privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்காவேரி ஓரம் – குடிநீர் இல்லா துயரம் !

காவேரி ஓரம் – குடிநீர் இல்லா துயரம் !

-

தண்ணீர் 1காவேரி ஆத்துத் தண்ணி கடைமடை வரை பாயும் வசதியும், ஊரச் சுத்தி கோயில் குளங்களும், மழைக் காலத்தில் வெள்ளப் பெருக்கெடுத்தும், கோடை காலத்தில் சிலுசிலுவென நீரோடையுமாய் ஓடும் வடிகால் (ஓடை) ஆறும், ஆத்துத் தண்ணி பாயாத மேட்டு பகுதியில் விவசாயத்துக்கு கிணறு என்று எந்நேரமும் தண்ணீருக்கு பஞ்சமில்லாத ஊருதாங்க அது.

ஆத்து தண்ணியில ஒதுங்கியிருக்கும் ஓரி மண்ணெடுத்து (நைசான மணல்) வெள்ளாவியில் துணி தொவச்சு ஆத்துல அலசி காய வைக்கும் சலவைத் தொழிலாளி ஒரு பக்கம்; ராமநாதபுரத்து வறட்சிய தாங்க முடியாம ஆடுகள ஓட்டிக்கிட்டு பொழப்பு தேடி வந்த கீதாரிகளுக்கு (ஆடு மேய்ப்பவர்கள்) ஆத்தங் கரையோரம் பச்சப் பசும் புல்லும் தண்ணியும் தந்து, தாயாக தானிருந்து தாகத்த தீத்து வைக்கும் மறுபக்கம் என்று இருந்த ஊரு இன்னைக்கி வெளியில போய்ட்டு வந்து காலு கழுவக் கூட தண்ணி இல்லாத அவல நிலைய காண சகிக்கலங்க.

கரை புரண்டோடும் காவிரி ஆறு பாயும் தஞ்சாவூர சேந்ததுதான் இந்த கிராமம். இந்த ஒரு கிராமம் மட்டும் இல்லைங்க இந்தப் பகுதில உள்ள அநேக கிராமமும் இப்படிதான் தண்ணிக்கி தத்தளிச்சு நிக்குது. எங்க பாத்தாலும் பயிரும் பச்சையுமா, வாழையும், கரும்புமா வெள்ளாம வெளச்சலோட செழிப்பா இருந்த இந்தப்பக்க ஊருகள், வெளஞ்ச வெள்ளாமையில பூச்சியடிச்சா மாதிரி சுட்டி சுட்டியா அங்கங்க பச்சையும் சருகுமா இருக்கு.

இந்தப் பகுதி முழுக்கவும் காவிரி ஆத்துத் தண்ணிய நம்பிதான் விவசாயம் நடந்துச்சு. ஆத்துல தண்ணி வர்றதப் பொறுத்து ஒரு போகம் ரெண்டு போகம்னு நெல்லு விவசாயம் நடக்கும். நெல் அறுவடை முடிச்சதும் பிறகு தண்ணி அதிகம் தேவப்படாத எள்ளு, உளுந்து, பயிரு, கடலையின்னு பயிரிடுவாங்க. நெலமும் கொஞ்ச காலம் சும்மா இருந்தாத்தான் நல்லா வெளையும், மண்ணுக்கும் கொஞ்சம் ஓய்வு குடுக்கணும்னு கடும் கோடையில ஒரு ரெண்டு மாசம் நிலத்த சும்மா போட்ருப்பாங்க. ஊருக்குள்ள வெள்ளாம வெளச்ச இல்லாத இந்த சமயத்துல கோட மாடு மேச்சல்னு ஆளு நின்னு மாடு மேய்க்காம அவுத்துடுவாங்க. அதுவா மேஞ்சுட்டு வந்துரும்.

பணக்காரங்க பயனடையும் வகையில அரசாங்கத்துல ஒரு திட்டம் வந்தது. அரசு வங்கி மூலமா எட்டு ஏக்கருக்கு மேல நெலம் உள்ளவங்களுக்கு போர்வெல் போட 50% மானியத்துல லோன் கொடுத்தது அரசாங்கம். (இப்ப போர்வெல் போடுறவங்களுக்கு லோன் கொடுக்க தகுதியா இந்த அளவு நெலம் தேவையில்லை.) அந்தப் பகுதியில உள்ள பெரும் பணக்காரர்கள் ஊருக்கு அஞ்சு, ஆறு போரு போர்வெல் போட்ருந்தாங்க. அதிக நெலம் உள்ள இவங்க மூணு போகமும் விவசாயம் செய்வாங்க. அக்கம் பக்கம் இருக்கும் ஒரு சில சிறு, குறு விவசாயிகளுக்கு காசுக்கு தண்ணி கொடுத்து அவங்களும் கொஞ்சம் விவசாயம் பண்ணுவாங்க.

ஊர்குள்ள போர்வெல் ஆரம்பமான 1985-1990 காலகட்டத்துல 400, 450 அடி ஆழம் போர் போட்டு 150 அடியில மோட்டார் பொருத்துனாலே தண்ணி வந்துரும். தண்ணி ஊத்துற வேகத்த எதுத்து நிக்கவே முடியாது, ஆள தள்ளிடும். ஆத்துல தண்ணி வந்து மழைக்காலம் ஆரம்பம் ஆச்சுதுன்னா மோட்டாரே தேவையில்ல. தானாவே தண்ணி பூமிக்கி மேல குழாய் வழியா பொங்கி வழியும். ஏறக்கொறய ஆறேழு மாசம் தண்ணி தானாவே ஊத்திக்கிட்டு கெடக்கும். ஊர் மக்கள் குடிதண்ணி இங்கதான் பிடிச்சுக்கிட்டு போவாங்க. இது கற்பனையும் இல்ல, வெகு காலமும் ஆயிரல. ஒரு இருவத்தஞ்சு வருசத்துக்குள்ள அழிஞ்சு போன நெசம். நடந்து போன மாற்றம்.

தஞ்சை வயல்கள் 1இன்னைய நெலமைக்கி இந்த ஊருல மட்டும் 65 ஆழ்குழாய் போர்வெல் இருக்கு. ஆரம்பத்துல ஒரு போர்வெல் வச்சுருந்த பணக்காரங்க இன்னைக்கி 2 – 3 வச்சுருக்காங்க. 150 அடியில மோட்டர் வச்சாலே தண்ணி வந்தது இப்ப 450 அடியில பொருத்துனாதான் தண்ணி வருது. நிலத்தடி நீர் அளவு கொறஞ்சதால, தண்ணியோட வேகமும் கொறஞ்சு பாதி குழாய் அளவுதான் தண்ணி வருது. தண்ணிய சிக்கனப்படுத்த நெலத்துக்கு அடியில் பைப்பு பொருத்தி நேரா வயல்ல பாச்சுராங்க. வாய்க்கால்ல ஓட விடாம செஞ்சுட்டாங்க.

அந்த நாள்லேருந்து இந்த நாள் வரைக்கும் குடி தண்ணிக்கி அலஞ்ச திரியிறாங்க மக்கள். ஊர சுத்தி ஆறும், குளமும் இருந்ததால கிணறு அதிகம் கெடையாது. குடி தண்ணி பயன்பாட்டுக்கு மட்டும் தான் கிணறு. ஊருக்குள்ள ஊராட்சி குடிநீர் டேங்கு வந்தது. குழாய் தண்ணி வருது. இனி குடிதண்ணிக்கி பஞ்சம் இல்லன்னு நெனச்சு மக்கள் கிணத்த பராமரிக்காம பாழாப் போச்சு. ஆயிரம் குடும்பம் இருக்கும் ஒரு ஊருக்கு ஒரு கைப் போரும் சின்னதா ஒரு டேங்கும் தண்ணி தேவைய தீத்து வைக்கெல. அப்பப்ப காரணம் இல்லாமலே தண்ணி வராது, குழாயடி சண்ட வர்றதுதான் மிச்சம். தேர்தல் சமயமும், பஞ்சாயத்து தலைவர் புதுசா பொறுப்பேற்கும் சமயமும் தண்ணி நெலம தற்காலிகமா மாறுமே ஒழிய, இன்னைக்கி வரைக்கும் தண்ணிக்கி தாளம் போட்டுத்தான் நிக்குது மக்கள்.

இப்ப ஊருக்குள்ள குடிதண்ணிக்கின்னு மூணு போரு போட்டுருக்காங்க. ஆனா அது சாதாரன மக்களுக்கு வந்து சேர்றது இல்ல. ஊர்ல உள்ள போர்வெல் பணக்காரங்களுக்குதான்  உதவியா இருக்கு. வீட்டுக்குன்னு சொந்தமா பைப்பு இழுத்துக்குறாங்க, தண்ணி வரத்து பத்தலன்னு நேரடியா பைப்பு இணைப்புலேயே மோட்டார் பொருத்தி தண்ணிய உறிஞ்சுராங்க. சாதாரண மக்கள் பைப்பு இழுக்கவும் வசதி இல்லாம, இது போல ஆளுங்கள எதுத்து கேட்கவும் துணிச்சல் இல்லாம போர்வெல்லயே தண்ணி எடுக்குறாங்க.

இந்தப் பகுதி கிராமங்கள்ல விவசாய நிலத்த அதிக பணம் கொடுத்து வாங்கி தண்ணிய அதிகமா உரிஞ்சுற ராட்சச போர் போட்டு நிலத்தடி நீர இடைவிடாது உறிஞ்சி விக்கிறாங்க. சாதாரண ஏழப்பட்ட மக்கள் கல்யாணத்துல கூட தண்ணிப் பாட்டில் வச்சாத்தான் பெருமை என்ற நிலைய உருவாக்கி லாபம் பாக்குறாங்க. “சென்னையில தண்ணியெல்லாம் காசு குடுத்து வாங்குவாங்களாம்” என்று ஆச்சர்யமாக பேசிய மக்கள் “நம்ம பக்கமும் கேணு தண்ணியெல்லாம் காசு குடுத்து வாங்க வேண்டிய நிலம வந்துருச்சு. டவுணுக்கும் நாட்டுப்புறத்துக்கும் எந்த மாத்துக் கலப்பும் இல்லாம போச்சு”ன்னு உலகமயமாக்கத்தின் பாதிப்பை இயல்பா பேசுறாங்க.

முன்னெல்லாம் கோடை காலத்துல குளத்துல, ஓடையில குளிக்க, துணி துவைக்க, மாடு குடிக்க, மாடு குளிப்பாட்டன்னு தண்ணி தேவை முடிஞ்சுரும். குடிக்கவும், பாத்தர பண்டம் கழுவவும் தண்ணி எடுத்தா போதும். இப்ப தண்ணியோட நெலம சீரழிஞ்சு போனதால எப்படா போர் காரங்க தண்ணி தொறந்துடுவாங்க புடிக்கலாம்னு அலையிறாங்க மக்கள். தண்ணி எடுக்கப்போன ஒரு அம்மாவ பாத்தேன், தன்னோட ரெண்டு வயசு பெண் குழந்தைகிட்ட காலியான ‘அம்மா தண்ணி’ பாட்டில்ல புடிச்சு கொடுத்து எடுத்துட்டு வரச் சொல்லிட்டு, இவங்க ரெட்டக் குடம் போட்டு தூக்கிட்டு வர்றாங்க.

இது போக ஊர்ப் பொது குளங்கள் எல்லாமே மீன் வளர்ப்புக்கு ஏலத்துக்கு விடப்படுது. இது பத்தாதுன்னு விவசாய நெலத்தையும் குளம் வெட்டி மீன் வளக்குறாங்க. அதிக எடைக்கி மீன்கள் சீக்கிரம் வளரவும் லாப வெறிக்காகவும்  கண்ட கண்ட ரசாயன உரங்களையும் போட்டு தண்ணி பச்சை நெறத்துலயும், மேற்பரப்பு தங்க நெறத்துலயும் இருக்கு. இந்த தண்ணிய மாடு குடிக்க முடியாது. மனுசங்க கால நெனச்சுட்டாலே தோலே உருஞ்சுரும் அளவுக்கு அரிப்பெடுக்குது. சாவு வீட்ல பொணத்த குளிப்பாட்ட குளத்துல தண்ணி எடுப்பது இந்த பகுதியில முறை. ஆனால் அதுக்குக் கூட இந்த தண்ணிய யாரும் எடுக்கறது இல்ல. அந்த அளவு ஊருக்குள்ள உள்ள எந்த குளத்துத் தண்ணியும் பயன்படுத்த முடியாம இருக்கு.

