privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்கொரிய முதலாளிக்கு சுதந்திரம் – காஞ்சிபுரம் தொழிலாளிக்கு சிறை !

கொரிய முதலாளிக்கு சுதந்திரம் – காஞ்சிபுரம் தொழிலாளிக்கு சிறை !

-

யாருக்கு-எதற்கு-ஏன் சுதந்திரம் என்பதறியாமல், 68-வது சுதந்திர தினத்தை அப்பாவித்தனமாக கொண்டாடும் மக்கள் ஒருபுறம். மறுபுறம் மோடி முதல் லேடி வரை ஊடகங்கள் முதல் தனியார் நிறுவனங்கள் வரை வலுக்கட்டாயமாக கொண்டாடச் சொன்ன இந்த சுதந்திரம் உண்மையில் எப்படி இருக்கிறது?

ஹுண்டாய் கார்களுக்கு கதவுகளை தயாரித்துக் கொடுக்கும் ஜி.எஸ்.ஹெச் (GSH) என்கிற பன்னாட்டு நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்கி வருகிறது. பிற பன்னாட்டு கம்பெனிகளைப் போலவே ஜி.எஸ்.ஹெச் -ம் தொழிலாளர் நல சட்டங்களை மயிரளவு கூட மதிப்பதில்லை. அதற்காகத்தான் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஜி.எஸ்.ஹெச் ஒரு கொரிய நிறுவனம். இங்கே பணிபுரியும் 3000 பேரில் 300 பேர் தான் நிரந்தரத் தொழிலாளிகள். இந்த 300 நிரந்தரத் தொழிலாளிகள் செய்யும் வேலை ஒன்றென்றாலும் 100 பேரை தனியாகவும், 200 பேரை தனியாகவும் நிர்வாகம் பிரித்து வைத்திருக்கிறது. இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர்களில் 100 பேர் வெவ்வேறு நிறுவனங்களில் இரண்டு மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்ற பிறகு இங்கே வேலைக்கு வந்தவர்கள், இயந்திரங்களை இயக்கும் தொழில்நுட்ப அறிவு உள்ளவர்கள். ஆனால் அவர்களை தொழிலாளர்களாக வரையறுக்காமல் தொழிலாளிகளுக்குரிய உரிமைகளையும், சலுகைகளையும் நிர்வாகம் வழங்க மறுத்து வருகிறது.

மற்றொரு பிரிவினரான 200 பேரை தொழிலாளர்கள் என்று கூறி அவர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்குகிறது. இந்த 200 பேரில் யாருக்கும் தொழில்நுட்ப அறிவும் கிடையாது, அனுபவமும் கிடையாது. ஆனால் இவர்கள் அவர்களை விட இரண்டு மடங்கு சம்பளம் பெறுகின்றனர், வேலை செய்கின்ற நேரமும் குறைவு. இந்த 200 பேரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். மொத்தத்தில் இவர்கள் தொழிலாளிகள் என்கிற பெயரில் நிர்வாகத்தின் அடியாட்களாக ஆலைக்குள் இருக்கின்றனர்.

இந்நிலையில் 100 பேராக உள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் அனைவரும் வர்க்க ஒற்றுமையுடன் 2013-ம் ஆண்டு மே மாதத்தில் ‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’யில் தம்மை இணைத்துக் கொண்டு ஆலையில் சங்கத்தை துவங்கினர். சங்கம் துவங்கிய நாள் முதல் நிர்வாகம் பல்வேறு இடையூறுகள், நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருந்தது. 2013 ஜூலையில் தொழிலாளர் உதவி ஆணையரிடம் நிர்வாகத்தின் மீது ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போதே 43 தொழிலாளிகளை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது. தொழிலாளர்களை இவ்வாறு நீக்குவது சட்டவிரோதமானது. தொழிற்தகராறு சட்டம் 1947, பிரிவு 33-ன் படி ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது சம்பந்தப்பட்ட தொழிலாளிகள் மீது நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது, மாறாக அவர்களின் வேலைக்கு உத்திரவாதமளிக்க வேண்டும்.

ஆனால் ஜி.எஸ்.ஹெச் எந்த சட்டத்தையும் மதிக்காமல் தொழிலாளர்களை வீதியில் விட்டெறிந்தது. நீக்கப்பட்ட 43 தொழிலாளிகளும் 10 பேர், 12 பேர் என்று நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு படிப்படியாக வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். முதல் பிரிவு தொழிலாளிகள் வெளியேற்றப்பட்டதும் பு.ஜ.தொ.மு சார்பாக தொழிலாளர் உதவி ஆணையரிடம் இது சட்டவிரோதம் என்றும், இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் நான்கு முறையும் “அப்படியா சரி, ஒரு புகார் கொடுங்க” என்று புகாரை வாங்கி வைத்துக் கொண்ட தொழிலாளர் ஆணையர், நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மீதமுள்ளவர்களை நீக்குவதற்குள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. “நிர்வாகத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையிலிருக்கும் போதே நிர்வாகம் சட்டவிரோதமான முறையில் 43 தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது, இது சட்டவிரோதமானது. இது தொடர்பாக தொழிலாளர் ஆணையத்திடம் பல முறை புகார் அளிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே வழக்கு முடியும் வரை பிற தொழிலாளர்களை நிர்வாகம் வேலையிலிருந்து நீக்குவதோ வேறு எந்த நடவடிக்கையுமோ எடுக்கக்கூடாது” என்று நிர்வாகத்திற்கு எதிராக தடையாணை பெறப்பட்டது.

