privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விவிருதை மாநாட்டுத் தீர்மானங்கள் - நீங்களும் இணைந்தால் நிஜமாகும்!

விருதை மாநாட்டுத் தீர்மானங்கள் – நீங்களும் இணைந்தால் நிஜமாகும்!

-

 

மாநாட்டு தீர்மானம் 11. கல்வி வியாபாரத்தை தடைசெய்து மத்திய மாநில அரசு சட்டம் இயற்றவும், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய்மொழியில் அனைவருக்கும் அரசே வழங்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.

2.அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசு பள்ளிகளாக அறிவித்து மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர் நியமனம் போன்றவற்றை அரசே செயல்படுத்த வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.

3. 25 சதவீத இலவச ஒதுக்கீடும், கல்விக் கட்டணம் என்ற பெயரில் அதற்காக வழங்கப்படும் மக்கள் வரிப்பணமும் தனியார் பள்ளிகளை பாதுகாக்கவே. இதைக் கைவிட்டு அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது.

4. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மீறும் எவருக்கும் சிறைத் தண்டனை உண்டு. ஆனால் இதுவரை ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. கல்வித்துறை அதிகாரிகள்தான் புகார் கொடுக்க வேண்டும் என்ற இந்தப் பிரிவை நீக்கி பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், மாணவர்கள் புகார் கொடுக்கலாம் என்று புதிய சட்டதிருத்தம் கொண்டுவர மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் சென்று பகுதிநேர வேலை செய்தாலோ அல்லது கணவன்/மனைவி பெயரில் பள்ளிக்கூடம் நடத்தினாலோ அவர்களை நிரந்தரப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

மாநாட்டு தீர்மானங்கள் 26. அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என உத்திரவிட தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7. சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்திய பிறகும் தனியார் பள்ளிகள் மெட்ரிகுலேசன் என்ற பெயரைப் பயன்படுத்திக் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன. தமிழக அரசு காலம் தாழ்த்தாது மெட்ரிக் என்ற பெயரைப் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

8. அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த கல்வியாண்டே மழலையர் பிரிவு தொடங்க வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

9. அரசுப்பள்ளியில் தாய் மொழியில் படித்த மாணவர்களுக்கே அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம் இயற்ற வேண்டும் எனத் தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.

10. ஜப்பான், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட பெரும்பான்மையான நாடுகளில் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய் மொழியில் தான் கற்பிக்கப்படுகிறது. இதுதான் விஞ்ஞானபூர்வமான முறை என நிருபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை அமல்படுத்தும் தமிழக அரசின் முடிவை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு ஆங்கிலவழிக் கல்வி அறிவிப்பை கைவிட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

11. தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு ஏப்ரல் 30 வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. கோடை காலத்தில் குழந்தைகள் சிரமப்படுகின்றன. ஆகையால் மார்ச் மாதத்திலேயே விடுமுறை அளிக்க வேண்டும் என இம்மாநாடு ஒரு மனதாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

12. அரசுப் பள்ளிகளில் உரிய கட்டமைப்பு இல்லாத சூழலிலும் அர்ப்பணிப்போடு பாடம் நடத்தி அதிக தேர்ச்சி கொடுக்க பாடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களை இம்மாநாடு மனதார பாராட்டுகிறது.

13. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், போதிய வகுப்பறை, சுகாதாரமான குடிநீர், போதுமான கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், ஆய்வுக் கூடம், நூலகம், சுற்றுச்சுவர், போதிய ஊழியர்கள் ஆகிய கட்டமைப்பு வசதிகள் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்து, அதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக்கொள்கிறது.

14. கடலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தை இந்த ஆண்டுக்குள் உருவாக்குவது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மாநிலத்திலேயே கடலூர் மாவட்டத்தை கல்வியில் முதல் மாவட்டமாக உயர்த்த நமது மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் பாடுபடுவது எனத் தீர்மானிக்கிறது.

வை.வெங்கடேசன், மாநாட்டுக் குழுத்தலைவர்
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு, விருத்தாசலம், தொடர்புக்கு 9345067646

_________________________________________

பேரணியில் எழுச்சியுடன் முழங்கிய முழக்கங்கள்!

மத்திய மாநில அரசுகளே
தடை செய் தடை செய்
கல்வி வியாபாரத்தை தடை செய்
அமல்படுத்து அமல்படுத்து
அனைவருக்கும் இலவசக் கல்வியை அமல்படுத்து

மாநாட்டுத் தீர்மானங்கள் 7கல்வி பெறுவது மாணவன் உரிமை
கற்றுக் கொடுப்பது அரசின் கடமை
பிச்சையல்ல பிச்சையல்ல, இலவசக்கல்வி பிச்சையல்ல
சட்டம் போடு சட்டம் போடு
அனைத்து தனியார் பள்ளிகளையும்
அரசு ஏற்க சட்டம் போடு

சாராயம் விற்ற ரவுடியெல்லாம்
கல்வி வள்ளல் ஆகிட்டான்
கல்வி கொடுத்த அரசாங்கம்
சாராயம் விக்குது சாராயம் விக்குது
மானக்கேடு வெட்ககேடு

கொள்ளையடிக்கிறான் கொள்ளையடிக்கிறான்
தனியார் பள்ளி தாளாளர் எல்லாம்
மாணவர்களை பணயமாக்கி
கட்டணக் கொள்ளையடிக்கிறான்.
வேடிக்கை பார்க்குது வேடிக்கை பார்க்குது
கல்வித் துறையும் காவல் துறையும்
வேடிக்கை பார்க்குது வேடிக்கை பார்க்குது

போராட்டம் இது போராட்டம்
மாணவர்களுக்கான போராட்டம்
கல்விக்கான போராட்டம்
HRPC போராட்டம், பெற்றோர் சங்கப் போராட்டம்

வெல்லட்டும் வெல்லட்டும்

அனுமதியோம் அனுமதியோம்

தனியாருக்குத் தாரை வார்க்கும்
அரசுப் பள்ளிகளை அழிக்க நினைக்கும்
தனியார்மயத்தை அனுமதியோம்.

முறியடிப்போம் முறியடிப்போம்
அரசுப் பள்ளிகளை அழிக்க வரும்
தனியார்மயத்தை முறியடிப்போம்.

சுதந்திர தின கொண்டாட்டமா
67 ஆண்டு பெருமை பேசுறான்
எல்.கே.ஜி.க்கு 50000

யாருக்கடா சுதந்திரம்
வெங்காய சுதந்திரம்

கல்வி கற்பது மாணவன் உரிமை
தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் உரிமை
கல்வி என்பது சேவையடா
கல்வி என்பது சேவையடா
அனுமதியோம் அனுமதியோம்
கல்வியை விற்பதற்கு
அனுமதியோம் அனுமதியோம்

வித்து புட்டான் வித்து புட்டான்
நாட்டையும், வீட்டையும்
கேக்காம வித்து புட்டான்
எல்லாத்தையும் வித்து புட்டான்

கட்டபொம்மன், திப்பு சுல்தான்
சின்னமலை, மருது பாண்டி
தியாகத்திற்கு பதில் சொல்
தமிழக அரசே பதில் சொல்
தனியார்மயத்தை ஆதரிக்கும்
அரசியல் கட்சிகளே பதில் சொல்

ஏமாத்துறான் ஏமாத்துறான்
சுதந்திரம்னு சொல்லி சொல்லி
மிட்டாய் கொடுத்து ஏமாத்துறான்
யாருக்கடா சுதந்திரம்
வெங்காய சுதந்திரம்
அரசுப் பள்ளியில் படித்தவன் எல்லாம்
ஐ.ஏ.ஏஸ். ஆகியிருக்கான்
தாய் மொழியில் படித்தவர் எல்லாம்
தலைமைப் பதவிக்கு போயிருக்கான்

பெற்றோர்களே பெற்றோர்களே
துள்ளி விளையாடும் பிள்ளைகளை
மார்க் எடுக்கும் எந்திரமாக
மனப்பாடம் செய்யும் மெசினாக
தனியார் பள்ளி மாத்துறான், கட்டணக் கொள்ளை அடிக்கிறான்.
புறக்கணிப்போம், புறக்கணிப்போம் தனியார் பள்ளிகளை புறக்கணிப்போம்
பாதுகாப்போம் பாதுகாப்போம் அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம்
முறியடிப்போம் முறியடிப்போம்
தனியார்மயக் கல்வியை
முறியடிப்போம் முறியடிப்போம்

அரசுப் பள்ளி நமது பள்ளி
தாய்மொழிக் கல்வி நமது கல்வி
காசு பெரிதா மானம் பெரிதா?
தாய் மொழியா? அந்நிய மொழியா?
பெற்றோர்களே சிந்திப்பீர்
ஆங்கிலம் படித்தால் அடிமைப் புத்தி
தமிழ் என்றால் தன்மானம்

அமல்படுத்து அமல்படுத்து தமிழக அரசே அமல்படுத்து
அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும், தாய்மொழிக் கல்வியை அமல்படுத்து

வெல்லட்டும் வெல்லட்டும்
கல்வி உரிமை போராட்டம் வெல்லட்டும் வெல்லட்டும்
மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்

போராட்டம் இது போராட்டம்
HRPC போராட்டம் பெற்றோர் சங்கம் போராட்டம்
வெல்லட்டும் வெல்லட்டும்

_______________________________________________________

தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விருத்தாசலம்

  1. தாய்மொழி வழிக் கல்வி சரியானது எனினும், சில நடை முறை பிரச்சனைகள் உள்ளன.

