privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அரசு பெருச்சாளியிடம் அவதிப்படும் விவசாயிகள்

அரசு பெருச்சாளியிடம் அவதிப்படும் விவசாயிகள்

-

நாட்டின் உயிர் விவசாயம். அந்த உயிரை அரசு வதைப்பதால் அதில் பாடுபடும் விவசாயியின் நிலை பரிதாபத்துக்குரியது. அரும்பாடு பட்டு வெயிலுன்னும் மழையின்னும் பாக்காம வேல செஞ்சு, ஒரு நெல்லு வெளையவைக்க வீட்டுக்கும் வயலுக்கும் ஒம்பது நடைநடப்பான் விவசாயி. வயல் பொருக்குக்கும் அவன் கால் வெடிப்புக்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது.

நெல் கொள்முதல் நிலையம்நாட்டுக்கே முதுகெலும்பா இருக்குற விவசாயி அவனோட முதுகுல சுமக்குற கஷ்டங்கள் பலபேருக்கு தெரியாது. போன வருச வெள்ளாம நஷ்டத்துல இருந்து மீள முடியாம, இந்த வருச தசுகூலிக்கி (விவசாய செலவு) என்ன செய்றதுன்னு புரியாத நேரத்துல யூரியாவும் பொட்டாசும் கிடுகிடுன்னு வெல ஒசந்து நிக்கும். வீட்ல உள்ள பொம்பளைங்க காதுல மூக்குல கெடக்குறதெல்லாம் அடகு கடைக்கி போயிரும். கால நேரம் தெரியாம மழையும் வெய்யிலும் தேவைக்கி அதிகமா வந்து அவங்க வயித்தெரிச்சல கொட்டிக்கும். கொண்ட கதுரா இருக்குற நேரம் பாத்து ஆத்து தண்ணிய இழுத்து மூடிடுவான் கெவுருமெண்டு. நெறமாச புள்ளத்தாச்சி நல்லபடியா வயித்துப் பிள்ள வெளிய வரணுண்டா சாமின்னு ஐயனாருட்ட வேண்டிக்கறது போல மழ பெஞ்சு கதுரு வெளிய வரனுண்டா சாமின்னு வேண்டிக்கனும். அப்ப இப்ப சாமிகளுக்கு மவுசு குறைஞ்சிருக்கணுமேன்னு தோணுதா? அது வேற கதை.

இத்தன எடஞ்சலுக்கு மத்தியில, சிட்டுக் குருவி போல ஒண்ணு ஒண்ணா பாடுபட்டு சேத்த நெல்ல விக்கிறதுக்கு அரசு ஏற்படுத்துன எடம்தான் அரசு நெல் கொள்முதல் நிலையம்.

கஷ்டமில்லாம லாபகரமான முறையில விற்பனை செய்றதுக்கு விவசாயிகள் நலனுக்காக உருவாக்கப்பட்டதுதான் அரசு நெல் கொள்முதல் நிலையம். ஆனால் அது விவசாயிகள் நலனுக்காக செயல் படுதான்னு பார்த்தா இல்ல. விவசாயிகளுக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தி அரசு நடத்தும் சூதாட்ட வசூல்தான் நெல் கொள்முதல் நிலையம் என்று ஒரு விவசாய பகுதியைச் சேர்ந்த நெல் கொள்முதல்ல் நிலைய ஊழியர் ஒருவரிடம் பேசும் போது ஒப்புக்கொண்டார். அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு ஒளிவு மறைவு இல்லாம பதில் சொன்னார்.

“அரசு நேரடி கொள்முதல் நிலையம் வருசம் முழுவதும் செயல்படுதுங்களா? இல்ல சீசனுக்கு மட்டும் தொறப்பாங்களா?”

“சீசனுக்கு மட்டும் தாங்க தொறந்துருக்கும். நெல்லு அறுப்பு சீசன்ல தொறப்பாங்க. அறுவடையெல்லாம் முடிஞ்சதும் மூடிடுவாங்க. அறுப்பறுக்குற காலத்த பொருத்து சில இடங்கள்ள கொஞ்சம் தாமதமாகூட மூடுவாங்க.”

நெல் கொள்முதல் நிலையம்“உங்களுக்கு வருசம் பூராவும் வேலை இருக்குமா? சீசனுக்கு மட்டுந்தான் வேலை இருக்குமா?”

“எங்களுக்கு சீசனுக்கு மட்டும்தான் வேலை. இத நம்பியெல்லாம் இருக்க முடியாதுங்க. மூடிட்டாங்கன்னா எங்களப்போல ஊழியரும் சரி, மூட்ட தூக்குற லோடுமேனும் சரி வேற பொழப்பு தேடிக்க வேண்டியதுதான். வானம் பாத்து, மழை பெஞ்சு, ஆத்துல தண்ணி வந்தா விவசாயம் செழிப்பா இருக்கும். அதுபோலதான் அரசாங்கத்துலேருந்து நெல்லுப் புடிக்க சொல்லி ஆர்டர் வந்தா எங்களப் போல ஊழியரோட வாழ்க்கையும் செழிப்பாருக்கும். கையில நாலு காசு பாக்கலாம் பாருங்க”

“மாச சம்பளம் எவ்ளோ வாங்குவிங்க?”

“எங்களப் போல ஊழியருக்கு 3550 ரூபாதான் சம்பளம். வேலை இல்லாத நாட்கள்ல அதுவும் கெடையாது. வயல்ல உள்ள எலியெல்லாம் கதுரு வந்தோன அதோட தேவைக்கி நெல்ல வளையில கொண்ட சேமிச்சு வச்சுக்கும். அதுபோல தான் நாங்களும் வேல இருக்கும்போதே சம்பாரிச்சு வச்சுக்க வேண்டியதுதான்.”

“உங்களுக்கே இவ்வளவு குறைவான சம்பளம்னா மூட்டை தூக்குற தொழிலாளிக்கு என்ன சம்பளம்?”

“ஒரு மூட்டை நெல்ல விவசாயிகிட்ட எடை போட்டு வாங்கி, மூட்டைய தைச்சு, லாரில ஏத்துறதுக்கு மூட்டைக்கி ஒரு ரூபா தான் அரசாங்கம் தருது. நாளு பூரா மூட்டை தூக்குனாலும் நூறு ரூபா சம்பாதிக்க முடியாது. ஒரு ரூவாயிக்கி யாருங்க வருவா மூட்டை தூக்க.”

“சுமைதூக்கும் தொழிலாளர்களுக்குன்னு சங்கம் இருக்குல்ல. அதுல அவங்க குறையை சொல்ல வேண்டியதுதானே?”

நெல் கொள்முதல் நிலையம்“என்னாது சங்கமா? ‘உழுகுறபோது ஊருக்குப் போயிட்டு அறுக்குறபோது அரிவாளோடு வருவா’ன்னு ஒரு பழமொழி சொல்வாங்க. பிரச்சனைக்கி வரமாட்டான் ஆதாயத்துக்கு வருவானுவோ. தொழிலாளி பிரச்சனைக்காக போராட்டம் நடத்துறோம், மீட்டிங் போட்றோம், காசு குடுன்னு சங்கத்துக்காரனே வந்து நிக்கிறான். அவங்க வாங்குற சம்பளத்துல எப்புடிய்யா காசு குடுக்க முடியும்னா, ஈரப்பதம் இருக்குன்னு சொல்லி இன்னைக்கி வர்ற நெல்லுல எங்களுக்கு மூட்டைக்கி ஒரு கிலோ கூடுதலா நெல்ல புடின்னு வாங்கிட்டு போறான். இவங்களா தொழிலாளிக்காக குரல் கொடுப்பானுவோ, ஏதோ மூட்டை தூக்கும் போது கை, கால் ஒடிஞ்சா ஏதாவது வைத்திய செலவுக்கு நஷ்ட ஈடு வாங்க சங்க உறுப்பினரா இருக்கணுமேன்னு தான் சங்கத்துல இருக்காங்க.”

“இவனுங்க மட்டும் கிடையாது எந்த கட்சிக்காரன் கூட்டம் போட்டாலும் இங்க ஒரு கைய நீட்டாம இருக்க மாட்டாய்ங்க. கோயில் திருவிழான்னா பாட்டுக் கச்சேரி, கூத்துன்னு ஒரு நாள் செலவு நெல் கொள்முதல் நிலையத்தோடது. அதுக்கு ஒரு கிலோ நெல்லு சேத்துப் புடிக்க சொல்றானுவோ ஊர் பெரிய மனுசனுங்க. என்னையா இது ஏதோ பொது சொத்துப் போல, ஆன்னா ஊன்னா எதுக்கெடுத்தாலும் இங்க வந்து பணம் கேக்கறீங்க. வெவசாயி தலையில கை வைக்கறது பாவம்ங்கன்னு சொன்னா, ஏன் நீ வாங்கல அப்புடின்னு கேப்பாங்க. கடத் தோங்காய வழி புள்ளையாருக்கு ஒடைக்கிற கணக்கா அவனவனும் வந்து வாங்கிட்டு போறாய்ங்க. என்னத்த சொல்ல!”

“கேக்றேன்னு தப்பா எடுத்துக்காதிங்க விவசாயிங்க கிட்ட மூட்டைக்கி இவ்வளவுன்னு கமிஷன் புடிக்கிறீங்கன்னு சொல்றாங்களே?”     ( ரகசியமான குரலில் கேட்டதற்கு அவர் சத்தமாக பதில் சொன்னார்)

“இத ஏங்க குசுகுசுன்னு கேட்டுகிட்டு, சத்தமாதான் கேளுங்க. கமிஷன் புடிக்குறது அதிகாரிங்கள்லேருந்து அரசியல்வாதி வரைக்கும் யாருக்குதான் தெரியாது. திடீர்னு ஒரு நாள் மேலதிகாரி என்கொயரிக்கு வருவாரு. அப்பன்னு பாத்து நாலு மூட்டையில கருக்கா (அரிசி இல்லாத பதர் நெல்) கலந்துருக்கும், நெல்லுல பச்சை பதம் கூட இருக்கும். ரெக்கவரிங்கற பேருல லம்பா 5000 ரூபா, கட்டணும். அவருக்கு கைக்கி கீழ மூவாயிரம் நாலாயிரம்னு தரணும். 3500 ரூபா சம்பளம் வாங்கற நான் 5000 ரூபா கப்பம் கட்ட முடியுமா, யோசிங்க பாப்போம்.”

நெல் கொள்முதல் நிலையம்“நீங்களே கமிஷன் புடிக்கறத ஒத்துக்கிட்டதால கேக்கறேன். மூட்டைக்கி எவ்வளவு பணம் புடிக்கிறிங்க, யாருக்கெல்லாம் பணம் கொடுக்குறீங்க?”

“ஒரு மூட்டைக்கி 20-லேர்ந்து 25 ரூபா வரைக்கும் புடிக்கிறோம். லோடு மேனுக்கு மூட்டைக்கி 5 ரூபா தரணும். இது மொத்தமா சேர்ந்ததற்கு பிறகு அவங்க பிரிச்சு எடுத்துக்குவாங்க. நெல் வாங்க எங்களுக்கு பணம் பட்டுவாடா செய்ற மேலதிகாரிக்கு 1 லட்சத்துக்கு 200 ரூபா வீதம் கொடுக்கணும். அந்த பணத்த தாமதிக்காம கொடுத்தனுப்புற அவருக்கும் மேல உள்ள மேலதிகாரிக்கு ஒரு தடவைக்கி 1000 ரூபா கொடுக்கணும். நெல் தரத்தோடதான் வாங்குறேனான்னு பாக்க வரும் பறக்கும் படை அதிகாரிகளுக்கு 2000, 3000 கொடுக்கணும். லாரி காண்டிராக்டருக்கு 500, 1000 கொடுக்கணும். லாரி டிரைவருக்கு ஒரு லோடுக்கு 500 ரூபா கொடுக்கணும். மீதி இருக்கறதுக்கு தக்கன உதவியாளருக்கும், வாட்ச்மேனுக்கும் கொஞ்சம் கொடுத்துட்டு மீதிய நான் எடுத்துக்குவேன்”னு ஒழிவு மறைவு இல்லாம கணக்க கச்சிதமா ஒப்படைச்சாரு.

“ஊழியர்களுக்கு, அதிகாரிகளுக்கு பணம் தாறீங்க சரி. லாரி காண்டிராக்டர், லாரி டிரைவர் இவங்களுக்கு எந்த கணக்குல பணம் கொடுக்குறீங்க?”

“கொள்முதல் நிலையத்துல எடுக்குற நெல்ல சேமிப்பு கெடங்குக்கு அனுப்ப கெவ்ர்மெண்டு லாரி உரிமையாளர்ட்ட ஒப்பந்தம் போட்ருப்பாங்க. நெல்லு ஏத்திக்கிட்டு போறதுக்கு நாங்க பணம் கொடுக்க வேண்டியது இல்ல. ஆனா நாங்க சொன்ன நேரத்துல லாரி வரணும்னா காண்டிராக்டர கவனிக்கனும். இல்லன்னா ஒரு வாரம், பத்து நாளு இழுத்தடிப்பாரு. அதுக்குள்ள காச்சல் பதம்(காய்ந்து போன) அதிகமாயி ஒரு மூட்ட நெல்லுக்கு 1 கிலோ, 2 கிலோ கொறஞ்சு போயிரும். நெல்ல எறக்குற எடத்துல சரியான எடை இல்லன்னா அதுக்கு ரெக்கவரியும் நாங்கதான் கட்டணும். ரெக்கவரி கட்றதவிட காண்டிராக்டருக்கு கொடுக்கறது கொஞ்சம்தான்.

லாரி ட்ரைவருக்கு காசு கொடுக்கலன்னா நெல்லு எறக்க வேண்டிய எடத்துல ஒரு ஓரமா லாரிய நிறுத்திட்டு கண்ணுக்கு தெரியாம எங்கெனயாவது போய் படுத்துடுவான். பின்னாடி வர்ற லாரியெல்லாம் முன்னாடி போயி நெல்ல எறக்கிகிட்டே இருக்கும். அவன் முன்னாடி லாரி நிக்கிது முன்னாடி லாரி நிக்கிதுன்னு சொல்லிகிட்டே இருப்பான். அவனோட பங்குக்கு மூட்டைக்கி ஒரு கிலோ கொறைய ஆரம்பிச்சுரும். அதுக்கும் சேத்து நாங்கதான் தெண்டம் அழுவனும்.”

“ஒரு மரக்கா நெல்லு கூடுதலா விளையாதான்னு பாடுபடுறான் விவசாயி. அவங்க வயித்துல அடிக்கிறாப்போல இப்படி பண்றீங்களே, இது சரியா?”

“இந்த வேலையில இருக்குற எல்லாருமே விவசாயிதாங்க. விவசாயத்துல உள்ள கஷ்ட நஷ்டம் என்னண்ணு தெரியும். இந்த கேள்விய எங்களப் பாத்து கேக்கக் கூடாது. நாட்டையே தூக்கி சொமக்குற விவசாய பொருளுக்கு விலையில்லாம, விவசாயி உழைப்புக்கு மரியாதையில்லாம ஒடுக்கி வச்சுருக்க அரசையும் அரசாங்த்தையும் கேக்கணும். இங்க நடக்குற எல்லா திருட்டுத் தனத்துக்கும் விவசாயிங்க தலையில கை வைக்கிறது. நாங்க வேணுன்னு செய்றதில்ல, அவங்க மறைமுகமா செய்யச் சொல்றது.”

“நீங்க ஒரு விவசாயியா இருந்துகிட்டு செய்ற தப்ப நியாயப் படுத்தி பேசுறீங்கலே சரியா?”

“நியாயப்படுத்தலைங்க, தப்பு செய்யாம இந்த வேலை செய்ய முடியாதுன்னுதான் சொல்றேன்.”

“இந்த தப்புல உள்ள நியாயத்த கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?”

“ஈரப்பதம் 17 முதல் 20 % சதவீதம், காச்சல் 20% மேல எவ்வளவு வேணுன்னாலும் இருக்கலாம். நெல்லுல பச்ச இருக்க கூடாது. கருக்கா (பதரு) இருக்க கூடாதுன்னு நெல்லு தூத்துற மிஷின் வச்சு தூத்தி எடுக்கனுன்னு வரம்பு வச்சுதான் மேலிடத்துல நெல்லு எடுக்க சொல்றாங்க. அப்படியே நூறு சதவீதம் கடைபிடிக்க முடியாதுங்க.

காலத்துல ஆத்துல தண்ணி வந்து மொறையா நடவு நடறதே பெரிய விசயம். எப்படியோ பாடுபட்டு நடவு நட்டாலும், நெல்லு பூவும் பாலுமா இருக்கையில பாத்து மழைப் பேஞ்சு கைக்கெட்டுனது வாய்க்கெட்டாத நெலையா போயிரும். எல்லாரும் ஒரே நாளையில நடவு நட்றதும் இல்ல, அறுப்பு அறுக்குறதும் இல்ல. முன்ன பின்ன நடவு செய்றதால நாலு வயல் காஞ்சுருக்கும், நாலு வயல் கொஞ்சம் பச்சையா இருக்கும். அதிக நெலம் உள்ளவங்க அறுக்கும் போதே கொஞ்சமா நெலம் உள்ளவங்களும் பச்சையா இருந்தாலும் அறுத்துறனும். இல்லன்னா கொஞ்ச நெலத்துக்கு மிசின் வராது. நாத்து விட்றதுல ஆரம்பிச்சு அறுத்த நெல்லு வீட்டுக்கு கொண்டு வர்ர வரைக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சன இருக்கு.

விவசாயிகள்கிட்ட அரசு நெல் கொள்முதல் நிலையம் மூலமா நெல்ல எடுக்குறதுல இருந்து அரசுகிட்ட ஒப்படைக்கிற வரைக்கும் சிந்துறது செதர்றது அத்தனைக்கும் விவசாயிகள் கிட்டயே இழப்பீடு வாங்க மறைமுகமா சொல்லிட்டு கண்டுக்காம இருக்குது அரசு. நாங்க என்ன செய்ய முடியும். விவசாயிகளும் வெளஞ்ச வெள்ளாமையில ஒரு மூட்டை கருக்காயா வெளைஞ்சுச்சுன்னு நெனச்சுக்கிட்டு போறாங்க. நூறு சதவீதம் சுத்தமான நெல்லா தரம் பாத்து வாங்கச் சொல்லும் அரசுக்கு இதில் உள்ள கஷ்ட நஷ்டம் எல்லாம் தெரியாம போகாது. தெரிஞ்சாலும் விவசாயி நலன பத்தி அக்கற படாத நெலமதானேங்க காலங்காலமா இருக்கு.”

விவசாயிகிட்ட இப்படி சுரண்டுற அரசையும், அதனோட கொள்முதல் நிலையங்களையும் இந்த தேர்தல் அரசியல்ல, இல்ல நம்ம ஆதிக்க சாதி கிராம கட்டமைப்புல திருத்த முடியுமா? இல்ல நல்ல ஆபிசரைப் போட்டுத்தான் தரத்த கூட்டமுடியுமா? ஒரு இழவும் நடக்காது. விவசாயி சம்பந்தப்பட்ட எல்லா எழவுமே அழுகி நாறிக்கிட்டிருக்கப்போ நாம யோசிக்க வேண்டியது வேற மாதிரி இருக்க வேணாமா? தேர்தல் புறக்கணிப்பு அதனோட துவக்கமா இருக்கணும், உழுபவனுக்கே  நிலம், உழைப்பவனுக்கே அதிகாரமுங்கிறது  முடிவா இருக்கணும்.

– சரசம்மா

[படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை]