privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்ஆட்டிறைச்சி தொழிலை அலைக்கழிக்கும் பார்ப்பனியம்

ஆட்டிறைச்சி தொழிலை அலைக்கழிக்கும் பார்ப்பனியம்

-

டந்த ஜூன் 17-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய இறைச்சி பறிமுதல் என்ற செய்தியை சிலர் பார்த்திருக்கலாம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து வந்த ரயிலில் சுகாதாரமற்ற முறையில் பேக்கிங் செய்யப்பட்டிருந்த ஆட்டிறைச்சி 3,300 கிலோ வந்திறங்கியதை, மாநகராட்சியின் சுகாதாரத்துறை அலுவலர்கள் கைப்பற்றி, அது கெட்டுபோய்விட்டது என்று அறிவித்து, பிளீச்சிங் பவுடர் தெளித்து கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் புதைத்திருப்பதாக அந்த செய்தி தெரிவித்தது.

இறைச்சிஅவ்வப்போது இப்படி கெட்டுப்போன இறைச்சி பிடிபட்டாலும் தொடர்ந்து இப்படி ஏன் ஆட்டிறைச்சி சென்னை போன்ற நகரங்களுக்கு வந்து கொண்டேயிருக்கிறது? ஏன் இதனை அரசால் தடுக்க முடியவில்லை?

இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 63 லட்சம் டன் இறைச்சி அளவுக்கு கால்நடைகள் வெட்டப்படுகின்றன. இதில் 40-50% மட்டுமே உள்நாட்டுக்கான உணவாக பயன்படுகிறது. ஆண்டுக்கு 5 லட்சம் டன் வரை  எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதியாகிறது. இது தவிர மொத்தமாக மாட்டு இறைச்சி என்று பார்த்தால் 18.9 லட்சம் டன் வரை 2012-13 நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதனால் தான் அப்போது பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நரேந்திர மோடி, ஜக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரே புரட்சி பிங்க் புரட்சி (pink revolution, இறைச்சியின் வண்ணம்) என்று கிண்டலாக அதனை குறிப்பிட்டிருந்தார். அதாவது மன்மோகன் சிங் அரசு புனிதமான பசுவை உள்ளிட்டு கால்நடைகளை கொன்று ஏற்றுமதி செய்து வருகிறது என்பதே மோடியின் காவிக் கவலை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இந்த ஏற்றுமதியின் அளவு 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள மோடியாலும் காவிக் ‘கருணையுடன்’ கால்நடைகளை காப்பாற்றி இந்த பிங்க் புரட்சியைத் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் இதனால் நாட்டுக்கு கிடைக்கும் ஏற்றுமதி வருவாய் ஆண்டுக்கு ரூ 21,000 கோடி ஆகும். ஒருக்கால் இந்த கால்நடைகளை தாயுள்ளத்துடன் காப்பற்ற வேண்டுமென்றாலும் அதற்கு எந்த ஸ்வயம் சேவகனும் தயாராக இருக்க மாட்டார்கள். இறைச்சி விற்பனை இல்லாமல் கால்நடை பொருளாதாரம் இல்லை.

2007 கால்நடைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 15.4 கோடி ஆடுகள் உள்ளன. ஏறக்குறைய ஒரு கோடி கிராம மக்களுக்கு ஆடு வளர்ப்புதான் ஜீவாதாரமான தொழில். நாட்டிலேயே அதிகமான ஆடுகள் (2.15 கோடிகள்) ராஜஸ்தானில் உள்ளன. அதாவது மொத்த ஆடுகளின் தொகையில் இது மாத்திரம் 14%. தமிழகத்தில் 1.07 சதவீதம் மட்டும் தான் ஆடுகள் உள்ளன. உண்மையில் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக உத்திர பிரதேசத்தில் நாட்டின் பத்து சதவீத ஆடுகள் உள்ளன. இந்தியாவில் பத்து ஆண்டுகளில் ஆடுகளின் எண்ணிக்கை இரட்டிப்படைந்திருக்க, எதிர் விகிதங்களில் மேய்ச்சல் நிலம் தொடர்ச்சியாக குறைந்தும் வருகிறது. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையின் ஊதிப்பெருக்கப்பட்ட ‘வளர்ச்சி’யால் இது அதிகரித்துள்ளது.

மாட்டிறைச்சிமற்ற மாநிலங்களில் ஆடுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 15% மட்டுமே அதிகரிக்க, ராஜஸ்தானில் மாத்திரம் 27% அதிகரிக்கிறது. விவசாயத்திற்கோ இல்லை நகரமயமாதலுக்கோ வழியில்லாத தரிசு நிலப்பரப்பு அதிகரிப்பால் இது சாத்தியமாகிறது. விவசாயத்தை விட ஆடு வளர்ப்பு கட்டுபடியாகும் நிலையில் இருப்பதால் எல்லா விவசாயிகளுமே இங்கு ஆடு வளர்ப்புக்கு மாறி வருகின்றனர். தரிசு நிலமே ராஜஸ்தானில் மேய்ச்சல் நிலமாகவும் பயன்படுகிறது. இங்கு 60 சதவீத விளைச்சல் நிலமே தரிசாக மாறி விட்டது. கடந்த 50 ஆண்டுகளில் 40 முறை வறட்சியை சந்தித்துள்ள மாநிலம் இது. மொத்தமுள்ள 2.16 கோடி ஹெக்டேர் விளைச்சல் நிலத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான நிலப்பரப்பில்தான் விவசாயம் நடக்கிறது. செயற்கை உரங்களால் நிலம் மலடு தட்டிப் போவதும், நிச்சயமற்ற பருவநிலைகளும் சேர்ந்து ஆல்வார் போன்ற வளமையான பகுதிகளில் கூட ஆட்டு பண்ணைகளையும், கால்நடை விவசாயிகளையும் தோற்றுவித்துள்ளது. ஆல்வாருக்கருகில் உள்ள பலாடி தினசரி ஆட்டுச் சந்தையில் நடக்கும் ஒருநாள் வியாபாரம் ரூ 1.5 கோடி என்கிறார்கள்.

ராஜஸ்தானின் மேற்கு பகுதியில் சிறு விவசாயிகளின் 60 சதவீத வருமானம் கால்நடை வளர்ப்பில் இருந்துதான் பெறப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை கருத்தரிக்கும் கால்நடைகளை பயிர்களில் போகம் எடுப்பது போல எடுத்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு முறை கிடைக்கும் கன்றுகளின் எண்ணிக்கையை பொறுத்து இவர்கள் வளர்சியடைவது இருக்கிறது. ஆடுகளை இவ்வளவு உற்பத்தி செய்தாலும் இங்கு கணிசமான மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள்தான்.

இந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தான் மிகவும் தீவிரமான பார்ப்பனியக் கோட்டையாக இருப்பதால் இங்கே பிற்போக்குத்தனங்களுக்கு பஞ்சமே இல்லை. இதனால் இங்கிருக்கும் இடைநிலை சாதிகளும் இதற்கு பலியாகியிருக்கின்றனர். இதுதான் பாஜக போன்ற கட்சிகள் இங்கு தங்குதடையின்றி வளர்வதையும், மன்னர் பரம்பரையை சேர்ந்த சிந்தியா குடும்பம் முதல்வர் பதவியை அலங்கரிப்பதையும், சதி, குழந்தை திருமணம் போன்ற சமூக அவலங்களும் ‘சாதனைகளாக’ இருக்கும் மாநிலத்தில் இறைச்சி உணவுக்கு ஆதரவில்லை என்பது ஒரு யதார்த்தம்.  அதனால், அசைவ உணவு பழக்கம் கொண்ட ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கோ அது எளிதில் கிடைத்து சாப்பிடும் சூழல் இல்லை.

ஆடு வளர்ப்புமாடு வளர்ப்பில் குஜராத்தும், ஆடு வளர்ப்பில் ராஜஸ்தானும் நாட்டின் முன்னணி மாநிலங்களாக இருந்த போதிலும், அங்கு பார்ப்பனிய அடிமைத்தனமும், இடைநிலைச் சாதிகளிடையே பார்ப்பனியமயாக்கும் முயற்சியும் அவர்களை இறைச்சி மற்றும் பால் பொருட்களில் இருந்து தூர விலக்கி வைத்துள்ளன. அங்கு உள்ள ஜைன மதங்களை சேர்ந்தவர்களது புலால் உண்ணாமையும் சேர்ந்து அங்கு வெட்டப்படும் ஆடுகளின் இறைச்சியை கட்டாய ஏற்றுமதியை நோக்கித் தள்ளுகின்றன.

ஆனால் இத்தகைய வியாபாரங்களில் ஆதிக்க, இடைநிலை சாதிகளும்,பார்ப்பனர்களும்,ஜைன மதத்தினரும் கணிசமாக இருக்கின்றனர். கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பது இவர்களுக்கு பொருந்தாது போலும்.

மூன்றாவதாக அதிகபட்ச ஆடுகள் பீகார், தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் சம அளவில் இருக்கின்றன. தமிழகத்தில் நகர்மயமாதலின் தாக்கமும், பார்ப்பனிய எதிர்ப்பு மரபும் இருப்பதால் இங்கு கணிசமாக மக்கள் இறைச்சியை அதிக அளவில் உணவாக எடுத்துக் கொள்கின்றனர். எனினும் கிராமப்புற விவசாயிகளைப் பொறுத்த வரையில் இறைச்சி சாப்பிடுவது ஆடம்பரம் என்ற பொருளாதார காரணத்தால் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. மற்றபடி பெரும்பாலான சிறு நகரங்கள், பேரூராட்சிகள் வரை தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், வடகிழக்கு போன்ற மாநிலங்களில் கணிசமானோர் ஆட்டிறைச்சியையும், ஓரளவு மாட்டிறைச்சியையும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். கேரள, வங்கத்தில் இடதுசாரி செல்வாக்கு, வடகிழக்கில் இந்தியாவிலிருந்து வேறுபடும் பண்பாட்டு வரலாறு காரணமாக இறைச்சி நுகர்வு அதிகம் இருக்கிறது.

நாட்டிலேயே மொத்த இறைச்சி உற்பத்தியில் குறிப்பாக மாட்டு இறைச்சி உற்பத்தியில் உத்திர பிரதேசம்தான் முதலிடத்தில் உள்ளது. அதுவும் இன்னொரு இந்துத்துவா கோட்டையாகத்தான் இருந்து வருகிறது. ஆனால் மாட்டிறைச்சியை அதிகமாக உணவில் பயன்படுத்துபவர்களில் கேரள மக்கள்தான் இந்திய அளவில் முன்னணியில் இருக்கின்றனர். பசுவைக் கொல்வதை சில மாநிங்கள் தடை செய்துள்ளன. இதனை பாஜக மட்டுமே செய்யவில்லை. காங்கிரசும் இதில் அவர்களது பங்காளிதான். குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் டெல்லி ராஜஸ்தான் போன்ற பிற்போக்கு மிகுந்த மாநிலங்களில் பசுவைக் கொல்ல தடை இருக்கிறது. கேரளா, மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் வடகிழக்கில் மாத்திரம் தான் பசுவை சில நிபந்தனைகளுக்குட்பட்டு இறைச்சிக்காக கொல்வதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி இருக்கிறது என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். மாறாக எமனது வாகனமான எருமைக் கிடாக்களையும், மலடு தட்டிப் போன எருமை கிடாரிகளையும் பொதுவாக இறைச்சிக்காக பயன்படுத்துவது நடைமுறையில் இருக்கிறது. கருப்பாக பிறந்த காரணத்தினால் எருமைகளுக்கு பார்ப்பனிய புனித பீடத்தில் இடமில்லை.

எருமை மாடுஎன்னதான் புனிதக் கதை பேசினாலும், உலக அளவில் பசு, எருமை இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பசு, எருமைக் கறிகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நல்ல மவுசு இருக்கிறது. இங்கு வளர்க்கப்படும் மாடுகள் இயற்கையோடியைந்த முறையில் வளர்க்கப்படுவதும், அமெரிக்க மாடுகளை விட குறைவான வயதில் (ஏறக்குறைய 15 வயது) வெட்டப்படுவதும் இதற்கு காரணம் என்கிறார்கள். இந்திய வியாபாரிகள் சிலர் இதனை விட குறைந்த வயதிலும் மாடுகளை வெட்டி அவற்றின் இறைச்சியை ஏற்றுமதி செய்யும்போது கணிசமாக விலையை அதிகமாக பெற முடிகிறதாம்.

பொதுவாக இந்திய இறைச்சி சவுதி, ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஸ்பெயின், வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. கால்நடைகளின் குடல்களால் செய்யப்பட்ட பண்டங்கள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட இறைச்சி வகைகள், இறைச்சி குழம்பு, அடர் மாமிச தூள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி என பலவிதமாக பாடம் செய்யப்பட்டு வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதியாகிறது. இத்தகைய பாடம் செய்யும் வேலைகளில் சிறிய அளவில் கால்நடை வளர்ப்பவர்களால் நேரடியாக ஈடுபட முடியாத நிலைமையில் பெரிய அளவிலான மாடு வளர்ப்பு பண்ணைகள்தான் இதனை செய்கின்றன. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சிறு விவசாயிகள் சட்டப்பூர்வமற்ற முறையில் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளிடம் போகிறார்கள். மிகவும் அடிமாட்டு விலைதான் அவர்களுக்கு கிடைக்கிறது.

இந்தியாவில் இருந்து 80 சதவீத ஆட்டிறைச்சி இசுலாமிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்றுமதியாகிறது. வெள்ளாட்டு இறைச்சி ரூ 300 க்கும், செம்மறியாட்டு இறைச்சி ரூ 200 க்கும் என்ற விலையில் தான் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. ஆனால் இந்த ஏற்றுமதியில் பெரிய அளவில் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கார விவசாயிகளாலேயே ஈடுபட முடிகிறது. பத்து ஆடுகள், இருபது ஆடுகள் எல்லாம் வைத்திருப்பவர்களால் இத்தகைய ஏற்றுமதி சாத்தியமில்லை.

விவசாய மற்றும் உணவு உற்பத்திக்கான ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் ஏற்றுமதியாகும் உணவுப்பொருட்களுக்கான தரக்கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. வெறும் தரம், கொள்கை வகுப்புடன் மட்டும் நில்லாது பெரிய ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் 170 ஒருங்கிணைந்த உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்தலுக்கான குளிரூட்டும் நிலையங்களையும் அமைத்துள்ளது. இதுபோக தனியார் வசமுள்ள இத்தகைய நிலையங்களுக்கு தலா ரூ 15 கோடி வரை மானிய உதவியும் அளித்திருக்கிறது. 11-வது (2007-12) மற்றும் 12-வது (2012-17) ஐந்தாண்டு திட்டங்களில் எருமை கிடாக்களை காப்பாற்றுவது, மற்றும் இறந்து போகும் வீட்டு விலங்குகளை கையாள்வது குறித்தெல்லாம் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவையெல்லாம் இருந்தாலும் பார்ப்பனிய செல்வாக்கினால் இறைச்சி தொழில் என்பது ஏதோ ஒரு சட்டவிரோத தொழில் போலவே இங்கு பார்க்கப்படுகிறது.

இறைச்சிஇந்த நிலையில் சிறுவிவசாயிகள் ஆட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ய குளிர்சாதன வசதிகளை வட இந்திய மாநில அரசுகளும் ஏற்படுத்தித் தரவில்லை. ஒருபுறம் கோசாலைகளை அமைத்து ஜீவகாருண்யம் பேசும் இந்துத்துவா ஆட்சியாளர்களால் இம்மாநிலத்தில் இந்த இறைச்சி ஏற்றுமதியை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அப்படிப்பட்ட முயற்சிகள் மக்களின் வாழ்வாதார அடிப்படையான பிரச்சினையில் கைவைத்திடும் என்பதால் இம்மாநிலங்களில் பாஜக ஆட்சியாளர்கள் அடக்கி வாசிக்கிறார்கள். அதே நேரத்தில் இறைச்சி, பால் போன்றவற்றை பயன்படுத்தாமால் தொடர்ந்து இருந்து வருவதன் மூலம் தமது சாதியை பார்ப்பனர்களுக்கு இணையாக வளர்த்து விட இடைநிலை மற்றும் ஆதிக்க சாதியினர் முயன்றும் வருவதால் ஆடுகளை இறைச்சியாக்கி ஏற்றுமதி செய்வது மாத்திரம்தான் இங்கு சாத்தியமாகிறது. உள்ளூர் நுகர்வு அதிகரிக்க வழியில்லாமல் இருக்கிறது.

அதே நேரத்தில் இம்மாநிலங்களில் இருந்து அடிமாடுகளும், கூடவே அங்கிருந்து வெட்டி இறைச்சியாக மாற்றப்பட்டு கெட்டுப் போன நிலைமையில் இங்கு வருவதும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம்தான் உள்ளது.

சென்னை வரும் இத்தகைய ஆட்டு இறைச்சி ஏறக்குறைய கிலோ ரூ 150க்கே சில்லறை விற்பனையில் கிடைக்கிறது. சென்னையில் உள்ளூரில் வெட்டப்படும் ஆட்டிறைச்சி ரூ 480 வரை விற்கப்படுகிறது. ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் இருந்து தினந்தோறும் 4,000 கிலோ பழைய ஆட்டு இறைச்சி இங்கு வருகின்றது. ஜெய்ப்பூரில் இருந்து ரயில் மூலமாக சென்னை சென்டிரலை அடைய இரண்டு நாட்கள் தேவைப்படுகிறது. குளிர்சாதன வசதியிருப்பினும் வரும் இந்த ஆட்டிறைச்சி சென்னை சென்டிரல் வருவதற்குள்ளாகவே கெட்டுப்போவதும், திறந்து பார்க்கும்போது அதில் புழுக்கள் நெளிவதும் தினசரி காணக் கிடைப்பதுதான்.

இப்படி ரயிலில் வரும் உணவுப் பொருட்களுக்கு முறையாக ரயில்வே சுகாதார அலுவலர் சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும் என்பது தான் நிபந்தனை. ஆனால் இதெல்லாம் முறையாக பின்பற்றப்படுவது இல்லை. ரயில்வே பார்சல் மூலமாக அனுப்பப்படும் இந்த ஆட்டிறைச்சிக்கான பெறுநர் முகவரி ஏதாவது ஒரு பெயருடன், சென்னை என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். இங்குள்ள மொத்த வியாபாரியுடன் ரயில்வே துறை சார்ந்த அதிகாரிகளும் இணைந்துதான் இந்த வலைப்பின்னல் செயல்பட்டு வருகிறது.

இப்படி வரும் இறைச்சியை பெரும்பாலும் சென்னையில் வீட்டு உபயோகத்திற்காக வாடிக்கையாளர்கள் வாங்குவது குறைவுதான். அதே நேரத்தில் சிறு உணவங்கள்தான் இவற்றை வாங்குகிறார்கள் என்பதும் முழு உண்மையில்லை. வரும் இறைச்சியில் பெரும்பாலானவற்றை வாங்குவது சென்னையில் உள்ள உயர்தர உணவகங்கள்தான். காரணம் இதனை கொஞ்சம் சுத்தப்படுத்திய பிறகு நீண்ட நாட்களுக்கு பதப்படுத்தும் குளிரூட்டப்பட்ட உயர் தொழில்நுட்பம் அவர்களிடம் இருக்கிறது. அடுத்து அங்கு வரும் வாடிக்கையாளர்கள், கூடுதலாக காசு கொடுத்தால் பொருள் தரமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதால் ராஜஸ்தான் கறியையை உள்ளூர் கறியோடு சேர்த்து விற்றால் யாரும் கண்டு பிடிக்க முடியாது.

இதற்கு அடுத்து இந்த கறி வாங்கப்படும் முக்கியமான இடம் டாஸ்மாக் பார்கள் என்கிறார்கள். அதாவது ஒரு இடத்தில் நம்பிக்கை என்கிற நடுத்தர வர்க்க போதையையும், இன்னொரு இடத்தில் உண்மையிலேயே போதையையும் இந்த கெட்டுப்போன இறைச்சியை விற்கும் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சாலையோர உணவகங்களிலோ பெரும்பாலும் சென்னையிலேயே வெட்டப்பட்டு மாநகராட்சி முத்திரை இட்டு வரும் செம்மறியாட்டு இறைச்சியில் கழித்துக்கட்டப்படும் எலும்புகள் மிக்க கறியை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களால் மறுநாளைக்கு கூட இறைச்சியை பத்திரப்படுத்த வசதிகள் இல்லாத காரணத்தால் உண்மையில் இங்குதான் அன்றன்று அறுக்கப்படும் ஆடுகளின் புத்தம் புதிய கறி கிடைக்கிறது. சிறு உணவங்களிலும் இதுதான் நிலைமை.

இப்படி இந்தியாவில் வளமான கால்நடை வளமும், மக்களுக்கு மலிவான விலையில் புரதச் சத்து கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் ஆட்டிறைச்சியோ இல்லை மாட்டிறைச்சியோ மொத்த நாட்டிற்கும் கிடைத்து விடுவதில்லை. வட இந்திய மாநிலங்களில் பெரும் கால்நடை இருந்தும், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் நுகவர்வு இல்லாமல் வீணாக கெட்டுப்போக விடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில் நுகர்வு அதிகம் இருந்தாலும் இங்கே போதிய அளவு இறைச்சி கிடைப்பதில்லை. அதனால்தான் இங்கு விலைகள் அதிகம் இருக்கின்றன.

பார்ப்பனியம் எனும் அமைப்பு முறை எப்படியெல்லாம் நமது நாட்டையும், மக்களையும் அலைக்கழிக்கிறது என்பதற்கு இந்த ஆட்டிறைச்சி உதாரணமே போதுமானதல்லவா?

–    கௌதமன்.