privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் : புஜதொமு கண்டனம்

மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் : புஜதொமு கண்டனம்

-

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

110/63, என்.எஸ்.கே.சாலை, கோடம்பாக்கம், சென்னை-600024.
தொலைபேசி எண்: 94448 34519

17.10.2014

பத்திரிக்கைச் செய்தி

தொழிலாளர்களின் உரிமைகள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் தொடுத்து வருகின்ற மோடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

நாடாளுமன்றத்தின் கடந்த மழைக்காலக் கூட்டத் தொடரின்போது (சூலை-ஆகஸ்ட்,2014) தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. எதிர்வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவுள்ளன. இந்த சட்டத்திருத்தங்கள் தொழிலாளர்களது உரிமைகளைப் பறிக்கின்ற சதிகளாகும்.

இந்நிலையில் நேற்று (16.10.2014) மேலும் சில சட்டத்திருத்தங்களை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இவை அனைத்தும் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை நாசப்படுத்ததுகின்ற பேரழிவு அறிவிப்புகளாகும்.

தொழிற்சாலைகள் என வரையறுக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் தொழிற்சாலைகள் சட்டப்படி இயங்குவதை கண்காணிக்கவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறை உள்ளது. இதன் கீழுள்ள அதிகாரிகளது அதிகாரத்தைப் பறிக்கின்ற வகையில், 2013-ம் ஆண்டில் தமிழக அரசு சில நடவடிக்கைகளை எடுத்தது. இதனை அடுத்து தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை என்று பெயர் மாற்றப்பட்டு பெயரளவுக்கு இயங்கி வருகிறது. இதன் காரணமாக தொழிற்சாலைகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி அறிவித்துள்ள புதிய சட்டச் சீர்திருத்தம் காரணமாக, தொழிற்சாலைகளின் மீதான அரசின் கட்டுப்பாடு முற்றிலும் விலக்கப்படுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தொழிலாளர் நலச்சட்டங்களை மதிக்காத முதலாளிகள், இனி வருங்காலங்களில் எவ்விதத் தயக்கமும் இன்றி தொழிலாளர்கள்மீது சுரண்டலையும், அடக்குமுறைகளையும் தீவிரப்படுத்துவதற்கு மோடி அரசு துணை நிற்கிறது.

நிரந்தரத் தொழிலாளர்கள் செய்ய வேண்டிய வேலையை காண்டிராக்ட் தொழிலாளர்கள் மூலமாகச் செய்து முடிப்பது அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக நிரந்தரத் தொழிலாளர்களது எண்ணிக்கை குறைந்துவருகிறது. இச்சூழலில், தொழில் பழகுநர்களை (அப்ரண்டீஸ்) எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பயன்படுத்திக் கொண்டு உற்பத்தியைப் பெருக்குவதற்கு மோடி அரசின் அறிவிப்புகள் வழிவகை செய்கின்றன. இவ்வகையான தொழில் பழகுநர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூடத் தரவேண்டியதில்லை. பராமரிப்பு நிதி (stipend) மட்டுமே தரலாம். இந்த நிதியில் 50% அளவினை மத்திய அரசு பொறுப்பேற்கும் என்கிற அறிவிப்பானது அபாயகரமானதாகும். இதன் காரணமாக, காண்டிராக்ட் தொழிலாளர்கள் கூட ஒழிந்து போய்விடுவார்கள். மிகக் குறைந்த பராமரிப்புத் தொகை கொடுத்து இளம் தொழிலாளர்களை உறிஞ்சிக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அரசு தொடர்ச்சியாக கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சலுகைகளை வாரி வழங்குகிறது. அல்லல்பட்டு, உத்திரவாதமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற தொழிலாளி வர்க்கத்துக்குப் பேரழிவை உருவாக்கி வருகிறது. இந்திய அரசானது முதலாளிகளின் அரசாகத்தான் செயல்பட்டு வருகிறது. மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எமது அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்கு எதிராகப் பல்வேறுவிதமான போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,
அ.முகுந்தன்
தலைவர்,
பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு.