privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைதமிழுக்கு பார்ப்பன எதிர்ப்பென்று பேர்!

தமிழுக்கு பார்ப்பன எதிர்ப்பென்று பேர்!

-

தமிழுக்கு பார்ப்பன எதிர்ப்பென்று பேர்!

சிதம்பரம் நடராசர் கோயிலில் சிவனடியார் ஆறுமுகசாமி
தமிழ் இங்கே கோயில் கருவறைக்குள் நுழையவொண்ணா ‘நீச பாஷை!’ (சிதம்பரம் நடராசர் கோயிலில் சிவனடியார் ஆறுமுகசாமி)

திமொழி தாய்த்தமிழை
அரசுப்பள்ளிவிட்டே அகற்றிவிட்டு
பேதிமொழி சமஸ்கிருதத்திற்கு
கொண்டாட்ட வாரமா?

இந்த, அசிங்கத்தை அனுசரிக்க
தமிழ் நிலம் என்ன சோரமா?

உழைப்பவர் உயிர்த்தசையில்
மெய்சிலிர்க்கும் தமிழ் மணத்தை
தடுத்துவிட்டு,
செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு
எத்தனை சென்ட் அடித்தாலும்
பார்ப்பன நாற்றம்தான் மாறுமா?

மொழிதானே என மொழிய விட்டும்
ஆரியப் பெருக்கை வழியவிட்டும்
வந்தது கேடு,
உழைப்பவர் நானிலம் உறிஞ்சிட்ட பார்ப்பனியம்
திமிரில் சொல்லுது “இது இந்து நாடு!”

ராமலிங்க அடிகளார்
தரணி மொழிக்கெல்லாம் தாய் சமஸ்கிருதம்தான் எனப் பார்ப்பனியம் தண்டத்தை தூக்கியபோது, அவ்வாறாயின் தந்தை தமிழென்று வள்ளலார் மண்டையில் போட்டது மறந்தா போயிற்று?

கருவில் காத்து வளர்ந்து
கண் மலர்ந்து, மண் அளந்து
எம் மழலை இதழ் ஊறும்
மரபின் உயிர் சுரக்கும்
தமிழ் இங்கே
கோயில் கருவறைக்குள் நுழையவொண்ணா
‘நீச பாஷை!’

தெருவில் பிச்சைக்கு வந்து
தெண்டச் சோறில் சதை வளர்த்து
சுரண்டும் வர்க்கத்திற்கு சொறிந்துவிட
உன் சமஸ்கிருதம் தேவ பாஷையா?

கிரந்த லிபியாய் கிறுக்கிப் பார்த்து
மணிப்பிரவாளமாய் கலந்துபார்த்து
கடைசியில்
தரணி மொழிக்கெல்லாம் தாய் சமஸ்கிருதம்தான்
எனப் பார்ப்பனியம்
தண்டத்தை தூக்கியபோது,
அவ்வாறாயின் தந்தை தமிழென்று
வள்ளலார்
மண்டையில் போட்டது மறந்தா போயிற்று?

பரிதிமாற்கலைஞர்
பார்ப்பன மொழித் திரிபை பரிதிமாற்கலைஞர் போட்டுடைத்தார் காரித்துப்பி!

தமிழைப் பார்த்து
சமஸ்கிருதம் அடித்த காப்பி
பசுவுக்கே
பசும்பால் கா(ப்)பி!
பார்ப்பன மொழித் திரிபை
பரிதிமாற்கலைஞர்
போட்டுடைத்தார் காரித்துப்பி!

ஆரிய சுட்டுச் சொற்கள்
தமிழிலிருந்து ‘சுட்டவை’ என
சமஸ்கிருத பாடையை சகித்துக்கொண்டு
பிரித்துக்காட்டினார் கால்டுவெல்!

“ஆரியம் போல் வழக்கொழிந்து சிதையாமல்
சீரிளமைத் திறம் வியந்து”… தமிழே!
எனப் பூரித்து,
வடமொழி சவத்தை
வைக்கவேண்டிய இடத்தில் வைத்தார்
மனோன்மணியம் சுந்தரனார்!

கால்டுவெல்
ஆரிய சுட்டுச் சொற்கள் தமிழிலிருந்து ‘சுட்டவை’ என சமஸ்கிருத பாடையை சகித்துக்கொண்டு பிரித்துக்காட்டினார் கால்டுவெல்!

“தெற்கோதும் தேவாரத் தேனிருக்க
செக்காடும் இரைச்சலென வடமொழியா?” என,
பார்ப்பனத் திமிருக்கு
பதிலடி தந்தார் பாரதிதாசன்!

வழக்காடு மன்றத்தில்
தமிழ் இல்லை…

வழிபாட்டுக் கூடத்தில்
தமிழ் இல்லை…

வளரும் தலைமுறைக்கு
தமிழ் இல்லை…

தமிழே இல்லாத நாடு
தமிழ் நாடா?

எங்கும் தமிழ் வேண்டும்
எதிலும் தமிழ் வேண்டும் என
பொங்க வேண்டிய தருணத்தில்,
கிடப்பது கிடக்கட்டும்
இத்துப்போன சமஸ்கிருத எலும்புக் கூட்டை
இழுத்து வைத்து முத்தம் கொடு என்கிறது பார்ப்பனத் திமிர்!

பார்ப்பன சரடை முறுக்க
இளிச்சவாயன் வாயில் சமஸ்கிருதம் திணிக்க
ஆர்.எஸ்.எஸ். கும்பல்
தேடுது ஆளை!
இது மொழிப்பிரச்சனை அல்ல
பார்ப்பன நரிப் பிரச்சனை,
ஒட்ட நறுக்கிடு வாலை!

– துரை.சண்முகம்.