privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்புஜதொமு-வுக்கு எதிராக சிபிஎம் + சர்வகட்சி கூட்டணி !

புஜதொமு-வுக்கு எதிராக சிபிஎம் + சர்வகட்சி கூட்டணி !

-

ஓட்டு போடாதே! புரட்சி செய்! என்று பிரச்சாரம் செய்ததால் ஓட்டுப்பொறுக்கி ’காம்ரேடுகளின்’ கோபத்துக்கு ஆளான புஜதொமு

தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை வீச்சாக கொண்டு செல்வதென்ற திட்டத்தின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில், 15 தேதி தண்டையார்பேட்டை பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்த பிரச்சாரத்தினால் விழிப்படைந்த மக்கள், ஓட்டு பொறுக்கச் சென்ற ‘காம்ரேடுகளை’ கேள்விகளால் துளைத்ததன் விளைவாக 16-ம் தேதி காலையில் பிரச்சாரத்துக்கு சென்ற தோழர்களை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பதற்காக ’புஜதொமு எதிர்ப்பு’ என்ற திடீர் கொள்கையை முன்வைத்து சிபிஎம் குண்டர்கள் தலைமையில் அதிமுக, திமுக, பாஜக பிரதிநிதிகள் உள்ளிட்ட குண்டர் படையைக் கொண்ட ஒரு புதிய கூட்டணி உருவானது.

cpm-cartoon

வழக்கம் போல் பிரச்சாரத்துக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து தோழர்கள் தயாரான போது அங்கு வந்த அந்த திடீர் கூட்டணியின் தலைவர் ”ஓட்டு போடாதே என்று சொல்ல நீ யார்” என்ற ’மாபெரும் விஞ்ஞான பூர்வமான’ கேள்வியை கேட்டார். “ஓட்டு போடு என்று சொல்வதற்கு எப்படி உங்களுக்கு உரிமை உண்டோ, அதைப் போலவே ஓட்டுப் போடாதே என்று சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு” என்று பிரச்சாரத்தின் பொறுப்பாளர், பேசிக்கொண்டிருக்கும் போதே, அதை சிறிதும் கேட்க மறுத்து, வந்திருந்த குண்டர்கள் ஆளாளுக்கு தங்களுக்கு எழுதிக்கொடுத்த கேள்விகளை கேட்டு, புஜதொமு-வை எதிர்ப்பதில் தங்களின் கடமையை ஆற்றியதை சிபிஎம் பிரதிநிதி கவனித்தாரா என்பதை உறுதி செய்து கொண்டிருந்தனர். இரவு குடித்த சாராயத்தின் வாடை வாய் வழியே வெளிவந்து நாறிக்கொண்டிருக்கும் சகிதம் வந்திருந்த குண்டர்கள் எந்த விளக்கத்தையும் கேட்க தயாராக இல்லை என்பதை உணர்ந்த பின்னர் பேசி புரியவைப்பது பயனளிக்காது என்பதால் நாம் அவர்களுக்கு புரியும் பாஷையில் பேச வேண்டியதாயிற்று.

“ஓட்டு போடாதே புரட்சி செய் என்பதை நாங்கள் பிரச்சாரம் செய்து வருகிறோம். இது எங்கள் ஜனநாயக உரிமை, இதை மறுக்க யாருக்கும் அதிகாரமில்லை” என்று கூறியதை அடுத்து,

“ஆயுதப் புரட்சி இங்கு சாத்தியமில்லை என்றும், புரட்சி எப்படி செய்வீர்கள்?, துப்பாக்கியை காட்டுங்கள்” என்று மதியீனமாக கேள்விகளை கேட்டு, ஜெயலலிதா துரத்தியடித்த பின்பு கூட்டணி முறிவுக்கு வியாக்கியானம் அளித்த தா.பா-வையும், ஜி.ரா-வையும், கண் முன்னே நிறுத்தினர் காம்ரேடுகள்.