இதற்கிடையில் நிர்வாகத்தின் சட்ட விரோத நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர் விரோதப் போக்காகும் என்று திருப்பெரும்புதூர் தொழிலாளர் உதவி ஆணையரிடம் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் நிர்வாகத்தின் மீது குற்றவியல் சட்டத்தின்படியே நடவடிக்கை எடுக்கலாம். கடந்த 2013 ஜூலையில் போடப்பட்ட இவ்வழக்கு 2014 ஜூலையில் முடிந்தது. வழக்கு விசாரணையின் இறுதியில் நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு தகுதியானவை என்று நிரூபிக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு பிறகு நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு ஆணையர் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் எந்த உத்தரவும் போடவில்லை. ஏன் என்று கேட்டபோது சில டெக்னிக்கல் வேலைகள் இருக்கின்றன அவை முடிந்ததும் ஆர்டர் வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

ஒரு புறம் சட்டவிரோத வேலை நீக்கத்திற்கு எதிரான வழக்கு, மறுபுறம் உரிமைகளுக்கான வழக்கு, தொழிலாளர் விரோத போக்குகளுக்கு எதிரான வழக்கு என்று நிர்வாகத்தின் மீது மொத்தம் மூன்று வழக்குகள் போடப்பட்டிருந்தன. ஆனால் ஒரு வழக்கில் கூட நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மீண்டும் வேலை நீக்க நடவடிக்கையில் இறங்கியது. 43 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டதற்கு பிறகு வேலை நீக்கம் செய்யக்கூடாது என்பதற்கான தடையாணை அமுலில் இருக்கும் போதே 2014 மே மாதம் 12 பேரை தற்காலிக வேலை நீக்கம் செய்தது. இந்த நீதிமன்ற அவமதிப்பிற்கு நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுப்பட்டது. “இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19-ன் படி எங்களுக்கு சங்கம் அமைப்பதற்கு உரிமை இருக்கிறது, ஆனால் நிர்வாகம் அந்த அடிப்படை உரிமையை மறுத்து சட்ட விரோதமாக நடந்துகொள்கிறது. எனவே ஒரு குடிமகன் என்கிற வகையில் எங்களுடைய அடிப்படை உரிமைகளை மாவட்ட ஆட்சியராகிய நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும்” என்று மனு கொடுக்கப்பட்டது. இதன் மீது மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மீண்டும் ஜூலையில் ஒரு மனு கொடுக்கப்பட்டது, அதற்கும் பதில் இல்லை.

தொழிலாளர் ஆணையர், நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் என அதிகார மற்றும் நீதித்துறை அனைத்தும் கொரிய முதலாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அனைத்து அரசு அதிகார அமைப்புகளும் ஜி.எஸ்.ஹெச் என்கிற பன்னாட்டு கம்பெனிக்கு விசுவாசமான நாய்களாக நடந்துகொண்டன. இறுதியில் 2014 ஜூலையில் மீண்டும் மாவட்ட ஆட்சியரை பார்த்து, “நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக குடும்பத்துடன் உண்ணவிரதம் இருப்போம்” என்று தொழிலாளர்கள் கூறினர். அவரோ, ”அது உங்க உரிமை, உங்க சுதந்திரம், நீங்க இருந்துக்கங்க” என்றார்.

திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15 அன்று காலை, மாவட்ட ஆட்சியர் கொடியேற்றும் நேரத்தில் “இந்திய குடிமகனின் உரிமைகள் அனைத்தும் காற்றில் பறக்கிறது இதில் கொடியேற்றம் ஒரு கேடா” என்று போலி சுதந்திரத்தை அம்பலப்படுத்தி தொழிலாளர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்காக தொழிலாளர்கள் வெவ்வேறு வாகனங்களில் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

ஆனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் குவிக்கப்பட்டிருந்த 500 க்கும் மேற்பட்ட போலீசார் பேருந்துகளிலும், ஷேர் ஆட்டோக்களிலும், இருசக்கர வாகனங்களிலும் வந்து கொண்டிருந்த சிவப்பு சட்டை அணிந்திருந்த அனைவரையும் தடுத்து நிறுத்தி எங்க போற என்று விசாரித்து ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற தொழிலாளர்களை மட்டும் கைது செய்தது.

கைது செய்ய காரணம் வேண்டும் அல்லவா? எனவே தமது வாகனங்களை தாமே அடித்து உடைத்துக் கொண்டு, ஒரு போலீஸ்காரனை விட்டு மற்றொரு போலீஸ்காரனை அடித்து காயமடைந்தது போல செட்டப் செய்துவிட்டு தொழிலாளர்கள் தான் தாக்கினர் என்று கூறி தொழிலாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி, கைது செய்துள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாகவே போலீசு ரவுடிகள் மிகப்பெரியதொரு வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். சாலைகளில் தடுப்பரண்களை போட்டு தொழிலாளர்களை சுற்றி வளைத்து தாக்கி கை கால்களை உடைத்திருக்கின்றனர். கைது செய்தவர்களை வாகனத்தில் ஏற்றும் போது முழக்கமிட்ட பல தொழிலாளர்களை குத்தியதில் மூக்கு உடைந்து இரத்தம் கொட்டியிருக்கிறது. வண்டியில் ஏற்றிய பிறகு வயிற்றில் குத்தி கீழே தள்ளி பூட்ஸ் கால்களால் மிதித்திருக்கிறார்கள். உடம்பில் அடிபடாத இடம் எதுவும் இல்லை என்கிற அளவுக்கு தொழிலாளர்களை அடித்திருக்கிறார்கள். இவை அனைத்தும் ஆகஸ்ட் 15 அன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக கூடி தொழிலாளர்கள் தமது அடிப்படை உரிமைகளை கேட்டதற்காக கிடைத்த சுதந்திர தின பரிசு. போலீசின் அனைத்து ரவுடித்தனங்களையும் மாவட்ட ஆட்சியர் பார்த்துக்கொண்டு தான் நின்றிருக்கிறார்.

தற்போது 150 தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கின்றனர். போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த தாக்குதலில் ஓய்வு பெற்ற ASP, DSP உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் பங்கேற்றிருக்கின்றனர். பதவியில் இருக்கின்ற போலீசாரே பொறாமைப்படும் அளவுக்கு இந்த கிழட்டு நரிகள் பன்னாட்டு கம்பெனியின் நலனுக்காக பேயாட்டம் போட்டிருக்கின்றன. மாவட்ட ஆட்சியரின் முன் உரிமைக்காக போராடிய தொழிலாளிகளை ஒடுக்குவதே சட்டத்தின் ஆட்சி என்பதை நிரூபிக்கிறார்களாம். சுதந்திர தினத்தன்று தொழிலாளிகளின் போராட்டம் கருப்பு மையாக மாறிவிடக் கூடாது என அவர்களின் ரத்தத்தை சிந்த வைத்து சிவப்பாக்கி குதூகலித்திருக்கின்றனர்.

தொழிலாளர்களின் கை கால்களை உடைத்து கிரிமினல்களை போல கைது செய்து சிறையில் தள்ளியிருக்கிறது தமிழக காவல் துறை. கடந்த வாரத்தில் இதே போல புதுச்சேரி மாநிலத்தில் போராடிய தொழிலாளார்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாருதி தொழிலாளர்களுக்கும் இது தான் நேர்ந்தது. இது தான் முதலாளித்துவ பயங்கரவாதம். ஜனநாயகம், சுதந்திரம் என்பதெல்லாம் போலியானது, பொய்யானது என்பதற்கு இவற்றை விட என்ன நிரூபணம் வேண்டும்?

இந்த சட்டங்களும், நீதிமன்றமும், சமூக அமைப்பும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல அனைத்து பிரிவு மக்களுக்கு எதிரானவை என்பதற்கு இந்த போராட்டம் மட்டுமல்ல நாட்டில் நாள்தோறும் நடக்கும் பல்வேறு போராட்டங்களும் சான்றாக அமைகின்றன.

ஆகஸ்டு 15 சுதந்திரம் மக்களுக்கில்லை என்பதை சுதந்திர தினக் கொடியேற்றத்தின் போதே நிரூபித்திருக்கிறது இந்த அரச வன்முறை. இந்த தொழிலாளிகளுக்கு நேர்ந்ததுதான் தமக்கும் என்று உழைக்கும் மக்கள் உணரும் போது இந்த வன்முறை நேரெதிராக திரும்பும். உரிமைகளையும், உடமைகளையும் இழந்து வாழும் மக்களை எப்போதும் அடிமைகளாகவே நடத்தலாம் என்று ஆளும் வர்க்கம் நினைப்பது ஒரு போதும் தொடராது. சிந்திய ரத்தமும், சிறை வாசமும் அதே தொழிலாளிகளை இரும்பென உறுதிப்படுத்தும்.

அந்த உறுதி உழைக்கும் மக்களையும் பற்றும் போது ஆளும் வர்க்கங்கள் மட்டுமல்ல, அமெரிக்காவோ இல்லை ஆண்டவனோ கூட நினைத்தாலும் உடைக்க முடியாது. அடக்குமுறையை தொடர முடியாது.

பன்னாட்டு நிறுவனம் GSH ஏவி வருகின்ற உரிமை பறிப்பு அடக்கு முறைகளை முறியடிப்போம் !

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்)

–    வினவு செய்தியாளர்.

தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம் மாவட்டம்.