privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்காவி கிரிமினல்களின் புதுத்திமிர்

காவி கிரிமினல்களின் புதுத்திமிர்

-

மோடி ஆட்சியில் அமர்ந்ததைத் தொடர்ந்து நாடெங்கும் ஆங்காங்கே இந்து மதவெறியர்களின் தாக்குதல்கள் புது வேகத்துடனும் வெறியுடனும் தொடங்கியிருக்கின்றன. தேர்தல் பிரச்சாரத்தின் போது, வளர்ச்சி, நல்லாட்சி என்ற முகமூடிகள் மூலம் தனது இந்து மதவெறி முகத்தை மறைத்துக் கொண்ட இந்தக் கும்பல், தற்போது குஜராத் மாடல் இந்துத்துவ பாசிசத்தை நாடு முழுவதும் நிலைநாட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஃபேஸ்புக்கில் நிகால் கான் என்ற முஸ்லிம், மராத்திய மன்னன் சிவாஜியையும், பால் தாக்கரேவையும் இழிவுபடுத்திவிட்டதாகவும், சிவாஜி சிலையை யாரோ சேதப்படுத்தி விட்டதாகவும், இந்துப் பெண்ணை மாற்று மதத்தினர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் பலவிதமான வதந்திகள் இந்துவெறி அமைப்புகளால் புனே நகரில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டன.

இதனைத் தொடர்ந்து புனே மற்றும் அவுரங்காபாத் நகரங்களில் உள்ள முஸ்லிம் குடியிருப்புகள், கடைகள், நடைபாதைகள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியது இந்து ராஷ்டிர சேனா என்ற இந்து வெறி அமைப்பு. புனே நகரில் பல மசூதிகளுக்குள் புகுந்து குர் ஆனை எரித்து, முஸ்லிம்களின் கல்லறைகளைச் சேதப்படுத்தி, இந்துக்களும் முஸ்லிம்களும் வழிபடுகின்ற பிரபல தர்காவான ஹஸ்ரத் ஜலாலுதீன் குவாத்ரி தர்காவைச் சூறையாடி வெறியாட்டம் நடத்தியதோடு, நெடுஞ்சாலைகளை மறித்து வாகனங்களின் கண்ணாடிகளை உடைப்பது போன்ற காலித்தனங்களிலும் ஈடுபட்டிருக்கிறது.

மோசின் சாதிக் ஷேக்
இந்து மதவெறி பயங்கரவாதிகளால் நடுரோட்டில் அடித்தே கொல்லப்பட்ட மோசின் சாதிக் ஷேக்.

இதன் தொடர்ச்சியாகத்தான், தொழுகைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த மோசின் சாதிக் ஷேக் என்ற 24 வயது முஸ்லிம் இளைஞர் தடிகளாலும், ஹாக்கி மட்டைகளாலும் நடுவீதியில் வைத்து, துடிக்கத் துடிக்க அடித்துக் கொல்லப்பட்டார். அவர் செய்த ஒரே தவறு, தன்னை முஸ்லீமாக அடையாளம் காணும் விதத்தில் தாடி வைத்து, தலையில் குல்லா அணிந்து, பதானி குர்தா அணிந்திருந்ததுதான். அவர் ஒருபாவமும் அறியாத அப்பாவி என்று தெரிந்தேதான் அவரைக் குரூரமாகக் கொலை செய்திருக்கிறார்கள் இந்து வெறியர்கள். ஒரு அப்பாவியைக் கொன்றது மட்டுமின்றி, இக்கொலையைக் கொண்டாடும் விதத்தில், “முதல் விக்கெட் விழுந்துவிட்டது” என்று குறுஞ்செய்தி அனுப்பி மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இயங்கிவரும் இந்த அமைப்பின் தலைவன் தனஞ்செய் தேசாய், ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களைத் தொழிலாகக் கொண்டவன். இந்து ராஷ்டிர சேனா என்பது இந்த கிரிமினலின் அரசியல் முகம். கடந்த 5 ஆண்டுகளில் இவன் மீது 23 கிரிமினல் வழக்குகள் இருந்த போதிலும், மாநிலத்தை ஆளும் காங்கிரசு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விளைவு, மாநிலம் முழுவதும் உதிரி வர்க்க இளைஞர்கள் சுமார் 4000 பேரை ரவுடிக் கும்பலாக இவனால் திரட்ட முடிந்திருக்கிறது. மோசின் ஷேக் கொலையும்கூடத் திடீரென்று நடந்து விடவில்லை. அதற்கு முந்தைய நாட்களில், மசூதிகளையும் வாகனங்களையும் தாக்கி பீதியைப் பரப்பிய போதிலும், போலீசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துணை நின்றதன் தொடர்ச்சியாகத்தான் அந்தக் கொலை நடந்திருக்கிறது.

தனஞ்செய் தேசாய்
இந்து ராஷ்டிர சேனா என்ற இந்து மதவெறி பயங்கரவாத அமைப்பின் தலைவன் தனஞ்செய் தேசாய்

இந்தக் கொலை உள்ளிட்ட கலவரங்கள் அனைத்துக்கும் காரணமாக சித்தரிக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கம் குறித்த உண்மை என்ன? ஒரு ஆண்டுக்கு முன்னரே உருவாக்கப்பட்ட அந்த பக்கம் நிகில் திகோனே என்ற இந்து இளைஞருடையது என்று இப்போது கூறுகிறது மகாராஷ்டிர போலீசு.

