வேலையற்றோர் 90 இலட்சம் – நாக்கு வழிக்கவா தேர்தல் ?

21

தேர்தல் எனும் அபாயம் நெருங்கி வருகிறது இளைஞர்களே உஷார்…!

ன்பார்ந்த இளைஞர்களே,

பகத்சிங்நேற்று வரை நம்மை ஒரு மனுசனாக்கக்கூட மதிக்காத ஓட்டுக்கட்சியினர் இன்று வீடு தேடி வந்து ‘’ பார்த்து செய் தலைவா’’ என்று ஓட்டுப் பொறுக்க படையெடுத்து வருகிறார்கள். எமதருமை இளைஞனே, இவர்கள் வாசிக்கும் பேண்டு வாத்தியத்தில் குழம்பி ஓட்டுப் போட்டால் மாற்றம் வரும் என்று நினைக்காதே. சமூக மாற்றத்திற்காக சற்று மாத்தி யோசித்துப் பார்.

இன்று ஓட்டுக்கேட்டு வரும் ’யோக்கியவான்கள்’ நாட்டில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி என்றைக்காவது கவலைப்பட்டிருக்கிறார்களா? ஆனால், இளைஞர்களைக் கவர வேலைவாய்ப்பு, வளர்ச்சி, முன்னேற்றம் என்று சினிமா பாணியில் பஞ்ச் டயலாக் அடிக்கிறார்கள். இதனால் இளைஞர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப்போகிறது.

உழைக்கும் ஆற்றல் உள்ள இளைஞர்களை உலகிலேயே அதிகம் கொண்ட நாடு இந்தியாதான். மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 54 கோடி பேர் உழைக்கத் தகுதியான இளைஞர்கள். இதில் முறையான வேலையில் இருப்பவர்கள் வெறும் 8% பேர் தான். தமிழகத்திலோ வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருப்போர் எண்ணிக்கை மட்டும் சுமார் 90 லட்சம். பதிவு செய்யாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் இருக்கும். ஆனால், முறையான வேலை கிடைக்கப்பெற்றவர்கள் 18 லட்சம்பேர்தான். இதை கேட்கும் போதே அதிர்ச்சியாக இருக்கிறதில்லையா? இந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கதி என்னாவது?

தமிழகத்தில் 2 1/2 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்பலாம் இல்லையா? வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள், நர்சிங் படித்து முடித்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோர் போராடும் போதெல்லாம் ஆட்சியில் உள்ளவர்கள் செய்த கொடுமைகளை மறந்துவிட முடியுமா? கண் தெரியாத பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தது போலீசு மிருகம். வேலையில்லாக் காலங்களில் கிடைக்கும் அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கச் சென்றவர்களை கருணையே இல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக தாக்க உத்தரவிட்டது தமிழக அரசு. எத்தனை பேர்களின் மண்டையை உடைத்திருப்பார்கள், பொய் வழக்கில் எத்தனைப் பேரை சிறையில் தள்ளியிருப்பார்கள். ஆட்சியில் இருந்தவர்கள் மட்டுமல்ல, கைகட்டி வேடிக்கைப் பார்த்த பிற ஓட்டுக்கட்சியினரும் துரோகிகள்தானே. வாழ வேலை கேட்டவர்களின் வாழ்க்கையைப் பறித்த படுபாவிகள்தான் இன்று வெட்கம் இல்லாமல் மீண்டும் ஓட்டுக்கேட்டு வருகிறார்கள். நாம் ஏன் ஓட்டுப் போட வேண்டும்?

படித்த பட்டதாரி இளைஞர்கள் டீ க்கடைகளில், ஹோட்டல்களில் வேலை கேட்டு அலைகிறார்கள். எம்.ஏ, எம்.சி.ஏ எது படித்தாலும் மார்க்கெட்டிங் வேலைதான். அதுவும் ஒரு மாதம் தாக்குபிடிக்க முடியாது. டாக்டர், எஞ்சினியரிங் படித்தவர்கள் பியூன், வி.ஏ.ஓ, ரயில்வேயில் கலாசி வேலை ஆகியவற்றிற்கு அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்காக லட்சக்கணக்கில் விண்ணப்பிக்கிறார்கள். பொறியியல் கல்லூரிகளுக்கே சென்று ஆள் எடுத்த பன்னாட்டு நிறுவனங்கள் வேலைகாலி இல்லை என்று 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வெயிட்டிங்கில் வைத்திருக்கின்றன. அமெரிக்க கனவில் மிதந்தவர்களுக்கு அங்கேயும் கதவு அடைக்கப்பட்டுவிட்டது. மலேசியா, சிங்கப்பூரில் இந்திய இளைஞர்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள்.

