privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்ஒரு இந்து பெண்ணுக்கு 100 முசுலீம் பெண்களை தூக்குவோம்

ஒரு இந்து பெண்ணுக்கு 100 முசுலீம் பெண்களை தூக்குவோம்

-

பெண்கள் செல்பேசியை பயன்படுத்தக் கூடாதென ஒரு நகரில் சமூகத் தடை விதிக்கப்பட்டிருப்பதை உங்களால் நம்ப முடிகிறதா? சில தினங்களுக்கு முன் ஆக்ராவில் நடைபெற்ற அகில பாரதிய வைசிய ஏக்தா பரிஷத் என்ற வணிக சாதியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை படித்துப் பாருங்கள். ஆயிரக்கணக்கான வணிகர்கள் கூடியிருந்த அந்த சபையில் பாஜகவின் மத்திய சிறு, குறுந்தொழில் மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவும் கலந்து கொண்டிருந்தார். அங்குதான் ஆக்ராவின் வைசிய சாதி இளம்பெண்களுக்கு, செல்பேசியை பயன்படுத்த தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய பெண் - மொபைல்
வைசிய சாதி சங்கம், பள்ளி செல்லும் பதின்ம வயது பெண்கள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்ய முடிவு எடுத்திருக்கிறது. (படம் : நன்றி http://www.telegraph.co.uk)

இச்சங்கத்தின் தலைவர் சுமந்த் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘’செல்பேசி, இணையம் போன்றவை இளம் நெஞ்சங்களை இசுலாமியர்களின் லவ் ஜிகாத் என்ற பொறியில் சிக்க வைத்து விடுகிறது. இப்படி சிக்குபவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் வைசிய சாதியினை சேர்ந்த பெண்கள் தான். எங்களுக்கு வருமுன் காப்பதை தவிர வேறு வழியில்லை’’ என்று இயற்றப்பட்ட தீர்மானத்தை நியாயப்படுத்தியுள்ளார். இத்தடையை விதிப்பதற்கு முன், மாநில அளவில் வைசிய சாதியினை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களை ஒருங்கிணைத்து, செல்பேசிக்கு எதிரான ஆலோசனை வழங்குதல் முதலில் நடைபெறும் என்று இச்சாதிச் சங்கம் உறுதியளித்துள்ளது.

நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஒரு வளமையான, ஆதிக்க சாதி இத்தகைய சமூக விலக்கை தங்களது பெண்களுக்கு அறிவித்திருப்பது இதுவே முதன்முறையாகும். சாதிச் சங்கத்தின் இம்முடிவு குறித்து அச்சமூக இளைஞர்கள், பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் நிலவுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்திர பிரதேசத்தில் 80 க்கு 73 இடங்களை பிடித்திருக்கும் பாஜக இனிவரும் 2017 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியினை பிடிக்கவும், வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத் தேர்தல்களில் வெற்றி பெறவும் திட்டமிட்டு வருகிறது. ஏற்கெனவே கடந்த மாத மத்தியில் நடந்த இம்மாநில பாஜக செயற்குழு கூட்டத்தில் இசுலாமியர்களுக்கெதிரான லவ் ஜிகாத் பிரச்சாரத்தை அவர்கள் முடுக்கி விட யோசித்தனர். வினய் கட்டியார் போன்றவர்கள் இதற்காக பேசவும் செய்தனர்.

இந்துப் பெண்களை காதலித்து பின்னர் மதம் மாற்றும் இசுலாமிய இளைஞர்களின் லவ் ஜிகாத் நடவடிக்கைக்கு ஆளும் சமாஜ்வாதி கட்சியின் ஆசி இருப்பதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. கடந்த மாதம் நடந்த மாநில கட்சி கூட்டத்தில் உபி மாநில தலைவர் லஷ்மிகாந்த் பாஜ்பாய் பேசுகையில், சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மை சமூகத்து பெண்களை பாலியல் வல்லுறவு செய்யவும், பின்னர் கட்டாய மத மாற்றம் செய்யவும் லைசென்சு வழங்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனை உத்திர பிரதேச அரசியலில் பேசுபொருளாக மாற்றி விட்டார்கள் பாஜக தலைவர்கள். வரும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு இதை வைத்து ஆதிக்க சாதி இந்துக்களை அணிதிரட்டுவதற்கு முனைகிறார்கள்.

கடந்த வாரம் அலிகாரில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை இந்து மதத்திற்கு மாற்றும் கர்-வாப்பசி நிகழ்வை ஆர்.எஸ்.எஸ் நடத்தியது. வி.எச்.பி, இந்து ஜக்ரன் மஞ்ச், ஏபிவிபி, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா போன்ற சங்க வானரங்கள் இணைந்து மாவட்டம் தோறும் ஒரு முன்னணி ஒன்றையும் தற்போது அமைத்து வருகின்றன. இசுலாமிய ஆண்களை மணக்கும் இந்துப் பெண்களை மதம் மாற விடாமல் தடுப்பது அதன் முக்கியமான குறிக்கோள். மீரட்டில் இந்த அமைப்புக்கு பெயர் “மீரட் பச்சாவோ மஞ்ச்”.

ஏற்கெனவே ஜூலை மாத இறுதியில் இங்கிருக்கும் மதராசாவில் கட்டாய பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி ஒரு இந்துப் பெண்ணை மதம் மாற்ற சதி நடைபெற்றதாக போலியான வதந்திகளை பரவ விட்டார்கள். அதனால் ஒரு சிறியளவிலான கலவரத்தையும் நடத்தி, தொடர்ச்சியான சமூக பதட்டத்தையும் அம்மாவட்டத்தில் நீட்டிக்க வைத்திருக்கிறார்கள் இந்துமத வெறியர்கள். இப்போது முசாஃபர் நகர், பரேலி, புலாந்த்ஷகர், சரண்பூர், பாக்பட் மாவட்டங்களிலும் இம்முன்னணியினை ஆர்.எஸ்.எஸ் அமைத்துள்ளது. லவ் ஜிகாத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தர்ம ஜக்ரான் மஞ்ச் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறது. கடந்த மாதம் ஆரம்பத்தில் ஒரு வார காலம் இந்து இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் காதலுக்காக மதம் மாற மாட்டோம் என்ற உறுதிமொழியினை ஏற்க வைக்க தொடர் பிரச்சாரத்தை செய்துள்ளனர்.

இந்துத்துவ வெறியர்கள்
இந்துத்துவ வெறியர்கள்

கோரக்பூரை சேர்ந்த இந்துமதவெறி பேச்சாளரும், பாஜக எம்.பி.யுமான யோகி ஆதித்யாநாத் தான் தற்போதைய இடைத்தேர்தலுக்காக கட்சியால் நியமிக்கப்பட்ட மாநில பொறுப்பாளர். இவர் ஒரு துறவியும் கூட. “அவர்கள் ஒரு இந்துப் பெண்ணை எடுத்துக் கொண்டால், நாம் நூறு முசுலீம் பெண்களை எடுத்துக் கொள்வோம்” என்று யூ-டியூபில் முழங்கி இருக்கிறார். அடுத்து எங்கெல்லாம் இசுலாமியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் கலவரமும் அதிகமாக இருக்கிறது, ‘அவர்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் இந்துக்களால் குடியிருக்க முடியாது, அதைத்தானே காசுமீர் பள்ளத்தாக்கில் பார்த்தோம்’ என்றும் விஷமத்தனமாக மதவெறியைத் தூண்டி தேர்தல் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். இதனைத்தான் மையமாக மக்கள் முன்வைத்து உபி இடைத்தேர்தலை எதிர்கொள்கின்றனர். வெற்றிபெறும் பட்சத்தில் அடுத்த சட்டசபைத் தேர்தலின் நிகழ்ச்சி நிரலே இதுவாகத்தான் இருக்கும்.

மீரட் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஆகஸ்டு முடிய பதிவாகியிருக்கும் காவல்துறை குற்றப் பதிவேட்டின்படி, 37 பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. இதில் ஏழு மட்டும் தான் இசுலாமியர்கள் சம்பந்தப்பட்டது. மீதி இந்துக்கள் சம்பந்தப்பட்டது. ஆனால் இசுலாமியர்களால் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக பாஜக தனது விருந்தாவன் நிகழ்ச்சியில் ஒரு தீர்மானம் போட்டுள்ளது. மீரட் கல்லூரியின் மாணவிகளை கேட்டால் பலருக்கும் லவ் ஜிகாத் என்ற வார்த்தையே தெரிந்திருக்கவில்லை. வக்கிரமாக தங்களை கேலி செய்வதில் எல்லா சமூகத்தினரும் தான் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள் அம்மாணவிகள். அவர்களில் பெரும்பான்மையினர் ‘இந்து’க்கள் தான் என்பது வெள்ளிடைமலை.

ஆனால் சங்க வானரங்களோ லவ் ஜிகாத்தில் ஈடுபடும் இசுலாமிய இளைஞர்கள் நல்ல நவநாகரீக உடையணிந்து (ராமதாசு சொல்வது போல கூலிங் கிளாசும், ஜீன்ஸ் பேண்டும் அணிந்து), உயர்தர மோட்டார் பைக்கில் வலம் வருகின்றனராம். அவர்களது பைக்கில் பின்புறம் அமர்ந்து செல்ல இந்துப் பெண்கள் விரும்புகிறார்களாம். அவர்களது மணிக்கட்டில் சிவப்பு மணிக்கயிறு எப்போதும் கட்டப்பட்டிருக்குமாம். அதாவது உடனடியாக திருமணம் செய்ய ஏற்பாடாம் இது. லவ் ஜிகாத் என்பது முதலில் கேரளா, கர்நாடகாவில் நடைபெற்று வந்த்தாம். இப்போது உ.பி.க்கும் பரவி விட்டதாம். இப்படித்தான் அவர்கள் கதை சொல்கிறார்கள்.

கதை சொல்வதோடு நிற்காமல், இப்படி காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை முசாஃபர்நகர் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பிடித்து கணவனான இசுலாமியருக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டிருக்கின்றனர். பெண்ணை பெற்றோருடன் பாதுகாப்பாக திருப்பி அனுப்பி விட்டனர். இன்னொரு இடத்தில் இசுலாமியரை மணம் செய்து கொண்டு கிராம வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மீண்டும் பெற்றோர்கள் இருக்கும் கிராமத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்து, இன்னொரு திருமணத்தினை சொந்த சாதியில் நடத்தி வைத்திருக்கின்றனர்.

பஹு-பேட்டி-பச்சாவோ-ஆந்தோலன் என்பதுதான் முசாஃபர் நகர் கலவரத்திற்கு இந்துத்துவா அமைப்புகள் பயன்படுத்திய முழக்கம். அதாவது மகளையும், மருமகளையும் பாதுகாப்போம் என்று அர்த்தமாம். நாடு முழுக்க குஜராத் மாடல், மோடி, வளர்ச்சி என்று பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கையில் கிராமப்புற பகுதிகளில் நடந்த பிரச்சாரங்களில் முசுலீம்களை நமது பெண்களிடம் அத்துமீறி நடப்பவர்கள் என்று அமித் ஷா வர்ணித்துக் கொண்டிருந்தார்.

சஞ்சீவ் பலியான் அந்த தேர்தலை மான்-சம்மான், பஹூ-பேட்டி கா சுனாவ் என்றுதான் வரையறை செய்தார். அதாவது மகள், மருமகள்களை கவுரவிக்கும், மரியாதை செய்யும் தேர்தல் என்று அர்த்தம். உத்திரபிரதேசத்தில் நடக்கும் பாலியல் வல்லுறவுகளில் ஈடுபடுவோரில் 99% பேர் இசுலாமியர்கள் தான் என்று அடித்து விடுகிறார் உபி பாஜக தலைவர் லஷ்மிகாந்த் பாஜ்பாய். தேசபக்தி உள்ளவர்கள் தங்களது லவ் ஜிகாத்திற்கு எதிரான இயக்கத்தில் பங்குபெறுவார்கள் என்று கூறுகிறார் வி.எச்.பி-ன் தேசிய செய்தி தொடர்பாளர் சுரேந்திர குமார் ஜெயின். வரும் செப்டம்பர் 15-க்குப் பிறகு கல்லூரிகளிலும் அதற்கு வெளியிலும் ஒரு விவாதம் நடத்த ஏபிவிபி தயார் செய்து வருகிறது.

சிதம்பரம் பத்மினியையோ, வாச்சாத்தி மலை வாழ் பெண்களையோ, அந்தியூர் விஜயாவையோ சீரழித்தவர்கள் இசுலாமியர்கள் அல்ல. பெண்கள் வேலைக்கு போனால் தீட்டு என்று சொன்ன காஞ்சி சங்கராச்சாரிகளின் மடம்தான் ஆபாச வக்கிரங்களுக்கும், வன்முறை சதித் திட்டங்களுக்கும்பெயர் பெற்றது. லவ் ஜிகாத் ஒருபுறம் இருக்கட்டும். இந்து மதத்திற்குள்ளேயே சாதி மாறி திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காக கவுரவக் கொலையுண்ட பெண்களை பாதுகாக்க ஆர்.எஸ்.எஸ் முன்வருமா? முன்வருவது இருக்கட்டும், அப்படி கௌவரக் கொலை செய்வதே இவர்கள்தான்.

பெண்ணின் கற்பு, மானம் முதலிய பிற்போக்குத்தனங்கள் உண்மையில் அதே பெண்களை அடிமைப்படுத்தவே பயன்படுகிறது. தற்போது இசுலாமிய எதிர்ப்பிற்காகவும் இந்த ‘கற்பு’ பயன்படுகிறது. இந்துமதவெறியர்களின் இந்த அடாவடித்தனங்களால் வட இந்தியாவில் குறிப்பாக உ.பி மாநிலத்தில் பெரும் கலவரச் சூழல் ஏற்ப்பட்டிருக்கிறது. இறுதியில் இந்தியாவை பெரும் பிற்போக்குத்தனத்தில் ஆழ்த்தி, சிறுபான்மை மக்களை கலவர சூழலில் வைத்து, ‘இந்து’க்களை மதவெறியால் திரட்டித்தான் மோடியின் ‘வளர்ச்சி’ வருகிறது.

மோடிக்கு கொடி பிடித்தவர்களுக்கு இதயம் என்ற ஒன்று இருக்குமானால் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும். இல்லையேல் லவ் ஜிகாத் போரில் கலந்து கொண்டு ரத்த வெறியை தீர்த்துக் கொள்ள வேண்டும். பாஜக ஆட்சியில் சமூக வாழ்க்கை எவ்வளவு கொடூரமாக மாறி வருகிறது என்பதற்கு உ.பி ஒன்றே  போதும்.

–    கௌதமன்.