privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாதிப்புவின் மோதிரம் மட்டுமா பறிபோகிறது ?

திப்புவின் மோதிரம் மட்டுமா பறிபோகிறது ?

-

காலனியாதிக்க எதிர்ப்பு மரபின் வீரன், திப்பு சுல்தானின் மோதிரம் ஒன்று வரும் மே 22-ம் தேதி லண்டனில் உள்ள கிறிஸ்டி என்ற ஒரு தனியார் ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு வருகிறது. வழக்கமாக காந்தி கண்ணாடி, நேரு சட்டை, கென்னடி கடிதம் போன்றவைகள் ஏலம் வருவது போன்று திப்பு சுல்தானின் மோதிரம் ஏலம் வருவதைப் புறந்தள்ள முடியாது.

திப்புசுல்தானின் மோதிரம்
திப்புசுல்தானின் மோதிரம் (படம் : நன்றி The Hindu)

1799 மே 4-ம் தேதி நான்காவது மைசூர் போரில் திப்பு போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார். அப்போது ஆட்சியளராக இருந்த ஆர்தர் வெல்லெஸ்லி இம்மோதிரத்தைக் கைப்பற்றினார். பிறகு அவர்களது குடும்பத்தில் இருந்து இன்னொரு யுத்த பிரபுவான ஃபிட்ஸ்ராய் சோமர்செட் என்பவரிடம் திருமணப் பரிசாக மோதிரம் கை மாறியது. தற்போது அவர்களது வழித் தோன்றல்கள் இதனை ஏலத்திற்கு கொடுத்துள்ளனர். இந்தியா இந்த ஏலத்தில் பங்கெடுத்து மோதிரத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று சிலர் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.

இந்த குரலோடு நாமும் சேர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டு விடுதலை போரை காட்டிக் கொடுத்த எட்டப்பன், தஞ்சை சரபோஜி, புதுக்கோட்டை தொண்டைமான், ஆற்காடு நவாபு போன்ற அரசர்கள் போலன்றி திப்பு சுல்தான் சாகும் வரை சமரசமின்றி போராடி வீழ்ந்தார். ஒருவேளை வரலாறு வேறு மாதிரி அமைந்து திப்பு வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவில் நிலவுடைமை சமூக அமைப்பு அழிக்கப்பட்டு முதலாளித்துவ சமூக அமைப்பு கூட வந்திருக்கலாம். இன்னும் சாதிவெறி, மதவெறியை எதிர்த்து நாம் மூச்சுக் கொடுக்கும் சிரமத்தை தவிர்த்திருக்கலாம். ஆனால் ‘ஒருவேளை’ என்று வரலாற்றை திருப்பி போட முடியாது.

இந்துமதவெறியர்கள் திப்புவை அவதூறு செய்து வரலாற்றின் பக்கங்களிலிருந்து அவரது பணிகளை அழிக்க இன்றும் முயன்று வருகிறார்கள். அந்த அவதூறுக்கு இந்த மோதிரமே ஒரு பதிலை வைத்திருக்கிறது. 41.2 கிராம் எடையுள்ள அந்த மோதிரத்தில் இந்து கடவுளான ராமனின் பெயர் தேவநாகரி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இசுலாமிய மன்னன் எப்படி “ராம்” பெயர் தாங்கிய மோதிரத்தை அணிந்தான் என்று இந்துமதவெறியர்கள் மட்டுமின்றி, இசுலாமிய மதவாதிகளும் கோபம் அடையலாம்.

வழக்கம் போல ‘பல இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் மதம் மாற்ற அவர் வற்புறுத்தினார், அதற்காக குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும் திப்பு கொன்றார்’ என்ற கதையை இந்துத்துவாவாதிகள் இணையத்தில் கிளப்பி விட ஆரம்பித்து விட்டனர்.

திப்புசுல்தான்
திப்புசுல்தான்

பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய திப்பு உண்மையில் மத நல்லிணக்கவாதியாகவே விளங்கினார். இந்துக்களின் ஏகப்பிரதிநிதியாக சிவாஜியை இன்று முன்னிறுத்துகிறார்கள் சிவசேனா வகை வானரங்கள். ஆனால் அந்த மராத்திய போர் வீரர்களது படையெடுப்பிலிருந்து சிருங்கேரி மடத்தை காப்பாற்றியவர் திப்பு என்பது பலருக்கும் தெரியாத வரலாற்று உண்மை. பல இந்துக் கோவில்களுக்கு நிலத்தையும, பொன்னையும தானமாக வழங்கியுள்ளார் திப்பு. மைசூர் ராஜ்யத்தில் முதல் கிறிஸ்தவ ஆலயத்தை கட்டுவதற்கு நிலத்தை இலவசமாக வழங்கியவரும் திப்புதான். அவரது ஆஸ்தான அமைச்சர் பூர்ணய்யாவும் ஒரு இந்துதான்.

அமெரிக்க சுதந்திரப் போரை அங்கீகரித்ததுடன் அதனை 1776-ல் கொண்டாடிய சில உலக ஆட்சியாளர்களில் ஒருவர் திப்பு. தன்னை “குடிமகன் திப்பு” என்று பிரெஞ்சுப் புரட்சிக்கு பிறகு அழைத்துக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை. மூன்றாவது மைசூர் போரில் திப்பு தோற்ற பிறகு தனது ராஜ்யத்தில் பாதியையும், தனது பிள்ளைகளில் இருவரை பணயக் கைதியாகவும் வெள்ளையர்களிடம் கொடுத்து பின்னர் மீட்டார். நாட்டைக் காப்பாற்ற தனது பிள்ளைகளை பணயம் வைக்கும் நெஞ்சுரம் அவரிடம் இருந்தது. இன்றோ ஆளும் வர்க்கத்தின் வாரிசுகள் அனைத்தும் நாட்டை விற்பதற்கு வாரிசு அரசியலில் இடம் பிடித்திருப்பதை ஒப்பிட்டு பார்க்கலாம்.

முதன்முதலாக போர்ப்படையினருக்கு சம்பளம் தந்த திப்பு, தனது படைகள் கைப்பற்றும் பகுதிகளில் மக்களிடம் கொள்ளையடிக்கக் கூடாது எனவும், தானியங்களை மக்களிடமிருந்து விலை கொடுத்துதான் வாங்க வேண்டும் என்றும் தனது படை வீரர்களுக்கு உத்திரவும் போட்டார். மது விற்பனையை தடை செய்தார். கஞ்சா பயிரிடக் கோரி பிரிட்டிஷார், விவசாயிகளை வலியுறுத்திய போது திப்பு அதனை தடை செய்தார். டாடாவோ அபினை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வணிகம் செய்ய இங்கிலாந்திற்கு உதவினார்.

அடிமை விற்பனையை தடை செய்த திப்பு எந்த அரசு வேலைக்கும் கூலி கொடுக்காமல் மக்களிடம் வேலை வாங்க கூடாது என்று ஆணையிட்டார். “மக்கள் நலனை விட அரசின் கருவூலத்தை பெருக்குவதுதான் முதன்மையானதா?” என்ற கேள்வியையும் எழுப்பினார்.

பாலியல் தொழிலை தடை செய்ததுடன் தேவதாசி முறைக்கு எதிராகவும் ஆணைகளைப் பிறப்பித்தார். பார்ப்பனியம் இழிவுபடுத்திய இத்தகைய பல்வேறு கொடூரமான நடைமுறைகளை திப்பு தடை செய்தது முக்கியமானது. தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்கு மேலாடை அணிய உரிமை வழங்கியதுடன் நில உடைமை தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைக்கவும் வழி செய்திருந்தார் என்பதை எட்கர் தட்ஸன் எனும் அறிஞர் பதிவு செய்திருக்கிறார். எந்த சாதி மதங்களை சேர்ந்தவராயினும் உழுபவருக்குதான் நிலம் சொந்தமாக இருக்க வேண்டும் எனச் சொன்ன திப்பு, ரயத்துவாரி முறையை அறிமுகம் செய்திருந்தார்.

சேலம் மாவட்டம் வேலூர் தாலுகாவில் பிரிட்டிஷாரின் வரிக்கொடுமை தாங்காமல் 4,000 விவசாயிகள் திப்புசுல்தான் ஆடசிபுரிந்த பகுதிக்கு 1792-க்கு பிறகு குடிபெயர்ந்தனராம். இதனை பின்னாட்களில் வந்த தாமஸ் மன்றோ பதிவு செய்கிறார். உள்ளூர் வணிகத்தை ஊக்குவித்த திப்பு மூன்றாவது மைசூர் போரின் தோல்விக்கு பிறகும் வெள்ளையரை தனது பகுதியில் வணிகம் செய்ய அனுமதிக்கவில்லை. இன்றைக்கோ பன்னாட்டு கம்பெனிகளில் வேட்டைக் காடாக இருக்கிறது தேசம்.

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும். மொத்த ராணுவத்தின் கௌரவத்தை குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களை கௌரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் ராணுவத்துக்கு ஆணையிட்டவர் திப்பு. விவசாயிகள் உட்பட அனைவருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என ஆணையிட்டார்.

திப்பு இறந்து விட்டதாக அவரது பிள்ளைகள் சொன்னதை வெல்லெஸ்லி முதலில் நம்பவில்லை. மன்னர் ஒருவர் போர்க்களத்திற்கு போவார் என்பதை அவர்களால் கனவிலும் நம்ப முடியவில்லை. பிறகு திப்புவைத் தேடிப் போகிறார்கள். போர்க்களத்தில் இறந்து கிடக்கிறார் திப்பு. அங்கிருந்து தான் வெல்லெஸ்லி இந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு போகிறான்.

மோதிர ஏலத்தை தடுக்க வேண்டும் என எல்லோரும் யோசிக்கின்றோம். ஆனால் தேசமே ஏலம் விடப்பட்டு மொத்த நாடும் பன்னாட்டு கம்பெனிகளிடம் கைகட்டி நிற்பது தெரிந்தும் தெரியாதது போல நிற்கிறோம். திப்புவுக்கு மரியாதை செய்வதென்பது மோதிரத்தை மீட்பதோடு மட்டுமல்ல தேசத்தை மீட்பதோடும் சேர்ந்திருக்கிறது.

–    முத்து

மேலும் படிக்க