privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வழக்கறிஞர் ரஜினிகாந்த் : தருமபுரியில் போட்டியிடும் பிழைப்புவாதி

வழக்கறிஞர் ரஜினிகாந்த் : தருமபுரியில் போட்டியிடும் பிழைப்புவாதி

-

நாயோடு படுத்துறங்கினால் உண்ணியோடுதான் எழுந்திருக்க முடியும்!

“பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம், தேர்தல் பாதை திருடர் பாதை, மக்கள் பாதை புரட்சிப் பாதை” என்பது நக்சல்பாரி அமைப்புகளின் முழக்கம்.

வீடிழந்து, வாழ்விழந்து, உரிமையிழந்து, அடக்குமுறையை அன்றாடம் சந்தித்துவரும் உழைக்கும் மக்கள், அரசியல் புரிந்திராத போதிலும், இந்த போலி ஜனநாயகத்தின் யோக்கியதையை தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருப்பதால் ஆங்காங்கே தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர்.

வழக்கறிஞர் ரஜினிகாந்த்
இளவரசன் மரணத்தின் போது தன்னை முன்னிறுத்திக் கொண்ட வழக்கறிஞர் ரஜினிகாந்த் (கோப்புப் படம்)

ஆனால், நேற்றுவரை மார்க்சிய லெனினிய கட்சிகளில் புரட்சி பேசி வந்தவர்கள் இன்று இந்த பன்றிகளின் கூடாரத்திற்கு பேராவலுடன் வேகவேகமாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் ஒருவர்தான் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த்.

இளவரசன்-திவ்யா காதல் விவகாரம் ராமதாசிற்கு வன்னிய சாதிவெறியை கிளப்புவதற்கு பயன்பட்டது போல ரஜினிகாந்திற்கும் தலித் மக்களை பயன்படுத்தி பிழைப்புவாத அரசியலில் ‘முன்னேறுவதற்கு’ வாய்ப்பளித்துள்ளது.

அன்று பல ஜனநாயக இயக்கங்கள் இப்பிரச்சினைக்காக குரல் கொடுத்தன. எனினும் தன்னை மட்டும் முன்னிறுத்தி பிரபலப்படுத்திக் கொண்ட ரஜினிகாந்த், இதையே மூலதனமாகக் கொண்டு இன்று தனது சொந்த செல்வாக்கை பெருக்கிக் கொள்ளவும், பதவி சுகம் அனுபவிக்கவும் கிளம்பியுள்ளார். இந்த தேர்தலில் தோல்வி அடைவது உறுதியென்றாலும், தேர்தலுக்குப் பின் அவர் ஒரு ஓட்டு வங்கியை உருவாக்கிக் கொண்டு அடுத்த தேர்தலில் பிற கட்சிகளுடன் பேரம் பேச முடியும். இன்று எந்தக் கட்சியை எதிர்த்து ஓட்டுக்களை பொறுக்கினாரோ, அதே கட்சிகளுடன் அடுத்த தேர்தலில் கூட்டணி சேர்ந்து தனக்கு ஓட்டுப் போட்ட மக்களை அடகு வைப்பார். இதன் மூலம் சொத்து சுகத்தை பெருக்கிக் கொள்வார்.

திருமாவளவன் எம்.பி ஆக இருந்த போதிலும், இளவரசன் உடலுக்கு அஞ்சலி செலுத்த அவரால் கிருஷ்ணகிரியைத் தாண்டி நத்தம் கிராமத்திற்கு வரமுடியவில்லை. அவரது எம்பி பதவி தலித் மக்களின் கிராமத்திற்கு வந்து போவதற்கு கூட பயன்படவில்லை. அதிகாரமில்லாத டம்மி பீசுகள்தான் எம்.பி, எம்.எல்.ஏ பதவிகள் எல்லாம். என்பதை போலிசு அதிகாரிகளும் கலெக்டரும் அன்று நிரூபித்துக் காட்டினர்.

