privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதை'ஆ'வின் குரல்...

‘ஆ’வின் குரல்…

-

ஆவினுக்கே மொட்டை
கடைசியாய் போட்டுவிட்டீர்கள்
ஆவினுக்கே மொட்டை!

ம்மாவுக்கு நேர்த்திக்கடனாக
ஆரம்பத்தில் நீங்கள்,
மொட்டையடித்தபோதே
கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.
கடைசியாய் போட்டுவிட்டீர்கள்
ஆவினுக்கே மொட்டை!

ஊழலின்பால் ஊறிய
உங்கள் மூஞ்சியைப் பார்த்தாலே
அடிமடி சுரக்காமல்
வெறுப்பில் ஆகுது மரக்கட்டை!

எனக்கு,
புண்ணாக்கும், பருத்திக்கொட்டையும்
மானியத்தில் தந்ததால் – ஆவின்
அழிந்ததென்று
அவிழ்க்கும் பொய்நாக்கைப் போல ஒரு
அருவருப்பை
என் சாணிப் புழுவிலும்
சத்தியமாய் நான் பார்த்ததில்லை!

மடிசுரந்து நீ கவர
எனக்களித்த மானியம்
நான் அளித்த
எருவுக்கு ஈடாகுமா?

பசுக்கள்
காம்பால் அழுதோம்…
கண்களால் துப்பினோம்…
கொம்புகளால் தவித்தோம்…

எங்கள் கன்றுக் குட்டிக்கென்றும்
பாலை எடுத்து வைக்காமல்
மக்கள் புள்ள குட்டிக்காக
நாங்கள் தந்த தாய்ப்பாலில்
நஞ்சு கலந்து
கொள்ளையடித்ததைப் பார்த்து,

காம்பால் அழுதோம்…
கண்களால் துப்பினோம்…
கொம்புகளால் தவித்தோம்…
அசைபோட மறந்து
நா பேச துடித்தோம்…

இப்படியொரு கொடுமையை தாங்கிக்கொள்ள
எங்களிடம் தோல் இல்லை
ஒரு வேளை
மனிதத்தோலாய் இருந்தால்
மரத்துப் போகலாம்!

வாயில்லா ஜீவன் நாங்கள்
யாரையும்
வயிற்றிலடித்து பிழைத்ததில்லை.

தனியார் பால்
ஆவின் அழிவு
பசுக்களால் இல்லை,
ஆநிரைக் கவரும் – உங்கள்
தனியார்மயத் திசுக்களால் தான்!

உயிர்களின்
வயிற்றிலடிக்கும் பாதகனே,
அமைச்சே, அதிகாரியே
வா! யாரால் நட்டம்?
யாரால் கேடு?
காலால் விவாதிக்க
கால்நடைகள் நாங்கள் தயார்!

ஆவின் அழிவு
பசுக்களால் இல்லை,
ஆநிரை கவரும் – உங்கள்
தனியார்மயத் திசுக்களால் தான்!

வறண்ட நிலத்திலும்
வாயைக் கட்டி
வயிற்றைக் கட்டி
நாங்கள் வழங்கிய பாலின்
கொள்முதலுக்கு,
வழங்கவேண்டிய தொகையை தராமல்
இழுத்தடித்து, இழுத்தடித்தே
எங்களை, தனியார் கொள்ளை பக்கம்
ஓட்டி விட்டது, உங்கள் அரசு!

கொம்பிருந்தால்தான்
கோபம் வரவேண்டுமென்றில்லை,
இணையதளம், டுவிட்டர், வாட்ஸ் அப்… என
ரொம்பத் தெரிந்த ‘பால’கர்களே
பாலுக்காகவாவது கொஞ்சம் பொங்குங்களேன்!

மாடு பராமரிப்பு
அசைபோடும் நினைவுகளில்
ஆயிரமாம் முகங்கள்…

எத்தனை மனிதர் உழைப்போடு
இணைந்து சுரந்தோம் நாங்கள்,
அசைபோடும் நினைவுகளில்
ஆயிரமாம் முகங்கள்…

கன்று ஈனும் பருவத்தில்
காப்பாளர் குடும்பமே
என்னை கண் சுமக்கும்.
உடல் மாறுபாடின்
கணநேர நுண்குறிப்பின் இனமறிந்து
பிரசவப்பொழுதுக்கு காத்திருக்கும்

வயிற்றில் வலி எடுத்து
வரும் என் குரலின் பொருள் புரிந்து
ஓடிவந்து உடனிருந்து வீடே பதபதைக்கும்,
பீறிடும் என் குரலின்
பெரு வலி பொறுக்காமல்,
தன் மகளின் பிரசவம் போல்
” த்தா… த்தா… த்தா… ” என
தாய் வந்து தாடை, தலையை
நீவி விட்டு பதபதைப்பாள்,

cow-5அவள் கணவனோ,
வைக்கோல் பரப்பி
கன்று வரும் வழியின்
ஈரப்பசையில் கவனம் காத்திருப்பான்,

பனிக்குடம் உடைய…
தொப்பூழ் கொடி துடிக்க…
ஈன்ற கன்றை
என் நாவால் துடைக்க,
என் மட்டற்ற மகிழ்ச்சி
அந்த மனைக்கே பரவும்!
சீம்பால் என் பிள்ளைக்கு மட்டுமா?
அண்டை வீட்டுக்கும் சுரக்கும்!

நல்லெண்ணெய் ஊற்றி
பிரசவித்த வாயின் புண் ஆற்றி,
பிரசவ வயிற்றின்
பெருஞ்சூடு அடங்க
அகத்திக்கீரையும்,
அச்சுவெல்ல பச்சரிசி உருண்டையும்
வழங்கி,
தாய்வீட்டு அரவணைப்பை தந்தவர்கள்
பால்மாடு வளர்ப்பாளர்கள்!

பால் கறவை
கறக்கும் ஒவ்வொரு இழுப்பிலும்
சுரக்கும் என் செய்நன்றி!

கழுத்து மணி ஓசையில்
ஒரு மாறுபாடானாலும்
உடனே வந்து கவனிப்பர்,
கத்தும் குரலில்
உணர்ச்சி வேறுபாடானால்
கொட்டும் மழையிலும் வந்து
கொட்டகையில் விளக்கடிப்பர்,
பாம்பு அண்டாமல்
பாழும் ஈக்கள் அண்டாமல்
மஞ்சள் தெளித்து
மாடுகள் காத்தனர்.

என்னை
மேய்ச்சலுக்கு விட்டு
தானும் மேல் வயிறு காய்ந்து,
நானருந்தும் நீர் நிலையில்
தானும் அருந்தி,
மார் வலிக்க
மாட்டுக் கொட்டாய் சாணி அள்ளி,
கால்நடையாய் நடந்து
தடுப்பூசி போட்டு,
மடிகழுவி, வால்முடி கழுவி
பால் காம்புகள் நீர் தெளித்து,
முழங்காலிட்டு
முட்டிகளின் இடுக்கில்
பால் சொம்பு செருகி,
பக்குவமாய் விளக்கெண்ணெயில்
விரல் தேய்த்து
கறக்கும் ஒவ்வொரு இழுப்பிலும்
சுரக்கும் என் செய்நன்றி!

தனியார் பால்
சுரண்டும் தனியாருக்கு
சுரப்பை திருப்பிவிட்டும்
சுரணையில்லாமல் இருப்போருக்காகவா
பாலைக் கொடுத்தோம்!

மனித உழைப்பை
மாடுகள் உணர்ந்தோம்
எங்கள் ரத்தம்
பாலாய் பொழிந்தோம்,

சுரண்டும் தனியாருக்கு
சுரப்பை திருப்பிவிட்டும்
சுரணையில்லாமல் இருப்போருக்காகவா
பாலைக் கொடுத்தோம்!

எங்களின் அழிவில்
நீங்களும் அழிவீர்!
இதை எடுத்துச் சொல்லவே
வாயைத் திறந்தோம்.

அடிப்புல் அழிக்காமல்
நுனிப்புல் மேய்ந்து
இயற்கைச் சூழலை
இனிமையாய் பழகினோம்,
ஒரு புல்லும் முளைக்காத
கட்டாந்தரையாக்கி
பூமியை கார் கம்பெனிகளுக்கும், கால்சென்டர்களுக்கும்
ரியல் எஸ்டேட்டுக்கும்
இரையாய் ஆக்கவா
உங்களுக்கு கால்சியம் வழங்கினோம்?

ஆவின் பார்லர்
பூமியை கார் கம்பெனிகளுக்கும், கால்சென்டர்களுக்கும்
ரியல் எஸ்டேட்டுக்கும்
இரையாய் ஆக்கவா
உங்களுக்கு கால்சியம் வழங்கினோம்?

பால் உணர்ச்சி இல்லாத போதும்
உங்களுக்கு பால் தருவதற்காகவே
நீங்கள் காளைக்குப் போடவும்
கட்டுப்பட்டு நின்றோம்,

வாழ் உணர்ச்சியே இன்றி
இயற்கையை தரிசாக்கும்
உங்கள் வக்கிர நுகர்வைப் பார்க்கையில்
பால் கொடுத்த குற்றத்திற்காய்
தாழ்வுணர்ச்சி கொள்கிறோம்!

இரட்டை இலைகளால்
பசுக்களை மேய்ந்த பாவிகளை
உங்களுக்கு அடையாளம் காட்டவே
” அம்மா… அம்..மா.. ” என்கிறோம்!

குடும்பமே
காம்புகளை பிடித்து தொங்கினாலும்
ஒரு டம்ளர் பாலுக்கு
வழி இல்லாதபடி
எங்களையும் ஆளாக்கிவிட்டு
‘விலையில்லா கறவைமாடு’
எனும் வீண்பழிவேறு எங்கள் மீது!

ஆவின் பொருட்கள்
தவிக்கும் எங்கள் குரலுக்கு
தண்ணீரில்லை…
உங்களுக்கு தயிர் கேட்குதா?

மேய்ச்சலுக்கு நிலமில்லை…
உங்களுக்கு மேலான பால் வேண்டுமா?

தவிக்கும் எங்கள் குரலுக்கு
தண்ணீரில்லை…
உங்களுக்கு தயிர் கேட்குதா?

கழனிகளை அழித்த ஊரில்
கழனித் தண்ணிக்கே வழியில்லை…
உங்கள் கைக்கு நெய் கேட்குதா?

விலை நிலங்களை அழித்து,
கால்நடைகளை அழித்து,
உயிரினச் சூழலையே அழிப்பவர்களுக்கு
‘பால்ஊத்தாமல்’
இனி வாழ்வில்லை என
என் ஐந்தறிவுக்கு தோன்றுது!

ஆறறிவு படைத்த உங்களுக்கு?

– துரை.சண்முகம்

ஆவின் விலை உயர்வு புமாஇமு சுவரொட்டி
ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிராக பு மா இ மு தோதோழர்கள் ஒட்டிய சுவரொட்டி – தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி