privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்நீங்க 10 பெண்கள் டாஸ்மாக்கை மூட முடியுமா ?

நீங்க 10 பெண்கள் டாஸ்மாக்கை மூட முடியுமா ?

-

குடிகெடுக்கும் டாஸ்மாக்கை இழுத்துமூடு பெண்கள் விடுதலை முன்னணியின் தொடர் பிரச்சார இயக்கம்

  • குடிகெடுக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடவேண்டும்
  • லட்சக்கணக்கான மக்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும்
  • எதிர்கால சந்ததிகள் குடிவெறிக்கு பலியாவதை தடுக்க வேண்டும்

என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2 மாதமாக பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் திருச்சி நகரம் முழுவதும் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. வேன் பிரச்சாரம், வீதி நாடகம், ஆயிரக்கணக்கான மக்களிடம் பிரசுரம் வழங்குதல், கடைவீதி, பேருந்து, குடியிருப்பு, பெண்கள் பணி புரியும் இடங்கள் என பல்வேறு பகுதியிலும் இந்த பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது.

கையெழுத்து இயக்கம்

[படங்களைப் பெரிதாகப்  பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மக்கள் கூடும் பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், கடைவீதி, பள்ளிகள், கல்லூரிகள், ஆட்டோ நிறுத்தங்கள் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் சீர்கேட்டை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு தரப்பிலான மக்களை சந்திக்க முடிந்தது. பெண்கள், ஆண்கள் ஆர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் கையெழுத்திட்டனர்.

சிலர் விவாதமும் செய்தனர்.

“ஏம்மா நீங்க 10 பேர் சேர்ந்து அரசாங்கத்தை முறியடிக்க முடியுமா? இது ஆகிற கதையா? வேறு ஏதாவது வேலையை பாருங்க” என சலித்து கொண்டனர்.

“வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்க வேண்டும் என அரசு முடிவு செய்து IAS , IPS ஆகிய மேதாவிகளுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி வருகிறது. இதனை முறியடிக்க ஊருக்கு 10 நபராவது சேர்ந்து தட்டி கேட்க வேண்டாமா? நமக்கு ஏன் வம்பு, நம்மால் முடியுமா என ஒவ்வொருவரும் விலகி சென்றால் இந்த கொடுமையை யார் தான்” கேட்பது என பதிலளித்ததும் பலரும் கையெழுத்திட்டனர்.

“இந்த சாராய கடையை மூடிட்டா அப்புறம் கஞ்சா, கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும். அப்ப என்ன செய்வீங்க” என்றார் இன்னொரு நபர். (அவர் பாக்கெட்டில் அம்மா படம் பல் இளித்துக் கொண்டிருந்து)

“அடுத்தவன் குடி கெடுப்பான் என தெரிந்தும் அதனை முறியடிக்க முயற்சிக்காமல் தன் குடியை தானே கெடுக்க நினைப்பது புத்திசாலித்தனமாகுமா?” என வினவியதும் பதிலாளிக்காமல் அவசரமாக பேருந்தை பிடிக்க ஓடினார்.

அரசு பேருந்து நடத்துனர் “ஐயோ, டாஸ்மாக் எங்க குலதெய்வம், இதனை மூட நான் ஒத்துக்க மாட்டேன்” என்றார்.

“வருங்கால சந்ததிகளும் இந்த சாராயத்தால அழியணுமா?” என்றதும் “கூடாதம்மா, பிள்ளைங்க குடிக்க கூடாது” என கையெழுத்திட்டார்.

“எங்களையே குடிமகன்கள் என்று விளம்பரம் செய்து விட்டு, எங்களிடமே கையெழுத்து கேட்கிறீங்களா” என ஆவேசப்பட்டார் ஒரு குடிமகன்.

“இல்ல சார், நாம எல்லாருமே இந்த நாட்டின் குடிமக்கள் தான், நமது குடியை கெடுக்கும் இந்த அரசுக்கு எதிராக தான் போராடுகிறோம்” என்றதும் அவரும் சிரித்தபடியே கையெழுத்திட்டார்.

