privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்நட்சத்திர விடுதிகளுடன் போட்டி போடும் மருத்துவமனைகள்

நட்சத்திர விடுதிகளுடன் போட்டி போடும் மருத்துவமனைகள்

-

சென்னை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சில நாட்களுக்கு முன்பு விபத்தில் அடிபட்டு அனுமதிக்கப்பட்டிருந்த சோழவரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான முருகன், இன்னொரு விபத்தில் காயமடைந்த 23 வயதான ரவி ஆகிய இருவரும் மே 5-ம் தேதி அதிகாலையில் 4.30 மணி முதல் 8 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருந்ததன் காரணமாக செயற்கை சுவாசம் தடைபட்டு மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.

கார்ப்பரேட் மருத்துவமனைகள்
பணமூட்டைகளை குளிப்பாட்டி செலவழிக்க வைப்பதன் மூலம் இந்திய மருத்துவத் துறையை முன்னேற்றி வருகின்றன கார்ப்பரேட் மருத்துவமனைகள் (படம் : நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா)

உயிர் காக்கும் மருத்துவமனைகளுக்குக் கூட தடையற்ற மின்சாரம் கொடுக்க முடியாத லேடியின் தமிழக அரசுதான், மோடியின் குஜராத் அரசை விட சிறப்பாக செயல்படுகிறது என்று தனது முதுகை தானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறார் அம்மா. தேர்தல் முடிவுகள் வெளியான  பிறகு மோடி அல்லது லேடி அல்லது வேறு ஏதாவது கேடி  நாட்டின் பிரதமர் ஆனால் இந்த அவல நிலை தீர்ந்து விடுமா?

$100 கொண்டு வரும் வெளிநாட்டவரை மனம் குளிர வைத்து கையில் இருக்கும் பணத்தை செலவழிக்க வைப்பது போல $1 லட்சம் டாலர் கொண்டு வரும் அன்னிய முதலீட்டாளர்களுக்கு நிலம், வரிச்சலுகைகள், குறைந்த வட்டியில் கடன் என்று குளிப்பாட்டி குஜராத்தை ‘முன்னேற்றி’யிருக்கிறார் மோடி.

மோடி பாணியில் பணமூட்டைகளை குளிப்பாட்டி செலவழிக்க வைப்பதன் மூலம் இந்திய மருத்துவத் துறையை முன்னேற்றி வருகின்றன கார்ப்பரேட் மருத்துவமனைகள். எப்படி என்று கேட்கிறீர்களா?

இம்மருத்துவமனைகள் பணக்காரர்களுக்கு உடம்பு சுகமில்லாமல் போனால் வீட்டுக்கே சொகுசு வாகனத்தை அனுப்பி அழைத்துக் கொள்வது, குணமானதும் பத்திரமாக அதே போன்ற சொகுசு வாகனத்தில் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவதில் ஆரம்பித்து அடுக்கடுக்காக அதி ஆடம்பர வசதிகளை தயாரித்திருக்கின்றன.

மருத்துவமனைக்குள் கொண்டு போகப்பட்டதும் ஐந்து நட்சத்திர வசதியிலான அறைக்குள்  கிங் சைஸ் (ராஜ அளவு) படுக்கையில் படுத்துக் கொள்ளலாம். விருந்தினரை (நோயாளி) கவனிப்பில் திணறடிக்கும் மருத்துவர் அணி மட்டுமின்றி, கார்ப்பரேட் சி.ஈ.ஓ அல்லது அவர்களுக்கு சேவை செய்யும் அமைச்சர் போன்ற பை நிறைய பணத்தை குவித்துள்ள யாராயிருந்தாலும் தமது அலுவலக பணிகளை மருத்துவமனை படுக்கையில் இருந்து கொண்ட நடத்துவதற்கான வைஃபை இணைய இணைப்பு, எல்.ஈ.டி தொலைக்காட்சி, தொலைபேசி இணைப்புகள் என வசதிகள் அறையில் நிறைந்திருக்கும். சாப்பிடுவதற்கு இன்னதுதான் வேண்டும் என்று கறாராக இருப்பவர்களுக்கு மிகச் சிறந்த உணவுகளை பரிமாறும் நட்சத்திர சமையல் கலைஞர்கள் தயாராக இருப்பார்கள்.

சொகுசு அறை
ஃபோர்டிஸ் சொகுசு நோயாளி அறை

திருப்பதியில் நிலவும் இந்து தர்மம் போல வி.ஐ.பி தரிசனம், சிறப்பு தரிசனம், முன்பதிவு தரிசனம் என்று காசுக்கேற்ற மருத்துவ சேவை கிடைக்கிறது. அப்பல்லோ குழுமங்களின் மருத்துவமனையில் நோயாளிக்கான மொழிபெயர்ப்பாளர், தனி ஊழியர்கள் அனைவரும் தங்கி ‘நோயாளி’க்கு சேவை செய்யும் வகையில் சமையல் அறை இணைக்கப்பட்ட அறைக்கான ஒரு நாள் வாடகை ரூ 30,000 மட்டும்தான்.

தெற்கு டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் லா ஃபெம்மே மருத்துவமனையின் சொகுசு அறைகளுக்கான ஒரு நாள் வாடகை ரூ 37,000-தான். ஓபராய் ஐந்து நட்சத்திர விடுதியில் இதே செலவில் இரண்டு இரவுகள் தங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத் தக்கது. மும்பையின் ஹீராநந்தானி மருத்துவமனையின் அதிசொகுசு அறைக்கான தினசரி வாடகை ரூ 30,000.

பாரதத் தாய்  ஐஸ்வர்யா ராய் தன் தங்கக் குழந்தையை பெற்றெடுக்கப் போன மருத்துவமனையில் ஒரு நாள் அறை வாடகை ரூ 20,000. மருத்துவ செலவு இதை விட பல மடங்கு ஆகும். ஃபோர்டிஸ் லா ஃபெம்மே மருத்துவமனையில் குழந்தைப் பேறுக்கான பேக்கேஜ் ரூ 4 லட்சம் முதல் ரூ 5 லட்சம் வரை ஆகிறது.

ஏழை மக்களுக்கு அரசு மருத்துவமனையில் மின்வெட்டு உத்தரவாதத்துடன் கூடிய உயிரைப் பறிக்கும் சேவை கிடைக்கும் போது அப்போல்லோக்களும், ஃபோர்டிஸ்களும் பல நாடுகளிலிருந்தும் வரும் நோயாளிகளுக்கு கற்பனைக்கெட்டாத வகையில் சேவைகளை வழங்குவதாக பீற்றிக் கொள்கின்றன.

அப்பல்லோ சொகுசு அறை
அப்பல்லோ சொகுசு நோயாளி குடியிருப்பு.

“பல நாடுகளிலிருந்து வரும் நோயாளிகளுக்கு நாங்கள் சேவை செய்ய வேண்டியிருக்கிறது. மொசாம்பிக்கிலிருந்தோ, மாஸ்கோவிலிருந்தோ வருபவருக்கு இட்லி சாம்பாரையா கொடுக்க முடியும். அதனால் அதற்கான காசை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஏற்ற உணவை போடுகிறோம். மங்கோலிய நோயாளிக்கு மங்கோலிய மொழி பெயர்ப்பாளரை ஏற்பாடு செய்கிறோம்” என்கிறார் அப்பல்லோ குழுமத்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர் அனுபம் சிபல்.

“வெளியூர் நோயாளிகளுக்கு ஹோட்டல் முன்பதிவு செய்து கொடுப்பது மட்டுமில்லாமல், அவர்களின் பிரார்த்தனை தேவைகளையும் நிறைவேற்றி வைக்கிறோம்” என்கிறார் சிபல். “ஒரு ரசிய நோயாளி ரசிய பாரம்பரிய தேவாலயத்தில் பிரார்த்தனை செய்ய விரும்பினாலோ யூத ஆலயத்துக்கு போக விரும்பினாலோ அதையும் நிறைவேற்றி வைக்கிறோம்” என்கிறார் அவர். வெளியூர் நோயாளிகளுக்கு மட்டுமின்றி உள்நாட்டு பார்ப்பன இந்துமத பிரார்த்தனை தேவைகளையும் இந்த மருத்துவமனைகள் நிறைவேற்றி வைக்கின்றன. சில மருத்துவமனைகளில் குழந்தை பிறக்கும் போது காயத்ரி மந்திரத்தை ஒலிக்க விடவும் சிறப்பு சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குர்கானில் உள்ள ஃபோர்டிஸ் நினைவு ஆய்வுக் கழகத்தின் மண்டல இயக்குனர் தில்பிரீத் பிரார், “10-15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல மருத்துவமனைக்கு போய் மருத்துவருக்கு காத்திருக்க வேண்டிய காலம் போய் விட்டது. இப்போது நுகர்வோரின் எதிர்பார்ப்புகள் மாறிவிட்டிருக்கின்றன. நோயாளியின் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் அவர்.

அதன்படி, காசு இருக்கும் நுகர்வோருக்கு (நோயாளிகளுக்கு) தடையற்ற மின்சாரம், தடையற்ற ஆக்சிஜன் மட்டுமின்றி, கூட வரும் உறவினர், நண்பர் கூட்டம் பொழுதுபோக்குவதற்கு வசதியாக திரைப்பட அரங்குகள், உணவு வளாகங்கள், நீராவி குளியல் வசதிகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் ஷாப்பிங் வளாகங்கள் கூட வழங்கப்படுகிறது.

“சென்னை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தடையற்ற ஆக்சிஜன் வழங்கும் காலம் என்று வரும்” என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால், அதற்கு பதிலாக ‘அமெரிக்கா அல்லது மத்திய கிழக்குடன் ஒப்பிடும் போது இந்தியாவில் ஆடம்பர மருத்துவத் துறை இப்போதுதான் வளர ஆரம்பித்திருக்கிறது’ என்கிறார்கள் நிபுணர்கள். அந்நாடுகளில் 5 நட்சத்திர மருத்துவமனைகளில் ஒரு தளம் முழுவதும் ஆடம்பர சிகிச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றனவாம்.

1% மேட்டுக் குடியினருக்கு ஐந்து நட்சத்திர மருத்துவ வசதி, 99% உழைக்கும் மக்களுக்கு உயிர் வாழக் கூட உரிமை மறுப்பு, இதுதான் நவீன இந்தியா, மோடியின், மன்மோகன் சிங்கின் வளரும் இந்தியா, ஏன் ஏகாதிபத்தியங்களின் உலகமும் கூட.

–    அப்துல்

மேலும் படிக்க