privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஆபாச பத்திரிகைகளைத் தீயிலிடு - மாணவிகள் போர்க்கோலம் !

ஆபாச பத்திரிகைகளைத் தீயிலிடு – மாணவிகள் போர்க்கோலம் !

-

“ஆபாசப் பத்திரிகைகளை எரிக்கும் போராட்டம்” என்று அறிவித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சென்னை முழுக்க சூறாவளியாய் சுழன்று பிரச்சாரம் செய்தனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்  சென்னை மதுரவாயல் முதல் பிராட்வே வரை புமாஇமுவின் செம்படை உழைக்கும் மக்களைச் சந்தித்து பாலியல் வக்கிரத்தை ஒழித்துக்கட்ட வேண்டியதன் அவசியத்தை எடுத்து உரைத்தது. உழைக்கும் மக்கள் தங்கள் வர்க்கப்பாசத்தோடு  ஆதரவளித்தனர். “மாணவர்கள் என்றாலே சரியாகத்தான் இருப்பார்கள்” என்றும் “மாணவர்கள் -இளைஞர் சமூகத்தை மாற்றப் பிறந்தவர்கள் தாம்” என்றும் வாழ்த்துக்கூறினர்.

பிரச்சாரப் பயணம் முடிந்ததும் போராட்டத்திற்கான வேலைகள் தொடங்கின, நகரம் முழுக்க, “ஆபாசப் பத்திரிகைகளை எரித்தே தீர வேண்டும், வேறு மாற்றே இல்லை” என்பதை அறிவிக்கும் விதமாக 3000-க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

ஆணாதிக்கத்தின் முகத்தை  கிழிக்கும் வகையில் திரும்பிய பக்கமெல்லாம் புமாஇமுவின் போராட்ட சுவரொட்டிகளுக்கு இடம் கொடுத்து மேலும் பெருமை தேடிக்கொண்டது சென்னை.

சுவரொட்டிகளைக் கண்ட மக்கள் கும்பல் கும்பலாக வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தங்களுக்குள் விவாதிப்பதும், பலர் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிப்பதும், தாங்களும் கண்டிப்பாகக் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.

உழைக்கும் மக்கள் இச்சுவரொட்டிகளை கண்டவுடன் வாழ்த்து தெரிவித்தனர் என்றால் ஆளும் வர்க்கத்தின் எடுபிடியான போலீசு என்ன செய்திருக்கும்?

17-ம் தேதி காலைமுதல் பு.மா.இ.மு.வின் சென்னை மாநகரச் செயலர் தோழர் கார்த்திக்கேயனின் வீட்டுக்கு வந்து “எங்கே போராட்டம் நடத்தப் போகிறீர்கள்?” என்று குடைச்சல் கொடுத்துப் பார்த்தது, பாச்சா பலிக்காமல் போனது. தொடர்ந்து அலுவலக எண்ணுக்கு போன் செய்து, “என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று பதைபதைப்போடு இருந்தது.

நாம் எதிர்பார்த்த நாளும் போலீசு எதிர்பார்த்த நாளுமான 18-ம் தேதி விடிந்தது . அன்றும் காலை முதல் அலுவலக எண்ணுக்கு போலீசு அழைத்துக்கொண்டே இருந்தது.

“சார் எப்போ வருவீங்க, சாப்பாடு ரெடி பண்ணணும், பர்மிசன் கொடுத்துடுறோம், பப்ளிக்குக்கு டிஸ்டர்ப் இல்லாம பண்ணுங்க” என்று பல பல மொழிகளில் பேசின.

நாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்த இடத்தில் காலை 8 மணி முதல் நூற்றுக்கணக்கான போலீசு குவிக்கப்பட்டு இருந்தது.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்
நாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்த இடத்தில் காலை 8 மணி முதல் நூற்றுக்கணக்கான போலீசு குவிக்கப்பட்டு இருந்தது.

நம்மைக் கண்ட உளவுப் பிரிவு போலீசு நாம் செல்லும் இடமெல்லாம் வால் போல திரிந்தது. டீ குடிக்கச் சென்றாலும் கால் வலிக்கிறதென்று ஒரு இடத்தில் உட்கார்ந்தாலும் கூட கூடவே வந்தது. சரி அதிகாரிகளை சந்திப்போம் என்று சென்றோம்.

நாம் எந்த நோக்கத்திற்காக போராட்டம் செய்யப் போகிறோம் என்பதைக் கேட்ட D1 போலீசு இன்ஸ்பெக்டர்,

“அப்படியா, டைம் பாஸ்ன்னு ஒரு  பத்திரிக்கை வருதா எனக்கு தெரியவே தெரியாதே”

“ஏன் சார் உங்க பசங்க எல்லாம் இந்தப் பிரச்சினையில பாதிக்கறது இல்லையா?”

“ச்சே என்ன செய்யறது” என்று தன் முகத்தில் நவரசங்களையும் காட்ட ஆரம்பித்தார்,  இன்னொரு போலீசு.

மணி சரியாக 12.30.

புமாஇமுவின் கல்லூரி மாணவிகளும் இளம் பெண்களும் தோழமை அமைப்பான பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களும் “பாலியல் வக்கிரத்தை துடைத்தெறிவோம்” என்ற எச்சரிக்கை செய்யும் வாசகங்களோடு தலையில் தொப்பி, கையில் பேட்ஜ், சிவப்பு சீருடை சகிதமாக சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் உள்ள பிரதான சாலையில் கம்பீரமாக முழக்கமிட்டபடி வர, போராட்டத்தின் தலைவரான  புமாஇமுவின் தோழர் கனிமொழி கையில் தீயோடு வந்தார்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்
“பாலியல் வக்கிரத்தை துடைத்தெறிவோம்” என்ற எச்சரிக்கை செய்யும் வாசகங்களோடு தலையில் தொப்பி, கையில் பேட்ஜ், சிவப்பு சீருடை சகிதமாக முழக்கமிட்டபடி வர, போராட்டத்தின் தலைவரோ கையில் தீயோடு வந்தார்.

தீயிட்டுக் கொளுத்துவோம் ! தீயிட்டுக் கொளுத்துவோம் !
பாலியல் வக்கிரத்தை தூண்டுகின்ற
ஆபாசப் பத்திரிக்கைகளை
தீயிட்டுக் கொளுத்துவோம் !தீயிட்டுக் கொளுத்துவோம் !

அனுமதியோம்!அனுமதியோம்!
மாணவர்கள் -இளைஞர்கள்
டைம்பாஸ்- சினிக்கூத்து
வண்ணத்திரை, குமுதம்
ஆபாசக் குப்பைகளை
கடைவிரிக்க அனுமதியோம்!

பள்ளிக்கூட மாணவனுக்கும்
ஊத்திக் கொடுத்து சீரழிக்கும்
மாமா பயல் கவர்மெண்டே
நீ நடத்துவது அரசாங்கமா?
விபச்சார விடுதியா?

தடை செய்!தடை செய்!
ஆபாச பத்திரிக்கைகளான
டைம்பாஸ் சினிக்கூத்து
குமுதம் வகையறாக்களை
உடனடியாக தடை செய்!

பாலியல் வக்கிரத்தை பரப்பும்
இண்டர் நெட் மெமரி கார்டு
ஃபேஸ் புக் வாட்ஸ் அப்
தொலைக்காட்சி ஆபாசங்களை
உடனே தடை செய்!

எச்சரிக்கை ! எச்சரிக்கை!
எச்சரிக்கை செய்கின்றோம்
கோடி கோடியாய் லாபம் பார்க்க
மாமா வேலை செய்கின்ற
பத்திரிக்கை முதலாளிகளே
ஆபாசக் குப்பைகளை
தமிழகத்தில் கடைவிரித்தால்
தீயிட்டு கொளுத்துவோம் !

முறியடிப்போம் ! முறியடிப்போம் !
மாணவர்கள் -இளைஞர்கள் மீது
குறிவைத்து ஏவப்படும்
கலாச்சாரச் சீரழிவை
முறியடிப்போம் ! முறியடிப்போம் !

என விண்ணதிர முழக்கங்களை எழுப்பியவாறு உயர் நீதிமன்றம்  ஆவின் வாயிலுக்கு எதிரே உள்ள சாலையில்  ஊர்வலமாக வந்தனர்.

ஆபாசப் பத்திரிகைகள் எரிப்பு
பெண்களை கேவலப்படுத்துவதையே தொழிலாகக்கொண்ட மஞ்சள் பத்திரிகைகளான டைம்பாஸ், சினிக்கூத்து, குமுதம், வண்ணத்திரை ஆகிய பத்திரிகைகளை கையில் இருந்த சுயமரியாதை நெருப்பில் சுட்டுப்பொசுக்கினர்.

