privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமின்கட்டண உயர்வின் காரணம் என்ன ?

மின்கட்டண உயர்வின் காரணம் என்ன ?

-

மிழ்நாட்டில் ‘அம்மா’வின் ஆணையில்லாமல் ஒரு அணுவும் அசைய முடியாது என்று அனைவரும் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் ‘அம்மா’வுக்கே அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழக மக்கள் தலையில் ரூ 6,805 கோடி சுமையை இறக்கியிருக்கிறது ஒரு ‘தீய’ சக்தி. அந்த தீயசக்தியின் பெயர் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.

இன்றைய நாளிதழ்களில் (24.09.2014) முழுப்பக்க விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டு உபயோகம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணங்களை உயர்த்தி உத்தரவிட்டிருக்கிறது இந்த ஆணையம்.

மின் கட்டணம்
தமிழக மக்கள் தலையில் ரூ 6,805 கோடி சுமையை இறக்கியிருக்கிறது ஒரு ‘தீய’ சக்தி

வீடுகளுக்கு உள்ளிட்ட குறைந்த அழுத்த பயன்பாட்டுக்கு 15% அதிகரிப்பு, தொழிற்சாலைகள், வணிகநிறுவனங்கள், நீர்இறைப்புக்கு பயன்படுத்தப்படும் உயர்அழுத்த பயன்பாட்டுக்கு 30% அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு யூனிட்டுக்கு ரூ 2.60-ரூ 5.75 ஆக உள்ள வீடுகளுக்கான மின்கட்டணம் இனி ரூ 3 முதல் ரூ 6.60 என அதிகரிக்கும். இந்த மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு சடங்கு முடிந்த பிறகு வரும் நவம்பர் மாதம் முதல் இதை அமலுக்கு கொண்டு வருகிறார்கள்.

தான் ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் தனது அனுமதி இல்லாமல், தான் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு செய்யாமல் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மீது குண்டர் சட்டத்தை ‘அம்மா’ பாய்ச்சுவார் (தேவைப்பட்டால் அதற்கேற்றபடி சட்டத்தை திருத்திய பிறகு பாய்ச்சுவார்); அல்லது குறைந்தபட்சம் ஒரு அவதூறு வழக்காவது போட்டு பல்வேறு ஊர்களுக்கு இழுத்தடிப்பார் என்று யாராவது நினைத்தால், ஆணையத்தின் மீது கைவைக்க அம்மாவாலேயே, ஏன் ‘ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் இந்தியாவுக்கு வெளியே பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் அனைத்தையும் கொண்டு வந்து விடக் கூடிய’ திறன் படைத்த (ஆனால் இன்னும் கொண்டு வரவில்லை) மோடியாலேயே கூட முடியாத காரியம். ஆணையத்தின் உத்தரவுகளை எதிர்த்து நீதிமன்றங்களில் கூட மேல்முறையீடு செய்ய முடியாது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியார்மயமாக்கும் நோக்கத்திற்காகவே உலக வங்கியின் ஆணைக்கேற்ப உருவாக்கப்பட்ட அமைப்பு. கட்டண நிர்ணய அதிகாரம், உரிமம் வழங்கும் அதிகாரம் ஆகியற்றை மாநில அரசிடமிருந்து பிடுங்கி இந்த அமைப்புக்குக் கொடுப்பதற்கான சட்டம் 1998 பா.ஜ.க அரசினாலேயே இயற்றப்பட்டு விட்டது. அரசிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாளிகளின் நேரடி பிரதிநிதிகளால் ஆளப்படும் ஒழுங்குமுறை ஆணையங்களே இன்றைக்கு மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் வலிமையான அமைப்புகள்.

2003-ல் பா.ஜ.க. ஆட்சியில் இயற்றப்பட்ட மின்சார சட்டத்தின்படி மின் உற்பத்தி, மின் அனுப்புகை, மின் விநியோகம் ஆகிய 3 பணிகளையும் மின்வாரியமே செய்யக்கூடாது என்று வாரியங்கள் மூன்றாக உடைக்கப்பட்டன.

முதலமைச்சர் ஜெயலலிதா
மின்கட்டண உயர்வுக்கான அறிவிப்புக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத கையாலாகாத முதலமைச்சர் ஜெயலலிதா.

மின்சாரம் வணிக ரீதியில் விற்கப்படவேண்டும், மின்சாரம் உற்பத்தி செய்ய அரசாங்க உரிமம் தேவையில்லை, தனியார் முதலாளிகள் மின்னுற்பத்தி செய்வதுடன் மின்சாரச் சந்தையில் ஊக வணிக சூதாட்டமும் நடத்தலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டது. மின்வாரியங்கள் சொந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு, தனியாரிடம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யுமாறும், விநியோகத்தையும் அவர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்திரவிடப்பட்டது. தனியாரிடமிருந்து அரசு கொள்முதல் செய்கின்ற மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரமும் ஆணையத்திடமே தரப்பட்டது. கட்டண உயர்வுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தை நாடவியலாதென்றும், இதற்கென உருவாக்கப்படும் ‘மின்சாரத்துக்கான மேல்முறையீட்டு ஆணையம்’தான் தீர்ப்பளிக்க முடியும் என்றும் இச்சட்டம் கூறுகிறது.

மின்சார வாரியம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-ம் தேதிக்கு முன்பு மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பது சட்டம்; அதை மின்சார ஒழுங்குமுறை மேல் முறையீட்டு ஆணையமும் உறுதி செய்திருக்கிறது. எனவே,  தமிழ்நாடு மின்சார வாரியம் (மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்) மின்கட்டண உயர்வு கேட்டு விண்ணப்பிக்காத போதே, 2014-15 நிதி ஆண்டுக்கான அதன் வருவாய்த் தேவையை கணக்கிட்டு மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது ஒழுங்குமுறை ஆணையம். அப்படி மின்வாரியத்தின் ஆரோக்கியத்தின் மீது இந்த ஆணையத்துக்கு என்ன அக்கறை?

தனியார் மின் உற்பத்தி முதலாளிகளிடம் கொள்ளை விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கு செலவழிக்க வேண்டிய சுமார் ரூ 18,000 கோடி மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் அவ்வாறு வாங்கியதால் பட்ட கடனுக்கு வட்டி ரூ 2,000 கோடி கட்டுவதை உறுதி செய்வதற்குத்தான் இந்த ரூ 6,800 கோடி ரூபாய் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது ஆணையம்.

இந்த மின்கட்டண உயர்வுக்கான அறிவிப்புக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத கையாலாகாத முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையை தலைப்புச் செய்தியாக முதல்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது தினத்தந்தி நாளிதழ்.

அதில், தனியார் முதலாளிகளின் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் அடங்கிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக எதுவும் செய்ய இயலாத தனது கையாலாகாத்தனத்தை ஒத்துக் கொண்டு, ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவு ரூ 4,370 கோடியாக உயர்ந்திருப்பதாலும், மின் வாரியத்தின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியின் விலை உயர்ந்திருப்பதாலும் ஆணையம் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது என்று மின்கட்டண உயர்வுக்கு நியாயம் கற்பிக்கிறார் ஜெயலலிதா.

மேலும், இந்த 30% கட்டண உயர்வு ஏழை மக்களை பாதிக்கா வண்ணம் தனது அரசு பார்த்துக் கொள்ளும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே 2014-15 நிதி ஆண்டில் மின்கட்டண மானியம் வழங்க ரூ 10,575 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது, தமிழ்நாடு அரசு. இந்த கட்டண உயர்வுக்குப் பிறகு இந்த மானியச் செலவும அதிகரிக்கும். அந்தச் சுமையும் மறைமுக வரிகள் மூலம் மக்கள் மக்கள் தலையில் கட்டப்படும். ஏற்கனவே பெரும்பான்மை நேரம் மின்வெட்டில் அவதிப்படும் குடிசைப்பகுதி மக்களுக்கு ஒரு குண்டு பல்பு எரிவதற்கு கட்டண உயர்வில்லை என்று அறிவிப்பது யாரை ஏமாற்ற?

ஊழியரின் ஊதியம், நிலக்கரி விலை என்று பேசும் ஜெயலலிதா மின்வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55%-ஐ விழுங்கும் மின்சாரம் வாங்கும் செலவு பற்றி பேசவில்லை.

தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி 2003-04-ம் ஆண்டில் தனியாரிடமிருந்து 1,317 கோடி யூனிட்டுகள் மின்சாரம் பெறப்பட்டிருக்கிறது. இது 2008-09-ம் ஆண்டில் 2,114 கோடி யூனிட்டுகளாக அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் மின் வாரியம் அடைந்த நட்டம் 2003-04-ம் ஆண்டில் 1,110 கோடியிலிருந்து 2008-09-ம் ஆண்டில் 7,131 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

2009-10-ல்  தமிழக மின்வாரியம், தனது மொத்த மின்தேவையில் 19 விழுக்காட்டை  வணிக மின் உற்பத்தியாளர்களிடம் வாங்கிவிட்டு, அதற்கு விலையாக தனது மொத்த வருவாயில் 49.45 விழுக்காட்டை கொடுத்திருக்கிறது.

தமிழகத்திலுள்ள ஜி.எம்.ஆர். பவர் நிறுவனம், பிள்ளைபெருமாநல்லூர், சாமல்பட்டி மற்றும் சமயநல்லூரில் அமைந்திருக்கும் தனியார் மின்நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை முறையே ரூ 10.41, ரூ 8.55, ரூ 10.18, ரூ 10.96 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்யும் நீர்மின்சக்தியின் விலை யூனிட்டுக்கு 21 காசுகள், அனல் மின்சக்தியின் அதிகபட்ச விலை ரூ 2.14 காசுகள் என்பதையும் இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்குமேல் ரூ 657 கோடி தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கப்பமாக ஆண்டு தோறும் செலுத்தப்படுகிறது. ஜி.எம்.ஆருக்கு ரூ 147 கோடி, அப்போலோ மருத்துவக் குழுமத்துக்குச் சொந்தமான பிள்ளைபெருமாள் நல்லூர் மின் நிறுவனத்துக்கு ரூ 292 கோடி, சாமல்பட்டி மின் நிறுவனத்துக்கு ரூ 108 கோடி, சமயநல்லூர் மின் நிறுவனத்துக்கு ரூ 110 கோடி ரூபாய் 2013-14-ம் ஆண்டுக்கான திறன் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்திருக்கிறது. திறன் கட்டணம் என்பது தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படும் மின்சாரக் கட்டணத்திற்கு அப்பாற்பட்டு, அவர்களுக்கு ஆண்டுதோறும் மின்சார வாரியம் செலுத்த வேண்டிய கப்பத் தொகையாகும். தனியாருடான ஒப்பந்த காலம் முடியும் வரை மின்சாரம் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் இந்தத் திறன் கட்டணத்தை மின்சார வாரியம் செலுத்த வேண்டும்.

1994-ல் தனது மின்சாரத் தேவையில் 0.4 சதவீதத்தை மட்டுமே தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து வந்த தமிழக மின்வாரியம், 2008-ல் சுமார் 35% மின்சாரத்தைத் தனியாரிடம் வாங்கியது.

1994-95-ல் தமிழக மின்வாரியம் ஈட்டிய உபரி ரூ 347 கோடி. 2007-08-ம் ஆண்டில் இது ரூ 3,512 கோடி பற்றாக்குறையாக மாறியது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், குடிசைகளுக்கு இலவச மின்சாரம் இவைதான் நட்டத்துக்கு காரணம் என்று அவதூறு சொல்கின்றனர் மேட்டுக்குடி ‘அறிவுஜீவி’கள். ஆனால், இந்த திட்டங்களுக்கான மானியத்தை தமிழக அரசு வழங்கிய பிறகும் ஏற்படும் மின்வாரியத்தின் பற்றாக்குறைக்கு  தனியார் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட அதிகப்படியான பணமே முக்கிய காரணம் என்பது தெளிவாகிறது.

இதற்கு உதாரணமாக 2005-06-ல் தமிழக அரசு வாங்கிய மின்சார விலை பற்றிய விபரங்களைப் பார்க்கலாம்.  அந்த ஆண்டு அப்போலோ (மருத்துவமனை) குழுமத்துக்குச் சொந்தமான பிள்ளைப்பெருமாநல்லூர் மின்நிலையத்திலிருந்து வாங்கிய மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ 17.78.  சாமல்பட்டி பவர் என்ற நிறுவனத்திடமிருந்து யூனிட் ரூ 8.74; மதுரை பவர் ரூ 8.63. சென்னை பேசின் பிரிட்ஜில் மின் வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்திருக்கும் ஜி.எம்.ஆர். என்ற தனியார் அனல் மின் நிலையத்திலிருந்து வாங்கப்பட்ட மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ 6.58. யூனிட்டுக்கு ரூ 17.74 கொடுத்து அப்போலோ நிறுவனத்தின் மின்சாரத்தை வாங்க முடியாததால், மின்சாரம் வாங்கத் தவறியதற்குத் தண்டமாக, 2005-06-ல் மட்டும் நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் ரூ 330 கோடி கொடுத்திருக்கிறது மின்வாரியம்.

இப்படி அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைக் கேள்விக்குள்ளாக்கினால், தீவிரமான மின்வெட்டைப் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றவாறு அடாவடித்தனமாகப் பதில் அளித்து இப்பகற்கொள்ளை நியாயப்படுத்தப்படுகிறது.

2011-ம் ஆண்டு ஜெ ஆட்சிக்கு வந்தவுடனே மின் கட்டணத்தை இருமடங்கு உயர்த்தி விட்டு, இனி கட்டண உயர்வும் மின்வெட்டும் இருக்காது என்று அறிவித்தார். மின்வெட்டு தீராதது மட்டுமல்ல, கட்டணமும் மீண்டும் உயர்த்தப்படுகிறது. மூன்றே ஆண்டுகளில் தமிழக மின்வாரியத்தின் நட்டம் ரூ 45 ஆயிரம் கோடியிலிருந்து ரூ 75 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் 1 முதல் தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை என்று சவடால் அடித்தார் ஜெயலலிதா. ஆனால் சென்னையைத் தவிர்த்து சிறுநகர மற்றும் கிராமப் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளது. இப்போது, கூடுதலாக உயர்அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழில்துறை மற்றும் வணிகத்துறையினருக்கு செவ்வாய் கிழமையிலிருந்து இரவு 10 மணி முதல் மறுநாள் மாலை 6 மணி வரை 20% மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் 10 மணி வரை தரப்பட்டுள்ள மின்திறனில் 10% மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மின்சாரம், தொலைபேசி, பெட்ரோல்/டீசல்/சமையல்வாயு கட்டணங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் தனியார் நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆணையங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையில், கல்வி, குடிநீர், மருத்துவம் போன்ற சேவைகள் தனியாரின் லாபக் கொள்ளைக்கு விடப்பட்டுள்ள நிலையில் காசு இருப்பவர்களுக்குத்தான் வெளிச்சம், மற்றவர்கள் இருட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்காலத்தை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா?

–    அப்துல்

மேலும் படிக்க