privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திTCS டி.சி.எஸ் ஆட்குறைப்பை நிறுத்தும் சக்தி எது ?

TCS டி.சி.எஸ் ஆட்குறைப்பை நிறுத்தும் சக்தி எது ?

-

ஐ.டி ஊழியர்களே அணி திரளுங்கள் !

ஐ.டி துறை நண்பர்களே,

டி.சி.எஸ் 25,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டு அதனை படிப்படியாக நடத்தியும் வருகிறது.  இதைப் படிக்கும் நீங்களோ, உங்கள் நண்பரோ இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம்; பாதிக்கப்படுபவர் யாராயிருந்தாலும் அவர் நம்முடைய சக ஊழியர். இது நாம் அனைவரும் எதிர்கொள்ளும் அபாயம்.

பட்டப்படிப்பின் கடைசி செமஸ்டரிலேயே காலேஜ் கேம்பஸிலிருந்து தூக்கிச் சென்று, 35 வயதுக்குள் நமது இளமையை உறிஞ்சி விட்டு சக்கையாகத் தூக்கி எறிகிறது டி.சி.எஸ். குடும்பமும் குழந்தைகளும் கடன்களும் நம் முன்னால் வரிசை கட்டி நிற்க, திடீரென்று நாம் “திறமையற்றவர்கள்” என்று வெளியே வீசப்படுகிறோம். ஒரு ஃப்ரெஷராக வேலை தேடியபோது நம் மீது இப்படியொரு முத்திரை இல்லை. இது நமது பத்து ஆண்டு உழைப்புக்கு கிடைத்த பரிசு. குதிரை கீழேயும் தள்ளி குழியும் பறித்ததைப் போல!

டி.சி.எஸ் பிங்க் ஸ்லிப்
காலேஜ் கேம்பசிலிருந்து தூக்கிச் சென்று, 35 வயதுக்குள் நமது இளமையை உறிஞ்சி விட்டு சக்கையாகத் தூக்கி எறிகிறது டி.சி.எஸ்

இந்த பணிநீக்கம் எத்தனை பேரை தற்கொலைக்குத் தள்ளும், எத்தனை பேரை மன அழுத்தத்துக்கு ஆளாக்கும், எத்தனை விவாகரத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதெல்லாம் கார்ப்பரேட் தலைமை அறியாததல்ல. இருந்தாலும் ஒவ்வொரு காலாண்டிலும் லாபத்தை அதிகரிப்பது மட்டும்தான் அவர்கள் இலக்கு. நம் உயிரோ, வாழ்க்கையோ அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

துயரம் என்னவென்றால், இந்த அநீதியான வேலைநீக்கத்தை,  எதிர்க்கவே முடியாத இயற்கைப் பேரழிவு போல எண்ணி நாம் அஞ்சுகிறோம். பலவீனமான ஒரு பெண் கூட தன் மீதான பாலியல் வல்லுறவை எதிர்த்துப் போராடுகிறாள். ஆனால், நம்மில் பலர் பக்கத்து கியூபிக்கிளில் கொலை விழுந்தாலும் தலையைத் திருப்பிப் பார்ப்பதற்குக் கூட அஞ்சுகிறோம்.

ஐ.டி துறை சங்கம்
நாம் சங்கமாக ஒன்று திரண்டால் அது டி.சி.எஸ் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஐ.டி. துறைக்கும் முன்மாதிரியாக அமையும்.

என் வேலை, என் வேலை என்று 25,000 பேரும் வேலையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு தனித்தனியாக முயற்சிக்கும் வரையில் நாம் இந்த அச்சத்திலிருந்து விடுபட முடியாது. வேலையையும் காப்பாற்றிக் கொள்ள முடியாது.

சென்னையில் நாம் 50,000 பேர். இந்தியாவில் 3 லட்சம் பேர். நாம் சங்கமாக ஒன்று திரண்டால் அது டி.சி.எஸ் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஐ.டி. துறைக்கும் முன்மாதிரியாக அமையும்.

சங்கம் வைத்தால் புரொடக்டிவிட்டி பாதிக்கும், எஃபிஷியன்சி குறையும் சங்கம் என்பது ஒழுங்கீனத்தின் இன்னொரு சொல் என்றெல்லாம் நம்மிடம் சொல்கிறார்கள். ஆனால் டாடாவின் எல்லா ஆலைகளிலும் தொழிற்சங்கம் இருக்கும்போது நாம் மட்டும் ஏன் அமைக்கக்கூடாது? நம்மை சங்கம் வைக்கக்கூடாது என்று கூறும் இந்த கார்ப்பரேட்டுகள்தான் நாஸ்காம், ஃபிக்கி, சி.ஐ.ஐ, அசோசாம் என சங்கங்களாக இணைந்து, அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கிறார்கள்.

சோஷியல் நெட்வொர்க்கிங், ஐ.டி செக்யூரிட்டி பற்றித் தெரிந்த நாம், இனி யூனியன் நெட்வொர்க்கிங், ஜாப் செக்யூரிட்டி பற்றியும் கற்றுக் கொள்வோம். இதைச் செய்யாததுதான் டாடா நம்மை கருவேப்பிலை போல தூக்கி எறிவதற்கும், கண்ணீருடன் நாம் வெளியேறுவதற்கும் அடிப்படை.

19-ம் நூற்றாண்டின் தொழிற்சாலைக் கூடங்களில் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை பார்த்து உருத்தெரியாமல் சிதைந்து போன அமெரிக்க, ஐரோப்பிய தொழிலாளிகள் தங்களது உரிமைகளை போராடித்தான் பெற்றார்கள். இன்று நாம் அனுபவிக்கும் 8 மணி நேர வேலை நாள், வார விடுமுறை, பி.எஃப் மற்றும் இதர உரிமைகள் எல்லாம் இப்படி போராடிப் பெற்றவைதான்.

மோடி - டி.சி.எஸ்
நம்மை சங்கம் வைக்கக்கூடாது என்று கூறும் இந்த கார்ப்பரேட்டுகள்தான் நாஸ்காம், ஃபிக்கி, சி.ஐ.ஐ, அசோசாம் என சங்கங்களாக இணைந்து, அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கிறார்கள்.

சங்கம் தொடங்கினால் வேலை போய் விடும்; வேறு எங்கும் வேலை கிடைக்காது என்பன போன்ற பூச்சாண்டிகள் புதியவை அல்ல. இப்படிப்பட்ட மிரட்டல்களையெல்லாம் மீறித்தான் எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டன. நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். நிறுவனத்தின் வலிமையை நினைத்து அஞ்சுவதை விட்டொழித்து நம்முடைய வலிமையை பற்றி சிந்திக்க வேண்டும்.

மற்ற துறைகளிலெல்லாம் தொழிலாளிகள் போராடினால் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தில் மட்டும் பாதிப்பிருக்கும். ஆனால், நாம் இங்கே அடித்தால் அமெரிக்கா, ஐரோப்பா என்று உலகம் முழுதும் உள்ள கார்ப்பரேட்டுகளுக்கு வலிக்கும்.

நம்மால் அப்படி திருப்பி அடிக்க முடியும் என்று நம்பிக்கை கொள்வது ஒன்றுதான் நம்முடைய உரிமைகளையும் வேலைகளையும் பாதுகாப்பதற்கான முதல்படி. அது சாத்தியம் என்கிறது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

இதே சென்னையில் சங்கமே கட்ட முடியாது என்று கூறப்படும் இடங்களில் எல்லாம், ரவுடிக் கூடமான ஜேப்பியார் கல்லூரி தொடங்கி, SEZ வரையிலும் அதை செய்திருக்கிறோம். எந்த உரிமைகளும் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூட சங்கம் கட்ட முடியும், எதிர்த்து போராட முடியும் என்று காட்டியிருக்கிறோம்.

அது போல ஐ.டி துறை ஊழியர்களையும் இணைத்து சங்கம் கட்டுவதற்கு பு.ஜ.தொ.மு உங்களை அழைக்கிறது. சட்டப்படி இது சாத்தியமா? நடைமுறையில் இதை எப்படி செய்து காட்டுவது?

உங்கள் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடைபெற, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியும், வினவு தளமும் (vinavu.com) இணைந்து நடத்தவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். கூட்டம் நடைபெறும் தேதியும், இடமும் பின்னர் அறிவிக்கப்படும்.

தொழிற்சங்கமாய் திரள்வோம்!
லே ஆஃப் எனும் கார்ப்பரேட் ஒடுக்குமுறையை முறியடிப்போம்!

பேஸ்புக் : https://www.facebook.com/VinavuCombatsLayoff
தொலைபேசி : 9003198576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

– வினவு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை