privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்உண்மை சுடுகிறது ! பா.ஜ.க. அலறுகிறது !!

உண்மை சுடுகிறது ! பா.ஜ.க. அலறுகிறது !!

-

கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு இணைய இதழ் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் பாபர் மசூதியை எப்படிச் சதித்தனமான, சட்டவிரோதமான வழியில் இடித்துத் தள்ளி, அந்த இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கொட்டகை அமைத்து, அதனை ராமர் கோவிலாக்கியது என்பதற்கான ஆதாரங்களைச் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிட்டது. தெகல்கா வார இதழின் நிருபராக இருந்த ஆஷிஷ் கேதான் குஜராத் படுகொலைகளை நடத்திய இந்து மதவெறி பயங்கரவாதிகளை இரகசியமாகப் பேட்டி எடுத்து அம்பலப்படுத்தியதைப் போல, பாபர் மசூதி இடிப்புச் சதியை கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தியிருக்கிறது.

பாபர் மசூதி இடிப்பு
இந்து மதவெறிக் கும்பலால் சதித்தனமாக இடிக்கப்படும் பாபர் மசூதி. அதனைத் திறந்த வாய் மூடாமல் வக்கிரமான குதூகலிப்போடு கண்டு சரிக்கும் உமாபாரதி மற்றும் முரளி மனோகர் ஜோஷி. (கோப்புப் படங்கள்)

1992, டிசம்பர் 6 அன்று இந்து மதவெறிக் கும்பலால் பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டது. “அரசியல் சாசன வழியில் ராமர் கோவிலை அமைக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்” எனச் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட யோக்கியனைப் போல இன்று பேசும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல், அன்று உச்ச நீதிமன்றத்திடம் மசூதியை இடிக்க மாட்டோம் எனப் பொய்யான வாக்குறுதியை அளித்துவிட்டு, சதித்தனமாக அம்மசூதியை இடித்துத் தள்ளியது. இத்துரோகத்திற்கு பா.ஜ.க. தலைமையிலிருந்த உ.பி. அரசு மட்டுமின்றி, காங்கிரசு தலைமையிலிருந்த மைய அரசும் துணை போனது.

குஜராத் படுகொலையை கோத்ரா சம்பவத்தின் எதிர்வினை என்று கூறி நியாயப்படுத்தி வருவதைப் போலவே, பாபர் மசூதி இடிப்பை உணர்ச்சிவசப்பட்ட கரசேவகர்களின் தன்னெழுச்சியான செயலாக, எதிர்பாராமல் நடந்துவிட்ட நிகழ்ச்சியாகக் கூறி, இதன் பின்னுள்ள சதித் திட்டத்தை மூடிமறைத்து வருகிறது, ஆர்.எஸ்.எஸ். குறிப்பாக, பாபர் மசூதி இடிப்புக்குத் தளபதியாகச் செயல்பட்ட எல்.கே. அத்வானி, “இது தனது வாழ்நாளில் நடந்துவிட்ட கறுப்பு தினம்” என முதலைக் கண்ணீர் விட்டு, தனக்கும் இந்த நிகழ்வுக்கும் சம்பந்தமேயில்லாதது போலக் காட்டிக் கொண்டார்.

இந்த மதவெறிக் கும்பல் பாபர் மசூதி இடிப்புக்கு முன்னும் பின்னும் நடத்திய கலவரங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப்பட்டனர். முசுலீம் தீவிரவாதம் நாட்டின் மீது கவிழ்வதற்குப் பாபர் மசூதி இடிப்புதான் முதன்மையான காரணமாக அமைந்தது. இன்று 35 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களுக்கு, குறிப்பாக மோடி குறித்த மாயைக்குள் சிக்கியிருக்கும் இளைஞர்களுக்கு இந்த உண்மைகள் தெரியாது. கோப்ரா போஸ்ட் வெளியிட்டுள்ள வீடியோ இந்த உண்மைகளை உரத்துப் பேசியிருக்கிறது.

சங்கப் பரிவார அமைப்புகளைச் சேர்ந்த சாக்ஷி மகராஜ், ஆச்சார்யா தர்மேந்திரா, உமா பாரதி, வினய் கத்தியார் உள்ளிட்ட 23 பேர் அளித்த சாட்சியங்கள் இக்காணொளியில் தொகுக்கப்பட்டுள்ளன. “கரசேவகர்களுள் 38 பேர் பொறுக்கியெடுக்கப்பட்டு, அவர்களுக்குக் கட்டிடத்தின் மீது ஏறுதல், கோடரி, கடப்பாரை போன்ற ஆயுதங்களைக் கொண்டு கட்டிடங்களை இடித்தல் உள்ளிட்ட பல பயிற்சிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள சர்கேஜ் எனுமிடத்தில் அளிக்கப்பட்டதையும், முன்னாள் இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இப்பயிற்சி நடத்தப்பட்டதையும், பாரம்பரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி மசூதியை இடிக்க முடியா விட்டால், டைனமைட்டைப் பயன்படுத்தி மசூதியைத் தரைமட்டமாக்கும் தனித் திட்டம் வகுக்கப்பட்டிருந்ததையும்” உள்ளிட்டு, இச்சதி தொடர்பான பல உண்மைகளை கோப்ராபோஸ்ட் இணை ஆசிரியர் கே.ஆஷிஷிடம் இவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், “பா.ஜ.க. தலைவர் அத்வானி, அச்சமயத்தில் உ.பி. முதல்வராக இருந்த கல்யாண் சிங் ஆகியோருக்கு மட்டுமின்றி, பிரதமராக இருந்த நரசிம்ம ராவுக்கும் மசூதி இடித்துத் தள்ளப்படும் சதி திட்டம் தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளனர். “ராமஜென்மபூமி நடவடிக்கை” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் காணொளியில் காணப்படும் இந்த ஆதாரங்கள் ஏற்கெனவே அம்பலமானவைகள்தான் என்றபோதும் குற்றவாளிகள் தமது வாயால் ஆர்.எஸ்.எஸ். இன் சதியையும் அதில் தமது பாத்திரத்தையும் கூறியிருப்பதுதான் இந்த வீடியோவை முக்கியமான இன்னொரு ஆதாரமாகக் கருத வைக்கிறது.

கலவரங்கள்
இந்து மதவெறிக் கும்பல் பாபர் மசூதி இடிப்புக்கு முன் நடத்திய பாகல்பூர் கலவரம் (இடது); மசூதி இடிப்புக்குப் பின் நடத்திய மும்பய்க் கலவரத்தின் கோரக் காட்சிகள் (கோப்புப் படங்கள்).

பாபர் மசூதி இடிப்பு பற்றி கோப்ராபோஸ்ட் தொகுத்த வீடியோ வெளிவரப் போகிறது எனத் தெரிந்ததுமே, அதைத் தடை செய்யக் கோரி தேர்தல் கமிசனிடம் புகார் அளித்தது பா.ஜ.க. “இது மதரீதியான பிளவை ஏற்படுத்தி, அமைதியான முறையில் தேர்தல் நடக்கும் சூழலைக் கெடுத்துவிடும்” எனப் பீதியூட்டியது. எனினும், தேர்தல் ஆணையம் இவ்வீடியோ வெளியிடப்படுவதற்குத் தடைவிதிக்க மறுத்து விட்டது. வீடியோ வெளியான பிறேகா, அதில் தமது வானரப் படையினரே வாக்குமூலங்கள் அளித்திருப்பது பற்றிப் பேச மறுத்துவிட்டு, “முசுலீம் வாக்குகளைக் கவருவதற்காகத் தேர்தல் சமயத்தில் வெளியிடுகிறார்கள் ” எனக் குற்றஞ்சுமத்தி, பிரச்சினையைத் திசை திருப்பியது அக்கும்பல்.

சாதாரண குற்றவாளிகள்கூடத் தமக்கு எதிராக முன்வைக்கப்படும் ஆதாரங்களுக்கு முகங்கொடுக்க மாட்டார்கள் எனும்பொழுது, ஆர்.எஸ்.எஸ். கும்பல் தமக்கு எதிராக வெளியாகியுள்ள இந்த ஆதாரத்தைப் புறக்கணித்ததும், பிரச்சினையைத் திசைதிருப்ப முயன்றதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், இந்தப் பிரச்சினையைப் பற்றி யார் பேச வேண்டுமோ அவர்கள் – தம்மை மதச்சார்பற்றவர்களாகவும் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்களாகவும் கூறிக் கொள்ளும் ஓட்டுக்கட்சிகள், நடுநிலையாளர்களாகக் கூறிக் கொள்ளும் தேசியப் பத்திரிகைகள், முதலாளித்துவ அறிவுத்துறையினர் கோப்ராபோஸ்ட் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் பற்றிப் பேசாமல், மௌனச் சாமியார்களாக நடந்து கொண்டதுதான் கவனிக்க வேண்டிய விடயமாகும்.

2ஜி விவகாரத்தில் நீரா ராடியாவுடனான தொலைபேசி உரையாடல்களுள் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து, அதனைத் தொலைக்காட்சி சீரியல் கதை போலத் தினமும் வெளியிட்டு கனிமொழியையும் ராஜாவையும் அம்பலப்படுத்திய தேசிய ஊடகங்கள், பாபர் மசூதி இடிப்பு குறித்து கோப்ராபோஸ்டிடம் இந்து மதவெறிக் கும்பல் அளித்த வாக்குமூலங்களை விளக்கமாக வெளியிடாமல் ஒதுங்கிக் கொண்டது தற்செயலானது அல்ல. ஒரு ஊழல் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களை அம்பலப்படுத்துவதில் இத்துணை ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்த ஊடகங்களுக்கு, பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய, அக்கிரிமினல் குற்றத்தில் தொடர்புடையவர்களை அம்பலப்படுத்துவதில் அக்கறை இல்லாமல் போனதன் மர்மம் விளங்கிக் கொள்ள முடியாததும் அல்ல. 2ஜி ஊழலில் தி.மு.க.வை அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் தேசிய ஊடகங்கள், பாபர் மசூதி இடிப்பு குற்றத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ். கும்பலை விடுவித்துவிடும் நோக்கத்தை மறைத்துக்கொண்டு செயல்படுகின்றன. அதனால்தான் கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்திய உண்மைகளை ஓரங்கட்டிய ஊடகங்கள், “தேர்தல் சமயத்தில் இந்த வீடியோவை வெளியிட வேண்டிய அவசியமென்ன?” என்ற இரண்டாம்பட்சமான கேள்வியை முன்னுக்குக் கொண்டு வந்து, பிரச்சினையைத் திசைதிருப்பும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டன.

பா.ஜ.க. வெளிப்படையான இந்து மதவெறி பாசிஸ்டுகள் என்றால், காங்கிரசு பசுத்தோல் போர்த்திய புலி. பாபர் மசூதி வளாகத்தினுள் திருட்டுத்தனமாக வைக்கப்பட்டிருந்த ராமர் பொம்மையை இந்துக்கள் வழிபடுவதற்குத் திறந்து விட்டது தொடங்கி அம்மசூதியை ஆர்.எஸ்.எஸ். கும்பல் இடித்துத் தள்ளுவதற்குப் பாதுகாப்பு கொடுத்தது வரை இப்பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இளைய பங்காளியாக காங்கிரசு நடந்து கொண்டதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ., கோப்ராபோஸ்ட் காணொளியில் வெளியாகியிருக்கும் ஆதாரங்களைச் சட்டப்படி ஏற்றுக் கொள்ளத்தக்க சாட்சியங்களாகப் பயன்படுத்த முடியாது எனக் கூறி நிராகரித்திருப்பதிலிருந்தே காங்கிரசின் மனவோட்டத்தைப் புரிந்துகொண்டுவிடலாம்.

காங்கிரசு உள்ளிட்டுத் தம்மை மதச்சார்பற்றவர்களாகக் கூறிக்கொண்டு திரியும் ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் முசுலீம் வாக்குகளைப் பொறுக்கித் தின்னும் நோக்கத்தோடு மட்டும்தான் தம்மை மதச்சார்பற்ற கட்சிகளாக முன்னிறுத்திக் கொள்ளுகின்றனவே தவிர, அந்த வரம்பைத் தாண்டி இந்து மதவெறி பாசிசத்தை எதிர்ப்பதில் அவை அக்கறையும் கொண்டதில்லை; நேர்மையாகவும் நடந்து கொண்டதுமில்லை. பாபர் மசூதி இடிப்பு, பாகல்பூர் கலவரம், மும்பய்க் கலவரம், குஜராத் படுகொலை ஆகிய பயங்கரவாத குற்றங்களில் தொடர்புடைய அத்வானி, மோடி உள்ளிட்ட இந்து மதவெறியர்களைத் தண்டிக்கக் கோரி இக்கட்சிகள் ஒரு துரும்பைக்கூடத் தூக்கிப் போட்டது கிடையாது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தீஸ்தா சேதல்வாத், முகுல் சின்ஹா உள்ளிட்ட சில தனிப்பட்ட நபர்கள் விடாப்பிடியாக நடத்திவரும் சட்டரீதியான போராட்டம் காரணமாகத்தான் ஓரிரு குஜராத் படுகொலை வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க.வின் இந்து மதவெறி பயங்கரவாதக் குற்றங்கள் மட்டுமல்ல, மோடியின் தனிப்பட்ட குற்றங்களைக்கூட – மாதுரி என்ற புனைபெயர் கொண்ட இளம்பெண்ணை போலீசை ஏவிவிட்டுக் கண்காணித்தது, தன்னைக் கல்யாணமாகாத பிரம்மச்சாரி போலக் காட்டிக்கொண்டு ஏய்த்து வந்தது – அம்பலப்படுத்தி இந்து மதவெறி பாசிச கும்பலைத் தனிமைப்படுத்துவதற்கு இம்‘மதச்சார்பற்ற’ கட்சிகள் எவ்வித முனைப்பையும் காட்டவில்லை. குஜராத் போலீசு துறையின் தீவிரவாத எதிர்ப்புப் படையைச் சேர்ந்த போலீசார் மாதுரி என்ற இளம்பெண்ணை அவரது படுக்கையறை வரை கண்காணித்த, அவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்ட விவகாரத்தை எடுத்துக் கொண்டால், அதுவொரு மர்மப்படம் போலத் திகிலூட்டக்கூடியதாக, பல கிளைக் கதைகளைக் கொண்டதாக விரிவடைவதோடு, மோடி என்ற தனிப்பட்ட மனிதனின் தீக்குணங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தபோதும், அவ்விவகாரம் ஆங்கிலப் பத்திரிகைகளில் சில நாள் விவாதிக்கப்பட்டதைத் தாண்டி வேறெந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

தான் திருமணமானவன் என்பதை ஒருபுறம் மறைத்துக்கொண்டு, மற்றொருபுறம் மாதுரி என்ற இளம் பெண்ணோடு சந்தேகத்திற்குரிய உறவைப் பேணி வந்திருக்கிறார், மோடி. சொந்த மனைவியை யாரும் தொடர்பு கொண்டுவிடக் கூடாது என்பதற்காக அவர் (யசோதா பென்) கட்டுக்காவலையொத்த நிலையில் வைக்கப்படுகிறார். மாதுரி விவகாரம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக தீவிரவாத எதிர்ப்பு போலீசைக் கொண்டு அவர் கண்காணிக்கப்பட்டார். இந்த வேவு விவகாரத்தை அமுக்கிப் போட்டு, மோடியைப் பரிசுத்தமானவராகக் காட்ட கீழ்த்தரமான கட்டுக் கதையும் அவதூறும் அவிழ்த்து விடப்பட்டது.

நேர்மையானவராக, அப்பழுக்கற்றவராக காட்டப்படும் மோடியின் அந்தரங்க வாழ்வு, மன்னர்களின் அந்தப்புர வாழ்க்கையைப் போல மர்மங்கள் நிறைந்ததாக உள்ளது. அவரது பொதுவாழ்வோ படுகொலைகளால் நிரம்பி வழிகிறது. குஜராத் படுகொலையில் மோடிக்கும் அவரது அரசிற்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தி போலீசு அதிகாரிகள் சஞ்சீவ் பட், ராகுல் சர்மா, சிறீகுமார் மற்றும் ஜாகியா ஜாஃப்ரி ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளனர். முசுலீம் தீவிரவாதிகளை எதிர்த்து நிற்கும் வலிமையான தலைவர் என மோடிக்கு பில்ட்-அப் கொடுப்பதற்காகவே சோராபுதீன், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டு பல போலிமோதல் படுகொலைகள் குஜராத்தில் நடத்தப்பட்டிருப்பதை உச்ச நீதிமன்ற, குஜராத் உயர் நீதிமன்ற விசாரணைகள் அம்பலப்படுத்தியுள்ளன.

பாபர் மசூதி இடிப்புச் சதியில் அத்வானி உள்ளிட்ட தலைவர்களுக்கு உள்ள தொடர்பை லிபரான் கமிசன் அம்பலப்படுத்தியிருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த மும்ப கலவரத்தை பா.ஜ.க. – சிவசேனா இந்து மதவெறிக் கும்பல்தான் தூண்டிவிட்டு நடத்தியது என்பதை சிறீகிருஷ்ணா கமிசன் நிறுவியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் வடஇந்தியாவின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தியிருப்பதை ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த அசீமானந்தாவின் வாக்குமூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்கு எதிராக இத்துணை சாட்சியங்கள், ஆதாரங்கள் இருந்தும், அவர்களைத் தண்டிப்பதற்கும் அரசியல் அரங்கிலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் இவை பயன்படுத்தப்படாமல் கரையான் அரிக்க விடப்பட்டிருப்பதுதான் நமது காலத்தின் கொடுந்துயராகும்.

– திப்பு
________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
________________________________________

  1. இந்திய மக்களை ஏமாற்றி போலி ஜனநாயக பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகளை நீங்கள் இந்த பதிவில் தோலுரித்து காட்டியிருக்குரீர்கள் ,நீதி கிடைக்காத மக்களை அரசே வன்முறை பாதைக்கு திருப்பி விட்டு ,தீவிரவாதிகளாக மாற்றுகிறது ,நாடு எங்கே செல்கிறது ………….

  2. // இந்த மதவெறிக் கும்பல் பாபர் மசூதி இடிப்புக்கு முன்னும் பின்னும் நடத்திய கலவரங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப்பட்டனர்.//

    சரி…… இஸ்லாமிய தீவிரவாதிகளால் தினந்தோறும் கொல்லப்படும் லட்சக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு என்ன நீதியை வினவு நீதிமன்றம் தயாரித்துள்ளது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

    உழைக்கும் மக்களை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் தீவிரவியாதிகள் குண்டு வைப்பது அரசியல் வியாதிகளின் மாட மாளிகையிலோ கூட கோபுரங்களிலோ அல்ல…

    அன்றாட பிழைப்புக்கு வழி தேடி ஏழை மக்கள் காத்திருக்கும் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் தான்…

    உடனே இஸ்லாமியன் குண்டு வைக்கவில்லை… உனக்கு நீயே குண்டு வைத்து விட்டு பழியை அவன்மீது போடுகிறாய் என சொல்ல வேண்டாம். குண்டு வெடித்தவுடன் அதற்கு பொறுப்பேற்கும் இஸ்லாமிய இயக்கங்களை நீங்கள் அறிந்திருக்காமல் இருக்க இயலாது.

  3. இந்தநாடுல பனதுகு இருகுர மதிபு மனுசனுகு இருகுரது இல இயதுகு கரனம் யர் தெரியுமநாம தன் இதுகு கரனம் அரசியல் வதிகல் பனம் குடுததுனம் ஓடு போடுரொம் ஓடு பொடுரதுநம்ம உரிமை அத காசுக விகுரதுநாம கோட பிரந்தவஙல விகிரமரி உங காலுல விலுந்து கெஞி கெகுரென் பனம் வாமஙிடு ஓடு பொடதெங இப்படிகு உஙல் அன்பு தம்டபி முனிஷ்வரன்

Leave a Reply to Muneeswaran.v பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க