privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமல்லாக்கத் துப்பலாமா பெற்றோர்களே ? எழுத்தாளர் இமையம்

மல்லாக்கத் துப்பலாமா பெற்றோர்களே ? எழுத்தாளர் இமையம்

-

  • விருத்தாசலத்தில் 07.06.2014 அன்று நடந்த கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டில் எழுத்தாளர் இமையம் ஆற்றிய உரை:
எழுத்தாளர் இமையம்
எழுத்தாளர் இமையம்

ந்த மாநாட்டின் நோக்கம் அரசு பள்ளிகள் சீரழிக்கபடுவது, அதை யார் சீரழித்தது, காரணம் என்ன? அரசு பள்ளிகள் யாருடைய சொத்து, அதை காப்பாற்றுபவர்கள் யார்? என்பதை தீர்மானிப்பது ஆகும்.

யாருக்கு நன்மை பயக்குமோ அவர்கள்தான், அதாவது பெற்றோர்களே தங்களுடைய சொத்தை தாங்களே சீரழிக்கிறார்கள். இத்தகைய மனோநிலையை உருவாக்கியவர்கள் யார்? தனியார்கல்வி தான் சிறந்தது. ஆங்கில வழியில் படித்தால்தான் பல்வேறு நாடுகளுக்கு வேலைக்கு போகலாம். இதற்காக எத்தகைய இழப்புகளையும் சந்திக்கலாம். எத்தகைய அவமானத்தையும் ஏற்கலாம். இது உண்மையில் நம்மை நாம் அழித்து கொள்வது ஆகும். நம் குழந்தைகளை நாமே முடமாக்குகிறோம்.

தனியார் பள்ளியில் படித்தால் தான் அறிவு வளரும் என, நடக்க முடியாத 3 வயது குழந்தையை வேனில் நீண்ட தூரம் பள்ளிக்கு அனுப்புகிறோம். உடல் ரீதியான ஊனத்தை வெல்லமுடியும். இத்தகைய மன ஊனத்தை என்ன செய்வது?

டாக்டராகிவிடலாம்,என்ஜினியராக ஆகிவிடலாம் அதற்கு தனியார் பள்ளிதான் ஒரே வழி என நாம் எல்லோரும் கற்பனையில் இருக்கிறோம். என்ஜினியர் நிலைமை இன்று பரிதாபமாக உள்ளது. எல்.கே.ஜி முதல் என்ஜினியரிங் வரை ஆங்கிலத்தில் படித்து ஐ.டி. கம்பெனியில் வேலை பார்ப்பது ஒவ்வொருவரின் லட்சியம், கனவு. பெற்றோர்களுக்கும் அதுதான் கனவு.

ஆனால் 25 ஆண்டுகள் படித்து 7 ,8 ஆண்டுகளில் தனியார் கம்பெனி என்னை ரிட்டையர்மென்ட் செய்து விட்டது, முதுகு வலி,மன உளைச்சலால் இன்று அவதிப்படுகிறேன் என்றாலும் தனியார் பள்ளியில் படித்தவன் அறிவாளி, அரசு பள்ளியில் படித்தவன் முட்டாள், ஆங்கில வழியில் படித்தவன் அறிவாளி, தமிழ் வழியில் படித்தவன் முட்டாள் என்று பேசுபவர்களை எப்படி புரிந்து கொள்வது? ஒருவகையில் இது சாதி நம்பிக்கை போன்றதுதான்.

உலகத்தில் எந்த நாட்டிலும் தாய் மொழியில் பேசுவதை இழிவாக பார்ப்பதில்லை. அப்படி பார்க்கும் ஒரு சமூகம் தமிழ்ச் சமூகம் மட்டும்தான். ஜெர்மனியில், பிரான்சில்,போலந்தில்,ரஷ்யாவில், ஜப்பானில்,சீனாவில் தாய்மொழிதான் பேசுகிறார்கள், படிக்கிறார்கள். அங்கு ஆங்கிலம் கிடையாது. இந்தியாவில்தான் அதிலும் குறிப்பாக தமிழகத்தில்தான் ஆங்கிலத்தில் படித்தால் உயர்வானது என்ற கற்பனை இருக்கிறது. அது ஒருத்தனுக்கு ஏற்பட்டால் பரவாயில்லை, நாடு முழுவதும் இந்த கற்பனை விஷவிதையாக தூவப்பட்டுள்ளது. அதிலிருந்து தப்பித்தவர்கள்தான் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கிறர்கள்.

இந்த நோய்க்கூறை எப்படி சரிசெய்வது? அதற்கு உரிய மருந்து என்ன?

தாய் மொழியில் படித்தால்தான் புரிந்து கொள்ள முடியும், ஜீரணம் ஆகும், இதுதான் அறிவியல் பூர்வமாக நிருபிக்கபட்ட உண்மை. காந்தி – நேரு கூட தாய் மொழயில்தான் கல்வி கற்க வேண்டும் என சொன்னார்கள். உலக தலைவர்கள், அறிவாளிகள் எல்லாம் தாய்மொழி கல்விதான் சிறந்தது என பேசுகிறார்கள். நாம் அவர்களை தலைவர்களாக ஏற்கிறோம். ஆனால் அதை பின்பற்றுவதில்லை.

துணிக்கடை விளம்பரம் போல் தனியார் பள்ளிக்கூடங்கள் விளம்பரம் செய்கின்றன. 50 பிளக்ஸ் போர்டு போட்டு விளம்பரம் செய்யும் ஜெயப்பிரியா என்ற பள்ளிக்கூடம், எல்.கே.ஜி பையனுக்கு குதிரை ஓட்ட சொல்லித்தாரானாம்! அந்த குழந்தையால் உக்காந்துகிட்டு போக முடியுமா? நமக்கு அறிவு வேணாமா? இன்னொரு பள்ளிக்கூடம் ஏ.சியிலேயே பாடம் சொல்லித்தரானாம்!

கல்விக்கு அடிப்படை என்ன! ஆசிரியர் வேணும், படிக்க புத்தகம் வேணும், படிக்க மாணவன் – இந்த மூன்றும் தான் கல்விக்கு அவசியம். இதை நீக்கி விட்டு எதை எதையே விளம்பரம் செய்கிறார்கள். பெற்றோர்களும் ஓடுகிறார்கள். பெற்றோர்களின் பேராசை அதிலும் கொடுர ஆசையாக இருக்கிறது. பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி என குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வதைக்கிறார்கள். இதை அரசும் வேடிக்கை பார்க்கிறது. மேலும் தனியார் பள்ளிகளை அரசு ஊக்குவிக்கிறது.

எழுத்தாளர் இமையம் மேற்கோள்தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு என அரசு கெஞ்சி பெறுகிறது. தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் வசதி படைத்தவர்கள்தான். அவர்களுக்கான பணத்தை அரசு கொடுக்கும் என்கிறார்கள். இதனால் பயனடைபவர்கள் அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் பிள்ளைகள்தான். அவர்களுக்காக போடப்பட்ட சட்டம் தான் தனியார் பள்ளகளில் 25% ஒதுக்கீடு.

அரசு பள்ளிகளில் அனைத்தும் இலவசம் என்பதால் மதிப்பு குறைவாக பார்க்கிறார்கள். அரசு பள்ளிகளில் ஆசிரியர் இல்லை, கழிப்பிடம் இல்லை, போதிய வகுப்பறை இல்லை, என பேசுகிறார்கள். விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கிட்டத்தட்ட பத்து ஏக்கரில் அமைந்துள்ளது. போதிய கட்டிடங்கள் இருக்கிறது. இன்னும் 5000 மாணவிகள் படிக்கலாம். பல வகுப்பறைகள் காலியாக உள்ளன. அது போல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 13 ஏக்கரில் அமைந்துள்ளது. இன்னும் 5000 மாணவர்கள் படிக்கலாம். மரங்கள் சூழ இருக்கிறது. நீங்கள் நாளையே சென்று பாருங்கள், இது போல் கட்டமைப்பு விருத்தாசலத்தில் எந்த பள்ளிக்கும் கிடையாது.

நேற்று 20 பள்ளிகளை ஆய்வு செய்தோம். அவற்றில் போதுமான ஆசிரியர்கள், மாணவர்கள், இருக்கிறார்கள். போதுமான வகுப்பறையும் இருக்கிறது. ஆனால் ஆசிரியர்கள் பொறுப்பானவர்களாக இல்லை. அது உண்மை.

எந்த அரசு ஊழியர் குழந்தையாவது அரசு பள்ளிகளில் படிக்கிறதா? ஆசிரியருக்கு தன் மேலேயே ஒரு நல்லாசிரியன் என்ற நம்பிக்கை இல்லை. ஆசிரியர் குழந்தை யாராவது அரசு பள்ளிகளில் படிக்கிறதா? ஞாயிற்றுக்கிழமையானால் 20 கார்கள் நாமக்கல் தனியார் பள்ளிகளுக்கு போகின்றது. அதில் 18 கார் ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகளை சென்று பார்க்கிறார்கள். தனியார் பள்ளிகளை உருவாக்கியதே அரசுபள்ளி ஆசிரியர்கள்தான். அரசு அதிகாரிகள்தான்.

பெற்றோர்களே! உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். எல்.கே.ஜி முதல் +2  வரை தனியார் பள்ளிதான் தரம் என விரும்பி செல்லும் பெற்றோர்களே,     அரசு நடத்தும் அண்ணா யுனிவர்சிட்டிக்கு, அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிக்கு அரசு வேலை வாய்ப்பிற்கு ஏன் வருகிறிர்கள்? இவைகள் தரமற்றது என ஏன் சொல்ல மறுக்கறீர்கள்? ரேசன் கடையில் பொருள் வாங்கணும், டாஸ்மாக் சாராயம் குடிக்கணும், அதற்கு அரசு வேணும். அரசு தரும் இலவச மிக்சி, கிரைண்டர் வேணும்!

ஆனால் அரசு பள்ளிகள் தரமற்றது, பிள்ளைகளை சேர்க்க மாட்டோம் என்பது சரியா? அரசாங்கம் என்பது நீங்கதானே, உங்களை நீங்களே பழிக்கிறீர்களே, உங்கள் மீது நீங்களே எச்சி துப்பிக்கொள்வதில்லையா? நிர்வாகம் சரியில்லை என உங்களையே கேவலபடுத்திக்கொள்வது முட்டாள்தனமாக தெரிவில்லையா?

அரசு பள்ளி சரியில்லை என்று சொல்லும் பெற்றோர்களே! என்றைக்காவது பள்ளிகூடத்திற்கு போய் ஆசிரியரிடம் ஏன் பாடம் நடத்தல, ஏன் பள்ளிகூடத்துக்கு லேட்டா வந்த, சத்துணவுல ஏன் உப்பு இல்ல, என யாராவது கேட்டதுண்டா? ஊகத்தில் அரசு பள்ளி சரியில்லை என்று பேசிக் கொண்டிருப்பது சரியா?

இன்றைக்கு ஆசிரியர் சமூகம், பொறுப்பற்றதாக சொரணையற்றதாக மாறிவிட்டது. நானும் ஒரு ஆசிரியர்தான். எனக்கு மாத சம்பளம் ரூ.45,000. என் மனைவியும் ஆசிரியர், அவர் சம்பளம் ரூ.51,000 கூட்டினால் 96,000. இது போன்று உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் காரில் வருகிறார்கள். ஒரு காலத்தில் ஆசிரியர் நடந்து வந்தார், சைக்கிளில் வந்தார் என கேள்வி பட்டோம், இன்று 18 லட்சரூபாய்  ஏ/சி காரில் ஆசிரியர்கள் வருகிறார்கள். சொகுசாக இருக்கட்டும், அதை குற்றம் சொல்லவில்லை.

ஆனால் கடமையை செய்கிறார்களா? உன்னை நம்பி வந்த மாணவர்களுக்கு மனசாட்சிபடி பாடம் நடத்துகிறாயா என்று கேட்கிறேன். இவ்வளவு வசதி படைத்த வாழ்க்கை நிலமையில் இருக்கும் ஆசிரியர் எப்படி ஏழை மாணவன் தோளில் கைபோட்டு உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்பார்? ஆசிரியர் மாணவன் உறவின் இடைவெளி அதிகரித்து கொண்டே போகிறது. ஏ/சி காரில்  பள்ளிக்கு சென்று இறங்கும் ஆசிரியர் ஆசிரியை, ஒரு மாணவனை தொட்டு உனக்கு தலைவலியா உடம்பு சரியில்லையா? என்ன பிரச்சினை என்று எப்படி கேட்பார்?

எழுத்தாளர் இமையம் மேற்கோள் 1ஆசிரியர்களும் ஒரு அதிகார வர்க்கமாக மாறிவருகிறார்கள். இதுதான் ஆபத்தானது. இதனால் ஆசிரியர் மாணவன் உறவின் இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது.

தனியார் பள்ளிகளில் டிசிப்பிளின் பற்றி பேசும் பெற்றோர்களே, டிசிப்பிளின் வேற, கட்டுப்பாடு வேற. எல்.கே.ஜிக்கு ஒரு லட்சம் கட்டுகிறீர்கள். ஆனால் வாட்சுமேன் கேட்டுக்கிட்ட உங்கள நிறுத்துறான். அப்பாயின்மெண்ட் குடுத்தாதான் முதல்வரை, தாளாளரை பார்க்க முடியும். அரசு பள்ளிகளில் நீங்கள் எப்போதும் சென்று ஆசிரியர்களை ,தலைமை ஆசிரியரை பார்க்க முடியும். உங்கள் பிள்ளைகளை பற்றிய குறைகளை சொல்ல முடியும். ஏன் ஆசிரியரை போய் ஏன் பாடம் நடத்தல என விரட்ட முடியும்.

அரசு மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு ஒரு பெயர் இருக்கும். அந்த சொட்டத் தலையன் வெளியில் வரட்டும், பார்த்துக் கொள்கிறேன் என பேசுவார்கள். எந்த பள்ளிகூட தலைமை ஆசிரியருக்கம் ஒரு பட்ட பெயர் உண்டு. ஆனால் தனியார் பள்ளிகளில் இது போல் செய்ய முடியுமா?

படிப்பு என்பதை தவறாக புரிந்து கொண்டுள்ளோம். தனிமனித ஆளுமையை வளர்ப்பது, சுயசிந்தனையை வளர்ப்பது, முற்போக்கு சிந்தனையை வளர்ப்பது, தன்னைத்தானே தயாரித்து கொள்வது, சமூகத்தை புரிந்து கொள்வது, கடவுளே என்னை காப்பாற்று என்பதல்ல, சமூகத்தை புரிந்து கொள்வது அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வது! ஆனால் கல்வி என்பது வேலை,பணம், பதவி, என்பதற்காகதான் என தவறாக புரிந்து கொண்டுள்ளோம்.

நாம் எவ்வளவு அசிங்கமாக இருந்தாலும் பெற்றோரைப் பொருத்தவரை நாம் அழகானவர்கள். அதுபோல் அரசு பள்ளிகளை குறை சொல்லாமல் அதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். ஒரு ரூபாய் செலவில்லாமல் படிப்பதை நாமே புறக்கணித்து எட்டி உதைத்து விடக்கூடாது. நம்மை நாமே சூடு வைத்து கொள்வது, நமக்கு நாமே சூன்யம் வைத்துக் கொள்வது ஆகும்.

எனவே பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேருங்கள் என கூறி இந்த மாநாட்டிற்கு பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி முடிக்கிறேன்.

எழுத்தாளர் இமையத்தின் வலைத்தளம் – எழுத்தாளர் இமையம்

______________________________________________________

–    தகவல: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்

  1. Excellent speech by Mr Imayam
    But still we need to fight scientifically , specifically, in an highly elevated platform .
    unheard ears , deaf ears , “selective deaf” ears are to be the main targets .
    regards
    GV

  2. இங்கு பல விடயங்கள் நன்றாக அலசப்பட்டுள்ளன. அதேநேரம் சில விடயங்கள் நடைமுறைக்கு ஒவ்வாதவை.
    உதாரணத்திற்கு, // “அரசு பள்ளி சரியில்லை என்று சொல்லும் பெற்றோர்களே! என்றைக்காவது பள்ளிகூடத்திற்கு போய் ஆசிரியரிடம் ஏன் பாடம் நடத்தல, ஏன் பள்ளிகூடத்துக்கு லேட்டா வந்த, சத்துணவுல ஏன் உப்பு இல்ல, என யாராவது கேட்டதுண்டா? ஊகத்தில் அரசு பள்ளி சரியில்லை என்று பேசிக் கொண்டிருப்பது சரியா? ” //. இப்படி யாராவது கேட்டால் அவர்களுடைய பிள்ளைகள் மேற்கொண்டு அப்பாடசாலையில் படிப்பதை மறக்க வேண்டியதுதான் என்பதே இன்றைய யதார்த்தம்.
    நானறிந்த திறமையான ஒரு மாணவன் ஒரு ஆசிரியரினால் தான் தவறாக தண்டிக்கப்பட்டதற்காக ஆதாரத்துடன் அதிபரிடம் புகார் கொடுத்தான். அன்றிலிருந்து ஆசிரியர்கள் அனைவருக்கும் அவன் பொது எதிரியாகி, ஒதுக்கி வைக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஏளனப் படுத்தப்பட்டு, பாடசாலைப் படிப்பையே இடைநடுவில் கைவிட வைக்கப்பட்டான்.
    ஏதோ இலவசமாகக் கொடுப்பதை, எது கொடுத்தாலும், வாங்கிக்கொள்ள வேண்டியதுதான் என்பதே பெரும்பாலான அரச பாடசாலை ஆசிரியர்களின் நிலைப்பாடு. கொடுக்கப்படும் ஊதியத்திற்கு என்ன செய்கிறோம் என்பதோ, அவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் மக்களின் வரிப்பணத்திலிருந்து வருகிறது
    என்பதோ அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

  3. //ஆனால் வாட்சுமேன் கேட்டுக்கிட்ட உங்கள நிறுத்துறா[ர்]//

    இவ்வளவு பேசும் இவரே வாட்சுமேன்னுக்கு ‘ன்’ போட்டுப் பேசுகிறார். எங்கே போய் முட்டிக் கொள்வது?

    இந்த ‘அறிவுஜீவிகள்’ எப்போது திருந்துவது?

    • வாட்ச்மேன் என்பவரை அவன் இவன் என்று ஏகவசனத்தில் பேசுவதுதான் மரியாதையா? வாட்ச்மேன் தானே என்கிற கேவலமான பார்வையே இதன் பின்னால் இருக்கிறது. பள்ளியின் தாளத்துக்கு ஆடும் வாட்ச்மேன்களை தனியான எதிரி போல் பாவிக்கவேண்டியதில்லை. அதிகாரம் பள்ளியின் நிர்வாகத்திடம் இருக்கிறது. அதனை நிறைவேற்றும் பூசாரி அவர். அவ்வளவுதான்..

  4. //. ஜெர்மனியில், பிரான்சில்,போலந்தில்,ரஷ்யாவில், ஜப்பானில்,சீனாவில் தாய்மொழிதான் பேசுகிறார்கள், படிக்கிறார்கள். அங்கு ஆங்கிலம் கிடையாது.//

    அறிவு ஜீவிகளா , அது எல்லாம் நாடுகள் . நம்மூரில் ஒரு மணி நீரம் கார் ஓட்டினால் வேறு மொழி பேசும் ஊரில் பொய் நிற்போம்

    அங்கே ஆங்கில புத்தகங்கள் நிறைய மொழி பெயர்கபட்டு உள்ளன . அவர்களுடைய ஊரில் அறிவியல் சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன அதனாலா அதுவே அலுவலக மொழி .

    நம்மூரில் தமிழ் மொழியை கொண்டு பட்டி மன்றம் வேண்டுமானால் நடத்தலாம் . கூந்தலுக்கு மணம் இருந்ததா என்று ஆராய்ச்சி செய்யலாம் . இல்லை அரசியல்வியாதி ஆகலாம் .

    அறிவயல் தெரிய வேண்டும் என்றாலும் , Youtube இல் ரெண்டு வீடியோ பார்த்து அயன்ச்டீன் சொன்ன கிராவிட்டி எது என்று புரியணும்னா ஆங்கிலம் வேண்டும் .

    வேலைக்கு போய் சம்பாதித்து குடும்பத்தை உயர்த்த ஆங்கிலம் வேண்டும்

    பெற்றோர்கள் நன்றாக புரிந்து வைத்து இருகிறார்கள் .

    • வெறும் ஆங்கில மோகம் கூடாது. ஆங்கிலம் கற்க வேண்டும். அதுதான் இந்தியாவில் உள்ள பன்மொழித்தன்மையை இணைக்கும் பாலம். அதுபோல உலக அறிவை தமிழுக்கு கொண்டு வரும் வழியும் கூட. ஆனால் இங்கு பெற்றோர்கள் தமிழ் கற்பதே கேவலம் என்ற இடத்தில் போய் நிற்பது தான் தவறானது. பிற்காலத்தில் அடையாளம் என்பதே இல்லாமல் போய்விடும்.

      • //ஆனால் இங்கு பெற்றோர்கள் தமிழ் கற்பதே கேவலம் என்ற இடத்தில் போய் நிற்பது தான் தவறானது. பிற்காலத்தில் அடையாளம் என்பதே இல்லாமல் போய்விடும் //

        நான் ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதம் படிப்பதை மட்டுமே ஆதரிக்கிறேன் . தமிழ் கட்டாய பாடமாக்கப்பட வேண்டும் . ஆனால் அதற்கு முன்னர் , குழந்தைகளை கற்கால இலக்கியங்களை மனபாடம் செய்ய வற்புறுத்துவதை ஆதரிக்க வில்லை .
        தமிழ் இரண்டாம் தாளில் இலக்கியங்களின் கருவை எழுதினாலே மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

        இப்படி குழந்தைகளை கடின இல்லகியங்களை மனபாடம் செய்ய சொல்வதால் , அவை பயந்துவிடுகின்றன . பெற்றோரும் தமிழ் கடினம் முக்கியமாக மார்க் வாங்க முடியாது என்று தமிழ் தவிர்க்கின்றனர்

        எனது பக்கத்துக்கு வீட்டு பெண் பிரெஞ்சு படிக்கிறாள் . எதற்கு படிக்கிறாய் அதனால் என்ன பயன் என்று கேட்டால் , மதிப்பெண் பெறுவது எளிது என்றாள். சினிமா போஸ்டரைய எழுது கூட்டிதான் படிப்பாள்

        ஆக இப்படி ஒரு சமுதாயம் உருவாக தமிழ் இல்லகியவாதிகளின் மேட்டிமை தான் காரணம் .

    • ராமன் ,
      //அங்கே ஆங்கில புத்தகங்கள் நிறைய மொழி பெயர்கபட்டு உள்ளன . அவர்களுடைய ஊரில் அறிவியல் சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன அதனாலா அதுவே அலுவலக மொழி . //

      அதெல்லாம் சரி, இங்க ஏன் அப்படி செய்ய முடியவில்லை என்பதை உங்க தூங்கிகிட்டு இருக்கிற மனசாட்சியை எழுப்பி பதில் சொல்ல சொல்லுங்க ….

      • நானூறு கோடிக்கு பந்தல் போட்டு கனிமொழியின் கவிதையில் விஞ்சி நிற்பது சமுதாயா பார்வையா இலக்கிய சுவையா என்று விவாதிக்கும் சமுதாயம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

        மொழி பெயர்த்துவிட்டால் புத்தகம் கிடைத்துவிட்டால் போதுமா ? வேலை வேண்டாமா ? அதற்கான அறிவயல் கட்டமைப்பு உள்ள உற்பத்தி நிறுவனங்கள் வேண்டாமா ?

        There is no eco system for that.

    • Hi Raman,

      //அறிவு ஜீவிகளா, அது எல்லாம் நாடுகள்//

      The European countries like France, Germany are around the same size as that of our states. In addition, their population is much smaller than that of our states.
      It is actually in Europe that ஒரு மணி நீரம் கார் ஓட்டினால் வேறு மொழி பேசும் ஊரில் பொய் நிற்போம். (Such speed is not possible in our roads, even after new highways).

      //அங்கே ஆங்கில புத்தகங்கள் நிறைய மொழி பெயர்கபட்டு உள்ளன//

      They both create and translate. We can do too.

      //கிராவிட்டி எது என்று புரியணும்னா ஆங்கிலம் வேண்டும் .//

      ஆங்கிலம் வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. எத்தனை மொழி வேண்டுமானால் கற்றுக்கொள்ளலாம். தாய்மொழிக்கல்வி அதற்குத்தடை அல்ல விடை. நான் பள்ளிக்கல்வியை தமிழில் தான் படித்தேன். ஆங்கிலம் எனக்குத் எந்தவிதத்திலும் தடையில்லை.

      • //The European countries like France, Germany are around the same size as that of our states. In addition, their population is much smaller than that of our states.//

        Compare with GDP.

        //They both create and translate. We can do too./

        What about jobs? you need a complete eco system

        //தாய்மொழிக்கல்வி அதற்குத்தடை அல்ல விடை//

        You had enough time to improve your english knowledge todays world has no time for it.
        You had to learn english to spread your wings later. I am just supporting to do it early

        • ராமன் ,

          //you need a complete eco system //
          சரியானப் புரிதலை வைத்துள்ளீர்கள்.

          ஆனால் அதைப் பெறுவது எப்படி? இருக்கும் இந்த அரமைப்பில் இருந்துக் கொண்டே நாம் பெற முடியுமா என்றால் , பதில் முடியாது என்று தான் வருமே ஒழிய , சிறு சிறு சீர்திருத்தங்கள் மூலம் complete eco system ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் கண்கூடு.

          அனைவருக்கும் (ஆங்கில?) கல்வி,உணவு,மருத்துவம் என்பது ஏற்றத் தாழ்வு மிக்க இந்த தனிஉடைமை சமுதாய அமைப்பில் கிடைக்காது. எங்களை ஆங்கில மொழிக்கு எதிரியாய் நிறுத்தாதீர்கள். இன்று கிடைத்து கொண்டிருக்கும் இந்த ஆங்கிலக் கல்வி முறையில் கிடைத்தது என்னவோ, சொற்ப வேலை வாய்ப்புகள் மட்டுமே(?) இந்த கல்வி முறையால் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததா எதாவது உள்நாத்து அல்லது இங்கு நன்கு ஆங்கிலம் படித்த அறிவாளிகள் வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு சேவகம் செய்ததை தவிர என்ன கிழித்தார்கள்.

          எந்த கல்வி முறை சமூக அறிவையும், சமுதாய உணர்வையும் ஊட்டி வளர்க்குமோ அந்த கல்வி முறையால் மட்டுமே அணைத்து மக்களும் பங்கு பெரும் உள்நாட்டு உற்பத்தி மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்ய இயலும். அது வரையில் இந்த கல்வி அமைப்பு உற்பத்தி செய்யும் ஒரு சில அறிவுஜீவிகளை / அறிவியலாளர்களை அதிகார வர்கத்தினரை பார்த்து நாம் மெச்சிக் கொள்ள வேண்டியது தான்.

          நன்றி

  5. Has Raman ever read science books in Tamil?What is his contribution to write science books in Tamil?He will show his superiority(ignorance) by writing this type of silly comments.That is all.He has enough leisure to ridicule his own language.

  6. கட்டுரையாளரின் கூற்று ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இருந்தாலும்,சிலதில் நான் மாறுபடுகிறேன்.அரசுப் பள்ளிகளின் இந்த அவல நிலைக்கு அரசும் ஆசிரியர்களும் தான் முக்கிய காரணம்.இதில் பெற்றோர்களின் பங்கு மிகவும் குறைவு.அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு எந்த கட்டுப் பாடும் கிடையாது,அவர் பாடம் நடத்தினாலும் அல்லது பாடத்திட்டத்தை முடித்தாலும் முடிக்காவிட்டாலும் கேள்வி கேட்பார் யாருமில்லை.தலைமை ஆசிரியர் எந்த அதிகாரமும் இல்லாத பொம்மை.தனக்கு கீழ் வேலை செய்யும் ஆசிரியர் சரியாக வேலை செய்ய வில்லை என்று தெரிந்தாலும் அவருக்கு நடவடிக்கை எடுக்க,எந்த வகையான அதிகாரமும் கிடையாது.
    மற்ற நாடுகளில் ஒரு 1 முதல் 10 வகுப்புகள் உள்ள பள்ளியில் ஒரு தலைமையாசிரியர்,இரு உதவி தலைமையாசிரியர்கள்,பாட சம்பந்தமான 2 அல்லது 3 கண்கானிப்பாளர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் ஆசிரியர்களின் வகுப்புகளை கண்காணித்து,மாதாந்தர அறிக்கையை அந்த சரகத்தில் உள்ள கல்வி ஆய்வாளருக்கு அனுப்ப வேண்டும் .கல்வி ஆய்வாளர் தலைமையில் ஒரு குழு ஆண்டில் ஒருமுறையாவது பள்ளிகளுக்கு வந்து அத்துனை ஆசிரியர்களின் வகுப்பு நடத்தும் விதத்தை கண்காணித்து அதுக்கு தகுந்தது போல அப்ரைசல் மட்டும் பயிற்சி வகுப்புகள்(வொர்க் ஷாப்) கொடுக்கப் படுகிறது.அனைத்து ஆசிரியர்களுக்கும் வருடத்துக்கு 15 முதல் 20 மணி நேரம் அவர் சார்ந்த துறையில் புதிய கல்வி முறை குறித்த பாடங்களை பயிற்சிகள் கொடுக்கப் படுகிறது.இன்னும் இத்தியாதி இத்தியாதிகள் உள்ளன.கட்டமைப்பு என்பது,வெறும் கட்டிடங்களும் ஏக்கர் நிலங்களும் அல்ல.இப்படியான கட்டமைப்பு தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ளதா?

    மேலும் கட்டமைப்பு வசதிகளில் கழிப்பறை வசதி மிகவும் முக்கியமானது.இன்று எல்லோரும் வீடுகளில் நல்ல கழிப்பறைகளை பயன் படுத்துவதால் மாணாக்கர்கள் சுத்தமான கழிப்பறைகளை எதிர் பார்கிறார்கள்,அரசு பள்ளிகளில் எந்த பள்ளியில் உருப்படியான தண்ணீர் வரும் கழிப்பறைகள் உள்ளது.அதை முதலில் சரி செய்யுங்கள்.பின்னர் அனைத்து அரசு ஊழியர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று சட்டமும் இயற்றுங்கள்.பின்னர் எங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம்.

    • எம்.ஏ.காதர்,

      நல்லா கெளப்புரீங்க பீதிய.

      //முதலில் சரி செய்யுங்கள்.பின்னர் அனைத்து அரசு ஊழியர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று சட்டமும் இயற்றுங்கள்.பின்னர் எங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம்//

      இதை யாருகிட்ட சொல்றீங்க ..

      • //எனவே பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேருங்கள் என கூறி இந்த மாநாட்டிற்கு பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி முடிக்கிறேன்.//
        //இதை யாருகிட்ட சொல்றீங்க ..//
        கட்டுரை ஆசிரியரிடம் தான் சொல்லுகிறேன்.முதலில் அரசு தனது கல்விக் கூடங்களை தரமாக்கட்டும்,பின்னர் ஆசிரியர்களும்,அரசு ஊழியர்களும் அந்தப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்த்து முன்னுதாரணத்தை உண்டாக்கட்டும்.பின்னர் எங்களை போன்ற பெற்றோர்களிடம் வாருங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் படி.கட்டுரையாளர் வீராவேசமாக பேசியதை படித்து ஆணியே புடுங்காத அரசுப் பள்ளி ஆசிரியர்களை நம்பி, நாளையே மகனையோ மகளையோ அரசுப் பள்ளியில் சேர்த்து படிப்பை பாழ்படுத்த பெற்றோர்கள் என்ன மடையர்களா ?

        • 70 சதவீதம் மாணவர்கள் அரசு பள்ளியில்தான் இன்று படிக்கிறார்கள்.

        • எம் .ஏ.காதர்,

          நாம் இன்று வசதியாய் வாழ செருப்பாய் உழைத்துக் கொண்டிருக்கும் பெரும்பாலான உழைக்கும் வர்க்கத்தினருடைய குழந்தைகள் அரசுப் பள்ளியிலே படிக்கிறார்கள். ஆம், அவர்கள் மடையர்கள் தாம் ,

          கட்டுரையாளர் , வெறும் வீராவேசமாக மட்டும் பேசாமல், அவர் சார்ந்த புரட்சிகர அமைப்புகள் போராடிக் கொண்டு தான் இருக்கின்றனர். நீர் என்ன வீட்டுக்குள் உட்கார்ந்து கிழித்து கொண்டு இருக்கிறீர்? வாரும் நாமும் அவர்களுடன் சேர்ந்து போராடுவோம்.

