privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமல்லாக்கத் துப்பலாமா பெற்றோர்களே ? எழுத்தாளர் இமையம்

மல்லாக்கத் துப்பலாமா பெற்றோர்களே ? எழுத்தாளர் இமையம்

-

  • விருத்தாசலத்தில் 07.06.2014 அன்று நடந்த கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டில் எழுத்தாளர் இமையம் ஆற்றிய உரை:
எழுத்தாளர் இமையம்
எழுத்தாளர் இமையம்

ந்த மாநாட்டின் நோக்கம் அரசு பள்ளிகள் சீரழிக்கபடுவது, அதை யார் சீரழித்தது, காரணம் என்ன? அரசு பள்ளிகள் யாருடைய சொத்து, அதை காப்பாற்றுபவர்கள் யார்? என்பதை தீர்மானிப்பது ஆகும்.

யாருக்கு நன்மை பயக்குமோ அவர்கள்தான், அதாவது பெற்றோர்களே தங்களுடைய சொத்தை தாங்களே சீரழிக்கிறார்கள். இத்தகைய மனோநிலையை உருவாக்கியவர்கள் யார்? தனியார்கல்வி தான் சிறந்தது. ஆங்கில வழியில் படித்தால்தான் பல்வேறு நாடுகளுக்கு வேலைக்கு போகலாம். இதற்காக எத்தகைய இழப்புகளையும் சந்திக்கலாம். எத்தகைய அவமானத்தையும் ஏற்கலாம். இது உண்மையில் நம்மை நாம் அழித்து கொள்வது ஆகும். நம் குழந்தைகளை நாமே முடமாக்குகிறோம்.

தனியார் பள்ளியில் படித்தால் தான் அறிவு வளரும் என, நடக்க முடியாத 3 வயது குழந்தையை வேனில் நீண்ட தூரம் பள்ளிக்கு அனுப்புகிறோம். உடல் ரீதியான ஊனத்தை வெல்லமுடியும். இத்தகைய மன ஊனத்தை என்ன செய்வது?

டாக்டராகிவிடலாம்,என்ஜினியராக ஆகிவிடலாம் அதற்கு தனியார் பள்ளிதான் ஒரே வழி என நாம் எல்லோரும் கற்பனையில் இருக்கிறோம். என்ஜினியர் நிலைமை இன்று பரிதாபமாக உள்ளது. எல்.கே.ஜி முதல் என்ஜினியரிங் வரை ஆங்கிலத்தில் படித்து ஐ.டி. கம்பெனியில் வேலை பார்ப்பது ஒவ்வொருவரின் லட்சியம், கனவு. பெற்றோர்களுக்கும் அதுதான் கனவு.

ஆனால் 25 ஆண்டுகள் படித்து 7 ,8 ஆண்டுகளில் தனியார் கம்பெனி என்னை ரிட்டையர்மென்ட் செய்து விட்டது, முதுகு வலி,மன உளைச்சலால் இன்று அவதிப்படுகிறேன் என்றாலும் தனியார் பள்ளியில் படித்தவன் அறிவாளி, அரசு பள்ளியில் படித்தவன் முட்டாள், ஆங்கில வழியில் படித்தவன் அறிவாளி, தமிழ் வழியில் படித்தவன் முட்டாள் என்று பேசுபவர்களை எப்படி புரிந்து கொள்வது? ஒருவகையில் இது சாதி நம்பிக்கை போன்றதுதான்.

உலகத்தில் எந்த நாட்டிலும் தாய் மொழியில் பேசுவதை இழிவாக பார்ப்பதில்லை. அப்படி பார்க்கும் ஒரு சமூகம் தமிழ்ச் சமூகம் மட்டும்தான். ஜெர்மனியில், பிரான்சில்,போலந்தில்,ரஷ்யாவில், ஜப்பானில்,சீனாவில் தாய்மொழிதான் பேசுகிறார்கள், படிக்கிறார்கள். அங்கு ஆங்கிலம் கிடையாது. இந்தியாவில்தான் அதிலும் குறிப்பாக தமிழகத்தில்தான் ஆங்கிலத்தில் படித்தால் உயர்வானது என்ற கற்பனை இருக்கிறது. அது ஒருத்தனுக்கு ஏற்பட்டால் பரவாயில்லை, நாடு முழுவதும் இந்த கற்பனை விஷவிதையாக தூவப்பட்டுள்ளது. அதிலிருந்து தப்பித்தவர்கள்தான் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கிறர்கள்.

இந்த நோய்க்கூறை எப்படி சரிசெய்வது? அதற்கு உரிய மருந்து என்ன?

தாய் மொழியில் படித்தால்தான் புரிந்து கொள்ள முடியும், ஜீரணம் ஆகும், இதுதான் அறிவியல் பூர்வமாக நிருபிக்கபட்ட உண்மை. காந்தி – நேரு கூட தாய் மொழயில்தான் கல்வி கற்க வேண்டும் என சொன்னார்கள். உலக தலைவர்கள், அறிவாளிகள் எல்லாம் தாய்மொழி கல்விதான் சிறந்தது என பேசுகிறார்கள். நாம் அவர்களை தலைவர்களாக ஏற்கிறோம். ஆனால் அதை பின்பற்றுவதில்லை.

துணிக்கடை விளம்பரம் போல் தனியார் பள்ளிக்கூடங்கள் விளம்பரம் செய்கின்றன. 50 பிளக்ஸ் போர்டு போட்டு விளம்பரம் செய்யும் ஜெயப்பிரியா என்ற பள்ளிக்கூடம், எல்.கே.ஜி பையனுக்கு குதிரை ஓட்ட சொல்லித்தாரானாம்! அந்த குழந்தையால் உக்காந்துகிட்டு போக முடியுமா? நமக்கு அறிவு வேணாமா? இன்னொரு பள்ளிக்கூடம் ஏ.சியிலேயே பாடம் சொல்லித்தரானாம்!

கல்விக்கு அடிப்படை என்ன! ஆசிரியர் வேணும், படிக்க புத்தகம் வேணும், படிக்க மாணவன் – இந்த மூன்றும் தான் கல்விக்கு அவசியம். இதை நீக்கி விட்டு எதை எதையே விளம்பரம் செய்கிறார்கள். பெற்றோர்களும் ஓடுகிறார்கள். பெற்றோர்களின் பேராசை அதிலும் கொடுர ஆசையாக இருக்கிறது. பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி என குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வதைக்கிறார்கள். இதை அரசும் வேடிக்கை பார்க்கிறது. மேலும் தனியார் பள்ளிகளை அரசு ஊக்குவிக்கிறது.

எழுத்தாளர் இமையம் மேற்கோள்தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு என அரசு கெஞ்சி பெறுகிறது. தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் வசதி படைத்தவர்கள்தான். அவர்களுக்கான பணத்தை அரசு கொடுக்கும் என்கிறார்கள். இதனால் பயனடைபவர்கள் அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் பிள்ளைகள்தான். அவர்களுக்காக போடப்பட்ட சட்டம் தான் தனியார் பள்ளகளில் 25% ஒதுக்கீடு.

அரசு பள்ளிகளில் அனைத்தும் இலவசம் என்பதால் மதிப்பு குறைவாக பார்க்கிறார்கள். அரசு பள்ளிகளில் ஆசிரியர் இல்லை, கழிப்பிடம் இல்லை, போதிய வகுப்பறை இல்லை, என பேசுகிறார்கள். விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கிட்டத்தட்ட பத்து ஏக்கரில் அமைந்துள்ளது. போதிய கட்டிடங்கள் இருக்கிறது. இன்னும் 5000 மாணவிகள் படிக்கலாம். பல வகுப்பறைகள் காலியாக உள்ளன. அது போல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 13 ஏக்கரில் அமைந்துள்ளது. இன்னும் 5000 மாணவர்கள் படிக்கலாம். மரங்கள் சூழ இருக்கிறது. நீங்கள் நாளையே சென்று பாருங்கள், இது போல் கட்டமைப்பு விருத்தாசலத்தில் எந்த பள்ளிக்கும் கிடையாது.

நேற்று 20 பள்ளிகளை ஆய்வு செய்தோம். அவற்றில் போதுமான ஆசிரியர்கள், மாணவர்கள், இருக்கிறார்கள். போதுமான வகுப்பறையும் இருக்கிறது. ஆனால் ஆசிரியர்கள் பொறுப்பானவர்களாக இல்லை. அது உண்மை.

எந்த அரசு ஊழியர் குழந்தையாவது அரசு பள்ளிகளில் படிக்கிறதா? ஆசிரியருக்கு தன் மேலேயே ஒரு நல்லாசிரியன் என்ற நம்பிக்கை இல்லை. ஆசிரியர் குழந்தை யாராவது அரசு பள்ளிகளில் படிக்கிறதா? ஞாயிற்றுக்கிழமையானால் 20 கார்கள் நாமக்கல் தனியார் பள்ளிகளுக்கு போகின்றது. அதில் 18 கார் ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகளை சென்று பார்க்கிறார்கள். தனியார் பள்ளிகளை உருவாக்கியதே அரசுபள்ளி ஆசிரியர்கள்தான். அரசு அதிகாரிகள்தான்.

பெற்றோர்களே! உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். எல்.கே.ஜி முதல் +2  வரை தனியார் பள்ளிதான் தரம் என விரும்பி செல்லும் பெற்றோர்களே,     அரசு நடத்தும் அண்ணா யுனிவர்சிட்டிக்கு, அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிக்கு அரசு வேலை வாய்ப்பிற்கு ஏன் வருகிறிர்கள்? இவைகள் தரமற்றது என ஏன் சொல்ல மறுக்கறீர்கள்? ரேசன் கடையில் பொருள் வாங்கணும், டாஸ்மாக் சாராயம் குடிக்கணும், அதற்கு அரசு வேணும். அரசு தரும் இலவச மிக்சி, கிரைண்டர் வேணும்!

ஆனால் அரசு பள்ளிகள் தரமற்றது, பிள்ளைகளை சேர்க்க மாட்டோம் என்பது சரியா? அரசாங்கம் என்பது நீங்கதானே, உங்களை நீங்களே பழிக்கிறீர்களே, உங்கள் மீது நீங்களே எச்சி துப்பிக்கொள்வதில்லையா? நிர்வாகம் சரியில்லை என உங்களையே கேவலபடுத்திக்கொள்வது முட்டாள்தனமாக தெரிவில்லையா?

அரசு பள்ளி சரியில்லை என்று சொல்லும் பெற்றோர்களே! என்றைக்காவது பள்ளிகூடத்திற்கு போய் ஆசிரியரிடம் ஏன் பாடம் நடத்தல, ஏன் பள்ளிகூடத்துக்கு லேட்டா வந்த, சத்துணவுல ஏன் உப்பு இல்ல, என யாராவது கேட்டதுண்டா? ஊகத்தில் அரசு பள்ளி சரியில்லை என்று பேசிக் கொண்டிருப்பது சரியா?

இன்றைக்கு ஆசிரியர் சமூகம், பொறுப்பற்றதாக சொரணையற்றதாக மாறிவிட்டது. நானும் ஒரு ஆசிரியர்தான். எனக்கு மாத சம்பளம் ரூ.45,000. என் மனைவியும் ஆசிரியர், அவர் சம்பளம் ரூ.51,000 கூட்டினால் 96,000. இது போன்று உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் காரில் வருகிறார்கள். ஒரு காலத்தில் ஆசிரியர் நடந்து வந்தார், சைக்கிளில் வந்தார் என கேள்வி பட்டோம், இன்று 18 லட்சரூபாய்  ஏ/சி காரில் ஆசிரியர்கள் வருகிறார்கள். சொகுசாக இருக்கட்டும், அதை குற்றம் சொல்லவில்லை.

ஆனால் கடமையை செய்கிறார்களா? உன்னை நம்பி வந்த மாணவர்களுக்கு மனசாட்சிபடி பாடம் நடத்துகிறாயா என்று கேட்கிறேன். இவ்வளவு வசதி படைத்த வாழ்க்கை நிலமையில் இருக்கும் ஆசிரியர் எப்படி ஏழை மாணவன் தோளில் கைபோட்டு உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்பார்? ஆசிரியர் மாணவன் உறவின் இடைவெளி அதிகரித்து கொண்டே போகிறது. ஏ/சி காரில்  பள்ளிக்கு சென்று இறங்கும் ஆசிரியர் ஆசிரியை, ஒரு மாணவனை தொட்டு உனக்கு தலைவலியா உடம்பு சரியில்லையா? என்ன பிரச்சினை என்று எப்படி கேட்பார்?

எழுத்தாளர் இமையம் மேற்கோள் 1ஆசிரியர்களும் ஒரு அதிகார வர்க்கமாக மாறிவருகிறார்கள். இதுதான் ஆபத்தானது. இதனால் ஆசிரியர் மாணவன் உறவின் இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது.

தனியார் பள்ளிகளில் டிசிப்பிளின் பற்றி பேசும் பெற்றோர்களே, டிசிப்பிளின் வேற, கட்டுப்பாடு வேற. எல்.கே.ஜிக்கு ஒரு லட்சம் கட்டுகிறீர்கள். ஆனால் வாட்சுமேன் கேட்டுக்கிட்ட உங்கள நிறுத்துறான். அப்பாயின்மெண்ட் குடுத்தாதான் முதல்வரை, தாளாளரை பார்க்க முடியும். அரசு பள்ளிகளில் நீங்கள் எப்போதும் சென்று ஆசிரியர்களை ,தலைமை ஆசிரியரை பார்க்க முடியும். உங்கள் பிள்ளைகளை பற்றிய குறைகளை சொல்ல முடியும். ஏன் ஆசிரியரை போய் ஏன் பாடம் நடத்தல என விரட்ட முடியும்.

அரசு மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு ஒரு பெயர் இருக்கும். அந்த சொட்டத் தலையன் வெளியில் வரட்டும், பார்த்துக் கொள்கிறேன் என பேசுவார்கள். எந்த பள்ளிகூட தலைமை ஆசிரியருக்கம் ஒரு பட்ட பெயர் உண்டு. ஆனால் தனியார் பள்ளிகளில் இது போல் செய்ய முடியுமா?

படிப்பு என்பதை தவறாக புரிந்து கொண்டுள்ளோம். தனிமனித ஆளுமையை வளர்ப்பது, சுயசிந்தனையை வளர்ப்பது, முற்போக்கு சிந்தனையை வளர்ப்பது, தன்னைத்தானே தயாரித்து கொள்வது, சமூகத்தை புரிந்து கொள்வது, கடவுளே என்னை காப்பாற்று என்பதல்ல, சமூகத்தை புரிந்து கொள்வது அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வது! ஆனால் கல்வி என்பது வேலை,பணம், பதவி, என்பதற்காகதான் என தவறாக புரிந்து கொண்டுள்ளோம்.

நாம் எவ்வளவு அசிங்கமாக இருந்தாலும் பெற்றோரைப் பொருத்தவரை நாம் அழகானவர்கள். அதுபோல் அரசு பள்ளிகளை குறை சொல்லாமல் அதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். ஒரு ரூபாய் செலவில்லாமல் படிப்பதை நாமே புறக்கணித்து எட்டி உதைத்து விடக்கூடாது. நம்மை நாமே சூடு வைத்து கொள்வது, நமக்கு நாமே சூன்யம் வைத்துக் கொள்வது ஆகும்.

எனவே பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேருங்கள் என கூறி இந்த மாநாட்டிற்கு பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி முடிக்கிறேன்.

எழுத்தாளர் இமையத்தின் வலைத்தளம் – எழுத்தாளர் இமையம்

______________________________________________________

–    தகவல: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்