privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காநைஜீரியா போகோ ஹராம்: அமெரிக்க ஆசியுடன் 'ஜிகாத்'!

நைஜீரியா போகோ ஹராம்: அமெரிக்க ஆசியுடன் ‘ஜிகாத்’!

-

டந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முன்னிரவு. நைஜீரிய நாட்டின் வடகிழக்கு பிராந்தியமான போர்னோ மாநிலத்திற்கு உட்பட்ட சிபோக் பகுதியினுள் டொயோட்டா ஜீப்புகளில் ஆயுதம் ஏந்திய ஜிஹாதி தீவிரவாதிகள் நுழைகிறார்கள். சிபோக் ஒரு ஒதுக்குப்புறமான கிராமப் பகுதி. அங்கே இருந்த உறைவிடப் பள்ளி ஒன்றில் இறுதித் தேர்வுகளை எழுத நூற்றுக்கணக்கான மாணவிகள் குழுமியிருக்கிறார்கள். பள்ளிக் கட்டிடத்தை சுற்றி வளைக்கும் ‘ஜிகாதி’கள், அங்கே பரீட்சைக்காக கூடியிருந்த மாணவிகளில் சுமார் 300 பேரை துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு நைஜீரியா – காமரூன் எல்லைப் பகுதியை ஒட்டிய சம்பீசிய வனப் பகுதிக்குள் புகுந்து விடுகிறார்கள்.

கடத்தப்பட்ட நைஜீரிய மாணவியர்
கடத்தப்பட்ட நைஜீரிய மாணவியர்

கடத்தப்பட்ட மாணவிகளில் சுமார் 50 பேர் வரை செல்லும் வழியில் தப்பி விட்டார்கள் என்று செய்திகள் வந்துள்ளன. எனினும், தப்பிய மாணவிகளின் எண்ணிக்கையையோ தீவிரவாதிகள் பிடியிலிருக்கும் மாணவிகளின் எண்ணிக்கையையோ இது வரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சுமார் 267 மாணவிகள் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. கடத்தப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை தொடர்பாக மாறுபட்ட செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வந்துள்ளன. சில செய்திகள் 300 என்றும், வேறு சில செய்திகள் 276 என்றும், சில செய்திகள் 267 என்றும் வெவ்வேறு எண்ணிக்கைகள் சொல்லப்படுகின்றது.

மாணவிகள் கடத்தப்பட்ட அதே நாளில் அருகில் இருந்த  இன்னொரு நகரத்துக்குள் நுழைந்த தீவிரவாதக் குழுவினர் 300-க்கும் மேற்பட்ட அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். மாணவிகள் கடத்தப்பட்ட சில நாட்களுக்குள் ‘ஜிகாதி’ தீவிரவாத குழுவின் சார்பாக காணொளிக் காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேசியிருக்கும் அக்குழுவின் தலைவன் அபூபக்கர் ஷெகா, கடத்தப்பட்ட மாணவிகளை அடிமைகளாக விற்க தனக்கு அல்லா கட்டளை இட்டிருப்பதாகவும், அவ்வாறு விற்பதை இஸ்லாம் அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடத்தப்பட்ட மாணவிகளில் கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவர்களை கட்டாயமாக இசுலாத்திற்கு மதம் மாற்றியிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

சர்வதேச சமூகங்களின் நீலிக் கண்ணீர்

தங்கள் அமைப்பை போகோ ஹராம் என்று அழைத்துக் கொள்ளும் இந்த இயக்கத்தின் பின்னணி குறித்தும் இந்தக் கடத்தல் சம்பவம் குறித்தும் நாம் அறிந்து கொள்ளும் முன் வேறு சில அடிப்படைத் தகவல்களைப் பார்த்து விடுவது நல்லது. அதற்கும் முன், இந்த சம்பவம் சர்வதேச அளவில் எழுப்பியிருக்கும் அதிர்வலைகளின் பரிமாணத்தையும் பார்த்து விடுவோம்.

மாணவிகள் கடத்தப்பட்டு ஒருவாரம் கழித்து நைஜீரியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் ஒபியாகிலி ஆற்றிய உரையில் ”எங்கள் பெண்களைத் திரும்ப கொண்டு வாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதை இப்ராஹிம் அப்துல்லாஹி என்பவர் தனது ட்விட்டர் கணக்கில் தனிச்செய்தியோடைத் தலைப்பாக (ஹேஷ்டேக்) குறிப்பிடுகிறார்(#Bringbackourgirls). அடுத்த சில நாட்களுக்கு இந்த தலைப்பு மில்லியன் முறைகளுக்கும் மேல் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படுகிறது.

மே மாத துவக்கத்தில் மிஷேல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், பிரிட்டன் பிரதமர் ஜேம்ஸ் கேமரூன் போன்ற பிரபலங்கள் இதே தலைப்பில் கீச்சுகள் அனுப்பியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சூடுபிடித்தது. மே 11-ம் தேதி வரை சுமார் 30 லட்சம் பேரால் இந்தச் செய்தியோடைத் தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் நைஜீரிய பெண்களின் நிலைமை குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மேற்கத்திய உலகின் பல்வேறு நகரங்களில் நம்மூர் ‘ஆம் ஆத்மி வகைப்பட்ட’ மெழுகுவர்த்தி ஊர்வலங்களும், கூட்டுப் பிரார்த்தனைகளும் நடக்கத் துவங்கியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் கடத்தப்பட்ட பெண்களை மீட்க எந்த வகையான உதவிகளையும் செய்வதாக உத்திரவாதம் அளித்துள்ளன. நைஜீரியாவுக்கு ’உதவி’ செய்யும் பொருட்டு தனது போர் விமானங்களையும், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளையும் நைஜீரியாவில் இறக்கியிருக்கிறது அமெரிக்கா.

#Bringbackourgirls

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

போகோ ஹராம் : நதிமூலம்

”மேற்கத்திய கல்வி தீங்கானது” என்பதே போகோ ஹராம் என்கிற திருநாமத்தின் பொருள். இந்த அமைப்பின் அதிகாரபூர்வமான பெயர் ‘ஜாமாத்துல் அஹ்லிஸ் சுன்னா லித்தாவதி வல்-ஜிகாத்’ (இறைத் தூதரின் போதனைகளையும் ஜிஹாதையும் முன்னெடுத்துச் செல்லும் கடப்பாடு கொண்டவர்கள்). 1995-ம் ஆண்டு இசுலாமிய இளைஞர்களுக்கான ஷபாப் என்கிற இயக்கம் துவங்கப்படுகிறது. அதன் தலைவராக இருந்த மல்லாம் லாவல் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றதை அடுத்து 2002-ம் ஆண்டு ஷபாப் இயக்கத்தை முகம்மது யூசூப் என்கிற அடிப்படைவாதி கைப்பற்றுகிறார். அதிலிருந்து இந்த அமைப்பு சுன்னி இசுலாத்தின் கடுங்கோட்பாட்டுவாத அடிப்படைகளைக் கொண்ட சலாஃபி (வஹாபி) பிரிவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.

தாலிபான்களைப் போலவே, ‘பெண்கள் படிக்க கூடாது, வெளியிடங்களுக்குச் செல்லக் கூடாது, குரானைத் தவிர்த்து எதையும் கற்க கூடாது’ போன்ற பல ’கூடாதுகளின்’ பட்டியல் ஒன்றை வைத்திருக்கும் போகோ ஹராம், அதை அமுல்படுத்துவதற்குத் தோதாக ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியை நைஜீரியாவில் அமைப்பது ஒன்றே தமது குறிக்கோள் என்று அறிவித்துக் கொண்டது. சில்லறைத் தாக்குதல்களையும், ஆட்கடத்தல்களையும் செய்து வந்த போகோ ஹராமின் மேல் இரண்டாயிரங்களின் இறுதியில் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக 2009-ம் ஆண்டு யூசூப் கொல்லப்படுகிறார்; அதிலிருந்து அமைப்பின் இரண்டாம் இடத்தில் இருந்த அபூபக்கர் ஷெகா தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.

