privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்பேஸ்புக்கில் மோடியை எதிர்த்தால் உடன் கைது !

பேஸ்புக்கில் மோடியை எதிர்த்தால் உடன் கைது !

-

பாசிசம் பெற்றுப் போட்ட இந்துமதவெறியர்களுக்கு ஜனநாயகத்தின் வாசனை அறவே பிடிக்காது.

பால்தாக்கரே மரணம் கைது
சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணமடைந்த போது, ‘இதற்காக ஒரு பந்த் தேவையா’ என முகநூலில் எழுதியதற்காகவும், அதனை ‘லைக்’ செய்ததற்காகவும் கைது செய்யப்பட்ட பெண்கள்.

2012 நவம்பரில், சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணமடைந்த போது, ‘இதற்காக ஒரு பந்த் தேவையா’ என முகநூலில் எழுதியதற்காகவும், அதனை ‘லைக்’ செய்ததற்காகவும் மும்பையை சேர்ந்த ஷாகின் தாதா மற்றும் ரேணு என்ற இரு இளம் பெண்களின் மீது 66A சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டதுடன் மட்டும் நில்லாமல் ஷாகினின் உறவினருக்கு சொந்தமான மருத்துவமனை ஒன்றும் சிவசேனா கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டது. ஆட்சியில் இல்லாத காலத்திலேயே இப்படி அராஜகமாக நடந்து கொண்ட சிவசேனா போன்ற இந்துத்துவா பொறுக்கி கும்பல்கள் இப்போது நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சிக்கு வந்திருப்பதால் கள் குடித்த குரங்கின் நிலைமைக்கு வந்துள்ளனர்.

மோடி பதவியேற்கும் வைபவத்திற்கு முன்னதாகவே கோவா மாநிலத்தில் ஒருவர் மீதும், பெங்களூருவில் ஒருவர் மீதும் தகவல் தொழில் நுட்ப சட்டம் 66A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவாவில் குறி வைக்கப்பட்டிருப்பவர்  தேவு ஜோடங்கர், வயது 31, ஒரு கப்பல் கட்டுமான பொறியாளர். ஏறக்குறைய 47,000 பேர் கொண்ட Goa+ என்ற முகநூல் குழுவில் அவர் ஒரு உறுப்பினர். மார்ச் மாதம் 23-ம் தேதி முகநூலில் ஜோடங்கர் ஒரு பதிவினை இடுகிறார். “(கோவா) பரிக்கார் அரசின் தந்திரமான கொள்கைகள் மூலம் , குஜராத்தில் நடந்தது போன்ற ஒரு ஹோலோகாஸ்ட் நடப்பதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று எழுதியிருந்தார். அதாவது மோடி ஆட்சிக்கு வந்தால் கூடவே ஒரு இன அழிப்பு நடவடிக்கையும் பின் தொடரும் என்றும், தெற்கு கோவா பகுதிகளில் வசிக்கும் கிறிஸ்தவர்களின் தனித்த அடையாளங்களை அவர்கள் இழக்க வேண்டியதிருக்கும் என்றும் வர இருக்கும் அபாயத்தை குறிப்பிடுகிறார்.

இப்படி எழுதிய ஜோடங்கர் ஒரு பாஜக அனுதாபி என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்சி மோடியை பிரதமராக முன்னிறுத்துவதை பிடிக்காத அவர் இந்த தேர்தலில் பாஜக கட்சிக்காக வேலை செய்யவில்லையாம். பாஜகவில் இருக்கும் அனைவரும், பார்ப்பன பாசிச சித்தாந்தத்தை மனதார ஏற்றவர்கள் என்று கூற இயலாது. பல்வேறு காரணங்களால் அவர்கள் காவிப்படைக்கு சென்றாலும், சில நேரங்களில் விலகவே விரும்புகின்றனர். ஜோடங்கரும் அப்படி குஜராத் இனப்படுகொலையில் மோடியை மன்னிக்க முடியாதவராகவும், அதே நேரம் அவரில்லாத பாஜகவை ஏற்பவராகவும் இருந்திருக்கலாம். எனினும் இந்த முரண்பாடு இந்த தேர்தலில் ஒரு முடிவை நோக்கி சென்றதாக தோன்றுகிறது.

ஜோடங்கர் ஃபேஸ்புக் பதிவு
ஜோடங்கரின் ஃபேஸ்புக் பதிவின் மீது கிரிமினல் வழக்கு பதிவு

இந்நிலையில் ஜோடங்கரின் ஃபேஸ்புக் பதிவை  CII (Confederation of Indian Indutries) என்ற முதலாளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அதுல் பாய் கானே பார்வையிடுகிறார். அவர் இதனை பாஜகவுக்கு எதிரான பதிவாக பார்க்கவில்லையாம். மாறாக அப்பதிவு சமூக அமைதியை கெடுக்கும் வண்ணம்  இருப்பதாகவும், பாஜகவுக்கு ஓட்டுப் போடுபவர்களை மிரட்டும் வண்ணம் இருப்பதாகவும் படுகிறது என்று காவல்துறையிடம் கானே புகார் செய்யவே முதல் தகவல் அறிக்கை தேவு ஜோடங்கர் மீது பதிவு செய்யப்படுகிறது. இறுதியில் பாஜக தலைவர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதைத் தாண்டி அதுல் பாய் கானேவிடம் வேறு நோக்கமில்லை என்று தெரிகிறது. உண்மையிலேயே சமூக அமைதியை கெடுப்பது யார், குலைப்பது யார் என்று இந்த கைபுள்ளைக்கு தெரியாதாம். விட்டால் இஷ்ரத் ஜஹானா இல்லை குஜராத் முசுலீம் மக்களோ வாழ்க்கையை வெறுத்து விட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்று கூட இவர் பேசலாம். இல்லையெனில் அப்போதெல்லாம் இவரது அறச்சீற்றம் சீறிப்பாய்ந்திருக்கும் அல்லவா?

பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் கானேவின் புகாரை ஏற்றுக் கொண்ட பானாஜி வட்டார காவல்துறையினர், ஜோடங்கரின் முன்ஜாமீன் மனுவையும் நீதிமன்றத்தில் எதிர்த்தனர். இதனை ஏற்றுக்கொண்ட விசாரணை நீதிமன்றம் கடந்த மே 23-ம் தேதி அவரது முன் ஜாமீன் மனுவையும் நிராகரித்து விட்டது. முதல் தகவல் அறிக்கையில் ஜோடங்கர் மீது 153 A, 295 A ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125-ன் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டம் 66A-ன் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை பிணையில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகள் ஆகும். காவல்துறை விசாரணைக்கும், நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

தற்போது தலைமறைவாக இருக்கும் ஜோடங்கர் தனது பதிவில் உள்ள சில அதீத வார்த்தை பிரயோகங்களுக்காக பதிவை அழித்து விட்டார். எனினும் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை என்பதை இன்னொரு வலைத்தள குழுவான Goa Speaks-ல் தெரிவித்துள்ளார்.

மே 24-ம் தேதி இவருக்கு ஆதரவாக தலைநகர் பானஜியில் சில மனித உரிமை ஆர்வலர்கள் காவல்துறை தலைமையகத்திற்கு எதிரில் போராட்டம் நடத்தினர். மும்பை பகுதி முன்னாள் ஐஐடி மாணவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். ‘இன்றைக்கு ஜோடங்கர் மீது கைது நடவடிக்கை எனில் நாளை நமக்கும் இதுதான் கதி’ என்று அவர்களில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். சில எதிர்க்கட்சிகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டன.

சையத் அகமது வாக்கஸ் பர்மாவர்
சையத் அகமது வாக்கஸ் பர்மாவர்

பாஜக முதல்வர் பாரிக்கரோ ”இந்த வழக்கிற்கும் பாஜக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உச்சநீதிமன்ற வழிகாட்டல் படி காவல்துறையினர் சட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளனர். நீதிமன்றமும் அது சரி என தீர்ப்பளித்துள்ளது. முன்ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் தான் நிராகரித்துள்ளது” எனக் கூறி சட்டவாதம் மூலமாக ஜனநாயக விமரிசனங்களுக்கெதிரான தனது அரசு காவல்துறையின் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார். பாபர் மசூதி இடிப்பு போன்ற சட்டவிரோதங்களை பெருமையாக கருதுபவர்கள் இங்கே சட்டத்திற்காக பேசுகிறார்களா, விமரிசனமற்ற சர்வாதிகாரத்திற்காக பேசுகிறார்களா என்பதை உலகமே அறியும்.

சைபர் க்ரைம் பிரிவை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் ஜாப் ”இவர்கள் ஒரு பெரிய சதித்திட்டத்தை தீட்டி சமூக அமைதிக்கு தீங்கு விளைவிக்க முயன்றதால் காவல்துறை விசாரணை அவசியம்.” என்று நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். மேலும் அவரிடமிருந்து கணினி சம்பந்தப்பட்ட விசயங்களை கைப்பற்ற வேண்டியுள்ளது என்றும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய ஜோடங்கரை தப்பி ஓடும் தீவிரவாதி போல அரசும், நீதிமன்றமும், போலீசும், பாஜக சார்பு முதலாளிகளும் சேர்ந்து சித்தரிக்க முயல்கின்றனர். இதுவே குஜராத்தாக இருந்தால் என்கவுண்டரே நடந்திருக்கும் போல.

கோவாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆனால் கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சிதான். எனினும் இங்கே நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை பாஜக கைப்பற்றி உள்ளது. அந்த பயம் ஆளும் காங்கிரசு கட்சிக்கு இருக்கிறது என்பதை இந்த செய்தி காட்டுகிறது. பெங்களூருவில் தான் அனுப்பிய எம்.எம்.எஸ் செய்திக்காக இங்கு கைதாகி இருப்பவர் 24 வயதான சையது வாக்கஸ் பர்மாவர். கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் பட்கலை சேர்ந்த இவர் ஒரு எம்.பி.ஏ மாணவர். இவரது தந்தை சமிமுல்லா பர்மாவர் கர்நாடகத்தின் பிரபலமான உருது கவிஞர். வாக்கஸ், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் என்று பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. இருப்பினும் இந்த அடையாளங்களைத் தாண்டி அவர் ஒரு முசுலீம் என்பதே காவல்துறைக்கு போதுமான ஒன்று.

இவர் கடந்த மே 16 அன்று தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த போது தனக்கு வந்த எம்.எம்.எஸ் ஐ தனது நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்கிறார். அந்த எம்.எம்.எஸ் இல் பாஜகவின் தேர்தல் முழக்கமான ‘அப் கி பார் மோடி சர்க்கார்’ என்பதைக் கொஞ்சம் மாற்றி ‘அப் கி பார் அந்திம் சன்ஸ்கார்’ என எழுதியிருந்ததாம். இதன் பொருள் ‘இந்தமுறை மோடி ஆட்சி” ‘ என்பதற்கு பதிலாக ‘இந்த முறை (மோடிக்கு) இறுதி அஞ்சலி’ என்பதே. கூடவே மார்ஃபிங் முறையில் மோடியை பிணமாக காட்டி ஒரு இறுதிச்சடங்கு நடப்பதாகவும் அதில் பாஜக மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொள்வதாகவும் காட்டியிருந்ததாம். இந்த காட்சி வாட்ஸ் ஆப் எனும் செல்பேசி வலைப்பின்னல் மூலமாக ஜெயந்த் முகுந்த தினேகர் என்ற பாஜகவின் தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலருக்கும் சென்றிருக்கிறது.

இந்துமதவெறியர்கள் கொன்ற சிறுபான்மை மக்களின் இரத்தம் இன்னும் காயாத நிலையில் மோடி குறித்த இந்த கற்பனையைக் கூட இவர்கள் சகித்துக் கொள்வதில்லை.

உடனே இதனை தில்லியிலுள்ள மூத்த பாஜக தலைவர்களுக்கு அவர் அனுப்பி வைத்தாராம். அவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அவரை புகார் தரச் சொன்னார்கள். பங்காளி ஜெயாவுக்கு ஆதரவாக கர்நாடக நீதித்துறையின் பெரும்பகுதி செயல்படும் போது பாஜகவிற்கு மட்டும் கர்நாடகம் ஏமாற்றி விடுமா என்ன? புகாரை, பெல்காம் சைபர் கிரைம் போலீசாரிடம் தினேகர் கடந்த 22-ம் தேதி அளித்தார். பெங்களூருவில் உள்ள வசந்த் நகரில் நண்பர்களுடன் தங்கியிருந்த வாக்கஸை கைது செய்த போலீசார், அறையில் தங்கியிருந்த ஏனைய இசுலாமிய நண்பர்களையும் அழைத்துச் சென்று விசாரித்தனர். மத்திய புலனாய்வு துறையினர் அறையில் சோதனை நடத்தினர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 505-ன் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டம் 66A-ன் கீழும் இவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை கைது செய்வதற்காக போலீசார் இவரது செல்பேசியை தொடர்ந்து கண்காணித்து வந்தார்களாம். இல்லையெனில் ‘இத்தீவிரவாதிகள்’ பாகிஸ்தானுக்கோ இல்லை வங்கதேசத்திற்கோ ஓடிவிடுவார்கள் இல்லையா?

வாக்காஸ் கைதைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யாவிடில் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம் என்கிறது ஆம் ஆத்மி கட்சி. இவரது கைதுக்கு கர்நாடகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. போலீசாருக்கும் உண்மையில் இந்த எம்.எம்.எஸ் ஐ உருவாக்கியது யார் என கண்டுபிடிக்க முடியாத நிலைமைதான் தற்போது வரை நீடிக்கிறது. அதனால் பழியை வாக்காஸ் மீது போட்டு வழக்கை முடித்து விட நினைக்கிறது.

யூ ஆர் அனந்தமூர்த்தி
யூ ஆர் அனந்தமூர்த்தி

இந்த இரண்டு கைது நடவடிக்கைகளும் மோடி பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்னரே நடந்துள்ளன. இனி வரும் காலங்களில் பாஜக வின் பாசிச ஆட்சியின் கீழ் பல கைது நடவடிக்கைகளை புரட்சிகர-ஜனநாயக-மதச்சார்பற்ற அமைப்புகள் மட்டுமல்ல, ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதற்கு இவை கட்டியம் கூறுகின்றன. கார்ப்பரேட் ஊடகங்கள் எல்லாம் மோடி பின்னால் கொடி பிடித்து அணிவகுக்கும் போது வாய்ப்பற்ற மக்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் ஓரளவுக்கு இவர்களை அம்பலப்படுத்தும் வேலையைச் செய்கின்றனர். அதை ஒழிக்கவே இந்த கைது நடவடிக்கைகள்.

கர்நாடகாவில் எழுத்தாளர் யூ ஆர் அனந்தமூர்த்தி, “மோடி வெற்றி பெற்றால் நாட்டை விட்டு வெளியேற்றுவேன்” என்று தேர்தலுக்கு முன்னர் சொன்னதை வைத்து இந்துமதவெறியர்கள் அவரை உண்மையிலேயே விரட்டுவதற்கு முயன்று வருகின்றனர். அவர்களது சித்திரவதை தாங்காமல் அனந்தமூர்த்தியும் தெரியாமல் சொல்லி விட்டதாக பின்வாங்குகிறார். மோடியின் வெற்றி இந்தியாவுக்கு நல்லதல்ல என்பதைக் ஒரு குறியீடாகக் கூட சொல்வதற்கு ஒருவருக்கு உரிமையில்லையா? அதுவும் இதில் அனந்தமூர்த்தி தனக்குத்தான் தண்டனை  கொடுக்கிறாரே ஒழிய மோடியை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. இதையே இந்துமதவெறியர்கள் கடுஞ்சினத்துடன் பார்க்கிறார்கள் என்றால் மற்றவர்களின் நிலை என்ன?

ஆகவே பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்திற்கு பாடை கட்டும் வரை இந்தியாவில் அமைதியோ, ஜனநாயகமோ, கருத்துரிமையோ எதுவும் நீடிக்கப் போவதில்லை. இந்த கைதுகளை கண்டிப்போம், காவிகளை முறியடிப்போம்!

–    கௌதமன்

மேலும் படிக்க