privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மணல் குவாரியை இழுத்து மூடிய மக்கள் போராட்டம்

மணல் குவாரியை இழுத்து மூடிய மக்கள் போராட்டம்

-

விருத்தாசலம் தாலுக்கா, கருவேப்பிலங்குறிச்சி வெள்ளாற்றில் கடந்த 10 மாதமாக மாநில சுற்றுச்சூழல் ஆணையத்தின் தடையில்லாச் சான்றிதழுடன், மாவட்டஆட்சியரின் 3 ஆண்டுகால அனுமதி உத்தரவுடன் சுமார் 50 ஏக்கர் பகுதியில் ஆற்று மணலை அள்ளுவதற்கு அமைக்கப்பட்ட கார்மாங்குடி மணல்குவாரி செயல்பட்டு வருகிறது.  மணல் குவாரியை எதிர்த்த பகுதி மக்களின் சிறு சிறு போராட்டங்களை கடந்து, 10 மாதங்களுக்குப் பிறகும் மணல் கொள்ளை நிறுத்தப்படவில்லை.  ‘அனைவரும் மணல்கொள்ளைக்கு காசு வாங்கிவிட்டார்கள்’ என்ற அவநம்பிக்கையுடன் மக்கள் இருந்த நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் வெள்ளாற்றுப் பகுதி மக்களிடையே தொடர்ந்து ஒரு மாத காலமாக பிரச்சாரம் நடத்தி நம்பிக்கை ஏற்படுத்தியது.

2-12-2014 அன்று ஆயிரக்கணக்கான மக்களோடு ஆற்றில் இறங்கி மணல் அள்ளும் எந்திரத்தை  முற்றுகையிட்டு மணல்குவாரியை தற்காலிகமாக மூடும்படி அதிகார வர்க்கத்தை பணிய வைத்திருக்கிறோம்.

மக்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த போராட்டம் பற்றிய விபரங்களை சுருக்கமாக தருகிறோம்.

கார்மாங்குடி மணல் குவாரி முற்றுகை

2-12-2014 கார்மாங்குடி மணல் குவாரி முற்றுகை” “நீர் ஆதாரத்தை காக்க வீட்டுக்கு ஒருவர் ஆற்றில் இறங்குவோம்” என்ற முழக்கத்துடன் பிரசுரங்களை ஆற்றின் இரு கரையிலும் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விநியோகித்து சுவரொட்டி ஒட்டிச்சென்றோம். இளைஞர்கள், பெண்கள் உட்பட அனைத்து மக்களையும் மறியல் போராட்டத்திற்கு வாருங்கள் என உள்ளுர் இளைஞர்களுடன் இணைந்து அழைப்பு விடுத்தோம்.

மக்கள் மத்தியில் மணல் குவாரிக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வலுப்பது தெரிய வந்த விருத்தாசலம் தாசில்தார் பணம் வாங்குவதற்காக போராட்டம் அறிவித்த வல்லியம் கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கலந்து கொண்ட மணல் குவாரிக்கு எதிரான கீரனுர் நபர்கள் குறுக்கிட்டு, “உங்கள் நியாயம் வேண்டாம். மணல்குவாரியை மூடுவதாக இருந்தால் பேசுங்கள். மணல் குவாரி வேண்டுமா? விவசாயிகள் வேண்டுமா?” என முடிவு செய்யுங்கள் என வெளியே வந்துவிட்டனர்.

மக்கள் போராட்டத்தை ஒட்டி மணல் லாரிகளை அப்புறப்படுத்தும் போலிசார்
மக்கள் போராட்டத்தை ஒட்டி மணல் லாரிகளை அப்புறப்படுத்தும் போலிசார்

“திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடக்கும்” என மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் பத்திரிகை செய்தி கொடுக்கப்பட்டது.

கார்மாங்குடியில் அறிவரசன் என்ற எம்.டெக். படித்த மாணவர் ஆரம்பம் முதலே மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவளித்து நம்மோடு இணைந்து செயல்பட்டு வந்தார். மணல்குவாரி மேலாளர் கார்த்திக் என்பருடைய தூண்டுதலில் இளங்கோவன் என்பவர் 4 நாட்களுக்கு முன்பாக, ‘மணல்குவாரியை மறிப்பவர்கள் யாராக இருந்தாலும் அறிவரசனாக இருந்தாலும் அவர்களுக்கு சப்போட்டாக வக்கீல் வந்தாலும் வெட்டுவேன்’ என்று மிரட்டிச் சென்றுள்ளார். மேலும் கார்மாங்குடி கிராமம் முழுவதும் போராட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்பதற்காக பணம் கொடுப்பதும், மிரட்டுவதும் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த சூழலில் போராட்டத்தன்று காலையிலேயே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் கார்மாங்குடி, கருவேப்பிலங்குறிச்சி, நேமம், வல்லியம், சக்கரமங்கலம், முத்துகிருஷ்ணாபுரம், கீரனூர், மேலப்பாளையுர், மருங்கூர் ஆகிய ஊர்களிலிருந்து மக்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்தனர்.

மணற் கொள்ளையை நிறுத்தாமல் அகலமாட்டோம் - போராட்டக் களத்தில் மக்கள்
மணற் கொள்ளையை நிறுத்தாமல் அகலமாட்டோம் – போராட்டக் களத்தில் மக்கள்

மக்கள் கூட்டததை பார்த்ததும் அதிகாரிகள் மணல் லாரிகளை அங்கிருந்து அவசரமாக அகற்றினர். மணல் அள்ளும் ஜே.சி.பி. எந்திரம் இருக்கும் இடத்திற்கு செல்ல ஆற்றில் 3 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில், துணைக்கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் பாண்டியன் ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுப்புராயலு, ராஜேந்திரன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆற்றிலே நடக்க முடியாமல் நடந்து வந்தனர். அதிகாரிகள் மணல்மேட்டில் பார்வையாளராக உட்கார்ந்து விட்டனர்.

ஆற்றில் ஜேசிபியை நோக்கி இருபக்கமும் வேகமாக வந்த மக்கள் காட்டாற்று வெள்ளம் போல் இயந்திரத்தை முற்றுகையிட்டனர். கரையில் இருந்து நம் முழக்கத்தை தொடர்ந்து, வந்த மக்கள் ஆங்காங்கே அமர்ந்த பிறகு தொடர்ந்து முழக்கம் இட்டோம். அதைத் தொடர்ந்து போராட்டத்தின் நியாயங்களை அதிகாரிகளின் கழுத்தறுப்பு வேலைகளை, அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை ஆதாரங்களோடு விளக்கி மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ உரையாற்றினார்.

“மாநில சுற்றுச்சூழல் ஆணையம் ஆற்றுமணலை கொள்ளையடிக்க தடையில்லாச் சான்று வழங்குகிறது. அதன் தலைவர் யார்? ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. முதலாளிக்கும், அரசுக்கும் ஜால்ரா போடுபவர்கள்.

hrpc sand 3
மணல் அள்ளும் எந்திரத்தின் மீது மக்கள் போராட்டம்!

அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் ஆற்றில் ஒரு மீட்டர்தான் மணல் அள்ள வேண்டுமென உத்தரவு போடுகிறார். இங்கே 40 அடி மணலை கொள்ளயடித்துள்ளார்கள். மாவட்ட நிர்வாகம் ஒன்றும் செய்யவில்லை.

இவர்கள் செய்கிற தவறுகளை எதிர்த்து நாம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குப் போட வேண்டும். அதன் தலைவர் யார்? ஓய்வு பெற்ற நீதிபதி. அரசுக்கும், முதலாளிக்கும் அடியாள் வேலை செய்பவர்கள்.

அதன் பிறகு உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட வேண்டும். அங்கு தமிழக அரசே நமக்கு எதிராக வழக்கு நடத்தும். கமிட்டி போடும். விசாரிக்கும். அதற்குள் ஆற்று மணல் முழுவதையும் அள்ளி முடித்து விடுவார்கள். இதுதான் சட்டம்.

மக்களின் கேள்விக்கு பதில் கூற திணறும் அதிகார - போலீசு வர்க்கம்
மக்களின் கேள்விக்கு பதில் கூற திணறும் அதிகார – போலீசு வர்க்கம்

நமக்கு சட்டம் தேவையி்ல்லை. நியாயம் வேண்டும் என போராடுகிறோம். ஆற்று மணலை அளவுக்கு அதிகமாக கொள்ளையடித்தால் நீர்வளம் பாதிக்கும் என்பது நீர்வள ஆதார பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குத் தெரியும். வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியும். அமைதியான முறையில் மனு கொடுத்தால் தீர்வு எப்படி கிடைக்கும்?

இன்றைய தினம் நாம் உறுதியாக மணல் குவாரியை மூடும்வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என போராடினால்  கண்டிப்பாக வெற்றி பெற முடியும். மக்கள் எல்லாம் அயோக்கியர்கள், காசு வாங்க கூடியவர்கள் என ஏளனம் பேசும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் அச்சப்படுகின்ற வகையில் நம்முடைய போராட்டம் அமைய வேண்டும்.

இது மணல்கொள்ளைக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. நம் மானம் காக்கும் போராட்டம். அரசு மணல்குவாரியை மூட வேண்டும் அல்லது நம் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை உருவாக்குவதோடு, நாம் அனைவரும் சிறை செல்ல தயங்க கூடாது.

மனித உரிமைபாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் உங்களைவிட்டு ஓடிவிட மாட்டோம். முதல் ஆளாக போலீஸ் வேனிலே ஏறுவோம்.

hrpc sand 1எல்லா காலங்களிலும் அயோக்கியர்கள் இருந்திருக்கிறார்கள். ஊழல் அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். யோக்கியமானவர்கள், நேர்மையான அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? என்பதுதான் முக்கியமானது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைப்பவர்களோடு, இப்படித்தான் மானத்தோடு, நேர்மையாக உழைத்து வாழ வேண்டும் என நினைப்பவர்கள் தங்களை ஒப்பிடத் தேவையில்லை.

நமது போராட்டம் தமிழகம் முழுவதும்  ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக போராடக்கூடிய மக்களுக்கு கலங்கரை விளக்கமாக நம்பிக்கை ஊட்டுவதாக அமைய வேண்டும்.

மணல் கொள்ளையில் அரசின் இதே அணுகுமுறைதான் கல்விக் கட்டணக்கொள்ளையிலும், மின் கட்டண உயர்விலும்,கேஸ் மானியம் ரத்து செய்வதிலும், மருத்துவம் தனியார்மயத்திலும் கடைபிடிக்கிறது. போராடுவதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலையில் நாம் வாழுகிறோம்.

உங்கள் உறவினர்கள் அனைவரையும் பெருந்திரளாக இந்தப் போராட்டத்திற்கு வரச்சொல்லுங்கள். எத்தனை நாளானாலும் மணல் குவாரியை மூடுகின்ற வரை நமது போராட்டத்தை விலக்கக்கூடாது. ஒரு நாள் போராட்டத்திலேயே வெற்றியைத் தேடி களைப்படையத்தேவையில்லை.

கூடங்குளம் அணுஉலை போராட்டத்திலும், முல்லை பெரியாறு அணைக்காக நடந்த மக்கள் போராட்டங்களும் பல நாட்கள் நடந்தது.

காவல்துறையை கண்டு அச்சப்படத்தேவையில்லை. வழக்கு, சிறைகளுக்கு தயங்கத் தேவையில்லை. ‘அவுங்க ஊர் பாதிப்பிற்கு நீ ஏன் போராடுகிறாய்?’ என மக்களிடம் கேள்வி கேட்டு ‘கலைந்து போ’ என திணறடிக்கிறது அதிகாரவர்க்கம். வ.உ.சி.யும், பகத்சிங்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் போராடினார்கள். கட்டபொம்மனும், மருது சகோதரர்களும், ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார்கள். ஏரியா பிரிக்க வில்லை. ஆகையால் ஆற்று மணல் கொள்ளையை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். மணல்குவாரியை மூடுகிற வரை உறுதியாக களத்திலே நிற்க வேண்டும்”  என பேசினார்.

மணற் கொள்ளையர்கள் தங்குமிடம் தீவைப்பு
மணற் கொள்ளையர்கள் தங்குமிடம் தீவைப்பு

அதன்பிறகு ஊர் முக்கியஸ்தர்கள் கீரனூர் ராஜவன்னியன், மருங்கூர் பஞ்சமுத்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜகோபால், செந்தில்குமார், விஜயகுமார், மேலப்பாளையுர் சசிக்குமார், கார்மாங்குடி சிவப்பிரகாசம், அறிவரசன், பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினார்கள். மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த செந்தாமரைக்கந்தன், செல்வகுமார் வழக்கறிஞர்கள் புஷ்பதேவன், செந்தில், செந்தில்குமார் ஆகியோர் உரையாற்றினர்.

“மணல்குவாரியை கண்டிப்பாக மூடவேண்டும். மனித உரிமை பாதுகாப்புமையம் தொடர்ந்து பலமுறை எங்கள் ஊருக்கு இரவும், பகலும் வந்து பிரச்சாரம் செய்தனர். அதனால் இவ்வளவு மக்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறோம். விலை போய்விடுவார்கள் என்று எங்களிடம் பலர் எச்சரித்தனர். அதையெல்லாம் பொய்யாக்கி இன்றைக்கு இந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார்கள். அவர்களோடு தொடர்ந்து நாங்கள் உறுதியாக நிற்போம்” என அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

“அரசியல் ஓட்டுக்கட்சியை நம்பாதீர்கள், சாமியை நம்பாதீர்கள், ஜனநாயகம் என்னவென்றால் இன்றைக்குத்தான் பார்க்கிறேன். மனித உரிமை பாதுகாப்பு மையம் இல்லை என்றால் நம்மால் இந்த குவாரியை மூட முடியாது” என்று தொடர்ந்து போராடிவரும் அறிவரசன் பேசினார். கீழ்நிலை காவலர்களும், வருவாய்த்துறை ஊழியர்களும் மக்களோடு மக்களாக நின்று கொண்டு பேசியதை ரசித்து கேட்டனர். வயதானவர்கள்கூட கூட்டத்தோடு கூட்டமாக வந்து கலந்து கொண்டனர். “எங்கிருந்தோ வந்து செய்றாங்க. கலந்துகொள்வது நமது கடமை” என பேசிக் கொண்டனர்.

நமது கோரிக்கையை ஒலிபெருக்கி மூலமாக மக்கள் குரலோடு சேர்த்து, “மணல் குவாரியை மூட வேண்டும். மூடும்வரை இங்கிருந்து அகலமாட்டோம். உங்கள் பதில் என்ன?” என நிறுத்திக்கொண்டோம்.

பேச்சுவார்த்தைக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர், “மணல் கொள்ளை குறித்து சுரங்கத்துறை, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை இணைத்து அதிகாரிகள் குழு அமைக்கிறேன். விசாரணை அறிக்கை வரும் வரை ஒருவாரம் பொறுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்.

“நீங்கள் எத்தனை விசாரணைக்குழுவையும் அமைத்துக்கொள்ளுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். இன்றைக்கு மணல்குவாரியை மூட வேண்டும். விசாரணை, அறிக்கை என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் அதிகாரிகள் நடவடிக்கை. கண்முன்னே தெரிகின்ற இந்த மணல்கொள்ளையை மூடுவதற்கு தயங்கக் கூடாது. பொது அமைதிக்கு பங்கம் என மக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு போடும் நீங்கள் மணல்கொள்ளைக்கு எதிராக உத்தரவு போட முடியும். மக்களை அலைக்கழிக்க நினைக்காதீர்கள். எங்களுடைய ஒரே கோரிக்கை மணல்குவாரியை மூட வேண்டும். முடியாது என்றால் நீங்கள் எங்களை கைது செய்யலாம். அதற்கு நாங்கள் தயார்” என அனைவரும் உறுதியாக தெரிவித்தோம்.

உயரதிகாரிகளிடம் பேசிய கோட்டாட்சியர் “தற்காலிகமாக இந்த குவாரியை மூட உத்தரவிடுகிறேன்” என அறிவித்தார்.

ஒட்டுமொத்த மக்களும் உணர்ச்சி பொங்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். “மணல் அள்ளும் எந்திரத்தை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாங்களே அகற்றுவோம்” என்று கூறியதும், காவல்துறை பாதுகாப்புடன் மணல்குவாரி உரிமையாளர்கள் இரண்டு கிட்டாட்சி எந்திரத்தை கரைக்கு எடுத்துச் சென்றனர். காவலுக்கு வந்த காவல்துறையினர் வாகனம் மணலிலே திரும்பிசெல்ல முடியாமல் காவலர்கள் தள்ளி சிரமப்பட்டனர்.

போராட்டத்தில் ஆரம்பம்முதலே உற்சாகத்துடன் கலந்து கொண்ட சிறுவர்கள், வெயிலுக்காக மணல்குவாரி காரர்கள் அமைத்திருந்த கொட்டகையை பிய்த்து தீ வைத்து எரித்தனர். மணலில் சிக்காமல் செல்வதற்காக மணல் கீழே போடப்பட்ட கரும்புசெத்தையும் கொளுத்தினர்.

கார்மாங்குடி ஊராட்சிமன்றத் தலைவர் வெங்கடேசன் என்பவர் விவசாய சங்க பேனரை வைத்துக்கொண்டு அதிகாரிகளோடு நெருக்கமாக உறவாடி, மணல்குவாரிக்கும், மணல்கிடங்குக்கும் இடம்பிடித்து கொடுத்து ஆதரவு அளித்து வருபவர். இதனால் பல லட்சம் ஆதாயம் அடைந்தவர். நம் ஊரில் ஒரு சிறுவன் மணல்குவாரியை மூட முக்கிய காரணமாகி விட்டான் என்ற அவமானத்தில், இதுவரை நாள்தோறும் அதிகாரிகளுக்கும்,உள்ளுர் அல்லக்கைகளுக்கும் வந்து கொண்டிருந்த மாமுல் பணம் இன்று முதல் கிடைக்காது என்ற ஆத்திரத்தில் காவல் துறையை கையாளாக பயன்படுத்தினார். ‘ஆற்றில் 10 அடிக்கு கீழே இருந்த கரும்பு செத்தையை மணல் கொள்ளையை எதிர்த்து போராடிவரும் கார்மாங்குடி அறிவரசன்தான் கொளுத்தினார்’ என புகார் வாங்கி காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்ய முயன்றது.

இச்செய்தி கேள்விபட்டு நமது வழக்கறிஞர்கள், “இலட்சக் கணக்கில் மணல்கொள்ளை போனதுக்கு எந்த எப்.ஐ.ஆரும் இல்லை. ரூபாய் 2000 பெறுமானம் உள்ள கரும்பு செத்தையை கொளுத்தினான் என்று வழக்குபோடுவது அநியாயம். அமைதியாக முடிந்த போராட்டத்தை மணல்கொள்ளைக்கு ஆதரவாக பிரச்சனையாக்கப் பாக்கிறது காவல் துறை” என நேரடியாக விருத்தாசலம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமாரிடம் குற்றம் சாட்டினோம்.

“புகார் கொடுத்திருக்கிறார்கள். சட்டப்படி வழக்கு பதிவு செய்வது எனது கடமை” எனபேசினார். “மேற்கொண்டு விசாரணையில் அறிவரசன் தவறு செய்யவில்லையென்று தெரிய வந்தால் கைது செய்ய மாட்டேன்” என வாக்குறுதி கொடுத்தார்.

“அறிவரசன் கடைசிவரை எங்களோடு இருந்தார். இத்தகைய காரியங்களில் அவர் ஈடுபட மாட்டார். கொளுத்தியதற்கு வழக்கு பதிய வேண்டுமென நினைத்தால் பெயர் இல்லாமல் பதிவுசெய்யுங்கள்” என சொன்னோம்.

ஆய்வாளர், “புகார் கொடுத்தவர் பெயரோடு கொடுத்திருக்கிறார். நான் என்ன செய்ய முடியும்” என சட்டம் பேசினார்.

உடனே நமது வழக்கறிஞர்கள் ஊர் முக்கியஸ்தர்களை கலந்து ஆலோசித்து, “4-12-14-ம் தேதி மாலை 4 மணிக்கு கருவேப்பிலங்குறிச்சியில் மணல் கொள்ளைக்கு ஆதரவாக பொய்வழக்கு போடும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி” கேட்டு விண்ணப்பம் கொடுத்தோம்.

ஆய்வாளரின் கை நடுங்கியது. வெளியில் நின்ற எதிர் தரப்பினர் அமைதியாகினர். மேலும், அறிவரசன் பெயரை போட்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்தால் நாளைய தினம் குற்றவியல் நீதிமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள், “செத்தையை நாங்கள்தான் கொளுத்தினோம்” என ஒப்புக்கொண்டு சரணடைவது என முடிவெடுத்தோம்.

புகார் கொடுத்த எதிர் தரப்பினர், “நாங்கள் புகாரை வாபஸ் வாங்கிகொள்கிறோம்” என நமக்கு தூது அனுப்பினர். ஆய்வாளரோ, “எப்.ஐ.ஆர் போட மாட்டேன். அப்படி போட்டாலும் பெயர் இல்லாமல் போடுகிறேன்” எனச் சொல்லி அனுப்பினார். மேலும் ஆர்ப்பாட்ட அனுமதி கடிதத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார். இவ்வாறு, மணல்குவாரிக்கு ஆதரவான காவல்துறையின் அச்சுறுத்தலை முளையிலேயே நாம் கிள்ளி எறிந்தோம்.

போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மக்களும், “நாம் போராடியா இந்த வெற்றியை பெற்றோம்” என அளவில்லா உற்சாகம் அடைந்தனர்.

70 வயதை கடந்த  ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர், “மனித உரிமை பாதுகாப்பு மையமும், விலைபோகாத யாருக்கும் அஞ்சாத வழக்கறிஞர்கள்தான் இந்த போராட்டத்தை சாதித்துள்ளனர். அவர்களை மனமார வாழ்த்துகிறோம். என் சார்பாக போராட்டம் நிதியாக 1000 தருகிறேன்” என நிதி கொடுத்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு நபர்களும் 200, 500, 1000 என அந்த இடத்திலேயே சுமார் 5000 ரூபாய் வசூல் ஆனது. மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சமுத்து என்பவர்,  “அனைவருக்கும் என் செலவில் உணவு வழங்குகிறேன்” என மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மற்றும் தோழர்கள் 20 பேருக்கு மேல் உணவு வழங்கினார்.

இந்நிகழ்வில் அனைத்து பத்திரிகையாளர்களும் ஊடக துறையினரும் இறுதிவரை அங்கேயே இருந்தனர். மணல் கொள்ளைக்கு எதிராக படம் எடுக்கிறார்கள், நம்மிடம் பேட்டி எடுக்கிறார்கள் ஆனால் தொலைக்காட்சியில் அதற்கு உரிய முக்கியத்துவத்தில் காட்டப்படுவதில்லை. அல்லது காட்டாமல் இருட்டிப்பு செய்யப்படுகின்றது. அங்கு வந்த நிருபர்களிடம், “எங்கள் போராட்டத்தை மக்கள் ஏன் காட்ட வில்லை” என கேள்வி எழுப்பினர் மக்கள்.

“மணல் கொள்ளையர்கள் மேலே உள்ள தலைமை நிருபர்களை கவனிக்கின்றனர் மாவட்ட நிருபர்களும் பணம் வாங்குகின்றனர், நாங்கள் என்ன செய்ய முடியும்” என உள்ளுர் பத்திரிகையாளர்கள் வருத்தபடுகின்றனர். அதிகாரிகள் போல் ஊடக நிருபர்களும் லஞ்ச ஊழலுக்கு பலியாகியுள்ளனர். மக்கள் போராட்டத்தை காட்ட வேண்டாம் என தடுப்பது போலீசு மற்றும் ஊடக துறையின் நோக்கமாக உள்ளது.

காலை 10 மணி முதல் ஆரம்பித்த தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தை மனித உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்து தலைமை தாங்க, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் இணைந்து களப்பணி ஆற்றினர்.  மக்கள் அனைவரும் இறுதிவரை கட்டுப்பாடோடு கோரிக்கையை முன்வைத்து போராட, உணர்ச்சிப் பூர்வமாக உரையாற்றி எழுச்சிகரமான முழக்கங்களோடு போராட்டத்தை நடத்தியது மனித உரிமை பாதுகாப்பு மையம்.

இது, தற்காலிக வெற்றியை ஈட்டித்தந்திருக்கிறது. மக்களிடையே உள்ள அவநம்பிக்கையை தகர்த்திருக்கிறது.

வருகின்ற 15-12-14 அன்று தேதி கருவேப்பிலங்குறிச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்துவது என ஏகமனதாக முடிவு செய்யபட்டது. பெற்ற வெற்றியை தக்க வைக்கவும் ,அதிகாரிகளை அச்சுறுத்தவும் ஆயிரக்ககணக்கில் கூடவேண்டும் என்ற அறிவிப்பை அனைவரும் வரவேற்றனர்.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்
கடலூர் மாவட்டம்.