privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்பொது சிவில் சட்டம் - மாயையும் உண்மையும்

பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்

-

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 1

முன்னுரை

னது இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு அயோத்தி பிரச்சினைக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட பிரச்சினையாக “பொது சிவில் சட்டம்” குறித்த பிரச்சினையை பாரதீய ஜனதா எழுப்புகிறது. முசுலீம்களின் நான்கு தார மணமுறை மற்றும் மணவிலக்கு முறையை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் ‘இந்து தனிநபர் சட்டம் ‘ ரொம்பவும் முற்போக்கானது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம் (படம் : நன்றி outlookindia.com)

“இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை. எனவே “இது முசுலீம்களுக்கு ஆதரவான போலி மதச்சார்பின்மை” என்ற பாரதீய ஜனதாவின் வாதம் பெரும்பான்மை ‘இந்து’க்களிடம் எடுபடுகிறது.

இது போலி மதச்சார்பின்மை என்ற கருத்தை இந்நூல் வேறொரு கோணத்திலிருந்து கூறுகிறது. “அரசு மற்றும் சிவில் சமூகத்தின் மீது எவ்வித அதிகாரமும் செலுத்தவியலாமல் மதத்தைத் துண்டிப்பது” என்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்குப் பதிலாக, அனைத்து மதங்களையும் சமமாக நடத்துதல் என்ற மோசடியான விளக்கம் இந்திய மதச்சார்பின்மைக்குத் தரப்பட்டிருப்பதை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தில் மதம், மதச்சார்பின்மை ஆகியவை தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதுடன், மதம் – மத நம்பிக்கை குறித்து உச்சநீதி மன்றம் அளித்துள்ள விளக்கங்கள் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கே எதிரானவை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறது இந்நூல்.

இந்து – முசுலீம் தனிநபர் சட்டங்கள் பற்றிய ஒப்பீட்டைப் படிக்கும் வாசகர்கள் இந்து சட்டத்தின் ‘முற்போக்கான’ தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். எதார்த்தத்தில் இல்லாத இந்து மதத்தைச் சட்டத்தின் மூலம் செயற்கையாக உருவாக்கும் முயற்சிதான் ‘இந்து தனிநபர் சட்டம்’ என்பது வரலாற்று விவரங்களுடன் தரப்பட்டுள்ளது. அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்கக் கூடாது என்று வாதாடும் பாரதீய ஜனதா, குடும்பத்திலிருந்து மட்டும் மதத்தைப் பிரிக்க வேண்டும் என்று கூறும் இரட்டை வேடத்தின் நோக்கம் ஆராயப்பட்டுள்ளது. இறுதியாக, பாரதீய ஜனதாவிதற்கு எதிராகப் போலி கம்யூனிஸ்டுகள் முதல் பின் நவீனத்துவ அறிஞர்கள் வரை பல தரப்பினரும் வைக்கும் தீர்வுகளுக்கான மறுப்புரை தரப்பட்டுள்ளது. உண்மையான மதச்சார்பின்மைக்கும் மதச்சார்பற்ற சிவில் சட்டத்திற்குமான போராட்டம் மட்டுமே இந்துத்துவத்தை முறியடிக்கும் என்பதை நூல் வலியுறுத்துகிறது.

1995 –இல் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு உருவாக்கிய விவாதத்தையொட்டி புதிய கலாச்சாரத்தில் தோழர் சூரியன் எழுதிய தொடர் கட்டுரையை தற்போது நூல் வடிவில் தருகிறோம் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டத்திற்கு இது பெரிதும் பயன்படும் என நம்புகிறோம்.

பிப்ரவரி’ 2002
ஆசிரியர் குழு,
புதிய கலாச்சாரம்

1. பொது சிவில் சட்டம் : மாயையும் உண்மையும்

பொது சிவில் சட்டம் என்று வழங்கப்படும் ‘ஒரு சீரான உரிமையியல் சட்டம்’ (Uniform Civil Code) குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.

பதினான்கு வயதில் ஒரு மகனையும், இரண்டு பெண்களையும் உடைய ஜிதேந்திர மாதுர் என்ற நபர் தனது மனைவி மீனாவை மணவிலக்கு செய்யாமலேயே சுனிதா என்ற இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார்.

இருந்தாலும் இருதார மணக்குற்றத்துக்காக இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காரணம், இரண்டாவது திருமணம் செய்வதற்கு முன்னால் ஜிதேந்திர மாதுர் அப்துல்லாகானாக மதம் மாறிவிட்டார்; தான் மணக்கவிருந்த சுனிதாவை பேகம் பாத்திமாவாக மதம் மாற்றி டெல்லி ஜூம்மா மசூதியில் வைத்துத் திருமணமும் செய்து கொண்டு விட்டார். இந்த விவகாரம் எதுவுமே முதல் மனைவி மீனாவுக்குத் தெரியாது.

”அன்று காலை இருவருமாக வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு காகிதத்தை என் கையில் கொடுத்தார். அது அவருடைய இரண்டாவது திருமணத்தின் (நிக்காஹ் ) பதிவுச் சான்றிதழ். அதிர்ச்சியில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார் மீனா.

ஷா பானு வழக்கு
“ஷாபானு” வழக்கில் வந்த தீர்ப்பிற்கு எதிராக முசுலீம் மதவாதிகள் தொடுத்த தாக்குதலுக்கு ராஜீவ் அரசு பணிந்த்து.

தான் முசுலீமாக மதம் மாறிவிட்டதால் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தனது சட்டபூர்வ உரிமை என்பது ஜிதேந்திர மாதுரின் வாதம். இந்த ‘நிக்காஹ்’ செல்லாது என அறிவிக்கக்கோரி மீனா தொடுத்த வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதி மன்றத்தீர்ப்பு வந்துள்ளது. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்திற்காகவே இசுலாமுக்கு மதம் மாறியுள்ளதால் இந்தத் திருமணம் செல்லாது என்றும், முசுலீமாக மதம் மாறியிருந்தாலும் முதல் மனைவியை மணவிலக்கு செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்யவியலாது என்றும் நீதிபதி குல்தீப் சிங், நீதிபதி சஹாய் ஆகியோர் அடங்கிய ‘பெஞ்ச்’ தீர்ப்பளித்துள்ளது.

இந்தப் தீர்ப்பைப் பொருத்தவரை, இதை முசுலீம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றுள்ளனர். தீர்ப்பின் இணைப்பாக ”பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு முயல வேண்டும் என்றும், அரசியல் சட்டத்தின் வழிகாட்டுதல் கோட்பாடு தந்துள்ள இந்த வாக்குறுதியை அமல்படுத் வேண்டும்” என்றும் நீதிபதி குறிப்பிட்டிருப்பது பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியிருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன் “ஷாபானு” வழக்கில் வந்த தீர்ப்பிற்கு எதிராக முசுலீம் மதவாதிகள் தொடுத்த தாக்குதலுக்கு ராஜீவ் அரசு பணிந்த்து. “முசுலீம்களை ராஜீவ் அரசு தாஜா செய்கிறது” என்ற பாரதீய ஜனதா கும்பல் குற்றம் சாட்டியவுடனே அதைச் சமாளிப்பதற்காகப் பூட்டிக் கிடந்த பாபர் மசூதியை இந்துக்களின் வழிபாட்டுக்கு திறந்துவிட்டு ராமஜென்மபூமி விவகாரத்துக்கு உயிரூட்டினார் ராஜீவ். பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டு விட்டது.

இந்த உச்சநீதி மன்றத் தீர்ப்பையொட்டித் தன்னைச் சந்தித்த முசுலீம் தலைவர்களிடம் ”பொது சிவில் சட்டமெதுவும் கொண்டு வரும் உத்தேசம் அரசுக்கு இல்லை” என்று வாக்குறுதியளித்திருக்கிறார் நரசிம்மராவ். சிறுபான்மையினரைத் “தாஜா” செய்யும் இந்த வாக்குறுதியினால் கோபமடையக்கூடிய இந்து வெறியர்களை சமாதானப்படுத்த, ராவ் எதைத் திறத்துவிடுவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மதத்தின் அடிப்படையிலான வெவ்வேறு தனிநபர் சட்டங்கள் தேசத்தின் ஒற்றுமையைக் குலைத்துவிடும் என்று ஒருமைப்பாட்டின் பெயரால் கேள்வி எழுப்புகிறது பாரதீய ஜனதா. இடையிடையே பெண்ணுரிமை பற்றிப் பேசுவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.

முசுலீம் மதவாதிகளோ ”எமக்கு இறைவன் வகுத்தளித்த சட்டங்களை மாற்றுவதற்கு எந்த மனிதருக்கும் உரிமையில்லை” என்கின்றனர். பொதுச் சட்டம் என்ற பெயரில் இந்துச் சட்டத்தை அனைவரின் மீதும் திணிக்கும் சதியே இது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொது சிவில் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்குரிய இணக்கமான சூழ்நிலை ( குறிப்பாக இந்து -முசுலீம் உறவில் ) இன்னும் உருவாகவில்லையென்றும் அத்தகைய சூழ்நிலை உருவாகும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம்!

ஒரு கையில் மசூதிகளை இடிப்பதற்குக் கடப்பாரையையும், இன்னொரு கையில் ”ஒரே நாடு- ஒரே மக்கள்” என்ற சாட்டைக் குச்சியையும் வைத்திருக்கும் பாரதீய ஜனதா அவ்வப் போது அதைச் சொடுக்குகிறது. உடனே கிளம்புகிற முசுலீம் தலைவர்களின் எதிர்ப்புக் குரலைக் காட்டி ‘மதச்சார்பற்ற சிவில் சட்டத்தின் எதிரிகள் முசுலீம்கள் மட்டும்தான்’ என்று நிறுவுகிறது. பாரதீய ஜனதா மட்டுமல்ல, மீனாவின் வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி குல்தீப் சிங்கும் இதையேதான் கூறுகிறார்.

பொது சிவில் சட்டம்
ஆணாதிக்க மதச் சட்டங்களை புனிதப்படுத்திக் கொள்ளவா பொது சிவில் சட்டம்? (படம் : நன்றி http://www.thehindu.com )

“இந்தியாவுக்குள்ளே இரண்டு தேசங்கள் அல்லது மூன்று தேசங்களாக வாழ்வது குறித்த கோட்பாடுகளையெல்லாம் இந்தியத் தலைவர்கள் ஏற்கவில்லை என்பதும், இந்தியக் குடியரசு எனபது ஒரே தேசம்தான் – இந்தியத் தேசம்தான் என்பதும், அதில் எந்தச் சமூகத்தினரும் மதத்தின் அடிப்படையில் தனித்தன்மை எதையும் கோர முடியாது என்பதும், பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிலேயே தங்கிவிடுவது என்று முடிவு செய்தவர்களுக்கு நன்றாக தெரியும்.. இந்துக்களும், சீக்கியர்களும், பவுத்தர்களும், ஜைனர்களும் இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்காகத் தங்கள் மத உணர்வுகளைத் தியாகம் செய்திருக்கிறார்கள். சில சமூகத்தினர்தான் அவ்வாறு விட்டுக் கொடுக்க மறுக்கிறார்கள்.”

மத உரிமை, பெண்ணுரிமை, சொத்துரிமை, குடும்பம் ஆகியவை தொடர்பான பிரச்சினை இந்திய ஒருமைப்பாடு குறித்த பிரச்சினையாக மாறிவிட்டது. பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்வதன் வாயிலாக சிறுபான்மை மதத்தினர் (முசுலீம்களும், கிறித்தவர்களும் ) தங்கள் நாட்டுப் பற்றை நிரூபிக்க வேண்டுமென்ற பாரதீய ஜனதாவின் விஷமப் பிரச்சாரம் உச்சநீதி மன்றத்தீர்ப்பினால் புனிதப்படுத்தப்பட்டுவிட்டது.

இத்தனை விவாதங்களுக்கு உட்படுத்தப்படும் பொது சிவில் சட்டம் என்பது தான் என்ன?

  • எந்தவொரு ஆணோ,பெண்ணோ அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் மதம் மாறாமலேயே திருமணம் செய்து கொள்ளும் உரிமைக்கும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமணக் கொள்கைக்கும் எதிராக மதங்கள் வழங்கும் சலுகைகளை நிராகரித்தல்.
  • ஆண், பெண் இருவரின் ஒப்புதலும் இருப்பின் நீதிமன்றத்தில் மணவிலக்கு பெறும் உரிமை.
  • கணவனால் மணவிலக்கு செய்யப்பட்ட மனைவியும், குழந்தைகளும் அவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் உரிமை.
  • பருவம் வராத சிறுவர் – சிறுமிகளுக்கு பெற்றோர்களே காப்பாளர்கள் என்ற மதச்சட்டங்களுக்கு மாறாக, அச்சிறுவர்களின் நலனில் அக்கறை கொண்ட வேறு யாரையேனும் கூட நியமிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம்.
  • சொத்து மற்றும் பாரம்பரியச் சொத்துக்களில் ஆண் -பெண் இருபாலருக்கும் சம உரிமை.
  • மணமான அல்லது மணமாகாத எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தையொன்றைத் தத்து எடுத்து கொள்ள சட்ட பூர்வமான உரிமை.

மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் தொடர்ச்சியாக மேற்கத்திய அரசுகள் கொண்டு வந்த, மேற்கூறிய அம்சங்களைக் கொண்ட “குடிமக்கள் அனைவருக்குமான பொது சிவில் சட்டம்” என்பது திருமணம், சொத்துரிமை, மற்றும் குடும்ப விவகாரங்கள் அனைத்திலும் மதத்தின் அதிகாரத்தைப் பறிக்கிறது; மதச்சார்பற்ற அரசு அவற்றைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறது.

முசுலீம் சட்டத்திற்கு மட்டுமா முரண்பாடு?

அம்பேத்கர் சட்ட அமைச்சர்
சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தைச் சீர்திருத்த அம்பேத்கர் முயன்றபோது அதை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் பாரதீய ஜனதாவின் மூதாதைகள்தான்.

இத்தகையதொரு பொது சிவில் சட்டத்துடன் முசுலீம் தனிநபர் சட்டம் மட்டுமல்ல, தற்போது அமலில் உள்ள இந்து, கிறித்தவ, பார்சி தனிநபர் சட்டங்கள் அனைத்துமே வெவ்வேறு அளவில் முரண்படுகின்றன.

ஆனால் அத்வானியின் சீடர்கள் பொது சிவில் சட்டத்திற்குத் தரும் விளக்கம் மிகவும் சுருக்கமானது;  “முசுலீம் நாலு பொண்டாட்டி வச்சிக்கலாம்; ‘நமக்கு’ அந்த உரிமை இல்லை. அவன் ‘தலாக் தலாக தலாக்’ னு சொன்னாப் போதும். உடனே விவகாரத்து; நாம் கோர்ட்டுக்கு அலையணும். அதென்ன அவனுக்கு மட்டும் தனிச் சட்டம்?”

நியாயமாக இந்தக் கேள்வி முசுலீம் பெண்களிடம் எழுப்பப்பட வேண்டும். முசுலீம் தனிநபர் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்தான். பாரதீய ஜனதாவிற்குத் தங்கள் மேல் தோன்றியுள்ள திடீர்க் கரிசனையை நம்புவதற்கு முசுலீம் பெண்கள் தயாராக இல்லை என்பது ஒருபுறமிருக்க, பாரதீய ஜனதாவும் இப்பிரச்சாரத்தை அவர்களிடம் கொண்டு செல்வதில்லை. மாறாக ,மேற்படி ‘உரிமைகளில்லாத ‘ இந்து ஆண்களிடம் தான் கொண்டு செல்கிறது. அதன் நோக்கமும் கண்ணோட்டமும் இதன் மூலம் அம்பலமாகிறது.

இந்துச் சட்டத்தின் வரலாறு

இது ஒருபுறமிருக்க, ‘நமக்குள்ளேயே’ இந்து சட்டம் விதித்திருக்கும் ஏற்றத்தாழ்வுகள் பற்றியும், நம்முடைய சட்டத்தில் அசிங்கமாக வெளிப்படும் சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் பற்றியும் பாரதீய ஜனதா பேசுவதில்லை.

வரலாற்றுப் பழி தீர்ப்பதையே தனது முழுமுதற் கொள்ளையாக அறிவித்திருக்கும் பாரதீய ஜனதா இந்துச் சட்டத்தின் வரலாறு பற்றிச் சாதிக்கும் மவுனம் பொருள் நிறைந்தது. இந்தச் சட்டத்தொகுப்பின் தயாரிப்பின் போது நடைபெற்ற விவாதங்கள் எந்த அளவு அம்பலமாகின்றதோ, அந்த அளவு பாரதீய ஜனதாவின் இந்து ராஷ்டிரக் கனவு சிதைந்து போகும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் செயற்கை முறையில் பாராளுமன்ற மண்டபத்திற்குள் ‘தயாரிக்கப்பட்ட’ இந்துமதத்தின் குட்டு வெளிப்பட்டுப் போகும்.

சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தைச் சீர்திருத்த அம்பேத்கர் முயன்றபோது அதை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் பாரதீய ஜனதாவின் மூதாதைகள்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

“இச்சமூகம் ஒரு இயக்கமற்ற சமூகமாகும் . கடவுள் அல்லது சுமிருதிகள் தான் சட்டத்தை உருவாக்க வேண்டும். ஆகவே இச்சட்டங்களை மாற்றுவதில் இந்துச் சமூகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்றே இச்சமூகம் நம்பி வந்தது . இதனால்தான் இந்துச் சமூகத்தில்தலைமுறை தலைமுறையாகச் சட்டங்கள் மாறாமல் இருந்து வந்தன. தங்களின் சமூக, பொருளாதார, சட்ட வாழ்க்கையை உருவாக்குவதில் தங்களுக்கு இச்சமூகம் என்றும் ஒத்துக் கொண்டதே இல்லை. முதன் முறையாக இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு இந்துச் சமூகத்தை நாம் தூண்டுகிறோம்” என்று அரசியல் நிர்ணயசபை விவாதங்களின்போது அம்பேத்கர் குறிப்பிட்டார்.

”கடவுளால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மாற்றுவதற்கு மனிதனுக்கு உரிமையில்லை’’ என்று கூறும் முசுலீம் மதவாதிகளை இன்று கேலி செய்கின்ற இந்து மதவாதிகள் தங்கள் முதுகைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இராசேந்திரப் பிரசாத்
மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜிநாமா செய்து விடுவதாக மிரட்டினார் இராசேந்திரப் பிரசாத்.

ஒரு தார மணம், ஜீவனாம்சம், பெண்ணுக்கும் சொத்துரிமை, வாரிசுச் சட்ட திருத்தம் போன்ற சில திருத்தங்களை உள்ளடக்கிய இந்துச் சட்ட மசோதாவை 1951-ல் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார் அன்றைய சட்ட அமைச்சர் அம்பேத்கர்.

காங்கிரசுக்குள்ளிருந்து இந்து மகாசபையினரும் சநாதனிகளும் சர்தார் பட்டேலின் தலைமையில் இம்மசோதாவை மூர்க்கமாக எதிர்த்தனர். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜிநாமா செய்து விடுவதாக மிரட்டினார் இராசேந்திரப் பிரசாத்.

இந்து மசோதா மீதான விவாத்தையே தடை செய்யத் திட்டமிட்ட சநாதனக் கும்பல், எல்லா மதத்தினருக்கும் சேர்த்து பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கோரி பிரச்சினையைத் திசை திருப்பியது. அதன் மூலம் முசுலீம்களையும் தூண்டிவிட்டு இந்துச் சட்டத்திற்குச் சமாதி கட்ட முயன்றது.

”இந்துச் சட்ட மசோதாவை எதிரிப்பவர்கள் ஒரே நாளில் பொது சிவில் சட்டத்தின் தீவிர ஆதரவாளர்களாக மாறிவிட்டது எனக்கு வியப்பளிக்கிறது” என்று அவர்களின் முகத்திரையைக் கிழித்தார் அம்பேத்கர்.

பலதார மணம், வைப்பாட்டி முறை ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இந்துப் பெண்களின் நலனை முன்னிட்டுக் கொண்டு வரப்பட்ட இம்மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தின் வாயிலில் பெண்களின் ஆர்ப்பட்டமொன்றை நடத்தி அரசை மிரட்டினார்கள், பாரதீய ஜனதாவின் மூதாதைகள். அதுவரை மசோதாவை ஆதர்ப்பதாகக் கூறிய நேரு பல்டியடித்தார்.

திருமணம் மற்றும் மணவிலக்கு பற்றிய பிரிவை மட்டும் ஒரு தனி மசோதாவாக ஆக்கிவிடலாமென்றும் மற்றவைகளைக் கைவிட்டு விடாலாமென்றும் நேரு முன்வைத்த சமரச யோசனையை அம்பேத்கர் ஏற்றார். ஆனால் மசோதாவின் இந்தப் பகுதிகூட நிறைவேற்றப்பட முடியாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில்தான் அமைச்சராகத் தொடர்ந்து நீடிப்பதில் அர்த்தமில்லை என்று கூறி பதவியை ராஜினாமா செய்தார் அம்பேத்கர்.

இந்துச் சட்டத்தின் அடிப்படைகள்

தற்போது வழக்கில் உள்ள இந்துச் சட்டம் 1955-56-ல் நிறைவேற்றப்பட்டது. இது மூன்று வகைப்பட்ட விசயங்களைத் தன் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

  1. வருண சமூகத்தைக் கட்டிக் காப்பதற்காகவே உருவாக்கப்பட்ட பார்ப்பனியச் சட்ட மரபுகளான சுருதிகள், சுமிருதிகள் மற்றும் அவற்றுக்கான விளக்கவுரைகள்.
  2. சூத்திரர், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடி மக்களிடையே நிலவி வரும் மரபுகள்.
  3. மேற்கத்திய சட்ட மரபுகளான நியாயம் – நீதி – மனச்சாட்சி, முன்மாதிரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்படும் சட்டங்கள்.

1.சுருதிகள், சுமிருதிகள், விளக்கவுரைகள்

வேதங்கள் ‘ஒலி வடிவில் இறைவனால் முனிவர்களுக்கு அருளப்பட்டவை’ என்பதால் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. சுருதி என்ற சொல்லுக்கு ‘காதால் கேட்டது’ என்று பொருள்.

சுமிருதிகள் என்றால் ‘நினைவில் நின்றவை ‘ எனப் பொருள். வேதங்களின் உட்பொருள் குறித்த ஆதிகால முனிவர்கள் அளித்த விளக்கங்களைக் கேட்டு நெஞ்சில் நிறுத்திக் கொண்டவையே சுமிருதிகள். முற்கால சுமிருதிகளுக்குத் தரும சூத்திரங்கள் என்றும், ‘மனுஸ்மிருதி’ போன்ற பிற்கால சுமிருதிகளுக்குத் தரும சாத்திரங்கள் என்றும் பெயர்.

தரும சாத்திரங்கள் என்றழைக்கப்படும் இச்சட்டங்கள் நாடெங்கும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்படவில்லை. புதிதாக எழுகின்ற பிரச்சனைகளுக்கு ஏற்ப இச்சட்டத்தை எவ்வாறு பிரயோகிப்பது என்பதை விளக்கி எழுதப்பட்ட விளக்கவுரைகள் ஏராளமாக உள்ளன. கி.பி- 7-ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டு வரை இத்தகைய விளக்கவுரைகள் பல எழுதப்பட்டுள்ளன. நால்வருண முறை என்னும் அடிப்படைச் சட்டத்தில் ஒன்றுபடுகின்ற அதே சமயம் மரபுகள், பழக்கங்கள், ஒவ்வொரு வட்டாரமும் சந்திக்கும் சிறப்பான பிரச்சினைகள் ஆகியவற்றுக்கேற்ப இந்த விளக்கவுரைகள் மாறுபட்டன

2. சூத்திரர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்கள் மத்தியில் நிலவும் மரபுகள்

இன்று உருவாக்கப்பட்டுள்ள இந்து மதத்தின் பெரும்பான்மையினராக உள்ள உழைக்கும் மக்களாகிய மேற்கூறியோர் மத்தியில் (ஒவ்வொரு சாதி அல்லது சமூகக் குழுவிற்குள்ளும்) நிலவி வந்த பண்பாடு, மேல் வருணத்தாரின் பண்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. தனது பண்பாட்டைப் பின்பற்றும்படி முற்காலத்தில் பார்ப்பனியம் இவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை; மாறாக, அவ்வாறு பின்பற்ற முயன்றோரைத் (எ.கா: நந்தன்) தண்டித்தது.

ஆனால், இந்து மதத்தை அனைத்திந்திய ரீதியில் ஒருங்கிணைக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக இப்போது ‘கீழ்சாதி மரபு’ களையும் இந்துச் சட்டத்தின் அங்கமாகச் சேர்த்துக் கொண்டது. ஆனால் வேதங்கள், சுமிருதிகளின் அடிப்படையிலான மைய நீரோட்ட இந்துச் சட்டத்திற்கு இவற்றை அடிப்படையாக ஏற்காமல், ‘இழிவான இந்த மரபுகளை’ பின்னிணைப்பாக வைத்துக் கொண்டதன் மூலம் பார்ப்பனியம் தனது ‘புனிதத்தை’க் காப்பாற்றிக் கொண்டது.

3. மேற்கத்திய சட்ட மரபுகள்

நவீன சமூகம் தோற்றுவிக்கும் பிரச்சினைகளுக்கு சுமிருதிகளில் விடை தேடவியலாது என்பதை இந்துச் சட்டத்தை உருவாக்கியவர்கள் புரிந்திருந்தனர். எனவே மதச்சார்பின்மை என்னும் உள்ளடக்கத்தை நீக்கிவிட்டு, மேற்கத்திய சட்ட மரபின் வடிவத்தை அவர்கள் இந்துச் சட்டத்தின் அடிப்படையாகச் சேர்த்துக் கொண்டனர். பாராளுமன்ற ஜனநாயகம் என்ற சட்டத்திற்கேற்ப புதியதொரு இந்து மதத்தை உருவாக்க இது அவசியமாக இருந்தது.

ஆசை வார்த்தைகள், மன்னர்- மானியம், பதவிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் ஆக்கிரமிப்பு ஆகிய நான்கு உபாயங்களையும் கடைப்பிடித்து ‘இரும்பு மனிதர்’ இந்தியாவை உருவாக்கிவிட்டார். ஆனால் இந்து மதத்தை ஒருங்கிணைத்து புத்துருவாக்கம் செய்வது இந்தியாவை உருவாக்குவதைக் காட்டிலும் கடினமான பணியாக இருந்தது.

தனது வாள்முனையில் இந்தியாவை ஒன்றுபடுத்திய பிரிட்டீஷ் ஆட்சியின் பேனா முனையேகூட ஒருங்கிணைந்த இந்துச் சட்டத்தை உருவாக்கவில்லை. அந்தந்த வட்டாரத்தில் என்ன தரும சாத்திரங்கள் வழக்கில் உள்ளனவோ அவற்றிற்கு பிரிட்டீஷ் நீதிமன்றங்களில் விளக்கம் கூறும் அதிகாரம் பார்ப்பனப் பண்டிதர்களுக்கே இருந்தது.

‘சுதந்திர – ஜனநாயக ‘ இந்தியாவில் இந்த முறையைத் தொடர முடியாதென்பதால் ஒரே சுமிருதியையும், அதற்கு விளக்கம் சொல்ல ஒரே பண்டிதரையும் உருவாக்கும் பணியை இந்துச் சட்டத் தொகுப்பை உருவாக்கிய சநாதனிகள் மேற்கொண்டனர். ( இவ்வாறு தொகுக்கும் போது அடிப்படையான வருண தருமநெறிகளுக்கு ஊறு வந்துவிடக் கூடாதேயென்று திரைமறைவில் காஞ்சி சங்கராச்சாரி செய்த சித்துவேலைகளை வீரமணி அவர்கள் தனி நூலில் அம்பலப்படுத்தியுள்ளார் ) ஒருவாறாக இந்துச் சட்டத் தொகுப்பு எனும் ‘ஒருங்கிணைந்த சுமிருதி’ உருவாக்கப்பட்டது. அதற்கு விளக்கமளிக்க இறுதி அதிகாரம் படைத்த பார்ப்பனப் பண்டிதராக உச்சநீதி மன்றம் ‘நியமனம்’ பெற்றது.

அம்பேத்கரின் ராஜினாமாவுக்குப் பிறகு, இந்து திருமணச் சட்டம் (1955), இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்புச் சட்டம் (1955 ) (1956), இந்து காப்பாளர் சட்டம் (1956) ஆகியவை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டன.

(தொடரும்…)