privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்பேராசிரியர்களுக்கு புதிய ஜனநாயகம் அவசியமா ?

பேராசிரியர்களுக்கு புதிய ஜனநாயகம் அவசியமா ?

-

திருச்சியில் புதிய ஜனநாயகம் வாசகர் வட்டக் கூட்டம் !

திருச்சி பகுதி புதிய ஜனநாயகம் வாசகர் வட்டம் 21.05.2014 புதன்கிழமை மாலை 7 மணியளவில் பு.ஜ. விற்பனைக்குழு தோழர் சேகர் தலைமையில் திருச்சி ஸ்ருதி மஹாலில் நடைபெற்றது. இதில் பல வாசகர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை கூறினர். ஒரு பேராசிரியர், “நான் பாடம் நடத்தும் போது பு.ஜவில் படித்த கட்டுரைகளை எனது மாணவர்களுக்கு கூறுவேன். அவர்களிடமும் இப்பத்திரிக்கையை கொடுத்து படிக்க வைப்பேன். ஒரு ஆங்கில நாளிதழில் அருந்ததிராய் கூறியது என் நினைவிற்கு வருகிறது. பத்திரிக்கைகளின் 90% லாபம் விளம்பரங்களின் மூலம்தான் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் பு.ஜ எந்த விளம்பரங்களும் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக வருவது ஆச்சரியமாக இருக்கிறது. பு.ஜ.படித்துதான் அரசியல் கற்றுக் கொண்டேன். இதுவரை தேர்தலில் ஓட்டுப் போடவில்லை. எனது மாணவர்கள் சிலரையும் தேர்தலை புறக்கணிக்க செய்துள்ளேன்” என்றார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் விவாதத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். வாசகர்களின் கேள்விகள் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய தோழர் காளியப்பன் கூறியதாவது:

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை ஜெயலலிதா தனது தேவைக்கேற்ப வளைக்கிறார் என்பது ஒருபுறமிருக்க நீதிமன்றங்களே வளைந்து கொடுக்கின்றன என்பதே உண்மை. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெறும் முறை அரசு பற்றிய மார்க்சிய கோட்பாட்டை துல்லியமாக மெய்ப்பிக்கிறது. ஏழை-பணக்காரன், தொழிலாளி-முதலாளி, கீழ்சாதி-மேல்சாதி என இரு கூறாகப் பிளவுபட்டிருக்கும் சமுதாயத்தில் அரசு என்பது நடுநிலையானதாக இருக்க முடியாது. சொத்துடைமை வர்க்கத்தை காக்க பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒடுக்கும் ஒரு பலாத்கார நிறுவனமே அரசு. போலீசும், நீதிமன்றமும் அத்தகைய பலாத்கார அமைப்புகளேயன்றி எல்லோருக்கும் நடுநிலையாக நின்று நீதி வழங்கும் அமைப்புகளல்ல. மக்கள் போராட்டங்களின் காரணமாக ஒரு சில தவிர்க்க முடியாத நேரங்களில் நடுநிலை வகிக்கும்படி நிர்பந்திக்கப் படுகின்றன, அவ்வளவே. உதாரணத்திற்கு சமச்சீர்கல்வி வழக்கில் தமிழக மாணவர்களின் போராட்டம்தான் சாதகமான தீர்ப்பை தந்தது.

70-களில் தொழிற்சங்கங்களின் வலிமையும் போராட்டங்களும்தான் தொழிலாளிகளுக்கு ஆதரவான தீர்ப்புகளை பெற்றன. இன்று கார்ப்பரேட் நிறுவனங்களின் கையாளாகவே நீதிமன்றங்கள் மாறி விட்டன.

பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது போல் சலுகைகளும், வாய்தாக்களும் சாதாரண மக்களுக்கு கிடைக்கும் என கற்பனை கூட செய்ய முடியாது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படியோ அல்லது வேறு எந்த சட்டத்தின்படியோ அரசு வழக்குரைஞரையும், விசாரணை நீதிபதியையும் குற்றவாளி தீர்மானிக்க முடியாது. ஆனால் உச்சநீதிமன்றம் அந்த உரிமையை ஜெயலலிதாவுக்கு வழங்கியதோடு இதை முன்னுதாரணமாகக் கொண்டு வேறு யாரும் கோரமுடியாது என ஜெயாவிற்கு மட்டும் தனிச்சட்டம் போட்டது. வேறு எந்த நாட்டிலாவது இப்படி நடந்திருந்தால் அந்த நாடே கொந்தளித்திருக்கும்.

டான்சி வழக்கில் ஜெயலலிதா செய்தது கிரிமினல் குற்றம் என்று ஒத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் அவரை இதற்காக தண்டிக்க முடியாது எனக் கூறி, ஜெயலலிதாவே கழுவாய் தேடிக்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பளித்த அதிசயம் வேறு எந்த நாட்டிலும் நடக்க முடியாதது. பல்லாயிரம் கோடி மக்கள் பணத்தை சூறையாடிய சகாரா குழும முதலாளி சுப்ரதாவுடன் பேரம் பேசும் நீதிமன்றம், சிறு குற்றமிழைக்கும் சாதாரண மக்களை எவ்வளவு கொடுமைப் படுத்துகிறது என்பது அனைவரும் அறிந்ததுதான்.

நீதிமன்ற தீர்ப்புகளை உன்னிப்பாக கவனித்தால் எல்லா நிலைகளிலும் பணக்காரர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதை எளிதாக உணரலாம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 70% பேர் உயர்சாதி பார்ப்பனராக உள்ளனர் என்பது மட்டுமல்ல, பகுத்தறிவுச் சிந்தனையற்றவர்களாகவும், பார்ப்பன சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். ஒரு புராண கட்டுக்கதையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு சு.சாமி தொடுத்த வழக்கை ஏற்றுக் கொண்டு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்ட சேதுசமுத்திரத் திட்டத்தை உச்சநீதிமன்றம் முடக்கியதைக் கொண்டே இவர்களின் யோக்கியதையை அறிய முடியும். உழைக்கும் மக்களின் அதிகாரம் நிலைநாட்டப்படும் போதுதான் உழைக்கும் மக்களுக்கு நியாயமும், ஜனநாயக உரிமைகளும் கிட்டும் எனக்கூறி தோழர் காளியப்பன் தனது உரையை முடித்தார்.

அடுத்து ½ மணி நேரம் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. வாசகர்களின் அரசியல் உணவை தட்டியெழுப்பும் வகையில் தோழர்கள் பாடல்களை பாடினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இறுதியில் பு.ஜ விற்பனைக்குழு தோழர் ஜோசப் நன்றி கூறினார்.

செய்தி:
பு.ஜ விற்பனைக்குழு,
திருச்சி