அபூபக்கர்
போகோ ஹராம் தலைவன் அபூபக்கர்

அபூபக்கர் தலைமைக்கு வந்த காலகட்டத்தின் சர்வதேச அரசியல் நிலைமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதற்கு சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பதாக அமெரிக்காவின் வால் வீதியில் துவங்கும் பொருளாதார பெருமந்தம் உலகு தழுவிய அளவுக்கு முதலாளித்துவ கட்டமைப்பு நெருக்கடியாக முற்றி வளர்ந்திருந்தது. அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மண்ணைக் கவ்விக் கொண்டிருந்த சமயம் அது. அதே நேரத்தில் கிழக்கு ஐரோப்பிய, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ’வண்ணப்புரட்சிகள்’ நடப்பதற்கான சமூக பொருளாதார சூழல் ’கனிந்து’ வந்தது.

தனது சூதாட்டப் பொருளாதாரத்தை மீட்க வேண்டுமென்றால் இது வரை, தான் கால் பதித்திராத பிரதேசங்களில் நுழைந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருந்தது. மூன்றாம் உலக நாடுகளின் உள்விவகாரங்கள் வரை தலையிட்ட அமெரிக்கா, அந்நாடுகளின் பொதுத் துறைகளையும் இயற்கை வளங்களையும் பன்னாட்டு தொழிற்கழகங்களுக்குத் திறந்து விட பல்வேறு வகைகளில் நிர்பந்தித்துக் கொண்டிருந்தது. இந்தியாவின் பொருளாதார தர வரிசையை எஸ்&பி குறைத்ததையும் மன்மோகன் சிங்கை கையாலாகாதவர் (under acheiver) என்று டைம் பத்திரிகையில் முகப்புக் கட்டுரை வெளிவந்ததையும் இந்த இடத்தில் நினைவு படுத்திப் பார்த்துக் கொள்ளலாம். இரண்டாயிரங்களின் இறுதியில் அரபு வசந்தத்திற்கான தயாரிப்புகளில் அமெரிக்கா தீவிரமாக இருந்தது.

அதே காலப்பகுதியில் ஆப்பிரிக்க கண்டத்தை முற்று முழுதாக எந்தப் போட்டியுமின்றி கபளீகரம் செய்யும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. போகோ ஹராம் அமெரிக்காவின் கைகளில் இருந்த துருப்புச் சீட்டுகளில் ஒன்று.

முகம்மது யூசூபின் தலைமையில் இருந்த வரை, போகோ ஹராமின் கட்டுப்பாட்டு பிராந்தியம் என்பது ஒரு சில மாவட்டங்களுக்குள் சுருங்கியிருந்தது. அபூபக்கர் ஷெகா தலைமைப் பொறுப்பை ஏற்ற கடந்த ஐந்தாண்டுகளுக்குள் நைஜீரியாவின் சரிபாதி பகுதிகளில் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ள போகோ ஹராமின் வளர்ச்சி திகைப்பூட்டக்கூடியது. போகோ ஹராமின் நிதி வலைப்பின்னலைத் தொடர்ந்து சென்றால் அது இங்கிலாந்தில் உள்ள அல் முண்டாடா என்கிற அறக்கட்டளைக்கும் அமெரிக்காவின் மத்திய கிழக்கு அடியாள் சவூதி அரேபியாவினுள்ளும் அழைத்து செல்கிறது.

போகோ ஹராம்
போகோ ஹராம் தீவிரவாதிகள்

லிபியாவில் முவாம்மர் கடாஃபியை எதிர்த்துப் போராடிய கூட்டணியில் பங்கு பெற்றிருந்த இசுலாமிய மக்ரீபிற்கான அல்-குவைதா (Al-qaeda in Islamic Magreb / Magreb stands for North western African continent) என்கிற அமைப்பு அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏவிடமிருந்து சவூதி வழியாக நேரடியாக ஆயுதங்களைப் பெற்றது. பின்னர் லிபியாவில் தனது அமெரிக்க அடிவருடிக் ’கடமையை’ முடித்துக் கொள்ளும் மேற்படி அமைப்பு, தனது கவனத்தை அல்ஜீரியாவை நோக்கித் திருப்புகிறது.

அமெரிக்கா பிச்சையாக அளித்த ஆயுதங்களுடனும், அமெரிக்கா வகுத்துக் கொடுத்த திட்டத்துடனும் அல்ஜீரியாவில் ஷரியா சட்டத்தை அமுல்படுத்தவும், அமெரிக்க ‘ஜிகாத்’தை வழி நடத்தும் இசுலாமிய மக்ரீபிற்கான அல்-குவைதா அமைப்பு தான் போகோ ஹராமின் ஆயுதப் புரவலர். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அவ்வமைப்பின் தலைவர் அபூ மௌஸப் அப்தல் வாதௌத் என்பவர் நைஜீரியாவில் உள்ள கிருத்துவ சிறுபான்மையினரை எதிர்த்துப் போராட போகோ ஹராம் அமைப்பிற்கு தாம் ஆயுதங்களை வழங்கி வருவதாக வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார். 2011-ம் ஆண்டு வரை போகோ ஹராம் அமைப்பை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க அமெரிக்க அரசுத் துறை மறுத்து வந்தது – போதுமான வளர்ச்சியை போகோ ஹராம் அடைய வழங்கப்பட்ட இடைவெளி அது.

ஏனெனில், ஆப்கானிய முஜாஹின்கள், அல்-குவைதா, பின் லாடன் போலவே போகோ ஹராம் என்பதும் அமெரிக்கா பெற்றெடுத்த கள்ளக் குழந்தை தான். நைஜீரியா, நைஜர், மாலி ஆகிய நாடுகளில் போகோ ஹராம் செயல்பட்டு வருகிறது. இதே போன்ற இசுலாமிய கைக்கூலி அமைப்புகளை வேறு பல ஆப்பிரிக்க நாடுகளிலும் உருவாக்கி விட்டுள்ளது அமெரிக்கா.

சோமாலியா மற்றும் கென்யாவில் அல்-ஷபாப்,
அல்ஜீரியா மற்றும் மாலியில் இசுலாமிய மக்ரீபிற்கான அல்-குவைதா,
எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ கூட்டணி
லிபியாவில் இசுலாமிய போராளிகள் கூட்டணி

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் அல்-குவைதா என்கிற குடை அமைப்பின் பல்வேறு கிளைகள் (Franchise). இசுலாமிய சர்வதேசியம் இயங்கும் முறையும் அமெரிக்காவின் மெக்டொனால்ட் சங்கிலித் தொடர் துரித உணவகம் செயல்படும் முறையும் ஏறக்குறைய ஒன்று தான்.

இசுலாமிய சர்வதேசியமும் மெக்டொனால்டு மயமாதலும்

உலகெங்கும் கிளைகளைப் பரப்பியிருக்கும் மெக்டொனால்டு துரித உணவகத்தின் பல்வேறு தின் பண்டங்கள் அந்தந்த கிளைகளில் தயாரிக்கப்படுபவை அல்ல. அங்கே விற்கப்படும் குப்பை உணவுகளின் கச்சாப் பொருட்களான உறைய வைக்கப்பட்ட கோழி இறைச்சி, ஏற்கனவே வெட்டி உறைய வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு போன்ற சமாச்சாரங்கள் மையப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு அதன் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும். கிளைகளை பொறுப்பேற்று நடத்துபவர்கள் பனிப்பெட்டியில் இருந்து கச்சாப் பொருளை எடுத்து அவ்வப்போதைக்கு பொரித்து அந்தந்த நாட்டின் உள்ளூர் சுவை பாரம்பரியத்திற்கு ஏற்ப மசாலாக்களை தடவி விற்பார்கள்.

போகோ ஹராம் ஆயுதங்கள்
போகோ ஹராம் ஆயுதங்கள்

இன்றைய தேதியில் ‘ஜிகாத்’ மெக்டொனால்டுமயமாகி இருக்கிறது (Mcdonaldization). ஒரு ‘ஜிகாத்’தை துவங்கி நடத்துவதற்கு போதுமான அளவிற்கு சலாபிசம் வஹாபியம் போன்ற சித்தாந்த பயிற்சிகளை சவூதி மதகுருமார்களை வைத்து அமெரிக்காவே அளித்து விடுகிறது. மற்றபடி எந்த நாட்டில் ‘ஜிகாது’ நடக்க உள்ளதோ அந்த நாட்டின் உள்ளூர் விவகாரங்களுக்கு ஏற்ப முழக்கங்களையும் வழங்கி விடுகிறார்கள். ‘ஜிகாது’க்கு பொருத்தமான முழக்கங்களையும் (அது சில வேளைகளில் அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களாக கூட இருக்கிறது) கையில் தயாராக கொடுத்து விடுகிறார்கள்.

போகோ ஹராம் போன்ற ஜிஹாதிகளின் கடமை எளிமையானது. காஃபிர் அமெரிக்காவுக்கும், இசுலாமிய சவூதிக்கும் ஏற்பட்ட கள்ளத் தொடர்பில் பிறந்த அமெரிக்க ’ஜிஹாதின்’ கச்சாப் பொருளின் மேல் உள்ளூர் மசாலாவை (உதாரணம் – விசுவரூபம் எதிர்ப்பு, இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு போன்றவை) தடவி யாவாரத்தை சிறப்பாக நடத்த வேண்டியது தான்.

அமெரிக்காவுக்கு ஆப்பிரிக்காவின் மேல் இவ்வளவு அக்கறை ஏன்? ஏன் சொந்த முறையில் போகோ ஹராம் போன்ற ‘ஜிகாதி’களை வளர்க்க வேண்டும்?

ஆப்பிரிக்காவின் வளம்

ஆப்பிரிக்க கண்டம் அள்ளித் தீராத இயற்கை வளங்களைச் சுமந்து கொண்டிருக்கும் பெரும் நிலப்பரப்பு. சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய காலனியவாதிகளில் நடத்திய மாபெரும் சூறையாடல்களுக்கு ஈடு கொடுத்து இன்னமும் தன்னுள் ஏராளமான கனிம வளங்களைக் கொண்டிருக்கிறது. நைஜீரியா உள்ளிட்ட வடக்கு மற்றும் வட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சமீப காலத்தில் ஏராளமான எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளது.

போகோ ஹராம் தலைவனின் பேச்சு
போகோ ஹராம் தலைவனின் பேச்சு

ஆப்பிரிக்க நாடுகள் அரசியல் ரீதியில் சுயேச்சையான முடிவுகளை எடுக்கக் கூடிய சுதந்திர நாடுகள் அல்ல. பெரும்பாலும் தமது முந்தைய காலனிய காலத்து எஜமானர்களான ஐரோப்பிய நாடுகளை மறைமுகமாகவோ அமெரிக்காவை நேரடியாகவோ அண்டிப் பிழைக்கும் ஒட்டுண்ணித் தரகு வர்க்கங்களே ஆப்பிரிக்க நாடுகளை ஆட்சி செய்து வருகின்றன. எனினும், நைஜீரியா போன்ற ஓரிரு ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்காவுக்கு திறந்து வைத்த அதே வாயிற் கதவை சீனாவுக்கும் திறந்து விட்டிருக்கின்றன.

நைஜீரியாவுக்கு இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வரும் சீனா, அதன் தொலைத் தொடர்புத் துறையில் ஏராளமான முதலீடுகளைச் செய்து வருகிறது. சமீபத்தில் சுமார் 2,300 கோடி டாலர்கள் மதிப்பில் மூன்று எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், எண்ணெய் துரப்பணம் மற்றும் புதிய எண்ணெய் வயல்களைக் கவளங்களைக் கண்டறிவதற்கும் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளது.

தனது பொருளாதார சிக்கலில் இருந்து மீளத் துடிக்கும் அமெரிக்காவின் சுரண்டல் வெறியும் அடங்காத எண்ணெய்ப் பசியும் சிறு அளவுக்கு பெயரளவிலான போட்டியைக் கூட விரும்புவதில்லை. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சீனாவை விரட்டுவது, ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் தனது ஐரோப்பிய கூட்டாளிகளின் செயல்பாடுகளை தனது தலைமையில் மறுஒழுங்கமைப்பது என்கிற நோக்கங்களோடு செயல்பட்டு வருகிறது.

ஆப்பிரிக்காம்

இரண்டாயிரங்களின் மத்திய காலப்பகுதி வரை அமெரிக்காவின் மத்திய கிழக்கு இராணுவ கட்டுப்பாட்டு கேந்திரம் மற்றும் ஐரோப்பியாவிற்கான அமெரிக்காவின் இராணுவ கட்டுப்பாட்டு கேந்திரத்தின் பொறுப்பில் ஆப்பிரிக்கா இருந்தது. 2008-ல் ஜார்ஜ் புஷ்ஷின் இறுதி நாட்களில் ஆப்பிரிக்காவுக்கென தனிச்சிறப்பான இராணுவ கட்டுப்பாட்டுக் கேந்திரமாக ஆப்பிரிக்காம் (USAFRICOM – United States African Command) ஏற்படுத்தப்பட்டது.

ஆப்பிரிக்காம்
ஆப்பிரிக்காம் – வரைபடம்.

ஆப்பிரிக்காமின் இராணுவ தளம் சூயஸ் கால்வாயின் முகப்பில் அமைந்திருக்கும் வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபௌட்டியில் அமைந்திருக்கிறது. இசுலாமிய தீவிரவாதத்திலிருந்தும் சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்தும் வடகிழக்கு ஆப்பிரிக்க முனைக்கு விடுதலை அளிப்பது (Operation Enduring Freedom – Horn of Africa) என்கிற பெயரில் உள்ளே நுழையவும் கேம்ப் லெமான்னியர் என்ற தற்காலிய இராணுவ தளத்தை ஆப்பிரிக்காமின் நிரந்தரமான இராணுவ தளமாக அமைத்துக் கொள்ளவும் வழி செய்து கொடுத்தது ’ஜிஹாதிகள்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நூறு இராணுவ வீரர்களோடு சோம்பிக் கிடந்த ஜிபௌட்டியின் லெமான்னியர் இராணுவ முகாம், இன்று ‘இசுலாமிய ஜிஹாதின்’ அச்சுறுத்தலைத் தொடர்ந்து பல்லாயிரம் வீரர்களைக் கொண்ட மாபெரும் இராணுவ செயல் கேந்திரமாக குறுகிய காலத்திலேயே வளர்ந்துள்ளதாக அமெரிக்காவின் ‘ஆர்மி டைம்ஸ்’ குறிப்பிடுகிறது.

அமெரிக்க வைஸ் அட்மிரல் ராபர்ட் மில்லர், “ஆப்பிரிக்காவில் இருந்து உலகச் சந்தைக்கு இயற்கை வளங்கள் சுலபமாக சென்று சேர்வதை உறுதி செய்வது தான்” ஆப்பிரிகாமின் கடமை என்று வெளிப்படையாகவே அறிவிக்கிறார். அமெரிக்காவின் எண்ணெய் தேவையை உத்திரவாதப்படுத்தும் வகையில் தீவிரவாத எதிர்ப்புப் போரில் ஈடுபடுவதே ஆப்பிரிகாமின் நோக்கம் என்கிறார் அமெரிக்க இராணுவ ஜெனரல் வில்லியம் வார்ட்.

ஆக, எந்த நாட்டிற்குள்ளும் அமெரிக்கா நுழைவதற்குத் தேவையான அடிப்படை முகாந்திரங்களையும் அரசியல் தேவைகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் கைக்கூலிகள் தான் ஜிஹாதிகள். ”அமெரிக்காவை வெட்டுவேன், அமெரிக்கர்களைக் குத்துவேன்” என்கிற பாணியில் போகோ ஹராமின் ‘ஜிஹாதி தலைவர்கள்’ வெளியிட்ட சவடால் வீடியோக்கள் எல்லாம் சி.ஐ.ஏ.வின் திரைக்கதை வசனத்தில் உருவானவை தாம். இது போன்ற வீடியோக்களையும் சில சில்லறைத்தனமான தாக்குதல் சம்பவங்களையும் சி.என்.என் போன்ற ஊடகங்களின் மூலம் ஊதிப் பெருக்கிக் காட்டுவதன் மூலம் உருவாவது தான் ‘இசுலாமிய தீவிரவாத பூச்சாண்டி’.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (மே 20-ம் தேதி) இரவு போகோ ஹராம் தீவிரவாதிகள் என்ற சந்தேகிக்கப்படுபவர்கள் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள மூன்று கிராமங்களை தாக்கி 48 பேரை கொன்று குவித்திருக்கும் செய்தி இப்போது மேற்கத்திய ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆப்பரேஷன் நைஜீரியாவுக்கு அமெரிக்க ‘உதவி’

போகோ  ஹராமின் மூலம் நைஜீரியாவுக்கான இசுலாமிய தீவிரவாத பூச்சாண்டியை உருவாக்கி முடித்து விட்ட அமெரிக்கா, தனது தலையீட்டுக்கான பொதுக்கருத்தையும் உருவாக்கி முடித்துள்ளது. நைஜீரியாவின் அதிபர் குட்லக் ஜொனாதன் துவக்கத்தில் அமெரிக்க தலையீட்டை ஏற்பதில் சுணக்கம் காட்டுகிறார், உடனடியாக ஜொனாதன் எப்பேர்பட்ட கையாலாகாதவர் என்பதையும் மாணவிகள் கடத்தப்பட்ட அதே சமயத்தில் அவர் கலந்து கொண்ட குடி விருந்தில் அடித்த சரக்கின் விலை என்ன என்பதையெல்லாம் விவரிக்கும் ‘ஆய்வு’ கட்டுரைகள் மேற்கத்திய ஊடகங்களில் பரபரப்பாக கசியத் துவங்கியன.

உடனே ‘விழித்துக்’ கொண்ட ஜொனாதன், அமெரிக்காவின் உதவியைத் தாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கிடப்பதாக அறிவித்து முவாம்மர் கடாபியின் நிலை தனக்கு ஏற்படுவதைத் தற்காலிகமாக தவிர்த்துக் கொண்டார். அமெரிக்கா தற்போது மாணவிகளைத் ‘தேடி’ வருகிறது. விரைவில் இசுலாமிய பூச்சாண்டியை ஒழித்து அமெரிக்காவின் நிரந்தர இராணுவதளம் ஒன்றின் நிழலில் ‘ஜனநாயகத்தின்’ மகாத்மியம் நைஜீரியாவில் நிலைநாட்டப்படக் கூடும். மாலி, சூடான், சோமாலியா, அல்ஜீரியா, சாட், நைஜர் உள்ளிட்ட பிற வடக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ’ஜிகாத்’ உக்கிரமாக நடந்து வருகிறது – டாம்ஹாக் எரிகணைகள் ’ஜனநாயகத்தின்’ நற்செய்தியை ஓசையோடு அறிவிக்கும் ஆசையோடு லெமான்னியர் முகாமில் காத்துக்கிடக்கின்றன.

ஆனால், அப்பாவி ஆப்பிரிக்கர்களோ ‘ஜிகாத்’தையும் அதன் அப்பனான அமெரிக்காவையும் வீழ்த்தவல்ல வர்க்கப் போராட்டம் ஒன்றுக்காக நீண்ட காலமாக காத்துக் கிடக்கின்றனர்.

–    தமிழரசன்