privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிருச்சி அதிமுக காலிகளை எதிர்த்து ம.க.இ.க சமர் !

திருச்சி அதிமுக காலிகளை எதிர்த்து ம.க.இ.க சமர் !

-

David-Vs-Goliathசொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு தண்டனை கிடைத்தவுடன் அ.தி.மு.க காலிகள் ஆங்காங்கே கலவரங்களில் ஈடுபட்டது நாம் அறிந்த ஒன்று. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தமது அடிமைத்தனத்தை வெளிக்கொணரும் வகையில் பேருந்து எரிப்பு, மிரட்டி கடையடைப்பு, உண்ணாவிரதம், பால்குடம் எடுப்பது, என்று பல்வேறு அடாவடிகளை செய்து வந்தனர். அப்படி செய்வதை ‘வரலாற்றில்’ பதிவு செய்தால்தான் நாளை ‘அம்மா’வின் கடைக்கண் அருள் கிடைக்கும் என்பதால் சுவரொட்டிகளை ஒட்டியும், பிளக்சை கட்டியும் மக்களை சித்திரவதை செய்து வந்தனர்.

இடையில் சிறையிலிருக்கும் அம்மா தொடர்ந்து தொலைக்காட்சி சானல்களை பார்த்து வருவதால் அடிமைகள் மற்றும் ரவுடிகளின் குத்தாட்டம் தாங்கவொண்ணாத வகையில் பெருகி வந்தது. இந்த லீலைகளில் தங்களது அம்மா (ஜெயா) மீதான பாசத்தையும், கருணாநிதி மீதான வெறுப்பையும் உமிழ்ந்தார்கள். கூடவே தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா அவர்களையும் நாலாந்தர கெட்ட வார்த்தைகளில் திட்டி தீர்த்தார்கள்.

இத்தருணத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக ஜெயா தண்டனையை ஆதரித்து தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, எதிர்கட்சிகள் முதல் ஜெயாவை 24மணி நேரமும் எதிர்க்க விரும்பும் தி.மு.க வரை எவரும் வாய் திறக்காத அந்த தருணத்தில் ம.க.இ.க சுவரொட்டிகள் மக்களை சிந்திக்கவும் தண்டனை சரி என்ற பார்வையையும் உண்டாக்கியது.

திருச்சியில் புரட்சிகர அமைப்புகளும்,சட்டக்கல்லூரி மாணவர்களும் ஒட்டிய சுவரொட்டிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. நிறைய பேர் வாழ்த்தியுள்ளனர். நீங்கள் மட்டும்தான் துணிச்சலுடன் எதிர்க்கிறீர்கள் என உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் மறுநாள் இரவு அனைத்து சுவரொட்டிகளையும் காவல்துறையினரும், அ.தி.மு.க ரவுடிகளும் கிழித்தெரிந்தனர். சுவரொட்டியிலுள்ள தொடர்பு எண்ணுக்கு போன் செய்த காவல்துறை, யார் போஸ்டர் ஒட்டியது? யாரை கேட்டு ஒட்டினீர்கள்? என்று அதிகாரத்துடன் கேட்டது. பதில் அளித்த தோழர் நிதானமாக ”நாங்கள்தான் ஒட்டினோம் போஸ்டர் ஒட்ட யாரைக் கேட்க வேண்டும்? என திருப்பி கேள்வி கேட்டார். உடனே திருச்சி போலீசு ”இல்ல சார், இந்த நேரத்தில இது ஏன் சார்! அ.தி.மு.க காரங்க உங்க மேல நடவடிக்கை எடுக்க சொல்றாங்க அதான்…. என்று கூறியது.

”மக்கள் மத்தியில் கலவரங்களை ஏற்படுத்தியும், நீதிபதியின் தீர்பை எதிர்த்து நீதிபதியையே கேவலமாக விமர்சிக்கும் அ.தி.மு.கவினரை முதலில் கைது செய்யுங்கள்” என தோழர் கூறவே ”சார் இப்ப அவங்க நடவடிக்கை எடுக்க சொல்றாங்க” என மீண்டும் காவல்துறை அதிகாரி தயங்க, ”நீங்க என்ன செய்யனுமோ செய்யுங்க, நாங்க என்ன செய்யறோம்னு பாருங்க” என தோழர் கூறியதும் ”சரிங்க சார்” என கூறி அழைப்பை துண்டித்தனர்.

இதே போல் பொன்மலை இரயில்வே பணிமனை டெக்னீசியனாக வேலை பார்த்து வரும் சேக் மகமூத் என்பவர் ஜெயலலிதாவிற்க்கு வழங்கிய தீர்ப்பு சரியானதுதான் என்றும் தீர்ப்பை வழங்கிய நீதிபதி குன்ஹா அவர்களை பாராட்டியும் சைக்கிள் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இன்னொருபுறம் இத்தீர்ப்பை கண்டு மக்கள் கொதித்து போய் உள்ளனர் என்றும் எந்த பண்டிகையையும் கொண்டாடாமல் துக்கத்தில் உள்ளனர் என்றும் ஜெயா குழும செய்தி ஊடகங்கள் வாந்தி எடுத்து வரும் நிலையில் மக்கள் வழக்கம் போல இயல்பாக தங்களது வேலைகளை பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, பக்ரீத் என தொடர்ந்து அவரவர் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டுதான் உள்ளனர்.

வரப்போகின்ற தீபாவளி பண்டிகைக்கு துணிவாங்க திருச்சி மெயின்காட் கேட், தெப்பக்குளம் பகுதிகளில் மக்கள் அலை வழக்கத்தைவிட அதிகமாகத்தான் தென்பட்டது. இவர்கள் ஜெயா டிவி மூலம் கூறும் கட்டுக் கதைகள் மக்களிடமே நகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் ஜெயாவை பகைத்துக் கொள்ள ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும், கார்ப்பரேட் தமிழ் ஊடகங்களும், தயாரில்லாத போது புரட்சிகர அமைப்புகள் துணிச்சலாக களத்தில் இறங்கியிருப்பது அவர்களின் போலி முகத்திரையை கிழிக்கும் வண்ணமாக அமைந்ததுள்ளது.

பின் குறிப்பு:

ஊழலை எதிர்ப்பதற்காகவென்றே ஒரு கட்சியை உருவாக்கிய அரவிந்த் கேஜ்ரிவாலையும் அவரது ஆம் ஆத்மி கட்சியையும் எங்கு தேடியும் காணவில்லை என்பது ஜெயா கைது எனும் காப்பியத்தின் காமடி டிராக். சட்டப்படி குறைந்தபட்ச தண்டனை பெற்றதற்கே சாமியாடும் ஊழல் ராணியின் கலவரத்தில் காணாமல் போன அவர்களை கண்டுபிடித்து உதவுமாறு தமிழக மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருச்சியை அசிங்கப்படுத்திய அதிமுக அம்மா ரவுடிகளின் சுவரொட்டிகள்
படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்.

அதிமுக ரவுடிகளை எதிர்த்து சுவரொட்டி இயக்கம்:
படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்…

மக்கள் பண்டிகைகளை கொண்டாடாமல் சோகமாக உள்ளதாக உளறும் ஜெயா டிவியின் பொய்களை திரைகிழிக்கும் படங்கள், மக்கள் கூட்டம் அலை மோதும் திருச்சி கடை வீதிகள்….படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்..

____________________________
செய்தி: ம.க.இ.க., திருச்சி கிளை
____________________________