  7. Is Khadar is very sure that all private schools have clean toilets especially for girls?Even schools that collect huge fees do not have clean toilets.His comments about Govt school teachers are sweeping in nature.In the recently published plus two and 10th std results,many Govt schools have shown good results.Chennai Corporation schools have also shown good results.The top scorers in these schools can not afford to go for private coaching.Due to special classes conducted by their teachers only,they scored good marks.In TN also,refresher courses are conducted for teachers.In which country,extra academic work like census,election work,collecting freebies from taluk centres to school are entrusted to teachers?In many schools,teachers are forced to maintain toilets and class rooms.In which country,5 classes are entrusted to a single teacher at a time?In how many Govt schools,all infrastructure facilities are available?Is he sure about the quality of private school teachers?Does he know that there are no clerks in Govt schools and the HM is expected to maintain many records and transmit many SMS everyday to the higher-ups?Does he know that in many schools there are no teachers for many subjects?All of us to fight with the authorities to strengthen Govt schools since 85% of our students,especially from rural areas are studying in these schools only.

    • yes I’m sure,i en-quired my children school,my friends and relatives also..
      ஐயா,பெரும்பான்மை தனியார் பள்ளிகள் பற்றியும் பெரும்பான்மை அரசுப் பள்ளிகள் பற்றியும் பேசுவோம்.அதோ அந்த அரசுப் பள்ளி நல்லா இருக்கு,இதோ இந்த அரசுப் பள்ளி ஆசிரியர் நன்றாக வேலை செய்கிறார் என்று கூற வேண்டாம்.இந்த கட்டமைப்புகளை வைத்து அப்படியான தேர்ச்சியை கொடுத்த அந்த ஆசிரிய சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்.//In many schools,teachers are forced to maintain toilets// ஆசிரியர்கள் பாடங்களையே ஒழுங்காக நடத்தாத போது,தலைமையாசிரியரால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை,அவர்க்கு சம்பந்தம் இல்லாத கழிப்பறைகளை கழுவ சொன்னால்,போய்யா என்று போய் விடுவார்கள்.எதோ ஒருவர் பயந்து செய்யலாம் அதுவெல்லாம் கவைக்குதவாது. மேலும் நான் முதலில் இவைகளுக்கான காரணியாக சுட்டுவது அரசையே.அரசு பள்ளிகளில், அலுவலக நிர்வாகத்தை கவனிக்க தனி உதவி தலைமை ஆசிரியர்,பள்ளியின் பாட திட்டத்தை நிர்வகிக்க தனி உதவி தலைமை ஆசிரியர்.மேலும் கண்காணிப்பாளர்கள்,தலைமை ஆசிரியருக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இவைகளை தர வேண்டும் என்றே குறிப்பிட்டுளேன்.அரசு முதலில் இவைகளை சரி செய்ய வேண்டும்.பெரும்பான்மை ஆசிரியர்களுக்கு கடிவாளம் இட்டால் தான்,நல்ல படிப்பு கிடைக்கும்.வெறும் திறமையான ஆசிரியர்கள் மட்டும் இருந்தால் போதாது,அவர்கள் வேலையும் செய்தால் தான் நல்ல விளைவு கிடைக்கும்.தனியார் பள்ளிகளில் திறமை குறைந்த ஆசிரியர்கள் இருந்தாலும் அவர்களை வைத்து நல்ல வேலை வாங்கி நல்ல விளைவை (result) தர முடிகிறதே!! எனவே பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேருங்கள் என்ற வெற்று அழைப்பு பயன் தராது.ஆசிரியர்களை அரசு பாடம் நடத்த மட்டும் பயன் படுத்த வேண்டும்.விடுப்பு நாட்களில் கணக்கெடுப்பு,தேர்தல் வேலைக்கு அனுப்புவதை தடுக்க இயலாது.அவர்களை விட்டால் அரசுக்கு வேறு நடுநிலையான ஆட்கள் கிடைக்க மாட்டார்கள்.ஆனால் வெறும் குறைகள் மட்டும் சொல்லிக் கொண்டிராமல் நீங்கள் கூறியது போல //we all of us to fight with the authorities to strengthen Govt schools since 85% of our students,especially from rural areas are studying in these schools only//செயல் படுவோம்.

      • தரமில்லாத பள்ளியில் நான் வேலை செய்யமாட்டேன் என்று இதுவரை எந்த ஆசிரியரும் வேலையை விட்டு சென்றவர் எத்தனைபேர் ?

      • Mr.Khadar,I am talking about the performance of majority Govt schools in rural areas and maximum Chennai Corporation schools only.You would have gone through the news item in Dinamani dated 15th.In the MBBS rank list,out of 27539 students,10061 students are first generation graduate aspirants.Out of 132 students who have secured cut-off marks-200/200,19 are first generation graduate aspirants.Do you think these first generation graduate aspirants would be from urban areas or would have studied in private schools?Or 6031 SC students,903 SC(Arundhathiyar) students,216 ST students,5944 MBC students,11616 BC students who find their names in the rank list would have studied in private schools?In spite of lack of basic infrastructure,Govt school teachers are doing their job well.The above facts are proof of their good work.

  8. அரசு பள்ளியில் படித்தவர்களுக்கே இனி அரசு வேலை என்று சொல்ல எந்த ஒரு அரசியல் வாதிக்கும் தைரியம் கிடையாது. இன்றைய அதிகாரிகளுக்கும் தைரியம் கிடையாது. ஏன் தேர்தலில் நிற்க முடியாது என கூர தேர்தல் கமிசனுக்கு கூட தைரியம் கிடையாது. பின் எப்படி!!!

  9. Today”s Hindu carried a news report.One Mr V.P.Jayaseelan has cleared the Civil Services Exam with an All India Rank of 45.He is the topper from T.N.He studied till 10th std from Genguvarpatti Govt.School and plus-2 from Kambam Royappanpatti Alocious Higher Secondary School.He secured his Bsc.Agriculture from Madurai Agri.College and M.A in Tamil from Periyar University.Since he is very fond of Tamil as his mother tonque,he wrote the Civil Service Exam in Tamil.He says,”I wrote the Civil Service Exam in Tamil.THIS IS A VICTORY FOR TAMIL.I am a strong advocate of learning in mother tonque.Language is not a barrier to success in civil service examination”He stressed the need for State Govt.initiative of preparing a question bank for civil service exam.in Tamil.He is a proud son of Tamilnadu.Raman finds fault with Seminar on Kanimozhi”s poetry.Unless you appreciate Tamil poetry,how Tamil will grow?He does not want children to learn neither Sangam poetry nor modern poetry.My dear Raman,there was no poetry in Karkaalam.I do not thing our children are forced to learn by heart the verses from Kalingatthuparani.He will say that all Tamil literature to be thrown out.Raman is also from TN.

  10. தமிழ் வழி கல்வி குறித்து முன்னர் எழுதிய பதிவிலிருந்து

    ஆங்கில வழிக் கல்வி அறிவுடமையாகுமா.

    ஒரு குழந்தையை பள்ளிகூடத்தில் சேர்க்கும்போது அது ஓரளவுக்கு தாய்மொழியை இயல்பாக கற்று அதில் பேசும் ஆற்றலை கொண்டிருக்கிறது. அந்த குழந்தைக்கு பாடங்களை அதற்க்கு தெரிந்த மொழியில் கற்பித்தால் எளிதாக புரிந்து கொள்ளும்.அந்த குழந்தையின் புரிதல் தாய் மொழியின் உதவியால் முழுமையாக இருக்கும். “இளமையில் கல்” என்ற முதுமொழிக்கேற்ப தாய்மொழி வழியாக கல்வி கற்கும் குழந்தையின் கல்வி அடித்தளம் நன்றாக அமைகிறது. எனவே மேற்கொண்டு உயர்கல்வி கற்கும்போது அந்த குழந்தைக்கு எந்த இடர்பாடும் ஏற்படாது. எனவே உயர்கல்வி கற்று அதில் ஆய்வுகள் மேற்கொண்டு தத்தமது துறையில் சாதனைகளும் கண்டுபிடிப்புகளும் நிகழ்த்த முடியும். அதற்கு தாய்மொழி கல்வியே உறுதுணையாக இருக்கும். ஆகவே தாய்மொழியில் கல்வி கற்பிப்பதே அறிவியல் பூர்வமானது.

    உலகில் தொழில்மயமான,தொழில்வளர்ச்சியில் சாதனை படைத்த அமெரிக்கா,பிரான்சு, இங்கிலாந்து,செர்மனி,சப்பான்,சீனா என எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் யாரும் அந்நிய மொழிவழியாக கற்பதில்லை.தத்தமது தாய்மொழி வழியாகவே கற்கிறார்கள்.மேலை நாடுகளை விடுங்கள்.ஆசிய நாடுகளான சீனாவும் சப்பானும் ஆங்கிலம் வழியாக படிக்காத காரணத்தினால் தொழில் வளர்ச்சியில் பின்தங்கி விடவில்லை.அவை உலகில் முறையே இரண்டாவது மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கின்றன.இது என்ன எளிதான சாதனையா.இதை சாதிக்க எந்த அந்நிய மொழிவழிக் கல்வியும் அவர்களுக்கு தேவைப்படவில்லை.ஆங்கிலத்தை ஒரு மொழியாக கற்று கொள்வதே அவர்களுக்கு போதுமானதாக இருந்திருக்கிறது. அதுவும் கூட வெளிநாடுகளுடன் வணிக நிமித்தம் தொடர்பு கொள்ள மட்டுமே.நம்மை போன்று உள்ளுரில் பெருமைக்கு ஆங்கிலம் பேசி திரிவதற்கு அல்ல.

    http://thippuindia.blogspot.in/2010/09/blog-post_15.html

  11. If government can not take over all private schools, the following can be tried.
    1.The reservation system should apply only for govt school students.
    2.Government jobs only for govt school/college students.
    The students from private schools should not expect benefit from government.
    The present reservation system helps for rich people only.

  12. அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இமயத்தைப்போல் மாறவேண்டும். இப்போதுதான் ஆசிரியர்கள் பற்றியும் அவர்களின் பொறுப்பின்மை பற்றியும் பேசப்படுகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களை நாம் தனிப்பட்ட வகையில் விமர்சிப்பதைவிட, அவர்களை வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகக் கூட போராடாத சாருண்ணிகளாக மாற்றிவிட்ட ஆசிரியர் சங்கங்களைக் குற்றம் சொல்லவேண்டும். புதிய சிந்தனையுள்ள ஆசிரியர் இயக்கம் உருவாகவேண்டும். அப்போதுதான் இமயம் போன்றவர்களின் குரல்கள் வலிமையாக ஆட்சியாளர்களின் காதுகளில் ஒலிக்கும்.
    சு. மூர்த்தி. அரசுப்பள்ளி ஆசிரியர், காங்கயம்.

Leave a Reply to gopalasamy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க