராஜன் அனைவரும் தமிழக வளத்தை சுரண்டியும், சாராயம் விற்றும் பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்த செய்திகள் வெளியே வந்திருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை சட்டபூர்வமாகவும், சட்ட விரோதமாகவும் கொள்ளை அடிக்கும் இரு தரப்பு முதலாளிகளையும் ஒழிக்க வேண்டும் என்கிறோம்.

சொந்த வாழ்க்கையில் யோக்கியன் போல வேசம் போட்ட ஒரிஜினல் பார்ப்பான் சோ, அதிமுகவை எதிர்ப்பதாக நாடகம் போடும் திமுக, ஒரு ரூபாயிலேயே இவ்வளவு சொத்துக்களை குவித்துக் கொண்ட ஜெயா சசி கும்பல், மணலிலேயே மாபெரும் கொள்ளையை நடத்தி, ஜெயாவின் சொத்துக்களுக்கும், அரசியலுக்கும் புரவலராக திகழும் வைகுண்டராஜன் முதலியோரை தமிழக மக்கள் உள்ளது உள்ளபடி தெரிந்து கொள்வதற்கு இந்த விவரங்கள் போதுமானது.

பன்னாட்டு சுரண்டலுக்கு நம் நாட்டை பலி கொடுக்கும் இந்த கார்ப்பரேட் மற்றும் ஓட்டுப் பொறுக்கி, அதிகாரவர்க்க கும்பல்கள் உருவாக்கியிருக்கும் மொத்த அரசமைப்பையே தூக்கி எறிவதுதான் நாட்டையும், நம் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான ஒரே வழி.

-பண்பரசு

மேலும் படிக்க

ஆம் ஆத்மியின் செய்தியறிக்கை…