privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகுறி சொல்ல ஜக்கம்மா வந்திருக்கேன், வெளியே வாம்மா !

குறி சொல்ல ஜக்கம்மா வந்திருக்கேன், வெளியே வாம்மா !

-

“மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம் ! உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம் ! கொலைகார மோடி தலைமையிலான பார்ப்பன பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம் !” என்கிற தலைப்பில் புரட்சிகர அமைப்புகள் நடத்திவரும் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சார இயக்கத்தில் ‘பெண்கள் விடுதலை முன்னணி’ பல்வேறு வடிவங்களில் ரயில், பேருந்து, குடியிருப்பு என்று தனது பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.

பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த 12-ம் தேதி மாலை பெண்கள் விடுதலை முன்னணியும், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியும் இணைந்து, மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவிலும், அதைச் சுற்றியுள்ள பல்வேறு தெருக்களிலும் வீடு வீடாகச் சென்று தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

தமிழக மக்களிடம் குறிகேட்பதும், அந்த குறி பலிக்கும் என்று நம்பிக்கை வைப்பதும் ஒரு வகையான மூடநம்பிக்கையாக நிலவி வருகிறது. அந்த மூடநம்பிக்கையை ஒத்தது தான், இந்த போலி ஜனநாயக தேர்தலில் வாக்களிப்பதும். எனவே தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்திற்கு குறி கூறுவதையே பிரதான வடிவமாக எடுத்துக்கொண்டோம். குறி கூறுபவர் போல ஒரு பெண் தோழர் வேடமிட்டுக் கொண்டு ஒவ்வொரு வீட்டிற்கு முன்பும் சென்று, ஜக்கம்மா வந்திருக்கேன் வெளியே வாம்மா என்றழைத்ததும், வீட்டிற்குள்ளிருப்பவர்கள் என்ன இது பகல் நேரத்தில் ஜக்கம்மாவா என்று வாசலில் வந்து நிற்கின்றனர்.

“கேட்டுக்கம்மா, உங்க குடும்பத்துல யாராவது ஒட்டுப்போட்டீங்கன்னா, குடிக்கிற தண்ணியை காசு கொடுத்து தான் வாங்கணும். அதுக்கு மட்டும் மாசம் 1000 ரூபாயை எடுத்து வைக்கணும். பிள்ளைகளை படிக்க வைக்கணும்னா லட்சக்கணக்கில பணத்தைக் கொட்டணும். ஊருக்குள்ள ரேசன் கடை இருந்த இடமே தெரியாம போயிரும். அரசு ஆஸ்பத்திரி இருக்காது. நாட்டுல நடக்கக்கூடாதது எல்லாம் நடக்கும். ஓட்டுப் போடுறது உனக்கு மட்டுமில்ல இந்த ஊருக்கே ஆகாதும்மா. ஜக்கம்மா எச்சரிக்கும்போதே முழிச்சிக்க, ஜெய் ஜக்கம்மா” என்று போலி ஜனநாயகத் தேர்தலை அம்பலப்படுத்தி ஜக்கம்மா குறி கூறி முடித்ததும், கூடி நிற்கும் பெண்கள், “யாருக்கு ஓட்டுப்போட்டாலும் எதுவும் நடக்காதுன்னு தெரியும்மா, ஆனா ஒட்டுப்போட்டா இவ்வளவு பிரச்சினைகள் வரும்னு இப்பதாம்மா தெரியுது” என்று ஆச்சரியப்பட்டு உண்மைகளை ஆமோதித்து ஏற்றனர்.

சில இடங்களில் “ஓட்டுப்போடலைன்னா செத்ததுக்கு சமம்னு சொல்றாங்களேம்மா” என்றனர். உடனே ஜக்கம்மாவும், தோழர்களும் ஓட்டுப்போடுறது தான் தற்கொலைக்கு சமம் என்றும், ஏன் ஓட்டுப்போடக்கூடாது என்றும் விரிவாக விளக்கிக்கூறினர். இவ்வாறு தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மக்களின், நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய உண்மைகளை குறியின் மூலம் கூறிய பிறகு தெருவின் முனையில் பிரச்சாரத்தின் நோக்கத்தை விளக்கி இறுதியாக தோழர்கள் சற்று நேரம் பேசுவார்கள்.

அவ்வாறு பேசும் போது, “இந்த பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை, கழிவறை, பள்ளிக்கூடம், விளையாட்டுத் திடல் என்று அனைத்தும் எப்படி கிடைத்தது?எதுவும் ஓட்டுப்போட்டதால் கிடைக்கவில்லை என்பது உண்மை. மாறாக பகுதி மக்களும் பு.மா.இ.மு, பெ.வி.மு தோழர்களும் போராடியதால் இவற்றை நாம் பெற்றிருக்கிறோம். எனவே ஒட்டுப்போட்டதால் பெற்றதை விட நாம் இழந்தது தான் அதிகம் என்பதை நீங்களே உங்களுடைய சொந்த அனுபவத்தின் மூலம் அறிந்திருப்பீர்கள்.

குடிக்கிற தண்ணீரைக்கூட பல போராட்டங்களுக்கு பிறகு தான் நம்மால் பெற முடிந்தது. எனவே ஓட்டுப்போட்டால் எதையும் பெற முடியாது. மாறாக, போராடினால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்பதற்கு நாமே நல்ல உதாரணமாக இருக்கிறோம். எனவே இந்த அதிகாரமற்ற போலி ஜனநாயகத் தேர்தலில் வாக்களித்து பெற்ற உரிமைகளையும் பறிகொடுக்கப் போகிறீர்களா, அல்லது புறக்கணிக்கப்போகிறீர்களா? 100, 200 என்று வாங்கிக்கொண்டு மொத்த நாட்டையும் கொள்ளையடிக்க அணுமதிக்கப்போகிறீர்களா, அல்லது தேர்தலை புறக்கணித்து நாட்டைக்காப்பாற்றப் போகிறீர்களா?” என்று விளக்கிப்பேசியதும் கூடியிருந்த மக்கள் குறிப்பாக பெண்கள், “இதுவரை போட்டுட்டோம்பா, இந்த முறை கண்டிப்பா போடமாட்டோம்” என்றனர்.

மக்களிடம் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை இவ்வாறு புதிய வடிவத்தில் எடுத்துச் சென்றது நல்ல வரவேற்பை பெற்றது, கவனத்தையும் ஈர்த்தது. இந்த தேர்தல் முறையின் மீது மக்களுக்கு துளியும் நம்பிக்கையோ, மதிப்பு மரியாதையோ இல்லை என்பது நாம் அறிந்த ஒன்று தான். எனினும், ஆவி எழுப்புதல் கூட்டங்களை போல இந்த போலி ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை எழுப்பும் வேலைகளை ஆளும் வர்க்கம் முக்கி முக்கி செய்து வருகிறது. ஆனால் மக்களின் வெறுப்பு மேலும் அதிகரித்திருக்கிறது என்பதை தான் இந்த பிரச்சார அனுபவம் உணர்த்துகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.