*****

டந்த மாதம் சென்னையில் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

கட்டப்பஞ்சாயத்து, சொந்தப் பகை, தொழில் போட்டி, பெண் விவகாரம் போன்ற காரணங்களுக்காக அவ்வப்போது கொல்லப்படும் ஓட்டுப் பொறுக்கி கட்சிக்காரர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லையென்ற போதிலும், கொல்லப்பட்டவர்கள் அனைவருமே இந்து சமூகத்துக்காக தொண்டாற்றிய புனிதர்கள் போலவும், அதனால்தான் முஸ்லீம் தீவிரவாதிகள் அவர்களைக் கொன்று விட்டதைப் போலவும் ஒரு திட்டமிட்ட பொப்பிரச்சாரத்தை செய்து வருகின்றன இந்துவெறி அமைப்புகள். செத்த மறுகணமே, சுரேஷ் குமாரின் குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் தரவேண்டும், மனைவிக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று அறிக்கை விடுகிறார் இராம.கோபாலன்.

கொலையாளிகள் குறித்து போலீசு விசாரணையைத் துவக்கும் முன்பே முஸ்லீம் பயங்கரவாதிகள்தான் இந்தக் கொலையைச் செய்ததாகக் குற்றம் சாட்டிய இந்து முன்னணி, சுரேஷ்குமாரின் பிணத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்ற வழிநெடுக சிறுபான்மையினரைத் தூற்றிக் கோஷமிட்டதுடன், பொதுமக்கள் மீதும், கடைகள் மீதும், பேருந்துகள் மீதும் கல்வீசித் தாக்கியுள்ளனர். ஒரு கிறித்தவ தேவாலயத்தின் மீதும் கல்வீசித் தாக்கியிருக்கின்றனர்.

சுரேஷ்குமாரின் சோந்த ஊரான நாகர்கோயிலுக்கு அவரது பிணத்தைக் கொண்டு சென்று அங்கும் ஊர்வலம் என்கிற பெயரில் கலவரம் செய்துள்ளனர். சென்னையில் செய்ததைப் போலவே கடைகளையும், வாகனங்களையும், அரசுப் பேருந்தையும் உடைத்ததுடன், வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஃபைசல் என்ற அப்பாவி இஸ்லாமியர் ஒருவரைக் கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர். சென்னையில் கலவரம் செய்தது தெரிந்தும், நாகர்கோயிலில் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து, இந்து வெறியர்களின் வெறியாட்டத்தை வேடிக்கை பார்த்திருக்கிறது தமிழக போலீசு.

சுரேஷ்குமார்
நாகர்கோயிலில் நடந்த திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமாரின் இறுதி ஊர்வலத்தின் பொழுது, ரவுடித்தனத்தில் இறங்கிய இந்து முன்னணி காலிகளைக் கலைக்கும் தமிழகப் போலீசு (உள்படம்) சுரேஷ்குமார்.

இந்தக் கலவரங்கள் குறித்து நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற இந்து முன்னணி பிரமுகர் “இது சும்மா உணர்ச்சிவசப்பட்டவர்கள் செய்தது, நாங்கள் திட்டமிட்டு நடத்தினால் வேறு மாதிரி இருக்கும்” என நேரடியாக மிரட்டுகிறார். “ஒரேயொரு கொலை நடந்திருக்கிறது. அதற்கு மோடி என்ன செய்ய முடியும்? ஏன் சும்மா கூச்சல் போடுகிறீர்கள்?” என்று புனே கொலையைப் பற்றி பேசியிருக்கிறார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

கலிபோர்னியாவில் உள்ள சன்னிவாலி நகரில் இசை நிகழ்ச்சி நடத்தச் சென்ற பிரபல இசைக் கலைஞர் சுபா முட்கல், நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடியைக் கண்டித்து எழுதப்பட்ட கடிதத்தில் கையொப்பமிட்ட காரணத்துக்காக அங்கே மிரட்டப் பட்டிருக்கிறார். கோவா, மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் மோடியை விமரிசித்து இணையத்தில் எழுதியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை வைக்கப்படுகின்றனர். மோசின் ஷேக் படுகொலையைத் தொடர்ந்து அந்நகரில் இஸ்லாமியர்கள் பலர் தங்களது தாடிகளை மழித்துக் கொண்டதுடன், குல்லா, குர்தா அணிவதையும் கைவிட்டுவிட்டதாகக் கூறுகின்றன பத்திரிகை செய்திகள்.

இப்படி சிறுபான்மை மக்களைத் தாக்குவதன் மூலம், தாம் இரண்டாந்தர குடிமக்கள்தான் என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளுவதும், மதச்சார்பற்ற ஜனநாயகவாதிகளை அச்சுறுத்தி வாயடைக்க வைப்பதும்தான் இந்து மதவெறியர்களின் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு எத்தகைய பாதகத்தையும் செய்வார்கள் என்பதே அவர்களுடைய வரலாறு.

மோடியின் ஆட்சி அவர்களுக்குப் புதிய திமிரைக் கொடுத்திருக்கலாம். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இந்தத் திமிருக்குப் பணியக்கூடாது. இம்மியளவும் விட்டுக் கொடுக்கக் கூடாது. இவை ஒவ்வொன்றையும் எதிர்த்து நாம் போராட வேண்டும்.

– அழகு
______________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2014
______________________________