privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்வைகுண்டராஜனை கைது செய் - HRPC ஆர்ப்பாட்டம்

வைகுண்டராஜனை கைது செய் – HRPC ஆர்ப்பாட்டம்

-

  • தூத்துக்குடி துறைமுகக் கழகத் தலைவருக்கு 8 கோடி லஞ்சம் !
  • தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் தலைமறைவு !

சி.பி.ஐ.யே கைது செய்! சொத்துக்களை முடக்கு ! எனவும் தாதுமணல் கொள்ளையன் வைகுண்ட ராஜனை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும், கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தியும் மதுரை மாவட்டக்கிளை சார்பில் 10.11.2014 அன்று காலை 10.00 மணி அளவில் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. உயர் நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார்.

vaikuntarajan-poster

உயர் நீதிமன்ற வழக்குரைஞர் லூயிஸ் “மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்தும் இந்தப் போராட்டம் மிகவும் முக்கியமான போராட்டமாகும். பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தாது மணலைக் கடத்திக் கொள்ளையடித்தவர் தலைமறைவாகியிருப்பதாகச் சொல்வது ஒரு நாடகமாகும். சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு உதவி செய்ததற்காக ஒரு அதிகாரிக்கு மட்டுமே 8 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், கொள்ளையின் பரிமாணத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம். வைகுண்டராஜனை கைது செய்யவும் அவரது சொத்துக்களை முடக்கவும் போராட்டத்தை நாம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.”

வழக்குரைஞர் ராஜேந்திரன்

“ஆதாரபூர்வமான தகவல்களை சேகரித்தபின்தான் வைகுண்டராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் தலைமறைவாகி நடுக்கடலில் படகில் உல்லாசமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. வைகுண்டராஜன் மிகப் பெரிய திருடன் மட்டுமல்ல. மிகப் பெரிய ரவுடியும் கூட. அவர் மீது நடவடிக்கை எடுத்தால் நடவடிக்கை எடுப்பவரின் உயிர் தங்குமா என்பது தெரியாது. அப்படிப்பட்ட ஒரு கொள்ளையனை, ரவுடியை காப்பாற்ற என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.”

வழக்குரைஞர் ஜெகன்

“இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அவைகளைச் சுரண்டுவதற்கும், அழிப்பதற்கும் அனுமதிக்கக் கூடாது என்கிறது உச்சநீதி மன்றம். ஆனால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது தடுக்கப்பட வில்லை. நாடு முழுவதும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளையை ஆராயத் தான் சகாயம் குழுவை உயர் நீதிமன்றம் நியமித்தது. ஆனால் 30 மாவட்டங்களில் ஆய்வு என்பதை மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளையை மட்டுமே விசாரிக்கும் குழுவாக தமிழக அரசு சுருக்கி விட்டது. இதன் மூலம் கனிம வளக் கொள்ளையர்களைக் காப்பாற்றும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது தெளிவாகவே தெரிகிறது. கனிம வளக் கொள்ளை என்பது மிகப் பெரியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஆய்வு செய்யவேண்டும். அப்போது தான் பல உண்மைகள் வெளியே வரும். ஆனால் பணம் விளையாடுகிறது.”

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தோழர் குருசாமி வி.வி.மு. உசிலை வட்டம்

“வைகுண்டராஜன் மற்றவர்களைப் போல ஒரு சராசரி ஆள் இல்லை. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய 3 மாவட்டங்களில் அவனது பெயரை உச்சரிக்கவே மக்கள் பயப்படுகின்றனர். வைகுண்டராஜனை எதிர்த்த பலரும் தாக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சாதி ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி தனது கொள்ளையைத் தொடர்ந்துள்ளன. பெயரை உச்சரிக்கவே பயந்த தூத்துக்குடியிலும், அதன் சுற்று வட்டாரக் கிராமங்களிலும் வி.வி.முவும் பிற தோழமை அமைப்புகளும், வைகுண்டராஜனின் கொள்ளையை அம்பலப்படுத்தி போராடிய பொழுது அந்தப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனும் அச்சத்துடனும் பார்த்தனர். உங்களால் மட்டும் தான் வைகுண்டராஜனை எதிர்க்க முடியும் என்று பல கிராம மக்கள் எங்களைப் பாராட்டினர். எங்களோடு இணைந்து போராட முன்வந்தனர்.

