privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க்காதல்! பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!

பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க்காதல்! பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!

-

த்திய அரசு நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களில் இந்தி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வார கொண்டாட்டம், ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் ஆக மாற்றுதல், பல்கலைக்கழகங்களில் இந்தித் திணிப்பு… என்று மோடி அரசின் இந்துத்துவ வெறி நடவடிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக அமலாகிக் கொண்டிருக்கும் சூழலில், உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தருண் விஜய் என்ற பாரதிய ஜனதாக் கட்சி எம்.பி, தமிழின் மேன்மை பற்றி பொளந்து கட்டி வருகிறார்.

தருண் விஜய்
ஆர்.எஸ்.எஸ்-ஐச் சேர்ந்த பார்ப்பனக் குள்ள நரி தருண் விஜய்.

“வட மாநிலங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை விருப்பப் பாடமாக்கி, தமிழ் படிக்க முன்வரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிபுரிகிறவர்களும் தமிழ் மொழியைக் கற்க ஊக்கப்படுத்த வேண்டும். நாட்டின் இரண்டாவது தேசிய மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்!” இவையெல்லாம் சென்ற ஆண்டு (மன்மோகன் ஆட்சியில்) மாநிலங்களவையில் தருண் விஜய் பேசியவை.

உடனே அவரைப் பாராட்டி ஆனந்த விகடனில் (2, அக். 2013) ஒரு பேட்டி வெளியானது. “இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற மாநிலம்- என்று மட்டும்தான் தமிழ்நாட்டைப் பற்றி வட இந்தியப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கிறார்கள். இந்த வெறுப்பின் காரணமாகவோ என்னவோ… தமிழ்நாட்டின் சரித்திரப் பெருமைகளைப் பற்றியும், இலக்கிய வளங்களைப் பற்றியும் வடக்கில் இருக்கும் நாங்கள் தெரிந்துகொள்ளாமல் அறியாமை இருட்டிலேயே இருந்துவிட்டோம்!” என்று அதில் உருக்கமாகப் பேசுகிறார் தருண் விஜய்.

ஆனால், மேற்படி யோக்கியர் தற்போதைய மோடி அரசின் இந்தி, சமஸ்கிருத திணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. இருந்தபோதிலும், “தமிழுக்குக் கொடி பிடித்த பஞ்சாபி” என்ற தலைப்பில் ஜு.வி.-யில் மறுபடியும் ஒரு பேட்டி; “நானும் தமிழைக் காதலிக்கிறேன்” என்று தமிழ் இந்து நாளேட்டில் இன்னொரு பேட்டி.

“திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடவேண்டும். சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றி வட இந்திய மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். ஒரு வட இந்திய மொழி மேலாதிக்கம் செய்து அரசு இயந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது” என்று இந்தப் பேட்டிகளில் சரம் சரமாக அடித்து விடுகிறார் தருண் விஜய். “இதையெல்லாம் மோடியிடமும் ராஜ்நாத் சிங்கிடமும் சொன்னீர்களா?” என்று யாரும் கேட்கவில்லை.

இப்பேட்டிகள் வெளியானதைத் தொடர்ந்து தருண் விஜய்க்கு கருணாநிதி, வைகோ, ராமதாசு போன்றோரின் பாராட்டுகள்! மறுபடியும் ஊடக விளம்பரம். மேற்படி தமிழர் தலைவர்களும் இந்தக் கேள்விகளை எழுப்பவில்லை என்பதுதான் தமிழகத்தின் தனிச்சிறப்பு! இன அழிப்பை நடத்தி வரும் ராஜபக்சே, அதிகாரப் பரவல், முன்னேற்றம் பற்றி அளந்து விடுவதைப் போன்றதுதான் தருண் விஜய்யின் பேச்சு.

இந்தி படிக்கும் அரசு ஊழியர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை தருகிறது மோடி அரசு. தமிழ் படிக்கும் வட இந்திய மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தரவேண்டும் என்று தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுக்குத் தைரியமாகப் பேட்டி கொடுக்கிறார் அவருடைய கட்சி எம்.பி. தமிழக அரசியல்வாதிகளின் பிழைப்புவாதத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை !

tarun-vijay-1உண்மை நிலை என்ன? வட இந்தியப் பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்த தமிழ்த்துறைகளே இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளன. ஆக்ரா, மீரட், கான்பூர், அலகாபாத், பாட்டியாலா, சண்டிகர் உள்ளிட்ட பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் இத்துறைகள் மூடப்பட்டுவிட்டன. காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 1945-ல் தொடங்கப்பட்ட தமிழ்த் துறையில், இரு பேராசிரியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதற்குக் காரணம் தமிழ்மொழியின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி என்கிறார் அப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் அருண் பாரதி. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை நிதி அளித்த போதிலும், காசியின் சம்பூர்ணானந்தா சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் மற்றும் காசி வித்யா பீடத்தில் தமிழுக்காக பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை. கவுகாத்தி, அலிகார், கொல்கத்தா, லக்னோ உள்ளிட்ட எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் இதுதான் தமிழ்த்துறையின் நிலை.

இவையெல்லாம் தருண் விஜய்க்கு தெரியாத உண்மைகள் அல்ல. இந்து – இந்தி – இந்தியா என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய உணர்ச்சிதான் தமிழுக்கு எதிராக நிலவும் இந்த விசேட காழ்ப்புணர்வுக்கு காரணம். இந்த உணர்வு பொதுவாக பெரும்பாலான வட இந்தியக் கட்சியினர் மத்தியிலும் நிலவுகிறது என்ற போதிலும், சமஸ்கிருத-இந்தி ஆதிக்க வெறி என்ற பார்ப்பன பாசிச அரசியல், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கே உரியது.

ஆர்.எஸ்.எஸ்.-ன் பத்திரிகையான “பாஞ்சஜன்ய”வின் ஆசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர்தான் தருண் விஜய். இவர் ஆர்.எஸ்.எஸ்.-ன் சிந்தனைக் குழாமான சியாமாபிரசாத் முகர்ஜி ஆய்வு மையத்தின் இயக்குநர். தொகாடியாவின் வெறிப்பேச்சையே நாசூக்கான நாகரிகமான மொழியில் பேசத் தெரிந்த வித்தகர். இந்து தேசிய அரசியலைத் தீவிரமாகக் கொண்டு செல்லும் நோக்கத்துக்காகவே ஆர்.எஸ்.எஸ். தலைமையால் பாரதிய ஜனதாவின் மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆக்கப்பட்டிருப்பவர்.

இங்ஙனம் பார்ப்பனப் பாசிசக் கும்பலின் மூளையாக முன்நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு நபர் தமிழுக்கு ஆதரவாக வலிந்து பேசுவதற்கு காரணம் என்ன? தமிழின் தனித்துவத்தையும் தமிழகத்தின் வரலாற்றையும் பற்றி இதற்கு முன் எதுவுமே தெரியாதது போலவும், இப்போதுதான் தெரிந்து கொண்டது போலவும் அவர் நடத்தும் இந்த நயவஞ்சக நாடகத்தை ஊடகங்களும் கடைவிரிக்கக் காரணம் என்ன? மோடி அரசின் சமஸ்கிருத / இந்தி திணிப்பு தோற்றுவிக்கும் எதிர்ப்புணர்வை மழுங்கச் செய்வதும், தமிழையும் தமிழ் மரபையும் பார்ப்பனியத்தின் நோக்கத்திற்கேற்ப திசைதிருப்பி நிறுவனமயமாக்கிக் கொள்வதும்தான் இதன் நோக்கம்.

சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்ட, சுயேச்சையான, தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற, மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் வாழ்கின்ற திராவிட மொழி என்ற பெருமையைப் பெற்றது தமிழ். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனக் கும்பலால் கிட்டத்தட்ட கொன்று புதைக்கப்பட்டிருந்த தமிழை மீண்டும் உயிர்ப்பித்து, அதன் பெருமையை உலகறியச் செய்தவர் கால்டுவெல். ஆரிய – சமஸ்கிருதச் சதியை அம்பலமாக்கியது மட்டுமின்றி, தமிழின் சுயேச்சையான திராவிட மரபை எடுத்துக் காட்டிய காரணத்தினாலேயே, கால்டுவெல்லைக் கயவன் என்று தூற்றுபவர்கள் இந்துத்துவவாதிகள்.

தருண் விஜய், சென்ற ஆண்டு மாநிலங்களவையில் தமிழ்த்துதி பாடிய அதே மாதத்தில், சமஸ்கிருதத்தை காங்கிரசு அரசு அழித்து வருவதாக குற்றம் சாட்டி பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் அவர் எழுதிய கட்டுரையில் காணப்படும் வரிகள் இவை.

“சமஸ்கிருதத்தை நீக்கினால் இந்திய தேசிய உணர்வே அழிந்து விடும்… பிறப்பு முதல் இறப்பு வரை, குழந்தைக்குப் பெயர் வைப்பது, திருமணம் ஆகியவற்றில் தொடங்கி, மரணத்துக்குப் பின் சோர்க்கத்திற்கு நுழைவுச்சீட்டு பெறுவது வரையிலான அனைத்துக்கும் சமஸ்கிருதம் தேவை. சமஸ்கிருதம்தான் இந்தியா. இந்தியாவை ஒருங்கிணைக்கும் சக்தி அதுதான். உயர்பதவிகளையும், சமூக அந்தஸ்தையும் பெறுவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலை முன்னொரு காலத்தில் நிலவியதே, அதனை மீண்டும் நாம் உருவாக்க வேண்டும்.” (டைம்ஸ் ஆப் இந்தியா, ஆக-23, 2013)

தருண் விஜய் கூறுகின்ற அந்த நிலைமைதான் பார்ப்பனக் கொடுங்கோன்மை. அதனை எதிர்த்துப் போராடியதன் மூலம்தான் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் கல்வி பெற முடிந்தது. தங்களுடைய பழைய பொற்காலத்தை புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மீட்டுருவாக்கம் செய்து கொள்வதுதான் இந்துத்துவ சக்திகளின் நோக்கம்.

“வேத-உபநிடதம் மட்டுமின்றி திருக்குறளும் படிக்க வேண்டும்” என்று தருண் விஜய் தனது பேட்டியில் குறிப்பிடுகிறார். பார்ப்பனியத்தை எதிர்த்த புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகச் சித்தரித்து விழுங்க முயன்றதைப் போலவே, வள்ளுவரையும் ஒரு ரிஷி ஆக்கி, திருக்குறளை தர்ம சாத்திரப் பட்டியலில் சேர்த்து நிறுவனமயப் படுத்துவதுதான் இதன் நோக்கம். தன்னை எதிர்த்து நின்ற பழங்குடிகளையும், மொழிகளையும், இனங்களையும் நசுக்கி அழித்தது மட்டுமல்ல, அரவணைத்தும் அழித்திருக்கிறது பார்ப்பனியம் என்பதே வரலாறு. அத்தகைய அரவணைப்புதான் தருண் விஜயின் தற்போதைய தமிழ்க் காதல்.

தமிழகத்தை மட்டுமல்ல, பாரதிய ஜனதாக் கட்சி கால்பதிக்க முடியாத வட கிழக்கிந்திய மாநிலங்களையும் வழிக்கு கொண்டுவரும் பொறுப்பு தருண் விஜய்க்கு தரப்பட்டிருக்கிறது என்பது அவரது வலைத்தளத்தைப் பார்க்கும்போது தெரிகிறது.

– அஜித்.
____________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
____________________________________