டம்மி பீசு என்றாலும் காசு பார்க்க முடியுமே!. எல்லாக் கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் அனைவரும் கோடிஸ்வரராகி விட்டார்கள். பதவிக்கு வந்து , தரகு முதலாளிகளோடு கூடிக் குலாவி தனது சொத்து செல்வாக்கை பெருக்கி கொண்டு விட்டார்கள். இதைப் பார்த்துதான் ரஜினிகாந்த் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு வருகிறார்.

இந்த ஆசைதான் புரட்சிகர இயக்கத்தை விட்டு வெளியேறி துரோகியாவதற்கு அவரைத் தூண்டியிருக்கிறது. இன்று தேர்தலில் நிற்பதன் மூலம் தனது பாதையில் இன்னொரு படி முன்னே செல்கிறார்.

இவர் சாதி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்ததும், தேர்தலில் நிற்பதும் இருதரப்பு மக்களிடையே சாதிய முரண்பாடுகள் நீடிக்கவும், தொடரவுமே வழிவகுக்கும். குறிப்பாகச் சொன்னால் இறுதியில் ஆதிக்க சாதி வெறியை கிளப்பும் பாமவிற்கே இது ஆதாயமாக முடியும். அந்த வகையில் இந்த தேர்தலில் ரஜினிகாந்த் நிற்பதால் அன்புமணிக்குத்தான் ஆதாயம் என்று தர்மபுரி தலித் மக்கள் புலம்புகிறார்கள்.

விவசாயிகள் விடுதலை முன்னணி கிளைப் பகுதிகளில் மக்கள் எதிர்ப்பால் ரஜினிகாந்த் உள்ளே நுழைய முடியவில்லை. தருமபுரியில் ஆங்காங்குள்ள தலித் மக்கள் இவரை விரட்டுகிறார்கள். எனினும் புதிதாக பதவியை சுவைக்கப் புறப்பட்டுள்ள ரஜினிகாந்த் அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தலித் மக்களை சென்டிமென்டாக பேசி திறமையாக ஏமாற்றுகிறார்.

ஓட்டுக்கட்சி அரசியல் என்பது சாக்கடை அரசியல். பொய், பித்தலாட்டம், துரோகம், நம்ப வைத்து கழுத்தறுப்பது, உண்டவன் வீட்டிற்கு இரண்டகம் செய்வது, பணத்திற்கு விலை போவது என்பதெல்லாம் இந்த அரசியலில் சகஜம். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமது நடைமுறை மூலம் தலித் மக்களுக்கு ஏற்கெனவே நிரூபித்திருக்கிறார்கள்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியோ பிழைப்புவாதத்தில் ராமதாசுக்கே சவால் விடக்கூடிய கட்சி. மனுவாதி கட்சி என்று பாரதிய ஜனதாவை சாடி விட்டு, 2002 குஜராத் இனப்படுகொலைக்குப் பின்னரும் “துணிந்து” பாஜக வுடன் இணைந்து உத்தர பிரதேசத்தில் ஆட்சியமைத்தவர் மாயாவதி. பிராமணர் சங்க மாநாட்டை நடத்தி பிராமண சமூகம் சுரண்டப்படும் சமூகம் என்று சான்றிதழ் கொடுத்தவர். இப்பேர்ப்பட்ட உலகமகா பிராடு கட்சியைத்தான் தருமபுரி தலித் மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் ரஜினிகாந்த்.

நாகை தொகுதியில் பா.ம.க சார்பாக போட்டியிடும் வடிவேல் ராவணனின் உறவினர்தான் ரஜினிகாந்த் என்றும், வடிவேல் ராவணன் கேட்டுக் கொண்டதன் பேரில்தான் தருமபுரி தொகுதியில் தலித் ஓட்டுக்களை சிதறடித்து பா.ம.கவை வெற்றி பெற செய்வதற்கு பா.ம.கவிடம் பணம் வாங்கிக் கொண்டு ரஜினிகாந்த் தேர்தலில் நிற்கிறார் என்றும், தருமபுரியில் பரவலாக ஒரு கருத்து பரவியிருக்கிறது.

இதை மறுத்து பேசும் ரஜினிகாந்த், “வடிவேல் ராவணன் என் உறவினரே கிடையாது. அவர் பள்ளர் சாதி, நான் பறையர் சாதி. இனி, சாதி சான்றிதழை வைத்துக் கொண்டுதான் ஓட்டுக் கேட்க வேண்டும் போல இருக்கிறது” என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்.

