privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

அந்தக் கைகள் ….

-

துரை பெரியார் பேருந்து நிலையம், புறப்படத் தயாராய் நகரப் பேருந்தின் இஞ்சின் இரைகிறது. எத்தனை முறை துடைத்தாலும் ஓட்டுநரின் நெற்றியில் வியர்வை கண் திறக்கிறது. பயணத்தின் நெசவு போல உள்ளே குறுக்கும், நெடுக்குமாய் நடத்துனரின் உழைப்பு! அதைவிட சீட்டை கிழித்துக் கொண்டே ஊரின் மணம் அறிந்தவர் போல், “பழங்காநத்தம் இறங்கு” என்று அனிச்சை செயலாய் புறமறியும் அவர் திறன் வியக்க வைக்கிறது.

வெங்காயம்
படம் : இணையத்திலிருந்து

அந்த நிறுத்தத்தில், ஏறிய வேகத்தில் என்னைத் தாண்டி முன் உள்ள இருக்கையின் கைப்பிடியை இறுகப் பற்றுகிறது ஒரு கை. விரல் கணுக்கள் இறுகி கருப்பு மேடாய் தடித்திருக்கின்றன. கைப்பிடியை பிடிக்காத இன்னொரு கையும் கூட உள்ளங்கை செதில்கள் போல இறுகி ரத்தம் கட்டியது போலத்தான் இருந்தன.

அறுபது வயதை நெருங்கும் அந்த பெரியம்மாவிடம் ” என்னம்மா கையெல்லாம் இப்புடியிருக்கு,?” என்று மெல்ல பேச்சு கொடுத்தேன்.

”குந்த வச்சி சோறு போட ஆளுமல்ல, பந்தி வச்சி பரிமாற சனமுமில்ல, உழைச்சாதாம்பா சோறு அதான் இப்புடியிருக்கு” என்றார் சாதாரணமாக.

“என்ன வேல பாக்குறீங்க?”

“ஓட்டல்ல வெங்காயம், காய்கறி நறுக்குற வேல!”

“அதாலயா இப்புடி இருக்கு?”

“என்னய்யா இப்புடி கேக்குற? அடுப்புல வச்ச கொள்ளி எரிஞ்சுதான தீரனும்? சும்மாவா, தினம் ஒரு மூட்டை வெங்காயம் உரிக்கணும், நறுக்கணும், கேட்ட காய்கறிய கேட்ட நேரத்துல அரியணும், சாகப் போற நேரத்துலதான் ஈசலுக்கு இறகு முளைக்கும்ங்குற மாதிரி, இந்த வயசுல எனக்கு இந்த கதி!”

என்னால் நம்பவே முடியவில்லை, ஆச்சரியமாய் திகைத்துப் போய் அந்த பெரியம்மாவைப் பார்த்தபடி, “இவ்வளவு கஷ்டப்பட்டு அப்படி என்ன வருமானம்?” என்றேன்

“அத ஏன் கேக்குற? சோத்துக்கு இளச்சாலும் சொல்லுக்கு இளைக்கக் கூடாதுன்னுதான் இம்புட்டு பாடு! மாசம் ஆயிரத்து ஐநூறு, ரெண்டு வேள சாப்பாடு, ரெண்டு காபி இல்ல டீ. இதுல இந்த பஸ்காரன்தான் பாதி திங்குறான், பஸ்சுக்கு காசு கேட்டா முதலாளி முடிஞ்சா வாங்குறான்! நான் பாலைப் பாக்குறதா? பானையப் பாக்குறதா?”

“வேல நேரம்?”

“தெனம் ராத்திரி போய் ஓட்டல்ல படுத்திருவேன், எம் மாறி ரெண் டாளு வருது! காலைல நாலுமணிக்கு எந்திரிச்சு வெங்காயம் உரிக்கணும், இடைல காய்கறி, பன்னெண்டு மணிக்கெல்லாம் வேலய முடிச்சிட்டு வூட்டுக்கு போயிட்டு திரும்பவும் ராவுக்கு வருவேன்! வூடுன்னு ஒண்ணு இருக்குதே, போய் நல்லது கெட்டது பாக்கணும்! வூட்டுல ஒரு நாலு வெங்காயம் உரிச்சாலே கண்ணு கலங்குதுங்குதுங்க, தோ பாருப்பா ஒரு மூடை வெங்காயம் உரிச்ச கண்ணு இது, பாரு ரத்தம் போயி வெளுத்து கெடக்கு! வெங்காயம் உரிச்சு உரிச்சு கையே செதில் செதிலா போயிடுச்சி போ! அதுனாலென்னா, இருக்குற வரைக்கும் உழைப்போம்” பேச்சில் தன்னிரக்கத்துக்கு பதில் தன்னம்பிக்கை வெளிப்பட்டது.

“கையே போயிடும் போல, வேற வேல பாருங்கம்மா?”

“யார் பெத்த புள்ளயோ நீ பாவம் பாக்குற! விதி! சோத்துப்பான ஒடைஞ்சா, மாத்துப்பான இல்லப்பா! வெவசாயம் இருந்தா நான் ஏன் நாதியத்து அலையுறேன், எல்லாம் போச்சு தம்பி! குதிரு இல்லாத வீட எலி கூட மதிக்காதுன்னு, என் பொழப்பு இப்படியாச்சு, உங்க உறவுல வேகுறதுக்கு, ஒரு கட்டு விறகுல வேகலாம்னு, இதுக்கு வந்துட்டேன்!”

விரக்தியும், மெல்லிய சிரிப்புமாய் அந்த பெரியம்மா நிறுத்தம் வந்தவுடன் இறங்கினார். அந்த கைகளின் பிடி இப்போது என் இதயத்தில் இறங்கியது!

…………………………………………………………

சென்னை அயானாவரம். கோடை உரித்த தோலுக்கு, நிழல் பூசி இதமளிக்கிறது மரம் ஒன்று. அங்கே ஒரு இளநீர் கடை. ஒவ்வொரு காய்களையும் உள்ளங்கையில் சுற்றவிட்டு தலையை சீவி எறிகிறது பெண்ணின் கைகள். சீவிய காயின் வாய் வழி நீர் வராததால், வாங்கியவர் சரி செய்து தர நீட்டினார். அந்தப் பெண்ணோ, அரிவாளை நாடாமல், வலது கை பெருவிரலால் ஒரு அமுக்கு அமுக்க, குடிப்பவரின் இயலாமையை கேலி செய்வது போல் பீறிடுகிறது இளநீர்.

வீட்டில் அவசரத்துக்கு ஒரு தேங்காயை உரிப்பதற்கே, சிலருக்கு மூச்சு முட்டுகிறது. நடுத்தர வயதுள்ள அந்தப் பெண்ணோ அலட்சியமாக பத்து நிமிடத்தில் ஒரு ஏழெட்டு இளநீரை சீவித் தள்ளினார். குடித்த இளநீரை ரெண்டாய் போட்டு நிமிடத்தில் உள்ளிருக்கும் வழுக்கையை வழித்து தரும்போது, அதை வாங்கும் சக்தி கூட இல்லாதது போல் ஒரு ஆண்மகன் தடுமாற, “இன்னா சார்! இஞ்சினியருங்கிற இளநிய புடிக்கத் தெம்பில்ல” என்று பழகிய உரிமையுடன் கேலி செய்ய, “இதெல்லாம் படிச்சிட்டா வந்தோம்!” என்று மேலும் வழுக்கையானது அவர் பதில்.

இளநீர்க் கடை
படம் : இணையத்திலிருந்து

மீதம் காசு தருகையில் கையைப் பார்த்தேன். அதுவும் ஒரு சிவப்பு இளநீராய் மேடுகட்டி இருந்தது. விசாரிக்க,

“இன்னா சார் கையப் பாக்குற, எத்தன இளநி விழுவுற கையி இது! செவந்துதான் போவும்! சீசன்னா நூறு இளநி பொளக்குறேன்! அரிவாள்ல என்னத்த இருக்கு! கை போடுற வேகத்துலதான் வேலயே இருக்கு! வீட்ல காலைல வந்து வண்டில காயோட புள்ளையும், என்னையும் இறக்கி விட்டுட்டு போவும், அது கோயம்பேடாண்டா வேல பாக்குது! சாங்காலம் ஆறாகும்! போய் சோத்துல கைய வச்சேன்னு வச்சுக்கோ, தீ பட்ட மாறி எரியும்! போவப் போவ பழவிடும், வூட்ல உட்காந்து டி.வி. பாத்துக்குனு இருந்தா எப்புடி குடும்பம் பண்றது? தோ, பச்ச புள்ளயோட ரோட்லதான் பகல் முழுக்க!” பேச்சுக்கிடையில் அடுத்த இளநீர் சீவினார்.

அப்பொழுதுதான் பார்த்தேன் கடைக்கு பக்கத்திலேயே மரத்தில் ஏனை கட்டி பிள்ளை தூங்கியது. காலை உதைத்துக் கொண்டு பிள்ளை நெளிய ஆரம்பித்தது. அடுத்து ஏனையை உதைத்தபடி அழ ஆரம்பித்தது. அந்த நேரம் பார்த்து பக்கத்தில் கட்டிட வேலைக்கார சித்தாள் பெண் வர,

“தே செத்த புள்ளய தூக்கு இந்த கை சூட்டோடு தூக்குனா இன்னும் கத்துவான், தூக்கு கை கழுவிட்டு வாரேன்!” என உரிமையோடு பேச,

“தே! என் கையே கலவை போட்டு கரடு தட்டி கெடக்கு அது இன்னும் கத்தவா, சரி என்று! வெறுங்கையால் தூக்கினால் உறுத்தும்” என்று சும்மாடு துண்டை உதறி அதில் லாவகமாய் பிடித்து அந்த குழந்நையை தூக்கி எடுத்தாள், அதன் பளிங்கு விழிகளின் இளநீர் தாயின் கை தேடி வழிந்தது!

உழைப்பின் கைகளில் துயரம் தாண்டி அன்பும், வர்க்க உணர்ச்சியின் பற்றுக்கோடாய் அந்த கைகளின் பரஸ்பர இணைப்பையும் பார்த்து, இப்போது இளநீர் உணர்ச்சியில் உரைத்தது!

– துரை.சண்முகம்