privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்மோடியின் தீபாவளி பரிசு – பிரீமியம் ரயில் கொள்ளை

மோடியின் தீபாவளி பரிசு – பிரீமியம் ரயில் கொள்ளை

-

ண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்ல காத்திருக்கும் நடுத்தர வர்க்க மக்களை இதுவரை தனியார் ஆம்னி பேருந்துகள் மட்டுமே கொள்ளையடித்து வந்தன. கடந்த அக்டோபர் 1 முதல் மத்திய அரசின் ரயில்வே துறையும் சிறப்பு அதிவேக ரயில்கள் (ப்ரீமியர் ரயில்) என்ற பெயரில் அந்த கொள்ளையை சட்டபூர்வமாக செய்ய ஆரம்பித்து விட்டன. அவ்வப்போது மாறும் கட்டணம் (டைனமிக் கட்டணம்) என்ற பெயரில் பயணிகளின் தலையை தடவும் இந்த வேலையானது சாமான்ய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மலிவு விலை பயணமாக இருந்த ரயில் பயணத்தை அவர்களிடமிருந்து பிரிக்க ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம்.

தேவைக்கேற்ப அவ்வப்போது மாறும் கட்டண முறை.
தேவைக்கேற்ப அவ்வப்போது மாறும் கட்டண முறை.

மோடி அரசு வந்த பிறகு புல்லட் ரயில், சதாப்தி என ரயில்கள் புதிதாக அறிவிக்கப்பட்டன. ரயில் கட்டணமும் சரக்கு கட்டணமும் 20 முதல் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. மெட்ரோ ரயில்களில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. சீசன் டிக்கெட்டின் விலையும் உயர்த்தப்பட்டது. சில ரயில்பெட்டி தயாரிப்பு நிலையங்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளை இனி தயாரிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டதுடன், சில ரயில்களில் இரண்டாம் வகுப்பினை ரத்து செய்யவும் ஆரம்பித்தார்கள். அதற்கு பதிலாக குளிர்சாதனப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தார்கள்.

கேட்டதற்கு அருண் ஜேட்லி ‘நமக்கு உலகத் தரத்தில் ரயில் பயணம் வேண்டாமா?’ என்று கோபமாக கேட்டார். ஆக மோடியின் வளர்ச்சி அல்லது உலகத் தரம் என்பது ஏழைகளை விரட்டியடிப்பது, வாழ்வின் கடைக்கோடிக்கு தள்ளுவது என்பது தெளிவான பிறகும் இன்னமும் குஜராத் மாதிரி வளர்ச்சி மீது நம்பிக்கை கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களை என்ன சொல்வது?

அக்டோபர் 1 முதல் இந்தியா முழுவதும் மொத்தமாக ப்ரீமியம் ரயில்கள் 808 அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரலில் இதன் எண்ணிக்கை 133. முதலில் மும்பைக்கும் புனேவுக்கும் இடையில் சோதனை முறையில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகை ரயில்கள் எல்லா ரயில் நிறுத்தங்களிலும் நிற்காது. உதாரணமாக பொதிகை சிறப்பு வண்டியானது திருச்சி, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை போன்ற இடங்களில் மாத்திரம் நிற்கும்.

மேலும் இதற்கான முன்பதிவை கணினி மூலமாக மாத்திரம்தான் செய்ய இயலும். எனவே இணையதள மையங்களை மக்கள் மொய்க்கிறார்கள். ஆனாலும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு கணினி முகவரி மூலமாக இரண்டு பயணச்சீட்டுக்களை மட்டுமே பெற முடியும் என்பதால் பெரும்பாலும் சொந்தமாக இணையம், கணிணி வைத்திருப்பவர்களால்தான் எளிதில் பயணச்சீட்டைப் பெற முடியும். இதில் முதியோர்களுக்கு எந்த கட்டண சலுகையும் கிடையாது. பயணச்சீட்டை ரத்து செய்தால் கட்டணம் எதுவும் திரும்ப தரப்பட மாட்டாது.

மாறும் கட்டணம்
குளிர்சாதன பெட்டிகளின் ப்ரீமியர் ரயில் கட்டணம் விமான கட்டணத்தை விட அதிகமாக இருக்கிறது.

இதையெல்லாம் விட முக்கியமானது அதன் அவ்வப்போது மாறும் கட்டண முறைதான். சாதாரணமாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு தத்கல் முறையில் பயணச்சீட்டை வாங்கினால் ரூ 385 தான் ஆகும். இது முதல் 50 சதவீத இடங்களுக்கு பொருந்தும். அடுத்து எடுக்கப்படும் பயணச்சீட்டுகளுக்கு முதல் பத்து சதவீதம் சீட்டுகள் பத்து சதவீத கட்டண உயர்வோடும், அடுத்த பத்து சதவீதம் இருபது சதவீத கட்டண உயர்வோடும், அடுத்த பத்து சதவீதம் நாற்பது சதவீத கட்டண உயர்வோடும், அடுத்து எண்பது சதவீதம் என்றும் கட்டணம் கூடிக் கொண்டே போகும். விமான பயணங்களுக்கு பின்பற்றப்படும் இதே முறை இப்போது சாமான்ய நடுத்தர மக்கள் பயணிக்கும் ரயிலுக்கும் வந்து விட்டது. தற்போது இரண்டாம் வகுப்பில் தூத்துக்குடிக்கான கட்டணம் ரூ 2000 வரை வந்துள்ளது. இது ஆம்னி பேருந்தின் கொள்ளையை விட அதிகம் என்கிறார்கள் பயணிகள்.

கோவைக்கு ஏசி மூன்றடுக்கு கட்டணம் தத்கல் முறையில் ரூ 1065. ப்ரீமியம் முறையில் ரூ 3010. சில இடங்களில் கட்டணம் ஐந்து மடங்கு வரை அதிகரித்துள்ளது.  இதுபோக இணையதள மையங்களின் சேவைக் கட்டணமாக ரூ 100 வரை வசூலிக்கப்படுகிறது. ஏலம் விடுவது போல நடக்கும் இந்த கட்டண கொள்ளையால் யாரால் அதிகம் பணம் கொடுத்து பயணிக்க சாத்தியமோ அவர்கள் மட்டும் தான் இனி ரயிலை பயன்படுத்த முடியும் என்று ஆகி விட்டது.

குளிர்சாதன பெட்டிகளின் ப்ரீமியர் ரயில் கட்டணம் விமான கட்டணத்தை விட அதிகமாக இருக்கிறது. சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் செல்ல 50 நிமிடங்கள்தான், கட்டணம் ரூ 4,000 தான். ஆனால் 7 மணி நேரம் பயணிக்கும் ப்ரீமியர் ரயிலில் (கோரமண்டல் எக்ஸ்பிரஸ்) குளிர்சாதன பெட்டியில் ரூ 4,170 கட்டணம். தூத்துக்குடிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தால் ரூ 3,500 க்கு விமான பயணம் சாத்தியம். இப்போது ப்ரீமியர் ரயிலில் குளிர்சாதன முதல் வகுப்பில் கட்டணம் ரூ 4,800 ஐ தாண்டி விட்டது.

மோடியின் வளர்ச்சி
மோடியின் வளர்ச்சி என்பது வாழ்க்கையை மக்களிடமிருந்து பறிப்பது.

இனி இதனைக் காட்டியே விமான கட்டண உயர்வு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் பெட்ரோல், மின்சாரம், கேஸ் போன்றவற்றின் விலை எல்லாம் இனி டைனமிக் முறையில் இருக்கும் என்றும், இதனை தீர்மானிக்க தனி ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அமைப்பதன் மூலம் ஏற்கெனவே காங்கிரசு வழிபோட்டுக் கொடுத்த தனியார்மய வழிமுறையைத்தான் மோடியும் பின்பற்றுகிறார். மன்மோகனுக்கு பத்தாண்டுகள் தேவைப்பட்டதை மோடி பத்து மாதம் கூட இடம் தராமல் செய்து முடிக்கிறார். அந்த வகையில் கார்ப்பரேட்டுகளின் செல்லப் பிள்ளைகளில் முதலிடத்தில் நிற்கிறார்.

ஏப்ரல் முதல் தெற்கு ரயில்வேயில் ப்ரீமியம் ரயிலாக இயக்கப்பட்ட 46 வழித்தடம் மூலமாக மாத்திரம் ரூ 4.5 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது நிர்வாகம். இதன்மூலம் மானியமாக தரப்படும் ரூ 26 ஆயிரம் கோடியை ஈடுகட்டி விடுவோம் என்கிறார் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா. ஆனாலும் ஆசியாவின் மிகப்பெரிய பொதுத்துறையான இந்திய ரயில்வேயில் நேரடி அந்நிய முதலீட்டை நூறு சதவீதமாக உயர்த்த இன்னொரு புறம் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

மோடியின் வளர்ச்சி என்பது வாழ்க்கையை மக்களிடமிருந்து பறிப்பது என்பது தான் இதன்மூலம் தெரிய வருகிறது. அதனால் தான் தற்போது தென்மாவட்டங்களுக்கு போகும் ப்ரீமியர் ரயிலில் பதிவு முழுவதும் கடைசி நாள் வரை நிரம்பாமல் இருக்கிறது. மக்கள் தனியார் ஆம்னி கொள்ளைக்காரனிடம் சிக்குவதா, அரசு ப்ரீமியம் ரயில் கொள்ளைக்காரனிடம் சிக்குவதா என்ற கணக்கில் எது தங்களுக்கு சரிப்பட்டு வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மை மக்கள் ஒற்றைக்காலில் மூன்றாம் வகுப்பில் பயணிக்க தயாரிக்க தயாராகி விட்டார்கள். ரங்கநாதன் தெருவிலும், பட்சண கடைகளிலும் கொட்டிய பணத்தால் கையிருப்பு தீர்ந்து போனவர்களோ தீபாவளியை இங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்று சென்னையிலேயே தங்கி விட்டார்கள்.

மோடியின் இந்தியா இந்த தீபாவளிக்கு ஊருக்கு போவதற்கு அளித்திருக்கும் போனஸ்தான் இந்த பகல் கொள்ளை!

–    கௌதமன்.