இப்படி ரஜினிகாந்த் பெயருக்கு ‘களங்கம்’ வந்ததும் கலங்கிப் போன சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செங்கொடி. உடனடியாக வேட்பாளர் ரஜினிகாந்தின் சாதி சான்றிதழை நகல் எடுத்துக் கொண்டு , ‘நீதியை’ நிலைநாட்ட நத்தம் கிராமத்திற்கு அவர் ஓடிவந்தார். அங்குள்ள மக்களிடமும், தோழர்களிடமும், “இதோ பாருங்கள் தோழர்களே! ரஜினிகாந்த் பறையர் சாதிதான்!” என சாதி சான்றிதழ் நகலை காட்டி விட்டு, “ஓட்டுப் போடுவதும் போடாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். ஆனால், தோழர் ரஜினிகாந்த் பா.ம.கவிடம் பணம் வாங்கி விட்டதாக சேற்றை வாரி இறைக்காதீர்கள். தேர்தல் 24-ம் தேதியோடு முடிந்து விடும். நாள பின்ன வழக்குக்காக நம்ம தோழர் ரஜினிகாந்திடம் போக வேண்டிவரும்” என்று சற்றே ‘மிரட்டலாக’ எச்சரிக்கை விட்டார்.

பல ஆண்டுகளாக சாதி, மதம் பார்க்கக் கூடாது. வர்க்கமாக ஒன்று சேர வேண்டும் என்று பேசிய செங்கொடி, இன்று சாதி அடையாளத்தை நிரூபிக்க இந்த அளவு தாழ்ந்து பேசியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், இப்படி ஒரு இழிந்த நிலைக்கு இறங்கி அரசியல் நடத்துகிறோமே என்று அவருக்கு வருத்தம் ஏற்பட்டதாக தெரியவில்லை. சாதிச் சான்றிதழைக் காட்டி ரஜினிகாந்தின் நேர்மையை நிரூபித்து விட்டார். மாயாவதி கட்சியின் நேர்மையை எதைக்காட்டி நிரூபிப்பார்.

செங்கொடி புரட்சிகர இயக்கத்தை சேர்ந்தவர் என அறியப்பட்டவர். ஓட்டுச்சீட்டு தேர்தல் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்று பேசிவந்தவர். ஆனால், இன்று ரஜினிகாந்திற்காக ஊர்ஊராக ஓட்டுக் கேட்டு திரிகிறார். மக்களே எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்தாலும் ஓட்டுப் பொறுக்கிகளுக்கு உரிய பாணியில், சூடு சொரணை ஏதுமின்றி ஓட்டுப் பொறுக்கும் பிரச்சாரத்தை தொடர்கின்றார். ரஜினிகாந்த், செங்கொடி மட்டுமல்ல, இவர்களை ஒத்த சிலரும் நேற்றுவரை தேர்தல் பாதை திருடர் பாதை, மக்கள் பாதை புரட்சிப்பாதை, பாராளுமன்றம் பன்றித் தொழுவம் என்று முழங்கியவர்கள், இன்று பன்றி தொழுவத்தை விட கேவலமாகி, மனிதமல குவியலாகி விட்ட அந்த பாராளுமன்றத்திற்கு ரஜினிகாந்தை அனுப்ப படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இன்று எந்த ஓட்டுக் கட்சிக்கும் கொள்கை, கோட்பாடு ஏதுமில்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால், ‘புரட்சி’ பேசிவந்த இவர்களுக்கும் கொள்கை ஏதுமில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டி வருகிறார்கள். பணம், பாதாளம் வரை பாயும் என்பது இதுதான் போலிருக்கிறது!

எத்தனை துரோகங்களையும், துரோகிகளையும் சந்தித்தாலும் உண்மையான கம்யூனிஸ்டுகளைக் கண்டு பழகிய தருமபுரி மக்கள் நிச்சயம் மீண்டு வருவார்கள்.

இவண்

விவசாயிகள் விடுதலை முன்னணி,
தருமபுரி மாவட்டம்