privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்வால் நட்சத்திரத்தில் ரோசட்டா விண்கல சோதனைக் கலன்

வால் நட்சத்திரத்தில் ரோசட்டா விண்கல சோதனைக் கலன்

-

ரோசட்டா (Rosetta) விண்கலம் பிலே (Philae) என்ற 100 கிலோ எடையுள்ள சோதனைக்கலத்தை 67P என்ற வால் நட்சத்திரத்தில் இன்று (நவம்பர் 12-ம்) தேதி தரையிறக்க இருக்கிறது. இதுவரை சாதிக்காத இந்த தரையிறக்கம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் இம்முயற்சி விண்வெளி ஆய்வில் முக்கியமான மைல்கல் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

67P வால் நட்சத்திரம் ஆறரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது. சில வால் நட்சத்திரங்கள் சூரியனைச் சுற்றி வர நூற்றுக்கணக்கான ஆண்டுகளும், சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளும் எடுத்துக் கொள்கின்றன.

ரோசட்டாவின் பயணம்
ரோசட்டாவின் பயணம்

விஞ்ஞான வளர்ச்சியில்லாத காலத்தில் வால் நட்சத்திரங்களின் கணிக்கவியலாத சுற்றுப்பாதையால் மக்களிடம் அவற்றைப் பற்றி அச்சமும் பீதியும் நிலவியது. பண்டைய கலாச்சாரங்களில் வால் நட்சத்திரங்கள் கடவுளின் எச்சரிக்கையாகவும், அழிவு சக்தியாகவும் கருதப்பட்டன.

ஆனால், வால் நட்சத்திரங்கள் என்பவை உண்மையில் நட்சத்திரங்கள் அல்ல. சூரியனைச் சுற்றி வரும் விண்கற்களைப் போன்றவை. இவை குய்பெர் மண்டலம் (Kuiper Belt), ஓரட் மேகமண்டலம் (oort Cloud) போன்ற சூரியக் குடும்பத்தின் தொலைதூரப் பகுதியைச் சேர்ந்தவை. சூரியனிலிருந்து பெறும் ஆற்றலால் இவற்றில் இருக்கும் வாயுக்கள் அயனியாவதன் மூலம் ஒளிர்கின்றன. மேலும், இவை சூரியனை நெருங்கும் போது அவற்றின் மேலுள்ள பனி உருகி ஆவியாவதால், தூசி வெளியாகி வால்பகுதி உருவாகிறது.

விண்கற்களும், வால் நட்சத்திரங்களும் அளவில் மிகச்சிறியதாக இருப்பதால் அவற்றின் ஈர்ப்புவிசை மிகக் குறைவு. சூரியனை சுற்றிவரும் வால் நட்சத்திரங்கள் வியாழன் கோளின் அருகில் செல்லும் போது அதன் ஈர்ப்புவிசையின் தாக்கத்திற்குள்ளாகி அவற்றின் சுற்றுப்பாதை மாற்றமடைவதால் அவற்றின் சுற்றுப்பாதையை ஊகிப்பதும் கடினம். இவற்றின் திசைவேகமும் மிக அதிகம். உதாரணமாக 67Pயின் வேகம் மணிக்கு 55,000 கிலோ மீட்டராகும் (ஒப்பீட்டளவில் பூமியைச் சுற்றிய சுற்றுப்பாதையில் நிலவின் வேகம் மணிக்கு 3,683 கிலோமீட்டர் மட்டுமே).

நிலவிலும், செவ்வாயிலும் பல விண்கலங்கள் தரையிறக்கப்பட்டிருந்தாலும், சிறிய அளவு, சுற்றுப்பாதை மாற்றம், வேகம் ஆகிய மேலே சொன்ன இடர்ப்பாடுகளின் காரணமாக வால் நட்சத்திரங்களில் இறங்குவது கடினமானது.

இதுவரை சுமார் 5 விண்கலங்கள் வெவ்வேறு வால் நட்சத்திரங்களுக்கு அருகாமையில் சென்று தகவல்களை திரட்டியுள்ளன. ஆனால் அவை வால் நட்சத்திரங்களுக்கு அருகாமையில் கழித்த காலம் சில மணி நேரங்களே.

பிலே சோதனைக் கலன்
பிலே சோதனைக் கலன்

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் பத்தாண்டுகளுக்கு (2004) முன் விண்ணில் ஏவப்பட்ட ரோசட்டா, செவ்வாய், வியாழன் கோள்களுக்கு இடையில், 67Pயின் அருகாமைக்கு சென்று கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அதைச் சுற்றி வருகிறது. 67P வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும் போது வெளியிடும் வாயுக்களை ஆய்வு செய்து அத்தகவல்களை வரும் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சூரியனுக்கு அருகாமையில் 18.5 கோடி கிலோமீட்டர் தூரம் செல்லும் வரை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். டிசம்பர் மாதம் இத்திட்டப்பயணம் முடிவுக்கு வரும்.

தரையிறங்கிய உடன் 67Pயின் மீது சோதனைகளை நடத்தத் துவங்கும் சோதனைக்கலம் பிலே, 67Pயின் மீதுள்ள தூசி, வாயுக்கள் அடங்கிய பனிப் படுகையை ஆராய்ந்து அதில் நீர் இருக்கிறதா என்றும், அது நமது பூமியிலுள்ள நீரை ஒத்துள்ளதா அல்லது கடின நீரா என்பதை ஆய்வு செய்யும். இதன் மூலம் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் மோதிய வால் நட்சத்திரம் ஒன்றுதான் பூமிக்கு தண்ணீரை கொண்டு வந்திருக்கலாம் என்ற கருதுகோளுக்கு நிரூபணம் கிடைக்கலாம்.

மேலும், வாயுக்களில் உள்ள ஹைட்ரஜன், கார்பன் அளவையும், எளிய மூலக்கூறுகளிலிருந்து சிக்கலான அமினோ அமிலங்கள் உருவாவதற்கான சூழல் அல்லது உயிரற்றவற்றிலிருந்து உயிர் தோன்றும் இயற்கைச் சூழல் சூரியனை நெருங்கும் போது உருவாகிறதா என்று அறிவதற்காக 67P சூரியனை நெருங்கும் போது ஏற்படும் வேதிமாற்றங்களையும் ஆய்வு செய்யும். இதன் மூலம் வால் நட்சத்திரத்திலிருந்தே உயிர்கள் தோன்றக் காரணமான ஹைட்ரோ கார்பன்கள், அமினோ அமிலங்கள் நமது பூமிக்கு வந்திருக்கக் கூடுமென்ற கருதுகோளுக்கும் விடை கிடைக்கலாம்.

வால் நட்சத்திரங்கள் மற்றும் விண்கற்கள் நமது சூரியக் குடும்பத்தின் கோள்கள் உருவான செயல்முறையின் குழந்தைப் பருவத்தின் மிச்ச சொச்சங்களாக இருக்கின்றன. ரோசட்டாவின் சோதனைக்கலம் தரும் தகவல்கள் நமது சூரியக்குடும்பத்திலுள்ள கோள்களின் குழந்தைப்பருவத்தையும், கோள்கள் உருவான செயல் முறையை மேலதிகமாக அறிந்து கொள்ள உதவும். சோதனைக்கலத்தின் தரையிறக்கலிலுள்ள சவால்கள் மற்றும் அறிவியல் முக்கியத்துவத்தால் விஞ்ஞானிகள் மிகுந்த ஆவலுடன் ஆயத்தமாகி வருகின்றனர்.

கடவுளின் இருப்பிடத்தை காலி செய்யும் அறிவியல் உண்மைகளை கொண்டிருப்பதால்தான் என்னவோ வால் நட்சத்திரங்கள் கடவுளின் அழிவு சக்தியாக கருதப்பட்டிருக்கின்றன. அதுவும் உண்மைதான். இத்தகைய அறிவியல் முன்னேறங்கள் கடவுகளை அழிப்பதற்கு கருத்தியல் விளக்கங்களை கொடுக்கின்றன. சமூவியல் தளத்தில் அதை நாம் நிறுவுவோம்! அந்த வகையில் வால் நட்சத்திரங்கள் உண்மையிலேயே ‘அழிவு’ சக்திகள்தான்!

பிலே தரையிறக்கம் பற்றி ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள படக்காட்சி

– மார்ட்டின்