பெண்களை கேவலப்படுத்துவதையே தொழிலாகக்கொண்ட மஞ்சள் பத்திரிகைகளான டைம்பாஸ், சினிக்கூத்து, குமுதம், வண்ணத்திரை ஆகிய பத்திரிகைகளை கையில் இருந்த  சுயமரியாதை நெருப்பில் சுட்டுப்பொசுக்கினர். அருகில் ஒரு கடையில் விற்றுக்கொண்டிருந்த ஆபாசப் பத்திரிகைகளை பறித்துக் கொண்டு வந்த புமாஇமுவின் கல்லூரி மாணவிகள்  அவற்றை நெருப்பிலிட்டனர்.  தீப்பந்தம் கையை சுட அதை கீழே வைக்க முனைந்த தோழரின் கையிலிருந்த அந்த தீப் பந்தத்தை 5-ம் வகுப்பு படிக்கும் மாணவியும் இளந்தோழருமான செந்தாரகை  தன் கையில் ஏந்தினார்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்பு போராட்டம்
தீப் பந்தத்தை 5-ம் வகுப்பு படிக்கும் மாணவியும் இளந்தோழருமான செந்தாரகை தன் கையில் ஏந்தினார்.

சாலையை மறித்த தோழர்கள் தொடந்து முழக்கமிட்டபடி அகல மறுத்தனர். மீடியா வந்தவுடன் வழக்கம் போல கிளம்பிவிடுவார்கள் என்று நினைத்த போலீசு  என்ன செய்வதென முழித்தது.

“ஆபாசப் பத்திரிக்கைகளை தடை செய்ய வேண்டும் ! செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வந்து வாக்குறுதி கொடுக்காமல் நகர மாட்டோம்” என்றனர்.

அதெல்லாம் முடியாது என கான்ஸ்டபிள் முதல் ஏசி வரை மிரட்டும் தொனியில் பேச, அமைச்சர் வராமல் ஒரு அங்குலம் கூட நகர முடியாது என பெண் தோழர்கள் உறுதிபடக் கூறினர். முக்கால் மணி நேரத்துக்கும் மேலாக அந்தச் சாலை ஸ்தம்பித்துப் போனது. இதுவரைக்கும் எத்தனையோ சாலை மறியலைக் கண்ட அந்தச் சாலை இம்மறியலில் நிச்சயம் பெருமிதம் கொண்டு இருக்கும்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்பு போராட்டம்.
கான்ஸ்டபிள் முதல் ஏசி வரை மிரட்டும் தொனியில் பேச, அமைச்சர் வராமல் ஒரு அங்குலம் கூட நகர முடியாது என பெண் தோழர்கள் உறுதிபடக் கூறினர்.

போராட்டத்தை சிதைக்க பலவாறு போலீசு முயன்றது. அதன் ஒரு பகுதியாக ஆண் போலீசு  பெண் தோழர்களை கையாள முயல, பெண் தோழர்களும் அருகில் இருந்த வழக்கறிஞர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க ஒதுங்கி நின்றது. அடுத்து பெண் போலீசு தோழர்களை காட்டுமிராண்டித்தனமாக இழுக்க முயல, “நீங்கள் ஒரு பொம்பளையா இருந்துகிட்டு ஏன் இப்படி பண்ணறீங்க? உங்க பிரச்சினையத்தான பேசறோம்?  ஏன் நீங்க எல்லாம் பாலியல் வக்கிரத்தால பாதிக்கப்படுறதே இல்லையா என்ன ?” என்று சிவப்பு உடை அணிந்த தோழர்கள் கேட்க, சிலையாய் நின்றார்கள் பெண் காவலர்கள். அவர்கள் வேறு எப்படி இருக்க முடியும் காக்கி உடை தரித்தபோது.

போராட்டம் அடுத்த கட்ட வடிவத்தை நோக்கி நகர்ந்தது,  போலீசு தன் முகத்தை காட்ட தொடங்கியது. பெண் தோழர்களுக்கு பாதுகாப்பாக நின்ற ஆண் தோழர்களை  நேரடியாகவே வந்து தாக்கினார் டிசி. செந்தில்குமார். இதைப்பார்த்த வழக்கறிஞர்களும் தோழர்களும்  டிசியிடமிருந்து ஆண் தோழர்களை மீட்டனர்.

உடனே  டிசி “உங்களால தானய்யா எப்பவுமே பிரச்சினை” என்று ஏகத்துக்கும் எகிற, வழக்கறிஞர்களின் கடுமையான எதிர்ப்புக்கிடையில் பின்வாங்கினார் டிசி.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்
பாலியல் வக்கிரத்திற்கு முடிவுகட்டுவதற்கு வைக்கப்பட்ட முதல் கொள்ளி இதுதான்.

‘டிசிக்கு ஒரு அவமானம் என்றவுடன் அதைத் துடைக்க மற்ற காவலர்கள்’ ஓடோடி வந்து பெண் தோழர்களை தூக்க முயற்சிக்க இம்மி அளவும் அவர்களை நகர்த்த முடியவில்லை. வலுக்கட்டயமாக தோழர்களை ஏற்ற முயற்சிக்க,  அதற்கு தோழர்கள் மறுக்க , வேறுவழியே இன்றி அமைச்சரைச் சந்திக்க  சில  பெண் தோழர்களை மட்டும் பிரதிநிதிகளாக அனுப்புவதாகக்கூறி அனைத்து தோழர்களையும் கைது செய்தது போலீசு.

சுற்றி இருந்த மக்கள் இந்த போராட்டத்தை இறுதிவரை கண்டதுடன் நமது பிரசுரங்களை படித்துக்கொண்டும் விவாதித்துக்கொண்டும் இருந்தனர். பாலியல் வக்கிரத்திற்கு முடிவுகட்டுவதற்கு  வைக்கப்பட்ட முதல் கொள்ளி இதுதான்.

கைது செய்யப்பட்ட  நூற்றுக்கும் மேற்பட்ட  பெண் தோழர்கள் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்கள் அடைத்து வைக்கப்பட்ட இடத்திற்கு புமாஇமுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் சென்றார்.

rsyf-burn-yellow-magazines-20அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூறிய போலீசு, அமைச்சரின் அலுவலகத்திற்கு தோழர் கணேசன் உட்பட 5 பெண் தோழர்களை அழைத்துச் சென்றது. அமைச்சர் அங்கு இல்லை என்று பதில் கூறியது.

“அத்துறைச் செயலரை சந்திக்க வேண்டும்” என்று தோழர்கள் கேட்ட போது

“அவர் மீட்டிங்கில் உள்ளார். சி.எம் தனிப் பிரிவுல மனு கொடுக்குறீங்களா?” என்றது போலீசு.

“அதற்காக நாங்க இங்க வரல, அடுத்து தலைமைச் செயலர், அல்லது உள்துறை செயலர் ஆகியோர்கள பார்த்து பேசுவதாக இருந்தா ஏற்பாடு செய்யுங்க அல்லது நாங்கள் செல்கிறோம்” என்று தோழர்கள் மனுகொடுக்கும் சம்பிரதாயச் செயலை செய்யமாட்டோம் என உறுதியாக நிற்க, அவர்களுக்குள்ளேயே ஏதோ பேசியவர்கள், பின்னர் யாரிடமோ பேசிவிட்டு,

“நீங்க சொல்றவங்கள இப்ப பார்க்க முடியாது” என்றனர்.

மீண்டும், “மனு வேண்டுமானால் கொடுங்க” என்றனர், போலீசுகாரர்கள்.

தோழர்கள், “வண்டிய எடுங்க போகலாம்” என்று மண்டபத்திற்கு வந்து போலீசு அமைச்சர்களின் கபட நாடகத்தை தோலுரித்து பேசினர்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்
தோழர்கள் மனுகொடுக்கும் சம்பிரதாயச் செயலை செய்யமாட்டோம் என உறுதியாக நின்றனர்.

இவ்வியக்க பிரச்சாரத்திற்காக கடந்த 15-ம் தேதி நடைபயணமாக தோழர்கள் வந்து கொண்டு இருக்கும் போது ஒருவர்

“பெரியார் காலத்துலதான் இப்படி மக்கள் கிட்ட நடந்து போய் பிரச்சாரம் பண்ணாங்க, இந்த காலத்துலயும் மக்கள சந்தித்து பிரச்சாரம் செய்ய ஒரு நடைபயணம் என்றால் அது ஒரு கம்யூனிஸ்டாலதான் முடியும்” என்றார்.

அந்த மக்கள் பணியை இன்றும் புமாஇமு களத்தில் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

இது முடிவல்ல…… கலாச்சார சீரழிவுக்கு எதிரான புமாஇமுவின் போராட்டப் பயணம் தொடரும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை.