privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது

பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது

-

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 2

சட்டம் உருவாக்கிய இந்து மதம்

1955 -56-ல் இந்துக்களுக்கான உரிமையியல் சட்டத் தொகுப்புகள் நிறைவேற்றப்பட்டு விட்ட போதிலும் ஒரு மதம் என்ற முறையில் இந்து மதம் வரையறுக்கப்படாமலேயே இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால் இந்துக்களுக்கான சட்டம் தயார் நிலையில் இருந்தது. ஆனால் “யார் இந்து?” என்ற பிரச்சினை தீர்க்கப்படாமலேயே நீடித்தது.

இந்தக் கோமாளித்தனமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க ஒரு குயுக்தியான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டது.

“யார் இந்து?”

  • யாருக்கெல்லாம் இந்துச் ‘சட்டத் தொகுப்பு’ பொருந்துமோ அவர்களெல்லாம் இந்துக்கள் .
  • யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்?
    யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தாதோ, அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் பொருந்தும் .
  • யாருக்குப் பொருந்தாது ?
    முசுலீம்கள் , யூதர்கள், பார்சிகள், கிறித்தவர்களுக்குப் பொருந்தாது.
  • ஆகையினால் இவர்களைத் தவிர அனைவரும் சட்டப்படி இந்துக்களே ”.

இந்துச் சட்டத் தொகுப்பு (1955-56) மேற்கூறிய விளக்கத்தின் அடிப்படையில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே , “இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் ஆகியோர் மதத்தால் இந்துக்களே. அந்த இந்து பெற்றோருக்குப் பிறந்தவர்கள் பிறப்பால் இந்துக்களே. முசுலீம், கிறித்தவ, யூத, பார்சி மதங்களைச் சாராத மற்றவர்கள் அனைவரும் கூட இந்துக்களே. இவர்கள் அனைவருக்கும் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்” என்றது உச்சநீதி மன்றம்.

பல்வேறு வழக்குகளில் முரண்பட்ட பல காரணங்களுக்காக “நாங்கள் இந்து இல்லை” என்று வாதாடியவர்களை மறுத்து அவர்கள் நெற்றியில் இந்துப்பட்டம் கட்டித் திருப்பியனுப்பியது உச்சநீதி மன்றம்.

“இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டு அதை நடைமுறையில் கடைப்பிடித்து, தான் ஒரு இந்து என்று அறிவித்துக் கொள்பவன் இந்துதான். அதே நேரத்தில் ஒருவன் நாத்திகனாகி விடுவதாலோ, இந்து மதக் கோட்பாடுகளைக் கைவிடுவதாலோ, மேலை நாகரீகத்தைப் பின்பற்றுவதாலோ, மாட்டுக்கறி தின்பதாலோ அவன் இந்து இல்லை என்று கூறிவிட முடியாது”, 1963-ல் அளித்த ஒரு தீர்ப்பில் உச்சநீதி மன்றம் இவ்வாறு குறிப்பிட்டது.

இந்துச் சட்டத் தொகுப்பிற்கு ஆதாரமாக விளங்கும் தரும சாத்திரங்கள் எதுவும் பிற மதத்தினர் இந்துவாக மதம் மாறுவதை அனுமதிக்கவில்லை. அவை வருணப் பிறப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கின்றன. பிற மதத்தினரை இந்துவாக மதம் மாற்ற தூய்மைப்படுத்தும் சடங்கு ஒன்றை ஆர்யசமாஜம் அறிமுகம் செய்தது. எனினும் இது தரும சாத்திரங்களால் அங்கீகரிக்கப் பட்டது அல்ல.

ஜேசுதாஸ் தீர்ப்பு!

ஜேசுதாஸ்
‘தாய் மதத்திற்கு’ த் திரும்பிய ஜேசுதாஸிற்கு இந்துச் சட்டத் தொகுப்பு என்ன வருணத் தகுதியை வழங்கும்?

1975 -ல் கேரள உயர்நீதி மன்றம் இப்பிரச்சினையில் புதிய தீர்ப்பு ஒன்றை அளித்தது;

“இந்துக்கள் அல்லாதார் உள்ளே வரக்கூடாது” என்ற அறிவிப்புப் பலகையைப் பல கோயில்களில் வாசகர்கள் கண்டிருக்கக் கூடும். இவ்விதியின் அடிப்படையில் பின்னணிப் பாடகர் ஜேசுதாஸ் குருவாயூர் கோயிலில் வழிபாடு செய்ய கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்தது. ஜேசுதாஸ் இதை எதிர்த்து வழக்கு தொடுத்தார். பிறப்பால் கத்தோலிக்க கிறித்தவரான அவர் “நான் இந்து மதத்தைப் பின்பற்றுபவன்” என்று நீதிமன்றத்தில் அறிவித்தார்.

“தான் இந்து மதத்தைப் பின்பற்றுபவன் என்று ஒருவர் அறிவிக்கும் பட்சத்தில், தீய உள்நோக்கங்கள் ஏதுமின்றி நல்ல எண்ணத்துடன் அவ்வறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர் இறைவன் குறித்த இந்துக் கண்ணோட்டத்தை ஏற்றுக் கொண்டவராகிறார். எனவே இந்துவாக மதம் மாறிவிட்டார் என்று பொருள்.”

கேரள உயர்நீதி மன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு மேல் பார்வைக்கு ‘அதி புரட்சிகரமானதாக’ த் தென்பட்டாலும், இந்துமத விரிவாக்கத்திற்குத் துணை செய்யும் சிக்கலில்லாத எளியதொரு சம்பிரதாயத்தை இது வகுத்துத் தந்துள்ளது என்பதே உண்மை.

‘தாய் மதத்திற்கு’ த் திரும்பிய ஜேசுதாஸிற்கு இந்துச் சட்டத் தொகுப்பு என்ன வருணத் தகுதியை வழங்கும்?

“கிறித்தவத்திலிருந்து இந்துமதத்திற்கு மீண்டும் மாறி வந்தவுடன், மறைந்திருந்த அவர்களது உண்மையான சாதி மீண்டும் உயிர்ப்பிக்கப்படும்” என்கிறது உச்சநீதி மன்றம். அவ்வாறு இந்துவாக மதம் மாறியவருடைய மூதாதையரின் சாதியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால் அவர்கள் இந்துச் சட்டத்தின் முன் சூத்திரர்களாகக் கருதப்படுவார்கள்.

இந்துச் சட்டத்தின் முரண்பாடுகள்

வலையை அகல விரித்து அகப்பட்டவர்களையெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பிற்குள் இழுத்துப் போடும் அரசியல் நோக்கத்திற்காக இந்துச் சட்டத் தொகுப்பில் பல சமரசங்கள் செய்து கொள்ளப்பட்டன. எடுத்துக்காட்டாக,

  • தந்தை வழி வாரிசுரிமை மற்றும் கூட்டுக் குடும்பம் என்ற கோட்பாட்டையே இந்து சட்டம் பின்பற்றுகிறது. எனினும் கேரளத்தில் சில சமூகத்தினர் மத்தியில் நிலவும் ‘மருமக்கள் தாயம்’ மற்றும் ‘ அரிய சந்தானம்’ எனும் தாய்வழிக் குடும்ப முறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல, இந்துச் சட்டத்தால் தடை செய்யப்பட்ட மண உறவுகளில் (அதாவது சிறிய தந்தையின் மகனை அல்லது மகளை மணம் செய்யக்கூடாது என்பன போன்றவை) பழங்குடியினர் மற்றும் சில சமூகத்தினர் திருமணம் செய்வது நீண்டகால மரபாக இருப்பதால் அதுவும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • கோவா மாநில இந்துக்களில் சில பிரிவினரிடையே நிலவும் இருதார மணமும் சட்டத்தால அங்கீகரிக்கட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் அவர்களுக்குச செல்லாது.
  • அண்ணன் மறைவிற்குப் பின் அவரது மனைவியைத் தம்பி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஜாட் சாதியினரின் மரபும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் இங்கேயும் செல்லாது.
  • கேரளத்து மாப்ளா முசுலீம்களும், சித்தூர் மாவட்ட கிறித்தவர்களில் சிலரும் (வன்னியர்கள்) வாரிசுரிமை குறித்த பிரச்சினையில் மட்டும் அவர்களது மரபுப்படி இன்றும் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ்தான் வருகின்றனர்.

தனது பண்பாட்டுக்கு எள்ளளவும் தொடர்பற்ற குலமரபுகளையும், பண்பாடுகளையும் இந்துச் சட்டத் தொகுப்பிற்குள் பார்ப்பனியம் ஏன் அனுமதித்தது என்ற கேள்வி இங்கே எழலாம். மரபுகள் மற்றும் பண்பாடுகள் விசயத்தில் பார்ப்பனியம் தனக்குள்ளேயே வட்டார ரீதியாகப் பிளவுபட்டிருந்தது . மேலும், பார்ப்பனியப் பண்பாட்டின் எல்லைக்கு வெளியே இருந்த பலதரப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியினரின் உட்குழுப் பண்பாட்டில் ‘வரம்பு’ மீறி தலையிடுவதன் மூலம் ‘இந்து ஒற்றுமை’ என்ற தனது அரசியல் நோக்கத்திற்குக் கேடு விளைவித்துக் கொள்ள இந்திய ஆளும் வர்க்கம் விரும்பவில்லை.

ஆனால் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மத்தியில் நிலவிவந்த ஜனநாயக பூர்வமான மரபுகளின் மீது, தான் கொண்டுள்ள வெறுப்பையும் அது மறைத்துக் கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக மக்கள் மத்தியில் நிலவி வந்த (இன்னமும் நிலவி வரும் ) சிக்கலில்லாத எளிய ‘மணவிலக்கு’ முறையை ஒழுக்கக் கேட்டின் அடிப்படையாகப் பார்ப்பனியம் கருதியது. மணவிலக்கிற்கு நீதிமனறங்களின் தயவை நாடி அலையவைப்பதன் மூலம் அவர்கள் மீது ‘நல்லொழுக்கத்தை ‘த் திணித்து விடலாம் என்றும் கருதியது. இந்த வகையில் தலையிட்டு அவர்களை இந்து மயமாக்க முயன்றது.

எனினும், மரபு என்ற விசயத்தில் தனது தலைமையை நேருக்கு நேர் எதிர்க்கின்ற எதையும் அனுமதிக்க பார்ப்பனியம் தயாராக இல்லை.

சுயமரியாதைத் திருமணம் இந்து மரபா?

உச்சிக்குடுமி மன்றம்
ஜேசுதாஸின் மதமாற்றத்திற்கு ஒரு புதிய ‘சம்பிரதாயத்தை’ (மரபை) உருவாக்கிய நீதிமன்றம் அதே உரிமையை மக்களுக்கு மறுத்தபோது அதற்காகச் சிறிதும் வெட்கப்படவில்லை.

தி.மு.க ஆட்சியில் 1969 -ல் சுய மரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு அந்த மண முறையின் கீழ் செய்யப்படும் திருமணம் பதிவு செய்யப்படாவிட்டாலும் செல்லும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. (சுயமரியாதைச் திருமணமும் இந்துச் சட்டத் தொகுப்பின் கீழ்தான் வருகிறது) ஆனால் இச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன் இத்திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கிடையாது.

1954-ல் இது தொடர்பான வழக்கு முதன் முதலாக நீதிமன்றத்தின் முன் வந்தது. “பார்ப்பனியச் சடங்குகளை மறுக்கும் இந்த மணமுறை 1925 முதலே கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் இதையும் ஒரு மரபாக அங்கீகரிக்க வேண்டும்” என சுயமரியாதை இயக்கத்தினர் வாதாடியிருக்கின்றனர். “இந்த மணமுறை 25 ஆண்டுகளாகத்தான் பழக்கத்திலிருக்கிறது ; எனவே இந்தப் பழக்கத்தை ஒரு மரபு என்று அங்கீகரிக்க முடியாது” என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

1966-ல் இதே விசயத்திற்காக இன்னொரு வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் இன்னும் ஒருபடி மேலே சென்றது. “நவீன காலத்தில் ஆளாளுக்கு ஒரு சட்டத்தையோ மரபையோ உருவாக்க முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மன்றம்தான் அதைச் செய்ய முடியும்” என்று தீர்ப்புளித்தது.

ஜேசுதாஸின் மதமாற்றத்திற்கு ஒரு புதிய ‘சம்பிரதாயத்தை’ (மரபை) உருவாக்கிய நீதிமன்றம் அதே உரிமையை மக்களுக்கு மறுத்தபோது அதற்காகச் சிறிதும் வெட்கப்படவில்லை. ஏனென்றால் அது இந்துச் சட்டத்தொகுப்பின் உணரச்சியின்படி நடந்து கொண்டது.

தரும சாத்திரங்களுக்கு விளக்கவுரை தரும் பார்ப்பனப் பண்டிதராக அமர்த்தப்பட்ட நீதிமன்றம், தனக்களிக்கப்பட்டுள்ள கடமையின் புனிதத்தையும் , அரசியல் நோக்கத்தையும் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தது எனபதை அதன் எண்ணிறந்த தீர்ப்புகள் பிரதிபலிக்கின்றன.

இந்துச் சட்டத் தொகுப்பின் ஜனநாயகத் தன்மை குறித்த மாயை கலைய வேண்டுமானால் அதன் உண்மை நிலை குறித்த சில விவரங்களையாவது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

‘பெண்ணுக்குத் தாய்வீடு நிரந்தரமல்ல’ என்ற கோட்பாட்டினடிப்படையில் பாரம்பரியச் சொத்தில் பெண்ணின் உரிமையை இந்து வாரிசுரிமைச் சட்டம் மறுக்கிறது. இந்த விசயத்தில் இசுலாமியச் சட்டம் கொஞ்சம் முற்போக்கானதென சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பெண்ணின் சொத்துரிமையைப் பறித்ததன் மூலம் இந்து நிலப்பிரபுக்கள் மற்றும் தரகு முதலாளிகளின் சொத்து பிளவுபடாமல் தடுக்கப்பட்டது. மேலும் இந்த பிளவுபடாத இந்து, கூட்டுக் குடும்பச் சொத்திற்கு பிற மதத்தினருக்கு இல்லாத விசேட வரிச் சலுகைகளும் தரப்பட்டுள்ளன.

முதல் மனைவி இருக்கும் போதே ஒரு கணவன் இரண்டாம் தாரமாக ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு, இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் செல்லும்போது பெண்ணுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இருப்பதில்லை. மணப்பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு மணமகன் வேள்வித் தீயைச் சுற்றி ஏழு அடி எடுத்து வைக்கும் ”சப்தபதி’ என்ற குறிப்பிட்ட சடங்கு நடைபெறவில்லை என்று ஒரு கணவன் நிரூபித்துவிட்டால், மற்றெல்லாச் சடங்களும் நடந்திருந்தாலும் அத்திருமணம் செல்லத்தக்கதல்ல என்று ஏராளமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அம்மியோ, அருந்ததியோ, புரோகிதனோ, தரகனோ, முப்பத்து முக்கோடி தேவர்களோ வந்து சாட்சி கூறியும் பயனில்லை. தலாக் என்று மூன்று முறை சொல்லி மணவிலக்குச் செய்யப்படும் இசுலாமியப் பெண்களுக்காக் கண்ணீர் சிந்தும் பார்ப்பன மதவெறியர்கள் இது பற்றி வாய் திறப்பதில்லை.

‘சப்தபதி நிரூபிக்கப்பட வேண்டியதில்லை’ என சமீபத்தில் தீர்ப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறிருந்தாலும், சாத்திர சம்பிரதாயங்களின் சந்துகளில் புகுந்து பெண்ணுக்கு அநீதி இழைக்க வழி சொல்லிக் கொடுத்த பார்ப்பனப் பண்டிதர்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடி விட்டார்கள்.

குடும்பத்தை நிர்க்கதியாகத் தவிக்கவிட்டு ஓடுபவன், அதே குற்றத்தை துறவறம் என்ற பெயரில் செய்தால் அதை அவனது மத உரிமையாக இந்துச் சட்டம் அங்கீகரிக்கிறது. அதனடிப்படையில் மணவிலக்கும் வழங்குகிறது.

1929-ல் பிரிட்டீஷாரால் கொண்டுவரப்பட்ட குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், குறைந்தபட்ச திருமண வயதாக பெண்களுக்கு -15, ஆண்களுக்கு- 18 என்ற நிர்ணயித்தது. 1978-ல் மீண்டும் ஒரு திருத்தத்தின் மூலம் இது பெண்களுக்கு -18, ஆண்களுக்கு -21 என்று உயர்த்தப்பட்டது.

இந்து கூட்டுக் குடும்பம்
தந்தை வபிளவுபடாத இந்து, கூட்டுக் குடும்பச் சொத்திற்கு பிற மதத்தினருக்கு இல்லாத விசேட வரிச் சலுகைகளும் தரப்பட்டுள்ளன.

எனினும் இந்தச் சட்டத்தை மீறி பத்து வயதுச் சிறுவனுக்கும் 5 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டு விட்டாலும் அதை ஏற்பாடு செய்தவர்களுக்கு மூன்று மாத தண்டனையோ 1000 ரூபாய் அபராதமோதான் விதிக்க முடியுமே தவிர, “அத்திருமணம் செல்லாது” என எந்த நீதிமன்றமும் அறிவிக்க முடியாது. மதச் சம்பிரதாயங்களால் உறுதி செய்யப்பட்ட ஒரு திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்ய முடியாது என்பதே இந்த அணுகு முறைக்கான அடிப்படை.

இந்துத் திருமணச் சட்டத்தில் மொத்தம் 8 வகைத் திருமணங்கள் பற்றிக் கூறப்படுகின்றன. அவற்றின் பிரம்ம வகைப்பட்ட திருமணங்கள் மூன்று உயர் வர்ணத்தாருக்கும், அசுர வகைப்பட்ட திருமணங்கள் ‘சூத்திரர்’ க்கும் மனு நீதியால் அனுமதிக்கப் பட்டிருந்தன. பிரம்ம வகைப்பட்ட திருமணங்களை சூத்திரரும் நடத்தலாம் என்ற திருத்தம் பிரிட்டிஷ் ஆட்சியில்தான் அனுமதிக்கப்பட்டது.

பெண்ணுக்கும் அவள் வீட்டாருக்கும் பொருள் தந்து (பரிசம் ) பெண்ணை மண முடிப்பது அசுரத் திருமணம் என்றும், பெண்ணுடன் பொன்னையும் பொருளையும் மணமகனுக்குத் தானமாகக் கொடுப்பது (கன்னிகாதானம் ) பிரம்ம வகைப்பட்ட திருமணம் என்றும் மனுநீதி கூறுகிறது. இவை வெறுமனே பழைய ஏட்டுச் சுவடிகளில் இல்லை; இன்றும் இந்து திருமண சட்டத்தின் அடிப்படையாக உள்ளன. வரதட்சிணையை பார்ப்பன சாத்திரம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது; சட்டமோ அதைத் தடுப்பதாக முணுமுணுக்கிறது.

ஆகம விதிகளால் ஆளப்படும் கோயில்களில் பார்ப்பனரல்லாதாரும், பெண்களும் அர்ச்சகராக முடியாது என்ற நிலைமை இந்துச் சட்டத்தின் ஒரு அடிப்படையாக விளங்கும் மரபு என்பதனால் நியாயப்படுத்தப்படுகிறது; அரசியல் சட்டம் வழங்கும் மத உரிமையால் இதுவே பார்ப்பனர்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்படுகிறது

காப்பாளராக இருக்கும் உரிமையைப் பெண்களுக்கு வழங்குதல், மண உறவிற்கு வெளியே பிறந்த குழந்தைகளின் உரிமைகள், சாதி மறுப்புத் திருமணங்கள் ஆகியவற்றில் இந்துச் சட்டத் தொகுப்பு பெரிதும் அநியாயமாக நடந்து கொள்கிறது என முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் போன்றோரே குற்றம் சாட்டுகின்றனர்.

பெண்ணினத்திற்கு எதிராகக் கடவுளும் ஆணும் இணைந்து அமைத்த கூட்டணியில் மதவேறுபாடே கிடையாது. இந்து, கிறித்தவ, இசுவாமிய, யூத, பார்சி மதச் சட்டங்கள் அனைத்துமே பெண்களுக்கு எதிரானவைதான். ஆனால் இவற்றில் இந்து மதம் மட்டும் தான் சாதி ஆதிக்கத்தையும் சேர்த்துக் தனது சட்டத்தால் புனிதப்படுத்துகிறது.

இந்துச் சட்டத்தைச் சீர்திருத்தியது பார்ப்பனச் சனாதனிகளா?

இந்துச் சட்டத்தின் பிற்போக்குத் தனங்கள் பல சீர்திருத்தப் பட்டுள்ளன என்பது உண்மைதான். ஆனால் அச்சீர்திருத்தங்கள் பார்ப்பனச் சனாதனிகளால் மனமுவந்து முன்மொழியப்பட்டவை அல்ல. வைப்பாட்டி வைத்துக் கொள்ளும் சட்டபூர்வ உரிமையைக் கூட 1955 வரை அவர்கள் தானாக முன்வந்து கைவிடத் தயாராக இல்லை.

இந்துச் சட்டத் தொகுப்பிற்காக தரும சாத்திரங்களின் ‘ காலத்துக் கொவ்வாத’ பகுதிகள் சிலவற்றில் மாற்றங்கள் முன்மொழியப் பட்டபோது, அதை எதிர்த்து பார்ப்பன சநாதனி ஒருவர் அங்கே எழுப்பிய ஆட்சேபமே இதற்குச் சான்று;

“தாங்கள் விரும்புவதை அவர்கள் நிறைவேற்றிக் கொள்ளட்டும். நாங்கள் நீதிமன்றங்களைத் தவிர்க்கவே முயல்வோம். ‘இந்துச் சட்ட மசோதா ‘ என்று அழைக்கிறார்களே அதைப் பொருத்தவரை நாங்கள் கூறுவதெல்லாம் இதுதான்; எதை வேண்டுமானாலும் சட்டமாக்கிக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து அதை ‘இந்துச் சட்டம்’ என்று மட்டும் அழைக்காதீர்கள் ஏனென்றால் அது இந்துச் சட்டமே அல்ல.”

அப்படியானால் சநாதனிகளின் விருப்பத்துக்கு எதிராகத்தான் இந்துச் சட்டத் தொகுப்பு உருவாக்கப்பட்டதா? இது சீர்திருத்தவாதிகளுக்குத் கிடைத்த வெற்றியா? என்ற கேள்விகள் எழலாம். உண்மையில் இது சீர்திருத்தவாதிகளின் வெற்றியுமல்ல, பார்ப்பனியத்தின் தோல்வியுமல்ல.

ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் விருப்பமே ஆளும் வர்க்கத்தின் பொது விருப்பமாக ஆகி விடுவதில்லை. பார்ப்பன வருண தருமத்தை அப்படியே திணிக்க விரும்பிய குருட்டுச் சநாதனிகளின் விருப்பம், ஆளும் வர்க்கங்களின் அன்றைய நோக்கம், நலன் மற்றும் தேவைக்கு உகந்ததாக இல்லை.

“இந்து மதத்தைப் புத்துருவாக்கம் செய்வது -இந்தியாவை ஒன்றுபடுத்துவது” என்ற தமது ஒருங்கிணைந்த லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள மேற்படி விருப்பத்தை ஆளும் வர்க்கங்கள் ‘ தியாகம் ‘செய்தன. அவ்வளவே.

சனாதனிகளின் தியாகம்!

இந்த ‘தியாகத்தை’ த் தான் தனது தீர்ப்பில் பாராட்டுகிறார் நீதிபதி குல்தீப் சிங். யாருடைய மன உணர்விலிருந்து இந்தப் பாராட்டுரையை நீதிபதி வழங்கியுள்ளார் என்று புரிந்து கொள்ள வேண்டுமானால் அந்தத் ‘தியாகங்களில்’ சிலவற்றை வாசகர்கள் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

தீண்டாமைக்குத் தடை, தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவு, குழந்தைத் திருமணத் தடை, வரதட்சணைத் தடை, பலதாரமணத் தடை போன்ற இந்து மதக் கோட்காடுகளுக்கு எதிரான சட்டங்களை- தங்கள் மதவுணர்வுகளைப் பொருட்படுத்தாமல்- அனுமதித்தமைக்காகப் பார்ப்பன உயர்சாதி இந்துக்களுக்கு நன்றி கூறுகிறார் நீதிபதி.

ஆனால் உயர்சாதியினரும் ஆணாதிக்கவாதிகளும் ஜனநாயக உணர்வின்பாற்பட்டு இந்தச் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டனரென்று நீதிபதி குறிப்பிடவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காகத்தான் இந்தத் தியாகம் செய்யப்பட்டது என்ற உண்மையை நீதிபதி தெளிவாகவே கூறி இருக்கிறார்.

“அரசு, இந்திய ஆட்சிப்பரப்பு எங்கணும் ஒரு சீரான உரிமையியல் தொகுப்புச் சட்டம் குடிமக்களுக்கு உறுதியாகக் கிடைக்குமாறு பெருமுயற்சி செய்தல் வேண்டும்” – என்று கூறுகிறது இந்திய அரசியல் சட்டத்தின் 44- வது பிரிவு. (வழிகாட்டும் கோட்பாடு).

“விவகாரத்து மற்றும் ஜீவனாம்சம் பற்றிய பிரச்சினைகளில் எல்லா சமூகத்தினரையும் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் இந்திய ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதுதான் இந்த அரசியல் சட்டப் பிரிவின் நோக்கம்” என்று உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் பல இந்தச் சட்டப்பிரிவுக்கு விளக்கமளித்துள்ளன.

விவகாரத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சீரான விவாகரத்துச் சட்டத்தை ஒப்புக் கொள்ளாதவன் பிரிவினைவாதியா? இதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கதையாக இருக்கிறதே என வாசகர்கள் நினைக்கலாம் .

இந்த முடிச்சை அவிழ்க்கும்போது தான் பாரதீய ஐனதாவின் ‘ஒரே நாடு, ஒரே மக்கள் , ஒரே சட்டம் ‘ என்ற முழக்கத்தின் முடிச்சும் அவிழும்.

(தொடரும் …)

முதல் பாகம்  – இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 1