privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅடியாள் வைத்து மிரட்டும் சேத்தியாதோப்பு SDS பள்ளி

அடியாள் வைத்து மிரட்டும் சேத்தியாதோப்பு SDS பள்ளி

-

 பூதங்குடி SDS மெட்ரிக் பள்ளி, கடலூர் மாவட்டம் – கட்டணக் கொள்ளை

கல்வித்துறை அதிகாரிகள் விசாரிக்க
நீதியரசர் சிங்காரவேல் கமிட்டி உத்தரவு

வகுப்புகள் 2013-14 2014-15
எல்.கே.ஜி, யு.கேஜி ரூ 4,500 ரூ 4,950
1 முதல் 5 வரை ரூ 5,500 ரூ 6,050
6 முதல் 8 வரை ரூ 7,000 ரூ 7,700
9, 10 வகுப்பு ரூ 8,900 ரூ 9,790
11, 12 வகுப்பு ரூ 10,000 ரூ 11,000

SDS பள்ளி நிர்வாகம், மேற்கண்ட கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால் 3 மடங்கு கூடுதலாக முதல் தவணை, இரண்டாம் தவணை என பெற்றோர்களை ஏமாற்றி நூதன முறையில் பல்வேறு துண்டு சீட்டு ரசீதுகளை கொடுத்து மோசடியாக வசூலித்து வருகிறார்கள். இது சட்டவிரோதம், அப்பாவி கிராமத்து பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி செயல் என்று உரிய ரசீது ஆதாரங்களுடன் மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத் தலைவர் தமிழரசன், மாவட்ட கல்வி துறை அதிகாரிகளிடமும், நீதியரசர் சிங்காரவேல் கமிட்டியிடமும் புகார் மனு அனுப்பியுள்ளார். அதன் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்காக போராடி வரும் தமிழரசன் அவர்கள் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

எமது சங்கம், சேத்தியாதோப்பில் மட்டுமல்ல, மாவட்டம் முழுவதும் மாணவர்களுக்கு டி.சி. கொடுப்பேன் என பெற்றோர்களை மிரட்டுவது, அதிக பணம் கேட்டு டி.சி. தர மறுப்பது, பல மடங்கு கட்டணம் வசூலிப்பது, புத்தகம் நோட்டு தரமறுப்பது, தேர்வு எழுத விடாமல் மாணவர்களை தடுப்பது போன்ற தனியார் பள்ளிகளின் அத்துமீறல்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தி வருகிறது. மேலும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்தவும், அனைவருக்கும் தாய் மொழியில் கல்வி வழங்கவும் வலியுறுத்தி தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது.

2012-ம் ஆண்டு சிதம்பரம் வட்டாட்சியர் தலைமையில் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் SDS பள்ளி நிர்வாகம் அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூல் செய்கிறோம் என உறுதியளித்தது. ஆனால் அதை மீறி பல மடங்கு கட்டணம் வசூலித்தது. இன்று வரை அது தொடர்கிறது. SDS பள்ளி 2013 – 2014 ஆண்டு வழங்கிய கல்வி கட்டண ரசீது முறையே

எஸ்.டி.எஸ் & இ.எஸ் டிரஸ்ட்
இன்பர்மேசன் சிலிப்
எஸ்.டி.எஸ் குரூப் ஆஃப் ஸ்கூல்
எஸ்.டி.சியோன் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல்
கிளாஸ் பெர்மிட் சிலிப்

அட்டையில் வகுப்பையும் பெயரையும் குறித்து I, II டெர்ம் என விதம் விதமாக வசூலித்து வருகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இத்தகைய ரசீதுகளை ஆதாரமாக வைத்துதான் நீதியரசர் சிங்காரவேல் கமிட்டியிடம் வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடந்தபோது பள்ளி நிர்வாகத்தை நீதிபதி கடுமையாக பேசினார். அப்போதுதான் பள்ளி நிர்வாக தரப்பில் வந்தவர்கள் கோவென அழுதனர். அதை சுவரோட்டியாக அச்சடித்து சேத்தியாதோப்பு முழுவதும் ஒட்டினோம். அனைத்து போஸ்டர்களையும் பள்ளி தாளாளர் ஆள் வைத்து கிழித்தார். மேலும் இரும்பு தடி கொடுத்து அடியாளை அனுப்பி தமிழரசன் அவர்களை மிரட்டவும் செய்தார். வடபாக்கத்தில் உள்ள அவர் மகள் வீடு, சேத்தியாதோப்பில் தமிழரசன் இல்லாத போது அவர் வீடு என ஆள் அனுப்பி பேரம் பேச முயல்வது, மிரட்டுவது என தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுக்கின்றனர். இது குறித்து பள்ளி தாளாளர் மீதும் அவர் அனுப்பிய அடியாள் மீதும் சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆங்கில கல்வியை தரமாக தருவதாக சொல்லும் SDS பள்ளி ரசீதில் எழுதப்பட்டுள்ள தவறான ஆங்கில வார்த்தைகளை படித்தால் தெரியும். +2 மாணவர்களிடம் ரூ 45,000 வாங்கி கொண்டு இரவு வரை சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். சிகப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்ற முட்டாள் தனம் போல் அதிக கட்டணம் வசுலித்தால் கல்வி தரமாக சொல்லி கொடுப்பார்கள் என பெற்றோர்கள் நம்ப முடியுமா? தனியார் பள்ளி தாளாளர்களின் கட்டணக் கொள்ளைக்கு அடிபணிந்து போவது அவமானம் என்று நினைக்க வேண்டாமா? நம் பிள்ளைகளுக்காக நாம் போராடாமல் யார் போராடுவார்கள்? நமது சங்கத் தலைவர் தமிழரசன் உங்களுக்காகதானே போராடி வருகிறார். SDS பள்ளி தாளாளர் அவரை மிரட்டுவதை நாம் அனுமதிக்கலாமா? பெற்றோர்களே சிந்தியுங்கள்.

SDS பள்ளி மீது தலைவர் கோ. தமிழரசன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையிலான கமிட்டியிடம் வழக்கு தாக்கல் செய்தார். அங்கும் பள்ளி தாளாளர், அதிக கட்டணம் வசூலிக்கவில்லை என சத்தியம் செய்தார். நீதியரசர் சிங்காரவேல் கமிட்டியிலும் அதே போல் கூடுதலாக பெற்றோர்களிடம் வசூலிக்கவில்லை என அடித்து பொய் பேசுகிறார். நாம் கொடுத்த ரசீது ஆதாரங்களுக்குரிய பெற்றோர்களுக்கு மட்டும் திருப்பி கொடுக்க சொல்கிறேன் என நீதியரசர் சிங்காரவேல், தமிழரசனை கேட்டார். SDS பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கூடுதலாக கட்டிய பணத்தை திருப்பி தர வேண்டும் என நம் சார்பில் ஆஜரான மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மூலமாக தெரிவித்தார்.

இதனால் நீதியரசர் சிங்காரவேல் அவர்கள் நமது வாதத்தை ஏற்று கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளார். கல்வித்துறை அதிகாரிகள் சேத்தியாதோப்பு SDS பள்ளி பெற்றோர்களை நேரில் சந்தித்து கூடுதலாக பணம் வசூலிக்கபட்டுள்ளதா? என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வர்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. SDS பள்ளி பெற்றோர்களிடம் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது உண்மை என்றால் அதை திருப்பி தரவேண்டும் என கமிட்டி உத்திரவிடும். SDS பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வருங்காலத்தில் அரசு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என எச்சரிக்கை செய்யப்படும். SDS பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

எனவே SDS பள்ளி பெற்றோர்கள் தாங்கள் கூடுதலாக பணம் செலுத்தியதற்கான ரசீது துண்டு சீட்டு போன்ற எதுவானாலும் நமது பெற்றோர் சங்க தலைவர் தமிழரசனை தொடர்பு கொண்டு அதன் நகலை கொடுக்க வேண்டும். கல்வித்துறை அதிகாரி விசாரணைக்கு இந்த வாரத்தில் சேத்தியாதோப்பு வர இருக்கிறார். அவரிடம் நாம் முழு உண்மைகளையும் SDS பள்ளி தாளாளருக்கு தயங்களாமல், பயப்படாமல் சொல்ல வேண்டும். பெற்றோர்கள் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களுடன் உடனே நமது சங்க தலைவரை நேரில் தொடர்பு கொண்டு உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழரசன், தலைவர் செல்: 9965624345
பாலு மகேந்திரன், செயலாளர் செல்: 9443877062

s-thoppu-posterஅனைத்து மாணவர்களும் தரமான கல்வி பெற தனியார் பள்ளிகள் தீர்வு அல்ல. அரசு பள்ளிகளில் நமது பிள்ளைகளை சேர்ந்து அதன் தரம் உயர்த்த போராடுவதுதான் தீர்வு. சீனா, ஜப்பான், ஜெர்மனி, போன்ற பெரும்பான்மையான நாடுகளில் அந்த நாட்டு அரசுதான் கல்வியை இலவசமாக கொடுக்கிறது. தாய்மொழியில்தான் கற்பிக்கிறது. கன்னடம், தெலுங்கு போல் ஆங்கிலம் ஒரு மொழி. ஆங்கிலம் படித்தால் அறிவு வளரும் என்பது முட்டாள்தனமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில அறியாமையை வைத்துதான் தனியார் பள்ளி தாளாளர்கள் நம்மிடம் பணம் பறிக்கிறார்கள்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் உறுப்பினராக சேருங்கள். உங்கள் ஊரில் பெற்றோர் சங்க கிளையை துவங்குங்கள்.

தகவல்

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
சேத்தியாதோப்பு, கடலூர் மாவட்டம்.