privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஇந்திய மாம்பழங்களுக்கு ஐரோப்பிய தடை ஏன் ?

இந்திய மாம்பழங்களுக்கு ஐரோப்பிய தடை ஏன் ?

-

இந்திய மாம்பழங்களுக்கு தடை 1டந்த மே முதல் நாளிலிருந்து 31 டிசம்பர் 2015 வரை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செயப்படும் மாம்பழம், பாவற்காய், கத்திரிக்காய், புடலை மற்றும் சேப்பங்கிழங்கு ஆகியவற்றை அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை செய்துள்ளன. 2013-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செயப்பட்ட 207 சரக்கு பெட்டகங்களில் பழ ஈ இருந்ததாலும், இந்தப் பழ ஈ  அரோப்பிய நாடுகளில் நுழைந்தால் அந்நாடுகளின் விவசாயம் பாதிக்கும் என்பதாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்று அய்ரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும்  இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள்  கூறுகின்றனர். நூறாண்டுகளுக்கும் மேலாக அய்ரோப்பிய நாடுகளுக்கு இந்திய மாம்பழங்கள் ஏற்றுமதியாகியுள்ள போதிலும், தற்போதையத் தடையினால் ஏறத்தாழ ஒரு கோடியே 60 இலட்சம் மாம்பழங்களின் சந்தை வாய்ப்பை இந்திய விவசாயிகள் இழந்துள்ளனர். அய்ரோப்பிய ஒன்றியத்தின் சந்தையைக் கணக்கில் கொண்டு ஒழுங்கமைப்பட்ட இந்த மாம்பழ உற்பத்தியானது,  தற்போது மீளமுடியாத சிக்கலுக்கு ஆளாகியுள்ளது.

இது போன்ற செய்தி ஒன்றும் புதிதல்ல. நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செயப்பட்ட மிளகாய், பால் பவுடர், முட்டை, இறைச்சி, மக்காசோளம், சோயா, பாசுமதி அரிசி, திராட்சை, தேன், வேர்க்கடலை போன்ற உணவு மற்றும் விவசாய பொருட்களுக்கு ஏகாதிபத்திய நாடுகள் தடை போடுவதென்பது பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. 2012-இல் ஜப்பான் இந்திய மாம்பழத்தைத் தடை செய்தது. அய்ரோப்பிய ஒன்றியம் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியத் திராட்சையைத் தடை செய்திருந்தது.

உணவுப் பொருட்களுக்கான சரக்குப் பெட்டகங்களது எஃக்கின் தரம், பூசப்பட்டுள்ள பெயிண்ட்டில் கலந்துள்ள வேதியியல் பொருட்களின் வீரியம் முதலானவற்றை வைத்து  அவை நீலம், பச்சை, ஆரஞ்சு – என தரத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன . தரமான சரக்குப் பெட்டிகளில் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செயப்படவில்லை என்று காரணம் காட்டி, கடந்த 2005-ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் அமெரிக்கா 251, கனடா  239, மெக்சிகோ 200, அய்ரோப்பிய ஒன்றியம் 16 – என  இந்திய உணவு மற்றும் விவசாயப் பொருட்களைக் கொண்ட பெட்டகங்கள் நிராகரிக்கப்பட்டு, அப்படியே கடலில் கொட்டப்பட்டன. இவ்வாறு ஜப்பான், அமெரிக்கா, அரோப்பிய ஒன்றியம் ஆகிய ஏகாதிபத்திய நாடுகள் இந்தியா போன்ற ஏழை நாடுகளின் பொருட்களை உள்ளே விடாமல் நிராகரிப்பதில் முன்னணியில் உள்ளன.

மறுபுறம், அடிப்படை உணவுகளான அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், காய்கறிகள், எண்ணெ வித்துகளை உற்பத்தி செய்யும் பாரம்பரிய விவசாயத்திலிருந்து மாற்றுப்பயிர் விவசாயத்திற்கு விவசாயிகளை இழுத்துச் செல்கிறது இந்திய அரசு. கூடுதல் பொருளாதார மதிப்பு கொண்ட விவசாயப் பயிர்களை உற்பத்தி செயுமாறு விவசாயிகளுக்கு வழிகாட்டி, இதை அ.மல்படுத்த இந்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  இதற்காகத் தேசிய தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் (National Horticultural Mission – NHM) முன்வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்றுமதியைக் குறிவைத்து பழப் பயிர்கள்,  காய்கறிகள், பூக்கள், நறுமணப் பயிர்களைப் பயிரிடுமாறு விவசாயிகளை அரசு ஊக்கப்படுத்துகிறது. இத்தகைய சந்தைக்கான உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் அரசு கூறுகிறது. இந்த அடிப்படையில் உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்பட்டவைதான் இந்திய மாம்பழங்கள். ஆனால், அதுவும் இப்போது தடை செய்யப்பட்டு விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.

1995-இல் உருவாக்கப்பட்ட உலக வர்த்தகக் கழகம் (WTO), நாடுகளுக்கு இடையில் நடக்கும் ஏற்றுமதி-இறக்குமதியை நெறிமுறைப்படுத்துவது என்ற பெயரில் ஏகாதிபத்தியங்களால் முன்வைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இதில் உறுப்பினராக உள்ள இந்தியா உள்ளிட்ட  நாடுகளால் கையெழுத்திடப்பட்ட சட்டத்தைக் கொண்டு உலக  வர்த்தகத்தை இக்கழகம் நெறிப்படுத்துகிறது. தற்போது 159 நாடுகளை உறுப்பினராகக் கொண்டுள்ள இக்கழகம், உலகாளவிய விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி-இறக்குமதியைக் கட்டுப்படுத்த “விவசாய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Agreement on Agriculture)” உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், உள்நாட்டுச் சந்தையைத் திறத்தல் , ஏற்றுமதிக்கான மானியத்தை ஒழுங்கமைத்தல், உற்பத்திக்கான உள்நாட்டு மானியத்தை வெட்டுவதைப் பற்றிய விதிகள், சுகாதாரம் மற்றும் தாவர சுகாதார விதிகள் (Sanitary and phyto sanitary regulations) மற்றும் நாடுகளுக்கிடையிலான வர்த்தகத் தகராறுகளைத் தீர்ப்பதற்கான புரிந்துணர்வு ஆகிய ஐந்து அம்சங்கள் அடங்கியுள்ளன.

இந்த ஒப்பந்தப்படி ஏகாதிபத்திய நாடுகள் தங்களது உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாக்கப் போடப்பட்டிருக்கும் சுங்கவரியை 36 சதவீதமும், ஏழை நாடுகள் 24 சதவீதமும் குறைக்க வேண்டும். மேலும், சுங்க வரியைத் தவிர இதர வர்த்தகத் தடைகளும் நீக்கப்பட வேண்டும். ஏழை நாடுகள் -ஏகாதிபத்திய நாடுகள் என்ற பாரபட்சமின்றி ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் நாட்டில் 1986-88ல் கொடுக்கப்பட்ட மானியச் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு  உற்பத்திக்கான உள்நாட்டு மானியம், ஏற்றுமதிக்காகக் கொடுப்படும் மானியம் முதலானவற்றையும் குறைக்க வேண்டும். இவற்றை  2000 மற்றும் 2004-ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்பதே உலக வர்த்தகக் கழகம் உருவாக்கியுள்ள விதியாகும்.

இந்தியா போன்ற ஏழை நாடுகள் விவசாய பொருட்கள் உற்பத்திக்கோ அல்லது ஏற்றுமதிக்கோ 1986-88இல்  கொடுத்த மானியம் என்பது மிகவும் குறைவு. ஆனால், ஏகாதிபத்திய நாடுகள் கொடுத்த மானியமோ மிகவும் அதிகம். ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு ஆகும் செலவில் 90 சதவீதத்தை 1986-88 இல் ஜப்பானிய வல்லரசு விவசாயிகளுக்கு மானியமாகக் கொடுத்தது. மறுபுறம், தனது சந்தையைப் பாதுகாத்துக் கொள்ள ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெண்ணெய்க்கு  500 சதவீத அளவுக்கு சுங்க வரி விதித்தது. அமெரிக்கா, அய்ரோப்பிய ஒன்றியம் முதலான ஏகாதிபத்திய நாடுகளிலும், கனடா, ஆஸ்திரேலியா முதலான வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலும் ஏறத்தாழ இதே நிலைமைதான் இருந்தது.

உலக வர்த்தக கழக விதியின்படி, விவசாய மானியத்தைக் குறைக்கச் சொல்லி ஏழை நாடுகளை நிர்பந்தித்து வந்த அமெரிக்க அரசோ, தான் வழங்கும் மானியத்தில் சல்லிக்காசு கூடக் குறைக்கவில்லை.  அமெரிக்காவில் 1996-2010க்கும் இடைப்பட்ட காலத்தில் விவசாயத்திற்கான உள்நாட்டு மானியம் 61 லிருந்து  130 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு 2010-ஆம் ஆண்டில் விவசாயத்திற்கு வழங்கிய மானியம், 1995-ஆம் ஆண்டை ஒப்பிடும்பொழுது இரு மடங்காக, 13,000 கோடி அமெரிக்க டாலர்களாக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவும் அய்ரோப்பிய ஒன்றியமும் கடந்த பத்தாண்டுகளில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை என்பதோடு, அந்நாடுகள் நேரடி மானியத்தை மறைமுக மானியப் பட்டியலுக்குக் கொண்டு சென்று தப்பித்துக் கொள்ளும் தந்திரத்திலும் ஈடுபட்டன. மறுபுறம்,  ஏழை நாடுகளின் உணவுச் சந்தையை ஏகாதிபத்திய நாடுகள் கொள்ளையிடுவதற்கான ஏற்பாடாகவே தோஹாவிலும் அண்மையில் பாலியிலும் நடந்த உலக வர்த்தகக் கழக மாநாடுகள் அமைந்தன.

இவற்றையெல்லாம் தாண்டி ஏகாதிபத்திய நாடுகளின் சந்தைக்குள் இந்தியாவின் விவசாய பொருட்கள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதற்கான உதாரணம்தான் மாம்பழ ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை. மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவர உயிர்களுக்கு ஒவ்வாத வேதியியல் பொருட்கள் மற்றும் நோய் உருவாக்கும் கிருமிகளிடமிருந்து காத்துக்கொள்ள ஒவ்வொரு ஏற்றுமதி பொருளிலும், உயிர்களுக்கு ஒவ்வாத பொருட்கள் மற்றும் நோய்க் கிருமிகளின் அளவுகள் அதிகபட்சமாக எவ்வளவு அனுமதிக்கப்படலாம் என்பது  உலக வர்த்தக கழகத்தின் சுகாதாரம் மற்றும் தாவர சுகாதார விதிகளின்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளின் அடிப்படையில்தான் ஏற்றுமதிக்கான பொருட்களை உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.

இவ்விதிகள் உயிரினங்களை நேசிப்பதற்கான சட்டமாகத் தோற்றமளிக்கலாம்.  ஆனால் இந்த விதிகளைத்தான் பின்பற்ற வேண்டும் என்று அவசியமில்லை; ஒவ்வொரு நாடும் தமது உள்நாட்டின் தனிச்சிறப்பான தேவைக்கேற்ப விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று ஏகாதிபத்தியவாதிகளின் நோக்கத்துக்கு ஏற்ப உலக வர்த்தகக் கழகம் கூறுகிறது. அதாவது, உலக வர்த்தகக் கழகத்தால் உருவாக்கப்பட்ட பொதுவான விதிகளைப் பின்பற்றாமல், ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டிற்கு ஏற்ப புதிய விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த விதிகளைக் கொண்டுதான்  இந்திய மாம்பழத்தைத் தடை செய்தது அய்ரோப்பிய ஒன்றியம். இதுவும் கூட சிலருக்கு நியாயமானதாகத் தோன்றலாம். ஆனால் விசயம் என்னவென்றால், மேலைநாடுகள் உருவாக்கும் சுகாதாரம் மற்றும் தாவர சுகாதார விதிகள் என்றும் நிலையாக இருந்தில்லை.

சுகாதாரம் மற்றும் தாவர சுகாதார விதிகளுக்கு ஏற்ப விவசாயத்தை ஒழுங்கமைத்து நாம் பயிரிடும் பொழுது ஒரு விதி இருக்கும்; அறுவடை செய்யும் பொழுது இன்னொரு விதி; சரக்கு கப்பலில் ஏற்றிக் கொண்டுபோய் சேர்க்கும்பொழுது இன்னொரு புதிய விதி – என அவ்வப்போது புதுப்புது விதிகளை உருவாக்கி ஏழை நாடுகளிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதியாவதை ஏகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டே தடுத்து வருகின்றன. இதனால் புலி வாலைப் பிடித்தவன் கதையாக ஏற்றுமதியை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் நிலைகுலைந்து போவது தொடர்கதையாகி விட்டது.

இந்த விதிகளின் உள்நோக்கமே இந்தியா போன்ற ஏழை நாடுகளின் பொருட்கள் ஏகாதிபத்திய நாடுகளில் நுழைந்துவிடக் கூடாது என்பதுதான். ஏற்கெனவே சூப்பர் 301 சட்டத்தை அமெரிக்கா வகுத்துக் கொண்டு தனது சந்தைக்கு காப்புநிலையை ஏற்படுத்திக் கொண்டதைப் போலத்தான் இத்தகைய விதிகள் அடுத்தடுத்து உருவாக்கப்படுகின்றன. திருப்பூரில் உற்பத்தியாகும் பனியன்கள் குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்று ஏகாதிபத்திய நாடுகள் இறக்குமதி செய்வதற்குக் கெடுபிடிகளைக் காட்டியதைப் போலவே, இந்தியாவின் உணவு மற்றும் விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்வதிலும் புதுப்புது நிர்ப்பந்தங்களை உருவாக்குகின்றன. கடைசியில், ஏற்றுமதிக்கான விவசாயத்தின் மூலம் இந்திய விவசாயிகள் மேலும் நட்டமடைவதுதான் நடந்துள்ளது. மதிப்புக் கூட்டப்பட்ட விவசாயப் பொருட்கள், உணவுப் பதப்படுத்தல் முதலானவற்றின் மூலம் தனியார் முதலாளிகள் மேலும் சலுகைகளையும் மானியங்களையும் பெற்று ஆதாயமடைந்துள்ளார்களே தவிர, விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை கூட இதன் மூலம் கிடைக்கவில்லை.

உலக வர்த்தகக் கழகம் என்பதே உண்மையான, நியாயமான, சுதந்திரமான உலக வர்த்தகத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல. ஏகாதிபத்திய நாடுகள் தங்களது சந்தையைப் பாதுகாத்துக் கொண்டே ஏழை நாடுகள் மீது தங்களுடைய வர்த்தக மேலாண்மையை நிலைநாட்டிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் உலக வர்த்தகக் கழகம். எனவே, ஏகாதிபத்திய நாடுகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட உலக வர்த்தகக் கழகத்திலிருந்து இந்திய அரசு வெளியேறுமாறு விவசாயிகள் போராடுவதும், உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாத்து,  நியாயமான பரஸ்பர நல்லுறவுகளின் அடிப்படையில் புதியதொரு உலக வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இந்திய விவசாயிகள் இந்த நச்சுச் சுழலிலிருந்து விடுபட முடியும்.

சுடர்.
__________________________

புதிய ஜனநாயகம், ஜூன் 2014

___________________________