தஞ்சை வயல்கள் 2மழை காலங்கள்ல தேவையில்லாத தண்ணிய ஓடையில திருப்பி விடுவாங்க. கோடையில பெய்யிற மழை தண்ணியும் ஓடைக்கிதான் வந்து சேரும். கிராமத்துல சொற்பமான விலைக்கி வெவசாய நெலத்தையெல்லாம் வாங்கி கட்டுமனைக்கி பிளாட் போட்டு விக்கிறான் ரியல் எஸ்டேட் தொழில் செய்றவன். ஓடைக்கி தண்ணி வர்ற வழியே இல்லாம எங்கயும் ஆக்ரமிப்பு. வடிகாலுன்னு ஒண்ணு இல்லாம ஓடைக்கி தண்ணி வந்து சேர வழியே இல்லாம செஞ்சுட்டாங்கெ.

எப்படியெல்லாம் நீர் நிலையோடு இருந்த ஊர் இன்னைக்கி இருக்கும் நிலைய பாக்கும் போது கண்ணுல ரத்த கண்ணீரே வருது. காவேரி ஆத்துத் தண்ணி கடைமடை வரை பாஞ்ச ஊருல தடுக்கி விழுந்தா தண்ணியில என்ற நெலம போயி, போற போக்க பாத்தா கிராமத்துலயும் கூட பேண்ட சூத்தக் கழுவ பேப்பர குடுத்துடும் போல இந்த உலகமயமாக்கம்.

ராத்திரி பத்து மணிக்கி ஒரு அம்மா பக்கத்து வீட்டுக்காரற திட்டுது “தொட்டி நெறையா தண்ணி ஊத்தி வச்சுருந்தேன். காத்தொட்டி தண்ணிய காணல. மோண்டுட்டு (எடுத்துட்டு) போய்தாரு. தண்ணிக்கி எங்கங்க எடருபட்டு தூக்க வேண்டியதா இருக்கு. குந்துன எடத்துல இருந்து திருடறதுக்கு எப்புடிதான் மனசு வருதோ” இருட்டுல போன் பேசிட்டு இருந்த நான் அவரு காலு கழுவ ரெண்டு சொம்பு தண்ணி எடுத்ததையும், கை கால் கழுவுனதையும் பாத்துக்கிட்டுதான் இருந்தேன்.

கிராமத்துல யாரு வீடா இருந்தாலும் கை, கால் கழுவுறதுங்கறது சாதாரண ஒண்ணுதான் ஆனா அந்தம்மாவாள சாதாரணம்னு எடுத்துக்கவும் முடியல, பாத்துட்டு இருந்த என்னாலயும் பச்சத் தண்ணிக்காக இப்படி திருட்டுன்னு எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் பேசுறிங்கன்னு சொல்லவும் முடியல. காசு கொடுத்து வாங்கற மத்த பொருட்களைப் போல இயற்கையா கிடைக்கிற தண்ணிக்கி நெருக்கடி ஏற்பட்டு போச்சுங்கற அவல நிலைய பாத்து வாயடச்சு நிக்க மட்டும் தான் முடிந்தது.

நமக்கே தெரியாம நம்ம ஒடம்புல உக்காந்து ரத்தம் உறிஞ்சுர கொசுவப் போல நம்ம வாழ்வாதாரத்துக்கு தேவையான தண்ணிய  நாலா பக்கமும் உறிஞ்சுராங்க, சேதப்படுத்துறாங்க. முன்ன இருந்த ஒட்டு மொத்த நிலமையும் தலைகீழா மாறி தண்ணிக்கி தவிக்கிது ஜனம். பச்சை பசுமையோடும் நீர் வளத்தோடும் வாழ்ந்த மக்கள் வறட்சியில் சிக்கி தொண்ட காஞ்சு கவலைக்கிடமா போகும் காலம் வெகு தூரத்துல இல்லங்கறத எப்போது உணரப் போறோம்.

அம்மா தண்ணி, பெப்சி, கோக், கேன் வாட்டருன்னு நகரத்து ஜனம் தண்ணிய காசு கொடுத்து வாங்குது, கிராமத்து மக்கள் குடிநீர் இல்லாம தவிக்கிறாங்க. தண்ணிய விக்கிறவன் ஏசியல நோட்டை எண்ணுறான். புரிஞ்சவங்க போராடுங்க!

–    சரசம்மா