படித்த இளைஞர்களுக்கே இதுதான் நிலை என்றால், படிக்காதவர்களின் நிலையை சொல்ல வேண்டுமா என்ன? கடுமையான உழைப்பைச் செலுத்தும் சுமை தூக்குவது, கம்பி கட்டுவது, கொத்தனார், சித்தாள், பெரியாள், பெயிண்டர் வேலைக்கும் போட்டி, தன்மானம் பார்க்காமல் கார்துடைக்கச் சென்றாலும் போட்டி. வேலையில்லை. இப்படி கோரத்தாண்டவமாடும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு யார் காரணம்? இந்த ஓட்டுப் பொறுக்கிகளும், அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டு புகுத்திய தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் நாசகாரக் கொள்கைகளும்தானே.

விவசாயத்தையும், சிறுதொழிலையும், பொதுத்துறை நிறுவனங்களையும் ஊக்குவித்து வளர்ப்பதன் மூலம் தான் அதிகப்படியான இளைஞர்களுக்கு வேலைகொடுக்க முடியும். வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஒழிக்க முடியும். ஆனால் இவற்றையெல்லாம் அழித்து வருகிறார்கள். மேலும், தினம் ஒருவனைக் கூட்டி வந்து பெண்ணை கையைப் பிடித்துக்கொடுக்கும் மாமா வேலைசெய்யும் புரோக்கரைப் போல, ஓட்டுக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் போது போட்டி போட்டுக்கொண்டு பன்னாட்டுக் கம்பெனிகளை கூட்டி வந்தார்கள். அவர்களுக்காக திட்டம் தீட்டி, விவசாய நிலத்தை பறிமுதல் செய்து, நிலம், கரண்ட், தண்ணீ, சாலை என அடிப்படை வசதிகளை செய்து, சலுகைகளை வாரிக்கொடுத்து கார்ப்பரேட் முதலாளிகளை குளிப்பாட்டும், ஒவ்வொரு முறையும் நமக்கு இவர்கள் சொன்னது என்ன? இளைஞர்களுக்கு லட்சக்கணக்கில் நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு. நாட்டிற்கு வளர்ச்சி, முன்னேற்றம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? நமக்கு போட்டது அனைத்தும் பட்ட நாமம்.

அப்படி கூட்டி வந்த நோக்கியாவின் யோக்கியதை பாருங்கள்? லட்சக்கணக்க்கானோருக்கு வேலை, கை நிறைய சம்பளம் என்றார்கள். ஆனால், சில ஆயிரம் இளைஞர்களைத்தான் வேலைக்கு எடுத்தார்கள். சம்பளமோ வெறும் ரூ 5,000 ஆயிரம்தான். 20 வயதில் வேலைக்கு சென்ற இளைஞர்கள், இளம் பெண்கள் பலரை மூன்றே ஆண்டுகளில் கசக்கிப் பிழிந்து வெளியில் தள்ளினார்கள். இருப்பவர்களை காண்ட்ராக்ட் வேலை என்ற பெயரில் கொத்தடிமைப் போல் நடத்துகிறார்கள். குறைந்த ஆட்களை வைத்து டார்கெட்டை முடிப்பது என்ற அவர்கள் லட்சியத்திற்காக சென்சார் எந்திரத்தை ஆஃப் பண்ணி வைத்தார்கள். கல்யாணம், குடும்பம், எதிர்கால வாழ்க்கை என பல லட்சியங்களோடு வேலைக்குச் சென்ற இளம்பெண் அம்பிகாவின் கழுத்தை சென்சார் மிஷின் அறுக்க பலி கொடுத்தார்கள். இது எவ்வளவு பெரிய கொடூரம்.

இறுதியில் கம்பெனிக்கு நட்டம் என்று கூறி மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனமோ ஒரே நாளில் பத்தாயிரம் பேரின் வேலையைப் பறித்து வீட்டிற்கு அனுப்பிவிட்டது. வெறும் ரூ 1,500 கோடியை மூலதனமாக போட்டு இந்நாட்டு வளங்களையும், மனித உழைப்பையும் சூறையாடி ரூ 45 ஆயிரம் கோடியை சுருட்டிய நோக்கியா, இறுதியில் நட்டம் என ஊத்திமூடி பல ஆயிரம் இளைஞர்களை நடுத்தெருவில் நிற்க வைத்திருக்கிறது. இதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு கொடுக்கும் லட்சணம். ஓட்டுப் பொறுக்கிகள் ஊதிப்பெருக்கிய வளர்ச்சியின் உண்மை முகம்.

இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்கிறார்களே, அந்த இளைஞர்களின் எதிர்காலம் பற்றி எப்போதாவது அரசு கவலைப்பட்டிருக்கிறதா? ஒரு பக்கம் வேலையில்லை, வருமானம் இல்லை. மறுபக்கம் செல்போன், லேப்டாப், டேப், துணி வகைகள், டூ வீலர்கள் என இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான நுகர்வுப் பொருட்களை மார்க்கெட்டில் குவித்து, ஓயாது விளம்பரம் செய்து எப்படியாவது வாங்க வேண்டும் என்று தூண்டுகிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். இளைஞர்களின் வேலைக்கு வழி செய்யாத அரசு, முதலாளிகளின் பொருட்களை நம்மிடம் திணிக்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறது. இளைஞர்களை திட்டமிட்டே சீரழிக்க டாஸ்மாக் சாராயத்தையும், சூதாட்டமான கிரிக்கெட்டை 20/20 ஐ.பி.எல் என்று இளைஞர்களுக்கேற்ப அரசே நடத்துகிறது. இந்த வலையில் சிக்கும் இளைஞர்கள் நல்ல வேலை, கவுரவமான வாழ்க்கை என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் அஜித்தின் மங்காத்தா, சிம்புவின் வானம், விஜய் சேதுபதியின் சூதுகவ்வும் போன்ற தமிழ் சினிமாக்கள் காட்டிய வழியில் வாழ சமூக விரோதிகளாக சீரழிகிறார்கள். இதற்கெல்லாம் யார் பொறுப்பு? இந்த அரசுதானே.!

இப்படி அன்றாடம் இளைஞர்கள் அனுபவிக்கும் வாழ்க்கைப் பிரச்சனைக்கு இதுவரை 15 முறையாக நடந்த தேர்தல்கள் தீர்வைத் தேடித்தராதபோது, இந்தத் தேர்தல் மட்டும் என்ன தீர்வைத் தந்துவிடப்போகிறது. இந்தத் தேர்தல் என்பதே அன்றாடம் நம்வாழ்வைப் பறித்துவரும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக, அவர்களால் நடத்தப்படும் சூதாட்டம்தான்.

’ஜெய் ஜக்கம்மா காசு போடாம இந்தக் கோட்டத்தாண்டி போனா ரத்தம் கக்கி செத்துடுவனு மிரட்டும்’ வித்தைக்காரனைப்போல, தேர்தலில் ஓட்டுப் போடலனா ஓட்டுரிமை போயிடும், சலுகைகள் கிடைக்காது, நோட்டாவிலாவது போடனும்னு இளைஞர்கள் மிரட்டப்படுவதாக தெரிகிறது. அப்பாவி மக்கள் வித்தைக்காரனிடம் பணத்தை பறிகொடுப்பதை மூட நம்பிக்கை என்கிறோம். எல்லாம் தெரிந்தபின்னும் நாம் ஓட்டுப் போட நினைத்தால் அதை என்னவென்று சொல்வது, அது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் வேட்டாகிவிடும்.

கார்ப்பரேட் முதலாளிகளிடம் நாட்டையும், நம்மையும் அடகுவைக்கும் ஓட்டுப் பொறுக்கிகளோ, கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக திட்டம்போடும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளோ நம் வாழ்க்கைப் பிரச்சனையை தீர்க்கப்போவதில்லை. நாம் தான் போராடித் தீர்க்க வேண்டும். இளைஞர்களாகிய நாம் மட்டுமல்ல, நம்மைப்போன்றே கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்கான இந்த அரசால் பாதிக்கப்படும் உழைக்கும் மக்களோடு ஒன்றுதிரள்வோம். இந்த போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம். இந்த அரசமைப்பை தகர்த்தெரிவோம். உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசை கட்டியெழுப்புவோம்!

இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு