privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பாஜக கூட்டணியை விரட்டியடிக்கும் இசுலாமிய மக்கள் !

பாஜக கூட்டணியை விரட்டியடிக்கும் இசுலாமிய மக்கள் !

-

நாடு முழுவதும் மோடி – பி.ஜே.பி அலை வீசுவதாக தேசிய ஜனநாயக கூட்டணியினர், கார்ப்பரேட் ஊடகங்களின் மூலம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் இந்த அலை குறித்து இவ்வளவு பில்டப் கொடுக்கும் அறிவாளிகள் அந்த அலையை உள்ளே நுழைய விடாமல் விரட்டி அனுப்பும் செய்திகளை மறைத்தோ இல்லை பத்தோடு ஒன்றாகவோ ஒதுக்குகிறார்கள்.

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தே.மு.தி.க வேட்பாளர் ரவீந்திரன் அரும்பாக்கம் ஆசாத் நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள முற்பட்ட போது இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்துள்ளனர்.

“பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால் தங்களது பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்” என்று ரவீந்திரனுக்கு கருப்பு கொடி காட்டி மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் கேட்டுக் கொண்டதற்கிணங்க ரவீந்திரன், பிரச்சாரம் செய்யாமல் திரும்பிச் சென்றதையடுத்து அங்கு அமைதி திரும்பியது.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மல்லிப்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது அப்பகுதிக்குள் வாக்கு சேகரிக்க கூடாது என்று எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் எதிர்ப்புதெரிவித்தனர்.

இதையடுத்து பாஜக வினர் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் பிரச்சாரம் செய்யாமல் பாஜக வினர் திரும்பிச் சென்றதையடுத்து அங்கு அமைதி திரும்பியது.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக-வினருக்கு எதிர்ப்பு  தெரிவித்து விடுதலை சிறுத்தையினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாலை அணிவித்தே தீருவோம் என பாஜக-வினர் எதிர் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் கூட்டணி கட்சியினருடன் பிரச்சாரத்திற்கு கடையநல்லூர் பகுதிக்கு சென்ற போது ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் திரண்டு தங்கள் பகுதிக்குள் நுழையக்கூடாது என தடுத்துள்ளனர்.

மோடி மற்றும்  தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள், ” ராமர் கோயில் கட்டுவோம் என தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு தங்கள் பகுதிக்குள் எப்படி நுழையலாம்” என  ஆவேமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து  இளைஞர்களை போலீசார் சமாதானப்படுத்திய பின்னர் பா.ஜ. கொடியை அகற்றி விட்டு சதன் திருமலைக்குமார் தங்கள் பகுதிக்குள் வர அனுமதித்துள்ளனர். ஆனால் அதற்கு வேட்பாளரும், தேசிய ஜனநாயக கூட்டணியினரும் சம்மதிக்காமல் பிரச்சாரம் செய்யாமலேயே திரும்பிச் சென்றனர்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக வேட்பாளர் சிவனணைந்த பெருமாள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஏர்வாடியில் தங்கள் தெருவில் ஓட்டு கேட்க வரக்கூடாது என்று இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து துரத்தியடித்துள்ளனர்.

இதனால் முரண்பாட்டை தவிர்க்க காவல் துறையினர் அங்கு பிரசாரம் செய்ய வேண்டாம் என்று பாஜ கூட்டணியினரை திரும்பிச் செல்லுமாறு கூறியுள்ளனர். உடனே பாஜ கூட்டணியினர் மெயின்ரோட்டில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தைக்கு பின்னர் பாஜ கூட்டணியினர் மெயின்ரோட்டில் மட்டும் பிரச்சாரம் செய்து விட்டுதிரும்பிச் சென்றுள்ளனர்.

மேலப்பாளையத்திலும் சிவனணைந்த பெருமாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அப்பகுதி இஸ்லாமிய இளைஞர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடாமலேயே திரும்ப வேண்டியதாகி விட்டது.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது  மதவாத கட்சியுடன் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருப்பதால் மகபூப்பாளையம் பகுதி இஸ்லாமிய மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டிவைத்திருந்தனர்.

இது குறித்த தகவல் வேட்பாளருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதிக்குள் நுழையாமல் வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து முடித்துள்ளார். இதுகுறித்து தமுமுக மாவட்ட தலைவர் சேக் இப்ராகிம் கூறுகையில், ‘‘மதவாத கூட்டணி வைத்துள்ள தேமுதிகவினர் எங்கள் பகுதிக்குள் எப்போது ஓட்டுக் கேட்டுவந்தாலும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

மேலும் இப்பகுதியின் தேமுதிக எம்எல்ஏ தங்கள் பகுதிக்குள் வந்தால் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் மகபூப்பாளையத்தில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருக்கிறது.

_

வேலூரில் அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய தேசிய லீக் கட்சியினர் ‘கருப்புக் கொடி காட்டுவோம்’ என எச்சரிக்கை செய்திருந்தனர். இந்த தகவலையடுத்து, வேலூர் மக்கான் பகுதியில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் முக்தர், வேலூர் மாவட்ட செயலாளரும் வேலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருமான ஷெரீப் பாஷா உள்ளிட்ட 18 பேரை கைது செய்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

சுலாமிய மக்களின் இந்த எதிர்ப்பு பாஜக கூட்டணியை மட்டுமல்ல, ஜெயலலிதாவையும் கலங்க வைத்திருக்கிறது. அதனால்தான் அவர் மயிலிறகாலாவது பாஜகவை விமரிசனம் செய்ய வேண்டியதாகி விட்டது. இது நாடகம் என்றாலும் ஆரம்பத்தில் திமுகவும் மோடியை எதிர்த்து பேசுவதை குறைத்து விட்டு பின்னர் அதிகப்படுத்தியிருக்கிறது. இத்தகைய எதிர்ப்பு இந்துமதவெறியர்கள் செல்வாக்கோடு இருக்கும் வட இந்தியாவில் சாத்தியமில்லை. இங்கே சாத்தியமாகியிருப்பதற்கு இசுலாமிய மக்கள் மட்டும் காரணம் அல்ல. பொது அரசியலில் இந்துமதவெறி இங்கே எதிர்க்கப்பட வேண்டும் என்று திராவிட இயக்கம் மற்றும் பொதுவுடமை இயக்கங்கள் செய்த உழைப்பு இன்னமும் செல்வாக்கு செலுத்தவே செய்கிறது.

அதனால்தான் இங்கே பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இசுலாமிய மக்களை பாகிஸ்தானுக்கு விரட்டுவோம் என்று எந்த காவி ரவுடியும் வடக்கு போல பேச முடியவில்லை.  எனவே இதை இன்னும் வீச்சாக செய்ய வேண்டுமென்றால், இசுலாமிய மக்கள் இத்தகைய மதச்சார்பற்ற, புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளோடு இணைந்து போராட வேண்டும். இல்லையேல் இசுலாமியர்களை மட்டுமல்ல சிறுபான்மை மக்கள் அனைவரையும் இந்துமதவெறியர்கள் தனிமைப்படுத்துவார்கள். அப்படி தனிமைப்படுத்தும் காவிக் கும்பலின் பணிக்கு சில இசுலாமிய அடிப்படை வாத அமைப்புகளும் மறைமுக காரணங்களாக இருக்கின்றன.

ஆனாலும் இதை மீறி இசுலாமிய மக்கள் வர்க்க ரீதியல் பிற ‘மத’ உழைக்கும் மக்களோடு ஒன்றிணைந்து இந்துமதவெறியை ஒழிப்பதற்கு தொடர்ந்து போராடுவார்கள்! என்னதான் மோடி அலை, சுனாமி என்று உசுப்பேத்தினாலும் இங்கே சிறுபான்மை மக்களின் போராட்டத்தை தடுக்க முடியவில்லை, அவர்களை தனிமைப்படுத்தி முடக்க முடியவில்லை. மாறாக இசுலாமிய வேட்பாளர்கள் எங்கேயும் ‘இந்துக்களால்’ தடுக்கப்படவில்லை. காரணம் அந்த ‘இந்துக்கள்’ பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலில் வளர்ந்தவர்களே அன்றி ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களுக்கு போனவர்கள் இல்லை. இதுதாண்டா பெரியார் மண்ணின் மகத்துவம்!

மேலும் படிக்க