ஓட்டுப் பொறுக்க சென்று மக்களிடம் செருப்படி வாங்கியதன் விளைவை ஓட்டுப்பொறுக்கிகள் நம்மை கடித்து குதறுமளவுக்கு வெறியோடு இருந்ததன் மூலம் காணமுடிந்தது.

“ஓட்டு போடு என்று நீ மக்களிடம் கேட்கிறாய், ஓட்டு போடாதே என்று நாங்கள் எங்கள் அமைப்பின் கொள்கையை மக்களிடம் பிரச்சாரம் செய்கிறோம், மக்கள் முடிவெடுக்கட்டும், மக்கள் சொல்லட்டும் எது சரி தவறு என்று, எங்கள் பிரச்சாரத்தை தடுக்க உனக்கு உரிமை இல்லை” என்று சொன்னதும், நம்மிடம் பேசிப்பயனில்லை என்பதை உணர்ந்த ஓட்டுப்பொறுக்கிகள் “ஹேய் அவ்ளோதாண்டா உங்களை அடிச்சிடுவோம் “என்று கும்பலிலிருந்து ஒரு சவுண்டு கேட்டது.

ஓட்டு போடாதே என்று சொன்னதுக்காக அடிப்பதென்றால், “அடிடா, மேல கை வைடா பாக்கலாம்” என்று நாம் முன்னேறியவுடனே, “ஹேய், ஹேய் வெட்டிடுவோம், கொன்னுடுவோம்” என்று வடிவேலு பாணியில் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தனர். ஓட்டுப்பொறுக்கிகளை மக்களிடம் அம்பலப்படுத்தும் விதமாக அவர்களை கண்டித்து நாம் முழக்கமிட்டதும், மக்கள் கூடிவிட்டனர். செய்வதறியாது திகைத்த குண்டர் படையினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக வந்த போலீசு நடந்ததை முழுமையாக விசாரிக்காமலேயே தோழர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றது.  “அந்த குண்டர்களிடமிருந்து உங்களை காப்பாற்றவே அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினோம்” என்றது போலீசு.

பிரச்சனைகள் வந்தால் கொலைகள் செய்வது, ஒரு குவாட்டர் சாராயத்துக்கு கை, கால் வெட்டுவது என சகலவித கிரிமினல்தனத்தையும் செய்து வரும் ஓட்டுப்பொறுக்கி அரசியல் தான் இப்பகுதியில் கோலோச்சுகிறது. இதனை உணர்ந்துள்ள இப்பகுதி மக்கள் நம் பிரச்சாரத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு விடாமல் இருக்கவே ஒட்டுப் பொறுக்கிகள் இப்படி ஒரு கூட்டணியை உண்டாக்கியுள்ளனர்.

தேர்தல் அதிகாரி அனுமதி பெறாமல் எதையுமே செய்ய முடியாது என்று தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை முடக்க நினைப்பது இங்கேயும் நடந்தது.  எனவே அனுமதி பெற்று அதே பகுதியில் பிரச்சாரம் செய்து ’காம்ரேடுகள்’ தலைமையிலான கயவாளிகள் கும்பலை அம்பலப்படுத்த திருவள்ளூர் மாவட்டக்குழு தோழர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். ஆனால் தேர்தல் புறக்கணிப்பு எனும் குறைந்த பட்ச ஜனநாயக உரிமை கூட இங்கே இல்லை. போலிக் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு அனைத்து ஓட்டுப் பொறுக்கி கட்சிகளும் தத்தமது பகுதிகளில் இப்படித்தான் ரவுடித்தனமாக நடந்து கொள்கின்றனர். எதிர்க்கட்சி பிரச்சாரத்தையெல்லாம் அனுமதிக்கும் இவர்கள் நமது புறக்கணிப்பு பிரச்சாரத்தை மட்டும் முடக்க நினைப்பதற்கு காரணம் என்ன? முதலுக்கே மோசமாகிவிடும் என்ற பயம்தான். இருக்கட்டும், இந்த முதலையும், முதலுக்கு ஆதரவாக இருக்கும் முதலாளிகளையும் அப்புறப்படுத்துவோம்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மாவட்டம்
தொடர்புக்கு: 9445389536