privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காநியூயார்க் டைம்ஸ் கேலிச்சித்திரத்தில் என்னடா தவறு ?

நியூயார்க் டைம்ஸ் கேலிச்சித்திரத்தில் என்னடா தவறு ?

-

new york times buildingசெவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய செயற்கை கோள் மங்கள்யான் குறித்து நினைவிருக்கலாம். இல்லை நினைவில் இருந்தே ஆக வேண்டும் என இந்திய ஊடகங்கள், இந்துமதவெறியர்கள் இதை மாபெரும் தேசிய சாதனையாக கருத்துப் பரப்பலில் திணித்திருந்தார்கள்.

மங்கள்யான் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ஒரு கேலிச் சித்திரத்தை வெளியிட்டிருந்தது. அந்த சித்திரத்தில் எலைட் ஸ்பேஸ் கிளப் (பணக்கார நாடுகளுக்கான விண்வெளி கழகம்) என்ற பெயரிட்ட அறையில் இரண்டு நவநாகரீக வெள்ளையின கனவான்கள் செய்தித்தாள் படிக்கிறார்கள். அந்த நாளிதழில் செவ்வாய்க்கு அனுப்பும் இந்திய திட்டம் எனும் தலைப்புச் செய்தி இருக்கிறது. அறையின் வெளியே ஒரு இந்திய விவசாயி மாட்டை கையில் பிடித்தபடி கதவை தட்டுகிறார். இதுதான் கேலிச்சித்திரம் கூறும் பொருள்.

செப்டம்பர் 28-ம் தேதி இதழில் இது வெளியானது. சிங்கப்பூரை சேர்ந்த ஹெங் கிம் சாங் என்ற ஓவியர் வரைந்த இந்த கேலிச்சித்திரத்திற்கு இனிமேல் விண்வெளி பயணங்கள் பணக்கார நாடுகளுக்கு மட்டுமல்ல ஏழை நாடுகளுக்கும் சாத்தியம் என்பதை சுட்டிக்காட்டுவதாகவே நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. உண்மையும் அதுதான். அதாவது கொஞ்சமாவது  கார்ட்டூன்களை ரசிக்கும் அறிவு இருக்கும் எவரும் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்.

ny-times-cartoonஆனால் அமெரிக்காவிற்கு சென்று வாக்கப்பட்ட பல அம்பிகளுக்கு இந்த பொருள் புரியவில்லை. புரியவில்லை என்பதை விட பழைய பணக்காரர்கள் முன்னால் ஒரு புதுப் பணக்காரனுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மை அல்லது தனது நாட்டில் உள்ள ஏழைகள் மீதான வன்மம் இரண்டும் சேர்ந்து இந்த கேலிச்சித்திரத்தை எதிர்க்க வைத்திருக்கிறது.

அதை சாமர்த்தியமாக கேலிச்சித்திரத்தில் நிறவெறி இருப்பதாகவும், அதன் மூலம் நாடுகளுக்கிடையில் பிளவு ஏற்படுத்த முயல்வதாகவும் கூறி இந்திய அம்பிகள் மற்றும் அம்பிகளாக மாறும் பயணத்தில் உள்ள தம்பிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக அப்பத்திரிகையின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் ஒவ்வொரு நிலைச்செய்தியின் மறுமொழிகளுக்கான இடத்தில் கூட்டமாக படையெடுத்து எதிர்ப்பை காட்டியுள்ளனர். அதிலும் மலையாள மொழியில் ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்தன.

ஆக அம்பிகளாகும் இலட்சியப் பயணத்தில் மலையாள ஃபாரின் சேட்டன்கள் முன்னணி வகிக்கின்றனர். தமிழோடு நெருக்கமான பிணைப்பில் உள்ள மலையாளம், சம்ஸ்கிருதமயமாகி தனித்துவத்தை இழந்தது போல மலையாள தேசமும், இந்துத்துவம் முன்வைக்கும் போலி தேசியப் பெருமிதத்தின் பரவசத்தில் உண்மைகளை பார்க்க மறுக்கிறது.

நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர்
ஆண்ட்ரூ ரோசன்தால் – நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர்

எது எப்படியோ அம்பிகளின் படையெடுப்பிற்கு பின்னர் நியூயார்க் பத்திரிகையின் தலையங்கப் பக்கத்திற்கான ஆசிரியர் ஆண்ட்ரூ ரோசன்தால் தனது முகநூல் பக்கத்தில் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். பல வாசகர்களிடமிருந்து கண்டனங்கள் வரவே இந்த மன்னிப்பை கேட்பதவாகவும், ஓவியர் ஹெங் சர்வதேச விவகாரங்களை, வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் வரைவதில் வல்லவர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இருப்பினும் அம்பிகளுக்கு இது புரியாது என்பதால் அவர் தெரிவு செய்த ஓவியத்தால் புண்பட்ட வாசகர்களிடம் பத்திரிகை மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மற்றபடி ஓவியம் இந்தியா, அதன் மக்கள், அரசு ஆகியவற்றை தவறாக சித்தரிக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். அதாவது ஓவியம் தவறாக யாரையும் புண்படுத்தவில்லை என்றாலும் புண்படுத்தியதாக உணரும் முட்டாள்களிடம் மன்னிப்பு கேட்பதால் இந்த மன்னிப்பு உண்மையில் மன்னிப்பு அல்ல எனவும் கூறலாம்.

கேலிச்சித்திரத்தில் வட இந்திய விவசாயி போல உடையணிந்து தலைப்பாகை அணிந்திருக்கிறார் அந்த விவசாயி. சமீபத்திய இந்திய வளர்ச்சி பற்றி அமெரிக்கர்களுக்கு தெரியவில்லை என்று ட்விட்டரில் சிலர் கூறியிருக்கின்றனர். அதுவும் மோடி அமெரிக்காவில் இருக்கையில் இந்தப் படம் வெளியானது அவமானம் என்கிறார்கள் சிலர். இந்தியாவில் ஒரு விவசாயி இப்படித்தான் இருப்பார், இதுவே இந்தியாவின் தேசிய அடையாளம் என்பதையே இந்த அம்பிகள் ஏற்கவில்லை. ஏற்காததோடு அந்த உண்மையை அருவெறுப்பாகவும், இழிவாகவும் வன்மத்துடனும் பார்க்கிறார்கள்.

இந்தியா கிராமப்புறங்கள் நிறைந்த நாடு, விவசாயத்தை முதன்மையாக கொண்ட நாடு என்று ஒன்றாம் வகுப்பு முதல், முனைவர் ஆய்வு வரை உருப்போட்ட ஜென்மங்களுக்கு அதை ஒரு ஓவியத்தில் இந்தியாவின் வகை மாதிரியாக பார்க்கும் போது கோபம் வந்தால் என்ன பொருள்? இந்திய விவசாயிகளை இவர்கள் எவ்வளவு இழிவாகவும், மட்டமாகவும் பார்க்கிறார்கள் என்பது இதிலிருந்து வெளிப்படுகிறது. ஒருவேளை காந்தி படத்தை போடுவதாக இருந்தால் கூட கோட்டு சூட்டு போட்டுத்தான் வெளியிடவேண்டும் என்று இவர்கள் கேட்டாலும் கேட்க கூடும்.

காந்திய பக்தர்களே அப்படித்தான் கோட்டு சூட்டு போட்டு கல்யாணம் செய்யும் போது கோட்டு சூட்டு ஊரில் பிழைக்க போன அம்பிகள் வேட்டி, சட்டை, தலைப்பாகையை மட்டமாக பார்க்கத்தான் செய்வார்கள். இதில் சேப்பாக்கம் கிரிக்கெட் கிளப்பில் வேட்டி அணிந்த நீதிபதியை விட மறுத்த மேட்டுக்குடி வன்மமும் பொருத்தமாக இணைந்திருக்கிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த கேலிச்சித்திர ஓவியர் ஹெங் கிம் சாங்
சிங்கப்பூரைச் சேர்ந்த கேலிச்சித்திர ஓவியர் ஹெங் கிம் சாங்

இந்தியா என்றால் அங்கே இருக்கும் ஏழைகள், தொழிலாளிகள், விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் போன்றோர்தான் உண்மையான பிரதிநிதிகள் என்பதை மறுத்து ஷாப்பிங் மால்கள், மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், நவநாகரீக உடைகள், உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் இதர ஆடம்பரங்களத்தான் இவர்கள் ரோல் மாடல் காட்சிகளாக பார்க்கிறார்கள்.

மெரினா கடற்கரைக்கு காலை நடை வரும் கார் மனிதர்களுக்கு நொச்சிக் குப்பம் மீனவர்கள் அழுக்குருண்டைகளாக தெரிவது போல அமெரிக்க அம்பிகளுக்கும் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. பார்ப்பனியம் போற்றும் இந்திய ஞான மரபின் உள்ளொளிகளை விதந்தோதும் எழுத்தாளர் ஜெயமோகனும் கூட கேரள மீனவர்களை இத்தகைய குப்பை கூட மனிதர்களாகத்தான் அறம் பாடியிருக்கிறார். எழுத்தாளருக்கே இப்படி என்றால் அவர் வரிகளை படிக்கும் அமெரிக்க அம்பிகளுக்கு இந்திய ஏழைகள் மீது எவ்வளவு எகத்தாளம் இருக்கும்?

படத்தில் உள்ள நவநாகரீக வெள்ளையர்கள் மாடு மேய்க்கும் நாடெல்லாம் விண்வெளி ஆய்வுக்குள் வந்து விட்டால் என்ன செய்வது என்று இனவெறியை வெளிப்படுத்துகிறார்கள் என சிலர் விளக்கமளிக்க கூடும். அப்படிப் பார்த்தாலும் அது மேற்குலகின் மேல் உள்ள விமரிசனமாகத்தான் ஓவியர் வரைந்திருக்கிறாரே அன்றி அதில் இந்தியாவை இழிவு படுத்துவது எது? இப்படி பார்த்தால் சார்லி சாப்ளின் படங்களில் வரும் காட்சிகளில் ஏழைகள், வேலையற்ற இளஞர்கள், உதிரிகள் இழிவு படுத்தப்படுவதாக ஒருவர் கூறலாமே? உண்மையில் சாப்ளின் இத்தகைய எளிய மனிதர்களை அலைக்கழிக்கும் மேட்டுக்குடியினரைத்தானே கேலி செய்கிறார்?

இது புரியாதவனெல்லாம் அமெரிக்கா போய் என்ன கிழிக்கிறான் என்றே தெரியவில்லை.

முகநூலில் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. அச்சிடும் இதழிலும் மன்னிப்பு வெளியாக வேண்டும் என்கிறார் ஒரு முகநூல் அம்பி. நாசாவில் பணியாற்றுபவர்களே பலரும் இந்திய விஞ்ஞானிகள் தான் என்று அந்த பத்திரிகைக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்புகிறார் இன்னொருவர். பத்திரிகையின் இணைய பக்கத்தில் இருந்து அந்த கேலிச்சித்திரத்தை நீக்கும்படி பல முகநூல் பயன்பாட்டாளர்கள் இன்னமும் கோரி வருகின்றனர். நாங்கள் இன்னமும் மாடு மேய்த்துக் கொண்டிருக்கவில்லை என்று சிலர் எழுதியிருக்கின்றனர். சிலர் மாட்டுடன் செவ்வாய் பயணத்துக்கு தயாராக இருப்பதாக மாட்டுடன் தங்களது புகைப்படத்தைப் போட்டுள்ளனர். சரண்யா ஹரிதாஸ் என்ற பிளாக்கர் ‘எந்த ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானியும் இந்த விவசாயி போல டர்பன் உடை அணியவில்லை’ என்று காட்டாமாக வேறு சொல்லியிருக்கிறார்.

இதெல்லாம் சேம் சைடு கோல் என்று கூட இந்த என்ஆர்ஐ மோகத்திலுள்ள அம்பிகளுக்கு புரியவில்லை.

அமெரிக்கா நம்மை இழிவுபடுத்துகிறது என்றால் அந்த கோபம் போபால் விபத்தில் வந்திருக்க வேண்டும். அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் போது எதிர்த்திருக்க வேண்டும். ஈராக்கையும், ஆப்கானையும் குதறியிருக்கும் போது பேசியிருக்க வேண்டும். அப்போதெல்லாம் மேல் கீழ் வாய்களை மூடிக் கொண்டு இப்போது ஒரு விவசாயியின் உடையை பார்த்து வன்மத்துடன் கத்தினால் இவர்களை என்னவென்று அழைப்பது?

இந்த கார்ட்டூனில் இனவெறி இருப்பதாக பம்மாத்து காட்டுபவர்களுக்கு  இந்தியாதான் தீண்டாமையின் தலைநகரம் என்ற உண்மை தெரியுமா? அது கயர்லாஞ்சியாக, திண்ணியமாக, கொடியன்குளமாக, பரமக்குடியாக அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் இனவெறி இருப்பதாக சொல்லி ஒரு அமெரிக்க பத்திரிக்கையை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் என்றால், அதுதான் காலந்தோறும் பார்ப்பனியம்!