மக்களிடம் சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் உள்ளது. தனது குடும்பம் சீரழிவதும், தமிழகம் முழுவதும் தினந்தோறும் பத்திரிகைகளில் வரும் செய்திகளை பார்க்கும் போதும் வேதனைக்குள்ளாகின்றனர். ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்காக இந்த அரசு உள்ளதே என ஆதங்கப்படுகின்றனர்.

செவிடன் காதில் சங்கு ஊதினால் மட்டும் போதாது தேவைப்பட்டால் அரசின் செவுள் கிழியும் வரை அறைய வேண்டும் என உணரும் போது இந்த அரசை பணிய வைக்க முடியும் என்பதை மக்களிடம் உணர்த்துவது நம்முடைய முக்கிய பணியாக உள்ளது.

மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மாவட்ட ஆட்சியரிடம், மக்களிடம் பெற்ற 2000 கையெழுத்து அடங்கிய மனு பண்டல்களை கொடுப்பது என முடிவு செய்து 27.10.14 அன்று பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணி நடத்தப்பட்டது. அலுவலக வாயிலை அடைந்ததுமே பாதுகாப்பிற்க்கு நின்றிருந்த போலீசார் “குடிகெடுக்கும் அரசுக்கு எதிராக போராடுவோம்!, டாஸ்மாக்கை இழுத்து முடுவோம்! என முழக்கம் போடுறாங்க சார், ஒரு 30 பெண்கள் இருக்காங்க, குழந்தைகளும், சிறுவர்களும் கோசம் போடுறாங்க, என்ன சார் பண்றது?” என செல்போனில் தனது மேலதிகாரிகளுக்கு ரன்னிங் கமன்ட்ரியாக ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்.

மேலதிகாரிகளிடம் பெற்ற ஆலோசனையின் பேரில் நம்மிடம் “பேனரை மறைங்க , முழக்கம் போடாதீங்க , ஊர்வலமாக வராதீங்க” என உத்தரவுகள் போட ஆரம்பித்தனர். நீண்ட நேர பேச்சுவார்தைக்கு பின் 5 தோழர்கள் அலுவலகத்தின் உள்ளே சென்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு பண்டல்களை ஒப்படைக்க முயன்றபோது அருகில் இருந்த டாஸ்மாக் அதிகாரி, “உங்கள் கோரிக்கை திருச்சியில் மட்டுமா?” என்றார். “தமிழகம் முழுக்க டாஸ்மாக்கை இழுத்து மூட வேண்டும்” என்றோம்.

“இத்தோடு உங்கள் போராட்டம் முடிந்ததா?” என்றார் ஆட்சியர்.

“நீங்கள் எடுக்கிற நடவடிக்கையை பொறுத்துதான் முடிவு செய்ய வேண்டும்” என்றோம்.

“அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்” என மனுக்களை பெற்று கொண்டார்.

இது முடிவல்ல என்பது நமக்கு தெரியும். மக்கள் வீதியில் இறங்கி போராடும் போது தான் டாஸ்மாக்கை ஒழிப்பது சாத்தியம் என்பதும் நமக்கு புரியும். மக்களிடம் இத்தகைய பிரச்சாரத்தை கொண்டு செல்வது, அரசினை எதிர்த்து போராடுவது, போராட்டத்தின் மூலம் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவது என்ற அடிப்படையில் தான் நாம் இந்த இயக்கத்தை மேற்கொண்டு வருகிறோம். இந்த இயக்கத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக மரத்தடியில் அமர்ந்து ஆலோசிக்கப்பட்டது. வர கூடிய காலங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வேலைகளை திட்டமிட்டு வருகிறோம்.

குடிமகன்களே! நீங்க தள்ளாடும் வரைதான் இந்த அரசு ஸ்டெடியா இருக்கும் நமது குடிகெடுப்பதே இந்த அரசு என்பதை உணரும் போது உன் வாழ்க்கை வசப்படும்! என்ற நமது டாஸ்மாக் எதிர்ப்பு இயக்க முழக்கமானது மக்கள் முழக்கமாக மாறும் போது இந்த டாஸ்மாக்கை மட்டுமல்ல குடிகெடுக்கும் அரசையும் வீழ்த்த முடியும்.

செய்தி:
பெண்கள் விடுதலை முன்னணி,திருச்சி.
தொடர்புக்கு: 9750374810.