privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

நூர் அகமது இனி எங்கே தங்குவார் ?

-

வீடற்றவர்கள் ஓவியம் 3”நானும் என் மனைவியும் தோட்ட வேலை கற்றுக் கொண்டோம். நாங்கள் இந்த லோதி சாலையை அழகுபடுத்த நாளெல்லாம் வேலை செய்தோம். மண்ணைப் பறித்து, அதை பண்படுத்தி, அதில் பூ விதைகளைப் போட்டு செடிகளை வளரச் செய்தோம். அந்தச் செடிகளுக்கெல்லாம் சரியான நேரத்திற்கு தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றினோம். எங்கள் இருவருக்குமாகச் சேர்ந்து ஆறாயிரம் ரூபாய்கள் சம்பளமாக கிடைத்தது. அதை வைத்து எங்கள் இருவரையும் தவிர எங்களின் மூன்று குழந்தைகளுக்கும் வயிறார சாப்பாடு போட முடிந்தது…”

“அப்புறம் காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. நிறைய வெளிநாட்டுக்காரர்கள் வந்தார்கள். விளையாடி விட்டுச் சென்று விட்டார்கள். சொந்தமான ஒரு வீட்டில் குடியிருக்க வேண்டும் என்கிற எங்கள் கனவைப் போலவே வாகனங்கள் நிறுத்தும் அந்த இடமும் காலியாகவே கிடக்கிறது. கொஞ்சம் பணத்தை சேர்த்து வைக்கலாம் என்று தான் முயற்சிக்கிறோம்.. ஆனால்…”.

பேசும் போதே நூர் அகமதின் குரல் அடைத்துக் கொள்கிறது. பல்லாண்டுகளாக அவரும் அவரது குடும்பமும் தில்லியின் லோதி காலனியில் இருந்த விக்லாந்த் பஸ்தி என்கிற சேரிப் பகுதியில் வீடு என்று அவரால் அழைக்கப்படும் ஒரு அமைப்பினுள்தான் ஒண்டிக் கொண்டிருந்தனர். லோதி காலனியில் அமைக்கப்பட்டிருக்கும் நேரு விளையாட்டரங்கிற்கான வாகன நிறுத்தம் ஒன்றை அமைப்பதற்காக அகமதின் குடிசை அமைந்திருந்த விக்லாந்த் பஸ்தியுடன் சேர்த்து பிரபு மார்கெட் கேம்ப், பிரபு மார்கெட் கேம்ப் விரிவு மற்றும் இந்திரா காந்தி கேம்ப் ஆகிய சேரிப் பகுதிகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டன. இன்றைக்கு நூர் அகமதின் குடும்பம் தில்லியின் தெருக்களில் விசிறியடிக்கப்பட்டுள்ள வீடற்ற பல்லாயிரம் குடும்பங்களில் ஒன்று.

அகமதுவைப் போல் லட்சக்கணக்கானோர் தலைநகர் தில்லியில் ஒண்ட இடமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வீடற்றவர்கள் யார் என்பதைப் பற்றி அரசாங்கத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை கொண்டிருக்கும் அளவுகோலில் இருந்தே அரசின் வக்கிரங்கள் தொடங்குகின்றன. .

மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறையின் அளவுகோலின் படி, வீடற்றவர்கள் என்றால் சாலையோரங்களிலோ, கூரையற்ற இடத்தில் உறங்குகிறவர்களாகவோ, குழாய்களுக்குள் ஒண்டிக் கொள்பவர்களாகவோ, கோவில்களில் உறங்குகிறவர்களாகவோதான் இருக்க வேண்டும். தலைக்கு மேல் மழைக்காகவோ வெயிலுக்காகவோ தார்பாலின் கித்தாயை விரித்திருந்தாலே அது ’வீடு’ என்கிற கணக்கில் அடங்கி விடும்.

2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் பார்த்தால், தில்லியில் சுமார் 46,724 பேர் வீடற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பல்வேறு தன்னார்வக் குழுக்கள் எடுத்த கணக்கின்படி தில்லியில் மட்டும் சுமார் 2,46,800 பேர் வசிப்பிடம் இல்லாதவர்கள். வறுமைக் கோட்டில் தில்லுமுல்லு செய்து வறுமையை ஒழித்ததும் இதுவும் வேறு வேறு அல்ல. இரண்டுமே ஏழைகள் குறித்த அரசின் கண்ணோட்டத்தில் உறைந்து போயிருக்கும் தடித்தனம் தான்.

வீடற்றவர்கள் ஓவியம் 2இத்தனை பேருக்குமாகச் சேர்த்து அரசால் சுமார் 229 இரவு நேர வசிப்பிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் 83 மட்டும் தான் நிரந்தரமானவை. மீதமுள்ளவைகளில் 97 தற்காலிகமாக மரத்தடுப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை, 22 டெண்டுகள் மற்றும் 27 தனிநபர்களுக்குச் சொந்தமானவை. இதன் ஒட்டு மொத்தக் கொள்ளளவு சுமார் 17,000 தான். தவிர, ஏற்கனவே அரசால் நடத்தப்பட்டு வந்த இரவு நேர தங்குமிடங்கள் அனைத்தும் மூடப்பட்டும் கைவிடப்பட்டும் வருகின்றன.

தில்லி ஜூம்மா மசூதியை அடுத்துள்ள மீனா பஜார் பகுதியில் சுமார் ஆயிரம் பேர் வரை கொள்ளும் தங்கிடம் ஒன்று சமீபத்தில் மூடப்பட்டுள்ளது. தற்போது அங்கே மூப்பது ரூபாய் வாடகைக்குக் கயிற்றுக் கட்டில், தலையணை மற்றும் கம்பளி ஒன்றும் வாடைகைக்கு விடும் தொழில் போலீசின் ஆசியோடு சிறப்பாக நடந்து வருகிறது. தினக் கூலிக்கு உழைத்து விட்டு இரவு நேரங்களில் முப்பது ரூபாய் கொடுத்து தெருவோரக் கட்டில்களில் ஒடுங்கிக் கொள்பவர்கள் அப்படியும் நிம்மதியாகத் தூங்க முடியாது. ஒருவேளை மாமூல் சென்று சேர தாமதமானால் போலீசின் தடிக் கொம்பு எந்த நேரத்திலும் புட்டத்தைப் பதம் பார்க்கும் வாய்ப்புகளும் உண்டு.

வீடற்றவர்கள் சந்திக்கும் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் ஏராளமானவை. அதிலும், தில்லியின் தட்பவெட்பம் பிற இந்தியப் பெருநகரங்களில் இருந்து பாரிய அளவுக்கு வேறானது. ஒவ்வொரு ஆண்டும் வருடத்தின் இறுதி மாதங்களில் குருதியை உறைய வைக்கும் குளிரும் மத்திய மாதங்களில் எலும்பை உருக வைக்கும் வெப்பமும் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை பறித்து விடுகிறது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பத்து தேதிகளுக்குள் மாத்திரம் சுமார் 123 பேர் வெயிலின் கொடுமையால் உயிரிழந்துள்ளனர். 2009-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து இந்தாண்டு ஜூன் மாதம் வரை இவ்வாறு வெயில் மற்றும் குளிரின் கொடுமையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,397. இவர்களில் எண்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் வீடற்றவர்கள்.

தில்லியின் தெருவோரங்களில் சிறு கடைகளை நடத்துவது, வீட்டு வேலைகள் செய்வது, ரிக்சா இழுப்பது, கைவண்டி இழுப்பது போன்ற சிறு சிறு வேலைகள் மட்டுமின்றி நகர சுத்தி வேலைகளில் ஈடுபடுபவர்களும் இவர்கள் தான். சொல்லப் போனால், பணக்கார தில்லி மேட்டுக்குடி சுகவாசிகளின் அன்றாட இயக்கமே இவர்களைச் சார்ந்து தான் சுழல்கிறது. தில்லியின் தெருக்களில் ஒண்டிக் கிடக்கும் இவர்கள் இல்லையென்றால், மொத்த நகரமும் ஸ்தம்பித்துப் போய் விடும்.

இம்மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொள்வதோடு பதிலுக்கு மனிதர்கள் நுழையவே தகுதியற்ற கொட்டகைகளை இவர்களுக்கான தங்குமிடங்களாக ஒதுக்கியிருக்கிறது அரசு. பச்சையான இந்த அயோக்கியத்தனத்தைத் தான் முன்னேற்றம் என்று சாதிக்கிறது ஆளும் வர்க்கம். உலகளவில் இராணுவ ரீதியில் பலம் பொருந்திய நாடுகளில் ஒன்றாகவும், முதல் ஐந்து பொருளாதார சக்திகளில் ஒன்றாகவும் இந்தியா ’வளர்ந்துள்ளது’ என்று பீற்றிக் கொள்ளும் ஆளும் வர்க்கம், தனது சொந்த மக்களுக்கு சாப்பாடு கூட போட வக்கில்லாததோடு குளிர் மற்றும் வெயிலில் இருந்து மக்களின் உயிர்களைக் கூட காப்பாற்ற கையாலாகாமல் இருக்கிறது. இதைத் தான் முன்னேற்றம் என்கிறார்கள் முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள்.

காசிருந்தால் உயிர் இருக்கலாம், காசில்லா விட்டால் சமூகத்தின் இயக்கத்திற்கு என்னதான் பங்களிப்பு செய்திருந்தாலும் மரணத்தைத் தான் கூலியாக பெற்றுக் கொள்ள முடியும் என்கிறது ஆளும் வர்க்கம். தலைநகரிலேயே இந்த வக்கிரம் இவ்வளவு கோரமாக பல்லிளிக்கிறது என்றால் மற்ற பின்தங்கிய பகுதிகளில் நிலைமை எப்படி இருக்கும் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியும்.

நூர்அகமதுவின் பேட்டி வெளியாகி இரண்டாண்டுகளூக்கும் மேல் ஆகிறது… இந்தக் கோடை காலத்தை அவர் தாக்குப் பிடித்து பிழைத்துக் கிடக்கிறாரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், சொந்தமான ஒரு இடத்தில் கவுரவமாக வாழ வேண்டும் என்கிற கனவு நிச்சயம் நிறைவேறியிருக்காது என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

வசதி படைத்த நடுத்தர வர்க்கம் பல இலட்சங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவதை வாழ்க்கை லட்சியமாக வைத்திருக்கிறது. மேட்டுக்குடியினரோ பொழுதுக்கு ஒரு பண்ணை வீடுகளை வாங்கிக் குவித்து வருகின்றனர். ஏழைகளுக்கோ ஒண்டிக் கொள்வதற்கு கூட ஒரு தரையில்லை.

இதுதான் இன்றைய இந்தியா!
___________________________
புது தில்லியின் வீடற்ற மக்களின் வாழ்க்கை காட்சிகள் – பெரிதாக பார்க்க சொடுக்கவும்


மேலும் படிக்க:
In two days, 41 homeless deaths in the Capital
The deplorable plight of Delhi’s homeless
Delhi government turns abandoned buses into night shelters for thousands of homeless people

  1. வசதி படைத்த நடுத்தர வர்க்கம் பல இலட்சங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவதை வாழ்க்கை லட்சியமாக வைத்திருக்கிறது. மேட்டுக்குடியினரோ பொழுதுக்கு ஒரு பண்ணை வீடுகளை வாங்கிக் குவித்து வருகின்றனர். ஏழைகளுக்கோ ஒண்டிக் கொள்வதற்கு கூட ஒரு தரையில்லை.

    இதுதான் இன்றைய இந்தியா!

  2. நூர் அகமது இனி எங்கே தங்குவார் ?

    உழைத்து வாழ்க்கையில் முன்னேற வழி தேடுவார்

    • லோதி தெரு செடிகளைப் பராமரிப்பது உழைப்பில் சேர்த்தி இல்லையா?

  3. ஏழைகளுக்கோ ஒண்டிக் கொள்வதற்கு கூட ஒரு தரையில்லை.
    இதுதான் இன்றைய இந்தியா!

    “” இந்தியா மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் ஏழைகள் உள்ளனர்…. மிக அதிகமாக வினவு புகழும் கம்யூனிச நாடுகளில் ஏழைகள் உள்ளனர்…இது தான் இன்றைய உலக நிலைமை… சாதாரன மக்கள் கூட இன்று எச்ச கையில் காக்கா ஓட்ட மாட்டான்… இது மேலும் மோசமாகுமே தவிர, குறையாது… வினவு ஆதரிக்கும் போராட்ட முறை இன்றைய நவீன போர் முனை ஆயுதங்களால் மிக எளிதாக முறியடிக்கப்படும்…. யாராலும் இதை மாற்ற முடியாது…

  4. It would have been good if communists ( I hope there a few at Delhi too) or the party for the Common Man — A A P — took up this case and resolved the problem of persons evicted for some “development” work. Just to say after two years, the blogger did not know what happened to him and his family, means nothing, except a topic for a blog-post to condemn the Government.

Leave a Reply to அசுரபாலகன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க