தோழர் குருசாமி
தோழர் குருசாமி

இன்றைக்கு வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வருகின்றன. காவல் துறைக்குத் தெரியாமல் எதுவும் நடப்பதில்லை. ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஒற்றைக்கண் சிவராசன், சந்தனக் கடத்தல் வீரப்பனை சுற்றி வளைத்தவர்களுக்கு வைகுண்ட ராஜனை பிடிக்க முடியாதா? முடியாது என்றால் சொல்லுங்கள். நாங்கள் மக்களின் உதவியோடு அவனைப் பிடித்து ஒப்படைக்கிறோம். அந்த நிலைமையை காவல்துறை உருவாக்காது என்று நினைக்கிறோம்.”

வழக்குரைஞர் வாஞ்சிநாதன், உதவிசெயலர் ம.உ.பா.மையம் மதுரை

“கடந்த 20 வருடங்களாக வைகுண்டராஜன் கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்தி வருகின்றார். தாது மணல் எடுத்து அணுகுண்டு தயாரிப்புக்குத் தேவையான தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட்டைப் பிரித்து, வெளி நாடுகளுக்குக் கடத்தி வந்துள்ளார். இது கனிமவள சட்ட விதிகளின்படி குற்றம். இது ஒரு தேச விரோத செயல். தூத்துக்குடி ஆட்சியராக இருந்த ஆசிஸ்குமார் தாதுமணல் கொள்ளை பற்றி தமிழக அரசுக்கு அறிக்கை கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

வழக்குரைஞர் வாஞ்சிநாதன்
வழக்குரைஞர் வாஞ்சிநாதன்

தொடர்ந்து சட்ட விரோதமாக தாது மணலைக் கடத்தி வந்த வைகுண்ட ராஜனின் கொள்ளையை மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை வெளிக் கொணர்ந்தது. தூத்துக்குடிப்பகுதியில் ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம், முற்றுகைப் போராட்டம் நடத்தினோம்.

வைகுண்ட ராஜனின் கொள்ளைக்கு உதவி செய்ததற்காக தூத்துக்குடி துறைமுக கழக தலைவர் சுப்பையா IAS-க்குக் கொடுக்கப்பட்ட லஞ்சம் 7½ கோடி ரூபாய். இந்த வழக்கு 2012-ல் பதிவு செய்யப்பட்டாலும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இன்று வைகுண்டராஜன் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் தலைமறைவாகி விட்டார். R.S.S. பாஜக பிரமுகர்களை தொடர்பு கொண்டு வருகிறார். இது CBIக்கும் தெரியும்.

வைகுண்டராஜன் தலைமறைவானதால் அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி என்று CBI அறிவிக்க வேண்டும். அவரது சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகுண்டராஜனைக் கைது செய்தால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். CBI வைகுண்டராஜனைக் கைது செய்யத் தவறினால், மத்தியிலுள்ள பஜகவும் இந்தக் கொள்ளைக்குத் துணை போவதாகத்தான் கருத வேண்டியது வரும்.”

லயனல் அந்தோணி ராஜ், மாவட்ட செயலர், ம.உ.பா. மையம், மதுரை

“3 மாவட்டங்களில் 20 ஆண்டுகளாக 3 லட்சம் கோடி ரூபாக்கும் மேல் கொள்ளையடித்த மிகப் பெரிய குற்றவாளி வைகுண்டராஜன். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தாதுமணல் கொள்ளை சம்பந்தமாக தமிழக அரசுக்கு அறிக்கை கொடுத்தார். நீதிமன்றம் கண்காணிக்க உத்தரவிட்டது. எதையும் தமிழக அரசு மயிரளவுக்குக் கூட மதிக்கவில்லை. காரணம் வைகுண்டராஜன் ஜெயா டிவியின் பங்குதாரர் மட்டுமல்ல அவர் ஜெயாவின் பினாமியாகவும் இருந்தார். ஜெயாவுக்கும் வைகுண்டராஜனுக்கும் அவ்வளவு நெருக்கம். அதனால் தான் அவரால் தொடர்ந்து சட்டவிரோதமாக தாது மணலைக் கடத்த முடிந்தது.

லயனல் அந்தோணி ராஜ், மாவட்ட செயலர், ம.உ.பா. மையம் மதுரை
லயனல் அந்தோணி ராஜ், மாவட்ட செயலர், ம.உ.பா. மையம் மதுரை

சுப்பையா IASக்கு வைகுண்டராஜன் கொடுத்த லஞ்சம் 7½ கோடி ரூபாய். முன்ஜாமின் மனுவுக்கு எதிராக CBI வாதிட்டதால் ஜாமின் மறுக்கப்பட்டது. எனவே வைகுண்டராஜன் தலைமறைவாகிவிட்டார். ஆடிக்காற்றில் அம்மியே பறப்பதுபோல, ஜெயாவே ஊழலில் தண்டனை பெற்று தவிக்கிறபோது வைகுண்டராஜனை கைது செய்வது பெரிய வேலை இல்லை. பாஜகவுக்கும் ஜெயாவுக்கும் உள்ள அரசியல் போட்டியில், வைகுண்டராஜனை தமிழக அரசு பாதுகாக்கிறது. ஆனால் வைகுண்டராஜனோ பா.ஜ.க வின் உதவியை நாடுகிறார். இது CBIக்கும் தெரியும்.

வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டார் என்றால் அவர் என்ன அண்டார்டிகாவுக்கு சென்று விட்டாரா இல்லை அட்லாண்டிக் சென்று விட்டாரா? நடுக்கடலில் நவீன படகில் இருப்பதாகத்தானே செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்ய வேண்டியது தானே. இதை நாங்கள் கவனித்துக் கொண்டும் இருக்கிறோம். இதற்காக போராடிக் கொண்டும் இருக்கிறோம். ஒரு அதிகாரிக்கே 8 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்றால், தமிழகத்துள்ள பல அதிகாரிகளுக்கு வைகுண்டராஜனால் கொடுக்கப்பட்ட லஞ்சம் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டியிருக்கும். அந்த அளவிற்கு சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் கொள்ளை நடந்திருக்கிறது.

இந்தக் கொள்ளைக்குத் துணைபோன அத்தனை அதிகாரிகளையும் தண்டனை வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும். இந்த வழக்கு ஒரு கண்துடைப்பாக இருந்துவிடக் கூடாது. சிபிஐ பம்மாத்து செய்யக் கூடாது. தாது மணலிலுள்ள தோரியத்தைக் கடத்தி தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் விற்பனை செய்து கொள்ளையடித்த வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அவரது சொத்துக்கள் அனைத்தையும் முடக்க வேண்டும். வைகுண்டராஜனை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் மனித உரிமை பாதுகாப்பு மையம் தமிழகம் முழுவதும் வைகுண்டராஜன் ஒரு தேடப்படும் குற்றவாளி என்று நாங்கள் அறிவிப்போம். வைகுண்டராஜன் கைதுசெய்து தண்டிக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.”

ஆர்ப்பாட்டத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்,ம.உ.பா.மையம் மற்றும் தோழமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பெண் தோழர்கள், யா.ஒத்தக்கடை சில்வர் பட்டறைத் தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அன்று காலை உயர் நீதிமன்றத்திற்கு வந்தவர்களின் கண்ணிலிருந்து வைகுண்டராஜன் தப்பவில்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

முழக்கங்கள்

துறைமுக கொள்ளையனுக்கு
தாதுமணல் கொள்ளையன் பலகோடி லஞ்சம்!

லஞ்சமே பலகோடி என்றால்
கொள்ளையடித்தது எத்தனை கோடி!

தப்ப விடாதே! தப்ப விடாதே!
லஞ்ச ஊழல் பேர்வழி வைகுண்டராஜனை
தப்பவிடாதே!

கிரானைட் ஊழலுக்கு விசாரணைதாதுமணல் கொள்ளைக்கு பாதுகாப்பா?

தமிழக அரசே
பதில் சொல்!

தமிழ்நாட்டில்
அனைத்து கனிமவளக்
கொள்ளைகளையும்
தடுத்து நிறுத்து!

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ் நாடு
மதுரை மாவட்டக் கிளை.
94434 71003,98653 48163