    வேற்று மாநிலத்தில் தொழில் நிமித்தமாக வசிப்போர் நிலை என்ன? பெங்களூரில் வாழும் ஒரு தமிழரின் குழந்தை ஆங்கிலத்திலும் இல்லாமல், தாய்மொழி தமிழிலும் இல்லாமல், கன்னட மொழி வழி படிக்கச் சொல்லி கட்டாயப் படுத்துவது என்ன நியாயம்? சில வருடம் கழித்து மும்பைக்கு மாறுதலாகின், மராத்திக்கு மாறிக் கொள்ள வேண்டுமா?

    இன்றைய சூழலில், பள்ளிக் கல்வி வரை தமிழ் மொழிக் கல்வி சரி. அதற்கு மேல் கடினம். இயற்பியல், கணிதம் போன்ற துறைகளில் ஏதோ ஒரு சில நூல்கள் தமிழில் கிடைக்கும். ஆகப் பெரும்பான்மையான, சிறந்த நூல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் உள்ளன.

    ஆராய்ச்சி படிப்பை தமிழ் வழியில் படித்தல் என்பதன் பொருள் என்ன? மற்ற படிப்புகள் போலன்றி, இங்கே சொந்தமாக நூல்களையும், ஆராய்ச்சி கட்டுரைகளையும் படித்தல், சிந்தித்தல், ஆராய்ச்சி செய்தல் என்பதே முக்கியம். ஆழமான நூல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் உள்ளன. ஆராய்சிக் கட்டுரைகள் ஆகப் பெரும்பான்மை ஆங்கிலத்தில் வெளியாகின்றன. நமது ஆராய்ச்சி முடிவுகள் அடங்கிய கட்டுரைகளும் ஆங்கிலத்தில் தான் எழுதப்பட வேண்டும். ஏனென்றால், இவை தமிழக அளவில் அன்றி, உலக அளவில் படிக்கப்பட வேண்டியவை.

    தமிழில் அறிவியல், கணிதம் தொடர்பாக முக்கிய நூல்கள் ஏதேனும் உள்ளனவா? “தியரி ஆப் கம்பியூடிங்” துறை சார்ந்த இரண்டு அடிப்படை நூல்களை உதாரணம் கொடுக்கிறேன்: “Approximation algorithms”, Williamson and Shmoys; “Computational complexity – A modern approach, Arora and Barak. இவற்றிற்கு இணையான நூல்கள் தமிழில் உண்டா? முதலில் இந்நூல்கள் பேசும் விஷயம் பற்றி ஆர்வம் கொண்டோர், ஆராய்ச்சி செய்வோர் எத்தனை பேர் தமிழகத்தில் உள்ளனர்? இருநூறு பேர் தேறினால் ஜாஸ்தி என்பது என் கணிப்பு. பின்பு எப்படி இந்த ஆராய்ச்சியை தமிழ் வழியில் மேற்கொள்ள பரிந்துரை செய்கிறீர்கள்?

    தமிழ் வழிக் கல்வி எடுபட வேண்டுமானால், முதலில் சிறந்த பல் துறை வல்லுனர்கள், ஆய்வாளர்கள் தமிழகத்தில் உருவாக வேண்டும். We first need a quorum. அதுவரை கல்லூரி அளவிலும், முக்கியமாக ஆராய்ச்சி படிப்பு அளவில் தமிழ் வழிக் கல்வி பற்றி கட்டாயப் படுத்துவது வன்முறையன்றி வேறில்லை. இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆராய்ச்சி மாணவர்களையும் பாழுங்கணற்றில் தள்ளும் செயல்.

    • குறிப்பிட்ட வயதுக்கு (10 வயது) பிறகு ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம். ஆங்கிலம் என்ன பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற எந்த மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் ஆனால் அடிப்படை மொழியாக ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் தான் கற்பிக்கப்பட வேண்டும்.

  2. நண்பர் வெங்கடேசன் ,

    தாங்கள் சொல்லும் நடைமுறை சிக்கல் புரிந்துக் கொள்ள கூடியதே.

    //முக்கியமாக ஆராய்ச்சி படிப்பு அளவில் தமிழ் வழிக் கல்வி பற்றி கட்டாயப் படுத்துவது வன்முறையன்றி வேறில்லை//

    🙂 தமிழ்வழி கல்வி பள்ளிகூடத்தில் படிக்கிறதே பெரிய குதிரகொம்பா இருக்குற பொது , பெரிய பெரிய பட்டப் படிப்பு, ஆராய்ச்சிப படிப்ப தமிழ்ல படிக்க இங்க யாரு கட்டயபடுத்துரா?..

    உங்க புரிதல்ல எனக்கு ஒரு சந்தேகம் , கட்டுரை தாய்மொழி வழியிலான கல்வியே சிறந்தது என்றும் அதை பெற நாம்/மக்கள் போராட வேண்டும் என்று தானே இருக்கிறது. இங்க யாரு யாரா கட்டாயபடுதராங்கன்னு கேக்குறேன். ஆனாப் பாருங்க, இங்க,ஏற்கனவே ஆங்கில மொழி வழிக் கல்வி திணிக்கப்படுதல் பற்றி உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. இது வன்முறை இல்லையா?

    சமூகத்தோடு ஒட்டி உறவாட ஒரு மொழியும் , பண்பாட்டு கலாச்சாரத்துக்கு ஒரு மொழியும், பொருளாதார வாழ்விற்கு ஒரு மொழியும் இருப்பது சமூகத்திற்குள் இருக்கும் ஏற்றத் தாழ்வை அதிகபடுத்துமே ஒழிய குறைக்காது.

    குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் , ஆகச் சிறந்த அறிவியல் நூல்கள் ஆங்கிலத்தில் இருப்பதை மறுக்கவில்லை ஆனால் அதற்காக அந்த அறிவுக் செல்வத்தை இங்குள்ள மக்களுக்கு அம்மக்களின் மொழியில் அளிப்பது சரியாக இருக்குமா அல்லது அந்த மொழியைக் முதலில் கற்று, பிறகு அந்த அறிவைப் பெறுவது சரியாக இருக்குமா ?

    நன்றி

  3. நண்பர் வெங்கடேசன் ,

    தாங்கள் சொல்லும் நடைமுறை சிக்கல் புரிந்துக் கொள்ள கூடியதே.
    //முக்கியமாக ஆராய்ச்சி படிப்பு அளவில் தமிழ் வழிக் கல்வி பற்றி கட்டாயப் படுத்துவது வன்முறையன்றி வேறில்லை//

    🙂 தமிழ்வழி கல்வி பள்ளிகூடத்தில் படிக்கிறதே பெரிய குதிரகொம்பா இருக்குற பொது , பெரிய பெரிய பட்டப் படிப்பு, ஆராய்ச்சிப படிப்ப தமிழ்ல படிக்க இங்க யாரு கட்டயபடுத்துரா?..

    உங்க புரிதல்ல எனக்கு ஒரு சந்தேகம் , கட்டுரை தாய்மொழி வழியிலான கல்வியே சிறந்தது என்றும் அதை பெற நாம்/மக்கள் போராட வேண்டும் என்று தானே இருக்கிறது. இங்க யாரு யாரா கட்டாயபடுதராங்கன்னு கேக்குறேன். ஆனாப் பாருங்க, இங்க,ஏற்கனவே ஆங்கில மொழி வழிக் கல்வி திணிக்கப்படுதல் பற்றி உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. இது வன்முறை இல்லையா?

    சமூகத்தோடு ஒட்டி உறவாட ஒரு மொழியும் , பண்பாட்டு கலாச்சாரத்துக்கு ஒரு மொழியும், பொருளாதார வாழ்விற்கு ஒரு மொழியும் இருப்பது சமூகத்திற்குள் இருக்கும் ஏற்றத் தாழ்வை அதிகபடுத்துமே ஒழிய குறைக்காது.

    குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் , ஆகச் சிறந்த அறிவியல் நூல்கள் ஆங்கிலத்தில் இருப்பதை மறுக்கவில்லை ஆனால் அதற்காக அந்த அறிவுக் செல்வத்தை இங்குள்ள மக்களுக்கு அம்மக்களின் மொழியில் அளிப்பது சரியாக இருக்குமா அல்லது அந்த மொழியைக் முதலில் கற்று, பிறகு அந்த அறிவைப் பெறுவது சரியாக இருக்குமா ?

    நன்றி

    • தோழர் சிவப்பு,

      // இங்குள்ள மக்களுக்கு அம்மக்களின் மொழியில் அளிப்பது சரியாக இருக்குமா அல்லது அந்த மொழியைக் முதலில் கற்று, பிறகு அந்த அறிவைப் பெறுவது சரியாக இருக்குமா ?//

      இலக்கியங்களின் மொழிதான் சற்று கடினம். பாடங்களின் மொழி எளிதானது தான். பள்ளியிலேயே இந்த அளவுக்கான ஆங்கிலம் கற்றுத் தர முடியும். ஆனால் தற்பொழது பாடத்திட்டம் அப்படிப்பட்டதில்லை. ஆங்கிலத்தை மொழியாகவன்றி இலக்கணமாகவும், இலக்கியங்களாகவுமே வைத்திருக்கிறார்கள். கூடுதலாக பயமுறுத்தியும் வைத்திருக்கிறார்கள். இது வர்க்கப்பிரிவினையை பாதுகாப்பதற்காகத்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்நிலையை கூடிய விரைவில் மாற்ற வேண்டும்.

      குறைந்த பட்சம் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் தாங்களாகவே பாடங்களின் மொழியைக் கற்றுக் கொள்ள முடியும். சிறிது படிக்கும் பழக்கமிருந்தால் போதும். இந்த பழக்கத்தைத்தான் நமது தற்போதைய கல்விமுறை மாணவர்களிடையே விதைப்பதில்லை.

      அதே சமயத்தில், நிறைய பேருக்கு பயனளிக்கும் நூல்களை தாய்மொழியிலும் தேவைக்கேற்ப மொழிபெயர்த்துக்கொள்ளலாம். முதலில் கற்போர் இதைச்செய்யலாம். மொழிபெயர்ப்புகளில் ஆங்கில கலைச்சொற்களையும் உள்ளடக்கியதாக அமைக்க வேண்டும்.

      ஆக, நமக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.

  4. தோழர் வெங்கடேசன் மற்றும் சிவப்பு,

    ஆராய்ச்சி படிப்பையும் தாய்மொழியில் தொடர்வதற்கு நமக்கு அநேக வாய்ப்புகள் உண்டு. இங்கு இருக்கிற அறிவியல் அறிஞர்கள் சிறப்பான புலமை படைத்திருந்தும் மொழி சார்ந்த நூல்களை எழுதுவதில் கவனம் செலுத்தவில்லை. அதற்கென்று ஒரு சோசலிச அரசு இல்லை.

    கணிதம் மற்றும் இயற்பியலின் மிகச் சிறந்த புத்தகங்கள் இன்றைக்கு ரஷ்ய மொழியில் இருக்கின்றன. சமூக விஞ்ஞானத்தின் பல்வேறு நூல்களை தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்தவர்கள் அறிவியல் நூல் என்று வருகிற பொழுது ஒன்றுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு இங்கு இருக்கிற அறிவியல் அறிஞர்களின் வர்க்கப்பார்வையும் ஒரு காரணம்.

    உதாரணமாக குவாண்டம் இயற்பியலில் மேத்யுஸ் மற்றும் வெங்கடேசனின் புத்தகம் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இருவரும் தமிழர்கள் தான். சென்னைப் பல்கலைக்கழகம். இவர்களால் சிறப்பான நூல்களை வகுத்தளிக்க முடியாது என்று கருதுகீறிர்களா? ஆனால் ஏன் செய்யவில்லை?

    Complex Analysisக்காக ரஷ்ய அறிஞர் யுஜின் பட்கோ மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். பொன்னுசாமி போன்றவர்கள் ஆங்கிலத்தில் முயற்சி செய்தாலும் கணிதத்தை மிகச் சிறப்பாக தாய் மொழியிலும் சொல்ல முடியும்.

    கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical Physics) Landau and Lifishitz மொத்த தொகுப்புகள் (ரசிய மொழி) இயற்பியலின் அரிய பொக்கிசங்கள். இதில்தான் கேள்வி வரும் என்று சொல்லி தேர்வு வைத்தாலும் ஒருவரும் தேறமாட்டர்! ஏனெனில் இப்புத்தகங்களின் கட்டமைப்பு மிகக் கடினமான உழைப்பைக் கோருகிறது. எனக்குத் தெரிந்து சில பேராசிரியர்கள் இதில் உள்ள கணக்குகளைத் தீர்த்தாலும் அனைவருக்கும் சொல்லித் தரவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவதில்லை.

    அறிவு ஜீவிகள் ஆளும்வர்க்கத்திற்கு சேவை செய்வதிலேயே பொழுதைக் கழிக்கிறார்கள்.

    எடுத்துக்காட்டாக தேனி மாவட்டத்தில் நியுட்ரினோ ஆய்வு மையம் (எளிய விவசாயிகள் இதன் ஆபத்தை உணர்ந்து போராடினார்கள்) அமைப்பதற்கான முழுத்திட்டத்தையும் செயல்படுத்தியவர்கள் Institute of Mathematical Scienceல் உள்ள தமிழ் விஞ்ஞானிகள் தான். இதில் சிலர் தீர்த்த கணக்குகள் quantum optics ஆராய்ச்சிக்கு மிகவும் அடிப்படையானவை. இவர்கள் அனைவரும் தமிழ் சூழ்நிலையில் பயின்றவர்கள். அப்படியிருந்தும் கூட மக்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. யார் வளர்த்துவிட்டார்களோ அவர்கள் மார்பிலேயே குத்துகிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு இவர்கள் நடத்திய சில நிகழ்ச்சிகள் பயனுள்ளவை. ஆனால் அதில் இருந்தது எல்லாம் பத்மா சேசாத்திரியும் அன்னா ஆதர்சும். இவர்கள் இப்படி இருந்தால் என்ன பண்ண முடியும்?

    ஆராய்ச்சி மாணவர்கள் தாய்மொழியில் படிப்பது வன்முறை என்று மதிப்பிடுகீறிர்கள். சிந்திக்கிற மாணவர்களை கேட் தேர்வு நான்கில் ஒன்றை தேர்ந்தெடுக்க சொல்கிறது. எனது வகுப்பில் கணக்குகளை தீர்க்கிற (கேட் தேர்விலும் மனப்பாடம் செய்கிறவர்கள் வெற்றி பெற இயலும்!!!!!!!!!!) நான் தேர்வானேன். ஆனால் மிகச் சிறப்பான் Practical Skills உள்ள எனது பிற நண்பர்கள் தேர்வாகவில்லை.

    ஒரு கணித ஆராய்ச்சியாளர் ஆன நீங்கள் approachக்கு மதிப்பு கொடுப்பீர்களா இல்லை answerக்கு மதிப்பு கொடுப்பீர்களா?

    இந்திய சூழல், Answer தெரிந்தவனை மட்டும்தான் அனுமதிக்கிறது. இதன் பொருள் நியுட்டனோ, ஐன்ஸ்டீனோ கேட் தேர்வில் ஒருக்காலும் வெற்றி பெறமுடியாது. என்னைப் பொறுத்தவரையில் இதுதான் வன்முறை!!!

    தாய்மொழியில் கல்விகற்பது வன்முறையல்ல. ஆங்கில நூல்களை உசாத்துணையாக கொள்வதற்கும் தாய்மொழிவழிக் கல்விக்கும் முரண்பாடெல்லாம் ஒன்றும் கிடையாது. அறிவியலே ஒரு தனித்த மொழிதான்.

  5. தமிழ் வழிக் கல்வி தொடர்பான எனது தற்போதைய பார்வையை சொல்லி விட்டு, நண்பர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு விளக்கங்கள் அடுத்த மறுமொழியில் . (“கல்வி பத்தி உனக்கு இன்னா தெரியும்னு கருத்து சொல்ல வந்துட்ட” அப்பிடின்னு திட்டப்படாது).

    பள்ளிக் கல்வி அளவில் தமிழ் வழி சிறந்ததென்றே எனக்குத் தோன்றுகிறது. ஆங்கில மொழி பிடிபடும் முன், மொழிப் பிரச்சனையில் பாடங்கள் புரியாமல் போவது ஒரு புறம். மறுபுறம் புரிந்ததை விளக்க முனையும் போது மொழி தடையாவது மறுபுறம். ஆங்கிலம் பிடிபட்டு, அம்மொழி நூல்களை எளிதில் புரிந்த கொள்ள முடிந்தாலும், தமிழில் எழுதுவதே இயல்பாக, எளிதாக இருப்பதாக நான் உணர்கிறேன். கருத்துக்களை துல்லியமாக, சரளமாக வெளிப்படுத்த முடிகிறது. மேலும், ஆங்கிலத்தில் எழுதினால் “நான் சரியாத்தான் பேசறனாய்யா?” என்ற சந்தேகம் வேறு அதிகம் வருகிறது. மற்ற பலரும் இவ்வாறு உணர்வார்கள் என கணிக்கிறேன். சமூக சூழ்நிலைகள் காரணமாக ஆங்கிலம் பிடிபடாத குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க சொல்லி கட்டாயப் படுத்துவது தவறுதான் என தோன்றுகிறது. அதே சமயம், ஆங்கிலம் ஒரு கருத்துக் கருவூலம் என்ற வகையில் அம்மொழி நிச்சயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். அம்மொழி அறிவு உலகின் திறவுகோல்.

    மேலே சொன்னவையெல்லாம் பள்ளிக் கல்வி அளவில் மட்டுமே. கல்லூரிக் கல்வி என வரும்போது, மேலே சொன்னதை எச்சில் தொட்டு அழித்து விடுங்கள். ஆங்கிலம், தமிழ் இரண்டும் எதோ இணையாத இரு வேறு சாலைகளாக நான் கருதவில்லை. ஒன்றாம் வகுப்பில் அதிக இடைவெளியில் இருக்கும் இவ்விரு சாலைகள், கல்லூரிப் பருவத்தில் இணைந்து விட வேண்டும். ஒரு பொருள் குறித்து கட்டுரையோ, நூலோ, தமிழில் கிடைத்தால் அதில் படி. ஆங்கிலத்தில் கிடைத்தால் ஆங்கிலத்தில் படி. நாமெல்லாரும் இவ்வாறுதானே செய்து கொண்டிருக்கிறோம்? இவ்வாறு செய்வதற்கு ஏதுவாக, இருமொழி ஆற்றலும், பள்ளிக் கல்வியிலேயே பயிற்றுவிக்கப் பட வேண்டும்.

    இன்னும் மேலே செல்ல, செல்ல, இந்த மொழி வேறுபாடு அர்த்தமற்றதாகி விடுவதாக நான் எண்ணுகிறேன். மேல்நிலை இயற்பியல் நூல் ஒன்றை படிக்கும்போது, மண்டைக்குள் ஏற சிரமம் ஏற்பட்டால் அதற்கு காரணம் சொல்லப்படும் விஷயத்தின் ஆழம்தானே தவிர, மொழி அல்ல. அதே நூலை தமிழில் படித்தாலும் கிட்டத்தட்ட அதே அளவே சிரமம்தான் ஏற்படும்!

    ஆய்வுப் படிப்பில் புத்தங்களுக்கு மேலாக, மற்றவர்களால் தொடர்ந்து வெளியிடப்படும் ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை எல்லாம் ஆங்கிலத்தில் தான் உள்ளன. இந்தக் கட்டுரைகளை எல்லாம் தொடர்ந்து தமிழ்ப் படுத்திக் கொண்டிருக்க முடியாது. அதேபோல, நமது ஆய்வுக் கட்டுரைகளையும், உலக அளவிலான மற்ற ஆய்வாளர்களை முன்வைத்து எழுதுவதால், ஆங்கிலத்தில் தான் எழுத முடியும். அவ்வகையில், “ஆய்வுப் படிப்பில் தமிழ் வழிக் கல்வி” என்றால் என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை. இந்த கோணத்தில், ஆய்வுப் படிப்பு ஆங்கிலத்தில் மட்டுமே சாத்தியம் என கருதுகிறேன்.

    இவ்வகையில், ஒன்றாம் வகுப்பில் தமிழில் தொடங்கி, கல்லூரியில் இரு மொழிகளையும் கலந்தடித்து, ஆய்வுப் படிப்பில் ஆங்கிலத்தில் நிலை கொண்டு வாழ்வாங்கு வாழ்வோமாக!

    • Hi Venkatesan,

      //ஆய்வுப் படிப்பில் புத்தங்களுக்கு மேலாக, மற்றவர்களால் தொடர்ந்து வெளியிடப்படும் ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை எல்லாம் ஆங்கிலத்தில் தான் உள்ளன.//

      தாய்மொழிக்கல்வி எனும்போது புத்தங்களுக்கு மேலாக மற்ற எல்லாவற்றையும் எந்த மொழியிலும் படிக்கலாம். தடையேதும் இல்லை.

      //இந்தக் கட்டுரைகளை எல்லாம் தொடர்ந்து தமிழ்ப் படுத்திக் கொண்டிருக்க முடியாது.//

      தேவையில்லை. ஆங்கிலத்திலேயே படித்துக் கொள்ளலாம். யாரேனும் தமிழ்ப் படுத்தியிருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

      //மற்ற ஆய்வாளர்களை முன்வைத்து எழுதுவதால், ஆங்கிலத்தில் தான் எழுத முடியும்.//

      தாராளமாக செய்யலாம். உங்கள் ஆய்வினால் தாய்மொழி சமூகத்திற்கு ஏதேனும் பலனிருந்தால், யாரேனும் அதை மொழிபெயர்ப்பார்கள். அது நீங்களேயாகக் கூட இருக்கலாம்.

      //இந்த கோணத்தில், ஆய்வுப் படிப்பு ஆங்கிலத்தில் மட்டுமே சாத்தியம் என கருதுகிறேன்.//

      ஒரு ரஸ்யரோ, சீனரோ, ஜப்பானியரோ, ஜெர்மானியரோ, பிரஞ்சியரோ இவ்வாறு அறுதியிட்டு கூற மாட்டார்கள்.

      • மற்ற மொழியினர் கண்டுபிடித்த பொருள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் தமிழில் மொழிபெயர்ப்பது ஒரு வேலை. ஆனால் தமிழராகிய நாம் புதிதாக தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து அதற்கு தமிழ் பெயரிட்டால் மற்ற மொழியினரும் தமிழை பற்றி அறிய ஒரு வாய்ப்பு உள்ளது.

        ஆங்கிலத்தை அறிந்து கொள்வது தவறில்லை, ஆங்கிலத்திலேயே யோசித்து பழகுவது தான் தவறு.

        வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர் பலரின் குழந்தைகள் வீட்டில் தமிழில் பேசி பழகாமல் ஆங்கிலத்தில் மட்டும் பேசுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

        இந்த விடயத்தில் யுனிவற்பட்டியின் மேல் எனக்கு ஒரு சிறிய வருத்தம் உண்டு தான். அவர் பெரும்பாலும் ஆங்கிலத்திலே பதிவிடுவது ஆங்கில மோகத்தாலா, இல்லை தமிழில் தட்டச்சு செய்ய சோம்பல் படுவதாலா தெரியவில்லை.

  6. // ஆங்கில நூல்களை உசாத்துணையாக கொள்வதற்கும் தாய்மொழிவழிக் கல்விக்கும் முரண்பாடெல்லாம் ஒன்றும் கிடையாது. அறிவியலே ஒரு தனித்த மொழிதான் //

    ஆம். உண்மை. இதைத் தான் நான் நீட்டி முழக்கி மேலே தனி மறுமொழியாக எழுதி உள்ளேன்.

    —————————————————————————————————-

    // ஆராய்ச்சி மாணவர்கள் தாய்மொழியில் படிப்பது வன்முறை என்று மதிப்பிடுகீறிர்கள் //

    இல்லை. நான் அப்படிச் சொல்லவில்லை. உலக அளவில் ஆங்கிலத்தில் எழுதப்படும் ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய இடம்பிடிக்கும் ஆய்வுப் படிப்பில், தமிழ் வழிக் கல்வி என்று ஒன்று சாத்தியம் இல்லை. அச்சூழலில், தமிழில் கிடைக்கும் சில நூல்களை படிப்பதை, “தமிழ் வழிக் கல்வி” என நீங்கள் வகைபடுத்தினால், அத்தகு தமிழ் வழிக் கல்வி எனக்கு ஏற்புடையதே. மறுபுறம், முதல் வகுப்பில், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்படுவதை எதிர்ப்பது போல், ஆய்வுப் படிப்பில் ஆங்கில வழிக் கல்வியை எதிர்க்கிறோம் என்றால் அதை ஏற்க முடியாது. இதைதான் “வன்முறை” என்று குறிப்பிட்டேன்.

    —————————————————————————————————

    தமிழில் நூல்கள் எழுதுவது, அல்லது மொழியாக்கம் செய்வது என வரும்போது முதலில் வாசகர்கள் வேண்டும்! மேல்நிலை அறிவியல், கணித நூல்களுக்கு எவ்வளவு பேர் தேறுவார்கள் எனத் தெரியவில்லை. என் துறை சார்ந்த மேல்நிலை நூல்கள் பற்றி ஆர்வம் கொண்டோர் தமிழகத்தில் மிகக் குறைந்த அளவே இருப்பார்கள் என கணிக்கிறேன். அவர்களும், “உனக்கு ஏன் இந்த வெட்டி வேலை. நாங்க ஆங்கிலத்திலேயே படிச்சுக்கறோம்” என்பார்கள். அப்படி இருக்கும் போது, “யாருமே இல்லாத டீக்கடைல யாருக்கய்யா டீ ஆத்துற” என்ற கேள்வி வராதா? அதிக வாசகர்கள் கிடைக்க கூடிய அடிப்படை நூல்களில் இருந்து தொடங்கலாம். உதாரணமாக, தாவரவியல் துறையை எடுத்துக்கொண்டால் “An introduction to botany” என்பதில் இருந்து தொடங்குவோம். முதலில், இப்பொருளில் மதிக்கத்தக்க தமிழ் நூல்கள் ஏதேனும் உண்டா? புத்தக சந்தைகளில் இப்பொருளில் சிறப்பான ஆங்கில நூல்கள் கிடைக்கின்றன. சென்னை புத்தக சந்தையில் ஏன் தமிழில் கிடைப்பதில்லை? இது பரவலானபின் “Cycads” பற்றி எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் (பள்ளிப் பருவத்தில் “இன்றைய சிகடுகள்” — Living cycads — என்றொரு நூல் புரட்டி இருக்கிறேன். இத்தகு நூல்கள் எல்லாம் இப்போதும் அச்சில் உள்ளனவா?)

    —————————————————————————————————–

    முடிவாக நான் சொல்ல வருவது இது. முதலில் தலை சிறந்த ஆய்வாளர்கள், அறிவியல், கணித அறிஞர்கள் அதிக அளவில் தமிழகத்தில் வர வேண்டும். இங்கிருந்து படித்து விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டவர்களை லூஸ்ல விடுங்க. இங்குள்ள பல்கலை பேராசியரியர்கள் பற்றி கூறுகிறேன். உலக முன்னணி ஆய்வு ஏடுகளில் நம் பல்கலைகளில் இருந்து ஆய்வுக் கட்டுரைகள் அதிகம் வெளியாக வேண்டும். அமெரிக்காவில், ஐரோப்பாவில் இருந்து எத்தனை நல்ல ஆய்வு சஞ்சிகைகள் (Journals) வெளியாகின்றன. தமிழத்தில் வெளியே இருப்போர், இந்தியாவுக்கு வெளியே இருப்போர் மதிக்கும் ஒரு அறிவியல் சஞ்சிகையாவது தமிழகத்தில் இருந்து வெளியாகிறதா?

    மொதல்ல பேஸ்மென்ட் போடுவோம் சார். தமிழ் வழி ஆராய்ச்சி எல்லாம் அடுத்த கட்டம் தான்.

    Let’s not put the horse before the cart!

    • // Let’s not put the horse before the cart!

      ஹி ஹி. “Let’s not put the cart before the horse!” . இங்கிலீஷ்ல எழுதினாலே பிரச்சனைதான் 🙂

Leave a Reply to Venkatesan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க